Advertisement

மலர் 21:

சாரதியின் வீட்டில் இருந்தாள் கவி பாரதி.சந்திராவிற்கு ஏனோ அவளைப் பிடிக்கவில்லை.முதலில் தன் மகனை வேண்டாம் என்று நிராகரித்து விட்டு…..பிறகு ஒரு சூழ்நிலை என்று வரும் போது….அவனைத் திருமணம் செய்த கவியை அவருக்கு பிடிக்கவில்லை.ஆனால் சாரதிக்கு பயந்து வாயைத் திறக்காமல் அமைதியாய் இருந்தார்.

அவளை வீட்டில் விட்டு சென்றவன் தான் இரண்டு நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை.அதை கவி பெரிதாக எடுத்துக் கொள்ளவும் இல்லை.ஆனால் தன் அம்மாவை அவள் அருகிலேயே விடவில்லை.விஜயன் எவ்வளவு எடுத்து சொல்லியும் மறுத்து விட்டாள்.வேறு வழியில்லாமல் அவர்கள் கிளம்பி செல்ல….தனக்குள்ளேயே யோசனையில் ஆழ்ந்தாள்.

அப்பொழுது தான் வீட்டிற்குள் நுழைந்தான் சாரதி.உள்ளே வந்ததும் அவன் கண்ணில் பட்டது….யோசனையுடன் அமர்ந்திருந்த கவி பாரதி தான்.

“கவி…” என்றான்.

அவனுடைய அழைப்பில் திரும்பியவளின் முகம் “என்ன..?” என்ற கேள்வியை முகத்தில் தாங்கியிருந்தது.

“என்ன யோசனை..?” என்றான்.

“கண்டிப்பா சொல்லனுமா..?” என்றாள் கவி.

“உன் விருப்பம்..!” என்றான்.

“ரெண்டு நாளா எங்க போயிருந்திங்க..?” என்றாள்.

கவியின் கேள்வியில் திகைத்தான் சாரதி.கண்டிப்பாக இப்படி ஒரு கேள்வியை அவளிடம் இருந்து அவன் எதிர்பார்க்கவில்லை.

நடந்து முடிந்ததை பற்றி அவள் ஜீரணித்துக் கொள்ள கொஞ்ச அவகாசம் தேவை என்று தான் அவன் சென்றது.

ஆனால் அவள் என்னவோ….நல்ல முறையில் கல்யாணம் நடந்ததைப் போன்று பேசவும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.இரண்டு நாளாய் மனதில் உறுத்திக் கொண்டிருந்த விஷயம் இப்போது விஷ்வ ரூபம் எடுக்கத் தொடங்கியது.

“நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் கவி…!” என்றான்.

“பேசுங்க…!” என்றாள்.

“இல்ல இங்க வேண்டாம்…வா ரூமுக்கு போகலாம்..” என்றபடி அவளை அழைத்து சென்றான்.

தன்னுடைய அறைக்கு அவளை அழைத்து செல்ல..அங்கு பெரிய அதிர்ச்சி அவனுக்கு காத்திருந்தது.அவளுடைய அறையாகவும் அது மாறியிருந்தது.இதை அவன் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.

“இங்க எப்படி நீ…?” என்று அவன் தயங்க…

“நீங்க என்ன லூசா…?இது தான உங்க ரூம்…அப்ப நானும் இங்க தான இருக்கணும்…! சரி சொல்லுங்க என்ன பேசணும்…!” என்றாள் சாதரணமாய்.

அவளுடைய முகத்தையே கூர்ந்து பார்த்தவன்….ஒரு நெடிய மூச்சினை வெளிவிட்டான்.

“சரி சொல்லு…உன்னோட பிளான் என்ன..?” என்றான் அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தபடி.

ஒரு நிமிடம் அதிர்ந்தவள்…அதை சட்டென்று மறைத்தவளாய்..”என்ன பிளான்…? புரியலை..!” என்றாள்.

“திட்டம் போட்ட உனக்கு எப்படி புரியாமல் போகும்..?” என்றான் சாரதி.

“சாரதி..!” என்று அதிர்ந்தாள்.

