Advertisement

 பிறை 5:

“லல்ல லல்ல லல்லலே லா….லாஆ…. லல்ல லல்ல லல்லலே லா…. என்று தாளம் போட்டுக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் மீனாட்சி.

செய்த காரியத்தின் சுக துக்கம் தெரியாமல்..தன் போக்கில் சந்தோஷமாக வீட்டினுள் வந்த மீனாட்சியைப் பார்த்த தேவகிக்கு….அவ்வளவு கடுப்பு.

“அம்மா..பசிக்குது..! என்றபடி பேக்கை தூக்கிப் போட….

“நான் என்ன இந்த வீட்டு சமையல்காரியா…? என்று தேவகி கடுப்புடன் கேட்க….

“இல்லம்மா…அப்பாவுக்கு வீட்டுக்காரி…! ஒய் இப்போ ஆங்கிரி…நான் என்ன பண்ணேன்…! என்றாள் அப்பாவியாய்.

“கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா…ஒரு ஆம்பிள்ளை சட்டையைப் பிடிச்சு ரோட்ல அடிக்கிற..மனசுல பெரிய விஜய சாந்தின்னு நினைப்பா…? என்றார்.

“அம்மா..பார்த்திங்களா…? உங்களுக்கு எப்படி தெரியும்..? என்றாள் வேகமாய்.

“அதான் டிவிலயே போட்டானே…! என்று சொல்ல…

“என்னது டிவில போட்டாங்களா…? ஐயோ இப்படின்னு தெரிஞ்சிருந்தா நல்லா மேக்கப் போட்டுட்டு போயிருப்பேனே…இன்னைக்கு தலைக்கு கூட குளிக்கலை..எண்ணெய் வழிஞ்சு…ஐயோ மீனாட்சி…உனக்கு வந்த சோதனையா..? என்று அவள் நடித்துக் கொண்டிருக்க…

“எடு வெளக்கமாத்த….நானே வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருக்கேன்… இதுல நீயேண்டி ஊர் வம்பெல்லாம் இழுத்துட்டு வர…எவன் குடிச்சுட்டு என்ன பண்ணா உனக்கென்ன…? என்று கோபத்துடன் கேட்க…

“அம்மா..! எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்..!! என்றாள்.

“இப்ப என்ன..? என்று தேவகி கடுப்புடன் கேட்க..

“நானும் பார்க்குறேன்…எப்ப பார்த்தாலும்..நெருப்ப வயித்துல கட்டிக்கிட்டு இருக்கேன்…நெருப்ப வயித்துல கட்டிக்கிட்டு இருக்கேன்னு சொல்லிட்டே இருக்கீங்க….? ம்ம்ம்? என்றபடி அவரைச் சுற்ற..

“இப்ப என்னத்த சுத்தி பார்க்குற…? என்றார்.

“இல்ல நெருப்பு வயித்துல இருக்கு…இன்னமும் எந்த பக்கமும் புகை வரலையே..அட தீ கூட தெரியலம்மா.. என்று அவள் ஆச்சர்யமாய் சொல்ல…

அவருக்கு வந்த கோபத்தின் அளவு அவரின் முகத்திலேயே தெரிந்தது. உன்கிட்ட எல்லாம் பேசிட்டு இருக்கேன் பாரு… என்னைச் சொல்லனும்… என்றவர்…அடி விளாசித் தள்ளிவிட்டார்.

“தேவகி..! என்ன இது வயசு புள்ளைய அடிக்கிறது..? என்று கோபாலன் சத்தம் போட…

“யாரு இவளா வயசு பிள்ளை…?எனக்கு வர கோபத்துக்கு….! என்று மீண்டும் பல்லைக் கடிக்க…

“அடிம்மா…நல்லா அடி…என்னை நீ அடிக்காம வேற யாரு அடிப்பாங்க…? ஆனா  ஒன்னு… என்று அவள் நிறுத்த…

“என்ன..? என்பதைப் போல் அவள் பெற்றவர்கள் பார்க்க..

