Advertisement

பௌர்ணமி 11:

பழைய நினைவுகளின் ரணத்தால்..அவளின் மனக் காயங்கள் மீண்டும் கிளறிவிடப்பட..கோவில் என்பதையும் மறந்து அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது.சுற்றுப் புறம் கொஞ்சமும் உறைக்கவில்லை அவளுக்கு.

அவளின் அருகில் வந்து அமர்ந்து..அவளின் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டிருந்த குமரனைக் கூட அவளுக்குத் தெரியவில்லை.

“மீனாட்சி…! என்றான் அமைதியான குரலில்.அவனின் குரலில் கலைந்தவள்..அவனை அங்கு கண்டு வேகமாக கண்ணைத் துடைக்க…

“என்கிட்டே இருந்து எதை மறைக்க….உனக்குள்ள இந்த போராட்டம்…! என்று அவன் கேட்க..

“நான் என்ன மறைக்கிறேன்..! ஒண்ணுமில்லை.. என்றாள்.

“இதை நான் நம்பனுமா…? என்றான்.

“அது உங்க விருப்பம்..! என்றாள்.

சற்று நேரம் அவளிடம் எதுவும் பேசாமல் இருந்த குமரனின் கண்களும் கலங்க…அதைப் பார்த்த மீனாட்சிக்கு பதைபதைத்து.

“என்னாச்சு செந்தில்..நீங்க ஏன் கண் கலங்குறிங்க..? என்றாள் அவன் கையைப் பிடித்தபடி.

“ப்ரியா ஒழுங்கா இருந்திருந்தா..மகா இன்னைக்கு உயிரோட இருந்திருப்பா இல்லையா..? என்றான் கலங்கிய விழிகளுடன்.எப்போதும் கம்பீரமாய் பார்த்தவனை இப்படி பார்க்க முடியவில்லை அவளால்.

“அப்படியெல்லாம் இல்லை..நீங்களா எதையும் உளறாதிங்க..! என்றாள்.

“எனக்கு எல்லாம் தெரியும் மீனா…! முன்னாடியே ஓரளவுக்கு அனுமானம் இருந்தது…அப்பறம் கொஞ்ச நாள்ல ஊர்ஜிதம் ஆகிடுச்சு..! என்றான்.

“தெரிஞ்சு தான்..எனக்கு வாழ்க்கை பிச்சை போட்டிங்களா? என்றாள்.வெகுநாள் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வி.

“இல்லை..அது என்னோட காதலுக்காக செய்த விஷயம்..அதுக்கு உன்னை சம்மதிக்க வைக்க இதைப் பயன்படுத்திகிட்டேன்.அவ்வளவு தான்..என்னோட காதலை சந்தேகப்படாத..! என்றான்.

“ஆண்களில் யாரும் யோக்கியம் இல்லை..! என்றாள்.

“உன் அப்பா கூடவா..? என்றான்.

“என் அப்பாவைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்..? என்று அவள் கோபமாய் பேச…

“என்னைப் பத்தி என்ன தெரியும் உனக்கு..நீ மட்டும் அப்படி பேசலாமா? என்றான்.

“சாரி..! என்றாள் தொங்கிய தலையுடன்.

“அன்னைக்கு முழுசா என்ன நடந்தது..? என்றான்.

அவள் தயங்க…நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் எந்த ஒளிவு மறைவும் வேண்டாம்ன்னு நான் நினைக்கிறேன்..! என்னை நம்பி சொல்லு..ஒரு கணவனா நம்பாட்டியும்..போலீசா நம்பு.. என்றான்.

“அன்னைக்கு நான் அம்மா வீட்டுக்கு போறதா இருந்தது.சேகரும் தான்.நீ முன்னாடி போ..முக்கியமான வேலை இருக்கு..முடிச்சுட்டு வந்துடுறேன்னு சொன்னான்.நானும் அம்மா வீட்டுக்கு போனேன்.அப்பத்தான் செல்லைப் பார்த்தேன்..அதில் “ஒரு சின்ன பிரச்சனை..இந்த இடத்துக்கு மாமாவோட வாக்கா..!அப்படின்னு மகா மெசேஜ் பண்ணியிருந்தா.

