Advertisement

அருள்வேந்தன் வெட்ஸ் ரம்யா என்று பொன்னிற எழுத்துக்கள் பொரிக்க பட்ட பெயர் பலகையை சரி செய்து கொண்டிருந்தார் ராமலிங்கம்.
“எலேய் ராமு என் புள்ள பேர நேர வைய்யு டா…மருமக பேருக்கு மேல நேரா இருக்கனும் புரியுதா….”என்று மிரட்டிக்கொண்டிருந்தார்.ராமலிங்கத்துக்கு தன் ஒரே மகனின் திருமணத்தில் எந்தவித தவறு நடக்ககூடாது என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார்.ராமுவும் அவர் கூறியது போல செய்துக் கொண்டிருந்தான். லிங்கம் மேடை அலங்காரம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் நேரம் வேந்தன்,
“ஆங் மண்டபத்துக்கே வந்திடுங்க…நான் இங்க தான் இருக்கேன்….சரி வாங்க…”
“என்னய்யா மாப்பிள்ளை நீ உன்ன வூட்டோ இருக்கச் சொன்னேன்ல…நீ ஏன் அலையுதா…”என்று சற்று கடிந்து கொண்டார் ராமலிங்கம்.தந்தையின் மிரட்டலில் லேசாக சிரித்தவன்,
“இதோ கிளம்பிடுவேன் ப்பா…சமையல் செய்ரவங்க வராங்க வந்ததும் கிளம்பிடுவேன்…”என்றான் மகன்.
மதியழகிக்கோ சிவகங்கை உள் நுழைந்ததலிருந்து மனது ஏதோ நடக்க போகிறது என்று அடித்துக்கொண்டது முயன்று அதனை அடக்கியவள் எப்போதும் போல இருக்க முற்பட்டாள்.ஆனால் அவளது நிலை இன்னும் சிறிது நேரத்தில் மிகவும் மோசமாக போகிறது என்று அவள் அறியவில்லை.ஏதோ ஏதோ யோசனையில் இருந்தவள் மண்டபம் வந்ததைக் கூட அறியவில்லை பக்கத்தில் இருக்கும் பெண்,
“ஏய் புள்ள என்ன யோசிச்சிட்டு இருக்க மண்டபம் வந்துடுச்சு இறங்கு…”என்றாள் அதில் தன்னிலை பெற்றவள்,
“ஆங்…இதோ இறங்குறேன் க்கா…”என்றவள்.தன் ஜன்னல் பக்கம் திரும்பி தன் துணிகள் அடங்கிய பையை எடுக்கும் சமயம்,
“வணக்கம் தம்பி…நல்ல இருக்கீங்கலா…”என்று அண்ணாமலை யாரையோ கேட்டுக்கொண்டிருந்தார்.முதலில் யாரோ என்று நினைத்தவள் பெயரைக் கேட்டவுடன் அசையாமல் நின்றுவிட்டாள்.
“தம்பி பேரு??”என்று அவர் யோசிக்கும் நேரம்,
“அருள்வேந்தன்..”என்றான்.அவனது பெயரை கேட்டவுடன் அழகிக்கு மனதில் பதட்டம் தொற்றிக்கொண்டது.தனக்கு தெரிந்த அத்தனைக் கடவுள்களையும் அவனாக இருக்கக்கூடாது வேண்டியவள் சற்று ஜன்னல் வழியாக பார்த்தாள்.அங்கே கம்பீரமாக அண்ணாமலையுடன் பேசிக்கொண்டிருந்தான் அருள்வேந்தன்.அவனைக் கண்டவுடன் அழகிக்கு உலகமே நின்றுவிட்டது போல கை,கால் அசைவின்றி நின்றுவிட்டாள்.அண்ணாமலையிடம் பேசிக்கொண்டிருந்தவன் ஏதோ உந்த இவர்கள் வேனை பார்த்தான் அதற்குள் அழகி தன் தலையை உள்ளே இழுத்து அந்த சீட்டில் தலையை பிடித்தபடி அமர்ந்துவிட்டாள்.
