Advertisement

                           ஓம் நமச்சிவாய   
தாளம் 14
அன்னத்தை ஜெய் வீட்டுக்கு போக சொன்னதும், அன்னம் அவனை தான் பார்த்தாள் “என்ன… என்னை போக சொல்வாயா நீ…??”  என. ஜெய் அவளை பார்த்தால் தானே அவளின் பார்வையின் அர்த்தம் புரிய.
கவி அன்னத்தின் முகம் பார்க்க “இல்ல, நான் அப்பா கூட இருக்குறேன் நீங்க போங்க” என்றாள் வீம்பான குரலில். 
அன்னத்தின் குரல் மாற்றம் ஜெய்க்கு புரிய அவளை பார்த்தவன், “சரி நீங்க போங்க”  என்றவன் அவர்களை வாசல் வரை சென்று அனுப்பி வைத்து வர  சேரில் அமர்ந்தவாறோ உறங்கி இருந்தாள் அன்னம். 
ஈஸ்வரன் கட்டிலில் நல்ல தூக்கத்தில் இருக்க,  தூங்கும் அன்னத்தை பார்த்து இருந்தான் ஜெய்.  முன்பு இருந்ததை விட இன்னும் அழகாகி இருந்தாள்.  தூக்கத்திலும் ஏதோ ஒரு சிந்தனையில் இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு.  
‘காலையில் ஊரில் இருந்து வரும் போது இருந்த மனநிலை என்ன…?? இப்போது இருப்பது என்ன…??’ யோசனையில் இருந்தவன் ஜெட்லாக் அசதியும் சேர ஜெய்யும் அமர்ந்தவாறே தூங்கிவிட்டான். 
ஈஸ்வரனுக்கு  இடையில் முழிப்பு வர  எழுந்து பார்க்க, எதிரில் அன்னமும் ஜெய்யும் நல்ல உறக்கத்தில். உறங்கு பவர்களை தெந்தரவு செய்ய அவருக்கும் விருப்பம் இல்லை. அவர்களை தான் கண்ணும் மனமும் நிறைய பார்த்து இருந்தார். 
காலையில் ஜெய் வருவதை பற்றி பேசும் பெழுதுதான் ஈஸ்வரனுக்கு லேசாக வலிப்பது போல் இருந்தது. ‘அதீத சந்தோசம் தான் வலிக்கு காரணமோ..??’ அவராகவே நினைத்து கொண்டவர்  ‘என் பசங்கள தான் வளர்க்கும் கொடுப்பினை இல்லை… இந்த வயசுலயே எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சுட்டாங்க… என் பேர பசங்களையாவது  நான் வளர்க்கனும் அதுக்கு நான் நல்லா இருக்கனும்’ என கடவுளை வேண்டி கொண்டார்.
சிஸ்டர் வந்து கதவை தட்டவும் தான் விழிப்பு வந்தது மூவருக்கும். ஜெய் வாட்ச்சை பார்க்க அது மாலை நான்கு எனக்காட்டியது ‘இவ்வளவு நேரமா தூங்கிட்டோம்…!!’ அது அவனுக்கு பழக்கம் தான்.  சூட்டிங்க் ஸ்பாட்டில் கிடைத்த இடத்தில் தூங்கும் பழக்கம் ஆனால் இவ்வளவு நேரம் கிடையாது.  
அன்னம் அவனை பார்த்த நிம்மதியில் தூங்கி விட்டாள். வெகு நேரம் அப்படியே இருந்ததால் கால் மரத்துவிட்டது.  எழுந்தவன் முகம் கழுவி வர அன்னம் பேசுவது தெரிந்தது.
அந்த பக்கம் மங்களம் தான் பேசினார். 
“தூங்கிட்டியா அன்னம் ஃபோன் ரிங்க் போயிட்டே இருக்கு எடுக்கலை??”
“ஆமா அத்தை…. சைலண்ட்ல இருந்தது தெரியலை….” 