“சாப்பாட்டைப் போட்டுட்டு..அப்பறம் எவ்வளவு வேணுமின்னாலும் அடி… சோறு முக்கியம் சொல்லிட்டேன்.. என்று சோகமாய் சொல்ல…அதில் சிரிப்பு வந்தாலும்…அடக்கிக் கொண்டனர் பெற்றோர்.

அவள் அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருக்க…அவளின் அருகில் அமர்ந்தார் கோபாலன்.

“மீனு..

“சொல்லுங்கப்பா…!

“எக்ஸாம் எப்ப முடியுது..? என்றார்.

“இன்னும் ஒரு வாரம் இருக்குப்பா…! என்றாள் சாப்பிட்டுக் கொண்டே.

“அதுக்கப்பறம்…என்ன செய்யலாம்ன்னு இருக்க…மேல படிக்கிறியா..? என்றார்.

“நீங்க என்ன சொல்றிங்களோ…அதான்ப்பா.. என்றாள்.

“இது தான் மீனாட்சி…! எவ்வளவு தைரியமாக இருந்தாலும்…எவ்வளவு நாகரிகமாய் இருந்தாலும்..அவள் அப்பாவின் சொல்லே அவளுக்கு வேத வாக்கு.

“உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு இருக்கோம்மா..! என்றார்.

ஒரு நிமிடம் அதிர்ந்து அவரைப் பார்த்தவள்…பின் என்ன நினைத்தாளோ…

“உங்க இஷ்ட்டம்…! ஆனா ஒரு கண்டிஷன்..! எனக்கு மாப்பிள்ளை உள்ளூரா தான் இருக்கணும்…இது மட்டும் தான் என்னோட எதிர்பார்ப்பு.. மத்த படி நீங்க எந்த மாப்பிள்ளையை சொன்னாலும் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்..! என்றபடி எழுந்து போக…மகளைக் கொஞ்சம் பெருமையுடன் தான் பார்த்தார் கோபாலன்.

“என்னங்க இப்படி சொல்லிட்டு போறா..? என்று தேவகி கேட்க..

“அவ என் பொண்ணு..அதான்… என்று அவர் சொல்ல…தேவகிக்கு தான் முட்டிக் கொள்ளலாம் போல் வந்தது.

சரி என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாளே ஒழிய அவளுக்கும் கொஞ்சம் குழப்பமாக தான் இருந்தது.இருந்தாலும் பெற்றோர் மீது இருந்த நம்பிக்கை…அதற்கு மேல் எதையும் அவள் ஆராயவில்லை.

இரண்டு மாதங்கள் கடந்திருந்த நிலையில்….

“நான் கண்டிப்பா மெடிக்கல் தான் போவேன்..! என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தாள் மகா.

“வேண்டாம்மா சொன்னா கேளு…மெடிக்கல் ரொம்ப கஷ்ட்டம்டா.. அதுமட்டும் இல்ல..அதுக்கு நிறைய வருஷம் படிக்கணும்… என்று கோபாலன் சொல்ல…இதை வேடிக்கையாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி.

“அப்பா அவளுக்கு அதான் ஆசைன்னா..படிக்கட்டும்ப்பா.. என்றாள் அக்காவாய்.

“சரி..முதல்ல ரிசல்ட் வரட்டும்…என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்..! என்றார் தளர்ந்தவாராய்.

“நாளைக்கு உன்னைப் பொண்ணு பார்க்க வராங்க…! வெளிய எங்கயும் போகாம அடக்க ஒடுக்கமா வீட்டுல இருக்க பாரு..! என்றார் தேவகி.

“என்னது அக்காவுக்கு கல்யாணமா..? ஏய் நீ மேல படிக்கலையா..? என்றாள் மகா சிரிப்பாய்.

“அதெல்லாம் எனக்கும் படிக்க ஆசைதான்..அப்பாவுக்காக தான் சரின்னு சொல்றேன்… என்றாள் பாப்கானை கொறித்துக் கொண்டு.