வேந்தனைக் கண்டவுடன் மனதில் தன் தாய் சொன்னவைகள் அனைத்தும் நினைவில் வந்து அவளை ஒருபுறம் அலைக்கழிக்க மற்றொரு புறம் தான் செய்த தவறு இல்லை பாவம் என்று தனக்குள் சொல்லிக்கொண்டவளது மூலை அடுத்த வேலை செய்ய மறுத்தது.என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தவளை,
“ஏய் புள்ள என்ன ஆச்சு உனக்கு ஏன் இன்னும் இறங்காம என்ன செய்யற நீ….”என்றாள் தன்னுடன் வேலை செய்யும் பெண்.அதில் நிகழ்வுக்கு வந்தவள்,
“அக்கா…”என்றாள்.
“என்ன புள்ள ஒருமாதிரி இருக்க ஏதாவது உடம்புக்கு நோவா…”என்றார்.
“அதெல்லாம் இல்லக்கா…இங்க வாங்கலளேன்…”என்று அழைத்தவள்.வேந்தனைக் காட்டி யார் என்றாள்.அவரோ,
“தெரியல புள்ள அண்ணாச்சிக்கு தெரிஞ்சவர் போல…அது எதுக்கு நமக்கு வா போவோம்…”என்று அவளை அழைத்துச் சென்றார்.அழகியோ கடவுளே இந்த கல்யாணம் முடியர வரை யார் கண்ணுலேயும் படக்கூடாது என்று வேண்டிக்கொண்டு வேகமாக மண்டபத்தினுள் ஓடினாள்.ஆனால் ஏதோ பேசிக்கொண்டே இருந்த வேந்தன் தன் பார்வையை சுழலவிட அப்போது அவள் ஓடுவது தெரியவும் புறும் சுழித்தான்.அவனுடன் பேசிக்கொண்டிருந்த அண்ணாமலை அவனிடம் பதில் இல்லாமல் போகவும்,
“தம்பி…”என்றார்.அதில் தன்னிலை பெற்றவன்,
“ஆங் ஒண்ணுமில்லைங்க…நீங்க போங்க…இன்னக்கி ராத்திரியே ஆளுங்க வர ஆரம்பிச்சுடுவாங்க…காபி போட்டு வச்சுடுங்க…”என்று மேலும் சிலது கூறிவிட்டு சென்றான்.
சமையல் செய்யும் இடத்திற்கு வந்த அழகிக்கோ அடுத்து என்ன செய்வது என்றே புரியவில்லை.மனதில் வேந்தனைக் கண்ட பின்பு பதட்டம் குடிக்கொண்டது.ஒரு வேளை அண்ணாச்சிக்கு தெரிஞ்சவரா இருக்குமோ என்று யோசித்தவள் மூலையில் அன்று அண்ணாமலை கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன,
“மாப்பிள்ளை வீட்டிலே மளிகை கடை வச்சிருக்காங்க…”என்று அவர் கூறினாரே அப்படியென்றால் வேந்தனுக்கு தான் கல்யாணமா என்று நினைத்தவள் மனதில் என்ன உணர்ந்தாள் அவளுக்கே தெரியாது கண்கள் கலங்கியது தன்னை சமன் செய்ய அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு வந்தவள்,வேகமாக ஒரு குளியல் அறையில் புகுந்துக் கொண்டாள்.
குளியல் அறையில் புகுந்தவளுக்கு அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை எல்லாம் வெடித்து சிதறியது.எதை நினைத்து அழுகிறாள் என்று கேட்டாள் விடை தெரியவில்லை.தன் மனதில் உள்ள அனைத்து பாரங்களையும் அழுகையில் கரைத்தாள்,ஒரு கட்டத்தில் தன்னை உலுக்கி,
“எதுக்குடி இப்படி அழுதுக்கிட்டு இருக்க..இப்ப என்ன செய்யறதுனு யோசி..அவர் கண்ணுல நீ சிக்குன அவ்வளவு தான்..ஏதாவது யோசிடி அழகி…இந்த கல்யாணம் முடியர வரை நம்ம யார் கண்ணுலேயும் விழாம இருக்கனும்…”என்று தன்னக்குள் சொல்லிக்கொண்டவள் அதன்படி சில முடிவுகளை எடுத்துவிட்டு குளித்து வெளியில் வந்தாள்.குளித்ததில் உடம்பில் உள்ள சோர்வு போனதோடு இல்லாமல் மனதும் சற்று தெளிந்தால் போல் இருந்தது.
