Advertisement

பௌர்ணமி 7:

அன்றுதான் செந்தில் குமரன் அவளை இறுதியாகப் பார்த்தது.அதற்கு பிறகு ஒரு கேஸ் விஷயமாக அவன் பக்கத்து மாநிலம் சென்று வர…அதற்குள் மீனாட்சிக்கும் திருமணம் முடிந்திருந்தது.

தன் மனதில் உள்ள காதலை எப்படியாவது அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணி அவளைத் தேடித் போன குமரனுக்கு கிடைத்த தகவல் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

என்னவென்று வெளியில் சொல்ல முடியாத ஒரு உணர்வு அவன் தொண்டையை அடைக்க…அந்த நிமிடங்களில் அவன் வெகுபாடு பாட்டுப் போனான் என்பதே உண்மை.

சொல்லாத காதலுக்கு மதிப்பு அதிகம் என்பதைப் போல….அவனின் காதலும் சொல்லப்படாமல்…அவன் மனதிலேயே புதைக்கப்பட்டது.அவளை மறக்க வேண்டும் என்று என்னும் தருணங்களில் எல்லாம் அவன் செத்துப் பிழைத்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

அதுவரை காதல் தானே..என்று சாதரணமாக நினைக்கத் தோன்றிய நினைவு..அவள் இல்லை என்று ஆனவுடன்..காதல்…என்று நினைக்கத் தோன்றியது.

தன் மனதை தேற்றிக் கொண்டு..தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தவனின் கண்களில் அவள் இப்படிப்பட்ட கோலத்திலா விழ வேண்டும்.

திருமணத்திற்கு பிறகு அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்று அவன் எண்ணிக் கொண்டிருக்க…

அவனுடைய சந்தோசம்…அங்கே துக்கமாய் அமர்ந்திருப்பதை தான் அவன் பார்த்தான்.ஏதோ கேஸ் என்று எண்ணிப் போனவனுக்கு…அங்கே மனம் கவர்ந்தவள் மாலையை இழந்து நிற்கும் கோலம் கண்டு கேட்கவா வேண்டும்.

அன்பே..ஆருயிரே..! என்று வசனம் பேசவில்லை.நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று அவளிடம் உருகவில்லை..என்னை விட்டு போய்விடாதே என்று அவளிடம் கதறவில்லை..ஆனாலும் அவள் கோலம் கண்டு துடித்தது அவனுக்கு.உள்ளுக்குள் கதறினாலும்..தன் பணியின் பொருட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு.

அவளையே எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை.மொட்டை மாடியில் நிலவை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.அன்று பௌர்ணமி..முழு நிலவின் வெளிச்சமும் அங்கே தெரிய…அதில் என்னவோ சர்வ மீனாட்சியின் அழுத முகம் ஒரு புறமும்,திடமான முகம் ஒரு புறமும் மாறி மாறி தோன்றி..அவனை அலைகழித்தது.

விடிந்தால் சேகர் சம்பந்தப்பட்ட கேஸ் பைலை அவன் முடித்து ஒப்படைக்க வேண்டும்.சந்தேகமில்லாமல் அவன் மூச்சுத் திணறி இறந்தது உறுதியாகி இருந்தது.இருந்தாலும் குமரனின் மனதின் ஒரு மூளையில் ஒரு சின்ன சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

ஆனால் அதை எப்படி உறுதிப்படுத்துவது என்று தான் அவனுக்குத் தெரியவில்லை.

பின் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாய்…அங்கிருந்து எழுந்தான். இப்போதெல்லாம் மனதில் ஒரு வெறுமை தோன்றிக் கொண்டே இருக்கிறது.இனிமேலும் அது தோன்றுமா என்றால் தெரியவில்லை அவனுக்கு.

அதே நினைவுடன் அவன் தூங்க போக..அதே பௌர்ணமி நாளில்.. இன்னொரு ஜீவனும் உறங்காமல் நிலவைப் பார்த்து வெறித்துக் கொண்டிருந்தது.சர்வ மீனாட்சி தான்.

தன் வாழ்க்கை முடிந்து போனதாய் அவள் நினைக்கவில்லை.எதையோ சாதித்த உணர்வு அவளுக்குள்.

