அருள்வேந்தனுக்கு மனது உலைகலம் போல கொதித்துக் கொண்டிருந்தது.தன் தந்தையிடம் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தாலும் மனது தன் இளவயது அவமானம் அதனால் இதற்கு முன் பார்த்த வரன் தழைக்காதது என்று அமிழ்ந்திருந்த அனைத்து உணர்வுகளும் அவன் முன்னே ஆட்டம் காட்டின.ஒரு கட்டத்திற்கு மேல் மூச்சு முட்டுவது போல இருந்தது வேந்தனுக்கு அதனால் எழுந்து தன் ஜன்னலை திறந்தான்.இரவு காற்றின் குளுமை அவனது மனதில் எரிந்த தீயை அணைத்தது போலும்.காற்றை உள்இழத்து வெளிவிட்டவன் கண்களை திறந்தான் பக்கத்து வீடும் அங்கு இருந்த மல்லிகை பந்தல் இருந்த இடம் வெறுமையாக இருந்தது அவனது மனதை போல.
“ஏன்டி இப்படி பண்ண…ஏன்…உன்ன தவறாக்கூட பார்க்காத எனக்கு பொறுக்கி பட்டம்  வாங்கி கொடுத்த…உன்னால என் குடும்பம் பட்ட அவமானம் ச்ச..அவள நினைக்காத வேந்தா வேண்டாம்…”என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
“வேந்தா…உன்னோட வாழ்க்கைய எவளோ ஒருத்திக்காக நீ இழக்க போறியா…உன் குடும்ப சந்தோஷம் உனக்கு முக்கியம்…அவங்களுக்காக  நீ இது செஞ்சுதான் ஆகனும்…”என்று தனக்குள் கூறிக்கொண்டு உறங்க முற்பட்டான்.
வள்ளியமையோ தன் பேரனின் நிலைக் கண்டு உறக்கம் இன்றி தவித்தார்.அவரது நினைவுகள் சற்று பின்னோக்கி சென்றன.வேந்தனின் வாழ்வில் நடந்த மிகபெரிய நிகழ்வுக்கு பின் அவனை தேற்றுவதிலேயே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பெரிய பாடாக போனது.மாணிக்கம் குடும்பத்தார் சென்னை இடம் பெயர்ந்து சென்றவுடன் தான் வேந்தன் வெளியில் வர தொடங்கினான்.
தன் கல்லூரி படிப்பை  வெளியூரில் படித்துக்கொண்டிருந்தான் வேந்தன்.அவன் எம்பிஏ(அக்கௌன்டன்) முடித்திருந்த தருணம் அவனது மதிப்பெண்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து இருந்தது.அதை தன் பெற்றோரிடம் சந்தோஷமாக சொல்லி செல்லவே வந்தான்.ஆனால் இப்பொழுது நிலை வேறாக இருந்தது.இரு வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்விலேயே உழன்று கொண்டு இருந்தது அவனுக்கு.வீடே இழவு விழுந்தது போல இருந்தது,வெளியில் சென்றால் அவனை எல்லாரும் பார்பத்து ஏதோ கேலி பேசுவது போல உணர்ந்தான்.தான் செய்த சிறிய பிழை அவனது குடும்பத்தின் சந்தோஷத்தையே அழித்து இருந்தது.அவனை நினைத்தே அவனுக்கு கழிவிரக்கமாக போனது தன் நினைவுகளில் உழன்றவனுக்கு இடி போல வந்தது தன் தந்தை கடையில் மயங்கினார் என்ற செய்தி.
ராமலிங்கம் தன் மனதில் உள்ளதை சற்று என்று யாரிடமும் பகிர்ந்துகொள்ளமாட்டார்.அவருக்கு தன் மகனின் வாழ்வில் நடந்த அவமானம் மனதை அரித்து தின்றது.தன் மகன் தவறாக எதுவும் செய்திருக்கமாட்டான் என்று உறுதியாக நம்பினார்.மகன் அனைவரின் முன்பும் தலைகுனிந்து நின்றதை அவரால் ஜிரணிக்கமுடியவில்லை மனிதருக்கு.தன் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்தாலும் மனது முழுவுதும் மகனிடமே. திடீர் என்று படபடப்பு வரவது போல உணர்ந்தவர் தன் கடை பையனை அழைத்து ஒரு சோடா எடுத்து வரும்மாறு பணிந்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தவர் உடல் எல்லாம் வேர்த்து மயங்கி சரிந்திருந்தார்.கடை பையன் உடனடியாக வேந்தனுக்கு தகவல் கொடுக்கவும் புயலென வந்தவன் தந்தையை ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தான்.மஞ்சுளாவும்,வள்ளியும் பயந்துவிட்டனர் திடீர் என ராமலிங்கத்துக்கு உடல் நிலை பாதிக்கவும் ஒண்ணும் ஓடவில்லை அவர்களுக்கு.