அருள்வேந்தனோ தன் அறையில் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.அவன் மனதில் என்ன ஓடுகிறது என்று அவனால் அனுமானிக்க முடியவில்லை.வெளியில் சந்தோஷமாக காட்டிக் கொண்டாலும் ஏதோ ஒன்று குறைவதாகவே தோன்றியது அது என்ன என்று அவனுக்கு புரியவில்லை.மேலும் அவனை சிந்திக்க விடாமல் தன் அறையின் கதவு தட்டப்படவும் கலைந்தவன்,
“யாரு???”என்றான் படுக்கையில் இருந்து எழாமலே.
“ஐயா…அம்மா தான் குளிச்சிட்டனா வாய்யா..காபி குடிக்க…”என்றார் மஞ்சு.வீடே உறவினர்களால் நிறைய துவங்கியிருந்தது.அதனால் வீட்டில் எப்போதும் பாட்டு கும்மாலுமும் நடந்து கொண்டு தான் இருந்தது.வள்ளி பாட்டி தான் ஆட்டம்,பாட்டம் என்று அனைத்திலும் முதன்மை,மஞ்சுவின் தூரத்து அக்கா ஒருவர் கூட,
“ஏய் மஞ்சு…உன் மாமியார் தான் சின்ன புள்ள மாதிரி பாட்டு,டான்ஸுனு கலக்குராங்க போ…”என்று கேலி செய்துவிட்டு போனார்.வேந்தனுக்கு வெகு நாட்கள் பிறகு அனைத்து உறவையும் ஒரே இடத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி.தன் தாய் கூறியது போல குளித்து வந்தவன் வெளியில் ஆண்களுடன் ஒரு இறுக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டே தன் அன்னை தந்த காபியை பருகலானான்.அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து புத்துணர்ச்சி வந்தது போல இருந்தது அவனுக்கு.பின் பொழுது போனதே தெரியவில்லை சொந்தங்களின் கேலி கலாட்டா என்று பொழுது கழிந்தது வேந்தனுக்கு.
மண்டபத்தில் அழகியோ தன்னுடன் வேலை செய்யும் பெண்ணுடன் பேசிக் கொண்டே இரவு அவர்களுக்கான உணவை தயார்செய்து கொண்டிருந்தார்கள்.அப்போது அங்கு வந்த அண்ணாமலை நாளைக்கு உண்டான வேலைகளை பட்டியல் இட்டு சொல்லியவர் அழகியிடம் திரும்பி,
“இப்பவே கொஞ்சம் பேரு வந்திருக்காங்க மா…அவங்களுக்கு காபி தண்ணி கொடு…”என்றுவிட்டு சென்றார்.அவர் சொல்லியது போல காபி போட்டவள் தன்னுடன் வேலை செய்யும் மரகத்திடம்,
“அக்கா…காபி ரெடி கொண்டு போங்க…”என்றாள்.மரகதமோ,
“ஏய் அண்ணாச்சி உன்ன தான கொடுக்க சொன்னாரு…”என்றாள்.
“நீங்க தான சொன்னீங்க உடம்பு முடியலனு…அதனால நான் இங்க சமையல் வேலை எல்லாம் பார்த்துக்குறேன் நீங்க போங்க…”என்றாள்.இங்கு அவிவதை விட இது சுலபம் என்று நினைத்த மரகதமும்,
“ரொம்ப நன்றி அழகி…கொடு…”என்று வாங்கி சென்றாள்.மரகதம் சென்றவுடன் தான் அழகிக்கு மூச்சே வந்தது.’அப்பா…இது மாதிரி யார்கிட்டயாவது வேலைய மாத்திவிட்டுட்டு நான் இந்த அடுப்படியிலேயே இருந்துக்குனும்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் அவளே தானாக வேந்தனிடம் சிக்க போவதை அறியாமல்.
