Advertisement

பௌர்ணமி 9:

வீட்டிற்கு வந்திருந்தவர்களைப் பார்த்து மீனாட்சிக்கு கொஞ்சம் அதிர்ச்சியும் ஆச்சரியமும்.அந்த நாளில் அவர்களை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் முகத்தில்  இருந்தே தெரிந்தது.

கோபாலனுக்கு தான் ஒன்றும் புரியவில்லையே தவிர…தேவகிக்கு நன்றாக புரிந்தது.அவர்கள் வந்திருப்பதற்கான காரணம்.

ராஜ்மோகனும்,செல்லமாவும் சுற்றி வளைத்து பேசாமல் நேரடியாக மீனாட்சியைப் பெண் கேட்டனர்.

“என்னடா இப்படி வந்து கேட்குறோம்ன்னு நீங்க தப்பா நினைக்கக் கூடாது.எங்க பையன் மீனாட்சி மட்டும் தான் அவனுக்கு மனைவியா வரமுடியும்ன்னு தீர்மானமா சொல்லிட்டான்.

நாங்களும் நல்லா யோசிச்சு பார்த்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கோம்…கடந்த வாழ்க்கை என்ன ஏதுன்னு எங்களுக்குத் தெரியாது…ஆனா இனி வரப்போற காலத்துல என் பையன் உங்க பொண்ணை நல்ல படியா வச்சிக்குவான்.. என்றார் ராஜ்மோகன்.

குமரன் நிமிர்ந்த தலையுடன் அமர்ந்திருக்க….பிரியா முள்ளின் மேல் இருப்பதை போல் இருந்தாள்.வெளியே வந்த மீனாட்சி பிரியாவைக் கண்டும் காணாததைப் போல் இருக்க..இவர்களையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்த  குமரனுக்கு ஏதோ ஒரு இடத்தில் புரிந்து…ஏதோ சில இடத்தில் மனம் சறுக்கியது.

“நீங்க எல்லாரும் என்னை மன்னிக்கணும்..! எனக்கு இன்னொரு திருமணம் செய்றதுல விருப்பம் இல்லை..! என்றாள் மீனாட்சி.

“என்னம்மா சொல்ற? அதுக்காக இப்படியே இருந்திட முடியுமா..? உனக்கான வாழ்க்கை உனக்கு ரொம்ப முக்கியம் மீனாட்சி..! என்றார் செல்லம்மா.

“விசாரிச்சதுல உங்களுக்கு ரெண்டு பொண்ணுன்னு சொன்னங்க….! என்றபடி ராஜ்மோகன் அங்கு மாட்டியிருந்த போட்டோவைப் பார்த்து அதிர்ந்தபடி….

“இது பிரியா பிரண்ட் மகா தான..? என்றார்.

“ஆமாங்க..! ஆனா அவ இப்ப உயிரோட இல்லை..கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்து போய்ட்டா..! என்றார் கோபாலன்.

“ரொம்ப சாரிங்க மிஸ்டர் கோபாலன்…! எங்களுக்குத் தெரியாது…. என்று அவர் வருத்தம் தெரிவிக்க….பிரியாவுக்கு வியர்க்க தொடங்கியது.

“என்ன பிரியா..? நான் கேட்டதுக்கு நல்லா இருக்கான்னு சொன்ன..? மகா உயிரோடவே இல்லையாமே..! என்றான் குமரனும் அதிர்ச்சியை வரவழைத்தபடி.

“இல்லைண்ணா…கடைசியா நான் பார்த்ததுக்கு அ..அப்பறம் நா..நான் பார்க்கலை..! எனக்கும் இறந்தது தெ..தெரியாது…! என்றாள் திக்கியபடி.

“அப்படியா..? என்றான் ஆராய்ச்சியாய்.

“ஆமாண்ணா…நான் தான் ஹாஸ்ட்டல் போயிட்டேனே…! எனக்குத் தெரியாது….! என்றாள் மீண்டும் திக்கித் திணறி.

“சரி இப்ப தெரிஞ்சிடுச்சே…ஆனா நீ கவலைப் பட்ட மாதிரி தெரியலையே..! என்றான் மீண்டும் விடாமல்.

