Advertisement

அதுவரை அடக்கி வைத்திருந்த அன்னதின் கண்ணீர் அவனை பார்த்தும் உடைபெடுக்க “கவி!!”  என்றவள் அவன் மீது விழுந்து குழுங்க அவனுக்கும் புரியவில்லை என்னவென்று.
கவி அப்போது தான் வந்தான் அன்னத்தையும் ஜெய்யையும் பார்க்க. வீட்டினுள் சத்தம் கேட்க உள்ளே போவதா… வேண்டாமா என்று நின்று இருக்க… சில நிமிடங்களில் வெளியில் அன்னம் வர  இருவருக்கும் முகம் பார்த்து அதிர்ச்சி தான்.
அவனை பார்த்த அனைவருக்கும் இன்னும் அதிர்ச்சி. இப்போது தான் அவனை இவர்கள் பார்க்கிறார்கள்.  அப்படியே அன்னத்தை போலவே இருந்தான். சிறு வயதில் அவனை பார்த்தது அதன் பின் அவன் இங்கு வந்தது இல்லை. கடந்த வருடம் தான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து சின்னதாக கார் சர்வீஸ் ஷோரூம் வைத்து இருக்கிறான்.
சென்ற முறை ஜெய் வந்திருந்த போது கவி வேலை விசயமாக வெளியூரில் இருந்ததால் அவனால் ஜெய்யை பார்க்க முடியவில்லை. 
இப்போதும் அவன் ஊருக்கு தான் சென்று கொண்டு இருந்தான். போகும் முன் ஜெய்யை பார்த்து செல்லவே வந்தது. நேற்றே ஜெய் அவனுக்கு அழைத்து சொல்லி இருந்தான் “காலையில் வந்து விடு” என்று. “மாமா நான் ஊருக்கு போகனும் வந்ததும் வரவா… உங்கள பாத்துட்டும் அப்படியே போக முடியாது மாமா..” என்று தயங்கிய படி சொல்ல, “பரவாயில்ல வந்துட்டு  போ..” என்றிருந்தான். 
நேரில் பார்க்க வில்லை என்றாலும் ஜெய் வந்ததில் இருந்து இவர்களுடன் போனில் பேசிக்கொண்டு தான் இருக்கிறான்.
அன்னதின் அழுகை நிற்காமல் தொடர “அக்கா… அழுகாத இன்னும் கொஞ்ச நேரத்துல மாமா வந்துடுவார் பேசிக்கலாம்” என்று கவி சொன்னதும் சட்டென அவளின் அழுகை நின்றது. எழுந்து முகம் துடைத்தவள் “கவி போலாம்..” என்றாள். 
“எங்க… எங்க…???” என்று வீராசாமி, மங்களம், கவி பதற “கவி நம்ம வீட்டுக்கு போலாம்” என்றாள் அன்னம் தெளிவாக.  “என்ன பேச்சு இது அன்னம்… அப்ப இது யார் வீடு??” மங்களம் கேட்டார். அன்னம் வீராசாமியை பார்த்தவள் “இத்தனை நாள் இது என் வீடு…  இவங்க என் குடும்பத்து ஆளுங்கன்னு நினைச்சதால தான் இதுவரை இவங்க பேச்சுக்கு நான் எதிர்த்து பேசுனது இல்ல மாமா… இப்ப இவங்க பேசுனது…!!!??”  என்றவள் கவியின் கையை பிடித்து வெளியே சென்றாள். 
காரில் அன்னம் அமர “அக்கா…” என்றான் கவி. “இப்ப நீ எடுக்குறயா??? இல்லை நான் போகட்டா??” அன்னம் கவியை பார்க்க, “அக்கா… மாமா கொஞ்ச நேரத்துல வந்துடுவார் அவர் வரட்டும் பேசிக்கலாம்… அவர் இல்லாத நேரத்துல நாம போறது சரியில்லக்கா… அவர் வந்து கேட்டா என்ன சொல்ல..??” என்றவனை “தள்ளு” என்றவள் காரை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தாள். அவளின் இயலாமை கோபமாக மாறி இருந்தது.  “ஜெய் அவளின் நினைவில் இருந்தானா??” என்று கேட்டால் பதில் “இல்லைதான்.” அவளின் புத்தி முழுதும் பாட்டின் பேச்சு மட்டுமே இருக்க ஜெய் இல்லை அங்கு.
