Advertisement

                              ஓம் நமச்சிவாய
தாளம் 9
சாந்தியும் வள்ளியும் முன்னால் வாசலில் நின்று இருந்த இருவரையும் பார்த்தவர்கள்  “என்ன  நம்ம வீட்டுக்கு வராம இங்க இருக்குற??” என்றார் சாந்தி ஜெய்யை பார்த்து. 
“அவன் தான் பொண்ணுக்கு அண்ணன் அப்ப இங்க தான இருக்கனும் சாந்தி” நல்லசிவம் சொல்ல  “என்ன சித்தப்பா??” என்றார் சாந்தி அன்னத்தை பார்த்த படி.
“சாந்தி முகூர்த்த நேரம் முடிஞ்சுடும் எல்லாரும் உள்ள வாங்க மத்த பேச்ச அப்பறம் பேசலாம்” என்று  அனைவரையும் அழைத்தார் நல்லசிவத்தின் மனைவி. அடுத்த சடங்குகள் தொடங்க, சாந்திக்கு அடுத்து பேசவோ கேட்கவோ நேரம் இல்லாமல் போனது. 
அன்னம் தான் அனைத்தையும் செய்தாள். இல்லை இல்லை செய்ய வைத்தான் ஜெய். மற்றவர் வீடு இரண்டாம் பங்காளி என்ற நினைவு எல்லாம் இல்லை அன்னம் தான் முக்கியம் ஆனது இங்கு.  
நல்லசிவமும் அவர் மனைவியும் சொல்ல ஜெய்யும் அன்னமும் முறையாக செய்தனர். விசாகாவிற்கு கல்யாண வளையல் போட்டு முடித்ததும் நல்லசாமி மனைவி அடுத்து அன்னத்தை “கை நீட்டும்மா” என்றிட சாந்தி வாய் விட்டார். “குடும்பமா வாழ்ற பொண்ண  போட சொல்லுங்க சித்தி” என்று 
கேட்டு இருந்த அனைவருக்கும் திக்கென்று ஆனது.  சரியாக மங்களம், வீராசாமி, சத்தியன், ரம்யா என அனைவரும் வர அவர்களின் காதுகளிலும் இந்த பேச்சு விழுந்தது . 
வீராசாமி “சாந்தி என்ன பேச்சு இது” என்று கேட்டவர் “இப்ப நான் என்ன தப்பா சொன்னேன்… நாளைக்கு எங்க வீட்டுக்கு வர போற பொண்ணு நல்லா இருக்கனும்… எங்க வீடு செழிக்க வேணாமா!! அதுக்கு தான் சொன்னேன்” என்றதும் அனைவருக்குமே தர்மசங்கட நிலை.
ரம்யா சத்தியன் முகம் பார்க்க அதில் அத்தனை கோபம். 
 
“சாந்தி என்ன பேசுற?? கொஞ்சம் கூட யோசனை இல்லாம அவ எங்க வீட்டு பொண்ணு” என்றார் மங்களம்
சத்தியன் முன்னால் வர “சத்தியா நில்லு” என்றான் ஜெய். அப்போது தான் அனைவரும் அன்னத்தை பார்க்க, அவள் சாந்தி சொன்னதை காதில் கேட்டதாகவே காட்டிக்கொள்ளாமல் ஜெய்யின் கையை பிடித்த படி இருந்தாள். உண்மையில் ஜெய்தான் தன் கோபத்தை கட்டுப்படுத்த அன்னத்தின் கைகளை பிடித்து இருந்தான். அவனை புரிந்தவள் அவன் கை மீது தன் கையை வைத்து கொண்டு நின்று இருந்தாள்.
இங்கு வரும் போதே அன்னம் ஜெய்யிடம் சொன்னது தான். “நம்ம பேச்சாலையோ… செயலாலையோ… இங்க யாருக்கும் எந்த மன கஷ்டமும் வர கூடாது… யார் பேசுனாலும் பொறுத்து போகனும்”  அவளுக்கு தெரியும் கண்டிப்பாக யாரேனும் தங்கள் வாழ்க்கையை விமர்சனம் செய்வார்கள் என்று.   