அம்மாகிட்ட சொன்னா..கலவரம் ஆகிடுவாங்கன்னு…நான் மட்டும் போனேன்..நான் ஆட்டோல போய் இறங்கி ரோடு கிராஸ் பண்ணலாம்ன்னு போறப்ப தான் மகாவைப் பார்த்தேன்.அவளோட கோலமே கொஞ்சம் சரி இல்லாம இருந்தது.என்ன ஏதுன்னு மனசு பதறிப் போய்..நான் கிராஸ் பண்ண போக..அவளே நான் வரேன்னு சொல்லிட்டு வந்தா…அந்த பக்கம் இருந்து கார் சொல்லி வச்ச மாதிரி அவளை தூக்கி எறிஞ்சது..எனக்கு அப்போ புரியலை..பின்னாடி தான் புரிஞ்சது…இதெல்லாம் சேகர் வேலைன்னு..! என்றாள்.

“மகா உன்கிட்ட ஒன்னும் சொல்லலையா..? என்றான்.

“இல்லை..அவளோட கடைசி நிமிஷத்துல ஏதோ சொல்ல வந்தா..ஆனா எனக்குப் புரியலை..அப்பறம் அவ துப்பட்டால ஒரு மெமரி கார்டும்,சிம் கார்டும் இருந்தது…அவ இறந்த துக்கத்துல எனக்கு அப்போ முக்கியமா படலை.. என்றாள்.

“எப்போ பார்த்த..? என்றான்.

“மகாவோட காரியமெல்லாம் முடிஞ்சு..சேகர் வீட்டுக்கு போனப்ப… சேகரோட நடவடிக்கையில் கொஞ்சம் மாற்றம் தெரிஞ்சது.அவன்கிட்ட இருந்த பழைய போனும் இல்லை..தொலஞ்சு போய்டுச்சுன்னு சொன்னான்.

“அப்பறம்..!

“அப்பறம் நிதானமா யோசிச்சப்ப தான் தெரிஞ்சது..மகா ஆக்சிடன்ட் ஆன இடத்துக்கு சேகர் எப்படி சரியா வந்தான்னு எனக்குள்ள கேள்வி..அதை அவன்கிட்ட கேட்கவும் செஞ்சேன்..! அதுக்கு அவன் அந்த பக்கம் எதார்த்தமா வந்ததா சொன்னான்..! அப்போ தான் மகா பக்கத்துல வந்த பிரியாவும் அதுக்கப்பறம் கண்ணில் படாதது பெரிய சந்தேகமா இருந்தது..!

ஒரு நாள் சேகருக்குத் தெரியாம பிரியாவை மீட்பண்ணி அவகிட்ட தோண்டி துருவுனேன்.ஆனா அவ சாமானியமா சொல்லலை..உங்ககிட்ட சொல்லிடுவேன்னு சொன்னதுக்கு அப்பறம் தான் நடந்த விஷயங்களை சொன்னா..! எனக்கு அவ்வளவு அதிர்ச்சி.

சேகர் இப்படி ஒரு கேடு கெட்டவனா இருப்பான்னு நான் கனவுல கூட நினைக்கல. ஜட்ஜ் பையன்ற போர்வையில் அவன் பல பெண்களை நாசம் பண்ணியிருக்கான்னு அப்பறம் தான் தெரிஞ்சது.அந்த மெம்மரி கார்டும்..அவனோட பல அந்தரங்க விஷயத்தை சொன்னது..! முதல்ல போலீஸ்க்கு போகலாம்ன்னு தான் நினைச்சேன்..ஆனா சேகர் அம்மா தடுத்துட்டாங்க..! என்று நிறுத்தினாள்.

இந்த திருப்பம் அவன் எதிர்பாராதது.அதிர்ந்தான் குமரன்.அவங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா? என்றான்.

