Advertisement

பௌர்ணமி 6:

“எனக்கு அவ்வளவு தான் சார் தெரியும்..!” என்று சொல்லி முடித்திருந்தாள் கயல்விழி.சர்வ மீனாட்சியின் தோழி.

“அவங்க கல்யாணம் எப்படி நடந்தது…அதில் ஏதும் பிரச்சனை வந்ததா..?” என்றான்  குமரன்.

“இல்லை சார்..! அப்படி எந்த பிரச்சனையும் நடக்கலை..சொல்ல போனா சேகர் அவங்க அம்மா அப்பா பார்த்த மாப்பிள்ளை.மீனாட்சியும் சந்தோஷமாதான் சரின்னு சொன்னா..அவங்க கல்யாணமும் ரொம்ப கிராண்டா தான் நடந்தது…ஆனா இவ்வளவு சீக்கிரம் அவர் மீனாவை விட்டு போவார்ன்னு நாங்க நினைக்கவேயில்லை..” என்றாள் கயல்விழி.

“அவங்க வீட்டு ஆளுங்களைப் பத்தி என்ன நினைக்கிறிங்க..?” என்றான் குமரன்.

“அவங்க வீட்ல..அவங்க மாமியார் தங்கம் சார்…மீனாவை நல்லா பார்த்துகிட்டாங்க…! அவங்க மாமனாரும் அப்படித்தான்.அவங்க அக்கா நந்தினிக்கு தான் மீனாவைக் கண்டாலே ஆகாது.அது ஏன்னு தான் தெரியலை..மத்தபடி அந்த வீட்ல மீனாவுக்கு எந்த பிரச்சனையும் இருந்ததா எனக்குத் தெரியலை..!” என்றாள்.

“சர்வ மீனாட்சிக்கு கல்யாணத்து முன்னாடி காதல் ஏதும் இருந்ததா..?” என்றான்.

அவனை ஒரு நிமிடம் முறைத்துப் பார்த்தவள்…“இல்லை..! எனக்கு தெரிஞ்சு அப்படி ஏதும் இல்லை…!” என்றாள்.

“இல்லை…இப்பல்லாம் முன்னால் காதலனை தூண்டி விட்டு..புருசனை கொலை பண்றது எல்லாம் சர்வ சாதாரணமா நடக்குது இல்லையா..? அதுக்காகக் கேட்டேன்..” என்றான்.

அவனின் பதிலில் பொங்கிய கயல்..”என்ன சார் நினைச்சுட்டு இருக்கீங்க..? நீங்க சிபிஐன்னா என்ன வேணுமின்னாலும் கேட்பிங்களா…? எங்க மீனாட்சியைப் பத்தி என்ன நினைச்சிங்க…? அவ நெருப்பு மாதிரி சார்..!” என்றாள்.

“விசாரணைன்னு வந்துட்டா நாங்க எல்லா கோணத்துலையும் தான் விசாரிப்போம்..! இதுக்கெல்லாம் நீங்க டென்சன் ஆனா எப்படி..?” என்றான்.

“வேற ஏதாவது கேட்கணுமா சார்..? இல்லைன்னா நான் கிளம்பனும்…!” என்றாள் கயல் கடுப்பாக.

“நாங்க கூப்பிடும் போது நீங்க விசாரணைக்கு வர வேண்டியது இருக்கும்..! கண்டிப்பா நீங்க வந்து தான் ஆகணும்..!” என்றான்.

“சார்..! அதான் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்லையே ஏதும் இல்லைன்னு வந்துடுச்சே..! நீங்க ஏன் இப்படி எல்லார் உசுரையும் வாங்குறிங்க..?” என்றாள் எரிச்சலுடன்.

“எல்லாத்தையும்…எல்லார்கிட்டயும் சொல்லனும்ன்னு அவசியம் இல்லை..! நீங்க போகலாம்  !” என்றான் கட்டளையாய்.

அவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்றுக்கு கட்டுப்பட்டவளாய் அங்கிருந்து சென்றாள் கயல்.

அவள் சென்ற பின்பு அவனின் நிலைதான் சொல்ல முடியாமல்….திணறிப் போனது.

ஆம்..! காத்திருந்தவன் காதலியை..நேற்று வந்தவன் கட்டிக்கிட்டு போனதைப் போல் ஆனது அவனின் நிலைமை.

