Advertisement

                      ஓம் நமச்சிவாய
தாளம் 12
விருந்துக்கான ஏற்பாடு ஒரு புறம் நடந்து கொண்டு இருக்க ஜெய்யை அழைத்து வர  சத்தியன் ஏர்போர்ட் சென்று இருந்தான். 
வீராசாமியும் சொன்னார் தான் “அவனே வந்துடுவான்டா… நீ இரு… ராகவ் வர்றப்ப நீ இருக்கனும்” என்று.
“இல்லப்பா ராகவ் வர நேரம் இருக்கு. அதுக்குள்ள ஜெய்யை அழைச்சுகிட்டு வந்துடுறேன்” என்றவன் சென்றுவிட்டான்.
உள்ளே இருந்து கேட்டுக்கொண்டு இருந்த ரம்யாவின் பாட்டிதான் “என்னடி இது!! ஊர்ல இல்லாத அதிசயமா இருக்கு…. மச்சினன் கல்யாணம் முடிச்சு இப்ப தான் வீட்டுக்கு விருந்துக்கு வர்றான் அவன பாக்காம… என்னமோ அண்ணனை கூப்பிட போறேன்னு போறான் நீயும் அத கேக்காம இருக்குற….” என்று நொடித்தார் ரம்யாவிடம்.
ரம்யாவின் பாட்டி இங்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. சத்தியனும் ரம்யாவும், ராகவையும் விசாகாவையும் விருந்துக்கு அழைக்க போனவர்களுடன் “நான் பேத்தி கூட ரெண்டு நாள் இருந்துட்டு வர்றேன்…” என்று அவர்களுடன் புறப்பட்டார். 
சத்தியன் ரம்யாவை பார்க்க… “வர்றேன்னு சொல்லுறவங்கள எப்படி வேண்டான்னு சொல்லுறது… ரெண்டு நாள் தான்… நான் அண்ணா வரும் போது திரும்ப அனுப்பி வைச்சுடுறேன்”  ரம்யா சொல்ல, அரை மனதாக தான் சம்மதம் சொன்னான் சத்தியன். 
அவர் வந்ததில் இருந்து  அன்னத்தை கேள்வி கேட்பது மட்டுமே அவர் வேலை .
“என்ன அன்னம்… உன் வீட்டுகாரன் திரும்ப ஊருக்கு போயிட்டானாமே!!”  
அன்னம் “ஆமாம்  பாட்டி” 
“எப்படி??? திரும்ப வருவானா…. இல்ல அங்க தான் ஜாகையா…” பாட்டி கேட்க., 
“ஏம் பாட்டி… அண்ணா வரலையின்னா என்ன… நீங்க அண்ணிய கூட்டிட்டு போய் விட்டுட்டு வாங்க!! ரூபிணி பதில் சொன்னாள். 
“என்ன… மங்களம் பொண்ண இப்படி வளர்த்து வைச்சு இருக்குறா?? பெரியவங்க பேசும் போது மதிக்காமா இவ பதில் சொல்லுறது…” என மங்களத்தையும் சேர்த்து பேசினார். 
“ஆமாம் பாட்டி… எங்க அம்மா என்னைய சரியாவே வளர்கல… உங்க அம்மா இருந்திருந்தா எப்படி வளர்க்குறதுன்னு கேட்டு அப்படி வளர்த்து இருப்பாங்க…!!” என்று அவருக்கு விடாமல் பதில் பேச “ரூபி… உனக்கு நாளைக்கு டெஸ்டு இருக்குல போ… போய் படி” என்று அன்னம் அவளை அனுப்பி விட்டாள். 
“என்னடியம்மா…. வீட்டுக்குள்ளயே கூட்டணியா??” பாட்டி அதற்கும் பேச அன்னம் “பாட்டி உங்களுக்கு சாப்பிட என்ன வேணும்” கேட்டாள். 
“எனக்கு வேண்டியதை என் பேத்தி பாத்துப்பா… நீ போ… உன் வேலைய பாரு” என்றவர் “ரம்யா” என்று அவளை அழைத்தார்.
ரம்யா வர “ஏன்டி, என்ன குடும்பம் நடத்துற?? அங்க பாரு அவ எப்படி இருக்கான்னு….  பளபளன்னு…. நீயும் தான் இருக்குற…. வீட்டு வேலை எல்லாம் செஞ்சு அப்படியே இத்துபோன பித்தளை மாதிரி… அவளை பாத்து கத்துக்கோ… எப்படி மாமனார் மாமியார கைகுள்ள வைச்சுகனுன்னு… அவளை சொன்னா உன் நாத்தி அப்படி வர்றா… உனக்கு ஒரு மண்ணும் தெரியலை!!” என பேத்தியை பேசியே அவருக்கு வாய் வரண்டு விட்டது. 