“தெரியும்..! தெரிஞ்ச உடனே அவங்க துடிச்ச துடிப்பு..இப்பவும் என் கண்ணு முன்னால இருக்கு..தன்னோட பையன் இத்தனை பெண்களோட அதுவும் சின்ன சின்ன பொண்ணுங்களோட வாழ்க்கையில் விளையாடி இருக்கான்றதை அவங்களால ஜீரணிக்கவே முடியலை..அவனைப் பெத்ததுக்காக..என்கிட்டே மன்னிப்புக கூட கேட்டாங்க..!

“யார் மன்னிப்பு கேட்டு என்ன செய்ய..? போன என் தங்கை உயிரும்….அத்தனை பெண்களின் மானமும் திரும்பி வருமான்னு கேட்டேன்..

“அவங்க என்ன சொன்னாங்க..! என்றான்.

ஒரு பொண்ணா அவங்களைப் பார்த்து நான் பொறாமைப் பட்ட தருணம் அது.

“நீ கேட்குறது சரி தான் மீனாட்சி..! எங்க குடும்ப கவுரவத்தையே குழி தோண்டி புதைச்சுட்டான்…இவனைப் பெத்ததுக்காக நான் தான் முதல்ல சாகனும்..! ஆனா நான் சாக மாட்டேன்…நான் செத்தாலும் அவன் திருந்த மாட்டான்..இதுக்கு ஒரே வழி அவன் தான் சாகனும்ன்னு சொன்னங்க..! என்றாள்.

“அவங்களா சொன்னாங்க..! என்றான் அதிர்ந்து.

“ஆமா..அவங்களே தான் சொன்னாங்க..! அவனை கருவில் தாங்கிய எனக்குத்தான் அவனை அழிக்கிற உரிமையும் இருக்குன்னு சொல்லி..அவங்கதான்..அவங்க தான்..! என்று அவள் அழ ஆரம்பிக்க..

அவளைத் தோளில் சாய்த்துக் கொண்ட குமரன்..அழாத மீனா..! அவங்க ஒரு பொண்ணா யோசிச்சு இருக்காங்க..அந்த இடத்துல அவங்க அம்மாவா யோசிக்கலை..அப்படி யோசிச்சு இருந்தா இந்நேரம் அந்த நாய் உயிரோட சுத்திட்டு இருக்கும்..! என்றான்.

“அவனுக்கு மூச்சுத் திணறல் இருந்தது.அன்னைக்கு மத்தவங்க வீட்ல இல்லாதப்ப…தலைகாணியை வச்சு..மூச்சை அமிக்கி தான்… என்று அவளுக்கு அதற்கு மேல் சொல்ல முடியவில்லை.

“வேண்டாம்..! இதுக்கு மேல நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்..! அதெல்லாம் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்லயே வந்துடுச்சு.. என்றான்.

அவனை அதிர்ந்து பார்த்தவள்…நீங்க அப்படி சொல்லலையே..? என்றாள்.

“உண்மை தெரியாம…யாரையும் பழி சுமத்தி அரஸ்ட் பண்ண எனக்கு விருப்பம் இல்லை.அது மட்டுமில்லாம…ஸ்டாராங்கா சந்தேகப் படுற அளவுக்கு ரிப்போர்ட்ல ஒன்னும் வரலை..அவனுக்கு ஏற்கனவே அந்த பிரச்சனை இருந்ததால கேஸ் ஈசியா முடிஞ்சது.! என்றான்.

அவள் விரக்தியாய் சிரிக்க…

“ஆனா மின்னல் கொடி இதைப் பண்ணியிருப்பங்கன்னு நான் எதிர்பார்க்கலை..இது நான் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..! என்றான்.

“இப்படி ஒருத்தவங்களை பார்க்குறது அபூர்வம்..! கடைசி வரைக்கும் எனக்கு உறுதுணையா இருந்தாங்க..! என்று அவள் சொல்ல…

“உண்மைதான்..! பார்க்க பகட்டா தெரிஞ்சாலும்..அவங்களுக்குள்ளயும் ஒரு நேர்மை இருக்கு.. என்று அவன் சொல்ல..

“அவங்களை ஒன்னும் பண்ணிட மாட்டிங்களே..! என்று அவள் பயத்துடன் பார்க்க..

