Advertisement

அத்தியாயம் 6
எனக்காக
படைக்க பட்டவன்
நீ என்று எண்ணி,
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
பேய்க்கு பயந்து கொசுக்கடியில் தத்தளித்துக் கொண்டிருந்தான் ராம். “கொசுக்கடிக்கும்ன்னு தெரியும், ஆனா இந்த அளவுக்குன்னு தெரியாதே”, என்று வாய் விட்டே புலம்பினான். சொறிந்து சொறிந்து ஆங்காங்கே வீங்கி ரத்தமே வந்து விடும் போல இருந்தது. 
“எப்பா சாமி, இந்த கொசுவுக்கு கண்ணுக்கு தெரியாத பேயே பரவால்ல பா. முதல்ல கீழ போவோம்”, என்று எண்ணிக் கொண்டே கீழே வந்த ராம், மகேந்திரன் அறையில் விளக்கு எறியவும் “இவன் இன்னும் தூங்கலையா?”, என்று நினைத்து மெதுவாக கதவை திறந்தான். 
ஆனால் அங்கே அவன் கண்ட காட்சியில் அவன் தூக்கம் மொத்தமாய் அவனை விட்டு சென்றிருந்தது. கீர்த்தி மகேந்திரனை அணைத்திருப்பது ராம் கண்களுக்கு தெரியாதால் அவன் அமர்ந்திருப்பது ராமுக்கு வித்தியாசமாக தெரிந்தது. 
“இவன் என்ன அந்தரத்தில் கையை வச்சிக்கிட்டு உக்காந்துருக்கான்”, என்று எண்ணிக் கொண்டே காலை உள்ளே எடுத்து வைக்கும் போது “அழாத மா”, என்று சொன்னான் மகேந்திரன்.
அடுத்த நொடி கதவை அதே போல் சாற்றி விட்டு அங்கிருந்து ஓடியிருந்தான் ராம். மாடிக்கு வந்து பழைய படியே படுத்தவன் “கொசு கூட குடும்பம் நடத்திரலாம். ஆனா பேய் கூட எல்லாம் தூங்க முடியாதுப்பா. இன்னைக்கு நைட் தூங்குன மாதிரி தான். மகேந்திரன் கண்ணுக்கு அந்த பேய் தெரியுதா? அவ கிட்ட தான் இப்ப பேசுறானா? ஆனா எதுக்கு அந்த பேய் இவன் வாழ்க்கைல வந்துருக்கு. ஏற்கனவே அவன் பாவம். எல்லாரும் இருந்தும் எந்த உறவுகளும் இல்லாம இருக்கான். இப்ப இது என்ன தலைவலி. அவன் வாழ்க்கைல எப்பவும் சந்தோஷமா இருக்கணும். இந்த பேயால புது தலை வலி வந்துச்சுன்னா என்னால பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது”, என்று எண்ணிக் கொண்டே படுத்திருந்தான்.
“நாளைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டணும்”, என்று முடிவெடுத்த பின்னர் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
கீழே அறையிலோ என்ன தான் அவளுக்கு சமாதானம் சொன்னாலும் அவள் அழுகை மட்டும் குறைந்த பாடில்லை. அவனுக்கு தான் தர்மசங்கடமாக இருந்தது. ஒரு புறம் அவள் அழுகை வருத்தத்தை கொடுத்தது. மறுபுறம் அவள் அவனை கட்டி அணைத்திருப்பது ஒரு வித இம்சையைக் கொடுத்தது.
அவளோ தான் சாய ஒரு தோள் கிடைத்து விட்டது என்ற நிம்மதியில் அவன் மேல் பசை போல் ஒட்டிக் கொண்டாள். இத்தனை நாள் இருந்த மனவலி அவன் அருகே இருக்கும் போது அவளை விட்டுக் கரைவதைப் போல் இருந்தது.
கொலை செய்ய பட்ட பெற்றோர்கள், தன்னுடைய உயிர் தனக்கே தெரியாமல் பிரிந்தது, ஊர் காரர்களின் பேச்சு என்று அனைத்தையும் நினைத்து அழுதாள்.
