Advertisement

                                                                                4

     அவள் செய்துவிட்டுப் போன அமர்க்களத்தில் தலையை ஒரு உலுக்கு உலுக்கிக் கொண்டு சீரானவன்,

     “இவளுக்கு வர வர கொழுப்புக் கூடிப் போச்சு! வீட்ல இருக்கிறவங்களும் கண்டதையும் பேசிப் பேசி இவ மனசைக் கெடுத்து வச்சிருக்காங்க! இது எல்லாத்துக்கும் இன்னிக்கே ஒரு முடிவு கட்டுறேன்!” என்றபடியே வீட்டினுள் நுழைந்தான் கண்ணதாசன்.

     வீட்டின் பின் வாயில் வழியே அவன் நுழைவதைப் பார்த்தவள், அவனையே வெட்கச் சிரிப்புடன் பார்த்தபடி நண்டைச் சுத்தம் செய்ய,

     “கொன்னுடுவேன்டி உனைய!” என்று மிரட்டிவிட்டே அவளைக் கடந்து சென்றான் அவளின் அன்பிற்குரியவன்.

     சில நிமிடங்களில், “எம்மா நண்டை சுத்தம் பண்ணிக் கழுவி எடுத்திட்டேன். மசாலா எடுத்து வச்சியானா அம்மியில அறைச்சுக் கொண்டார்றேன்!” என்று அவள் கேட்க,

    “அதோ எடுத்து வச்சிருக்கேன் பாருடி” என்று வைரம் சொல்ல இரு பெண்மணிகளும் சேர்ந்து அடுத்த அரை மணி நேரத்தில் சாதம், ரசம், நண்டு மசாலாவை என்று இரவு சமையலைச் செய்து இறக்கினர்.

     “எம்மா, ஒரு சட்டில அயித்தை வீட்டுக்கும் போட்டுக் கொடு” என்று சின்னவள் கேட்க,

     “நீதான் வெரசா எடுத்துப் போட்டுக் கொண்டு போயேன்டி. மருது அண்ணன் சாப்புட்டுடப் போறாரு! அவருக்கும் நண்டு புடிக்கும்ல” என்றார் வைரம்.

     “ஆமாம்மா!” என்றவள் நொடிகளில் தங்கள் மாமன் வீட்டிற்குக் கொண்டு போய் கொடுத்துவிட்டு வந்து அவன் அருகே அமர்ந்து கொண்டாள் இரவு விருந்தை இனிக்கும் விருந்தாக்க. ஆனால் அவனோ, அதைக் கசப்பானதாக மாற்ற அனைவரின் நெஞ்சிலும் தீயை அள்ளி ஊற்றினான் பாதிச் சாப்பாட்டின் நடுவில்.

     “அத்தை இவளுக்கு எப்போ கல்யாணம் முடிக்கப் போறீங்க?!” என்று ஆரம்பித்தவனைப் பார்த்து அனைவரும் குறும்பாய்ச் சிரிக்க,

      “என்னடா அம்புப்புட்டு அவசரமோ எம்மருமவளைக் கட்டிக்க?!” என்றார் தங்கரத்தினம் வாய்க் கொள்ளாச் சிரிப்புடன்.

     “ப்பா! முதல்ல நீங்க இப்படி எல்லாம் பேசுறதை நிறுத்துங்க! உங்க எல்லாராலயும் தான் இவ கண்டதையெல்லாம் யோசிச்சுக் கண்டதை எல்லாம் செய்யுறா!” என்றான் எரிச்சல் மண்ட.

     “என்ன என்னடா பேச்சு பேசுற நீயி?! கட்டிப் போறவன்னா அப்படித்தான் சொல்லுவோம்” என்று தந்தை சொல்லச் சொல்ல,

     “ச்சே! திரும்பத் திரும்பக் கட்டிக்கப் போறவ கட்டிக்கப் போறவன்னு சொல்லாதீங்க!” என்றான் சாப்பாட்டுக் கைகளை உதறிக் கொண்டு.