“சொல்லு கவி…! வெற்றி கல்யாணத்தில் நடந்த குழப்பம்…. தானா நடந்ததா இல்லை..நீயா ஏற்படுத்தியதா…?” என்றான்.

“சாரதி..!!!!” என்று ஏகத்திற்கும் அதிர்ந்தாள் கவி.

“இல்லைன்னு மட்டும் பொய் சொல்லிடாத கவி…!என்னோட சந்தேகம் சரின்னா…உனக்கும் வெற்றிக்கும் கல்யாணம் நடப்பதை விட….மலருக்கும் வெற்றிக்கும் தான் கல்யாணம் நடக்கணும்ன்னு நீ நினைச்சிருக்க….சரியா..?” என்றான்.

அவனை பார்த்தவளின் கண்கள் கலங்க..”நீங்க என்ன சொல்றிங்க…? அப்படி எல்லாம் செய்ய நான் என்ன லூசா..? சும்மா நீங்களா எதையாவது கற்பனை பண்ணிக்காதிங்க…!” என்றாள்.

“நான் கற்பனை எல்லாம்  பண்ணலை.ஆனா நடந்த எதையும் நம்ப முடியலை.எங்கயோ  இடிக்குது.கல்யாணம் நின்ன அதிர்ச்சி உன் முகத்தில் இல்லை.மலரைப் பார்த்த உன் பார்வையில் சுத்தமாக கோபம் இல்லை.அதே போல் வெற்றி உசுப்பேற்றுவது போல் பேசியதும்…என்னை உடனடியாக திருமணம் செய்யும் அளவுக்கு என்ன வந்தது.அதுவும் பிடிக்காத என்னை..?” என்றான்.

“இப்போ இவ்வளவு கேள்வி கேட்குறவர்…நான் கேட்ட உடனே என் கழுத்தில் ஏன் தாலியைக் கட்டுனிங்க..?” என்றாள்.

“நான் நேசித்த நீ யார் முன்னாலும் தோற்க கூடாது என்றுதான்..” என்றான் பட்டென்று.

அவனின் பதிலைக் கேட்ட கவி பாரதி இனிமையாய் அதிர்ந்தாள்.ஏனோ மனதில் இருந்த பாரங்கள் எல்லாம் விலகியது போன்ற ஒரு மாயை.இனிமையான ஒரு சந்தோசம் தன் உடல் முழுவதும் பரவுவதைப் போல் உணர்ந்தாள்.

“சாரதி அது வந்து…” என்று கவி இழுக்க…

“பிளீஸ் கவி….நீ என்கிட்ட எதையோ மறைக்கிற…ஒரு நண்பனா என் கிட்ட அதை சொல்லலாம்….” என்றான்.அவனுக்கும் சில விஷயங்களில் தெளிவு வேண்டியிருந்தது.

“நான் சொல்லப் போறதை எப்படி எடுத்துபிங்கன்னு தெரியலை.ஆனா சொல்ல வேண்டியது என் கடமை…” என்று நிறுத்தியவள்….

தங்களின் கடந்த காலத்தை எடுத்து கூறினாள் சாரதியிடம்.நடந்த விஷயங்களை அப்படியே சொல்ல….அதைக்கேட்டுக் கொண்டிருந்த சாரதியின் முகத்தில் பல கலவையான உணர்வுகள்.எப்படி உணர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.

தன் மனைவியின் முதல் காதல் தனக்கு இல்லை என்று உணர்ந்த அந்த நிமிடம்..அவனின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

மலருக்கு நடந்ததை எண்ணியவனின் கண்களும் கலங்கியது.வெற்றிக்கு பின்னால் இவ்வளவு நெடிய கதையை..ஒரு நெருங்கிய நண்பனாய்…தான் தெரியாமல் இருந்ததற்காக வெட்கப்பட்டான் சாரதி.

அதற்கும் மேல் கவியின் மேல் கோபம் கோபமாக வந்தது.இப்படியும் மடத்தனமாக ஒரு பெண் இருப்பாளா..? என்று எண்ணினான்.

ஆனால் அவனுடைய கோபத்தை அவளிடம் காட்ட முடியாத அளவிற்கு கவியின் முகமும் வேதனையைத் தாங்கியிருந்தது.தான் கம்பீரமாய் பார்த்த கவிபாரதியின் முகம் தானா இது..? என்று அவனே யோசிக்கும் அளவிற்கு.

