Advertisement

நேற்றே சொல்லிவிட்டான் “அக்கா… வேலை முடிஞ்சது காலையில ஹாஸ்பிட்டல் போகும் போது எழுப்புங்க” என்று.  இப்போது ஜெய்யுடன் வருகிறான் என்றாள் அன்னம் ஜெய்யை பார்க்க அவன் தேவகி தந்த காபியை குடிப்பதில் கவனமாக இருந்தான். 
தேவகி “அன்னம்” என்றிட “வர்றேன் ம்மா..” என்றவள் சமையல் அறைக்கு போக “அன்னம் கொஞ்சமா கேசரி செய்யலாமா… மாப்பிள்ளை சாப்பிடுவாரா…” என்று. அவருக்கு நேற்று அன்னத்தின் பின்னாலேயே அவளை தேடி அனைவரும் வந்துவிட்டது அத்தனை சந்தோசம்… அதனாலேயே மகளிடம் “ஏன் வந்தாய்??” என்று அவர்கள் வீட்டு விபரத்தை அவர் கேட்கவில்லை.
“அம்மா என்ன இது?? விருந்துக்கு ரெடி செய்ற மாதிரி வடை, கேசரி எல்லாம். அப்பா ஹாஸ்பிட்டல்ல இருக்காரும்மா… இப்ப இது எதுக்கும்மா…” அன்னம் தேவகியை கேட்க., 
“ஏன்டி அறிவு இருக்க… இப்ப தான் உன் வீட்டு ஆளுங்க எல்லாம் வீட்டுக்கு வந்து இருக்காங்க. நம் வீட்டுல ஆயிரம் இருக்கும் அதுக்காக… அவங்கள அப்படியே விட முடியுமா சொல்லு… கொஞ்சமா கேசரி செய்றேன் வடைக்கு சட்னி அரைச்சுட்டேன்..” என்றவர் கோசரிக்கு ரவையை வறுக்க ஆரம்பித்தார்.
அன்னம் “ம்ம் செய்ங்க… கொஞ்சம் சக்கரை கம்மியா போடுங்க” என்றவள் மற்ற வேலையை பார்க்க ஹாலில் ஜெய்யும் மங்களம் மட்டுமே. 
“என்னம்மா உன் மருமகள விட்டு ஒரு நாள் கூட இருக்க முடியாதா..!!” கேலியாக ஜெய் கேட்டாலும் அதன் அர்த்தம் புரியாதவரா மங்களம்.  
“ஆமான்னு சொன்னா…” மங்களம் நிறுத்தினார்.  மங்களத்தை ஜெய்  பார்க்க “நீங்க பசங்க எங்களை பாக்கனும் அது உங்க கடமை… அதை வந்த மருமகங்ககிட்ட எதிர் பார்க்க கூடாது ஜெய்… அவளுக்கு என்ன தலையெழுத்தா நீயும் இல்லாம அங்க வீட்டுல எங்க கூட இருக்க… நாங்களே பேசகூடாது  அதிலும் உங்க அத்தைங்க பேச்சு கேட்டுகிட்டு…  தேவகியும் ஈஸ்வரனும் பணம் காசை சேத்து வைக்கலனாலும் பசங்களுக்கு நல்ல குணத்தை சொல்லி கொடுத்து தான் வளர்த்து வைச்சு இருக்காங்க” 
“அவ நினைச்சு இருந்தா அப்பவே நம்மல நிக்க வைச்சு கேள்வி கேட்டு இருக்கலாம்… அதை செய்யலையே… இப்பவும் அன்னம் எதுக்கு கவிக்கூட வந்தான்னு உன் மாமியார் கேட்கவே இல்லை… வந்த நம்மள தான் கவனிக்குறாங்க… அவங்களுக்கு என்னால முடிஞ்சது, உங்க அத்தைங்க கிட்ட இருந்து பேச்சு வராம காப்பாத்தி வைச்சது தான்… அவங்களுக்காக தான் இத்தனை நாள் இவங்க வீட்டுக்கு வராததை கூட நான் பெரிசா பேசுனதே இல்ல… அன்னத்துகிட்ட இவங்கள வர சொல்லுன்னு சொன்னதே இல்லை நான்.  இவங்க சகஜமா வந்து போக  இருந்து இருந்தா…  இன்னிக்கு ரம்யா பாட்டி சொன்ன விசயத்தை உன் அத்தைங்க எப்பவோ சொல்லி இருப்பாங்க… தேவகி இதை போல பேச்சை எல்லாம் தாங்க மாட்டா ஜெய்” 
“இவங்கள பேசினா நான் திரும்ப பேசலாம் தான்… சண்டை போடலாம்…  அதனால திரும்பவும் உன் அத்தைங்க இவங்கள தான் பேசுவாங்க…. பொண்ணையும் கொடுத்து நம்ம வீட்டு  ஆளுங்க கிட்ட பேச்சும் வாங்கனுமா!! இப்ப நீ வந்துட்ட… நானும் இங்க வரலாம்… இவங்களும் அங்க வந்து ரெண்டு நாள் நிம்மதியா தங்கலாம்… எதுன்னாலும் நீ பாத்துப்ப…” மங்களம் மகன் முகம் பார்த்தார். அதில் “இனி இவர்கள் உன் பொறுப்பு” என்ற செய்தியும் இருந்தது. 