     அவன் சொன்ன விதத்தில் அவள் கண்கள் சட்டெனக் கலங்கியே விட, அதைப் கேட்ட வீரபாண்டி, வைரம், ரத்தினம் மூவருக்கும் நெஞ்சில் இடியை இறக்கினார் போல் இருந்தது.

     “என்னய்யா பேசுற?!” என்றார் வைரம் அப்போதும் அவன் சொல்ல வருவதை புரிந்து கொள்ள முடியாதவராய்.

     “எனக்கும் அவளுக்கும் கல்யாணம்ங்கிற பேச்சை முதல்ல விட்டு ஒழிங்க! அவளுக்கு சீக்கிரம் ஒரு நல்ல பையனா பார்த்துக் கட்டி வைக்கிற வழியப் பாருங்க. நீங்களா பார்த்தாலும் சரி இல்லை நானே ஏற்பாடு பண்றதுனாலும் சரி” என்று அவன் முடிக்க, அவள் சட்டென பாதிச் சாப்பாட்டில் கைகளை உதறிக் கொண்டு எழுந்தாள்.

     மகள் பாதிச் சாப்பாட்டில் எழுவதைத் தடுக்கக் கூடத் தோன்றாமல் பெரியவர்களும் அவன் சொன்ன வார்த்தைகளில் கதிகலங்கிப் போய் அமர்ந்திருக்க,

     அவனை எரிக்கும் பார்வை பார்த்தவள், “ஏன் பட்டணத்துல எவளையாச்சும் கட்டிக்க முடிவு பண்ணிட்டீங்களோ?!” என்றாள் சீற்றமாய்.

     “ஏய் கண்டதையும் பேசின, பல்லை உடைச்சிடுவேன்டி” என்றான் அதற்கும் மிரட்டலாய்.

     “பொறவென்னடா! வேற எப்படி நெனைப்போம் நாங்க?! நீ இப்படிப் பேசுறதைக் கேட்டு?!” என்றார் ரத்தினம்.

     “ஐயோ அப்பா! என்னால அவளை பொண்டாட்டியா எல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாதுப்பா! அவளை, அவளைக் கட்டிக்கிட்டா வாழ்க்கையில எதுவுமே மாறாது! இதே மூஞ்சியைப் பார்த்துக்கிட்டே எப்போவும் போல ஒரே மாதிரி ஓடிப் போயிடும் வாழ்க்கை!” என்றவனை, வைரமும், வீரபாண்டியும் மனம் நோகப் பார்க்க, அவளோ அவன் என்ன சொல்ல வருகிறான் என்றே புரியாமல் பார்த்திருந்தாள்.

     “காலையில தானேய்யா சொன்ன இந்த அன்புக்காகத்தான் வாராவாரம் ஓடியாந்துறேன்னு! இப்போ இந்த வாழ்க்கை மாறணும்னு ஆசைப் படுறியா?!” என்றார் வைரம் உள்ளே சென்ற குரலில்.

     “ஐயோ அத்தை! இப்போவும் சொல்றேன் இந்த உலகத்துலேயே எனக்கு உசந்தது உங்க எல்லோருடைய அன்பும்தான். ஆனா அவளை ஒரு அத்தைப் பொண்ணா தோழியா மட்டும்தான் என்னாலப் பார்க்க முடியுது! அதைத் தாண்டி என்னால யோசிக்கக் கூட முடியலை!” என்று அவன் சொல்ல, அவள் அவனை ஏகமாய் முறைத்தாள்.

     “என்னடா பேசுற நீ?! எங்க பாசம் உனக்கு வேணும்! ஆனா எங்க ஊட்டுப் பொண்ணு உனக்கு வேணாமா!” என்று ரத்தினம் சீற,

     “நான் சொல்ல வரதை நீங்க யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க! நான், நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்குப் புரியலை!” என்று அவனுமே அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று புரியாமல் திணற,

     “அ அப்போ என்னதான்ய்யா சொல்ல வர்ற?!” என்றார் வைரம் மனதைக் கல்லாக்கிக் கொண்டு.