இப்படி ஒரு அன்னத்தை யாரும் பார்த்தே இல்லை. இது வரை அவள் யாரையும் எதிர்த்து ஒரு வார்த்தை, ஏன்?? பார்வை கூட பார்த்து இல்லை. இப்போதைய அவளின் இந்த கோபம் அனைவருக்கும் அதிர்ச்சி தான். அவள் போவதை பார்க்க மட்டுமே முடிந்தது அவர்களால். கவி காரை எடுத்தவன் அவள் பின்னால் சென்றவன் அவள் அருகில் நிறுத்தி “அக்கா ஏறு நம்ம வீட்டுக்கு போகலாம்..” என்றவன் பேச்சு கேட்காததை போல் நடக்க “அக்கா.. பிளீஸ் ஏறுக்கா..” என்று கவி வீதியில் கெஞ்ச ஆரம்பிக்க,  அவனை பார்த்தவள் எதுவும் பேசாமல் ஏறிக்கொண்டாள்.
வீராசாமியும் மங்களமும் அப்படியே வாசலில் அமர்ந்து விட, உள்ளே ரம்யா அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள். காலையிலேயே சத்தியன் இவளிடம் சொல்லி தான் சென்று இருந்தான்.  “ரம்யா பாட்டி ரெம்ப பேசுறாங்க அவங்கள பேசாம இருக்க சொல்லு… ஏதாவது பிரச்சனை ஆச்சு நான் மனுசனா இருக்கமாட்டேன்!!” என்று.
‘இப்போது இவரால் தான் அன்னம் சென்று விட்டாள் என்று தெரிந்தால்?? அம்மா…’ நினைக்கும் போதே பயம் வந்துவிட என்ன செய்ய… புரியமல் இருக்க, வாசலில் கார் சத்தம் கேட்க அவளின் உடல் ஒரு முறை தூக்கி அடிக்க அப்படியே அமர்ந்து கொண்டாள்.
ஜெய் இறங்கியவன் பார்த்தது வாசலில் அமர்ந்து இருந்த மங்களத்தை தான். “ம்மா…” என்றவன் மங்களத்தின் அருகில் வர அவருக்கு அவனிடம் எப்படி பேச?? என தெரியவில்லை. சத்தியனும் இறங்க அவனுக்கும் அங்கு இருந்த நிலை ஏதோ தவறாக பட… எட்டி பார்த்தான். வீராசாமி வாசல் நிலையில் சாய்ந்து அமர்ந்து இருந்த கோலம் “அப்பா…” என சத்தியன் உள்ளே போக, ஜெய் அப்போது தான் அவரை பார்த்தான். 
‘ஏதோ சரியில்லை’ என புரிய, ஜெய் “ம்மா.. உள்ள போகலாம்”  என்றவன், அவறை எழுப்பி உள்ளே அழைத்து போக அங்கு அனைவரும் இருந்தனர். அன்னம், ரம்யா, ரூபிணி தவிர.  ரூபிணி இருந்து இருந்தாள் அப்போதே ஜெய்க்கு அழைத்து இருப்பாள். அவள் விசாகாவுடன் மாடியில் இருந்ததால் கீழே நடந்தது எதுவும் தெரியாது… ஜெய் “ரூபி” என்று சத்தம் கொடுக்க “அய்… அண்ணா வந்தாச்சு” என அவளும் விசாகாவும் வர, “ரூபி தண்ணி கொண்டு வா..” என்றான்.  
சத்தியன் வீராசாமியை அமரவைத்தவன் “ரம்யா எங்க??” என்றான் அவளின் அம்மாவிடம். அவர் பதில் சொல்லாமல் உள்ளே பார்க்க “ரம்யா” என்ற சத்தியன் குரலுக்கு அனைவரிடமும் பயம் பிடித்து கொண்டது. 
ரம்யா வர  “என்ன ஆச்சு?? அம்மா, அப்பா வெளிய இருக்காங்க… அண்ணி எங்க??” என்னும் போது தான் ஜெய்யும் அன்னத்தை தேட,  ரூபி “ அண்ணா அண்ணி மேல இருக்காங்க நான் அழைச்சுகிட்டு வர்றேன்” என்றவள் மேலே போக, “அக்கா அங்க இல்லை” என்றாள் ரம்யா. மெதுவாக இருந்தாலும் அனைவரும் அமைதியாக இருக்க அவளின் சத்தம் நன்றாக கேட்டது ஜெய்க்கு. 