வேந்தனுக்கு தந்தையின் நிலைக் கண்டு மேலும் குற்ற உணர்ச்சியாகி போனது இவை அனைத்தும் தான் செய்த முட்டாள் தனத்தினால் தான் என்று நினைத்தவன் தன்னை இந்த நிலைமையில் நிறுத்தியவர்களை கொல்லும் வெறியே வந்தது இருந்தும் தன் குடும்ப சுழல் கருதி கட்டுபடுத்தினான்.மருத்துவர்கள் ராமலிங்கத்தை பரிசோதித்துவிட்டு அவருக்கு பிபி அதிகமாக உள்ளது நன்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்றனர்.
வேந்தன் தந்தை நலத்தைக் கருத்தில் கொண்டு தன் வெளி நாட்டு வேலையை விட்டவன் தங்கள் மளிகை கடையை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டான்.அன்றில் இருந்து அவனது ஒரே குறிக்கோள் எந்த ஊரின் முன் தலைகுனிந்தானோ அதே ஊரில் தலைநிமிர வேண்டும்.தன் உழைப்பை மூல தனமாக கொண்டு வேலையை துடங்கினான்.கடையில் சில மாறுதல்களை கொண்டு வந்தான் அவன் நினைத்தபடி பிஸ்னஸ் சூடுபிடிக்கத் தொடங்கும் நேரம் வேந்தனுக்கு பெண் பார்க்க தொடங்கினர்.அதன் படி வந்தவள் தான் தீபா.
தீபாவின் வீட்டினர் ஒரு மணவிழாவில் வேந்தனை பார்த்து பிடித்து போனதால் தங்கள் பெண்ணிற்கு கேட்டனர்.ராமலிங்கத்துக்கு அவர்களாக வந்து கேட்கவும் விட மனசில்லை தன் குடும்பத்தாரிடம் கூறி பெண் பார்க்க சென்றனர்.வேந்தன் குடும்பத்துக்கும் தீபாவை பிடித்து போக நிச்சியம் செய்ய நாள் குறித்தனர்.வேந்தனுக்கு திருமணத்தில் அவ்வளவு பிடித்தம் இல்லை ஆனால் தன் குடும்பதார்க்காக ஒப்புக்கொண்டான்.அனைத்தும் நல்லவிதமாகவே சென்றது நிச்சய நாளின் போது தீபாவின் ஒன்றுவிட்ட அண்ணன் இவன் ஒரு பொம்பளை பொறுக்கி என்றுவிட தீபா வீட்டினர் திகைத்தனர்.ராமலிங்கமோ தன் மகனை பற்றி கூறும் முன் தீபாவின் அண்ணன் அவரது சட்டையை பிடித்துவிட்டான் அனைவரும் திகைத்து நிற்கும் நேரம் புயலென வந்த வேந்தன் தீபாவின் அண்ணனை அடித்து துவசம் செய்தது மட்டுமில்லாமல் நிச்சயத்தை நிறுத்திவிட்டான்.
அன்றில் இருந்து இன்று வரை திருமணம் என்று பேச்சு எடுத்தாலே வீடு ரெண்டாகும் அளவுக்கு சண்டை சச்சரவு தான் நடக்கும் இதில் மிகவும் மனதுடைந்து போவர் குடும்பத்தார்.தன் நினைவுகளின் பிடியிலிருந்து வெளிவந்த வள்ளி கடவுளே இனியாவது தன் பேரன் வாழ்கக்கை செழிக்க வேண்டும் என்று வேண்டுதலுடன் கண்ணயர்ந்தார்.