“யாரு…நீ…அப்பாவுக்காக…இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு…ஒரு டிகிரி முடிக்கவே நீ எவ்வளவு பிட் அடிச்சன்னு எனக்கு மட்டும் தான தெரியும்… என்றாள் சிரிப்புடன்.

அவளை அருகில் இழுத்தவள்..அவளின் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டே..தங்கச்சி…எப்பவுமே அனுபவக் கல்விதான் சிறந்தது…நீ படிக்கிறது எல்லாம் சும்மா…!வெறும் ஏட்டுக் கல்வியை நம்புறவ இல்லை இந்த மீனாட்சி….நானெல்லாம்…. என்று அவள் இழுக்க..

“தெரியும்..தெரியும்..நீ சொல்ல வேண்டாம்..நானே சொல்றேன்… என்று நிறுத்திய மகா..

“நீயெல்லாம் பிட்டு அடிக்கவும்..ஆளைப் போட்டு அடிக்கவும் தான் லாயக்கு…. என்று சொல்லிவிட்டு ஓட..

“போடி போ…ஒருத்தி அறிவாளியா இருந்தா பிடிக்காதே..! என்று புலம்பியபடி…மீண்டும் கிரிகெட்டைப் பார்க்க ஆரம்பித்தாள்.

அவளின் அருகில் அமர்ந்து தேவகியும் ஆரம்பித்தார்.

“மாப்பிள்ளை வீடு ரொம்ப பெரிய இடம்…பையனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சு போய்டுச்சு…விரும்பி வந்து பொண்ணுக் கேட்குறாங்க…முக்கியமா உள்ளூர் வேற..அதான் அப்பா சரின்னு சொல்லிட்டார்.நாளைக்கு நேர்ல பார்த்து உனக்கும் பிடிச்சுடுசுன்னா…நாளைக்கே நிச்சயம் பண்ணிக்கலாம்… இதுல மாப்பிள்ளை போட்டோ இருக்கு… என்ற படி தர…

“இதை பார்க்கனும்ன்னு அவசியம் இல்லை..அப்பாவுக்கு பிடிச்சா எனக்கு சரிதான்.. என்றபடி டிவியில் மூழ்கிவிட்டாள்.

“என்னங்க இவ..இப்படி ஒரு கல்யாண ஆசையே இல்லாம இருக்கா…போற வீட்ல பேரைக் காப்பாத்துவாளா…? என்று தேவகி கேட்க…

“அதெல்லாம்..போன உடனே பேரபிள்ளையை பெத்து கைல குடுத்துடுவேன்… கவலைப் படாதிங்க…! என்று போற போக்கில் சொல்லிவிட்டு போக…

தேவகி முறைக்க…அதைப் பார்த்து சிரித்தார் கோபாலன்.அவ அளவுக்கு அவ தெளிவாதான் இருக்கா..நீ ஏன் மனசைப் போட்டு குழப்பிக்கிற… நாளைக்கு என்னென்ன வாங்கனும்ன்னு லிஸ்ட் குடு..வாங்கிட்டு வந்திடுறேன்..! என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அறைக்குள் சென்ற மீனாட்சியோ…ஆர்வம் தாங்காமல் போடோவைப் பார்க்க…அதில் சிரித்துக் கொண்டிருந்தான் அவன்.ஆண் அழகனாக இல்லாவிட்டாலும்…ஆண்களில் அழகானவனாய் இருந்தான்.

“நாட் பேட்… என்று மனதிற்குள் சொல்லி தலையை ஆட்டிக் கொண்டாள் அவள்.

மறுநாள்..அழகான காலைப் பொழுதில் அமைதியாய் கிளம்பிக் கொண்டிருந்தாள் மீனாட்சி.இயற்கையாகவே அழகாய் இருப்பவளுக்கு… மேக்கப் மேலும் அழகு சேர்க்க….மனதில் ஆனந்தமாய் உணர்ந்தாள்.

“அக்கா…செம்மையா இருக்க போ… என்று மகா சிலாகிக்க…

“நிஜமாவாடி.. என்றாள் மீனா.