அதை புரிந்து கொண்டவன் சிரிக்க,  மங்களம் “நீயும், சத்தியனும் எங்களை விட்டுட மாட்டீங்க…  ஆனாலும் உங்கள விட என் மருமகதான் என்னையும் உங்க அப்பாவையும் நல்லா பாத்துப்பா… நீங்க இல்லாம கூட நான் இருந்துடுவேன் அன்னம் இல்லாம ரெம்ப கஷ்டம் ஜெய்” என்றவர் கைகளை ஆதரவாக பிடித்து கொண்டான்.   
இவர்களின் பேச்சு தேவகி அன்னம் காதிலும் விழத்தான் செய்தது. தேவகியும் சில சமயம் நினைத்து உண்டு ‘பணம் இருந்தால் தான் மரியாதை’  என்று. அது பார்பவர்களின் மனம் பொருத்து… நடப்பவர்களின் குணம் பொருத்தது… என்று மங்களத்தின் பேச்சில் புரிய, தேவகியின் மனதில் இத்தனை நாளாக இருந்த மங்களத்தை பற்றிய பிம்பம் உடைந்தது. 
“என்ன அன்னம்… உங்க மாமியார் இப்படி பேசுறாங்க” தேவகி. 
“இது எனக்கும் தெரியும்மா… மாமா உங்கள கூப்புடுன்னு சொல்றப்ப எல்லாம்  அவங்க உங்க தங்கச்சிங்க வரலையின்னா நான் அவங்களுக்கு தகவல் சொல்லுறேன்னு சொல்லுவாங்க அப்பவே நான் புரிஞ்சுக்கிட்டேன் அவங்க உங்களுக்காகதான் பாக்குறாங்கன்னு” என்று சிரித்தபடி.
“இதோ ஆச்சுங்க ஜெய்கிட்ட கொடுத்து அனுப்புறேன்” என்ற மங்களத்தின் பேச்சு சத்தம் காதில் விழ “மாமா ஃபோன் செஞ்சிட்டார்ம்மா எடுங்க…” என்று ஹாஸ்பிட்டலுக்கு கொடுத்து அனுப்ப அன்னம் அனைத்தையும் பேக் செய்தவள் எடுத்து கொண்டு வெளியே வர கவி குளித்து வந்திருந்தான். 
“கவி இந்தா…”  என்று அனைத்தையும் கொடுத்தவள் அவன் வரும்போது மத்தியம் சமையலுக்கு வேண்டியதையும் சொல்ல “சரி” என்றவன் சென்றுவிட்டான். 
மங்களம் தேவகியை அழைத்து கொண்டு அருகில் இருந்த கோவிலுக்கு செல்ல, இப்போது வீட்டில் கணவன், மனைவி மட்டுமே. நேற்று பேச்சு கவி வந்ததால் பாதியில் நிற்க இப்போது எப்போது வெடிக்க?? என்று நின்று இருந்தது என்பது அவளுக்கும் தெரிந்து இருந்தது.
அவள் செய்த காரியத்தின் வீரியம் அவளுக்கும் புரிந்து தான் இருந்தது. நடந்து போனதை  எத்தனை முறைதான் பேசுவது…  வீம்பாக ஜெய் இருப்பதை பார்த்து சலிப்பாக தான் இருந்தது அன்னத்திற்கு.