தன் பூவும் பொட்டும் போனது அவளுக்கு பெரிது என்றாலும்…நியாய வகையில் அது அவள் கொடுத்த விலை.மனம் முழுவதும் வெறுமை இருந்தாலும்…ஏதோ ஒரு மூலையில் நிம்மதி.அந்த உணர்விற்கு பெயர் என்னவென்று அவளுக்குத் தெரியாது.ஆனால் நடந்தது என்னவென்று அவளுக்கு மட்டுமே தெரியும்.

அவள் நினைவுகள் தனது திருமண கோலத்தை நோக்கி பின் செல்ல….

எல்லா பெண்களையும் போல்…பல கனவுகளுடன் தான் அவளும் தன் கல்யாண வாழ்க்கையைத் தொடங்கினாள்.

தொடங்கினாள் என்று சொல்வதை விட..தொடங்க நினைத்தாள்.ஆனால் அவளின் நேரம் செய்த சதியோ..இல்லை அவளின் நல்ல நேரமோ என்னவோ…? அனைத்தில் இருந்தும் அவள் பிழைத்துக் கொண்டாள்.

அவளின் கல்யாண தின இரவில்…

“எனக்கு கொஞ்சம் பேசணும்..! என்றாள் மீனாட்சி.

“சொல்லு சர்வா..! என்றான் சேகர்.

ஏனோ சர்வா என்ற பெயர் அவளுக்கு அவ்வளவு பிடித்தமில்லை.சர்வ மீனாட்சி என்று சொன்னால் மட்டுமே அவளுக்கு பிடிக்கும்.

“என்னைய மீனாட்சின்னு கூட கூப்பிடுங்க..! எனக்கு சர்வான்னு கூப்பிட்டா பிடிக்காது..! என்றாள்.

அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தவன்..சரி சொல்லு..! என்றான்.

“இல்லை..எனக்கு ஒரு பத்து நாள் டைம் வேணும்..! கல்யாணம் சீக்கிரமா முடிஞ்சதால…எனக்கு வேற எதையும் யோசிக்க நேரமில்லை..அதான்.. என்று அவள் தயங்க..

அவளின் பேச்சில் கடுப்பானவன்….கொஞ்சம் பொறுமையுடன்…சரி உன் விருப்பம்.. என்றபடி படுத்து விட்டான்.அந்த நிமிடம் ஒரு கணவன் என்ற முறையில் அவ்வளவு பிடித்தது அவளுக்கு.

எல்லா நாட்களும் இப்படியே சென்று விடாது என்று அவள் அறிந்திருக்கவில்லை.

பழைய யோசனையில் இருந்த அவளை மின்னல் கொடியின் அழைப்பு நிஜத்திற்கு திருப்பியது.

“அம்மாடி மீனாட்சி..! என்று அழைக்க..

“சொல்லுங்க..! என்றாள்.ஏனோ அத்தை என்று அழைக்க மனம் வரவில்லை.

“பனி கொட்டுது..உள்ள வாம்மா…! என்று சொல்ல…

“ஆமா..! வெளியவே நின்னா மகாராணிக்கு காய்ச்சல் வந்துடும்..உள்ள வந்துடுங்க ராணி..! என்றாள் நந்தினி இளக்காரமாய்.

“வாயை மூடு நந்தினி..என்று மின்னல்கொடி கடிந்து கொள்ள..

“நீங்க சும்மா இருங்கம்மா…அதான் என் தம்பியவே தூக்கி முழுங்கியாச்சுல..இன்னும் யார் குடியைக் கெடுக்க இந்த வீட்டில் இருக்கா…அவ அம்மா அப்பாகிட்டேயே போக வேண்டியது தான….இல்லை புருஷன் சொத்தை அனுபவிக்கனும் அப்படிங்கிற ஆசை வந்துடுச்சோ என்னவோ..? என்று வார்த்தையால் விளாசித் தள்ள..

“உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம்.நாளைக்கு கேஸ் பைனல்…நான் நாளைக்கு கிளம்பிடுவேன்… என்றாள் வெறுமையாய்.