“சனியனை ஹேண்ட் பேக்குல போட்டுக்கிட்டு வந்திட்டேனோ..!! இப்ப தான் சித்திங்க பத்தி பேசுறதை அத்தை நிறுத்தி இருக்காங்க.. இப்ப பாட்டியா!!” அவள் சிந்தனையில் இருந்தாள். 
அன்று வளையல் சடங்கில்  சாந்தி பேசிய பேச்சுக்கள் இப்போது வரையில் வீட்டில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. வீராசாமி, ஜெய் இருக்கும் போது மட்டும்  மங்களம் அமைதியாக இருப்பவர், அவர்கள் சென்றதும் பிடித்து கொள்வார் அன்னத்தையும் ரம்யாவையும். சத்தியன் அவர் பேச்சுக்கு எதிராக எதுவும் பேச மாட்டான்.
“அவ அங்க அந்த பேச்சு பேசுறா…. நீ அப்படியே புடிச்சு வைச்ச புள்ளையாரா நிக்குற” என அன்னத்தை திட்டியவர் “இவங்க  யாரும் அவங்க தங்கச்சிங்கள ஒரு வார்த்தை கேள்வி கேக்கலை என்னயும் பேச விடல” என்றவர் ரம்யாவிடமும் “இனி உங்க வீட்டு ஆளுங்க ஏதாவது பேசட்டும் அப்பறம் காட்டுறேன் இந்த மங்களம் யாருன்னு என்ன நினைச்சு கிட்டு இருக்காங்க” என்று. 
அவர் பேசுவார் தான், ஆனால்… இப்படி பேசுவார் என்பதே இப்போது தான் தெரியும் ரம்யாவுக்கு.  அன்னத்தை மங்களம் திட்டுவது உண்டு,  இவளை பேசி கேட்டது இல்லை. எது என்றாலும் சத்தியனிடம் மட்டும் தான் சொல்வார். மற்ற படி அனைவரிடமும் குறிப்பிட்ட இடைவெளி இருக்கும். அவர் சற்று நாசூக்கு தான். 
மங்களம் அதட்டி கத்தி எல்லாம் பேச மாட்டார். இப்போது ரம்யா வீட்டினர் செய்து வைத்த செயலுக்கு மங்களம் பேசுவது அவறை பொருத்த மட்டிலும் சற்று குறைவு தான்.  
சிந்தனையில் இருந்தவளை “ரம்யா..” என்று பாட்டி அழைத்தார். “இப்ப என்னத்துக்கு என்னைய கூப்புடுது!!” என்று யேசித்தவள்  அவறை பார்க்க.,  
“ஏய்… பாத்தியாடி அவ சேலைய… நீயும் தான் கட்டி இருக்குற பாரு..” என்று அன்னதின் உடையை காட்டி கூற “என்ன??” என்று திரும்பி பார்த்தாள் ரம்யா. 
ரம்யாவும் சாதாரணமாக எல்லாம் உடுத்த மாட்டாள். காலையில் ஒன்று மாலையில் ஒன்று தான். மங்களமே கேட்டு இருந்தார் “வீடுல இருக்குற பொண்ணு எதுக்கு இத்தனை டிரஸ் மாத்துற?? நாளைக்கு ஒன்னு போட்டா ஆகாதா??” என்று. அவளுக்கு எப்போதும் பளீர் என்று இருக்க வேண்டும். இன்று ராகவ் வருவதால் வீட்டில் சற்று வேலைகள் அதிகம். அன்னம் தான் காலையில் இருந்து வேலைகளை செய்தது.  இப்போதும் சமையலை எட்டி பார்ப்பது மட்டும் தான் ரம்யாவின் வேலை.  அதுவும் மங்களம் சொல்லி.  “வர்றது உங்க அண்ணன்… அவனுக்கு என்ன பிடிக்கும்னு பார்த்து செய்” என்றிருந்தார். 
மங்களம் சொன்னதும் இரண்டு முறை மட்டுமே நடந்து இருந்தாள் வீட்டுக்கும் பின்கட்டுக்கும். அதற்கு தான் பாட்டியின் இந்த கேள்வி.