ஜெய் அன்னத்தை பார்த்தவன் “இப்ப முகத்தை பாக்கவும் முடியலையா..!!” என்றான் 
அன்னம் ஜெய்யை முறைக்க “என்ன முறைக்குற..??” என்றான் பார்வையில். 
“எத்தனை முறை நீங்க கேட்டாலும் அதுக்கு என்கிட்ட இருந்து வர்ற பதில் அது அந்த நேர கோவம்…. என்னைய மீறி நடந்தது… இனி வீட்ட விட்டு வர மாட்டேன்… அவ்வளவு தான் வாங்க பசிக்குது சாப்பிடலாம்…” அன்னம் 
அவள் பதிலில் அவனுக்கு உடன் பாடு இல்லை என்றாலும், அவள் இப்படி கேட்டதே இல்லை… ஜெய் அமைதியாக சாப்பிட அமர அவனுக்கும் வைத்து தனக்கும் வைத்துகொண்டாள் அதுவும் அவள் தட்டு நிறைய.
அவளின்  செய்கைகள் அனைத்தும் அவனுக்கு புதியதாகத்தான் இருந்தது.  வீட்டில் அனைவரும் சாப்பிட்ட பின் தான் சாப்பிடுவாள்.  அதுவும் அளவாக தான் இருக்கும். பிடித்தது என்றாலும் அளவு தான். அதிலும் புதிதாக இன்று அவனுடன் அமர்ந்து சாப்பிடுவது அவனுக்கும் பிடித்து தான் இருந்தது. 
இருவரும் அமைதியாக சாப்பிட, ஜெய் அவள் முகத்தை பார்த்த படி தான் இருந்தான். “அனு..” ஜெய் அழைக்க “என்ன??” என பார்த்தாள். 
“உடம்புக்கு ஏதாச்சும் செய்யுதா??” 
“இல்லையே… நல்லாதான இருக்குறேன்” என்றவள் இனிப்பை இன்னும் கொஞ்சம் வைத்து சாப்பிட, ஜெய் இன்னும் கொஞ்சம் அவள் தட்டில் பொங்கலை வைக்க அதையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டாள் அன்னம். 
சாப்பிட்டதும் அன்னம் அறைக்கு போக ஹாலில் அமர்ந்தான் ஜெய்.  கோவிலில் இருந்து மங்களம் தேவகி வர, மங்களம் பிரசாத்தை ஜெய்யிடம் தந்தவர் “எங்க ஜெய் அன்னம்…” என்றார் . 
  
“ரூம்ல இருக்காம்மா” 
மங்களம்  அறைக்கு போக அங்கு நல்ல தூக்கத்தில் இருந்தாள் அன்னம். 
“என்னடா… அன்னம் இந்த நேரத்துக்கு தூங்குறா!! நீ ஏதாச்சும் சொன்னியா??” மங்களம் கேட்க “ம்மா எனக்கு வேற வேலை இல்லையா…” என்று ஜெய் முறைக்க “இந்த மாதிரி தூங்குனது இல்ல… அது தான் கேட்டேன்… அவ எழுந்ததும் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிட்டு வா ஜெய்… ரெம்ப ஓஞ்சுபோய் தெரியுறா… நேத்து இருந்து கொஞ்சம் அலைச்சல் அதிகம் தான்” என்றவருக்கு “சரி” என்றான்.
பதினொரு மணி போல் அன்னம் எழுந்து வர தேவகி அதற்குள் பாதி சமையலை முடித்து இருந்தார். “ என்னம்மா… எழுப்புறதுக்கு என்ன… நீங்களே எல்லாம் செஞ்சுக்கிட்டு..” 
“அண்ணி தான் காய் எல்லாம் வெட்டி தந்தாங்க… நான் உலை மட்டும் தான் வைச்சேன். ஆமா நீ எதுக்கு எழுந்த… நான் முடிச்சுட்டு வந்து எழுப்பி இருப்பேன்ல” தேவகி கடிந்து கொண்டார் அன்னத்தை. 
