Advertisement

“சொல்லு அன்னம் எத்தனை நாள் ஆச்சு??”
அன்னம் கணக்கிட்டவள் “அம்பது நாள்” என்றாள். 
அன்னம் சொன்னதும் ஜெய்குள் சிறு பரபரப்பு. அவன் அன்னதின் கைகளை பிடித்து கொள்ள, அவளுக்குமே அது சற்று பதட்டமாக தான் இருந்தது. 
ஜெய்யின் நினைவில் இருந்தவளுக்கு அந்த மாதத்தின் வருகை மறந்து விட்டிருந்தது.
டாக்டர் சில டெஸ்டுகளை எழுதி கொடுத்து நர்சுடன் அன்னத்தை அனுப்பிவைக்க, அவள் ஜெய்யை தான் பார்த்தாள் “நீயும் என்னுடன் வா” என்பதை போல். 
ஜெய் அவளுடன் போக எழுந்து கொள்ள, “அவர் எதுக்கு…  நீங்க போங்க..” அன்னம் டாக்டர் சொல்ல அன்னம் நர்சுடன் சென்றவள் டெஸ்டுகளை முடித்து கொண்டு வந்தாள். 
அன்னம் ஜெய்யின் கைகளை பிடித்து கொள்ள, டாக்டர் இருவருக்கும் “வாழ்த்துக்கள்” சொல்ல அந்த நிமிடத்தை எப்படி சொல்ல!!! இருவருக்கும் வானத்தில் மிதக்கும் நிலை!!! எதிர்பாராத நேரத்தில் கிடைத்த வாழ்க்கையின் முக்கிய தருணம் அது. அந்த நொடி இதுவரை இருந்த இருவருக்குமான மன வருத்தங்கள் எங்கோ சென்று மறைந்துவிட்டது…
அன்னத்தின் கண்ணில் நீர் வர ஜெய் அவள் கைகளை பிடித்தவன் அவளை “அழ வேண்டாம்” என சைகை செய்தான்.
“எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது… சிலருக்கு வாந்தி, மயக்கம்.  உனக்கு தூக்கம், பசி, ஹார்மோன் இன்பேலன்ஸ்னால சட்டுன்னு எமோசனல் ஆகுறது அவ்வளவு.  தான் மனச அமைதியா வச்சுக்குங்க… நல்லா சாப்பிடுங்க…  இப்ப தான் ஐம்பது நாள் இன்னும் பத்து நாள் விட்டு ஸ்கேன் பாத்துக்கலாம்… இப்ப பேபி நல்லா இருக்கு..” என்று அவளுக்கு தேவையானவற்றை சொன்னவர் அடுத்து எப்போது வர வேண்டும் என்று சொல்லி அனுப்பினார்.
இருவரும் அறைக்கு வர அனைவரும் அங்கு தான் இருந்தனர்.  மங்களம் “அன்னம் டாக்டர் என்ன சொன்னாரு..” கேட்க அவளுக்கு “எப்படி சொல்ல??” தயங்கி நின்று இருந்தாள். அவளின் முகம்  சிவந்து இருந்தது. மருமகளிடம் பதில் இல்லாமல் போக மகனை பார்க்க  அவன் முகத்திலும் சந்தோசமே!!! சட்டென கணக்கிட்டவர்  “நாள் தள்ளி இருக்கா அன்னம்…!!” கண்கள் மின்ன கேட்டார். தேவகியும் அவளின் கையை பிடித்து கொள்ள, அனைவரிடமும் ஒரு எதிர்பார்ப்பு வந்து ஒட்டிக்கொண்டது. 
“சொல்லு அன்னம்..” தேவகி கேட்க, அன்னம் “ஆமாம்” தலை அசைக்க அனைவரிடத்திலும்  அத்தனை சந்தோசம். நடக்கவே நடக்காது என்று நினைத்த ஒன்று ஈஸ்வரன் கண்ணில் இருந்து கண்ணீர் வர அன்னம் அவரிடம் சென்று அமர்ந்துகொண்டாள்.  