“கீர்த்தி இங்க பாரு மா, எல்லாமே முடிஞ்சிருச்சு. இனி அழுது ஒண்ணும் ஆக போறது இல்லை. அடுத்து என்ன செய்யன்னு யோசி. இப்படி அழுத்துட்டே இருந்தா அவங்க சந்தோஷமா தான் இருப்பாங்க. அழுகையை நிறுத்து”, என்றான் மகேந்திரன்.
அவளோ அழுகையை நிறுத்தாமல் இன்னும் அவன் மேல் சாய்ந்து “எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது? நான் என்ன பாவம் செஞ்சேன்? மனசுக்கு பிடிச்சவனை கல்யாணம் செஞ்சு சந்தோஷமா வாழணும்னு நினைச்சது தப்பா?”, என்று கேட்டாள்.
அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் “எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?”, என்று கேட்டான் மகேந்திரன்.
“இவன் ஏன் சம்பந்தம் இல்லாம பேசுறான்?”, என்று எண்ணிக் கொண்டு அவன் தோளில் இருந்து முகத்தை மட்டும் தூக்கி அவனைப் பார்த்தாள் கீர்த்தி.
“இல்லை நான் வயசு பையன். நீ ஒரு பொண்ணு. இது வேற நைட் நேரம், நீ வேற இவ்வளவு பக்கத்துல என்னை ஒட்டி உக்காந்துருக்க. ஆனா ஒண்ணும் செய்ய முடியாத படி பேயா வந்துருக்கியே? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?”, என்றான்.
அடுத்த நொடி படக்கென்று அவனை விட்டு விலகினாள் கீர்த்தி. அவளுக்கு வெட்கமாக போனது. அவள் வெட்கம் கண்ணுக்கு தெரியாமல் போனாலும் அவள் விலகினது அவனுக்கு நிம்மதியாக இருந்தது. 
உருவம் கண்ணுக்கு தெரியாமல் போனாலும் அவள் உடல் அசைவுகள் அவனுக்கு புரிகின்றது தானே. தான் உணர்ந்த பெண்ணின் பரிசம் அவனை நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தது. அவள் விலகியதும் “அப்பாடி”, என்று நிம்மதியாக உணர்ந்தான் மகேந்திரன்.
“சாரி”, என்றாள் கீர்த்தி. 
“நான் உன் அழுகையை நிறுத்த தான் அப்படி சொன்னேன். வேற ஒண்ணும் இல்லை”, என்று நல்ல பையனாக பொய் சொன்னான் மகேந்திரன்.
அவன் பதிலில் “அப்ப நான் இவனை கவருற மாதிரி இல்லையா? இவனுக்கு என்னை பிடிக்கலையா?”, என்று குதர்க்கமாக யோசித்தாள் கீர்த்தி.
எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தவளை “அடுத்து என்ன செய்ய போற?”, என்ற அவனின் கேள்வி நடப்புக்கு கொண்டு வந்தது. 
“தெரியலை. எல்லாரையும் பழி வாங்கணும். ஆனா எப்படின்னு தெரியலை”
“எல்லாரையும் கொலை பண்ண போறியா?”
“அப்படி தான் தோணுது. ஆனா பாவம்ல? செத்தா என்னை மாதிரி தான அவங்களுக்கும் கஷ்டமா இருக்கும்”
“நீநீநீ… ரொம்ப நல்லவவவவ….? வேற என்ன தான் செய்ய போற?”
“அவங்க தப்பை உணர வைக்கணும். யார் எல்லாம் தப்பா பேசினாங்களோ அவங்க எல்லாரையும் ஊருக்கு மத்தியில் மன்னிப்பு கேக்க வைக்கணும்”
“நல்ல ஐடியா தான். உங்க சித்தி சித்தப்பாவையும் மன்னிக்க தான் போறியா?”
“மன்னிக்கவும் பிடிக்கலை. கொல்லவும் பிடிக்கலை”
“நீ இப்படி விட்டா அவங்க இன்னும் சொத்துக்காக என்ன வேணா செய்வாங்க”
“அப்ப என்ன செய்ய?”