“என்னம்மா மீனாட்சி..? அவதான் கூறுகெட்ட தனமா பேசுறான்னா..நீயும் பெரிசு படுத்திகிட்டு…அதெல்லாம் உன்னை எங்கயும் போக விடமாட்டேன் நான்.. என்று அவர் உருக..

“அப்ப நான் போய்டுறேன்..! என்றாள் நந்தினி.

“என்ன நந்தினி பேச்சு இது..! என்று அவர் கடிந்து கொள்ள…

“நேத்து வந்த இவளா…இல்லை மகளான்னு முடிவு பண்ணிக்கோங்க..! என்றாள் நந்தினி.

இவர்களுக்கு சிரமம் வைக்காமல் அடுத்த நாள் விடிய…மீனாட்சிக்கு ஏனோ கொஞ்சம் பதட்டமாக இருந்தது.என்னவென்று சொல்ல முடியவில்லை அவளால்.

மதியம் போல்…அவர்கள் வீட்டின் உள்ளே நுழைந்தான் செந்தில் குமரன்.

“வாங்க குமரன்..! என்றார் பாண்டியன்.

“சார்..கேஸ் கிளியர்…மூச்சு திணறல் வந்து தான் உங்க பையன் இறந்திருக்கார்.வேற எந்த காரணமும் இல்லை..அவரை கொலை செய்ற அளவுக்கு யாருக்கும் மோட்டிவ் இல்லை.பேப்பர்ஸ் எல்லாம் கோர்ட்ல சமிட் பண்ணியாச்சு..உங்களைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன்..! என்றான்.

கலங்கிய கண்களை லேசாக துடைத்துக் கொண்ட பாண்டியன்…ரொம்ப நன்றி குமரன்..! என்றார்.

குமரன் வரும்போதே கவனித்து விட்ட மீனாட்சி..வேகமாய் சென்று அவர்கள் பேசுவதை கவனிக்க…அவன் சொன்ன செய்தியைக் கேட்டு யோசனையில் நின்றுவிட்டாள்.

“அப்ப நான் கிளம்பட்டுமா சார்..! என்று கிளம்ப..

“குமரனுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா..! என்று பாண்டியன் சொல்ல…அதனைத் தட்ட முடியாமல்..அவனுக்கு காபி தயாரித்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

“நன்றி.. என்று அவள் கண்ணைப் பார்த்து சொல்ல…அவளால் ஏனோ அவன் கண்ணைப் பார்த்து பேச முடியவில்லை.

“ம்ம்ம்.. என்பதோடு நிறுத்திக் கொண்டாள்.

அவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு கிளம்ப…யாரும் அறியாமல் வேகமாய் அவன் பின்னே சென்றவள்…

“ஒரு நிமிஷம்.. என்றாள்.

அவள் பின்னோடு வருவாள் என்று அறிந்திருந்தான் போலும்..! சின்ன சிரிப்புடனேயே திரும்பினான்.

“எனக்கு உங்களை தனியா பார்த்து பேசணும்..! என்றாள்.

“என்ன விஷயம்..? என்றான் தெரியாதவனாய்.

“முக்கியமான விஷயம்..! என்றாள்.

“இப்பவே பேசணுமா..? இல்லை..! என்று அவன் இழுக்க..

“இல்ல..இங்க இல்ல..! நான் இன்னைக்கு எங்க அம்மா வீட்டுக்கு போய்டுவேன்..நீங்க அங்க வர முடியுமா..? என்று கேட்டு வீட்டு முகவரியை வேகமாக சொல்ல…

“இவள் வீட்டு அட்ரஸ் இவள் சொல்லி தான் எனக்கு தெரியனுமா..? என்று மனதிற்குள் சிரித்தவன்…

“சரி ஈவ்னிங் கண்டிப்பா வரேன்…! என்றபடி சென்றான்.

வாடிய மலரைப் போல் இருந்த அவளை தொடர்ந்து பார்க்கும் சக்தி அவனுக்கில்லை.

போகும் வழி முழுவதும் அவன் மனம் யோசனையில் வெம்பிப் போய் கிடக்க… ஒரு முடிவு எடுத்தவனாய் நேராக தன் வீட்டிற்கு சென்றான்.