     “என்னால அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறதை எல்லாம் யோசிச்சுக் கூடப் பார்க்க முடியாது அத்தை. ஆனா ஒரு மாமனா அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு!” என்று அவன் நிறுத்த, வீரபாண்டி அவனை அமைதியாய் வெறிக்க,

      ரத்தினம் அவனை ஏகபோகமாய் முறைக்க, வைரமோ, அவனைக் கண்கள் கலங்கப் பார்த்திருக்க, அவளோ, அவனுக்காய் ஆசை ஆசையாய் சமைத்த நண்டு மசாலாவை எடுத்து அவன் தலையிலேயே கொட்டிக் கவிழ்த்து,

      “உன் கடமை உணர்வுல தீயை வைக்க!” என்றுவிட்டு வேகவேகமாய் அங்கிருந்து நகர்ந்தவளை, சில நொடிகள் என்ன நடந்தது என்று புரியாமல் பேந்த பேந்த விழித்தபடி அமர்ந்திருந்தவனைப் பார்க்க ரத்தினத்திற்குச் சிரிப்பாகவும், வைரத்திற்குப் பாவமாகவும், வீரபாண்டிக்கு வேதனையாகவும் இருந்தது.

     “எவ்ளோ திமிருடி உனக்கு?!” என்று அவளை அடிக்கக் கையோங்கிக் கொண்டு எழுந்து அவள் பின்னே செல்லப் பார்த்தவனை,

     “நில்லுடா! அவமேல கையோங்க உனக்கு என்ன உரிமை இருக்கு?!” என்றார் இப்போது தங்கரத்தினம் குரல் உயர்த்தி.

     “என்ன எனக்கு உரிமை இல்லையா?!” என்று அவன் எகிற,

     “அதான் அவளை வேணாம்னு சொல்லிட்டியே! பொறவு எப்படி உரிமை இருக்கும்?!” என்றார் மீண்டும் அவனை வெறுபேற்றும் விதமாய்.

     “பொண்டாட்டியாதான் வேணாம்னு சொன்னேன்! அவ என் அத்தை மகங்கிற உரிமை என்னிக்கும் யார் இல்லைன்னாலும் போகாது!” என்றுவிட்டு எழுந்து, அவள் செய்த வேலையால் அந்நேரத்திற்கு  கொல்லைப்புறம் சென்றான் தலையில் கொட்டி இருந்த குழம்பைக் கழுவ! அவன் பேசிவிட்டுச் செல்வதைப் பார்க்க அங்கிருந்தவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை!

     இவன் புரிந்து பேசுகிறானா? புரியாது பேசுகிறானா? என்று புரியாமல் தவித்தார்கள் அனைவரும்.

     அவளோ இருட்டிய நேரம் என்று கூட பார்க்காமல் தங்கள் வயக்காட்டை நோக்கி வேகமாய் நடையை எட்டிப் போட்டுக் கொண்டிருந்தாள்.

     ரத்தினமும் வைரமும் ஓரளவு மனதைத் தேற்றிக் கொண்டு எப்படியாவது அவனைச் சம்மதிக்க வைத்துவிடலாம் என்று தைரியமாகத்தான் இருந்தனர். ஆனால் வீரபாண்டிக்கோ ஏதோ மனத்தைக் குடைந்தது. மகளைப் பற்றிய கவலையில் அவர் அப்படியே சோர்ந்து போய் அமர்ந்துவிட்டார்.

     மகள் அவன்மேல் வைத்திருக்கும் கொள்ளைப் பிரியமும், அவன் அவள் மேல் வைத்திருக்கும் அன்பும் அவருக்குத் தெரியும்தானே! திடீரென இவன் இப்படி ஒரு முடிவைச் சொல்லுவான் என்று அவர்கள் யாருமே கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!