“இங்க பரு..பொய்யெல்லாம் ஒரு தடவை தான் சொல்ல முடியும்…திரும்ப திரும்ப கேட்க கூடாது… என்று மகா சிரிக்காமல் சொல்ல…

“அடியேய்…உன்னை… என்று அவள் துரத்த…நேரம் பார்த்து வந்தார் தேவகி.அவரைப் பார்த்த மீனாட்சி அமைதியாய் சென்று அமர்ந்து கொள்ள…

“நீயெல்லாம் இந்த ஜென்மத்துக்கு திருந்தவே மாட்ட… என்று தலையில் அடித்தார்.இந்தா இந்த நகை எல்லாம் போட்டுக்க..! என்று சில நகைகளைக் குடுக்க..

“அம்மா…ஏற்கனவே ஓவர்…இதுக்கும் மேல போட்டா…நகைக் கடை பொம்மை மாதிரி இருக்கும்.. என்றாள்.

“அதெல்லாம் இருக்காது…போடுன்னா போடு.. என்று அதட்ட…வேறு வழியில்லாமல் அதை வாங்கி அணிந்து கொண்டாள்  மீனா.

“கடவுளே..! வரப் போற மாப்பிள்ளைக்கு என்னை பிடிக்கணும்..! என்று மகா வேண்ட..அவள் தலையில் அடித்தாள் மீனா.

“இதெல்லாம் போங்காட்டம்…தேவி அக்காவை பொண்ணுப் பார்க்க வந்தப்ப..சபரி மாமா உன்னைப் பார்த்து வாயைப் பிளக்கலை..நான் ஏதாவது சொன்னேனா….அது மாதிரி உனக்கு வரப் போற மாப்பிள்ளை..என்னைப் பார்க்கணும்…உனக்கு காதுல புகை வரணும்…தட்ஸ் ஆல்.. என்று கையைத் தட்ட…

“அப்படி மட்டும் ஏதாவது நடந்தது…உடனே அவனை ரிஜக்ட் பண்ணிடுவேன்….பார்வைல கூட வேற யாரையும் பார்க்க கூடாது.. என்றாள் மீனாட்சி தீவிரமாய்.

“அக்கா..! இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலை..எந்த காலத்தில் இருக்க நீ..இப்போல்லாம்…வாரத்துக்கு ஒரு லவ்…மாசத்துக்கு ஒரு பிரேக் அப்ன்னு போய்ட்டு இருக்கு…இப்ப வந்துட்டு….அப்படி இருக்கணும்..இப்படி இருக்கனும்ன்னு சொல்லிட்டு இருக்க.. என்றாள் மகா.

“யாரைப் பத்தியும் எனக்கு கவலை கிடையாது…! நான் இப்படித்தான்…அதில் மாற்றமே இல்லை… என்றாள் சீரியசாய்.

“அக்கா…!நான் விளையாட்டுக்கு சொன்னேன்…அதுக்கு ஏன் முகத்தை இப்படி வச்சிருக்க…தயவு செஞ்சு சிரி..இல்லன்னா அம்மா பார்த்தா என்னை வறுத்து எடுத்துடுவாங்க..! என்றாள்.

தங்கைக்காக சிரித்து வைத்தாள் மீனாட்சி.ஏனோ மனதில் பாரம் ஏறி அமர்ந்து கொண்டதைப் போன்ற ஒரு உணர்வு.சற்று முன் இருந்த இனிமை காணாமல் போயிருந்தது.

சொன்ன நேரத்தை விட சற்று தாமதமாகத் தான் வந்தனர் மாப்பிள்ளை வீட்டில் இருந்து.மகா ஆர்வம் தாங்காமல் வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் நடந்து கொண்டிருந்தாள்.

சமையல் கட்டில் இருந்து பலகாரத்தின் வாசனை தூக்கலாய் இருக்க….அட..அட..என்ன வாசனை..என்ன வாசனை…அம்மா எனக்கு.. என்று எடுக்க போக…

“முதல்ல போய் அக்காகிட்ட இரு…! என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே..தேவி தன் கணவன் சபரியுடன் வந்து விட்டாள்.