“அவங்களை கொன்னுரு”
“அதுவும் எப்படின்னு தெரியலை. அவங்க வீட்டை சுத்தி மந்திர கட்டை போட்டு வச்சிருக்காங்க. என்னால உள்ள போக முடியலை”
“என்ன மந்திரக் காட்டா? நீ பேயா வந்தது அவங்களுக்கு தெரியுமா?”
“ஹிம் ஆமா, அன்னைக்கு செத்தது கஷ்டமா இருந்துச்சா? எதுக்கு சித்தப்பா என்னை கொலை செஞ்சீங்கன்னு கேட்டேன்”
“அட ஆர்வ கோளாரே? சரி அவங்க எல்லாரும் எத்தனை நாள் வீட்டுக்குள்ளயே இருப்பாங்க. ஒரு நாள் வெளிய வந்து தான ஆகணும். அன்னைக்கு பாத்துக்கலாம்”
“ஹிம்”
“ஆமா இன்னைக்கு இந்த டீக்கடைக்காரன் மேல பாலை கொட்டுனது நீ தானா?”
“ஆமா, நான் அவனை ஒரு மாதிரி பாப்பேனாம். கெட்ட பொண்ணுன்னு சொன்னான். அதனால தான்”
“அவனுக்கு தேவை தான். சரி எதுக்கு என் பின்னாடி வந்த?”
“பிடிச்சிருந்தது வந்தேன்”
“இது என்ன பதில்?”, என்று எண்ணிக் குழம்பியவன் “சரி எதுக்கு  பிரியாணி பார்சலை மாத்தி வச்ச?”, என்று கேட்டான்.
“சாப்பிடுறதை நல்ல சாப்பிட வேண்டியது தான? எதுக்கு குஸ்க்காவை போய் சாப்பிடணும். நீங்க கஞ்ச பிஸ்நாரி மாதிரி அதை வாங்கின உடனே எனக்கு இது தான் தோணுச்சு”
“கஞ்ச பிஸ்நாரியா? ஏன் சொல்ல மாட்ட? எனக்கு தேவை தான். சரி உன்னை என்னால பாக்க முடியாதா?”
“முடியாது, நீங்களும் செத்து பேயானா தான் என்னை பாக்க முடியும். பேசாம செத்துருங்களேன்”
“என்ன ஒரு நல்ல எண்ணம். சரிங்க மேடம். அடுத்து என்ன பிளான்?”
“ஒரு பிளானும் இல்லை. உங்களை பத்தி சொல்லுங்களேன்”, என்று அவள் கேட்டதும் “என்னைப் பத்தி பெருசா சொல்ல ஒண்ணும் இல்லை. கிட்ட தட்ட உன்னை மாதிரி தான் நானும்”, என்று ஆரம்பித்து அவனைப் பற்றி சொன்னான். 
“ஏன் மகி நான் சாகுறதுக்கு முன்னாடி உங்களை பாத்துருந்தா நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சி வாழ்ந்திருக்கலாம் தான?”
“ஆமா அது என்ன மகி?”
“எனக்கு அப்படி கூப்பிட தோணுது. சரி பதில் சொல்லுங்க”
“அது நீ எப்படி இருக்கன்னு பாத்து தான் முடிவு செஞ்சிருப்பேன். ஒரு வேளை கருப்பா இருந்து, குண்டா இருந்துருந்தா”, என்று அவன் சொன்னதும் அவளிடம் இருந்து பதில் இல்லை. 
அவள் கோபத்தை உணர்ந்தவன் “ஏய் சும்மா சொன்னேன். உண்மையான அன்புக்கு ஏங்கிட்டு இருக்குற நான், நீ உண்மையான அன்போட இருந்திருந்தா கண்டிப்பா ஏத்துகிட்டு இருந்துருப்பேன்”, என்று சொல்லி சிரித்தான். ஆனால் அவளின் அடுத்த கேள்வியில் பெ பெ என்று விழித்தான் மகேந்திரன்.
“நான் உண்மையான அன்போட தான இப்ப இருக்கேன்? இப்ப என்னை லவ் பண்ணலாம் தான?”, என்று கேட்டாள் கீர்த்தி.
