Advertisement

தூரம் போகாதே வெண்ணிலவே…13
அழகி வாசலை அடைத்துக் கோலம் போட அவளையேப் பார்த்துக் கொண்டு வீட்டின்  உள்ளிருந்து வந்தார் வள்ளியம்மை.சிரித்த முகத்தோடு கோலத்தை ரசித்து போட்டுக்கொண்டிருந்தாள் அழகி அதனால் வள்ளி வந்ததை அவள் கவனிக்கவில்லை.வள்ளிக்கு அழகியின் இந்த சிரித்த முகம் வேலை செய்யும் பாங்கும் வெகுவாக கவர்ந்தது என்று தான் சொல்லவேண்டும்.சிறிய வயதில் அனைவரையும் ஏளனமாக பார்த்து கேலி செய்யும் அழகி இவள் இல்லை என்று புரிந்தது வள்ளிக்கு மூத்த தலைமுறை அல்லவா அதனால் அழகியை சரியாக எடைப் போட்டார்.இரவு முழுவதும் பேரனின் எதிர்கால வாழ்வு எவ்வாறு இருக்குமோ என்ற கவலையில் இருந்தவருக்கு அழகியின் இந்த இயல்பான செயல் மனதில் இருந்த சஞ்சலத்தை போக்கியது.
அழகியோ கோலம் போட்டுவிட்டு எழுந்தவள் அப்போது தான் வள்ளியம்மையைக் கண்டாள்.ஒரு ஆர்வத்தில்,
“நல்லா இருக்கா பாட்டி…”என்று அவள் கேட்க தனது நினைவில் இருந்து வெளி வந்தவர்,
“ம்ம்..நல்லா இருக்கு…”என்றுவிட்டு உள்ளே சென்றார்.அவர் அவ்வாறு முகம் திருப்பாமல் கூறியது அழகிக்கு ஒரு புதிய உற்சாகத்தைக் கொடுத்தது.அதே உற்சாகத்தோடு உள்ளே சென்றாள்.இதை எல்லாம் மாடி படிகளில் நின்றபடி பார்த்துக்கொண்டு தான் இருந்தான் அருள்வேந்தன்.
காலையில் எப்போதும் போல கண்விழித்தவன் சோம்பல் முறித்து எப்போதும் போல் உடற்பயிற்சி செய்துவிட்டு கீழே இறங்கினான்.அப்போது வாசலில் கோலம் கண்னைக் கவர என்ன நம்ம அம்மா இன்னக்கி இவ்வளவு பெரிய கோலத்தை போட்டுருக்கு என்று யோசித்துக்கொண்டே வந்தவன் அங்கு அழகியை காணவும் படிகளிலே நின்றான்.நேற்று உடுத்தியிருந்தது போல சாதாரண புடவை தான் உடுத்தியிருந்தாள்.சற்று முன் தான் குளித்து வந்திருப்பாள் போலும்  காலை நேரத்தில் இலைகளின் மேல் இருக்கும் பனித்துளி போல அவளது முகத்தில் நீர் திவளைகள்.நேற்று அழுது வீங்கியிருந்த முகம் இன்று சற்று பொலிவுடன் காணப்பட்டது.உதட்டில் சிறிய புன்கை என்று தன்னை அறியாமல் அவளை ரசித்துக்கொண்டிருந்தவன் தூரத்தில் கேட்ட ஏதோ ஹாரன் ஒலியில் நிகழ்வுக்கு வந்தான்.ச்ச இவ இவ்வளவு செஞ்சதுக்கு அப்புறமும் இவளை ரசிச்சுக்கிட்டு நிக்குறேனே என்று தன்னை திட்டிக்கொண்டே தனது அறைக்கு சென்றான்.