“கவி..!” என்று அவள் தோளைத் தொட….அதுவரை அடக்கிக் கொண்டிருந்தவள்…மடங்கி அமர்ந்து அழத் துவங்கினாள்.

கவியிடம் இப்படி ஒரு பரிமாணத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.எத்தனை நாள் அடக்கி வைத்திருந்தாலோ…அத்தனையும் இன்று கேவலாய் வெளியேறியது.

“என்னோட மடத்தனத்தால் எல்லாரோட வாழ்க்கையையும் நான் அழிச்சுட்டேன்…அதுலயும் செல்வாவோட உயிரையே எடுத்திருக்கேன்….” என்று கதற…அவளைத் தேற்றும் வழி தெரியாமல் திணறினான் சாரதி.

“ஆனா என்னோட முடிவு…ஒரு உயிரை காவு வாங்கும்ன்னு அப்ப எனக்கு தெரியாம போய்டுச்சு….எதையும் ஆராயாத உள்ளம்….நினைத்தை அடையும் வயசு….கண்ணை மறைத்த காதல்….இது..இது..எல்லாமே சேர்ந்து…கடைசியில் செல்வாவை..செல்வாவை காவு வாங்கிவிட்டது…மலரோட வாழ்க்கையும் இப்படிப் போனது….” என்றாள் விழிகளில் வழிந்த கண்ணீருடன்.

“கவி…பிளீஸ் அழாத..!”என்றான் சாரதி.

“இல்லை சாரதி…இது இத்தனை வருஷமாய் நான் அடக்கி வச்சிருந்தது.யார்கிட்டயும் சொன்னதில்லை.நடந்த எல்லாத்துக்கும்…என் அம்மாவும் நானும் தான் பொறுப்பு.நான் சொன்னதை எங்க அம்மா கேட்டிருந்தா..இன்னைக்கு செல்வா உயிரோட இருந்திருப்பார்.ஆனா ஆசை யாரை விட்டது…

அதான் எங்க அம்மாவை வெறுத்தேன்..என்னையவே வெறுத்தேன்…என்னை பார்க்க எனக்கே பிடிக்கவில்லை…வெறித்தனமா படிச்சேன்…முடிஞ்ச அளவுக்கு வீட்டில் இருந்து ஒதுங்கியே இருந்தேன்…தனிமையை தண்டனையாய் ஏற்றுக் கொண்டேன்….

அப்ப தான் நீங்க பெண் பார்க்க வந்திங்க..! ஆனா உங்க கூட நான் வெற்றியை நிச்சயம் எதிர்பார்க்கலை.பார்த்த அந்த நிமிஷம் எப்படி உணர்ந்தேன்னு என்னால் சொல்ல முடியவில்லை.

எனக்கு தெரிந்து வெற்றியும் திருமணம் செய்து கொள்ளவில்லை…மலரும் அடுத்த திருமணம் செய்து கொள்ளவில்லை.

வெற்றியின் ஈகோவை தூண்டுவதைப் போல் நான் நடந்து கொண்டால்…கண்டிப்பாக அவர் மலரை எப்படியாவது கல்யாணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்த்தேன்.

கடைசியில் அது தான் நடந்தது.நடந்த எதிலும் எனக்கு எந்த மன வருத்தமும் கிடையாது.சொல்ல போனா எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு.

இழந்த செல்வாவை என்னால் மீட்டுத் தர முடியாது.ஆனால் மலருக்கு அவள் வாழ்க்கையை மீட்டு தரணும்ன்னு தான் இப்படி பண்ணேன்…” என்று முடித்தாள்.

கவி சொல்ல சொல்ல ..அவளையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சாரதி.

“வெற்றியே போய் மலரை பெண் கேட்டிருக்கலாமே..?” என்றான்.

“அவங்களுக்கு வெற்றி மேலையும் கோபம்….அதனால் தான் வெற்றியை வெருத்தாங்க அப்படியிருக்கிற நிலையில் எப்படி மலரை அவருக்கு திருமணம் செய்து வைப்பாங்க…இப்பவே பார்த்திங்க..மலரை கையோட கூட்டிட்டு போனதை…” என்றாள்.

