Advertisement

பிறை 4:

சேகர் இறந்து இன்றோடு இரண்டு நாட்கள் முடிந்திருந்தது.ஆனால் அந்த வீட்டில் எந்த மாற்றமும் இன்றி…அவன் இறந்த சோகம் அப்படியே இருந்தது.யாரும் யாரையும் பார்த்து பேசக் கூட பிடிக்காமல்..அழுது கொண்டிருந்தனர்.

மகனின் இழப்பை மின்னல் கொடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பாண்டியராஜன் அதற்கும் மேலாக தளர்ந்து போனவராய் அமர்ந்திருந்தார். இருக்கிற அவரது சொத்துக்களுக்கு எல்லாம் அவன் ஒருவன் தானே ஆண் வாரிசு.

தனது பதவிக் காலத்தில் சேர்த்த பணமெல்லாம் அவரைப் பார்த்து சிரிப்பதைப் போன்ற பிரம்மை அவருக்கு.யாருக்காக ஓடி ஓடி பணம் சம்பாதித்தரோ….யாருக்காக செய்ய கூடாத வேலையெல்லாம் செய்தாரோ… அந்த மகன்..அவரின் அன்பு மகன் இன்று அவருடன் இல்லை.

பாண்டியராஜனுக்கு அவர் மகன் தான் எல்லாம்…அவனுக்காக அவர் எதுவும் செய்வார் என்றால் அது மிகையில்லை.ஆனால் மின்னல் கொடி அவனின் விஷயத்தில் கொஞ்சம் கண்டிப்பு காட்டுவார்.ஆண்பிள்ளையை ஒழுங்காக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவரின் பேச்சிலேயே தெரியும்.

நந்தினிக்கும் சேகர் என்றால் உயிர்.தம்பி என்றால் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும்….காரணம் என்னவோ பெரிதாக ஒன்றும் இல்லை…பிடிவாதத்தில் தன்னைக் கொண்டு இருந்ததாலோ…இல்லை ஆடம்பரத்தில் தன்னைக் கொண்டு இருந்ததாலோ…இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இதில் எந்த வகையிலும் சேராமல் ஒரு ஜீவன் தனித்து நின்றது என்றால்அது சர்வா தான்.தனித்து நின்றாள் என்று சொல்வதை காட்டிலும் தனித்து விடப்பட்டாள் என்று சொல்வதே பொருத்தம்.

சர்வாவின் இந்த தோற்றம் அந்த வீட்டில் ஒருத்தரைப் பாதித்தது என்றால்..அது அவளின் மாமியார் மின்னல் கொடியைத்தான்…

அவர் பார்க்க….தேவதையாய் இருந்த பெண் இன்று விதவையாய் நிற்கிறாள்.அவளின் அந்த கோலம் தான் அவரின் மனதைப் பிசைந்தது.

ஒரு விசேசத்தில் பார்த்த சர்வாவை….கட்டினால் இவளைத்தான் கட்டுவேன் என்று அடம்பிடித்து நின்று…அதை தந்தையிடம் சொல்லி….அவளையே மணம் முடித்தான் சேகர்.

திருமணத்தில் மனங்கள் சேரவேண்டும் என்ற நியதி அவனுக்குத் தெரியவில்லையா….இல்லை தெரிந்தும் வேண்டும் என்று செய்தானா..? என்று கேட்டால் பதில் சொல்ல என்னவோ அவன் இல்லை.

அந்த நேரத்தில் தான் அங்கு வந்தான் குமரன்.

“நான் உள்ள வரலாமா சார்..! என்றான் பணிவாய்.

“வாங்க.. குமரன்….! “ என்ற பாண்டியராஜனுக்கு மனதிற்குள் மெல்லிய பரபரப்பு.

“போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வந்திருச்சா..? என்றார் வேகமாய்.

“அதை சொல்லத்தான் சார் வந்தேன்..! என்றான் நிறுத்தி.

“ரிப்போர்ட் என்ன சொல்லுது….? இது இயற்கை மரணமா இல்லை கொலையா…? என்றார்.