“அப்படி செய்யனும்ன்னு நினைச்சிருந்தா..அதை நான் எப்பவோ செஞ்சிருப்பேன்.சில தப்புக்கான தண்டனை கடுமையா தான் இருக்கணும். அவங்க சொன்ன மாதிரி உருவாக்குன அவங்களுக்கு தான் அதை அழிக்கிற உரிமையும் இருக்கு..! என்றான்.

“அந்த வகையில் நானும் ஒரு கொலைகாரி தான்..! என்றாள் விரக்தியாய்.

“ஆமா அழகான கொலைகாரி…என்னை கொள்ளை கொண்ட அழகான கொலை காரி.. என்றான்.

“இவ்வளவு நடந்தும் என் மேல உங்களுக்கு கோபம் வரலையா..? என்றாள்.

“கோபம் எல்லாம் வரலை..! என்மேல தான் கோபம்.நான் மட்டும் யோசிக்காம..முன்னாடியே காதலை சொல்லி,கல்யாணம் பண்ணி இருந்தா..இவ்வளவு பிரச்சனை நடந்திருக்காதுல… என்றான்.

“விதிப் பயன்னு ஒன்னு இருக்கு..! எது எப்படி எப்ப நடக்கணுமோ அப்படி தான் நடக்கும்..இதில் யாரை குறை சொல்ல முடியும்..? என்றாள்.

“பிரியா மேல உனக்கு கோபமே வரலையா? ஆனா அண்ணனா எனக்கு அவ்வளவு கோபம் வருது..அடக்கிக்கிட்டு இருக்கேன்..! என்றான்.

“அவமேல எனக்கு எந்த கோபமும் இல்லை…மகாவுக்கே கூட இருக்காது. ஏன்னா பிரியாவும் இதில் நம்ப வச்சு ஏமாத்தப்பட்டிருக்கா…எதைப் பார்த்தாலும் ஆசைப் படுற வயசு அவளுக்கு அப்ப.அதான்…ஒரு வேளை நீங்க போலீசா இல்லாம இருந்திருந்தா உங்ககிட்ட சொல்லியிருப்பாளோ என்னவோ..?

ஏதோ ஒரு நம்பிக்கை நம்மகிட்டு இருந்து கிடைக்காம போகும் போது..அந்த பயம் தான் அவங்களை நம்மகிட்ட எதையும் சொல்ல விடாம தடுக்குது.மே பி உங்க ரெண்டு பேருக்கும் நிறைய வயசு வித்யாசம். அதனால கூட அவ ஈசியா ஷேர் பண்ணிக்க தயங்கியிருக்கலாம்..! என்றாள்.

“என்னைக் கண்டாலே உனக்குப் பிடிக்காது…ஆனா இன்னைக்கு இவ்வளவு விஷயத்தை என்கிட்டே ஷேர் பண்ணியிருக்குற…?

“உங்களைக் கண்டாலே பிடிக்காதுன்னு நான் எங்க சொன்னேன்..! எனக்கு ஆண்கள் என்ற வெறுப்பு கொஞ்ச நாள் இருந்தது.இன்னொரு கல்யாணம் வேண்டாம் என்ற எண்ணம் தான் எனக்குள்ள..நீங்க கட்டாயப்படுத்தி நடத்திகிட்டதால எனக்கு கொஞ்சம் முரண்பாடு இருந்தது.இப்பவும் இருக்கு..

ஆனா பாதி தெரிஞ்சும் தெரியாத விஷயத்தை தேடி நீங்க ஓடி…அதுக்காக ஒரு பிரச்சனை வந்து..மத்தவங்க மூலமா தெரிய வரதுக்கு நானே சொல்லிடனும்ன்னு தான் இருந்தேன்.இன்னைக்கு நீங்களே கேட்டுட்டிங்க..! என்றாள்.

“மத்தவங்கன்னு சொன்னது பிரியவையா..? என்றான்.

“ஆமா..! இதைப் பத்தி பிரியாகிட்ட பேசுனாலும் பேசிடுவிங்க அப்படின்ற பயம் கூட ஒரு காரணம்.இனி இதைப் பத்தி அவகிட்ட நீங்க பேசக்கூடாது.உங்களுக்கு விஷயம் தெரியாது அப்படின்னு அவ  நினைக்கிற வரைக்கும் தான் அவளால் குற்ற உணர்ச்சி இல்லாம இருக்க முடியும்..! என்றாள்.