இன்று அன்னம் கட்டி இருந்தது, அன்று கடையில் ஜெய் அவளுக்கு எடுத்த புடவையை தான்.   கட்டும் போதே அவளுக்கு சற்று அசௌகரியமாதான் இருந்தது அந்த புடவை.  இத்தனை நாள் கட்டியது போல் இல்லாமல் அது சற்றே தெளிவா தெரிய, மங்களத்தை அழைத்து “அத்தை இதை கட்டிக்காவா..” என்று கேட்டு அவர் சம்மதம் சொன்ன பின் தான் அதை கட்டினாள் அன்னம். 
ரூபி சேலையை பார்த்தவள் “அண்ணி சூப்பர்!!  அண்ணாவோட செலக்சன் எப்பவும் பெஸ்ட் தான். இந்த அம்மாவும் எடுத்ததாங்களே இவங்க கட்டுறது போல… அது உங்களுக்கு சூட் ஆகலை… இப்ப பாருங்க எப்படி இருக்கீங்கன்னு!!” என்று அன்னத்தை கண்ணாடி முன் நிறுத்தினாள்.  
இன்னும் சிறு பெண்ணாய் தெரிந்தாள் அன்னம், ரூபிணி சொன்னதும் அன்னத்தின் முகம் சந்தோசத்தில் இன்னும் அழகானது. மங்களத்திற்கு அவளை பார்க்க மனதில் ஏதோ ஒரு கலக்கம் வாசல் வரை சென்றவர்., 
திரும்பி வந்து  அவளுக்கு திருஷ்டி எடுத்தவர், “அன்னம் ஜெய் வந்த பின்ன நீ கீழ வந்தா போதும் சும்மா அவங்க முன்னாடி வராத” என்றவர் “ரூபி நீ வா..” என அவளை மட்டும் அழைத்து கொண்டு சென்றார். 
“ஏம்மா… அண்ணி வந்தா என்ன?? எதுக்கு வேண்டாம்??” சொல்லுறீங்க ரூபி கேட்க, அவருக்கு இருந்த குழப்பத்தில் “சும்மா நைநைன்னு பேசாத… போய் அங்க என்ன வேலை பாரு” என்றவர் பின்னால் சமையல் நடக்கும் இடத்திற்கு சென்று விட்டார். 
சிறிது நேரத்தில் அனைவரும் வந்து விட, மஞ்சுவிற்கு அவர்களுக்கு என்ன கொடுப்பது என்பது தெரியவில்லை…. மங்களம் பின் வாசலில் இருக்க அன்னத்தை அழைத்தாள் மஞ்சு. 
அன்னம் அனைவருக்கும் டீ தர அவளின் உடையை தான் அனைவரும் கவனித்தனர். 
ரம்யாவின் அம்மா அன்னத்திடம் பேச… சாந்தியும் வள்ளியும் எதுவும் பேச வில்லை. விசாக ரூபியுடன் மாடிக்கு  சென்று விட ஆண்கள்  பின் பக்கம் சென்று விட ஹாலில் இவர்கள் மட்டுமே. 
அன்னம் கிட்சனுக்கு போக திரும்ப “வந்து நாளு நாள்ல எப்படி தான் புருசன பின்னாடியே சுத்த வைக்குறாங்களோ!!! நம்ம வீட்டு பிள்ளைக்கு சுட்டு போட்டாலும் இந்த ஆள் மயக்கி தனம் வரல… என்ன பண்ண…??” பாட்டி முடிக்க அன்னதின் கால் அப்படியே நின்றது. 
சாந்தி, வள்ளி, ரம்யாவின் அம்மா என  பாட்டின் பேச்சில் அரண்டு போய் தான் நின்றனர். ரம்யாவின் அம்மா அவரின் பேச்சை உணர்ந்து அவரின் பக்கத்தில் வர.,
அன்னம் திரும்பி அவரை பார்த்தாள். “என்ன பாக்குற… இத்தனை நாள் புருசன் கூட இல்ல அவன் வந்ததும் எப்படி மயக்குனியோ??  சொத்தை வாங்கிட்ட இல்ல..” என்று முடிக்க அன்னதிற்கு  எதுவும் புரியவில்லை!! அவளை தான் பேசுகிறார்கள் என்று தெரிகிறது அது எதற்கு என்று தெரியவில்லை.
“அத்தை சும்மா இருங்க வந்த இடத்தில பிரச்சனை செய்யாதீங்க” ரம்யாவின் அம்மா சொல்ல.,
“என்ன பாட்டி??” என்று அன்னம் சத்தமாக சொல்ல, அவர்கள் வந்தது தெரிந்து மங்களம் உள்ளே வர வீராசாமியுடன் ஆண்களும் உள்ளே வர  அன்னத்தின் “பாட்டி” என்ற சத்தம் மட்டும் தான் கேட்டது. 