அழகியோ வள்ளியின் கனிவான பேச்சில் மனதில் சற்று நிம்மதியுடன் உள்ளே வந்தவள் நேராக சமையல் அறைக்கு சென்றாள்.அங்கு மஞ்சுளா அனைவருக்கும் காபி கலந்துக்கொண்டிருந்தார்.அவருக்கு தன்னிடம் பேச விருப்பமில்லை என்பதை நேற்றே தெரிந்துகொண்டாள் அழகி அதனால் அமைதியாக அடுகளையில் உள்ள பாத்திரங்களை தேய்க்க ஆரம்பித்தாள்.தன் பின்னால் பாத்திரம் கழுவும் சத்தம் கேட்கவும் திரும்பிய மஞ்சுளா அங்கு அழகி பாத்திரங்களை கழுவிக் கொண்டிருப்பதைக் கண்டு,
“இது எல்லாம் செய்ய இங்க ஆளு வருவாங்க…”என்று கூறியவர் அவளிடம் காபியைக் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு கொடுக்க சென்றார்.மஞ்சுளா கூறியதும் பாத்திரங்களை வைத்தவள் அவர் கொடுத்த காபியை ரசித்து பருகலானாள்.வெகு நாட்களுக்கு பிறகு அவளுக்கு அந்த காலை ரம்மியமாக இருப்பதாக தோன்றியது.தாய் இறந்த பின்பு அவளே தான் அனைத்தும் வேலைகளையும் செய்துகொள்வாள்.காலை காபி அருந்தும் பழக்கத்தை தாய் இறந்த பின்பு நிறுத்தி இருந்தாள் செய்ய தெரியாது என்றில்லை செய்யபிடித்தமில்லாமல் போனது சாப்பாடு கூட நினைத்தால் தான் சமைத்து உண்பாள் இல்லையேல் அன்று சாப்பாட்டுக்கு விடுமுறை தான்.
திருமணத்திற்கு வந்திருந்த சொந்தங்கள் அனைவரும் கிளம்பியிருந்தனர்.வேந்தனின் தூரத்து உறவு அத்தை திலகவதி மட்டும் தான் இருந்தார்.அவரது கணவரும் நேற்றே கல்யாணம் முடிந்தவுடன் கிளம்பியிருந்தார்.திலகவதிக்கு ஒரே பையன் அவன் வெளிநாட்டில் பணிபுரிகிறான்.அதனால் திலகவதியும் அவரது கணவரும் சொந்தமாக விவசாய நிலம் உள்ளதால் அதில் வருவதைக் கொண்டு வாழ்க்கை ஓட்டிவருகின்றனர்.மகன் தன் குடும்பத்துடன் இரு வருடங்களுக்கு ஒருமுறை வந்து நான்கு மாதங்கள் தங்கி சென்றுவிடுவான்.அதில் மூன்று மாதங்கள் அவன் தன் மனைவியின் வீட்டில் தான் இருப்பான்`அது திலகவதியை வெகுவாக பாதித்திருந்தது.அவரும் மறைமுக கேட்டுவிட்டார் மகனிடம் ஆனால் அவனோ இங்கு வசதியில்லை அது இது என்று தட்டிக் கழித்துவிடுவான்.அதனால் தான் என்னவோ அவருக்கு மருமகள்கள் என்றால் மகனை பிரித்துவிடுவார்கள் என்றெண்ணம் பதிந்துவிட்டது.அதனால் அவர் அழகியும் அவ்வாறு தான் செய்வாள் என்று மஞ்சுளாவிடம் கூறினார்.
அனைவருக்கும் காபி கலந்து வந்த மஞ்சுளா முதலில் வள்ளிக்கும்,ராமலிங்கத்திற்கும் கொடுத்தவர் அடுத்து திலகவதிக் கொடுத்துவிட்டு அமர,
“என்ன மஞ்சு…இன்னும் உன் மருமக எந்திரிக்கவே இல்லையா…பாரு கொஞ்சமாச்சும் அந்த பொண்ணுக்கு  மனசுல பயம் இருக்கா…இதுக்கு தான் சொன்னேன் கேட்டீங்களா…”என்று கவலைபடுவது போல கூற,
“அவ அப்பவே எந்திரிச்சு வாசல் தெளிச்சு கோலம் போட்டு உள்ள போயிருக்கா…”என்றார் வள்ளி.அதைக் கேட்ட திலகவதியோ அதிலும் தப்பர்த்தம் கண்டுபிடித்து பேசினார்,
“ம்ம்…இப்படி தான் எல்லா வேலையும் செய்யறது போல நடிச்சு உன் புள்ளைய கைக்குள்ள போட்டுக்குவாளுக பார்த்துக்க மஞ்சு…”என்றார்.அதுவரை சற்று தெளிந்து இருந்த மஞ்சுவின் முகம் இப்போது மீண்டும் சோர்ந்து போனது.இவர்கள் சம்பாஷனைக் கேட்டுக் கொண்டே வெளியில் வந்த அருள்வேந்தன் தன் தாயின் சோர்ந்த முகத்தைக் கண்டு,
“அம்மா உங்க மகன் யவளுக்கும் மயங்க மாட்டான்…நீ ரொம்ப யோசிக்காத…எனக்கு கடையில வேலை இருக்கு..”என்றுவிட்டு சென்றுவிட்டான்.அவனது பதிலில் மஞ்சுக்கு முகம் தெளிந்தது என்றால் வள்ளியின் முகமோ யோசனைக்கு சென்றது.