“குமரா…உனக்கு அவள் ஒரு காலத்துல காதலி மட்டும் தான்…! ஆனா இப்போ அவ இன்னொருவரின் மனைவி…அதுமட்டுமில்லாம கணவனை இழந்து நிற்கும் பெண்…இப்பவும் இப்படிப்பட்ட எண்ணங்கள் உன்  மனசில் வரலாமா..?” என்று அவனின் மனம் அவனுக்கு அழுத்தம் கொடுக்க…

ஏனோ அந்த அழுத்தத்தை குமரனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவனின் நினைவுகள்…சில மாதங்கள் பின்னோக்கி செல்ல….அந்த நினைவுகளின் கணம் தாங்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டான் குமரன்.

“என்ன ராஜ்மோகன்..? உங்க பையன் உங்க பிஸ்னசை பார்ப்பாருன்னு பார்த்தா…அவர் என்னமோ கவர்மென்ட் வேலைக்கு போறேன்னு அடம்பிடிக்கிறார்..!” என்றார் அவரின் நண்பர்.

“நானும் சொல்லிப் பார்த்துட்டேன்..! ஆனா அவன் கேட்குற மாதிரி இல்லை…அவனுக்கு சின்ன வயசுல இருந்தே..தொழில் மேல நாட்டம் இல்லை…ஒரு கட்டத்துக்கு மேல…நானும் சொல்றதை விட்டுட்டேன்..!” என்றார் கொஞ்சம் மனந்தாங்களுடன்.

“கவர்மென்ட் வேலைல என்ன வந்திடபோகுது..? உங்களுக்கு இருக்குற சொத்துக்கு…இதையெல்லாம் கட்டி ஆண்டாலே போதுமே..!” என்றார்.

“நீங்க சொல்றது புரியுது.ஆனா அவன் விருப்பம் இது தான் அப்படிங்கறப்போ எப்படி கட்டாயப்படுத்த முடியும்..? அதான் விட்டுட்டேன்” என்றார் ஓய்ந்தவராய்.

“ஹாய் அங்கிள்..!” என்றபடி வந்தான் குமரன்.

“வாப்பா..! இருந்தாலும் நீ இப்படி பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கலை.. உங்கப்பா தனியா இந்த வயசான காலத்துல கஷ்ட்டப்டுறார்..ஆனா நீ அதைப்பத்தி எல்லாம் கவலைப்படாம..இப்படி வேலைக்கு போறேன்னு கிளம்பினா நல்லாவா இருக்கு? அவர் கஷ்ட்டபட்டு வளர்த்த தொழில்.. அவர் மனசு என்ன பாடுபடும்.அவருக்கு மகன்னு நீதானப்பா இருக்க..?” என்றார்.

“மறுபடியும் முதல்ல இருந்தா? எனக்கு எதுல விருப்பமோ அதுல தான் என் கவனம் இருக்கும்.அதுக்காக அப்பாவை அப்படியெல்லாம் கஷ்ட்டப்பட விடமாட்டேன்.கொஞ்ச நாள் எனக்கு பிடிச்ச வேலை.அப்பறம் எப்பவுமே அப்பா பின்னாடிதான்..” என்றான் அவன் தந்தையை பின்னிருந்து அணைத்துக் கொண்டு.

இந்த செய்தி மோகனுக்கு புதிது.இருந்தாலும் மனதிற்குள் ஆனந்தமாய் இருந்தது.மகன் தன் பேச்சை மீறவில்லை என்ற எண்ணமே அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது அவருக்கு.

“நிஜமாவ குமரா..?” என்றார்.

“ஆமாம்ப்பா..! கொஞ்ச நாள் படிச்ச படிப்புக்கு வேலை பார்த்துட்டு வந்துடுறேன்..! பிளீஸ்..!” என்றான் சிறுபிள்ளைத்தனமாய்.

“படவா? என்னை எவ்வளவு பாடுபடுத்திட்ட..?” என்றார்.