அது சாந்தியாக இருக்கும் என்று அவள் நினைக்கவில்லை. வீட்டில் பேசுவார் தான் தெரியும். ஆனால் இப்படி பொது இடத்தில்  பேசுவார் என்று அவள் நினைக்க வில்லை. அன்னத்திற்கு வலித்தாலும் தான் ஏதாவது செய்தால் ஜெய்யின் கோபம்  எல்லை மீறும் முடிவில் அவன் யாரையாவது பேசிவிடவும் கூடும் என்பதால் அவனை பேச விடாமல் தடுத்து இருந்தாள்.
 
‘தங்களின் வாழ்க்கை பற்றிய யாருக்கும் விளக்கம் சொல்ல அவசியம் இல்லை. அது தங்களுக்கு மட்டுமானது’ அதுவே அவள் எண்ணம். 
இருந்தும் அவரின் வார்த்தையில் அவளையும் மீறி கண்கள் கலங்கிவிட்டது.        இமை தட்டி கண்ணீரை மறைத்தவள் மற்றவர்கள் இவர்களை பேசும் சந்தர்ப்பத்தை  தரவே இல்லை.
 
“சத்தியா போய் வேலைய பாரு… சித்தப்பா நேரம் போகுது பாருங்க” என்ற ஜெய் வளையல் போடுவரிடம் தானே அன்னத்திற்கு  வளையலை தேர்ந்து எடுக்க அதை போட சொன்னவன் அதை செல்லில் போட்டோவும் எடுத்து கொண்டான். 
 
கல்யாண வீட்டினருக்கு தான் “அப்பாடா…!!” என்று இருந்தது. ‘எங்கே அவர்களை அழைத்து அவமானம் செய்தது போல் ஆகிவிட்டதோ??’ என்று நினைக்க அதை ஜெய்யும் அன்னமும் சமாளித்து அத்தனை நிம்மதி.
நல்லசாமியும் அவர் மனைவியும் மங்களத்திடமும் வீராசாமியிடமும் மன்னிப்பை கேட்க,  வீராசாமி “விடு நல்லா… இதை யாரும் பெரிசு பண்ண வேணாம் நான் பாத்துகிறேன் நீங்க கல்யாண வேலைய பாருங்க” என்றவர் அனைவரிடமும் சொல்லி கொண்டு புறபட்டார். 
காரில் அமர்ந்தவரை மங்களம் தான் ஒரு வழி செய்து விட்டார். “இத்தனை நாள் தங்கச்சின்னு தூக்கி வைச்சீங்களா அதுக்கு போதும் போதும்னு பண்ணிட்டா உங்க தங்கச்சி.  வரட்டும் வீட்டுக்கு” என்றதும் வீராசாமி அவரை பார்க்க “உங்களுக்காக அமைதிய இருந்தா என்ன வேணுனாலும் பேசுவாளா??”  என்றவரை சமாதானம் செய்ய முடியவில்லை.
சத்தியன் முகம் கோபத்தில் இருந்து மாறவில்லை. நல்லசாமி வீட்டில் இருந்து ரம்யா வீட்டுக்கு சென்றவன்  நடந்த எதையும் காட்டிக்கொள்ள வில்லை. வேலை ஆட்களுக்கு உண்டான வேலையை பிரித்து தந்தவன் அங்கு சாப்பிடக்கூட இல்லை வந்து விட்டான் வீட்டுக்கு. 
ரம்யா வளையல் சடங்கு முடிய வீட்டுக்கு வந்தவள் சத்தியனை தேட அங்கு அவன் இல்லை. “அம்மா எங்க அவரு??” ரம்யா அவள் அம்மாவிடம் கேட்க, “மாப்பிள்ளை அப்பவே போயிட்டாறே.. சாப்பிடக்கூட இல்ல.. நீ ஃபோன் போட்டு வர சொல்லு” என்றார். 