“அண்ணா பிளீஸ்…நானே அவ இறந்து போய்ட்டாங்குற வருத்ததுல இருக்கேன்..நீங்க வேற எதையாவது கேட்டு…என்னைப் படுத்தாதிங்க…! என்று எரிந்து விழுந்தாள்.

“ஓகே..ஓகே…கூல் டவுன்..! என்றபடி நிமிர்ந்து மீனாட்சியைப் பார்க்க… அவளும் இவர்கள் இருவரைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எங்களுக்கு இதுல சம்மதம்…உடனே கல்யாணத்தை வைக்கிறது என்றாலும் எங்களுக்கு சம்மதம் தான்.. என்றார் தேவகி மரத்துப் போன குரலில்.

“அம்மா…! என்னால முடியாது..! என்றாள் மீனாட்சியும் பட்டென்று.

“முடியனும்..! இது தேவகி அல்ல…குமரனின் குரல்.

“இப்படி கட்டாயப்படுத்துறது தப்பு குமரா..! இது ராஜ்மோகன்.

“நல்லதுக்காக செய்ற எதுவும் தப்பில்லை தானப்பா….அப்படிப் பார்த்தா இதுவும் தப்பில்லை…! என்று அந்த இடத்தில் அவளுக்கான முடிவையும் அவனே எடுத்தான்.

“இதெல்லாம் சரியில்லை.கட்டாயப்படுத்தி நடத்துற கல்யாணம் நிலைக்காது…! என்று மீனாட்சி சொல்ல…அந்த வார்த்தைகள் செல்லமாவிற்கு ஏதோ அபச குணமாய் பட்டது.

“வாயை மூடு மீனாட்சி..! நீ ஒழுங்கா இருந்தா எல்லாமே நிலைக்கும்..! நீங்க நடக்க வேண்டிய வேலையைப் பாருங்க தம்பி..! என்று முழு வாக்குறுதியும் கொடுத்தார் அவர்.

அவர்கள் கலந்து பேசி…கிளம்பி வெளியே செல்ல…அவர்களில் இருந்து கொஞ்சம் பின் தங்கியவன்….

நான் போனதுக்கு அப்பறம் ஏதாவது பிளான் பண்ணி இதை தடுத்து நிறுத்த பார்த்த….,அடுத்து மறுபடியும் கேஸை தோண்டி எடுப்பேன்… உன் தங்கை கேசையும் சேர்த்து..! என்று ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை அவளுக்கு அளித்து விட்டு சென்றான்.

“உன் தங்கை கேசையும் சேர்த்து…! என்ற வாக்கியங்கள்..அவளின் மூளைக்கு சென்று உறுதிப்படுத்த சில நிமிடங்கள் எடுக்க…அந்த நிமிட இடைவெளியில் அங்கிருந்து கிளம்பியிருந்தான் செந்தில் குமரன்.

இறந்த பின்பும் அவளை நிம்மதி இல்லாமல் செய்வதா..? அதற்கு பதில் உயிரோடு இருக்கும் நான் நிம்மதி இல்லாமல் சாவதா..? என்று அவளின் மனம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க..இறுதியில் மனமே ஜெயித்தது.

இறந்த தங்கையை மீண்டும் தோண்ட அவளுக்கு விருப்பம் இல்லை.அதே சமயம் இரண்டாவது திருமணமும் அவளுக்கு விருப்பம் இல்லை….தற்கொலை செய்து கொள்ளலாமா என்று அவள் யோசித்த நிமிடம்..அவளின் செல்போன் அலறியது.

புது நம்பர் என்று எண்ணி எடுத்துப் பார்த்தவள்…

மாற்று யோசனைன்னு…சாகலாம் அப்படின்னு உனக்குத் தோணும்…தற்கொலை பண்ற யோசனை கூட வரும்..ஆனா அப்படி மட்டும் பண்ணின….கண்டிப்பா உன் தங்கை கேசையும் எடுப்பேன்..உன் கேசையும் எடுப்பேன்.நீ செத்ததுக்கு அப்பறம் உண்மை தெரிஞ்சு உன் அம்மாவும்,அப்பாவும் நிம்மதியில்லாமலேயே சாவாங்க..! வசதி எப்படின்னு பார்த்துக்கோ..! என்றபடி வைத்து விட்டான் குமரன்.