“இதெல்லாம் நல்லாவே இல்லை.எப்பவும் என்னைத் திட்டுவிங்களே அப்படியே இருங்க.எனக்கு இந்த அப்பா பிடிக்கலை.அந்த அப்பாதான் பிடிக்குது.அங்க பாருங்க அம்மா நம்ம ரெண்டு பேரையும் வித்யாசமா பார்க்குறாங்க..!’ என்றான்.

குமரன் ஐபிஎஸ் தேர்வாகி…தனது பயிற்சியை முடித்து விட்டு வந்திருந்தான்.அதற்காக தான் ஒரு சின்ன பார்ட்டியை ராஜ்மோகன் வீட்டிலேயே ஏற்பாடு செய்திருந்தார்.மகன் வேலைக்கு செல்வது பிடிக்கவில்லை என்றாலும்..அவன் பாஸானதும் அவர்தான் முதலில் மகிழ்ந்தார்.அந்த ஒரு சின்ன விஷயம் தான் குமரனையும் யோசிக்க வைத்தது.

“ட்ரெயினிங் முடுச்சுட்டு வந்தாச்சு.அடுத்து என்ன  உடனே கல்யாணமா..?” என்று மீண்டும் அந்த நண்பர் கேட்க..

“ஏன் அங்கிள்..ஏன்? நான் உங்களுக்கு அப்படி என்ன பண்ணேன்? இப்படி இவ்வளவு சீக்கிரம் என்னை மாட்டி விட பாக்குறிங்க?” என்றான் புன்னகை முகமாய்.

ஆனால் திருமணம் என்றவுடன் அவனுக்கு மீனாட்சியின் முகம் தான் கண்ணில் வந்து போனது.

“என்னடா இது எனக்கு வந்த சோதனை..? அவளை மறக்கனும்ன்னு நினைக்கும் போது எல்லாம் ஏதாவது ஒரு விதத்தில் நியாபகத்துக்கு வராளே..? ஒரு வேலை இது உண்மையாவே காதலா இருக்குமோ..?” என்று அவன் மனம் யோசிக்க..

“கண்டிப்பா காதல் தான் மகனே..!” என்ற செய்தியை அவன் மூளை சேமித்து வைத்தது.

காதல் என்று தெரிந்த உடன்..உடனே அவளை தொடர்ந்து சென்று லவ் டார்ச்சர் கொடுக்க அவன் விடலைப் பையனும் இல்லை.அப்படி செய்ய தான் ஒன்றும் சினிமா கதாநாயகனும் இல்லை என்ற உண்மை அவனுக்கு நன்றாகவே தெரியும்.

வாழ்க்கையின் எதார்த்தங்களைப் புரிந்தவன் குமரன்.ஹீரோ போல் இருந்தாலும்..ஹீரோ செய்கிற வேலையெல்லாம் செய்ய முடியாது என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.அதனால் தன் அவனுக்கு மிகவும் பிடித்த போலீஸ் துறையில் தேர்ச்சி பெற்றாலும்..அதில் புலனாய்வுத் துறையை தேர்ந்தெடுத்தான்.

விழா முடிந்து  சற்று ஓய்வாக அமர்ந்திருந்தான் குமரன்.ஆனால் யோசனை முழுவதும் மீனாட்சியைப் பற்றியதாகவே இருந்தது.

“என்ன பண்ணலாம்..?” என்று அவன் முனங்கிக் கொண்டிருக்க..

“என்ன பண்ணலாம்..?” என்று அவனைப் போல் செய்து கொண்டே அவன் அருகில் அமர்ந்தாள் அவனின் தங்கைப் பிரியா.

“ஏய் வாலு? என்ன கிண்டலா..?” என்றான்.

“ம்ம் ஆமா..” என்றாள்.

“எல்லாம் என் நேரம்..!” என்றான்.

“எல்லாம் நல்ல நேரம்தான் அண்ணா உனக்கு..!” என்று அவள் சொல்ல..

“என்னால உனக்கு ஏதும் காரியம் ஆகணுமா? அதை நேரா கேளு..! சுத்தி வளைக்காத பிரி” என்றான்.

“நான் எதுக்கு சுத்தி வளைக்கனும்…நாளைக்கு ஷாப்பிங் போகணும்ன்னு சொன்ன உடனே நீங்க கூட்டிட்டு போக போறீங்க..! அதனால நான் ஏன் சுத்தி வளைச்சு கேட்கணும்..” என்றாள்.