“எங்களால எந்த ஒரு முடிவுக்கும் வர முடியலை….அதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு கேள்வி..! என்றான்.

“சொல்லுங்க..!

“உங்க பையனுக்கு…மூச்சு திணறல் பிரச்சனை ஏதும் இருந்ததா..? என்றான்.

“ஆமா இப்ப கொஞ்ச நாளா அந்த பிரச்சனை இருந்தது..! என்றார்.

“உங்க பையன் மூச்சுத் திணறி தான் இறந்திருக்கார்..அவர் மூச்சு காத்துக்கு ஏங்கி…கடைசி நேரத்துல அது அட்டாக்கா மாறியிருக்குன்னு…ரிப்போர்ட் சொல்லுது! என்றான்.

அதைக்கேட்டு இடிந்துவிட்டார் பாண்டியராஜன்.

“என்ன சொல்றிங்க குமரன்..? என்றார்.

“ஆமா சார்..நான் சொன்னபடிதான் ரிப்போர்ட் சொல்லுது..வேணுமின்னா நீங்களும் பாருங்க…! என்று அவன் அந்த பேப்பரை நீட்ட…அதை வாங்கிப் படித்தார் அவர்.

“ஆனா என்னோட கேள்வி என்னனா…? நீங்க எவ்வளவு பெரிய ஜட்ஜ்… எவ்வளவு பெரிய குடும்பம்…அப்பறம் ஏன் ஒரு சின்ன பிரச்னையை கவனிக்காம விட்டு பெரிசு பண்ணிங்க..? என்றான்.

“இல்லை..அவன் ரெகுலரா மாத்திரை எடுத்துப்பான்..! என்றார் அவர்.

“சாரி சார்..! அவர் இறக்குறதுக்கு சரியா பத்து நாளைக்கு முன்ன இருந்தே அவர் அதுக்கான எந்த வித மாத்திரை மருந்தும் எடுத்துகலை.. என்றான்.

அதைகேட்ட பாண்டியராஜன்..கோபத்தின் உச்சிக்கே சென்றார்.

“கொடி.. என்ற அவரின் அதட்டல் குரல் அந்த வீடெங்கும் எதிரொலித்தது.

“என்னங்க..? என்று அவர் பதைபதைத்து ஓடி வர…கையிலிருந்த பேப்பரை அவர் முகத்தில் விட்டெறிந்த பாண்டியன்….

“அவன் மாத்திரை மருந்து சாப்பிட்டானா இல்லையா பார்க்குறத விட…உங்க எல்லாருக்கும் என்ன வேலை..? என்று கத்த..அவரோ செய்வதறியாது திகைத்தார்.

மூச்சுத் திணறல் எல்லாம் ஒரு சாதாரண சின்ன விஷயம்…இது உயிரைப் போக்குமா…? என்று நந்தினி யோசிக்க….

“இனிப் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை சார்…! மேற்கொண்டு என்ன செய்யனும்ன்னு நீங்க சொன்னிங்கன்னா..அப்படியே பண்ணிடலாம்..! என்றான்.

நந்தினியிடம் திரும்பியவன்…நீங்கதான உங்க தம்பி சாவில் சந்தேகம் இருக்குன்னு சொன்னிங்க..? என்றான்.

“ஆமாம்..! என்றாள்.

“எந்த வகையில் சந்தேகப் படுறிங்க…? என்றான்.

“அதெல்லாம் சொல்ல முடியாது..! ஆனா கண்டிப்பா டவுட் இருக்கு..! என்றாள்.

“உங்க தம்பிக்கு உடம்புல எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொன்னது நீங்கதான..? என்றான்.

“ஆமாம்..!

“ஆனா இப்படி ஒரு பிரச்சனை இருந்திருக்கு..? நீங்க ஏன் சொல்லலை..? என்றான்.