     “என்னங்க ஏங்க இப்படி கலங்கிப் போய் உட்கார்ந்துட்டீங்க! அவன் பேச்சல்லாம் ஒரு பேச்சா! எல்லாம் சரியாப் போயிரும்ங்க!” என்று கணவரின் தோள் தொட்டு ஆறுதல் உரைத்த வைரம்,

     “என்ன அண்ணே பார்த்துட்டு இருக்கீங்க?! சொல்லுங்க அவர்கிட்ட!” என்றார் அண்ணனைத் துணைக்கு அழைத்து.

     “அட என்ன மச்சான் நீங்க?! அவன் ஏதோ அவசரத்துல புரியாம  சொல்லிட்டுப் போறான். அதைப் போய் நீங்க பெருசா எடுத்துக்கிட்டு! அவன் கண்ணு முன்னாடி அவளை இன்னொருத்தனுக்கு கட்டிக் கொடுக்கறதைப் பார்த்தா அவனே சும்மா இருக்க மாட்டான். என்னமோ கிறுக்கன் கணக்கா உளறிட்டுப் போறான். அவன் சொன்னக் காரணத்தைப் பார்த்தீங்களா?!” என்று சிரிக்க, அப்போதும் வீரபாண்டியால் இதைச் சாதரணமாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை!

     முகம் வாட எழுந்து சென்ற கணவரைப் பார்க்க வைரத்திற்கு கவலைத் தொற்றிக் கொண்டது.

     ‘காலையில வூட்ல யாரும் இல்லாதப்போ மறுபடியும் அவன்கிட்ட பேசிப் பாப்போம்!’ என்று எண்ணிக் கொண்டார் வைரம்.

     சிறிது நேரத்தில் ஆண்கள் இருவரும் பாய் போட்டு கூடத்தில் உறங்கிவிட, கோபத்தில் வெளியே சென்ற மகள் இன்னுமும் வீட்டினுள் வராததால்,

     “எங்க போனா இந்தப் பொண்ணு?!” என்று எண்ணியபடியே எழுந்து சென்று வீட்டின் பின்புறம் தேடினார் வைரம். அங்கு அவளைக் காணததால், மாடிக்குச் சென்றிருக்கிறாளோ என்று போய் பார்க்க அங்கும் அவளைக் காணவில்லை!

     “ஐயோ எங்க போனா இந்தப் பொண்ணு?!” என்று பதட்டமானவர்,

     “கவி… கவி..!!” என்று குரல் கொடுத்துப் பார்க்க, அவர் குரல் வெளியே பாத்ரூமிற்கு எழுந்து வந்த அவனது செவிகளில் தான் விழுந்தது.

     ‘என்ன ஆச்சு அத்தை இந்நேரத்துல அவளைத் தேடுறாங்க! அப்போ போனவ இன்னும் வரலையா?!’ என்று யோசித்தபடியே அத்தையின் குரல் வந்த இடம் நோக்கி அவன் விரைந்தான்.

     “எய்யா கண்ணா இந்தப் பொண்ணு எங்க போனான்னே தெரியலையா! அண்ணனுக்கும், அவருக்கும் தெரிஞ்சா பதறிப் போயிடுவாங்க!” என்று வைரம் கலக்கத்துடன் சொல்ல,

     “பதறதா பதறாத அத்தை! நான் போய் பார்க்கிறேன்!” என்றவன், கையில் தனது போனை எடுத்துக் கொண்டு அங்கும் இங்குமாய் தேடி அலைந்தான் பயத்தில் நெஞ்சம் படபடக்க!!

    கொல்லைப் புறம், தொழுவம், தங்கள் தெரு முனையில் அமைந்திருந்த கோவில் என்று சுற்றித் திரிந்தவனுக்கு சட்டென ஏதோ நினைவு வர, வேகமாய் நடைகளை எட்டிப் போட்டான்.

      அவன் எதிர்பார்த்தபடியே அவள் அங்கே தான் இருக்கிறாள் என்பது  தூரத்தில் இருந்தே தெரிந்துவிட,

     “திமிரு பிடிச்சக் கழுதை! இந்நேரத்துக்கு எங்க வந்து உட்கார்ந்திருக்கா பாரு?!” என்று பொரிந்தபடியே, அத்தைக்கு போனைப் போட்டவன், அவள் இங்கே வயக்காட்டில் தான் இருக்கிறாள் சென்று அவருக்குச் சொல்லிவிட்டு, அவளை நெருங்கினான்.