“என்ன செந்தில் முகம் ஒரு மாதிரியா இருக்கு..? என்று செல்லம்மா கேட்க..

“அப்பா எங்கம்மா..? என்றான்.

“இப்பதான் ஆபீஸ்ல இருந்து வந்தார்…! என்று சொல்ல..

“உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..! என்றான் முகத்தை சீரியசாய் வைத்துக் கொண்டு.

“உடனே பேசுற அளவுக்கு அப்படி என்ன தலை போற விஷயம் செந்தில்..?என்றபடி ராஜ்மோகன் பின்னால் வந்து நிற்க..

“நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் ம்மா.. என்றான் பட்டென்று.

“செந்திலு..நிஜமாவா..? என்று செல்லம்மா மகிழ…

“ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க..! என்றவன்… மீனாட்சியை சந்தித்தது முதல்..காதல் அரும்பியது..அவளிடம் சொல்லும் முன்பு அவளுக்கு நடந்த திருமணம்,அதற்கு பிறகு அவள் நின்ற கோலம்..என ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் சொல்லி முடித்தான் குமரன்.

“என்ன சொல்றிங்கம்மா..? என்று குமரன் கேட்க..

“என்ன சொல்ல சொல்ற செந்தில்…நீ சொன்ன உடனே சரின்னு சொல்ல…நான் ஒன்னும் சினிமால வர அம்மா இல்லை.நான் நிஜ அம்மாடா..எனக்கு பல விதத்துலயும் யோசிக்கணும்..! என்று செல்லம்மா சொல்ல..

“நல்லா யோசிங்க..! எப்படியும் அவளை சம்மதிக்க வைக்க பல வருஷம் ஆகும்..! அதுக்குள்ள நீங்களும் யோசிச்சு முடிச்சுடுங்க..! ஆனா ஒன்னு..எனக்கு வாழ்க்கைன்னா அது அவ கூட மட்டும் தான்.. என்று உறுதியாக சொல்லிவிட்டு சென்றான்.

“என்னங்க இவன் இப்படி சொல்லிட்டு போறான்..? கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்துலயே புருஷனை பறி  கொடுத்திருக்கா…என்னன்னு தெரியலை..ஜாதகம் சரி இல்லையா..? இல்லை வேற எதுவும் பிரச்சனையா..? இப்படி எதுவும் தெரியாமல் எப்படி சரின்னு சொல்றது..? என்று அவர் புலம்ப..

ராஜ்மோகனும் யோசனைக்கு போனார்.ஒரு பையனைப் பெற்ற தகப்பனின் யோசனை அது.சேகர் நீதிபதியின் மகன் என்பதால்..அவன் இறந்த விஷயம் அவர்கள் தொழில் வட்டாரத்தில் அனைவருக்கும் தெரிந்து தான் இருந்தது.இப்போது மீனாட்சியை தன் மகனுக்கு கேட்டால்…அது பெரிய பிரச்னையை உருவாக்க கூடுமோ  என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

“என்னங்க எதுவும் பேசாமல் இருக்கீங்க..? என்று செல்லம்மா மீண்டும் கேட்க…

“கொஞ்சம் பொறுமையா இரு..! அவனோட விருப்பத்தை அவன் நம்மகிட்ட தான் சொல்லியிருக்கான்.என்ன யேதுன்னு விசாரிப்போம்..! என்று ராஜ்மோகன் அப்போதைக்கு அந்த பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

அறைக்கு சென்ற செந்தில் குமரனுக்கோ…மனதின் ஓரத்தில் ஒரு சின்ன நிம்மதி.எப்படியோ விஷயத்தை பெற்றோரிடம் சொல்லி ஆகிவிட்டது..! இனி மீனாட்சியிடம் தான் பேச வேண்டும்..! என்று நினைக்கும் போது தான்…அவள் தன்னிடம் பேச வேண்டும் என்று சொன்னது நியாபகத்திற்கு வந்தது.

“வீட்டுக்கு வர சொல்லி பேசுற அளவுக்கு என்ன இருக்கு..? என்று அவன் யோசிக்க..சட்டென்று அவன் மூளையில் மின்னல் வெட்டியது.