“ம்மா… அப்ப அங்க நடந்தது எதுவும் தெரியாதா??” என்று ரம்யா கேட்டு தலையில் கை வைக்க வீட்டில் அனைவருக்கும் பதட்டம் ஒட்டிக்கொண்டது. 
“என்ன ரம்யா… என்ன ஆச்சு… யார் என்ன சொன்னாங்க?? ரம்யாவின் அண்ணன் ராகவ் வர 
அங்கு வீட்டில் சாந்தி பேசியது, வீராசாமி, மங்களம், சத்தியனின் கோபம் என அனைத்தையும் சொல்லி முடிக்க, வள்ளியும் சாந்தியும் வர சரியாக இருந்தது.
 
ராகவ் தான் கேட்டான் “சித்தி பொண்ணு வீட்டுல என்ன நடந்தது??” “என்ன நடந்தது… ஒன்னும் நடக்கலையே”  அவர்  சொல்ல, 
ரம்யா தான் கேட்டால் சாந்தியிடம். “சித்தி நீங்க அங்க பேசினது சரியா?? அத்தன பேர் முன்னாடி மாமா சொல்லியும் திரும்ப பேசுறீங்க??” 
“அப்படி என்ன நான் தப்பா சொல்லிட்டேன்!! யார் ஒத்துக்காட்டியும் உண்மை அது தான”” என தான் செய்த தவறை ஒத்துக்கொள்ளாமல் பிடிவாதமாக பேச.. 
ரம்யாவின் அம்மாவிற்கு தான் இப்போது கோபம் வந்து விட்டது “அதை உன் பொண்ணு கல்யாணத்துல பேசனும்…. சாந்தி என் பையன் கல்யாணத்துல இல்லை” என்றதும் 
“அண்ணி என்ன பேசுறீங்க… உங்க பொண்ணு, என் பையன்னு.  இங்க யாரும் யாரையும் பிரிச்சு பாக்குறது இல்லை” என்று மூர்த்தியும் பிரதாப்பும். 
“இதை நான் சொல்லல உங்க வீட்டுக்காரம்மா தான் சொல்லாம சொல்லி இருக்கு. ஒரே குடும்பம் அப்படின்னு நினைச்சு இருந்தா இந்த பேச்சு பேசி இருக்குமா சாந்தி??? இவளுக்கு வேணுன்னா அது பிறந்த வீடா இருக்கலாம்… உரிமையா எதுனாலும் பேசலாம்….  அதுக்கு அவங்களும் பொறுத்து போகலாம்… ஆனா நாங்க சம்பந்தி வீடு”  
“முதல்ல சொத்தை பிரிக்குறேன்னு  பிரச்சனை செஞ்சு மாப்பிள்ளை இவள இங்கயே இருன்னுட்டாரு….  அதையே எப்படி சமாளிக்கன்னு தெரியாதப்ப இப்ப அங்க போய் இவ்வளவு பேசி இருக்கு. அவர் வந்தவர் எங்க கிட்ட எதுவும் சொல்லலை. இப்ப சாப்பிட கூட இல்லை போயிட்டாரு. அப்படி சொல்லனும்னா அங்க போயி சொல்ல வேண்டியது தான. என் பையன் கல்யாணத்துல எதுக்கு இப்படி செய்யனும்?? இங்க பாருங்க” என்று தன் கணவரை அழைத்தவர் “நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது… மாப்பிள்ளை இங்க வந்தாகனும்”  என்றவர் ரம்யாவை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றார். 