“என்ன சார்..! இதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது…இதெல்லாம் எல்லாருக்கும் இருக்குற ஒரு சாதாரண விஷயம்…இது ஏன் உங்களுக்கு புரியமாட்டேங்குது..? என்றாள்.

“அதே மாதிரி.. சாவுங்கறதும் எல்லாருக்கும் இருக்குற ஒரு பொதுவான விஷயம் தான..? இது ஏன் உங்களுக்கு புரியமாட்டேங்குது…? என்றான்.

நந்தினி எரிச்சலுடன் குமரனை முறைக்க…இப்ப என்ன சார் சொல்ல வரீங்க..? உங்களுக்கு உடனே இந்த கேசை முடிக்கணும்..அதான் இப்படி அவசரப்படுறிங்க…அதுக்கு நாங்க ஆள் இல்லை..இதை யாரை வைச்சு முடிக்கனுமோ..அவங்களை வச்சே முடிச்சுக்கறோம்..! என்றாள் நந்தினி.

“ஹலோ மேடம்..! உடனே முடிக்கணும்ன்னு நினைக்க நாங்க ஒன்னும் போலீஸ் இல்லை..சிபிஐ….எதையும் அலசி..தெளிச்சு எடுத்து தான் முடிப்போம்..எங்க வேலையே அதான்..! என்றான் அவனும் கொஞ்சம் கோபமாய்.

“கோபப்பாடாதிங்க குமரன்..! என்று பாண்டியன் அமைதியாய் சொல்ல..

“பின்ன என்ன சார்..உங்க பொண்ணு அவங்களுக்கு தோணினதை எல்லாம் பேசுறாங்க..! எங்களுக்கு தோன்றதை எல்லாம் நாங்க பேசுனா என்ன செய்வாங்க..? என்றான்.

“ஏன் பேசித்தான் பாருங்களேன்..! என்றாள் நந்தினி திமிராய்.

“அப்படியா…? அப்ப கேட்குறேன்..நீங்க ஏன் உங்க தம்பியைக் கொலை பண்ணி இருக்க கூடாது..? என்றான் சாவகாசமாய்.

“குமரன்..! என்று பாண்டியன் அதட்ட….நந்தினிக்கோ கண்களில் கண்ணீர் பெருகியது.

“அவன் என் சொந்த தம்பி..! அவனை நான் ஏன் கொல்லனும்…? என்றாள்.

“சிம்பிள்…உங்க தம்பி இல்லைன்னா…நீங்க தான அத்தனை சொத்துக்கும் வாரிசு..அந்த மோட்டிவா கூட இருக்கலாம் இல்ல..? என்றான்.

“வில் யு ஸ்டாப் இட்…! என்று கத்தியவள்….

“இதெல்லாம் வேணும்ன்னு சொன்னா என் தம்பியே குடுத்திருப்பான்… கொலை பண்ணி வாங்கனும்ன்னு எங்களுக்குள்ள எந்த அவசியமும் வந்தது இல்லை..! என்றாள்.

“ஓகே..ஓகே..ஜஸ்ட் கூல்…பார்த்திங்களா…? உங்களை சொன்னது எப்படி கோபம் வருது..அதே மாதிரிதாங்க எங்களுக்கும்….நீங்க பேசாம இருந்தாலே…நாங்க எங்க கடமையை கண்டிப்பா செய்வோம்..! என்றான்.

“சாரி சார்..! என்றாள்.

“இட்ஸ் ஓகே..! என்றவன் அந்த வீட்டை சுற்றி பார்வையை ஓட்டினான்.

அவனின் பார்வையறிந்த நந்தினி அவனை கேள்வியாய் பார்க்க…இறந்த மிஸ்டர் சேகரோட மனைவியை விசாரிக்கணும்…! என்றான்.

“அவளை விசாரிச்சு என்ன பண்ண போறீங்க..? அவ நேரம் தான் என் தம்பியை சாவக் குடுத்துடுச்சு.. என்றாள் நந்தினி கோபத்துடன்.

அவளின் பேச்சைக் கேட்ட குமரனுக்கு எரிச்சலாய் வந்தது.அதை வெளியே காட்ட முடியாத கடுப்பில்….