தேவகி பக்கத்தில் இருந்த கேசரியை எடுத்து அனைவருக்கும் தந்தவர் கைகள் நடுங்க, மங்களம் அவர் கைகளை ஆதரவாக பிடித்து கொண்டார்.   
தேவகி அன்னத்தை அனைவரிடமும் “ஆசிர்வாதம் வாங்கு” என சொல்ல “வேண்டாம் தேவகி இப்ப குனியக்கூடாது” மங்களம் அப்போதே ஆரம்பித்து வைத்தார். “அவ உக்காந்துகட்டும்” என்றவருக்கு அத்தனை மகிழ்ச்சி. “நான் பாட்டியாகிட்டேன்” என்று வாய் மூடமல் சொல்ல ஆரம்பித்தார். 
ரூபிணி ‘நிஜமாவே நீ பாட்டி ஆகிட்டம்மா…” மங்களம் அவளை பார்க்க “அண்ணி சொன்னப்ப நம்பல… ஆனா நீ இப்ப புலம்புற பாரு இது பாட்டி ஆனதின் முதல் அறிகுறி” என்று சொல்ல “அடி என்னையவேவா..” என்று அவளை செல்லமாக குட்டினார்.
சத்தியனுக்கும், கவிக்கு சொன்னவர்கள்,  ஜெய்யிடம் “அன்னத்தை கூட்டிக்கிட்டு நீ வீட்டுக்கு போ… நாங்க டாக்டர் கிட்ட பேசி டிஸ்சார்ஜ்  செஞ்சிட்டு வர்றேம்” என அவர்களை அனுப்பி வைத்தனர்.
ஜெய், அன்னத்துடன் வந்தவன் வீட்டினுல் நுழைந்ததும்  அன்னத்தை பார்த்து  கை விரித்தவன் “வா…” என அழைக்க அவனுள் சுகமாக புதைந்து கொண்டாள் அன்னம். 
விசயம் தெரிந்ததில் இருந்து எப்படி சந்தோசத்தை வெளிப்படுத்த…!!! என இருந்தவனிடம் எந்த பேச்சும் இல்லை. அன்னமும் அமைதியாக தான் இருந்தாள். இருவரும் மனதால் அந்த நிமிடங்களை அனுபவித்து கொண்டு இருந்தனர்.  ஜெய்யின் கைகள் அவளின் உடை தாண்டி அவளின் வயிற்றில்  தன் உயிரின் வளர்ச்சியை தேட…!!! 
அதை உணர்ந்தவள் “பாப்பா இப்ப தெரியாது…. அஞ்சு மாசம் ஆகனும்..” என்றாள் அன்னம்.
“அஞ்சு மாசம் ஆகுமா…!!! இப்ப தெரியாதா??” அவனின் ஏக்க பேச்சு அவளுக்கு புரிய “ஆமாம்..” என்றாள் உண்மையான வருத்துடன். 
“அனு..” என்ற அவனின் குரலுக்கு “என்ன??” என்பதை போல் பார்த்தவளை “நான் ஒன்னு கேட்டா பதில் சொல்லுவியா…??”  ஜெய் கேட்க “திரும்பவுமா…”என்றாள் கண்கள் விரித்து.
விரிந்த அவளின் கண் இமைகளை தன் இதழால் மூடியவன் அப்படியே கேட்டான் “என் மேல உனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கா…??” 
அன்னம் நிமிர போக “அப்படியே பதில் சொல்லு..” ஜெய். 
“எப்படி சொல்ல…??” அன்னம். 
“உனக்கு எப்படி தோணுதோ அப்படி சொல்லு” 
“உங்க மேல எப்பவும் என் நம்பிக்கை போனது இல்லை… அந்த பத்திரம் விசயத்தை நீங்க என்கிட்ட சொல்லாத்து தான் என் கோபம்… அப்ப நீங்க என்னைய நம்பலையின்னு தான அர்த்தம்…” அவள் அவனின் கேள்வியை அவனுக்கே திருப்ப… 
“அது நம்பாம இல்ல… உனக்கு வலிக்ககூடதுன்னு தான் சொல்லலை… ஏற்கனவே என்னால நீ பட்டது போதும்னு நினைச்சதால சொல்லல… நான் சொன்ன நீ இப்படி தான் நினைப்பன்னு நினைச்சதால சொல்லல…” என்றான் அவளை புரிந்தவனாக. 