காலையில் எப்போதும் போல் நான்கு மணிக்கு எழுந்த வேந்தன் மாடியில் தன் உடற்பயிற்சிகளை செய்துவிட்டு தனது கடைக்க கிளம்ப ஆயுத்தமானான்.நேற்று ராமலிங்கத்துக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பொறுமையாக வர சொல்லிவிட்டு சாப்பிட அமர்ந்தான்.இது தான் சமயம் என்று வள்ளியம்மை தன் பேரனிடம் வந்தவர் அவனுக்கு பரிமாறும் சாக்கில்,
“ஏய்யா சின்னவனே…நம்ம தரகர் கிட்ட பேசிட்டேன் அவர் ஒரு ஜாதகம் எடுத்துட்டு வரேனு சொல்லிருக்காரு…”என்று மேலும் ஏதோ கூறவந்தவரை தடுத்தவன்,
“எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்ல…ஆனா பெண்ணுவீட்டுல எல்லா விஷயத்தையும் முன்னாடியே சொல்லிட்டு அதுக்கு அப்புறம் அவங்களுக்கு சம்மதம் சொன்னாங்கனா மேல பேசுங்க…எனக்கு வேலை இருக்கு இன்னிக்கி மதியம் சாப்பாட்ட பையன் கிட்ட கொடுத்தனுப்புங்க…அப்பா பொறுமையா வந்தா போதும்…”என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.அவன் இந்தளவுக்கு இறங்கி வந்ததே பெரிசு என்று நினைத்த வள்ளி உடனடியாக அடுத்த வேலைகளில் இறங்கினார்.
வள்ளியம்மையும்,மஞ்சுளாவும் தரகரிடம் பேசிவிட்டு பெண்ணின் ஜாதகத்தை வாங்கி பொருந்துகிறதா என்று பார்க்க கிளம்பினர்.ஜோசியரும் இருவரின் ஜாதகமும் பொருத்தமாக உள்ளது என்று கூறவும் மிகந்த மகிழ்ச்சி இருவருக்கும்.ராமலிங்கத்திடம் கூறியவர்கள் அன்றே பெண்வீட்டிற்கு வேந்தனின் ஜாதகத்தை அனுப்பி வைத்தனர்.
இரு நாட்கள் சென்ற நிலையில்,
வள்ளியம்மை தன் கையில் உள்ள போனை பார்பதும் நேரத்தை பார்பதுமாக இருக்க காலையில் உடற்பயிற்ச்சி முடித்து வந்த வேந்தன்,
“என்ன கிழவி…போனை பார்த்துக்கிட்டு இருக்க…உன்னோட சுத்துமே உன் தோஸ்த் அது போயிடுச்சா…”என்றான் வள்ளியிடம் கதையடிக்க வரும் அவரது தோழி கமலம் அவரை வேந்தனுக்கு பிடிக்காது அதனால் தன் பாட்டியிடம் வம்பலத்தான்….”வள்ளியோ நெடு நாட்களுக்கு பிறகு பேரன் தன்னிடம் இயல்பாக பேசவும் வாயடைத்து போனார்.எந்தவித பதிலும் வராமல் போகவும் திரும்பி பார்த்தவன் அவரின் அருகில் வந்து,
“ஓய் கிழவி என்ன அப்படி பார்க்குற…பாரு உன் வாயில கொசு போயிடுச்சு…”என்று நக்கல் அடிக்கவும்,
“நீ இப்படியே சிரிச்சுக்கிட்டே இருய்யா…அதுவே எனக்கு போதும்…”என்றார் உணர்ச்சி பெருக்கோடு.மஞ்சுளாவோ நெடுநாள் பிறகு மகனின் மலர்ந்த முகத்தைக் கண்டவர் உடனடியாக திர்ஷ்டி கழித்தவர்,
“என் ராசா என் புள்ள சிரிப்ப பார்த்து எத்தனை நாள் ஆச்சு…ஆத்தா மகமாயி என் புள்ள மேல எந்த சிறிக்கி கண்ணும் விழக்கூடாது…”என்று கூறினார்.
“இவ ஒருத்தி நல்ல நேரத்துல கண்டவள பத்தி பேசிக்கிட்டு…போடி போய் சக்கர பொங்கல் வைய்யி சாமிக்கு படைச்சுடுவோம் எவ கண்ணும் இனி என் பேரன் மேல விழாது போ…”என்று மருமகளை விரட்டினார் வள்ளி.மஞ்சுவும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் சென்றார்.இவர்களின் மகிழ்ச்சியைக் கண்ட வேந்தனுக்கு மனது குறுகுறுத்தது.பேரனின் மனநிலையை நொடியில் கண்டுகொண்ட வள்ளி,
“நீ எதபத்தியும் யோசிக்காம இரு ராசா…”என்று தலைகோதி அனுப்பியவர்.