ஒருவாறு யார் கண்ணிலும் படாமல் இரவு வரை ஓடிவிட்டாள் அழகி.நாளை மாலை அழைப்பு அதில் வேந்தன் மாப்பிள்ளை என்பதால் அவன் இங்கு வரமாட்டான்.அதனால் அவர்கள் குடும்பத்தாரின் கண்ணில் படாமல் இருந்தால் போதும் என்று கணக்கிட்டு கொண்டு தன் கையில் உள்ள பாத்திரங்ளை கழுவிக்கொண்டிருந்தாள்.அப்போது அங்கு வந்த கந்தன்,
“இந்தா புள்ள புளி,சாம்பார் பவுடர்,மேலும் சில பொருடகளைக் கூறி எடுத்து தா புள்ள..”என்று நின்றார்.எப்போதும் மளிகை சமான்கள் பார்த்துக்கொள்வது அவளது பொறுப்பு அவளை தவிர யாரையும் நம்ப மாட்டார் அண்ணாமலை.அதனால் சிலருக்கு அவளை பிடிக்காது அண்ணாச்சிக்கு பயந்து யாரும் எதுவும் அவளை சொன்னதில்லை.
அழகியும் அவர் கூறிய பொருட்களை எடுக்க ஸ்டோர் ரூம் வந்தவள்,அப்போது தான் சாவி தன்னிடம் இல்லை என்று உணர்ந்தவள் அதை பெருவதற்கு அண்ணாமலையிடம் சென்றாள்.அவரோ பின் கட்டில் நாளைக்கு தேவையான சமையல் செய்ய வேண்டியவைகளை தயார் செய்யும் வேலையில் இருந்தார்.அவரிடம் சென்றவள்,
“அண்ணாச்சி…”என்றாள்.அவள் அழைப்பில் திரும்பியவர்,
“என்னம்மா இன்னும் நீ தூங்கல…காலையில வேலை நிறையா இருக்குமா…”என்று கூறினார்.
“அண்ணாச்சி ஸ்டோர் ரூம் சாவி கொடுங்க…”
“அச்சோ மறந்துட்டேன் பாரு…அவுங்க கடையில வேலை செய்யுற பையன் மணினு ஒரு தம்பி இருக்கும் பாரு அதுக்கிட்ட தான் இருக்கு…”
“எனக்கு யாருனு தெரியதே அண்ணாச்சி…”என்றாள் பாவமாக.அவளது முக பாவனையில் சிரித்தவர்,
“இரு வரேன்…”என்று கூறி அவளுடன் சென்று மணியிடம் சாவி கொடுத்து ஸ்டோர் ரூமை காட்டிவிட்டு சென்றார்.
தன் உறவுக்காரர் ஒருவருடன் மண்டபத்திற்கு வந்த வேந்தன் மணியிடம் ஸ்டோர் ரூம் சாவியைக் கேட்டான்.மணியோ அண்ணாமலை வாங்கி சென்றதாக கூறவும் நேராக ஸ்டோர் ரூம் நோக்கி நடக்க தொடங்கினான்.
அழகியோ கந்தன் கூறி பொருட்களை தேடி எடுத்தவள்.ஸ்டோர் ரூமை விட்டு வெளியில் வந்து பூட்டிக்கொண்டிருந்தாள்.அப்போது,
“ஒரு நிமிஷம்…”என்று ஒரு ஆண் குரல் கேட்கவும் திரும்பியவள் அங்கு வேந்தனை சற்றும் எதிர்பார்க்கவில்லை அப்படியே உறைந்து நின்றுவிட்டாள்.

Advertisement