ரம்யா உள்ளே போக ராகவ் தான் விட்டான் இல்லை என ஆரம்பித்தான். “சித்தி நீங்களும், பாட்டியும் ரம்யா கல்யாணத்துல என்ன எல்லாம் செஞ்சீங்கன்னு எனக்கு தெரியும். அப்ப சும்மா இருந்தது ரம்யாவுக்கு சத்தியன் இஷ்டம் ஆனதால தான்”  
“ரம்யா கல்யாணத்துல நீங்க பேசியும் அந்த பொண்ணு ஏதாவது பேசிச்சா… இல்லை அத்தை மாமாகிட்ட சொல்லிச்சா… மாங்கல்யத்தை கூட நீங்க தொட்டு ஆசிர்வாதம் செய்யவிடல… ஒரு வார்த்தை சொல்லி இருந்தாலும் ரம்யா இப்ப நம்ம கூட தான் இருந்து இருப்பா..  கல்யாணம் ஆனதுல இருந்து ஒரு முறையாவது ரம்யாகிட்ட பேசி இருக்காளா??  இல்லை தான, அதுக்கு எல்லாம் தெரிஞ்சும் அமைதியா தான இருக்கு” 
“இப்பவும் அங்க நீங்க பேசுனதுக்கு எதுவும் சொல்லலை..  அங்கயே அவங்களும் திரும்ப பேசி இருந்தா??” 
“அது அவங்க வாழ்க்கை. அதை பேச நீங்க யாரு??  நாளைக்கு இங்க வர்ற பொண்ணையும் இப்படி தான் பேசுவீங்களா நீங்க?? என்றவன் உள்ளே போய்விட சாந்தியையும் வள்ளியையும் மற்றவர்கள் பிடித்து கொண்டனர்.
“உங்க பேச்சை கேட்டு நாங்களும் அங்க வந்தோம் பாரு எங்கள சொல்லனும். ரம்யா நல்லா இருக்கனும்… ரம்யா வசதியா வாழனும்… அப்படின்னு சொல்லி சொல்லியே எல்லாதையும் முடிச்சுடீங்க. இப்ப ராகவ் கல்யாணத்துலையும் ஆரம்பிச்சு வைச்சாச்சா… போதும் நீங்க பேசுனது செஞ்சது எல்லாம் இதோட நிறுத்திக்குங்க”
 
“அக்காவும், தங்கச்சியும் இன்னும் ஏதாவது கலகம் பண்ணனும் நினைச்சா கூட அப்படியே போயிடுங்க.. அம்மா உனக்கும் சேத்து தான் சொல்லுறோம்… பெரிய மனுசியா பாக்க வேண்டிய வேலைய மட்டும் பாருங்க  தேவையில்லதா பேச்சு வந்தது அவ்வளவு தான்” என்றவர்கள்  ரம்யாவின் அறைக்கு சென்றனர். 
ரம்யா அழுத படி இருக்க  “உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா?? அவ சொன்ன உனக்கு புத்தி இல்லையா?? உன்னையும் அவரையும் தான நான் போக சொன்னேன்… நீ எதுக்குடி அவங்கள அனுப்புன???” என்று திட்டிக்கொண்டு இருந்தார் ரம்யாவின் அம்மா. 
“ம்மா சித்தி தான் சொன்னாங்க நீ அவரு கூட வா நாங்க முன்னாடி போறோம்ன்னு. எனக்கு எப்படி தெரியும் அங்க ஜெய் அத்தான் இருப்பாங்கன்னு… அவங்க இங்க தான் வருவாங்கன்னு சொல்லி இருந்தாங்க” 
மூர்த்தி வந்தவர் “அண்ணி, ரம்யா கிளம்புங்க அங்க வீட்டுக்கு போகலாம்” என்று. ரம்யா அவர் முகம் பார்த்தவள் “சித்தப்பா அவரு கோவமா இருப்பாரு எப்படி சித்தப்பா??” 
“அப்ப உன் புருசன் இல்லாம கல்யாணம் அது உனக்கு சரியா..” ரம்யாவின் அம்மா கேட்க அவள் “இல்லை” என தலை அசைக்க “அப்ப வாடி” என்றவர்  அவளுடன் காரில் ஏறிக்கொண்டார்.