மீண்டும் அன்னத்திடம் அமைதி. “சொல்லு அனு… இப்பவும் உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா… நான் சொன்னா, ஒரு விசயம் செய்தா சரியா இருக்கும்னு நம்புறியா..??” என்றவன் நெஞ்சத்தில் இதழால் முத்திரை பதிக்க, “என்கூட வந்துடுறியா..” என்றதற்கு வார்த்தையால் இல்லாமல் உடல் மொழியால் அவன் மட்டும் தான் தன் நம்பிக்கை என்றாள் அன்னம். 
ஆறு மாதங்களுக்கு பிறகு…. மும்பையில் ஜெய்யின் அப்பார்மென்டில் “ம்மா நான் சொல்லுறதை கேளுங்க..”
“டேய் நீ என்ன சொன்னாலும் தலை பிரசவம் அவங்க அம்மா வீட்டுல தான் நடக்கனும்..” மங்களமும் விடாமல் பேசினார். இவர்களின் பேச்சை கேட்ட படி முகத்தில் சிரிப்புடன், எட்டு மாத வயிறு முன்னிருக்க, மனதின் சந்தோசம் மட்டும் இல்லாது ஜெய்யின் அதீத கவனிப்பில் சற்று அல்ல அதிகமாவே உடல் வந்து இருக்க, அவளுக்கு என்று தனியாக டிசைன் செய்யபட்ட  சோபாவில் அமர்ந்து காலை நீட்டி இருந்தாள் அன்னம். 
கால் சற்று வீக்கமாக இருக்க அவளுக்கு குடிக்க பார்லி கஞ்சியை தேவகி ஆற்றிய படி இருந்தார். ஹாலில் தாயும், மகனும் போடும் சண்டையை தான் ரூபி, அன்பு, ஈஸ்வரன், அமர், அமீர் என அவர்களை சுற்றி அமர்ந்து வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தனர். “இன்னும் முடியலையா உங்க சண்டை..!!” என்றபடி சத்தியனும் ரம்யாவும்  வீட்டினுள் நுழைந்தார்கள்.
சத்தியனின் கேள்விக்கு அமரும், அமீரும் நக்கலாக சிரிக்க, “என்ன அண்ணா சிரிப்பு..??” சத்தியன். 
“அமீரு….” 
“சொல்லுட அமரு…” 
“இவனை பத்தி சொல்லும் போது எல்லாம் என்னைய திட்டுவியே… இப்ப சொல்லு நான் சொன்னது உண்மையா… பொய்யா…. ஜெய்க்கு இந்த வாய்,  பிடிவாதம் பேச்சு, எல்லாம் எங்க இருந்து வந்ததுன்னு…” 
“நான் சொல்லுறேனோ… இல்லையோ!!! மங்களம்மா சொல்லுவாங்க  உன்னைய நல்லா நாளு மிதிச்சி” என்றதும் அனைவரும் சிரிக்க, அமர் தான் பேய் முழி முழித்தான். 
ஜெய் கோபமாக அறைக்கு சென்று கதவினை அடைத்து கொண்டான். “அத்தை…” அன்னம் அழைக்க… 
“சும்மா உன் புருசன் சொல்லுறதுக்கு ஜால்ரா போடுற வேலை வைச்சுக்காத… நான் சொன்னா சொன்னது தான்… நீ பிரசவத்துக்கு தேவகி கூட போற அவ்வளவு தான்” என்றவர் சத்தியன் வாங்கி கொண்டு வந்த பொருட்களை சரிபார்க்க சென்றார். 
ஆம்… ஜெய்யும் அன்னமும் மும்பை வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. ஈஸ்வரனை வீட்டிற்கு அழைத்து வந்து வீட்டில் விட்ட கையோடு அன்னத்தையும் கையேடு அழைத்துவந்து விட்டான்  மும்பைக்கு. 