“அது என்னவோ உண்மைதான்…!” என்றான் சாரதி.

“உங்களுக்கு என் மேல் கோபம் இல்லையா..?” என்றாள் யோசனையுடன்.

“கோபம் இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன்…நடந்ததை நீ சொல்லும் போது…அளவில்லாத கோபம் வந்தது…ஆனா எல்லாம் உன் கண்ணீரை பார்க்கும் வரை தான்…” என்றான் முகம் நிறைய காதலுடன்.

“தன்னை இப்படி நேசிக்கும் அளவிற்கு தன்னிடம் அப்படி என்ன  இருக்கிறது….உணமையான நேசத்திற்கான தகுதியை நான் இழந்து பல வருடங்கள் ஆகிறதே..!” என்று மனதிற்கு எண்ணியவள் விரக்தியாய் சிரித்துக் கொண்டாள்.

“நீ மனசில் என்ன நினைக்கிறேன்னு எனக்கு புரியுது கவி…எல்லாரும் ஒரு சூழ்நிலையில் தப்பு பண்றவங்க தான்…அதையே நினைச்சுட்டு இருந்தா….வாழ்க்கையை எப்படி வாழ்றது…நீ செய்த தப்புக்கு…உன்னால் முடிந்த ஒரு நல்லதை செஞ்சுட்ட…இனி நடக்குற எல்லாமே நல்லாத்தான் நடக்கும்…கண்டதைப் போட்டு மனசைக் குழப்பாம இரு..” என்றான் ஆதரவாய்.

“முயற்சி பண்றேன்..” என்றாள்.

“சரி மேடம் உங்க வேலையைப் பார்க்க போற ஐடியா இல்லையா…இல்லை நீங்க ஒரு கலெக்டர் என்பதே மறந்து போயிடுச்சா..?” என்றான்.

“அதெல்லாம் மறக்கலை…இன்னும் டூ டேஸ் கழிச்சு தான் போவேன்..!” என்றாள்.

“ஓகே..அப்ப ரெஸ்ட் எடு…எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு…நான் போய் முடிச்சுட்டு வந்திடுறேன்..” என்றபடி நகன்றான்.

“சாரதி…” என்றாள் கவி.

முன்னே சென்றவன் திரும்ப…”தேங்க்ஸ்…” என்றாள்.

சிரித்துக் கொண்டே தலையை ஆட்டியபடி சென்று விட்டான்.கவிக்கும் எதிலிருந்தோ விடுபட்ட உணர்வு.அவள் முகத்தில் அமைதியாய் அமர்ந்து கொண்டது பழைய கம்பீரம்.

வெற்றியின் வீட்டில்….

திடுதிப்பென்று வந்து நின்ற மூவரையும் பார்த்த துர்கா திகைத்தார்.கண்களைத் தேய்த்து விட்டு  பார்க்க…உண்மை புரிந்தது.விரோதியாகவே இருந்தாலும்…வீட்டிற்கு வந்தவர்களை வா என்று அழைக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது.

“வாங்க..!” என்றார் மரியாதை நிமித்தமாக.

மலரோ குனிந்த தலை நிமிராமல் இருக்க….சத்யா முகத்தில் எதையும் காட்டாமல் இருக்க…..திவாகர் தான் முதலில் உள்ளே சென்றார்.அவரைத் தொடர்ந்து சத்யாவும் செல்ல….மலரோ தயங்கி நின்றாள்.

வெளியில் செல்வதற்காக கிளம்பி வந்த கண்ணனும், தாரணியும் இவர்களைப் பார்த்த ஆனந்த அதிர்ச்சியில் இருந்தனர்.

மலர் தயங்குவதைப் பார்த்த தாரணி….

“ஒரு நிமிஷம் மலர்…அப்படியே இரு…!” என்றவள்…கண்ணனிடம் காதில் ஏதோ சொல்ல..அவனும் தலையை ஆட்டியபடி சென்றான்.

“இப்ப எங்கண்ணா…இவ்வளவு அவசரமா கூட்டிட்டு போற..?” என்றபடி வந்த வெற்றி ஹாலில் இருந்தவர்களைப் பார்த்து திகைத்தது ஒரு நிமிடம் தான்.