சத்தியன் வீராசாமி முன் அமர்ந்து இருந்தவன் லேப்டாப்பில் ஏதையே பார்த்து கொண்டு இருந்த ஜெய்யை எப்படி வெட்டலாம்…. என்று பார்த்து இருந்தான். 
அங்கு அத்தனை பேச்சு நடந்த போதும் ஜெய் அமைதியாக இருந்தது அவனால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஒரு வார்த்தை “நீங்க என்ன பேசுறது??” என்று கேட்டு இருந்தாலும் அவனுக்கு மனம் சற்று சமன் பட்டு இருக்கும். ஆனால் அவன், அவனும் பேசாமல், பேச வந்த தன்னையும் பேசவிடாமல் அடுத்த வேலைகளை பார்க்க சென்றது தான் அவனால் தாங்க முடியவில்லை. அதில் ரம்யாவின் வீட்டுக்கு சென்று வேலைகளையும் பார்த்து வர சொன்னது  அவனுக்கு இன்னும் ஆத்திரம் அதிகமாக தான் செய்ததே தவிர குறைய வில்லை.
இதுவரை ஜெய்யை எதிர்த்து பேசியதில்லை. இப்போதும் எப்படி பேச?? அவனால் ஜெய்யை முறைக்க மட்டுமே முடியும். திட்டுவதாயினும் மனதில் மட்டுமே…  இப்போதும் அவன் எதிரில் அமர்ந்து அதையே செய்ய “அனு.. சத்தியவுக்கு சாப்பாடு எடுத்து வை” என்றான் ஜெய். 
சத்தியன் பல்லை கடித்தவன் “டேய்… இங்க என்ன நடந்துட்டு இருக்கு இப்ப சாப்பாடு ஒரு கேடா??”  இது தான் ஜெய்யிடம் சத்தியனின் அதிக பட்ச கோபம். 
“எதுக்குடா இவ்வளவு கோபம்…. அவ யாரு??” என அன்னத்தை கை காட்ட சத்தியன் புரியாத பாவனையில் ஜெய் முகம் பார்த்தான். வீராசாமியும் அப்படிதான் பார்த்தார்.
“புரியலையா….” நக்கலாக சிரித்தவன் “இன்னிக்கு நீ பேசலையின்னு கேக்குற நீங்க இத்தனை நாள் எங்க பேயிருந்தீங்க…. அவங்க என்ன இன்னிக்கு தான் புதுசா பேசுறாங்களா…. இத்தனை நாள் அவள பேசும் போது வேடிக்கை தான பாத்தீங்க… நான் இருக்கேன் இல்ல அது பேச்சு இல்ல. ஆனா அவ இந்த வீட்டுல தான இருக்கா… அப்ப அவளுக்கு உண்டான மரியாதைய நீங்க கொடுத்து இருக்கனும். நான் வீட்ட விட்டு போனா அது எனக்கும் அப்பாவுக்கும் உள்ளது அதுல அவ எங்க வந்தா?? நீங்க மத்தவங்கள பேச கூடாதுன்னு சொன்னா நீங்க பேசத அளவுக்கு வச்சு இருக்கனும். அவளுக்கு நீங்க மரியாதை தந்து இருந்தா இந்த வீட்டு பொண்ணா நடத்தி இருந்தா அவங்களுக்கு பேசுற தைரியம் வந்து இருக்குமா??? நீங்க அவள எப்படி வெளிய காட்டுனீங்களோ அதை அவங்க பிடிச்சுகிட்டாங்க… இத்தன நாள் வீட்டுல பேசுனாங்க இப்ப அது அடுத்த வீடு வரைக்கும் போயி இருக்கு அவ்வளவு தான்”
“நான் என் பொண்டாட்டி கூட எப்படி இருந்தாலும் அது எங்களுக்குள்ள அதில யாரும் வர தேவையில்லை”
 

Advertisement