“அங்க இல்லையின்னா..” என்று ஜெய் கேட்க  பாட்டிதான் பதில் தந்தார் “உன் பொண்டாட்டி நீ இல்லாதப்ப வீட்டை விட்டு போயிட்டா.. என்ன வளர்ப்போ!!” என்று.
இப்போது வீராசாமிக்கு தான் தாங்க முடியவில்லை. ரம்யா அப்பாவிடம் “சம்பந்தி சொல்லுறேன்னு தப்பா நினைக்காதீங்க  நீங்க உங்க வீட்டு ஆட்களை கூப்பிட்டுகிட்டு போங்க எதுனாலும் அப்பறம் பேசிக்கலாம்” என்றதும் அதிர்ந்து போனார்கள் அனைவரும். “என்ன சம்பந்தி..” என்றார் ரம்யாவின் அப்பா.  
வீராசாமியின் பேச்சில் மூர்த்தி, பிரதாப், ராகவ் எல்லாம் அப்படியே நின்றனர். தவறு முழுதும் தங்கள் மீது இருக்க அவர்களுக்கும் எப்படி சமாதானம் செய்ய என தெரியவில்லை. வீராசாமி பேச்சுக்கு அப்படியே தான் நிற்க வேண்டியதாகியது.
“நாங்க எல்லாரையும் மரியாதையா தான் நடத்த விருப்ப படுறோம் ஆனா…. இங்க சூழ்நிலை அப்படி இல்லை…” என்று பேசும் போதே “இப்ப நான் என்ன சொல்லிட்டேன்?? மரியாதை இல்லாம பேச??? எங்கள வெளிய போக சொல்ல??” பாட்டி கேட்டவர் 
“நீயே சொல்லுப்பா ஜெய். உனக்கு விவாகரத்துக்கு நோட்டீசும் அனுப்பிட்டு சொத்தையும் அவ பேர்ல எழுதுன்னா  யாரும் கேக்க மாட்டாங்களா…!!”  என்று கேட்க, ஜெய்  அப்படியே அமர்ந்து விட்டான். 
ஜெய்க்கு அன்னம் வீட்டில் இல்லை என்பதே இன்னும் அவன் புத்தியில் ஏற்றிகொள்ள வில்லை. இதில் டைவர்ஸ் நோட்டீஸ் விசயம் அவளுக்கு தெரிந்து விட்டது என்றதும், அடுத்து என்ன செய்ய வேண்டும்… என்பது தெரியாமல் அமர்ந்து விட்டான்.
மிகவும் தீவிரமான நிலை தான் அங்கு.  ஜெய் வீட்டை விட்டு போன போது கூட அதை எளிதாக கடந்தவர்களால் அன்னம் சென்றதை எப்படி எடுக்க… என்று தெரியவில்லை. 
சாந்தியும், வள்ளியும் கூட ‘வீராசாமி சொன்னதும் அன்னம் அமைதியாகி விடுவாள்’ என்று நினைத்து இருக்க ‘அவள் வீட்டை விட்டு செல்வாள்’ என்று நினைக்க வில்லை. 
அன்னம் இருந்த வரை “பேசலாம்” என்று இருந்தவர்கள் அவள் சென்றதும் பயம் பிடித்து கொண்டது. 
ஜெய் சில நிமிடங்களில் தன்னை சுதாரித்து கொண்டவன் “என்ன நடந்தது…” கேட்க மங்களம் பாட்டி பேசியதை சொல்லிவிட்டார். 
சத்தியன் தான் கேட்டான் பாட்டியை பார்த்து. “யார் பணத்துக்கு ஆசை படுறது…?? உங்க கிட்ட யார்  எப்ப வந்து சொன்னாங்க ரைஸ் மில்ல ரம்யா பேர்ல எழுதுறதா..??  உங்க பசங்க ரெண்டு பேரும் வெளிநாட்டு டீலர் சிப் எடுத்தாங்கல அதுக்கு பணம் எங்க இருந்து வந்தது??” 