அவனோ அவள் கேள்வியில் திகைத்து போய் இருந்தான். “என்ன மகி அமைதியா ஆகிட்டீங்க? நிஜமாவே உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க பக்கத்துல இருந்தா நான் ரொம்ப சந்தோஷமா இருக்குறேன். எனக்கு நீங்க வேணும். பிளீஸ் லவ் பண்ணலாமா?”
“என்னமோ ஐஸ் கிரீம் சாப்பிடலாமான்னு கேக்குற மாதிரி கேக்குறாளே”, என்று நினைத்து கொண்டு “கீர்த்தி நீ என்ன பேசுறன்னு தெரிஞ்சு தான் பேசுறியா?”, என்று கேட்டான்.
“இது கூட தெரியாமையா மகி பேசுறேன். உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நாம கடைசி வரை ஒண்ணா இருக்கலாம்”
“அது எப்படி சாத்தியம்? நீ தான் உன் காலம் முடிஞ்ச அப்புறம் போய்ருவியே”
“ஆமால்ல? சரி அது வரைக்கும் லவ் பண்ணுவோமா?”
“உன்னை நான் பாக்கவே இல்லையே. அப்புறம் எப்படி லவ் பண்ண? நீ என் கண் முன்னாடி தெரியுர மாதிரி வந்து நின்னு. நான் லவ் பன்றேன்”
“நான் சும்மா தான் மகி சொன்னேன். என் நிலைமை தான் எனக்கு தெரியுமே. ஆனா இந்த உலகத்தை விட்டு என் ஆத்மா போன அப்புறம் நீ வேற பொண்ணை கல்யாணம் பண்ணு சரியா? இல்லைன்னா நானே உனக்கு சாபம் கொடுத்துருவேன்.
அவள் குணம் தெரியாமல் தடுமாறியவன் “எனக்கு நாளைக்கு வேலை இருக்கு, நான் தூங்கணும்”, என்று சொல்லி விட்டு படுத்து விட்டான்.
அவனையே பார்த்த படி அமர்ந்திருந்தாள் கீர்த்தி. சிறிது நேரத்தில் நன்கு உறங்கி விட்டான் மகேந்திரன். 
“கூடவே ஒரு பேய் இருக்கும் போது இவனுக்கு எப்படி தான் தூக்கம் வருதோ?”,என்று எண்ணிக் கொண்டாள்.
அவன் கைலி கால் வரை இருக்க, வெள்ளை நிற உள் பணியன் போட்டிருந்தான். இடது கையை தலைக்கு அடியிலும் வலது கையை நெஞ்சின் மேல் வைத்தும் படுத்திருந்தான்.
பேன் காற்றுக்கு அவன் சிகை அங்கே இங்கே ஆடியது. அதை கோதிக் கொடுக்க எழுந்த ஆவலை தடை போட்டு அடக்கினாள். 
திடீரென்று கண் விழித்த மகேந்திரன் “அவள் இங்க தான் இருக்காளா?”, என்று எண்ணிப் பார்த்தான். ஒரு சந்தேகத்தோடு “கீர்த்தி”, என்று அழைத்தான்.
அவள் அதே இடத்தில் அமர்ந்து “ம்‌ம்”, என்று மட்டும் சொன்னாள்.
அவள் குரலில் என்ன உணர்ந்தானோ, “இங்க என் கிட்ட வா”, என்றான். சந்தோசத்துடன் அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.
காற்றில் துளாவி அவள் கையை பற்றியவன் அதை பிடித்த படியே உறங்க ஆரம்பித்தான். இப்போது மற்றொரு கையைக் கொண்டு அவன் தலையை கோதி விட்டாள் கீர்த்தி. 
ஏன் எப்படி, எதற்கு என்ற கேள்விகளுக்கு விடை புரியாமலே இருவருக்குள்ளும்  ஒரு பந்தம் உருவானது. 