சில நொடிகளில் முகம் இறுகியவன்…”வாங்கம்மா….வாங்கப்பா…!” என்றதோடு தன் வேலை முடிந்து விட்டதாய் எண்ணி…நகரப் பார்க்க….

“வெற்றி…..” என்று பல்லைக் கடித்தான் கண்ணன்.

“என்ன…?” என்றான் எரிச்சலாய்.

கண்ணன் வாயிலை நோக்கி கண்ஜாடை காட்ட….அங்கே திரும்பியவனின் விழிகளில் விழுந்தாள் மலர்.மின்னல் கீற்றாய் சில நிமிடங்களில் அவன் முகத்தில் தோன்றிய சந்தோசம் சட்டென்று மறைந்தது.

கண்ணன் அவனை மலர் அருகில் செல்லுமாறு ஜாடை காட்ட..வெற்றியோ கண்டு கொள்ளாமல் இருந்தான்.துர்காவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

உள்ளே இருந்து ஆரத்தி தட்டுடன் வெளியே வந்த தாரணி…..வெற்றியை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள்.

“அண்ணி…வேண்டாம் விடுங்க..! இப்ப இது ஒன்னு தான் குறைச்சல்….!” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.

அவன் பேச்சைக் கேட்டால்..அவனுக்கு எப்படி அண்ணியாக இருக்க முடியும்.அவனை இழுத்தபடியே வந்து மலரின் அருகில் விட்டாள் தாரணி.அனைவரின் முன்பும் கோபத்தைக் காட்ட முடியாமல் அடக்கி வாசித்தான் வெற்றி.

இருவரையும் சேர்ந்தபடி நிற்க வைத்து ஆரத்தி சுற்றினால் தாரணி.தாரணியின் செயலை மலர் வியப்பாய் பார்க்க… வெற்றியோ… வெட்டுவேன்…குத்துவேன் என்பதைப் போல் பார்த்து வைத்தான்.

“வலது காலை எடுத்து வச்சு வா மலர்..!” என்று தாரணி சொல்ல..அப்படியே செய்தால் மலர்.

இதைப் பார்த்த திவாகரனுக்கு மனம் நிரம்பியது.மனதில் கோபம் இருந்தாலும் துர்காவிற்கும் மனதின் மூளையில் நிம்மதி பிறந்தது.சத்யாவோ எதையும் முகத்தில் காட்டாது அமர்ந்திருந்தார்.

“அன்னைக்கு நாங்க நடந்துகிட்ட முறைக்காக….உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறோம் சம்பந்தி..” என்று திவாகர் சட்டென்று கைகூப்ப…

“ஐயோ..! என்ன நீங்க…!” என்று பதறினார் துர்கா.

“இல்லை சம்பந்தி…நாங்க மலரை அப்படி கூட்டிட்டு போனது தப்பு..ஏதோ கோபத்தில் யோசிக்காம அப்படி செஞ்சுட்டோம்…மலர் வாழ வேண்டிய பொண்ணு…அவ இங்க தான் இருக்கணும்…” என்றார்.

“ஹோ…அப்ப கூட இவங்களுக்காக தான் வந்தாளோ…?” என்று அவளை உறுத்து விழித்தான் வெற்றி.

அவனின் பார்வையை எதிர்கொண்ட மலருக்கு மனதிற்குள் குளிர் பிறந்தது.சும்மாவே அவனைக் கண்டால்  அவள் நடுங்குவாள்.இப்பொழுது சொல்லவா வேண்டும்..?

“நாங்க செய்ய வேண்டிய முறை எல்லாம்…” என்று திவாகர் இழுக்க…

“அதெல்லாம் எதுவும் வேண்டாம்…” என்றான் வெற்றி பட்டென்று.

“வெற்றி..” என்று திவாகர் அதிர..