அவன்தான் பேசுகிறான்..என்று அவள் உணரும் முன்னாடியே.. அனைத்தையும் பேசி விட்டு வைத்து விட்டான்..!அவள் எந்த முடிவுக்கும் போகாத படி..!

அப்படியெல்லாம் செய்வானா அவன்..? ஒருவேளை செய்து விட்டால்… அம்மாவும்,அப்பாவும் அந்த முடிவுக்கு போகக் கூடியவர்கள் தான்.அதற்கு, நான் நிம்மதியில்லாமல் சாவதே மேல்.. என்ற எண்ணத்திற்கு வந்திருந்தாள்.

எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவர்களின் திருமணம் நடந்தேறியது. குமரனின் மிரட்டல் நன்றாக வேலை செய்தது அவளிடம்.

“புருஷன் செத்து ஒரு வருஷத்துலேயே இன்னொரு கல்யாணமா…? இவனுக்காவது ஆயுசு குடுத்து வைக்கட்டும்..! என்று ஒரு சில உறவுகள் பேச…என்னதான் மகனுக்காக சம்மதம் சொல்லி இருந்தாலும் செல்லம்மாவின் மனதில் ஒரு சிறு நெருடல் இருக்கத்தான் செய்தது.

எல்லா அம்மாக்களுக்கும் இருக்கும் ஒரு நியாயமான பயம் தான். எவ்வளவு புதுமை பேசி நாம் சிலவற்றை மறந்தாலும், மறைத்தாலும் விதி விலக்கென சில விஷயங்களும் உண்டு. அப்படிப்பட்ட விஷயம் தான் இது.

மீனாட்சிக்கு முகத்தில் சந்தோசம் என்பது துளியும் கிடையாது.இதற்கு முன்பு பல சமயங்களில் தைரியமான பெண்ணாகத்தான் அவளைப் பார்த்திருக்கிறான் குமரன்.ஆனால் இன்று அவளை அப்படிப் பார்க்க அவனாலேயே முடியவில்லை.

எதையோ பறி கொடுத்ததைப் போல் அவள் இருந்த தோற்றம் கண்டு அவனுக்கு மனதிற்குள் சிறு நெருடல் இருக்கத்தான் செய்தது.

தேவகிக்கு எதிலும் மனம் ஒட்டவில்லை.கொஞ்சம் விலகியே இருந்தார்.மனம் முழுதும் வெறுமையாகவே இருந்தது.தன் மகள் பொய்த்துப் போனாலே என்ற ஆதங்கம்.அவரின் இத்தனை நாள் ஒதுக்கம் கூட அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.அந்த அளவிற்கு அவளும் வாழ்வு வெறுத்து தான் இருந்தாள்.

மீனாட்சியின் கவலைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் போல்..சேகரின் அம்மா மின்னல் கொடியும் அந்த திருமணத்திற்கு வந்திருந்தார்.அவரின் கண்கள் கூட கலங்கித்தான் இருந்தது.

தனக்கு மருமகளாக நெடுங்காலம் அவளால் இருக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் ஒரு பக்கம் இருந்தாலும்..இனியாவது அவள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் ஒரு புறம்.

முன்னால் மாமியார் சந்தோஷமாய் வந்து வாழ்த்தியதைப் பார்த்த சொந்தங்களின் வாயும் அடங்கித்தான் போனது.

செல்லம்மாவின் அருகில் சென்ற மின்னல் கொடி…

“ரொம்ப தங்கமான பொண்ணு…எங்களுக்குத்தான் குடுத்து வைக்கலை.. அவளை நான் இப்போ மகளா பார்க்குறேன்..! என் மகளை நல்லா பார்த்துக்கங்க..! என்றார்.

“கண்டிப்பாங்க..! என்றார் செல்லமாவும்.ஏதோ பாதி பாரம் குறைந்ததைப் போல் இருந்தது அவருக்கு.பிரியாவுக்கு அந்த வைபவத்தில் கலந்து கொள்ளவும் முடியவில்லை.அதே சமயம் விலகி இருக்கவும் முடியவில்லை.