“அது தப்பு மீனா…எனக்கு தெரிஞ்சிடுச்சு அப்படின்னு தெரிஞ்சா மட்டும் தான் அவளால் இயல்பா இருக்க முடியும்..அதை நான் பார்த்துக்கறேன்.. என்றான்.

“அந்த மெம்மரி எங்க? என்றான்.

“அதெல்லாம் எப்பவோ உடைச்சு போட்டுட்டேன்..! அதை வச்சு என்ன பண்ண..? என்றாள்.

“இனியும் அதுல யாராவது சம்பந்த பட்டிருக்கலாம்ல..? என்றான்.

“அதைக் கண்டு பிடிக்கிறது உங்க வேலை..அதில் இருக்குற பொண்ணுங்க வாழ்க்கையை பணயம் வைக்க கூடாது..அதான் அதை அப்பவே உடைச்சுட்டேன்…! என்றவள்…

“வீட்டுக்கு போகலாமா..? என்றவன் எழுந்து அவளுக்கு கை கொடுக்க..சிறு யோசனைக்கு பின்..தயக்கத்துடன் அவன் கைகளைப் பற்றினாள்.

“பயப்படாம பிடிக்கலாம்..விட்ற மாட்டேன்..! என்றான்.

“விட்டாலும் நான் விழுந்திட மாட்டேன்..! என்றாள் அவளும் தன்னம்பிக்கையாய்.

“இந்த நம்பிக்கை,இந்த தைரியம் தான் உன்கிட்ட என்னை ஈர்த்த விஷயங்கள்..! என்றான்.

அவளின் மௌனம் பதிலாய் கிடைக்க..உனக்கு ஒரு கிப்ட் இருக்கு… வீட்டுக்கு வா..! தரேன் என்றபடி அழைத்து சென்றான்.

ஏதோ மனதில் இருந்த பாரங்கள் எல்லாம் நீங்கியதைப் போன்ற உணர்வு அவளுக்கு.இத்தனை நாள் சுமைகளையும் இறக்கி வைத்த…நிம்மதி உணர்வு. தன் தங்கை எங்கோ இருந்து தன்னை பார்த்துக் கொண்டிருப்பாள் என்ற நம்பிக்கை.அவளின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும் என்ற நம்பிக்கையே..மீனாட்சியை புது மீனாட்சியாய் உருவெடுக்க வைத்தது.

கோவிலுக்கு வெளியே வர…அப்போது தான் கவனித்தாள் அவன் புல்லட்டில் வந்திருப்பதை.கார் டிரைவரிடம் ஏதோ சொல்லி அவரை அனுப்பிக் கொண்டிருந்தான்.

“இப்ப எதுக்காக காரை அனுப்புனிங்க..? என்றாள்.

“ம்ம் பொண்டாட்டிக்கு டிரைவர் வேலை பார்க்க தான் நான் இருக்கேன்ல..அப்பறம் கார் எதுக்கு..? என்றவன் புல்லட்டில் ஏறி…அவளுக்காக காத்திருக்க..சிறு தயக்கத்திற்கு பின்பு..அவன் பின்னால் ஏறினாள் மீனா.

அவள் பின்னால் ஏறிய உடன்…அவன் மனதில் மழைசாரல் அடிக்க…வண்டி அவள் வீட்டை நோக்கி சென்றது.

“எதுக்கு எங்க வீட்டுக்கு போறீங்க..? என்றாள் புரியாமல்.

“போன உடன் தெரிஞ்சிட போகுது..! என்று அவன் உல்லாசமாய் சொல்ல…அவளுக்குத்தான் தேவகியை நினைத்து மனம் கலங்கிப் போனது.

வீட்டின் முன் அவன் வண்டியை நிறுத்த…உள்ளே இருந்து ஆரத்தித் தட்டுடன் வெளியே வந்தார் தேவகி.மீனாவுக்கு ஆச்சர்யமாக இருக்க..குமரனைப் பார்த்தாள்.அவன் கண்களை மூடித் திறக்க…அவர் ஆரத்தி எடுத்து முடித்தவுடன்…அவரைப் பாய்ந்து அணைத்துக் கொண்டாள்.