“யார்னே தெரியாத ஒருத்தனை இப்படி தொட்டுட்டு இருக்கேனே? ஒரு வேளை பேய் ஆனதுல எனக்கு மானம் ரோசமே இல்லையோ”, என்று எண்ணியவள் “இல்லை, இது என்னோட மகி. அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த உலகத்தில் இருந்து போற வரைக்கும் அவன் கூடவே இருக்கணும்”, என்று முடிவு எடுத்தாள்.
காலையில் கண் விழித்த மகேந்திரன் தன்னுடைய கைக்குள் கீர்த்தி கை இருப்பதை உணர்ந்தான். “நைட் முழுக்க இவ கையை பிடிச்சிட்டே தான் தூங்குனேனா? அம்மா கூட இருந்த மாதிரியே இருக்கு. ரொம்ப நாள் கழிச்சு எனக்குன்னு ஒரு ஜீவன் இருக்குனு தோணுது”, என்று எண்ணிக் கொண்டு “கீர்த்தி”, என்று அழைத்தான்.
“எழுந்துட்டியா மகி?”
“இவ எப்ப என்னை வா போன்னு கூப்பிட ஆரம்பிச்சா?”, என்று மனதில் நினைத்துக் கொண்டு “ஹ்ம், ஆபீஸ் போகணும். முதல்ல இந்த ராம் என்ன செய்றான்னு பாக்கணும்”, என்று சொல்லி எழுந்து கொண்டான்.
முதல் வேலையாக மாடிக்கு சென்றான். அங்கே கண்கள் சிவக்க படுத்துக் கிடந்தான் ராம். “இன்னும் எந்திக்கலையா டா? இங்கயே குளிச்சிட்டு என்னோட டிரெஸ்சை போட்டுக்குறியா? இல்லை வீட்டுக்கு போறியா?”, என்று கேட்டான் மகேந்திரன்.
“நைட் முழுக்க தூங்கலை டா. கண்ணெல்லாம் எரியுது. நான் வீட்டுக்கே போறேன். மதியத்துக்கு மேல தான் விசிட் போக போறேன். சரி இப்ப நீ மட்டும் இருக்கியா? கூட அந்த பேயும் இருக்கா?”
“அவ பேர் கீர்த்தி டா. ரொம்ப நேரம் நாங்க பேசிட்டு இருந்தோம். அவ பாவம் தெரியுமா? அவளை கொன்னுட்டாங்களாம் டா”
“ஹ்ம் சரி சரி, பேய் கூட டூயட் பாடாம இருந்தா சரி தான்”, என்று
எண்ணிக் கொண்டு “சரி நான் இப்படியே போறேன்”, என்றான்.
“பயப்படாத டா, வீட்டுக்குள்ள வந்து உன் டிரஸ்சை மாத்திட்டு போ”, என்று சொல்லி அழைத்துச் சென்றான்.
அவசர அவரசமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றான் ராம்.  
அதன் பின்னர் மகேந்திரன் குளிக்க போனான். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள் கீர்த்தி. 
குளித்து முடித்து வெளியே வரும் போதே சட்டையை போட்டுக் கொண்டு இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு வந்தான்.
பின் குத்து மதிப்பாக அவள் இருந்த திசை பக்கம் பார்த்த மகேந்திரன் “பாத்ரூம்ல வச்சு பேன்ட் போட முடியாது. அதனால பிளீஸ் கண்ண மூடிக்கோ கீர்த்தி”, என்று சொல்லி விட்டு பேன்ட்டை போட்டான்.
அவன் போட்டு முடித்ததும் “நான் கண்ணை மூடவே இல்லை மகி”, என்று சிரித்தாள் கீர்த்தி.
“நீ இப்படி தான் செய்வேன்னு தெரியும். அதனால தான் கவனமா மாத்துனேன்”, என்று சொல்லி சிரித்தவன் “இங்கயே இரு. நான் சாப்பாடு வாங்கிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றான்.
சந்தோசத்துடன் அவன் வருகைக்காக காத்திருந்தாள். பின் அவன் வந்ததும் இருவரும் பேசிய படியே சாப்பிட்டார்கள். திடீரென்று நேற்று அவள் வாயில் விரலை வைத்த நிமிடங்கள் நினைவில் வந்தது மகேந்திரனுக்கு.

Advertisement