“என்ன புதுசா கேக்குற…. அவங்களுக்கு வந்த லாபத்துல தான் டீலர் சிப் எடுத்தாங்க” இப்பேது வள்ளி பேச 
சத்தியன் பிரதாப்பை பார்த்தான் “என்ன மாமா.. நிஜமா?? உங்களுக்கு வந்த லாபத்துல தான் எடுத்தீங்களா??” என்று 
பிரதாப் தலை குனிந்து நிற்க “அவருக்கு லாபம் வரல… அப்பா தான் அவங்க போங்குல வாங்கின பணத்துக்கு ஜாமீன் போட்டாரு, இரண்டு மாசத்துல மொத்த பணத்தையும் தர்றதா சொல்லி இவரும் நம்ம வீட்டு மாப்பிள்ளைன்னு  குடுத்தாச்சு இப்ப வரைக்கும் அதை பத்தி பேச்சு இல்லை. இது அண்ணிக்கும் தெரியும் அதை பத்தி ஒரு வார்த்தை பேசி இருப்பாங்களா..”  
“இதோ ராகவ் கல்யாணத்துக்கு என் மாமனார் பத்து லட்சம் வாங்கி இருக்காங்க.. அதுவும் தெரியும்.  ஜெய் ரம்யா பேர்ல ஸ்பின்னிங் மில்லை வாங்கி கொடுத்துட்டு தான்  ரைஸ் மில்லை அண்ணி பேர்ல எழுதுனான். அது அண்ணிக்கே இன்னும் தெரியாது..”
“அப்பா தான் அண்ணாவ வரவைக்க டைவர்ஸ் பேப்பர் அனுப்பி வைச்சாரு அதுவும் அவங்களுக்கு தெரியாது..” என்றவன் ரம்யாவை பார்த்து “எங்க அண்ணன் விசயத்தை யாரு உங்க வீட்டுல சொன்னா..??” என்றான் 
ரம்யா அதிர்ந்தவள் ஜெய்யை பார்க்க ஜெய் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான். அவனின் பார்வையில் ரம்யா தலை குனிந்து கொண்டாள். ராகவை கூப்பிட சென்ற போது தன் அம்மாவிடம் தான் இதை சொல்லி இருந்தாள். அது எப்படி பாட்டி காதுக்கு சென்றது என தெரியாது?? எப்படி இருந்தாலும்  அவள் தானே வீட்டில் சொல்லி இருக்கிறாள். சாந்திக்கும் வள்ளிக்கும் கூட இந்த விபரம் புதிது தான்  ரம்யாவின் பாட்டி அவர்களிடம் சொல்லும் வரை. வீராசாமி யாருக்கும் தெரிய கூடாது என்றவர்  தம்பி தங்கைகளிடம் இதை பற்றி சொல்லவில்லை. 
ஸ்பின்னிங் மில் விபரத்தை தவிர,  ரம்யாவின் தந்தை பணம் வாங்கியதோ… பிரதாப் பணம் வாங்கியதோ… ரம்யாவிற்கு தெரியாது. 
சத்தியன் படித்தது டெக்ஸ்டைல் பற்றியது. அவனுக்கு சிறு வயதில் இருந்தே ஸ்பின்னிங்க் மில் வைக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. இங்கு ரைஸ் மில்லை அன்னம் தனியாக நடத்த முடியாது அவளுக்கு துணையாக இருக்கட்டும் என்று தான் வீராசாமி சத்தியனை இங்கே இருக்க வைத்தது. 
ஜெய் வந்ததும் அவனிடம் சத்தியன் தன் விருப்பத்தை சொல்லியவன், பக்கத்து ஊரில் நல்ல நிலையில் உள்ள ஸ்பின்னிங் மில் வருவதாக சொல்லி பேங்கில் பணத்திற்கு ஏற்பாடு செய்ய போக ஜெய்தான் வேண்டாம் என்றான். ரம்யாவிடம் ஜெய்  “ரைஸ்மில்  வேண்டுமா…  இல்லை சத்தியனுக்கு விருப்பமான ஸ்பின்னிங்க் மில் வேண்டுமா…” என கேட்க ரம்யா “ஸ்பின்னிங் மில்” என்றதால் அவளின் பெயருக்கு   மில்லை வாங்கியவன்  அன்னதின் பெயரில் ரைஸ்மில்லை பதிவு செய்தான். 
ரம்யாவின் வீட்டினருக்கும் இந்த ஸ்பின்னிங் மில் விபரம் புதிது தான். அவர்கள் அனைவரும் பேச்சில்லாமல் நின்றனர்.
சத்தியன் அவர்களை பார்த்தவன் “நீங்க எல்லாம் என்ன மனுசங்க???” என்றவன் “இன்னும் ஒரு நிமிசம் கூட இங்க இருக்க கூடாது..” என்றவன் வாசலை பார்த்து கை நீட்ட, ஜெய்யின் ஃபோன் அலரியது……………………….

Advertisement