கல்யாணத்தை சாதாரணமாக கோவிலில் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னதைக் கூட குமரன் ஏற்றுக் கொள்ளவில்லை.

“நான் என்ன திருட்டுக் கல்யாணமா பண்றேன்..? யாருக்கும் தெரியமா கோவில்ல வச்சு செய்ய…? எல்லாருக்கும் என் பொண்டாட்டி இவதான்னு ஒவ்வொரு முறையும் விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது.

என் கல்யாணம் எப்படி நடக்கணும்ன்னு எனக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கு…அதை என்னால் விட்டுக் குடுக்க முடியாது..! என்று ஒரே முடிவாக சொல்லிவிட்டான்.

அவன் பேச்சில் பிடிவாதம் தெரிந்தாலும்…அதன் உட்பொருளை அவன் மட்டுமே அறிவான்.ஆரம்பம் முதற்கொண்டு மீனாட்சியை அவள் நோக்கத்திற்கு விட்டால்…அவளை வசத்திற்கு கொண்டு வருவது சிரமம் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.அதனால் தான் எதிலும் அவன் கிடுக்கிப் பிடியாகவே இருந்தான்.

ஆனால் இதெல்லாமே மீனாட்சியின் பார்வைக்கு..ஆணாதிக்க மனப்பான்மையாக மட்டுமே தெரிந்தது.அவள் பக்க நியாங்களை யோசித்த அவளின் மனம்..ஏனோ அவனின் நியாயங்களை ஏற்க மறுத்தது.ஒரு ஜடம் போலவே நின்றிருந்தாள்.

“நீ இவ்வளவு சுயநலக்காரியா இருப்பன்னு நான் நினைக்கவே இல்லை…? என்றான் அவள் காதோரத்தில்.

“கொஞ்சம் தள்ளி நில்லுங்க…! என்றாள் எரிச்சல் மன்றாடிய குரலில்.

“நான் சுயநலக்காரி தான்…! அதுக்கு என்ன இப்போ..! என்றாள்.

“இல்லை..பெத்த அம்மா அப்பா..அங்க அப்படி அழுதுட்டு இருக்காங்க…! இப்படி கண்டுக்காம நிக்குறியே..! அதை சொன்னேன்..! என்றான்.

“என்னது…? “ என்று அதிர்ந்து திரும்பினாள் மீனாட்சி.

அவன் அவர்களின் பக்கம் கையைக் காட்ட…அப்போது தான் கவனித்தாள் அவளும்…கலங்கிய கண்களுடன் அவர்கள் இருப்பதை.

அவனிடம் சொல்லாமல் கூட அந்த இடத்தை விட்டு செல்ல…அவனுக்கு அப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

சும்மாவே அவளைக் கண்டால் அவனுக்கு அவனையே அடக்க முடியாது.இன்று கொஞ்சம் ஒப்பனையில் எழில் ஓவியம் போல் இருந்தவளை..அதுவும் மிக அருகில் இருந்தவளை..பார்த்துக் கொண்டே இருப்பது என்பது அவனுக்கு மிகப்பெரிய தண்டனையாகத் தெரிந்தது.

அதனால் தான்…அவளின் கவனத்தை மாற்றி..அவர்களிடம் அனுப்பி வைத்தான்.கெட்டதிலும் ஒரு நல்லதாய்.பிறகு அவளிடம் அடிவாங்குவது யார்..?

“அப்பா…! என்று கோபாலனின் கையைப் பிடிக்க…

“இனியாவது சந்தோஷமா இரும்மா…! அதைப் பார்த்தாலே எங்களுக்கு போதும்மா…! என்று அவர் அவளின் தலையில் கையை வைக்க… தேவகி ஒன்றும் சொல்லவில்லை.