“அதான..! என்னடான்னு பார்த்தேன்!ஆனா கண்டிப்பா நாளைக்கு நான் கூட்டிட்டு போக மாட்டேன்.எனக்கு நிறைய வேலை இருக்கு..சோ நீ அம்மாவைக் கூட்டிட்டு போயிட்டு வா..!” என்றான்.

“ஸ்கூல் படிக்கிற பிள்ளைக்கு என்ன ஷாப்பிங் வேண்டி கிடக்கு? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்! என்ன வேணும்ன்னு சொல்லு அப்பாவோ இல்லை அண்ணாவோ வாங்கிட்டு வந்து தருவாங்க!” என்றார் செல்லம்மா கண்டிப்புடன்.

“அம்மா..! இன்னும் நீங்க எந்த காலத்துல இருக்கீங்க?” என்றாள் குமரனை முறைத்துக் கொண்டே.அந்த முறைப்பில்,எனக்கு ஒழுங்கா பர்மிஷன் வாங்கிக் குடு என்ற கட்டளை இருக்க..அதைப் பார்த்து சிரித்துக் கொண்டான் குமரன்.

“விடுங்கம்மா..! நானே கூட்டிட்டு போய் வாங்கிக் குடுக்குறேன்..!” என்று அவன் பேச்சை முடிக்க..

“என்னவோ போங்க..! பொம்பளைப் பிள்ளைக்கு இவ்வளவு செல்லம் ஆகாது..” என்று புலம்பியபடி சென்றார் செல்லம்மா.இது தான் அவர்.என்னதான் வாழ்வில் பெரிய முன்னேற்றங்களை அடைந்தாளும்..சில பழமையான விஷயங்களில் இருந்து அவரால் மீண்டு வர முடியவில்லை. அவர் மாறவும் இல்லை.தன்னை மாற்றிக் கொள்ள விரும்பவும் இல்லை. பார்ட்டி போன்ற விஷயங்களில் கூட அவருக்கு அவ்வளவாக விருப்பம் இருந்தது கிடையாது.ஆனால் ராஜ்மோகனின் வசவுகளுக்கு பயந்து அமைதியாய் இருந்து கொள்வார்.

அந்த நவீன ஷாப்பிங் மாலில்..கடுப்புடன் அமர்ந்திருந்தாள் மீனாட்சி. அவளின் எதிரே மகா சோகமாய் அமர்ந்திருக்க..

“இப்ப எதுக்கு மூஞ்சிய தூக்கி வச்சிட்டு உக்கார்ந்திருக்கிங்க..?” என்றார் தேவகி அமட்டளுடன்.

“பின்ன என்னம்மா..? அப்படி என்ன நாங்க பெரிசா கேட்டுட்டோம்..ஒரு பிரியாணி..ஆனா அதையும் வாங்கித் தரலைன்னா இங்க வந்ததுக்கு என்ன அர்த்தம்..? எங்க வயித்துக்கு யார் பதில் சொல்றது.காலைல கூட நான் அளவா தான் சாப்பிட்டேன்.கண்டிப்பா இன்னை பிரியாணி வாங்கித் தரேன்னு என் வயிறுக்கு நான் வாக்குக் குடுத்திருக்கேன்..!” என்றாள் மீனாட்சி.

“வயிறுக்கு வாக்குக் குடுத்தியா?இல்லை உன் நாக்குக்கு வாக்கு குடுத்தியா..?” என்று தேவகி கேட்க..

“இது பன்ச் பேச வேண்டிய நேரம் இல்லம்மா..! பிரியாணி டைம்.தயவு செஞ்சு சோதிக்காம வாங்கம்மா..!” என்று மகா கெஞ்ச..

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.வீட்ல போய் செஞ்சு தரேன்.நிறைவா சாப்பிடலாம்.இங்க காசு கூட வாங்குவாங்க.ஆனா வயித்துக்கு போட மாட்டங்க..!” என்று தேவகி கறார் குரலில் சொல்ல…அவர் சொல்ல வருவதன் அர்த்தம் அவர்களுக்கு தெரிந்து தான் இருந்தது.