“அம்மா… என்று அவள் தேம்பி அழ…

“இந்த அம்மாவை மன்னிச்சிடு மீனாட்சி..உன்னை தண்டிக்கிறதா நினைச்சு என்னை நானே தண்டிச்சுகிட்டேன்…! மாப்பிள்ளை சொல்லலைன்னா எனக்கும் உண்மை தெரிஞ்சிருக்காது..! என்றார்.

“இது எப்போ..? என்பதை போல் அவனைப் பார்க்க…

“அதெல்லாம் அப்பவே சொல்லிட்டேன்..உன் வாயால கேட்குற வரைக்கும் வெயிட்டிங்.. என்று கண்ணடித்தான்.

“தேங்க்ஸ்..! என்றாள் கண்களில் ஆனந்த கண்ணீருடன்.

“இப்படி சொல்ல கூடாது..வேற மாதிரி சொல்லு.. என்றான்.

“வேற எப்படி..? என்றாள்.

“என் காதலை ஏத்துக்கோ…! என்றான்.

“அதுக்கு எனக்கு டைம் வேணும்..!

“தாராளமா…ஆனா ஓவர்டைமா போய்ட போகுது..! என்று வம்பிழுத்தான்.

அவர்கள் இருவரின் முகத்தில் இருந்த சந்தோஷமும்,சகஜமாய் பேசிக்கொள்ளும் முறையும் பெற்றவர்களுக்கு நிம்மதியைத் தர…அந்த நிம்மதியுடன்..அவர்களை கவனித்து அனுப்பினார் தேவகி.

அன்றும் முழு நிலவு நாள்…

இரவின் ஏகாந்த வெளிச்சத்தில்..மொட்டை மாடியில் நின்று நிலவை ரசித்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி.

அவளை பின்னிருந்து ரசித்துக் கொண்டிருந்தான் செந்தில் குமரன்.இன்னொரு நிலவென அவள் ஜொலிக்க…ஏனோ அவளின் ஏகாந்தத்தை கலைக்க அவனுக்கு மனம் வரவில்லை.இருந்தாலும் கிப்ட் கொடுக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு.

“மீனா…! என்று அவன் இரண்டு முறை கூப்பிட்ட பின்னரே திரும்பினாள்.

“சொல்லுங்க..!

“உனக்கு ஒரு கிப்ட் இருக்குன்னு சொன்னேன்ல..! என்றான்.

“அட ஆமாம்ல..நான் மறந்தே போயிட்டேன்..என்ன கிப்ட்..கைல ஒன்னும் இல்லை..! என்றாள்..அவனை சுற்றிப் பார்த்த படி.

“இது தான் அந்த கிப்ட்..! என்று அவன் செல்லைக் காட்ட…அதில் அடிவாங்கிய முகத்துடன் வீங்கிப் போய் லாக்கப்பில்  இருந்தான் ஒருவன்.

“இவனை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே..! என்றாள்.

“பிரியாவை ஏமாத்தினவன்…மகா மேல காரை ஏத்தி கொலை செய்தவன்… சேகருக்கு வலது கையாய் இருந்த தருண் தான் இவன்…. என்று அவன் சொல்லிக் கொண்டே செல்ல…மீனாவின் முகம் மாறிக் கொண்டே போனது.

“இவனை அரஸ்ட் பண்ணியாச்சு..! இதுல சம்பந்த பட்ட பொண்ணுங்க பேர்,விபரம் எதுவும் வெளிய வராது..! மகாவை ஆக்சிடன்ட் பண்ணதா சொல்லி தான் இவனை அரஸ்ட் பண்ணியிருக்கு…கண்டிப்பா இவன் களி திங்கப் போறது உறுதி..! என்றான் குமரன்.

அவன் பேச பேச.. அதை மகா சந்தோஷமாய் நிலவில் இருந்து பார்ப்பதைப் போன்ற ஓரு பிரம்மை மீனாவினுள்.