“வாங்க மாப்பிள்ளை..வா தேவி.. என்றவர்..எங்க அக்காவையும் மாமாவையும்.. என்றார்.

“வந்துட்டு இருக்காங்க சித்தி…!” என்றவள்…நான் மீனாகிட்ட போறேன்..! என்றபடி சென்றுவிட்டாள்.

சபரிக்கு செல்ல கொஞ்சம் பயம்..மீனாவிற்கு தான் அவனைக் கண்டாலே ஆகாதே.அதானால் ஹாலிலேயே இருந்து கொண்டான்.

“தேவி அக்கா… என்று மீனா அவளைக் கட்டிக் கொள்ள…

“என்னடி மாப்பிள்ளை போட்டோ பார்த்தியா..? பிடிச்சிருக்கா..? என்றாள்.

“ம்ம்ம் மோசமில்லை..அதனால் வாழ்க்கை குடுக்கலாம்..! என்று சொல்ல…

“உனக்கு கொழுப்பு மட்டும் குறையவே குறையாதாடி.. என்றாள் தேவி.

“அதெப்படிக்கா குறையும்…கூடவே பொறந்தது…நானும் குறைக்க டிரை பன்றேன்..பட் முடியலை..ஆமா..! எங்க உன் வீட்டுக்காரர்… என்றாள் வக்கனையாய்.

“வந்துருக்கார்டி..! ஹால்ல இருக்கார்..! “ என்று தேவி வெட்கப்பட…

“ஐய…இதுக்கெல்லாம வெட்க படுவ..கிழிஞ்சுடும்… என்று அவள் இழுக்க…

“இல்லடி..நீ சித்தி ஆகப் போற..! என்றாள் தேவி.

“ஐ சூப்பரு..நிஜமாவாக்கா..பரவாயில்லை..மனுஷனை என்னமோன்னு நினைச்சேன்..ஆனா தீயா வேலை பார்த்திருக்கார்..ம்ம்ம் “ என்று சொல்ல…

“அடியேய்…இந்த வாயைக் கொஞ்சம் மூடு…ஏண்டி மானத்தை வாங்குற.. என்று அவள் வாயை மூட போக…வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

“அவங்க வந்துட்டாங்க போல…நீ இரு நான் போய் பார்த்துட்டு வரேன்.. என்று கீழே போக..அதற்குள் தேவியின் பெற்றோரும் வந்துவிட்டிருந்தனர்.

வீட்டிற்குள் நுழைந்தவர்கள்..வீட்டினை சுற்றி பார்வையை ஓட்ட…அவர்கள் பார்வையே சொன்னது..அவர்களின் பிடித்தமின்மையை.

ஆனால் அவன் மட்டும் விதி விளக்காய்…மீனாட்சியை தேடிக் கொண்டிருந்தான்.அவனின் பார்வை வீட்டின் சந்து பொந்து எல்லாம் சுற்றி வர..அவன் அருகில் இருந்த அவன் அம்மா அவனைப் பார்வையாலேயே அடக்கினார்.

சம்பிரதாய பேச்சுக்கள் முடிய….

“உண்மைய சொல்லனும்ன்னா..எங்க பையன் விருப்பப்பட்டான் அப்படின்ற ஒரே காரணத்துக்காக தான்..நான் இங்க வந்ததே.பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் பொண்ணு தர ரெடியா இருக்காங்க..ஆனா இவனுக்கு உங்க பொண்ணைத்தான் பிடிச்சிருக்கு.எங்களுக்கு அவனோட விருப்பம் தான் முக்கியம்..அதான் வேற எதைப் பத்தியும் யோசிக்காம….சரின்னு சொல்லிட்டோம்..! என்றனர்.

“உங்க அளவுக்கு முடியலைன்னாலும்…ஓரளவுக்கு எங்க பொண்ணுக்கு நாங்க நல்லாவே செய்வோம்…எங்களுக்கு இருக்குறது இரண்டும் பொண்ணு தான்..அதனாலே எல்லாமே அவங்களுக்கு தான்..! என்றார் கோபாலன்.