பொதுவாக மீனாவிற்கும்,மகாவிற்கும் பிரியாணி என்றால் கொள்ளைப் பிரியம்.தேவகி வீட்டில் செய்தாலே ஒரு கட்டு கட்டி விடுவர்.ஆனால் இங்க வாங்கிக் கொடுத்தால் இருவருக்கும் மூன்று பிளேட் ஆவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு.அதனால் தான் இந்த கண்டிப்பு.

“விடு தேவகி! பிள்ளைங்க ஆசைப்பட்டு கேட்குறாங்க! சாப்பிடட்டும்!” என்று கோபாலன் பரிந்து கொண்டு வர..

“வேண்டாம்ங்க..! வேணும்ன்னா ஐஸ் க்ரீம் சாப்பிட்டு வாங்க..வீட்டுக்கு போகலாம்..!” என்றார்.

“அம்மா அதெல்லாம் பிரியாணிக்கு அப்பறம் கடைசியா சாப்பிடுற ஐட்டம்..ஒரு பிரியாணிக்கு போரா…ஒரே அக்கப்போர்..” என்று மகா லந்தடிக்க..

“எப்படியோ போங்க..! நான் கண்ட இடத்துல எல்லாம் சாப்ட மாட்டேன்..நீங்க போய் சாப்பிடுங்க..!” என்று தேவகி விலகிக் கொள்ள..இருவரும் தந்தையைப் பார்த்து கண்ணடித்து விட்டு சிட்டாகப் பறந்தனர்.

தேவகிக்கு இது போன்ற விஷயங்கள் எல்லாம் பிடித்தம் இல்லை.மகள்களின் ஆசைக்கிணங்கி அவர்களுடன் வந்திருந்தார்.வந்த பின்பு தான் தெரிந்தது..வெளியே சில நூறுகள் விற்கும் பொருட்கள் எல்லாம்..இங்கே ஆயிரங்களில் கிடைக்கறது என்று.அவர்கள் உள்ளே இருக்கும் அலங்காரம்,ஏசி என அனைத்திற்கும் சேர்த்து பில் போடுவது.

அக்கா,தங்கை இருவரும் புட் கோர்ட்டிற்குள் நுழைய…இதுவரை அவர்கள் அடித்த லூட்டியை அவர்கள் அறியாமல் ரசித்து விட்டு அவர்களின் பின்னேயே சென்றனர் குமரனும்,பிரியாவும்.

“அது உன் பிரண்டு மகா தான?” என்றான் குமரன்.

“இவ்வளவு நேரம் வரைக்கும் அது தெரிஞ்சு தான வேடிக்கை பார்த்திங்க? இப்ப என்ன புதுசா கேள்வி.?”என்று பிரியா முறைக்க..

“சரி விடு..! நம்ம இப்ப அவங்க கிட்ட போய் பேசலாமா வேண்டாமா..?” என்றான்.

“வேண்டாம்..! நான் மகா கூட சண்டை.அவளா வந்து பேசுற வரைக்கும் நாம பேச வேண்டாம்.!” என்று பிரியா குண்டைத் தூக்கிப் போட..

“போச்சுடா! இன்னைக்காவது அவகிட்ட பேசிடலாம்ன்னு  நினைச்சா அதுக்கும் ஆப்பு ரெடியா இருக்கே..” என்று நொந்து கொண்டான் குமரன்.

“என்ன பிரி இது? சின்ன புள்ளைங்க மாதிரி சண்டை போட்டுக்கிட்டு…போய் மகா கூட பேசு போ..!” எண்டான் அக்கறையாய்.

“தங்கள் அக்கறைக்கு ரொம்ப நன்றி..! ஆனா அதை நான் பார்த்துக்கறேன்..! இப்போ நான் சுடி எடுக்கணும்..வாங்கண்ணா போகலாம்” என்று அவனை இழுத்துக் கொண்டு சென்றாள் பிரியா.

“ஹேய் மகா..அங்க போறது உன் பிரண்டு பிரியா தான..!” என்றாள் மீனா.

“ம்ம்.ஆமா ஆமா..!”என்றாள் மகா கண்டு கொள்ளாதவளாய்.

“என்னடி? இப்படி பதில் சொல்ற? அவளும் பார்த்துட்டு பார்க்காத மாதிரி போறா? என்ன பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்?” என்றாள் பிரியா.