மங்களமும், தேவகியும் எத்தனை முறை சொல்லி ஆகிவிட்டது “டேய்… இப்ப அவளுக்கு மசக்கை நேரம்… பெத்தவ மடி தேடுவா… அவ இருக்கட்டும் நாங்க பாத்துகுறோம்… இனி எந்த பிரச்சனையும் வராது…” என அவன் கேட்டால் தானே… 
“என் பொண்டாட்டிய எனக்கு பாத்துக்க தெரியும்… அவளை இங்க விட்டு போய் என்னால அங்க நிம்மதியா இருக்க முடியாது…  யார் பேசுவாங்க… அவங்களுக்கு என்ன பதில் தரலாம் அப்படின்னு யோசிக்குறது என் வேலை இல்லை… அவளுக்கு இப்ப மனசு நிம்மதியா இருக்குறது தான் முக்கியம்… அது இங்க இருந்தா கிடைக்காது… அதனால அவள என் கூடவே கூட்டிக்கிட்டு போறேன்..” என்றவன் அன்னத்தை பார்த்த பார்வையில் “நீ இங்க இருப்பியா இல்ல வீட்ட விட்டு போயிட்டியான்னு என்னாலா யோசிக்க முடியாது…” என்ற குட்டும் இருந்தது.  
அவன் பார்வையில் அன்னம் மற்றவர்களை பார்ப்பது போல் திரும்பிக்கொள்ள “உங்களால அவள விட்டு இருக்க முடியாதுன்னா… நீங்களும் அங்க வாங்க” என்று விட்டான்.
வீராசாமிக்கும் அவன் சொல்வது “சரி” என பட, “மங்களம் விடு… அவன் அன்னத்தை கூட்டிட்டு போகட்டும்” என்றவரை, “உங்களுக்கு கொஞ்சமாச்சும் இருக்கா… அவ  கூட எப்பவும் துணைக்கு ஒருஆள் கூடவே இருக்கனும் இங்கன்னா நாம பாத்துக்கலாம்… இப்ப அவ்வளவு தூரம் புள்ளதாச்சி பொண்ண எப்படி அனுப்புறது..!! அவன் வேலை விசயமா வெளிய போயிட்டா அவ தனியா இருக்கனும்..” என்றவருக்கு அன்னத்தை அவனுடன் அனுப்ப மனதே இல்லை. 
அவருக்கு முட்டி வலி அதிகம் என்பதால் அவரால் அதிக நேரம் நிற்கும் படியான வேலைகளை பார்க்க முடியாது. தன்னுடன் மஞ்சுவை அழைத்து கொண்டால் வீட்டில் அனைவரும் சாப்பாட்டுக்கு என்ன செய்வது??? ரம்யா இப்போது தான் கத்துகுட்டி. இத்தனை நான் அன்னம் செய்ததால் அங்கு பிரச்சனை இல்லை. இப்போது அவர்கள் மூன்று பேரும் இல்லாது என்ன செய்ய?? அதனால் தான் அன்னம் இங்கு இருந்தால் தான் பார்த்து கொள்ள வசதி படும் என்று அவளை இங்கு இருக்க சொல்ல… ஜெய் அதற்கு ஒத்து கொள்ள வில்லை.
தாயும், மகனும் முகத்தை தூக்கி கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் என இருக்க தேவகி தான் சொன்னார் “அண்ணி நீங்க ஒரு முனு மாசம் இருங்க  நான் மூனு மாசம் இருக்குறேன் பிரசவசத்துக்கு இங்க வந்துடலாம்” என்று. 
“அப்ப இங்க மில்லு…!!” சத்தியன் கேட்க அப்பாவியாய் கேட்க “உங்க அப்பா தான் இன்னும் அவருக்கு பொண்ணு தர பொண்ணு வீட்டுகாறவுங்க லையன்ல நிக்குறதா சொல்லுறார்ல அவர் பாத்துக்கட்டும்” என்று வீராசாமியை முறைத்தவர் மகனுடன் புறப்பட்டுவிட்டார். 

Advertisement