“நைட்டுக்கு குடுத்து விடுறேன் மாமா இருக்கட்டும் நீங்க வந்துடுங்க” 
“இல்ல அத்தை நான் இருக்குறேன் மாமா வேண்டாம்” 
இவர்களின் பேச்சை பின்னால் இருந்து கேட்டவன் “அம்மா..” என்றான். 
அவன் சத்ததில் திரும்பியவள் என்ன?? என பார்க்க “ஃபோன்” என்றான். 
அன்னம் அவனிடம் நீட்ட வாங்கியவன்  “அம்மா நைட்டுக்கு கொடுத்து அனுப்புங்க…  அப்பா வேண்டாம்… அவ அங்க வந்துடுவா… நான் இருக்குறேன். நாளைக்கு மாமாவ அழைச்சு கிட்டு வர்றேன்” என்றவன் போனை வைத்தான்.
அன்னம் அவனை தான் பார்த்த படி நின்று இருந்தாள். ஈஸ்வரன் இவர்களை பார்ப்பதை பார்த்தவன் “மாமா நான் கேன்டீன் போயிட்டு வர்றேன்” என்றவன் வெளியே வர அவன் பின்னாலேயே வந்தாள் அன்னம். 
அவளை கவனிக்காதவன் போல முன்னால் சென்றவன் பின்னால் ஓடத்தான் முடிந்தது. “நில்” என்றால் நின்று இருப்பான்!! ஏனோ சொல்ல தான் வாய் வர வில்லை.. 
இரண்டு டீயை வாங்கியவன் சேரில் அமர்ந்தவன்  அவளுக்கு வாங்கியதை அவள் புறம் நகர்த்தி வைக்க, தூங்கி எழுந்ததும்  அவளுக்கும் சூடான பானம் வேண்டுமாய் இருக்க எதுவும் பேசாமல் எடுத்து கொண்டாள் அன்னம்.                                                                                                                                                                            “வீட்டுக்கு அவனை போ..” என்று அவனிடம் எப்படி சொல்ல என பார்த்தாள் அவனை.  ஜெய் அன்னம் பேசுவாள் என அமைதியாக இருக்க அவளிடம் எந்த சத்தமும் இல்லை குடித்தவன் எழுந்து போக பார்க்க…. 
“நான் இங்கயே இருக்குறேன் நீங்க வீட்டுக்கு போங்க…” என்றாள் தடுமாறி மெதுவாக. அவன் எதுவும் பேசாமல் இருக்க அவன் முகம் பார்த்தாள் அன்னம். “நான் இருக்கவா…” அன்னம் கேட்க. 
“என்னைய கேட்டு தான் நீ  எல்லாம் செய்றியா…??” அவனின் கேள்வியில் அன்னம் ஜெய் முகம் பார்க்க அதில் வருத்தமா… கோபமா.. ஆறாமையா… அவளால் பிரித்து பார்க்க தெரியாமல் குனிந்து கொண்டாள். “கேக்குறேன்ல பதில் சொல்லு அன்னம்… என்னைய கேட்டு தான் நீ எதையும் முடிவு செய்றியா… நீ தான் போகனுன்னு நினைச்சிட்டியில அப்பறம் என்ன இருக்கவா..??”   
ஜெய் கேட்டது காலையில் அவள் வீட்டை விட்டு வந்ததை பற்றி. அவளுக்கு அந்த நியாபகம் இருந்தால் தானே…!!! அவள் ஜெய்யை பார்த்தில் அனைத்தையும் மறந்து இருந்தாள். இப்போது ஜெய் கேட்கவும் தான் அது அவளுக்கு நினைவிற்கே வந்தது.
அவள் பயந்ததே இதற்கு தானே. தனி கிடைத்தால் வீட்டை விட்டு வந்ததற்கு என்ன சொல்வானோ… என்று பயந்து தானே காலையில் இருந்து ஆட்களின் முன்னேயே இருக்கிறாள். அவன் அறை எடுத்தும் கண்டு கொண்டாள். அதனால் தான் மங்களம் இரு என்றதற்கும் அவன் உள்ளே வருவான் என்பதால் தான் வெளியே சென்று அமர்ந்து கொண்டது. அதோடு அவனுடன் இருக்கவேண்டும் என்றும் தோன்றியதால் வந்து அமர்ந்து கொண்டாள் .