“அவங்க நேரம் சரி இல்லை ஓகே….உங்க எல்லார் நேரமும் சரியா தான இருந்தது…நீங்க உங்க தம்பியை காப்பாத்தி வைக்க வேண்டியது தானே..! என்றான் கடுப்புடன்.

இப்பொது தலையைத் தொங்கப் போடுவது நந்தினியின் முறை ஆனது.

“நான் கேட்குறதுக்கு மட்டும் பதில் சொன்ன போதும்..! தேவையில்லாம பேசுனா…நானும் இப்படி தான் பதில் குடுப்பேன்..அதுக்கு மேல உங்க விருப்பம்..! என்றான்.

“நீங்க சொல்லுங்க..உங்க மருமகள் எங்க…? என்றான் மின்னல் கொடியிடம் திரும்பி.

“மேல இருக்கா..! என்றார் அவர் தயங்கி.

“நான் அவங்க கிட்ட தனியா விசாரணை பண்ணனும்..! என்றான்.

“அதான்…கேஸ் முடிஞ்சுடுச்சுன்னு சொன்னிங்களே..! என்று நந்தினி நியாபகப்படுத்த….

அவளிடம் திரும்பி எரிச்சலை அப்பட்டமாகக் காட்டியவன்…எப்படி முடிஞ்சாலும்…நாங்க விசாரணை பண்ண பேப்பர்ஸ்ஸ சப்மிட் பண்ணி ஆகணும்…உங்க அப்பா ஜட்ஜ் தானே..! அவருக்கு தெரியாததா..? என்றான்.

“நந்தினி..! கொஞ்ச நேரம் வாயை மூடு…! என்ற பாண்டியன்…கொடி…நீ போய் சர்வாவை கூட்டிட்டு வா…! என்றவர்..

“நீங்க அங்க வெயிட் பண்ணுங்க குமரன்.. என்று அவர் அலுவல் அறையைக் காட்டினார்.

“ஓகே..! என்றபடி அவன் எழுந்து போக….

“இந்த ஆளுக்கு வாய் கொஞ்சம் அதிகம் தான்ப்பா..எப்படி பேசுறான் பாருங்க..! என்று நந்தினி பொரும..

“அவங்க வேலையை அவங்க செய்றாங்க..! மீடியாகாரங்க முன்னாடி வாயை விடுறதுக்கு முன்னாடி இதையெல்லாம் யோசிச்சு இருக்கணும்..! என்றார் பாண்டியன்.(பாண்டியராஜனின் சுருக்கம்.)

“அப்பா நான் பொய்யெல்லாம் சொல்லலை..எனக்கு இப்பவும் அந்த சந்தேகம் இருக்கு..சொல்ல போனா கூடிட்டே தான் போகுது.. என்றாள்.

“நந்தினி…தயவு செஞ்சு அமைதியா இரு..எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்..! என்று அவர் முடித்துக் கொள்ள…அவளுக்கு ஆற்றாமையாய் வந்தது.

அங்கே..சர்வாவின் வரவை பார்த்து காத்திருந்தான் குமரன்..அவளும் வந்தாள்.ஆனால் அவன் எதிர்பார்த்த அளவுக்கு அல்ல.கொஞ்சம் தெளிந்து இருப்பாள் என்று எண்ணினான்.ஆனால் சர்வாவோ அதே நிலையில் தான் இப்போதும் இருந்தாள்.

அதே வெறித்த பார்வை…இலக்கற்ற சிந்தனை…பொலிவிழந்த முகம்…யார் அழைத்தது…அவன் யார்…எதற்கான தன்னைப் பார்க்க வேண்டும்..? என்ற கேள்வியெல்லாம் கேட்காமல்..அமைதியாய் அவன் முன் வந்தாள்.

அவளைப் பார்த்து அவன் தான் அதிர்ந்தான்.