“நிஜமாவா..? என்றாள் முகம் முழுவதும் சந்தோஷத்துடன்.

“நிஜம்..! மகாவுக்கு என்னால் முடிந்தது இது தான்..! என்று அவன் கண் கலங்க..அவனைப் பாய்ந்து அணைத்துக் கொண்டாள் மீனா.

“தேங்க்ஸ் செந்தில்..ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. என்று அவன் முகம் முழுவதும் முத்தமிட….தன் முன்னால் காதலி,இந்நாள் மனைவியின் முத்தத்தில் கரைந்தே போனான் செந்தில் குமரன்.

“நான் குடுத்த கிப்டை விட..இது எனக்கு பெரிய கிப்ட்.. என்றபடி அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

வானில் இருந்த முழு நிலவு இவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. இனி இவள் வாழ்வில் பிறையில்லா பௌர்ணமி மட்டுமே..இனி செந்தில் குமரனின்..சர்வ மீனாட்சியாக மட்டுமே அவள் ஜொலிப்பாள்.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு…!

அன்று தங்கள் மகளை கேஜி வகுப்பில் சேர்ப்பதற்காக… மீனாவும், குமரனும் அந்த பள்ளியில் காத்திருக்க..அவர்களுக்கான முறையும் வந்தது.

பட்டுப் பாவாடையில் தேவதையாய் இருந்த அவளை குமரன் தூக்கிக் கொள்ள..அவனின் பெரிய தேவதை அவனை முறைத்துக் கொண்டே பின்னால் சென்றாள்.

“வாங்க மிஸ்டர் குமரன்…! என்று அந்த பிரின்ஸ்பால் அழைக்க…அவர்களுக்கு முன்…அவனின் மகள் வணக்கம் வைத்தாள்.

“சோ சுவீட்..! வாட்ஸ் யுவர் நேம்..? என்றார்.

“ஐ யம் மகா லக்ஷ்மி..! என்றாள் அவள் மழலைக் குரலில்.

“ஸ்வீட் நேம்..! யு லுக் சோ பியுட்டிபுள்…லுக்ஸ் லைக் ய ஏஞ்சல்… என்று அவர் சொல்ல..

“யா..ஐ நோ… என்று அவள் சொன்ன விதத்தில்…பிரின்சிபால் கவுந்து விட்டார்.

“ரொம்ப சமத்து..! என்றபடி அவர் அவள் சேர்க்கையினை உறுதி செய்தார்.

அங்கிருந்து கிளம்பும் போதும்..அவள் அப்பாவின் தோளில் இடம்பிடிக்க… மீனாவிற்கு மனம் தாங்கல் தான் கொஞ்சம்.

“உங்கம்மா எதுக்கு உம்முன்னு வரா..? என்றான்.

“அதுவா…அவங்களுக்கு உள்ள பயரிங்.. என்றாள் குட்டி மகா.

“யாருக்கு எனக்கா..? அடிக்கழுதை..! என்று அவள் அடிக்க வர..

“டாடி.. என்றபடி குமரனை இறுக அணைத்துக் கொண்டாள் மகா.

அவள் பிறந்ததில் ஒரு ஆச்சர்யமான அதிசயம்…மீனாவின் தங்கை மகாவின் பிறந்த நாள் அன்று தான் இந்த குட்டி மகாவும் பிறந்தாள். அதனாலேயே அவளுக்கு மகா லக்ஷ்மி என பெயர் வைத்தனர்.

அவளின் ஓவ்வொரு செயலிலும்..தன் தங்கை மகாவைக் கண்டால் மீனா.அதனால் தானோ என்னவோ பல சமயங்களில் இருவருக்கும் ஒத்துப் போவதில்லை.

வீட்டிற்கு திரும்பி செல்லும் வழியில் மகா உறங்கி விட…அவளை  பின் சீட்டில் படுக்க வைத்து விட்டு..முன்னால் கணவனின் அருகில் அமர்ந்திருந்தாள் மீனா.

“மேடம்க்கு என்ன கோபம்..!

