Advertisement

தன் உறவினரை மண்டபத்தில் விட வந்த வேந்தனுக்கு அப்போது தான் மாலை அண்ணாமலை சமையல் எண்ணெய் இன்னும் இரண்டு டின் தேவைபடுகிறது என்று கூறியது நியாபகம் வந்தது.தன் கடையில் வேலை செய்யும் மணியிடம் வந்தவன் இரண்டு டின் எடுத்து வருமாறு பணிந்துவிட்டு ஸ்டோர் ரூம் சாவியை கேட்டான்.அதற்கு மணி அண்ணாமலை வாங்கி சென்றதாக கூறவும் ஸ்டோர் ரூமில் தான் இருப்பார் என்று எண்ணியபடி தான் வந்தான்.ஸ்டோர் ரூமை நெருங்கும் போது யாரோ ஒரு பெண் அதை பூட்டவும் ஒரு நிமிஷம் என்று கூறிக்கொண்டே வந்தவன் மதியழகியை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.
கந்தன் கூறிய சமான்களை எடுத்துவிட்டு வெளியில் வந்தவள் கதவை பூட்டும் சமயம் யாரோ தன்னை அழைப்பதைக் கேட்டு திரும்பியவள் அருள்வேந்தனைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள்.யாரின் கண்ணில் விழக்கூடாது என்று எண்ணினாளோ அவனின் முன்பே விதி அவளை நிறுத்தியது.அவனைக் கண்டவளுக்கு கை,கால்கள் நகர கூட மறுத்தன.
வேந்தனுக்கு அழகியை கண்டவுடன் அதுவரை இருந்த இலகுத் தன்மை போய் முகம் இறுகத் தொடங்கியது.அவன் மறக்க நினைத்த அத்தனை விஷயங்களும் அவன் கண்முன் வந்து போயின.அவளை உறுத்து விழித்தவன் கண்களில் மிதமிஞ்சிய கோபம் மட்டுமே.அதே கோபத்தோடு,
“ஏய்… நீ…”என்று கூறிக்கொண்டு அவன் அழகியை நெருங்கும் நேரம்.அவளை காக்கவெனவே வந்தார் அண்ணாமலை,
“என்னம்மா அழகி சாமான் எல்லாம் எடுத்துட்டியா…”என்று கேட்டுக் கொண்டே வந்தவர்,அங்கு வேந்தனைக் கண்டவுடன்,
“வாங்க தம்பி…என்ன இந்த நேரம்…”என்றார்.ஆனால் அவனோ அவருக்கு பதில் கூறாது அழகியை முறைத்துக் கொண்டு நின்றான்.அவனின் பார்வை உணர்ந்த அண்ணாமலை ஒரு வேலை அழகியை தவறாக நினைத்துவிட்டானோ என எண்ணி,
“இது என் கிட்ட வேலை பார்க்கிற பொண்ணு தான் தம்பி பேரு அழகி…”என்று அறிமுகம் செய்தார்.அதுவரை கோபத்தில் இருந்தவனது முகம் இப்போது யோசனைக்கு சென்றது.என்ன வேலை செய்யுற பொண்ணா..என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன் அவளை புரியாமல் பார்த்தான்.அவளோ தலையை நிமிர்த்தவே இல்லை.அண்ணாமலையோ,
“நீ போமா…போய் சாமன கந்தன் கிட்ட கொடு…”என்று அவளை அனுப்பி வைத்தார்.அவளும் வேந்தனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டாள்.
அவள் செல்வதையே பார்த்தவன் மனதில் பல சிந்தனைகள்,அவனை மேலும் சிந்திக்க விடாமல் அண்ணாமலையின் குரல் தடுத்தது,
“நான் தான் தம்பி சாவி வாங்கிட்டு வந்து கொடுத்தேன்.எப்போதும் மளிகை சமான் கணக்கு வழக்கு எல்லாம் இந்த பொண்ணு தான் பார்த்துக்கும் அதான் அது கிட்ட சாவியைக் கொடுத்தேன்…”என்று அழகி மேல் தவறில்லை என்று விளக்கும் விதமாக கூறினார்.
“ம்ம்…சரி நீங்க போங்க உங்களுக்கு வேலை இருக்கபோகுது…மணிக்கிட்ட எண்ணெய் டின் எடுத்துட்டு வர சொல்லிருக்கேன்…பார்த்து வாங்கிக்குங்க…”என்று கூறிவிட்டு அவரது பதிலை எதிர்பாராமல் சென்றுவிட்டான்.அண்ணாமலையும் அடுத்த வேலையை கவனிக்க சென்றுவிட்டார்.