எப்பொழுதாவது தான் வருகிறாள். அதில் அவளை வேலை வாங்க அவருக்கு விருப்பம் இல்லை. இங்கு வந்தாள் தேவகி வேண்டாம் என்றாலும் அன்னம் தான் அனைத்தையும் செய்வது. ஆனால் இன்று அவள் அசந்து தூங்கவும் அப்படியே விட்டுவிட்டார். 
பேசிய படி தேவகி அனைத்தையும் செய்து முடித்தவர், ஹாஸ்பிட்டலுக்கு எடுத்து வைக்க மங்களம் தான் “தேவகி எல்லாருக்கும் எடுத்து வை… நாமளும் அங்க போகலாம்… இங்க இருந்து என்ன செய்ய?? எல்லா வேலையும் தான் முடிஞ்சதுல” என்றார். 
“சரி அண்ணி” என்றவர் அனைத்தையும் எடுத்து வைக்க, ஜெய்யை காரை எடுக்க சொன்னார் மங்களம். 
ஜெய் ஹாஸ்பிட்டலில் காரை நிறுத்த அதற்குள் மீண்டும் தூங்கி இருந்தாள் அன்னம். “என்ன இந்த பொண்ணு காலைல இருந்து இப்படி தூங்குறா..” தேவகி சொல்லிய படி அன்னத்தை எழுப்பி விட “வந்தாச்சா…” கேட்டாள் அன்னம். 
“என்ன அன்னம் என்ன செய்து?? காலைல இருந்து தூங்கிட்டே இருக்குற…” மங்களம் தான் கேட்டார். 
“என்ன தெரியலை அத்தை தூக்க கலக்கமா இருக்கு..” என்றவளை “சரி வா.. உள்ள வந்து தூங்கு” என்று இறங்கி நடந்தனர். 
ஈஸ்வரன் தங்கி இருந்த அறைக்கு வர உள்ளே யாரும் இல்லை. “ரூம்ப திறந்து வச்சுட்டு எல்லாரும் எங்க போனாங்க” தேவகி கேட்க., “எல்லாம் கேண்டீன் போயிருப்பாங்க அங்க போய் பாருங்க” என்றாள் அன்னம்.
“இவங்க போனாங்க சரி… உங்க அப்பா எதுக்கு போனாரு..” தேவகி ஈஸ்வரனை திட்டிய படி அனைத்தையும் எடுத்து வைக்க “விடு தேவகி… எத்தனை நேரம் ரூம்புக்குள்ளயே அடஞ்சு கிடக்க… இப்படி காத்தாட போனாதான் சீக்கிரம் குணமாகும்” என்றாற் மங்களம். அதன் பின் தேவகி என்ன பேச… அமைதியானார்.
மங்களம்… ஜெய்யை அழைத்தவர் “இவள முதல்ல டாக்டர் கிட்ட காட்டிட்டு வா” என்றார். 
“அன்னம் போ…” என அவளையும் அனுப்பியவர் கால் நீட்டி அமர்ந்து கொண்டார். 
ஜெய்யும் அன்னமும் டாக்டரிடம் போக டாக்டர் தான் கேட்டார் “என்னம்மா செய்யுது??” என. 
“தெரியலை!!” என பாவமாக சொன்னவள்  அமைதியாக… டாக்டர் இவள் முகத்தை பார்க்க… ஜெய்தான் மானசீகமாக தலையில் அடித்து கொண்டான். 
டாக்டர் அவளை பார்ப்பதை கவனித்தவன், அவனே “காலையில  இருந்து தூங்கிட்டே இருக்கா.. வழக்கத்து மாறா நிறைய சாப்பிடுறா… ஏதாவது பேசுறதுக்கு முன்ன அழுதுடுறா டாக்டர். கடைசி வார்த்தையை சற்று நக்கலாக அவளின் மாற்றங்களை சொல்ல, சொல்லும் அவனை தான் பார்த்திருந்தாள் அன்னம். 
அவளை செக் செய்தவர் “லாஸ்ட் பிரியட் எப்ப??” என கேட்க, இருவரும் முகம் பார்த்து கொண்டனர். ஜெய் சற்று பதட்டமாக “என்ன டாக்டர் என்ன ஆச்சு??” என கேட்க “எதுக்கு இந்த பதட்டம் ஜெய் சும்மா கேக்குறது தான்”

Advertisement