“ஒரு வேளை விஷயம் அதுவாக இருந்தால்…அதை வைத்தே அவளை மடக்கி,தன் வழிக்கு கொண்டு வர வேண்டும்..! என்று மனதில் திட்டம் தீட்டினான் குமரன்.அது காதல் திட்டம் தான்.அவனின் போலீஸ் மூளை காதலைக் கூட திட்டமாக தீட்டித்தான் நிறைவேற்ற பார்த்தது.

தங்கள் வீட்டிற்கு பெட்டியுடன் வந்து நின்ற மகள் மீனாட்சியைப் பார்த்ததும்…தேவகிக்கு அழுகை தாங்க முடியவில்லை.

“இப்படி உன் வாழ்க்கையை நாங்களே கெடுத்துட்டோமே மீனாட்சி..! என்று அவளைக் கட்டிக் கொண்டு அழ…கோபாலனும் மகளின் நிலை கண்டு ஓய்ந்து போய் அமர்ந்தார்.

“இப்ப எதுக்கு அழுகுறிங்க..? எது நடக்கணுமோ அது தான் நடக்கும்.இதுல யாரும் யாரையும் குத்தம் சொல்ல முடியாது..! என்றாள் விட்டேறியாய்.

“நாங்க யாருக்கும் எந்த பாவமும் பண்ணலையே..? எங்க பொண்ணுக்கா இந்த நிலைமை..? என்று தேவகி விடாமல் புலம்ப..

“அம்மா..! ப்ளீஸ்…இதுக்கு மேல எதைப் பத்தியும் பேசாதிங்க..! கேட்டு கேட்டு எனக்கு பைத்தியமே பிடிச்சுடும் போல..! என்று மீனாட்சி கத்த…அப்போது தான் அவளின் பின்னால் இருந்த மின்னல்கொடியை தேவகி கவனித்தார்.

தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவர்..வாங்க..! என்று முடித்துக் கொண்டார்.சம்பந்தி என்று சொல்லவில்லை.அதையும் மின்னல்கொடி கவனித்தார்.

“நான் எவ்வளவோ சொன்னேன்..! மீனாட்சி தான்..இங்க வந்து உங்க கூட தான் இருப்பேன்னு அடம் பிடிச்சா…அதான் கூட்டிட்டு வந்தேன்..! என்று சொல்ல…

“எங்க பொண்ணை எங்களுக்கே குடுத்துடுங்க..! எங்க கூடவே அவ இருக்கட்டும்.கொஞ்ச நாள் கழிச்சு…அவளுக்கு வாழ்க்கையை அமைச்சு தர வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கு..! என்று தேவகி அழுது கொண்டே சொல்ல…

“நீங்க இது வரை அமைச்சு குடுத்த வாழ்க்கையே போதும்மா…இன்னொரு வாழ்க்கையைப் பத்தி பேசுனா…நான் இந்த வீட்டை விட்டும் வெளியேறிப் போக வேண்டிய நிலைமை வரும்..எப்படின்னு பார்த்துக்கோங்க.. என்று இறுகிய குரலில் சொல்லி விட்டு…””அறைக்குள் சென்று விட்டாள்.

“என் பையனுக்கு தான் மீனா கூட வாழ குடுப்பினை இல்லை.அவ வாழ வேண்டிய பொண்ணு..சீக்கிரம் அவளுக்கு ஒரு நல்லதை நானும் எதிர்பார்க்குறேன்..! என்று மனதார சொன்ன மின்னல் கொடி அவ்வீட்டை விட்டு செல்ல…அவரைப் பார்த்து பிரமித்து நின்றார் தேவகி.

பெண் பார்க்க வரும் போது…அந்தஸ்து வித்யாசம் பேசிய மின்னல் கொடியா..இன்று இப்படி பேசி செல்வது என்ற யோசனையாகக் கூட இருக்கலாம்.