“என்னாச்சும்மா…? என்று அவள் கேட்க…அவர் பதில் ஒன்றும் பேசாமல் அருகில் இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டார்.கவலையில் அப்படி செல்கிறார் என்று எண்ணி..அவளும் பின்னோடு போக…

“அம்மா..! என்று அவரின் தோளில் கை வைத்தாள்.அவளின் கையை வெடுக்கென்று தட்டி விட்டவர்…

“பேசாத..! இந்த வாழ்க்கையையாவது ஒழுங்கா வாழப் பாரு..! இல்லை அவனை கொலைப் பண்ண மாதிரி இவனையும் கொன்னுடாத…! என்று ஒரே அடியாய் அடிக்க…

“அம்மா..! என்று அதிர்ந்து நின்றாள் சர்வ மீனாட்சி.

“என்னடி அம்மா..! எனக்கு இந்த விஷயம் எப்பவோ தெரியும். தெரிஞ்சும் என்ன பண்ண…? பெத்த வயிராச்சே…! அதான் இத்தனை நாள் பொறுத்துகிட்டு இருந்தேன்…இனி ஏதாவது ஒண்ணுன்னு அங்க வந்து நின்ன..எங்க பொணத்தை தான் பார்ப்ப…இதோட உனக்கும் எங்களுக்குமான உறவு முடிஞ்சு போய்டுச்சு…! என்று விரக்தியான குரலில் சொல்ல…

“நான் என்ன சொல்ல வரேன்னு கொஞ்சம் கேளுங்கம்மா…! என்று அவள் ஏதோ சொல்ல வர..

“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்..! என்று அந்த பேச்சை முடித்துக் கொண்டார் தேவகி.

அவர்களின் பேச்சு ஒருவரின் காதில் விழுந்து விட்டதையும்…அந்த நபர் அதிர்ந்து போய் நிற்பதையும் அவர்கள் கவனித்திருக்க வாய்ப்பில்லை.

அந்த நபர் பிரியாதான்.சேகர் இறந்தது இயற்கை மரணம் இல்லையா..? அது கொலையா..? என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க…அப்போது தான் அவளைக் கவனித்தாள் மீனா.

“என்ன பிரியா..? ஏன் ஒரு மாதிரி இருக்க..? என்றாள்.

“அது இல்லக்கா…சாரி அண்ணி…! என்று திணற..

“இப்ப எதுக்கு திக்கி திணறுர..? உனக்கு எப்படி கூப்பிட வருதோ.. அப்படியே கூப்பிடு…! என்றாள் சாதரணமாக.

ஆனால் அவளுக்கு அப்படி சாதரணமாக இருக்க முடியவில்லை. மீனாட்சிக்கு விஷயம் தெரிந்திருக்குமோ..? என்று மனதிற்குள் யோசனை ஓடிக் கொண்டே இருந்தது.

“பிரியா..! என்று தோளைத் தொட்டான் செந்தில் குமரன்.

“ஆங்…! என்று அதிர்ந்து திரும்ப..

“என்னாச்சு..? ஏன் இங்க நிக்குற…? வீட்டுக்கு கிளம்பலாம் வா…! என்றான்.

“ச..சரிண்ணா…! என்றபடி சென்றாள்.

அங்கிருந்த படியே…கோபாலனும்,தேவகியும் கிளம்பி செல்ல…குமரனும் செல்லம்மாவும் எவ்வளவு சொல்லியும்..அவர்கள் வீட்டிற்கு வர மறுத்துவிட்டனர்.மறுநாள் கண்டிப்பாக வருவதாக சொல்லவும் தான் விட்டான் குமரன்.

ஏதோ யாருமில்லாமல் அனாதையாக செல்வதைப் போன்ற ஒரு எண்ணம் அவளுக்குள்.தேவகி பேசியது மனதைப் பிசைய…எல்லா குழப்பங்களும் சேர்ந்து அவளைத் தூக்கத்திற்கு தள்ளியது.வீடு வந்தும்..குமரன் எழுப்பிய பிறகே எழுந்தாள்.

“வீடு வந்திருச்சு..!

“யாரு வீடு…?

“இதுவரைக்கும் என் வீடு…! இந்த நிமிஷத்தில் இருந்து நம்ம வீடு..! என்றான்.

“அதுக்கு வாய்ப்பில்லை…இது நீங்களா தேடிகிட்ட வாழ்க்கை…இனி எது நடந்தாலும் நீங்க தான் பொறுப்பு… என்றாள்.