மங்களத்துடன் “வீட்டுக்கு போ” என்றதற்கும், அவனை அனுப்பிவிட்டு இங்க தங்க நினைத்து கூட அவன் கேட்க்கும் கேள்விக்கு பதில் சொல்ல தைரியம் இல்லையா?? இல்லை அதற்கு இவளிடம் பதில் இல்லையா?? என தெரியாமல் தான்.
அன்னம்  பதில் சொல்ல வாய் திறக்க “பேசாதடி….  வர்ற கோவத்துக்கு எதையாவது பேசிற போறேன். நீ என்ன சொல்லுறது… நான் செல்லுறேன் நீ எனக்கு வேண்டாம் போ… நீ எங்க இருக்கனும் நினைச்சையோ அங்க இரு… இத்தனை நாள் உன்ன எதிர் பார்த்து தான் இருந்தேனா.. இல்ல தான, இப்பவும் நான் மட்டும் தான்… எப்பவும் நான் மட்டும் தான்” என்றவன் சென்று விட, அன்னம் தான் அப்படி நின்று விட்டாள். 
அவள் வீட்டை விட்டு வந்தது அவர்களின் பேச்சு ஒரு காரணம் என்றாலும், ஜெய்க்கு இவர்கள் அனுப்பிய டைவர்ஸ் நோட்டீஸ் தான் நிஜத்துக்கு  காரணமே. ‘நான் தான இவர் மேல கோவப்படனும்…!!  இவர் எதுக்கு நம்மள கோவிச்சுக்குறாரு??’ நினைத்தவள் அப்படியே நின்று இருந்தாள்.
அவளுக்கு தெரியவில்லை அவன் கோபம் அவள் மீது தான் என்றாலும் அவளை பேசியவர்களை “வீட்டை விட்டு போ” என்று சொல்லாமல் இவள் வீட்டை விட்டு வந்தது மட்டுமே. இது என் வீடு என்று நினைக்காத்தால் தான் அவள் வந்தாள் என்பதால் வந்த கோபம்.  “எதுவா இருந்தாலும் இவ அங்க வைச்சு தான என்னைய கேட்கனும்… அது தான இவளுக்கு உரிமையான இடம் அதை விட்டு வந்துட்டா..!!”என்பதால் வந்த கோபம். 
“ஒருவரின்  இருப்பை இரண்டு மணி நேரத்தில் புரிய வைக்க முடியுமா??” என்ற கேள்விக்கு “முடியும்” என்று சொல்லி இருந்தாள் அன்னம் அவளின் செயலில். அவள் இல்லாத அந்த இரண்டு மணி நேரமும் அவனுக்கு அந்த வீடு வீடாக தெரிந்ததா?? இல்லையே… அந்த கோபம் தான் அவனுக்கு. “தான் வரும் வரை கூட அவளால் இருக்க முடியவில்லையா…  தான் வந்ததும் அவளை தேடுவேன் என்ற நினைவு  அவளுக்கு போகும் போது இல்லையா..??” 
“வீட்டை விட்டு வெளியில் வந்து கூட என் நினைவு வரவில்லையா…?? என்னுடன் பேசவேண்டும் என்று தோணவில்லையா??” அது தான் அவன் கோபம். அது புரியாமல் தான் செல்லும் அவனை தான் பார்த்து இருந்தாள் அன்னம்.  
இரவு உணவினை எடுத்துக்கொண்டு வீராசாமியும் அன்புவும் உடன் ரூபியும் வர, ஈஸ்வரன் தான் வருத்தப்பட்டார். 