அழகியோ கந்தனிடம் சாமான்களை ஒப்படைத்துவிட்டு வந்தவள் தனது இடத்தில் வந்து படபடக்கும் தன் நெஞ்சை நீவிக்கொண்டே படுத்தாள்.ஆனால் தூக்கம் தான் தூரப்போனது கண்களின் முன் வேந்தனின் கோபமுகமே வந்து போனது.அவனது கண்களில் கண்ட சீற்றத்தை நினைக்கும் போது நெஞ்சுக்கூடு சில்லிடுவது போல உணர்ந்தாள்.
ப்பா அழகி…இன்னிக்கி நீ தனியா சிக்கியிருந்த உன்ன கொன்னாலும் ஆச்சிரியபடுறத்துக்கில்ல…எவ்வளவு கோபம் வருது…பின்ன நம்ம செஞ்ச காரியத்துக்கு கொஞ்சுவாங்களா…எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் தன் அன்னையின் பேச்சை கேட்டு…அன்றைய தினத்தின் போது அவனது கலங்கிய முகமும் யாரையும் ஏற்றெடுத்து பார்க்கமுடியாமல் நின்றவிதமும் தான் கண்முன்னே வந்து போனது..அவளது செயலை நினைத்து அவளுக்கே கழிவிறக்கமாக போனது.தன் நினைவுகளில் உழன்ற வாறே அன்றைய இரவை தள்ளினாள் அழகி.
வேந்தனுக்கு மனது ஒரு நிலையில்லாமல் தவித்தது,யாரை தன் வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்று நினைத்தானோ அவளை இன்று அதுவும் இப்படி ஒரு சூழ்நிலையில் காண்பான் என்று நினைக்கவில்லை.அவளைக் கண்டவுடன் கொல்லும் வெறியே வந்தது உண்மை ஆனால் அண்ணாமலை கூறிய தன்னிடம் வேலை செய்யும் பெண் என்று கூறியதைக் கேட்டவனுக்கு குழப்பம் மட்டுமே மிஞ்சியது.இவள் எப்படி இந்த நிலையில் இவ அம்மா,அப்பா,அண்ணன் எல்லாம் எங்க…இந்த பெண் அவள் இல்லையோ அவளை போல இருக்கும் வேறு பெண்ணோ என்று பல கேள்விகள் மனதில் ஊர்வலம் வர தொடங்கின ஆனால் அதற்கான விடை தான் இல்லை.ஒரு கட்டத்தில் தலை வெடித்துவிடுவது போல உணர்ந்தவன் எழந்து நேரத்தை பார்த்தான் மூன்று என்று காட்டவும் மீண்டும் படுக்கையில் விழுந்தவனின் நினைவுகளில் அழகியை பற்றிய கேள்விகளே.
அதிகாலையில் தான் கண்ணயர்ந்தாள் அழகி இரவு முழுவதும் மனதில் உள்ள வலிகளை கண்ணீரில் வெளியேற்றியவள் மனது சற்று சமன் பெறவும் தான் தூக்கம் அவளை தழுவியது.எப்போதும் சீக்கிரம் எழும் பழக்கம் உள்ளவள் இன்று அயர்ந்து உறங்குவதைக் கண்ட மரகதுக்கே அழகியை நினைத்து பாவமாக இருந்தது,அண்ணாமலை அவளைக் கூட்டி வருமாறு கூறியிருந்தார் மரகத்திடம்.மரகதமோ அழகி இந்நேரம் குளிக்க சென்றிருப்பாள் என்று நினைத்துக்கொண்டு வர அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கவும்,என்ன இந்த புள்ள இன்னும் தூங்குது எப்போதும் ஏந்திரிச்சுடுமே என்று யோசித்தவாறே அவளை எழுப்பினார்,
“இந்தா புள்ள அழகி…என்ன இன்னும் தூங்குற…அண்ணாச்சி உன்ன கூப்பிடுறாரு..”அதுவரை தூக்கத்தில் இருந்தவள் அண்ணாச்சி பெயரைக் கேட்டவுடன் அடித்து பிடித்து எழுந்தமர்ந்தாள்.அவளைக் கண்டு புன்னகைத்த மரகதம்,
“ஏன் புள்ள அண்ணாச்சி பேர கேட்டாளே இப்படி பயப்படுற…”
“ஆங் அதெல்லாம் ஒண்ணுமில்லக்கா…ரொம்ப நேரமா தூங்கிட்டனா…”என்றாள் பாவமாக.அவளின் நிலை கண்டு மரகத்துக்கு சற்று பாவமாகவும் இருந்தது தான் ஆனால் வேலை செய்தால் தான் ஒரு வேலை கஞ்சி என்று வாழ்பவர்களுக்கு உறக்கம் என்பது எட்டாக்கனி அதுமட்டுமில்லை அண்ணாமலைக்கு வேலை நேரங்களில் ஏதாவது குளறுபடியானால் கடும் கோபம் வரும் அதனாலே அனைவரும் ஒழுங்கா இருப்பர்.