இன்னும் என்ன போன் வரல என்று நினைக்கும் நேரம் கைபேசி ஒலியெழுப்பியது பெண் வீட்டவர் தான் அழைத்திருந்தனர்.வேந்தன் தன்னை பற்றி அனைத்தும் கூறவேண்டும் என்று சொன்னதால் அவர்களிடம் அனைத்தையும் சொல்லியிருந்தார்.அவர்கள் வீட்டில் பேசிவிட்டு முடிவு கூறுவதாக கூறியிருந்தனர் அதனால் காலையில் இருந்தே கைபேசியுடன் அமர்ந்துவிட்டார்.இப்போது அவர்கள் அழைக்கவும் அனைத்து கடவுள்களிடம் வேண்டுதல் வைத்துவிட்டு கைபேசியை காதில் வைத்தார்.அந்த பக்கம் கூறிய செய்தியில்,
“ஹே…”என்று கத்தியிருந்தார்.அனைவரும் என்னவோ ஏதோ என்று பயந்து வந்தனர்.வள்ளியோ,
“என் பேரனுக்கு கல்யாணம்..ஹா..ஹா..கல்யாணம்….”என்று பாட்டு பாடிக்கொண்டிருக்கவும் ராமலிங்கம்,
“எம்மா உனக்கு பைத்தியம் புடிச்சிடுச்சா…ஏன் இப்படி குத்திக்கிற எங்கயாவது விழுந்து வைக்காத..”என்றார்.மஞ்சுவோ,
“அத்த என்னனு சொல்லிட்டு ஆடுங்க…”என்றார்.
“அடியே என் பேரனுக்கு கல்யாணம்…பொண்ணுவிட்டுலிருந்து போன் பண்ணாங்க அவங்களுக்கு வேந்தனை பிடிச்சுபோச்சாம்..”என்றார் மனது நிறைந்த சந்தோஷத்தோடு.அவர் கூறியவுடன் அனைவருக்கும் மகிழ்ச்சி.பின் வேலைகள் வேகமாக நடக்கதொடங்கின.பெண் பார்க்கும் நிகழ்வு அனைத்தும் நல்லபடியாக முடிய அடுத்த முகூர்த்ததில் திருமணம் என்று முடிவானது.ராமலிங்கத்துக்கு தன் ஒரே மகனின் கல்யாணத்தை விமர்சியாக செய்ய கல்யாணம் நாங்க செஞ்சுக்குறோம் என்று தீர்மானமாக கூறிவிட்டார்.பெண்வீட்டினருக்கு ஏக மகிழ்ச்சி,அனைத்தும் வேகமாக நடந்துக்கொண்டிருந்தது.மண்டபம் புக் செய்துவிட்டு வந்த ராமலிங்கம் வீட்டில் சமையலுக்கு யாரை புக் செய்வது என்று யோசணைக் கேட்டுக் கொண்டிருந்த போது வேந்தன்,
“அப்பா…நம்ம கிட்ட ஒருத்தர் இருக்காரு… மதுரையில ஒரு பிரண்டு கல்யாணத்துல சந்திச்சேன்…அவரோட கேட்டரிங் நல்லா இருந்துச்சு…அவரையே கேட்கலாம்…”என்று கூறி அவரது நம்பரை எடுத்து கால் செய்தான்.
மதுரையில் அந்த மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
“ஏய்…அழகி..இந்தா அண்ணாச்சிக்கு போன் போய் கொடு…”என்றார் கந்தன்.
“கொடுங்க அண்ணே…”என்று கூறி வாங்கி சென்றாள் அழகி.ஒல்லியான தேகம் மாசுமறுவற்ற கலையான முகம் இப்போது அழுக்கு படிந்து இருந்தது.அவளது அழகுக்கு மேலும் அழகு கூட்டுவது அவளது கூந்தல் அவளது இடைவரை நீண்டு அவளது நடைக்கு ஏற்ப நடனம் ஆடும்.அவளது அழகு இதுவரை அவளுக்கு ஆபத்தை மட்டுமே தந்துள்ளது.கந்தனிடம் கைபேசியை வாங்கி சென்றவள்,
“அண்ணாச்சி…”என்று அழைத்தாள்.சற்று தடித்த தேகம் கூர்மையான பார்வை அண்ணாமலைக்கு எதிரில் பேசுபவர் கூட சற்று யோசித்து தான் பேசுவர் அவரது முகம் சற்று இறுக்கத்துடன் தான் இருக்கும்.அவர் சிரிப்பது அரிது வேலையில் கெட்டி.அவருக்கு அழகி ஒரு மகள் போல தான் அவளிடம் மட்டும் சற்று சிரித்து பேசுவார்,அவருக்கு பயந்தே யாரும் அவளிடம் வால் ஆட்ட மாட்டனர்,
“என்னம்மா…”என்றார் வாஞ்சையாக.
“உங்களுக்கு போன்…”என்று கூறி கொடுத்துவிட்டு சென்றாள்.போகும் அவளையை வருத்தமாக பார்த்தவர் ஒரு மூச்சு ஒன்றை விட்டு கைபேசியை இயக்கி,
“ஹலோ…சுபம் கேட்டரிங்…”