தன் அறைக்கு சென்ற மீனாட்சிக்கு…வெளியே அம்மாவிடம் தான் பேசிய பேச்சு அதிகம் என்று தெரியும்.இருந்தாலும் அப்படி பேசினால் தான் அவரும் வழிக்கு வருவார்.இல்லை என்றால்..அவளுக்கு இன்னொரு வாழ்கையை தேடும் வேலையில் இறங்கி விடுவார் என்று அவளுக்கு நன்றாக தெரியும்.

எதிரில் இருந்த புகைப்படத்தைப் பார்த்தவளுக்கு..துக்கம் தொண்டையை அடைக்க…அழுதாள்..அழுதாள்..அழுது கொண்டே இருந்தாள்.

மீனாட்சி சொன்ன நேரத்திற்கு குமரனால் அங்கு போக முடியவில்லை. கொஞ்சம் தாமதமாகத் தான் சென்றான்.

வீட்டின் காலிங் பெல்லை அழுத்த…தேவகி வந்து கதவைத் திறந்தார்.

“நீங்க..! என்று அவர் யோசிக்க..அவரிடம் என்ன சொல்வது என்று ஒரு நிமிடம் யோசித்தான் குமரன்.

“நான் சேகர் கேஸ் விஷயமா மீனாட்சி கிட்ட கொஞ்சம் பேசணும்..! என்றான்.

“வாங்க தம்பி..ஆனா உங்களை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே..! என்று அவர் யோசிக்க…

“இந்த கேசை ஹேண்டில் பண்ண ஆபீசர் நான் தான்..! என்று அவன் சொல்ல..

“இல்லை தம்பி அதுக்கு முன்னாடி..! என்று தேவகி யோசிக்க…

“நான் பிரியாவோட அண்ணன்…! ஒரு முறை என்னை பார்த்து இருக்கீங்க..! என்றான்.

“ஆமாம் தம்பி..! இப்ப நியாபகத்துக்கு வந்துடுச்சு..! என்ற தேவகி….தன் மகளை அழைத்தார்.

அழுது வீங்கிய முகத்துடன் வெளியே வந்த மீனாட்சியைப் பார்த்த தேவகிக்கு வேதனை என்றால்,குமரனுக்கு உயிரே பதறியது.

“இந்த தம்பிக்கு ஏதோ உன்கிட்ட பேசணுமாம் மீனாட்சி..! என்றவர்.. பேசிகிட்டு இருங்க…குடிக்க ஏதாவது கொண்டு வரேன் தம்பி..! என்றபடி நகந்து விட்டார் தேவகி.

“நான் சொன்னதுக்காக..என்னைப் பார்த்து பேச வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் சார்…! என்றாள் பார்மலாய்.

“என்ன விஷயம்..! என்றான் நேரிடையாய்.

“இந்த கேஸ் கம்ப்ளீட்டா முடிஞ்சதா..இல்லை யாரும் வந்து ரீ ஒப்பன் பண்ணுவாங்களா..? என்றாள் விட்டேறியாய்.

“கம்ப்ளீட் ஸ்டேட்மென்ட்.இனி கிளறுவதற்கு ஒண்ணுமில்லை..! என்றான்.

“நிஜமாவா..? என்றாள் நம்ப மாட்டாமல்.

“நிஜம் தான்..! இதைப் பேச தான் வர சொன்னிங்களா…ஆனா இதே பதிலை தான நான் அங்கயும் சொன்னேன்..! என்று குமரன் புரியாத மாதிரி கேட்க…தேவகி டீயுடன் வந்தார்.

“எடுத்துக்கோங்க..! என்று மீனாட்சி சொல்ல..அவளையே யோசனையுடன் பார்த்தபடி…டீயை எடுத்து உறிஞ்சினான்.

“பிரியா எப்படி இருக்கா..? என்றாள்.

“ம்ம்..நல்லா இருக்கா..ஹாஸ்ட்டல்ல தங்கி படிச்சுட்டு இருக்கா..! என்றான்.

“மகா எப்படி இருக்கா..? என்று அவனும் பதிலுக்கு கேட்க…ஒரு நிமிடம் அவனை யோசனையாய் பார்த்தவள்..ம்ம் நிம்மதியா இருக்கா..! என்றாள் மீனாட்சி.

அவன் புரிந்தும் புரியாமல் பார்க்க..அவளோ அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

Advertisement