“பேசிக்கிட்டு இருக்காதடி ஓடு குளிச்சிட்டு வா…”என்று அவளை அனுப்பினார்.அவளும் வேகமாக சென்று குளித்துவிட்டு வந்தவள் நேராக அண்ணாமலையை காண சென்றாள்.அடுப்படியில்,
“ஏலேய் கந்தா உப்பு சரியா இருக்கு இதுக்கு மேல போட்டுடாத…”என்று தன் கைகளில் சாம்பாரை ருசி பார்த்தவாரே.கந்தனோ,
“சரிங்க அண்ணாச்சி…”என்று கூறிவிட்டு அடுத்த வேலை செய்ய சென்றுவிட்டார்.அப்போது அங்கு வந்த அழகி,
“அண்ணாச்சி வரச் சொன்னீங்களா…”என்றாள்.அவளை கண்டவுடன்,
“உன்ன எப்ப கூப்புட்டேன் எப்ப வர…”என்று கடிந்தார்.அழகிக்கு இதெல்லாம் பழக்கம் தான் ஆனால் இன்று அவளை அறியாமல் கண்கள் கலங்கியது அதைக் கண்ட அண்ணாமலைக்கு தான் எனவோ போல் ஆனது.
“சரி சரி போய் பின்கட்டுள பத்திரம் கிடக்கு விளக்கிட்டு…காய் நறுக்குற வேலைய பாரு…”என்று கூறிவிட்டு சென்றார்.
வேந்தனோ இரவெல்லாம் தூக்கமில்லாமல் கழித்தவன் விடியற் காலையிலேயே வந்துவிட்டான் மண்டபத்துக்கு.நீ மாப்பிள்ளை வெளியில் அலையாதே என்று தன் வீட்டினர் சொன்னதையோ,உறவினர்கள் சொன்னதையோ அவன் காதில் வாங்கவே இல்லை அவன் மனதில் உள்ள கேள்விகளுக்கு பதில் தேவைப்பட்டது.அவள் தனக்கு பாவத்திற்கு இந்த நிலை தேவை தான் என்று ஒரு மனது கூறினாலும் மற்றொரு மனது அவள் வீட்டார்கள் எங்கே என்ற கேள்வி எழுந்து கொண்டுதான் இருந்தது.அதனால் அண்ணாமலையிடம் கேட்க வந்துவிட்டான்.அடுக்களைக்குள் நுழைந்தவன் அண்ணாமலையை தேட அவரோ பின் கட்டில் இருப்பதாக கூறவும் அங்கு சென்றான்.அங்கோ பத்து பாத்திரங்களை கழவிக்கொண்டிருக்கும் அழகியைக் கண்டவுடன் மனதில் சிறு வலி பிறந்தது.சிறு வயதில் பார்த்த அதே முகம் தான் ஆனால் இன்று மாசு படிந்து எப்போதும் ஏளனத்தோடு பார்க்கும் கண்களில் இன்று இரஞ்சும் பார்வை.அவன் பார்த்த அழகி என்று திமிருடன் அடுத்தவர்களை பணத்தால் மதிப்பிடும் ஒரு பணத்திமிர் பிடித்தவள்.ஆனால் இன்று யோசித்தவன் தன் தலையை குலுக்கி வந்த வேலைய பாருடா வேந்தா என்று தனக்குள் கூறிக்கொண்டவன் அண்ணாமலையை தேடினான்.தூரத்தில் அவர் யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டு வருவதைக் கண்டவன் அவரை அழைக்க முற்படும் வேலை அவனின் தோளை தொட்டது ஒரு கரம்.

Advertisement