“நீங்க ஏன் இதை எல்லாம் செய்றீங்க அத்தான்?? கவி வந்து இருப்பான்ல.” “விடு ஈசு… இதுல என்ன கஷ்டம். இத்தனை நாள்  விட்டு இப்ப தான் எல்லாம் ஒன்னா இருக்க சமயம் கிடைச்சு இருக்கு… பாரு பசங்க சந்தோசமா இருக்காங்க” என்று அவரிடம் பேச்சு கொடுத்தார் வீராசாமி. அவரின் பேச்சில் ஈஸ்வரன் மெலிதாக சிரிக்க… அன்புவும் ரூபியும் அதை கிண்டாலாக சொல்ல….  வெகு நாளைக்கு பிறகு ஈஸ்வரன்  மனம் விட்டு அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அன்புவும், ரூபியும் அவர்களின் இருபக்கமும் அமர்ந்து கதை கேட்க, அன்னம் அனைவருக்கும் சாப்பிட தட்டு வைக்க,  அனைவரும் பேசி சிரித்த படியே  சாப்பிட்டு முடித்தனர் .
அன்னம் அனைத்தையும் சரி படுத்தியவள் “அன்பு நாளைக்கு கவி வரும் போது எனக்கு மாத்து டிரஸ் குடுத்து விடு…” என்றவள் அவள் கையில்  சாப்பிட பாத்திரம் தேவையில்லா சாமான்களை எல்லாம் கட்டி கொடுக்க, “அக்கா நீங்க போங்க நான் இருக்கேன்” என்றாள் அன்பு.
“என்ன!! நீ இருக்குறதா?? எப்படி காலையில அழுதுட்டு நின்னு இருந்தையே அப்படியா… நைட் ஏதாவது தேவையின்னா என்ன செய்வ… கவி இருந்தாலும் உன்னைய விட்டு போகலாம் இப்ப வேண்டாம்…  எமர்ஜென்சினா அழுதுக்கிட்டு நிப்ப அழுமூஞ்சி…. உனக்கு எப்படிதான் மெடிக்கல்ல சீட் கொடுத்தாங்களோ!! வேண்டாம் நீங்க போங்க நான் இருக்குறேன்” அன்னம் சொல்ல இருவரின் பேச்சையும் தான் கேட்டுக்கொண்டு இருந்தான் ஜெய். 
ரூபியுடனும் பேசுவாள் அன்னம். அதில் அக்கரை மட்டும் இருக்கும் இப்படி உரிமையாக பேசமாட்டாள். ரூபி எது சொன்னாலும் “சரி அத்தைகிட்ட கேக்கலாம்” அது மட்டுமே இப்படி வாய் பேச மாட்டாள். 
இப்போது அவள் அன்பு உடன் வாய் பேசிய படி இருக்க “மாமா… நீங்க சொல்லுங்க… அக்காவ கூட்டிக்கிட்டு நீங்க போங்க… நான் இருந்து அப்பாவை பாத்துக்குறேன்” என்று ஜெய்யிடம் அன்பு.
வீராசாமி வெளியில் சென்றவர் வர “என்ன இங்க பஞ்சாயத்து” என்றார். அன்பு “பெரிய மாமா” என்றவள் அனைத்தையும் சொல்ல மகன் முகத்தை பார்த்தவர் “நான் இங்க இருக்குறேன் நீங்க எல்லாம் வீட்டுக்கு போங்க… பொண்ணுங்க நைட்ல இங்க தங்க வேண்டாம்” என ஈஸ்வரனுக்கு ஆண் துணை வேண்டும் என நினைத்தவர் “ஜெய் நீ இவங்கள கூட்டிக்கிட்டு போ” என்று அன்புவில் ஆரம்பித்து ஜெய்யில் முடித்தார். 
ஜெய் இவர்களின் முகம் பார்த்தவன் அன்பு, ரூபி முகத்தில் வீட்டிற்கு போக பிடித்தம் இல்லை என்பது தெரிய… “நீங்க மூனு பேரும் இங்கயே இருங்க நாங்க வீட்டுக்கு போறோம்” என்றதும் அன்னம் ஜெய் முகம் பார்க்க “அன்னம் எல்லாத்தையும் எடுத்துக்க” என்றான். அப்போதும் அவனின் “அன்னம்” என்ற அழைப்பை அவள் கவனிக்க வில்லை. 

Advertisement