என்னதான் வாயடித்து விட்டு வந்திருந்தாலும் இருவரும் ஐஸ்கிரீம் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.தேவகியின் பேச்சுக்கு அவ்வளவு மதிப்பு அவர்களிடத்தில்.

“அவ பெரிய இவ மாதிரி பன்றாக்கா..நான் யார் கூட பேசுனாலும் அவளுக்கு பிடிக்கிறதில்லை.உடனே சண்டை பிடிக்கிறா..? அதான் நானும் பேசுறது இல்லை..” என்றாள் முகத்தைத் தூக்கிக் கொண்டு.

“இதெல்லாம் ஒரு பிரச்சனையாடி? அப்படி உன் மேல அவ ரொம்ப பிரியமா இருக்கா..இதை ஏன் நீ தப்பா புருஞ்சுக்கற..?” என்றாள் மீனா.

“நான் ஒன்னும் தப்பா புருஞ்சுக்களை..அவதான் பேச மாட்டேன்கிறா… நானும் வழிய போய் பேசலை..” என்று சொன்னபடி தன்னுடைய டப்பாவை காலி செய்தாள் மகா.

அங்கே குமரனோ…பிரியாவை சுடிதார் பகுதியில் விட்டுவிட்டு இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.ஏனோ அவனைப் பார்த்ததும் மகாவினால் முகத்தைத் திருப்ப முடியாமல்..

“ஹாய் அண்ணா..!” என்றாள்.

“ஹாய் மா…” என்றவன்..மீனாவிற்கு பின்னால் நின்றான்.அதனால் மீனா திரும்பி பார்க்கவில்லை.

“இவன் யாரு..? இவ அண்ணான்னு சொல்றா..” என்ற யோசனையுடன் அவள் திரும்ப போக…

“உனக்கும் பிரியாவுக்கும் என்ன பிரச்சனை..?” என்றான்.

அவனின் கேள்வியில் புரிந்து போனது அவன் பிரியாவின் அண்ணன் என்று.அதனால் மீண்டும் தன் சாப்பிடும் வேலையை சரியாக செய்ய ஆரம்பித்தாள்.ஆனால் குமரனுக்கு தான் ஏமாற்றமாக இருந்தது. இருவருக்கும் நடுவில் சென்று நின்றவன் இருவரையும் பொதுவாக பார்த்து வைத்தான்.

“திரும்புறாளா பாரு..என்னமோ அந்த ஐஸ் கிரீம் விட்டா ஓடிடும் அப்படின்ற மாதிரி தின்னுகிட்டு..” என்று அவன் மைன்ட் வாய்சில் பேசிக் கொண்டிருக்க…

“அது ஒரு சின்ன சண்டைன்னா…சீக்கிரம் சரியாகிடும்..” என்றாள் மகா பெரிய மனுஷி மாதிரி.

“ஹோ..! அப்ப சரிம்மா..!” என்று திரும்பி செல்ல எத்தனித்தவன்..”ஆமா இவங்க யாரு உன் சித்தியா..?” என்றான் வேண்டும் என்றே.

“என்னது சித்தியா..?” என்று வெகுண்டவள்…

“அடிங்க..என்னைப்ப பார்த்தா அவளுக்கு சித்தி மாதிரியா இருக்கு! என்ன கிண்டலா? வாய் இருந்தா எது வேண்ணாலும் பேசுவிங்களா..?” என்று சண்டைக்குத் தயாராக..

அதுவரை அவன் கேட்ட சித்தியா? என்ற கேள்வியில் சிரித்துக் கொண்டிருந்த மகா…மீனா அவனுடன் சண்டைக்கு போகவும்…

“ஐயோ அக்கா..! அண்ணா தெரியாம சொல்லிட்டார்..விட்டுடு..” என்று கெஞ்ச.

“தெரியாமைன்னா…எது வேண்ணா சொல்லுவாரா இந்த நொண்ணன்..ஆளையும் மண்டையும் பாரு…சரியான மாங்கா  மண்ட..” என்று அவள் சொல்ல..

“ஹலோ..ஹலோ..! என்ன விட்டா உன் இஷ்ட்டத்துக்கு பேசிகிட்டே போற..?தெரியாம ஒரு கேள்வி கேட்டுட்டேன்..! அதுக்கு உன் இஷ்ட்டத்துக்கு பேசிகிட்டே போற..?” என்றான் அவனும் வெகுண்டு.