     அவன் நடந்து வரும் சலசலப்புக் கேட்டு, “யாரு இந்நேரத்துக்கு இங்க?!” என்று அவள் குரல் கொடுக்க, அவன் பதில் கொடுக்காமல் முன்னேற, அவள் சற்று ஊன்றி கவனிக்கவும் அவன்தான் என்று கண்டு கொண்டாள்.

     “ஏனாம்! இம்புட்டு அக்கறைப் பொங்கி வழியுது!” என்று சிலிர்ப்புடன் திரும்பிக் கொண்டவள் இருந்த இடத்தின் அருகே சென்றவன், பிடிப்புக் கொம்பில் கால் வைத்து, அவள் அமர்ந்திருந்த காவலுக்காகப் போடப்பட்டிருக்கும் குடிலில் தானும் ஏறி அமர்ந்தான்.

     “ஏன்டி இந்நேரத்துக்கு இங்க வந்து உட்கார்ந்திருக்கியே எவனாவது வந்து வம்பிழுத்தான்னா என்னடி ஆகிறது?!” என்று அவன் அக்கறையோடு கேட்க,

     “ரொம்பத்தான் அக்கறைப் பொங்குது! வம்பிழுக்குற கைய வெட்டி வீசிடுவேன்னு தெரியாதாக்கும்!” என்றவளின் முகத்தைத் தொட்டுத் திருப்ப, அவள் பட்டென அவன் கையைத் தட்டி விட்டாள்.

     “என்னடி ரொம்பத்தான் சிலிர்த்துக்குற?!” என்று அவனுமே கோபத்துடன் கேட்க,

     “இப்போ எதுக்கு இங்க வந்த!” என்றாள் கடுப்பாய்.

     “ம் அத்தை உன்னைக் காணலைன்னு தேடி பயந்து போய் கெடந்துச்சு! அதான் வந்தேன்” எனவும்,

     “ஓ! அப்போ கூட நீ அக்கறையோட தேடி வரலை!” என்றவளை,

     “அக்கறை இல்லாமலாடி நீ எங்க இருப்பன்னு சரியா கணிச்சு வந்தேன்” என்றான் அவனும்.

     “ஓ! அதெல்லாம் கூட நியாபகம் இருக்கா உனக்கு?!” என்றாள் நக்கலாய்.

     “ரொம்பப் பண்ணாதடி! எழுந்து வா வீட்டுக்கு!” என்றான் அவள் கைபிடித்து.

     “சும்மா சும்மா தொடாதேங்கல்ல!” என்றாள் சீற்றமாய்.

     “நான்தான்டி உன்னைத் தூக்கி வளர்த்தவனே!” என்றான் அவனும் காட்டமாய்.

     “ஆமாம்! அதான் தூக்கிப் போட்டுட்டியே கொஞ்ச நேரத்துக்கு முன்ன!” என்றாள் உள்ளம் நொறுங்க!

     “டீ! உனக்குப் புரியுதா இல்லையா நான் சொல்ல வர்றது!” என்று அவனும் நொந்து போய் கேட்க,

     “புரியலை சாமி புரியலை! ஒண்ணு புடிக்கலைன்னு சொல்வாங்க! இல்லை வேற ஒருத்தியைப் புடிச்சிருக்குன்னு வேணாம்பாங்க! இல்லை கூடப் பொறந்தவளா நினைச்சேன்னு வேணாம்பாங்க! ஆனா நீ?! நீ என்னமோ புதுசு புதுசா இல்லை வெளக்கம் கொடுக்க!!” என்று முறைத்தவளைப் பார்க்க அவனுக்கு ஆயாசமாய் வந்தது.