“என்னக்கென்ன கோபம்..! அதெல்லாம் ஒண்ணுமில்லை..! எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு..! என்று முறுக்கிக் கொண்டாள்.

“ராஜ்மோகனின் தொழில் வாரீசு இப்போது மீனாதான்.குமரன் இந்தா அந்தா என்று சொன்னானே தவிர..அந்த வேலையை விட்டபாடில்லை.மீனாவும் ஒரு கட்டத்தில் அவனுக்கு எது விருப்பமோ அதையே செய்யட்டும் என்று சொல்லிவிட..அன்றிலிருந்து மாமனாரின் தொழிலுக்கு அவள் முக்கியத்துவம் ஆகிப் போனாள்.

அவளின் ஆளுமையும்,தன்னம்பிக்கையும் குமரனால் நாளுக்கு நாள் வளர்ந்ததே தவிர குறையவில்லை.

பிரியாவிற்கு அண்ணியாக மட்டுமில்லாமல்..இப்போது ஒரு சிறந்த தோழியும் அவள் தான்..பிரியாவிற்கும் ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் ஆகியிருந்தது.

“என்னடி ஆச்சு ..? என்றான் கெஞ்சாத குறையாக.

“உங்களுக்கு உங்க மகள் வந்ததுக்கு அப்பறம் நான் கண்ணுக்குத் தெரியவேயில்லை..! என்றாள்.

“ஆமா…! என்றான்.

“என்னது..? என்று பத்திரகாளியாய் மாற…

“இல்லை..கண்ணனுக்கு தெரியாத அளவுக்கு குண்டாயிட்ட..அதான் அப்படி சொன்னேன்..! என்றான் சிரித்துக் கொண்டே.

“அந்த  அளவுக்கா குண்டாயிட்டேன்…! என்று அவள் தன்னைத் தானே குனிந்து பார்த்துக் கொண்டிருக்க…அவளை அருகில் இழுத்தவன்..அவளின் கன்னத்தில் பச்சகென்று ஒரு முத்தத்தை வைக்க…

“பிராடு..பிராடு…! என்று அவனை அடிக்கத் தொடங்கினாள்.

“ஹேய் நான் என்னடி பண்ணுனேன்..! வலிக்குதுடி..விடுடி..என் பொண்ணை எழுப்பிடுவேன்..! என்றவனின் குரலில் சந்தோசம் மட்டுமே.

அவனிடம் செல்ல சண்டை இட்டவள்…அவனின் தோளில் வாகாக சாய்ந்து கொள்ள…

“என்ன மேடம் ரொமான்ஸ் மூடுக்கு போய்ட்டிங்க போல..! என்றான்.

“தேங்க்ஸ் செந்தில்..!

“எதுக்குடி..?

“எல்லாத்துக்கும்…! என்று அவனை ஆழ்ந்து பார்க்க..அந்த பார்வையில் அவன் விரும்பியே கரைந்து போனான்.

“இந்த தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம்…தேங்க்ஸ் இப்படி சொல்லக் கூடாது..! என்றான் மந்தகாசமாய்.

“அப்படியா..வீட்டுக்கு வாங்க..! எப்படி சொல்லணுமோ அப்படி சொல்றேன்..! என்றாள்.

“நிஜமாவா..? லீவ் போடவா..? என்றான்.

“ஆசை தோசை… என்றாள்.

“ஒரு சின்ன பிள்ளைய ஏமாத்துறதே வேலையா போய்டுச்சு..! உனக்கு வாய்ச்சது அவ்வளவு தான் குமரா…! என்று அவன் தன்னைத்தானே சொல்லிக் கொள்ள..

“உங்களை…! என்று அவள் அடிக்க வர…அந்த கையை மடக்கி..தனக்குள் அடக்கிக் கொண்டான் குமரன்.

அவள் விலக முற்பட..இப்படியே இரு..! இது தான் எனக்கு வேணும்..! என்றான் ஆழ்ந்த குரலில்.

அவளும் அவன் கைகளுக்குள் அடைக்கலமாகிப் போனாள்.

அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் எந்த இடையூறும் செய்யாமல்..நாமும் விடை பெறுவோம்..!!!!!!

Advertisement