“என்ன இவங்க..?இப்படி இருந்தா நான் எப்படி விசாரிக்கிறது..? என்று எண்ணியவன்…

“ஐ ஆம் குமரன்…சிபிஐ ஆபீசர்…உங்க கணவர் கேசை நான் தான் விசாரிக்கிறேன்..! என்றான் அவனாக.

அவள் கல்லோ..மண்ணோ என்று பார்த்து வைக்க…

“உங்க கணவர் இறப்புல உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருக்கா..? என்றான்.

“இல்லை.. என்பதைப் போல் அவள் தலை ஆடியது.

“உங்க கணவரை நீங்க விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா..? என்றான்.

“ஆமாம்..! என்பதை போல் தலையை ஆட்டினாள்.

“உங்களுக்குள்ள உறவுமுறை சுமூகமா தான இருந்தது…? என்று அவன் கேட்க…அவனைப் பார்த்து முறைத்தாள் சர்வா.

அவள் முறைப்பைப் பார்த்து சுதாரித்தவன்..ஐ மீன்…உங்களுக்கு எந்த சண்டையும் இல்லை தான….அதைத் தான் கேட்க வந்தேன்..! என்றான்.

“இல்லை..! என்றாள் வாய் திறந்து முதன் முறையாக.

“ஹப்பா…குரல்ல என்ன ஒரு அழுத்தம்..! என்று அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

“உங்களுக்கு திருமணம் முடிந்து  எத்தனை நாள் ஆச்சு..?

“இரண்டு மாசம்..!

“அவருக்கு மூச்சு பிரச்சனை இருந்தது உங்களுக்குத் தெரியுமா..? என்றான்.

“தெரியும்..

“எப்போ தெரியும்..!

“இப்போதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் தெரியும்..! என்றாள்.

“அவர் சரியா மாத்திரை எடுத்துப்பாரா..? என்றான்.

“ம்ம் எடுத்துக்குவார்… என்றாள்.

“நீங்க தான் குடுப்பிங்களா..? என்றான்.

“இல்லை…அதெல்லாம் அத்தையே பார்த்துப்பாங்க..! என்றாள்.

“ஏன் ஒரு மனைவியா அது உங்க கடமை தானே..! என்றான்.

“ஆண்களுக்கு வேலை செய்ய மட்டுமே பெண்கள் பிறக்கவில்லை.. என்றாள் விட்டேறியாய்.

“நான் ஆண்களுக்கு சொல்லவில்லை…உங்க கணவருக்கு தான் கேட்டேன்.. என்றான் விடாமல்.

அவனைப் பார்த்து படு பயங்கரமாக முறைத்தவள்…அதைப் பத்தி ஏதும் பேசவில்லை.

“நான் போகலாமா..? என்றாள்.

“ஓகே..நீங்க போகலாம்..வேற  ஏதாவது தேவைன்னா..நானே வருவேன்… என்றான் அவளைப் பார்த்துக் கொண்டே இரு பொருள் பட..

“உங்க கடமையை நீங்க செய்ய..இங்க தடையேதும் இல்லை.. என்றாள் அவளும் பொருள்பட.

அசந்துவிட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.அமைதிக்குள் எவ்வளவு அழுத்தம் உள்ளது என்பதை கண் கூடாகக் காண்கிறான்.

அவளோ..அவனை சட்டை செய்யாது அவள் அறைக்குத் திரும்பிவிட்டாள்.

அவனால் தான் தாங்க முடியவில்லை.இந்த நிலையிலும் ஒரு பெண்ணைப் பார்த்து எனக்கு இப்படி ஒரு எண்ணம் வரலாமா..?அதுவும் அவள் இருக்கும் சூழ்நிலையில்..? என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.

ஆனால் அவனுக்கு புரியவில்லை..அந்த காதல் உணர்வைப் பற்றி…

நிரந்தரமான நினைவுகளைக் கொடுப்பதில் காதலுக்கு இணை இங்கு வேறு ஏதும் இல்லை…என்பதை அவன் அறியும் காலம் விரைவில் வருமோ..?

Advertisement