     “ஏய் கவி!! இங்க பாரு. மாமாவைப் பாருடி!” என்று அவள் முகத்தைத் தன்புறம் திருப்பித் தன் கண்களை நேருக்கு நேர் சந்திக்க வைத்தவன்,

     “இதெல்லாம் அவங்க சின்ன வயசுல பேசி வச்சதுடி! அது புரியாம நீ இன்னும் கிறுக்குத்தனமா அதையே நினைச்சுக்கிட்டு! இங்க பாரு! எனக்குன்னு தனிப்பட்ட ஆசை இருக்குடி! என் லைப் ஸ்டைலுக்கு இந்த ஊர்ல எல்லாம் என்னால வாழுறது நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது! சிட்டி பொண்ணா பார்த்துக் கட்டினாத்தான் நான் அங்கேயே வாழ முடியும்!” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள், பட்டென அவனைத் தள்ளிவிட்டு அங்கிருந்து எழுந்தவள்,

    “என்னை மீறி எவளையாச்சும் கல்யாணம் பண்ணிடுவியா நீ?! அதையும் மீறி நீ கட்டிக்க நினைச்சா, நீ கட்டிக்க நினைக்கிறவளுக்குக் கழுத்து இருக்காது பார்த்துக்கோ!” என்று சீறியபடி இடுப்பில் செருகி வந்திருந்த அரிவாளைத் தூக்கிக் காண்பித்து விட்டு அவள் விறுவிறுவென அங்கிருந்துச் செல்ல, பெருமூச்சொன்றை எறிந்தவன்,

     ‘இவங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது! மொதல்ல இவளுக்கு மாப்பிளையைப் பார்க்க வேண்டியதுதான்!’ என்று முடிவெடுத்துக் கொண்டான் மனதோடு.

     மறுநாள் அவர்கள் வீட்டின் ஞாயிறு எப்போதும் போல் கலகலப்பாக அல்லாமல், ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளாமல், அவளின் துடுக்குத்தனம் இல்லாமல் வெறுமையாய் கழிந்தது. அவன் அன்றைய இரவே ஊருக்குக் கிளம்ப,

     காலையில் பேசியும் அவன் பிடிகொடுககததால், கிளம்பும் சமயமும் வைரம் மனது கேளாமல்,

     “தம்பி எதுக்கு யோசிச்சு முடிவு பண்ணுயா! நீதான் உலகம்னு நாங்க எல்லோரும் இருக்கோம்!” என்று வைரம் அவனிடம் சொல்ல,

     “ஏம்மா! நீ எதுக்கு கெஞ்சிக்கிட்டு கெடக்க! பேசாமா உள்ள வா!” என்று கத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் கவி.

     அவனுக்குமே இவர்கள் செய்யும் அலும்பலில் ஆத்திரம் தலைகேறி இருந்தது.

     ‘எடுத்து சொன்னாப் புரிஞ்சிக்கணும்! கொஞ்சம் கூட நம்மைப் பேச்சைக் காதுலையே வாங்கலை இவளும் இவ மாமனும்! ஊருக்கு வந்தாத்தானே இந்த பேச்சை எடுப்பாங்க! இனி ஊருக்கு வரேனா பாருங்க!’ என்று எண்ணிக் கொண்டு அவன் வேகமாய்க் காரைக் கிளப்ப, திண்ணையில் அமர்ந்திருந்த மருது, வீரன், இருவரும் அவன் முடிவை ஏற்கவும் முடியாமல், சரியாகிவிடும் என்று விட்டுத் தள்ளவும் முடியாமல் இருவரை ஒருவரை கவலையுடன் பார்த்துக் கொண்டனர்.

     “அட என்னப்பா நீங்க அவன் பேச்செல்லாம் ஒரு பேச்சுன்னு இப்படி முகத்தை வெசனமா வச்சுக்கிட்டு! தை பொறக்கட்டும் ரெண்டுக்கும் நிச்சயத்தை முடிச்சிப்புடுவோம்!” என்றார் கொஞ்சமும் அசராமல்…

                          -உள்ளம் ஊஞ்சலாடும்…     

         

         

       

Advertisement