“என்ன ரம்யா??” என்று மங்களம் வர, ரம்யாவின் முகத்தில் கலக்கம் அன்னத்தின் முகத்தில் கோபம்.  இருவரின் முகமும் சரியில்லாமல் இருக்க பாட்டி அப்படியே நின்று இருந்தார்.
“அத்தை” என்று அன்னம் அழைக்க “நீ எதுக்கு அன்னம் கீழ வந்த??”  மங்களம் கேட்க,  “இவங்க என்னமோ சொல்லுறாங்க என்னன்னு திரும்ப சொல்ல சொல்லுங்க..” என்றவள் குரலில் இருந்தது என்ன??
மங்களம் அவள் முகத்தை பார்த்தவர் ரம்யாவை பார்க்க “அவளை என்ன மங்களம் பாக்குற… நான் தான் கேட்டேன் ரம்யாக்கு தான் சொத்துன்னு சொல்லிட்டு இப்ப அதை இவ பேர்ல எழுதிடீங்க… அதை தான் கேட்டேன்… வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உன் பையன வரவைச்சு இப்படி சொத்தை எழுது வாங்குறது நல்ல குடும்பத்து பொண்ணு செய்யுற வேலையா…!!” என்று கேட்க வீடு மொத்தமும் ஆணி அடித்தாற் போல் நின்றது.
அன்னதிற்கு பேச்சே வரவில்லை. அவள் வீராசாமியை பார்க்க அவரும் “இது என்ன பேச்சு??” என்பதை போல தான் பார்த்து நின்றார்.  
“மாமா அவங்க சொன்னது உண்மையா??” அன்னம் கேட்க, வீராசாமி பதில் சொல்ல வாய் திறக்க “அவர் என்ன சொல்லுறது… நான் உண்ணமைய பேசுனதுனால தானா  அவர் அமைதியா இருக்குறாரு” பாட்டியே பதில் சொல்ல., 
“நான்  மாமா கிட்ட கேட்டேன் நீங்க பேசாதீங்க..” என்று அன்னம் சொல்ல “இப்ப எதுக்கு அத்தைய பேசுற??” சாந்தி கேட்க “உங்களையும் தான் நீங்களும் பேசாதீங்க..” என்றிட அவளைத்தான் அனைவரும் ஆவென பார்த்து இருந்தனர். 
அன்னத்தின் குரல் இப்படியும் இருக்குமா!! என்று. அத்தனை கோபத்தையும் அடக்கி கேட்டது அந்த குரல்.  
“இத்தன நாள் பேசி இருக்காங்க நான் எதுவும் கேட்டதில்லை…  இப்ப இவங்க பேசுனது நான் பணத்துகாக இங்க இருக்குறதா… சொல்லுங்க அவருக்கு  என் பேர்ல நோட்டீஸ் அனுப்பினீங்களா??”
“அவங்களுக்கு எதுவும் தெரியாம பேசுறாங்க. நீ… அவங்க பேசுறத பெருசா எடுத்துக்காத..” மங்களம் சொல்லும் போதே அவரின் குரலில் அத்தனை கலவரம். ஏதோ நடக்க கூடத்து நடப்பதை போல…  பேச்சு அன்னதிடம் இருந்தாலும் “ஜெய் வேகமாக வர வேண்டும்” என்று மனது அந்த ஈசனை அழைத்த வண்ணம் இருந்தது. 
“அவங்க எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறாங்க… நான் இத்தனை நாள் புரியாம இருந்துட்டேன்” அன்னத்திற்கு  கோபம் என்பதை விட இயலாமை தான். தனக்கு மட்டும் ஏன்??  என்று. அவன் உடன் இல்லாமல் இருந்த போதும் பேசியவர்கள் இப்போது வந்ததும் பணத்திற்காக என்கிறார்கள்.
பாட்டி சொன்ன “டைவர்ஸ்” என்ற வார்த்தை தான் அவள் மனம் முழுவதும். ‘தான் வேண்டும் என்று அவன் வராமல் கட்டாயபடுத்தி அவனை வரவைத்தது  அவளின் நம்பிக்கைக்கு விழுந்த அடியாகாதான்’ நினைத்தாள் அன்னம். ‘இனி யாரிடம் கேட்டு என்ன’ நினைத்தவள் எதுவும் பேசவில்லை அனைவரையும் பார்த்தவள் அப்படியே திரும்பி நடக்க ஆரம்பித்தாள். “அன்னம் எங்க போற??” மங்களம் பின்னாலே வர வாசலின் நின்று இருந்தான் கவி. 

Advertisement