“ஐயோ அண்ணா..! நீங்களாவது அமைதியா இருங்க..! இவ என் அக்கா மீனாட்சி..!” என்றாள் மகா.

“உனக்கு அக்கான்னு சொல்ற..ஆனா கொஞ்சம் கூட மேட்ச் ஆகலை..!” என்றான் சின்ன சிரிப்புடன்.

“கொய்யாலே மேட்ச் ஆகணுமா மேட்ச்..” என்று அவள் திரும்ப ஏதோ சொல்ல வர..

“மீனாட்சி என்ன பண்றிங்க..? யாரு இது..?” என்று தேவகியும்,கோபாலனும் வர…

“ஹான்..அம்ம்மா..ஒன்னுமில்லையே..இவர் நம்ம மகா பிரண்ட் ப்ரியாவோட அண்ணனாம்.எனக்குத் தெரியாது.மகா தான் சொல்லிட்டு இருந்தா..அதான் என்னன்னு கேட்டுகிட்டு இருந்தேன்..!”இல்ல சார்.. என்று மீனா இழுக்க…அவளின் பாவனையைப் பார்த்து வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கினான் குமரன்.

“இல்லையே ஏதோ சண்டை போட்ட மாதிரியே இருந்தது..?” என்று தேவகி விடாமல் கேட்க..

“நான் என்ன பொய்யா சொல்ல போறேன்..வேணும்ன்னா நீங்களே சாரைக் கேளுங்க..!” என்று மீனா நழுவ..

“ஹாய் ஆன்ட்டி…நான் பிரியாவோட அண்ணன் செந்தில் குமரன்.அண்ட் சபரியும் என்னோட பிரன்ட் தான்…கல்யாண வீட்ல கூட என்னைப் பார்த்திருப்பிங்க..!” என்று அறிமுகம் ஆனான்.

அப்பொழுது தான் நியாபகம் வந்தவராய் கோபாலன்..”அடடே..தம்பி நீங்களா..?அன்னைக்கு ஒரு தடவைப் பார்த்தது…அதான் அடையாளம் தெரியலை..நல்லா இருக்கிங்களா..?” என்று விசாரிக்க..

“ரொம்ப முக்கியம்…அந்த பாலாப் போன சபரிக்கு இவன் பிரண்டு வேறயா விளங்கிடும்..” என்று அவள் மனதிற்குள் கவுண்ட்டர் கொடுத்துக் கொண்டிருக்க…

“பரவாயில்லை அங்கிள்..நான் நல்லா இருக்கேன்..!” என்றவன்..”ஓகே அங்கிள்,ஓகே ஆன்ட்டி அங்க பிரியா தனியா இருப்பா நான் கிளம்புறேன்..!” என்று விடை பெற..

“ஒரு நாள் பிரியாவோட வீட்டுக்கு வரணும் தம்பி..!” என்று அவர் உபசரிக்க..

“கண்டிப்பா அங்கிள்..” என்றவன்..மீனாவை மார்க்கமாய் ஒரு பார்வை பார்த்து வைக்க..

“எருமை மாடு..! பப்ளிக்கா எப்படி வழியுறான்..வழிஞ்ச மண்டையன்..” என்ற மற்றொரு அடைமொழியையும் அவனுக்கு சூட்டினாள்.

குமரனோ..மஞ்சள் நிற சல்வாரில்..அழகுப் பதுமையாய் இருந்தவளை மனதிலும்.விழிகளிலும் நிரப்பிக் கொண்டு அங்கிருந்து அகன்றான்.அவன் சென்ற போது..அவன் கண்கள் ஏதோ சொல்ல வர..மீனாட்சியோ அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லாமல் அவள் அம்மாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.ஆனால் குமரனுக்கோ அவளை விட்டு அவள் இருக்கும் இடத்தை விட்டு நகர துளியும் விருப்பம் இல்லை.

தன் மனதில் அவள் மேல் உள்ளது நூறு சதவிகிதம் காதல் உணர்வு தான் என்பதைத் தெளிவு படுத்திக் கொண்டு அங்கிருந்து அகன்றான்.

Advertisement