“ஆமாம்ப்பா..அதெல்லாம் எதுவும் வேண்டாம்…இப்ப கூட நீங்க முழு மனசா இங்க வந்திருக்கிங்களான்னு தெரியாது.ஏன்னா…வந்ததில் இருந்து நீங்க மட்டும் தான் பேசுறிங்க…சத்யாம்மா அமைதியா தான இருக்காங்க…இப்ப கூட அவங்களுக்கு இதில் விருப்பமில்லைன்னு தெளிவா தெரியுது.அப்படி பிடிக்காம எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.நான் ஒன்னும் வக்கத்தவன் இல்லை….” என்று கோபமாய் சொன்னவன்…

“அம்மா..எனக்கு வயல்ல வேலை இருக்கு..! நான் போய்ட்டு வந்திடுறேன்…!” என்றபடி சென்று விட்டான்.

வீட்டினர் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்க….முதன் முறையாக தன் மீதே கோபம் வந்தது சத்யாவுக்கு.

“அப்ப நாங்க கிளம்புறோம் சம்பந்தி…” என்றபடி திவாகர் சொல்ல…

“என்ன சொல்றிங்க..? வந்த உடனே கிளம்புறேன்னு சொல்றிங்க….அவர் குமுளி வரைக்கும் போயிருக்கார்…வந்திடுவார்…ஒரு வாரம் தங்கிட்டு தான் போகணும்….மலர் பயப்படுமா இல்லையா..?” என்றார் துர்கா.

“இல்லை  சம்பந்தி..நாங்க இங்க மதுரைக்கு தான் போறோம்…கண்டிப்பா மலரைப் பார்க்க வருவோம்…மலரை இங்க தானே விட்டுட்டு போறோம்..இது அவ இனி வாழ போற வீடு..அதனால் எதுக்கு பயப்பட போறா..?” என்றவர்…

“மலர் பார்த்து இருந்துக்கடா..இனி இது தான் உன் வாழ்க்கை..அதை மட்டும் மனசில் பதியவை..எங்களைப் பத்தி கவலைப் படாத…!” என்றபடி விடை பெற்றனர் இருவரும்.

சத்யா கடைசி வரை எதுவும் பேசாமல் சென்றது…துர்காவிற்கே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.

முதலில் மலரை அவருக்கு பிடிக்கவில்லை என்பது உண்மைதான்.ஆனால் ஏனோ அவளை வெறுக்க அவரால் முடியவில்லை.தன் செல்ல பிள்ளையின் மனைவி என்பதாலா…இல்லை இயற்கையிலேயே அவரிடம் இருந்த தாய்மை உணர்வா என்று பிரித்தறிய முடியவில்லை.

“தாரணி பூஜை ரூமுக்கு கூட்டிட்டு போய்…விளக்கேத்த சொல்லுமா..!” என்றார் துர்கா.

“சரிங்க அத்தை…” என்ற தாரணி…”வா மலர்..!” என்றபடி அவளை அழைத்து சென்றாள்.

பூஜை அறையில் விளக்கேற்றி….கடவுளை வேண்டினாள் மலர்.

என்ன வேண்டினாள் என்பதை அவள் அறியாள்.ஆனால் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வலிந்து கொண்டே இருந்தது.அவளைப் பார்த்த தாரணிக்கே பாவமாய் போனது.

“போதும் மலர்….எதுக்காக இந்த அழுகை….இனி உன் கண்ணில் கண்ணீரே வர கூடாது சரியா…? நடந்த எல்லாமே நல்லதுக்குன்னு நினைச்சுக்கோ….இனி நடக்க போறதும் நல்ல படியாதான் நடக்கும் சரியா…?” என்று அவளைத் தேற்ற..

“தேங்க்ஸ் அக்கா…” என்று அவளைப் பார்த்து…புன்னகைத்து வைத்தாள் மலர்.

அழுகையிலும் கூட அவள் முகத்தில் தவழ்ந்த அழகைக் கண்டு வியந்து தான் போனாள் தாரணி.

“நீ ரொம்ப அழகு மலர்…!” என்று திருஷ்டி சுத்தினாள் தாரணி.

“அப்படி எல்லாம் இல்லக்கா…” என்றபடி கண்களைத் துடைக்க…

“இது..இது தான் நல்ல பிள்ளைக்கு அழகு..” என்று அவளை அணைத்துக் கொண்டாள் தாரணி.

மலரின் சிரிப்பு நிலைக்குமா..? அழுகை நீடிக்குமா..?

 

 

 

 

 

 

 

 

Advertisement