“இதுவரைக்கும் நடந்த எதுக்குமே யாரும் பொறுப்பில்லை…ஆனா இனி நடக்க போற எல்லாத்துக்கும் நம்ம ரெண்டு பேர் மட்டும் தான் பொறுப்பு…! இங்க வச்சே எல்லாத்தையும் பேசி முடிக்கனுமா…? முதல்ல உள்ள நட..! என்றான் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு.

சம்பிரதாய சடங்குகளை எந்த வித தயக்கமும் இன்றி செய்தாள் மீனாட்சி.குமரன் கூட மகிழ்ந்து போனான்.

“நான் கூட ஒவ்வொன்னுக்கும் உனக்கு சொல்லணுமோ அப்படின்னு நினைச்சேன்..! ஆனா அதுக்கு எந்த அவசியமும் இல்லாம…நீயே எல்லாத்தையும் பண்ணிட்ட…தேங்க்ஸ்..! என்றான்.

“புதுசுன்னா கொஞ்சம் தயக்கம் இருக்கும்…எப்படி செய்யனும்ன்னு தெரியாம இருக்கும்…! எனக்கு தான் ஏற்கனவே அனுபவம் இருக்கே..! என்றாள் அவனை காயப்படுத்தும் பொருட்டு.

“ரொம்ப நல்லது..அப்ப எந்த விஷயத்துக்கும் நான் போராட வேண்டியிருக்காது…! உனக்கு தான் அனுபவம் இருக்கே..! என்று அவனும் ஒரு மார்க்கமாக பேசி வைக்க…

அவனிடம் வாயைக் கொடுத்த கொடுமைக்காக…அவள் தான் இறுதியில் வாயை மூட வேண்டி வந்தது.

“இனி இது தான் உன் வீடு மீனா.நீ உங்க வீட்ல எப்படி இருந்தியோ… இங்கயும் அப்படியே இருக்கலாம்….பழசை நினைக்காம..இனி எப்படி இருக்க போறன்றதை மட்டும் பார்..! என்று செல்லம்மா சொல்ல… தலையை தலையை ஆட்டினாள்.

“கொஞ்ச நேரம் போய் ரெஸ்ட் எடும்மா..! என்று சொல்ல…ஆளை விட்டால் போதும் என்ற நிலையில் இருந்தவள் உடனே சென்று விட்டாள்.அவளின் வேகத்தை பார்த்து…

“கொஞ்சம் அவசரப் பட்டுட்டியோ செந்தில்..! என்றார்.

“இல்லம்மா..இதுக்குப் பேரு அவசரம் இல்லை..அவசியம்…! என்றான் போன அவளையே பார்த்துக் கொண்டு.

“என்னமோ..! நீ விருப்பப்பட்ட அப்படின்ற ஒரே காரணத்துக்காகத் தான் நாங்களும் சரின்னு சொன்னோம்…உன்னோட வாழ்க்கை..உன் இஷ்ட்டப்படியே அமைச்சுக் குடுத்துட்டோம்…இனி நீதான் நல்லபடியா பார்த்துக்கணும்..! என்றார்.

“கண்டிப்பாம்மா…! என் மேல நம்பிக்கை வைங்க..! என்றபடி அவனும் சென்று விட்டான்.

அவள் தன்னுடைய அறையில் இருப்பாள் என்று எண்ணி அவன் செல்ல அவளோ பிரியாவின் அறையில் இருந்தாள்.அவர்கள் எதையோ பேசிக் கொண்டிருக்க…அவனுக்கு சரியாக கேட்கவில்லை.ஆனால் பிரியா அழுது கொண்டிந்தது மட்டும் தெரிந்தது.

அவனின் சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ஜிதமாக….வேகமாக தன் அறையின் பால்கனிக்கு சென்று…பக்கத்து அறையின் ஜன்னலை ஒட்டி நிற்க….திறந்திருந்த ஜன்னல்..வழியே அவர்கள் பேசுவது தெளிவாக இல்லாவிட்டாலும்..ஓரளவுக்கு காதில் விழுந்ததில்….அவனின் முகம் தீவிரமாய் மாறியது.

Advertisement