“பொண்ணை வர சொல்லுங்க..! என்று அவனின் அம்மா சொல்ல…

“ரொம்ப தேங்க்ஸ் ம்மா.. என்றான் காதில்.

ஒருபுறம் தேவியும் மறுபுறம் மகாவும் இருக்க..நடுவில் மீனாட்சியை விட்டு அழைத்து வந்தனர்.

அவளைப் பார்த்தவனின் விழிகள் வேறு எங்கும் நகர்வேனா என்று சண்டித்தனம் பண்ண..

“டேய்..! மானத்தை வாங்காத..வாயை கொஞ்சம் மூடு…ஊருல இருக்குற கொசுவெல்லாம் உன் வாய்க்குள்ள தான் போகுது… என்று அவனின் அக்கா காதைக் கடிக்க…

மாப்பிள்ளையின் முகத்தைப் பார்த்த சபரிக்கு சிரிப்பை அடக்குவது பெரும்பாடாக இருந்தது.பின்னே அவனும் அப்படித்தானே தேவி என்று நினைத்து மீனாட்சியைப் பார்த்தான்.

ஆனால் மீனாவோ தலையை நிமிர்ந்து பார்க்கவேயில்லை.

“மீனா.! நிமிர்ந்து மாப்பிள்ளையைப் பாரு..! என்று தேவி காதைக் கடிக்க…சட்டென்று நிமிர்ந்தாள்.

“அடியேய் மெல்ல நிமிருன்னு தான் சொன்னேன்…அதுக்குன்னு இப்படியா.. என்று தேவி கடுப்படைய, அதைப் பார்த்த மகாவிற்கு சிரிப்பு பொங்கியது.அவளின் அக்காவைப் பற்றி அவளுக்கு தெரியுமே..!

“தேவி அக்கா…இது தான் அம்மா சொன்ன அடக்கம்,ஒடுக்கம்.. என்று மகா மெதுவாக சொல்ல..அவளின் காலை பட்டென்று மிதித்தாள் மீனா.

“எங்களுக்கு பொண்ணைப் பிடிச்சிருக்கு..! மேற்கொண்டு பேசலாமா…? என்றனர்.

“எனக்கு பிடிக்க வேண்டாமா..? என்கிட்டே கேட்கலை.. என்று மீனாட்சி கோபமாய் பார்க்க…

“எங்களுக்கும் மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கு..எங்களுக்கு பிடிச்சா..எங்க பொண்ணுக்கு பிடிச்ச மாதிரி.. என்றார் கோபாலன்.

“அதை உங்க பொண்ணு சொல்லணும்.. என்றாள் அவனின் அக்கா.

“என் பொண்ணு சொன்னது தான்மா.. என்றார் கோபாலன் விடாமல்.

“அப்ப சின்னதா நிச்சயம் பண்ணிக்கலாம்..கல்யாணமும் ரிசப்சனும் கிராண்டா பண்ணிக்கலாம்.. என்று அவர்கள் சொல்ல..இவர்களும் சரி என்று தலையை ஆட்டினர்.

இவை அனைத்தும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க…மீனாவை பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தான் அவன்.

“பாண்டியராஜன்-மின்னல்கொடி ஆகிய நாங்கள் எங்கள் பையன் சேகருக்கு…உங்கள் பெண்ணை மனம் முடிக்க..மனதார ஒப்புக் கொள்கிறோம்… என்றபடி தட்டை அவர்கள் நீட்ட…

கோபாலன்-தேவகி ஆகிய நாங்கள் எங்கள் பெண் சர்வ மீனாட்சியை… உங்கள் பையன் சேகருக்கு மனம் முடிக்க…மனதார ஒப்புக் கொள்கிறோம்… என்று சொல்லி தட்டை வாங்கிக் கொண்டனர்.

சர்வ மீனாட்சியின் பார்வையும்…சேகரின் பார்வையும் சந்தித்துக் கொள்ள..அவர்கள் வாழ்க்கைக்கான ஆச்சாரம் அந்நாளில் இடப்பட்டது.

Advertisement