வள்ளிக்கு திலகவதியின் பேச்சு சுத்தமாக பிடிக்கவில்லை.அவர் தேவையில்லாமல் மஞ்சுளாவை பயமுறுத்துவதை போல இருந்தது.அதன் பின் திலகவதியை கண்காணித்தவர் அவர் அதே வேலையை செய்யவும் ஒரு முடிவுடன் தன் மொபைலை எடுத்துக்கொண்டு பின்பக்கம் சென்று திலகவதியின் கணவரை அழைத்தவர் சிலவற்றைக் கூறி வைத்தார்.
அழகியோ மஞ்சு தந்த காபியை ஆனந்தமாக பருகிக்கொண்டிருந்தாள்.அப்போது அங்கு வந்த திலகவதி,
“என்ன புது பொண்ணு…யோசனை பலமா இருக்கு…எப்படி எங்க புள்ளைய கைக்குள்ள போடலாம்னு யோசிக்கிறியா…”என்றார் நக்கலாக.அழகிக்கு அதுவரை இருந்த இனிமை மறைந்து தன்னையும் அறியாமல் கண்கள் கலங்கியது முயன்று அடக்கியவள் இயல்பாக இருக்க முயன்றாள்.
“சரி சரி இங்க வா…என்னோட துணி எல்லாம் இதுல இருக்கு என்று ஒரு பக்கேட் நிறைய துணிகளை அழகியின் கையில் திணித்தவர்…துவைச்சுக் கொடு…”என்றார்.அப்போது அங்கு வந்த வள்ளி,
“என்ன திலகா…இங்க துணி துவைக்கெல்லாம் ஆளு வருவாங்க…இவ ஒண்ணும் வேலைகாரி கிடையாது…இந்தா உன்னோட போனு அடிச்சுது எடுத்துட்டு வந்தேன்…”என்று அவர் கையில் திணித்துவிட்டு அழகியை இழுத்துக்கொண்டு சென்றார்.
போன் பேசிவிட்டு உள்ளே வந்த திலகவதியின் முகம் சோர்ந்து இருக்கவும் மஞ்சுளா,
“என்ன அண்ணி ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க…”என்றார்.
“இப்ப என்ன வந்தது இந்த மனஷனுக்கு திடீர்னு போன போட்டு வீட்டுக்கு வானு கூப்புடுறாரு…”என்று தன் கணவரை திட்டினார்.அதற்கு மஞ்சு,
“ஏன் திடீர்னு அண்ணன் கூப்பிடுனும்…நான் சொல்லுரேன் அண்ணன் கிட்ட அண்ணி இன்னும் இரண்டு நாள் கழிச்சு வருவாங்கனு…”என்றார்.
அழகியை இழுத்து வந்த வள்ளி அவளை வேந்தனின் அறையில் கொண்டு வந்துவிட்டவர்,
“இந்த இடத்தவிட்டு நீ நகரக்கூடாது…”என்றார் கட்டளையிடுவது போல அதற்கு பலமாக தலையாட்டினாள் அழகி.அவளை விட்டுவிட்டு வெளியில் வந்த வள்ளியின் காதில் மஞ்சு திலகவதியிடம் பேசியது காதில் விழ,
“இவ ஒருத்தி கூறுக்கெட்டவ…அவள கிளப்ப நான் பிளான் போட்டா…இவ கெடுத்துடுவா போல…”என்று மனதில் மருமகளை திட்டியவர்.
“இந்தா மஞ்சு…அங்க மாப்பிள்ளைக்கு என்ன வேலையோ…அதான் ஒத்தாசைக்கு இவள கூப்பிடுடார்…நீ கிளம்பு திலகா…ய்யா லிங்கு நீ நம்ம திலகா வைக்கொண்டு போய் பஸ் ஏத்திவிட்டு வா…”என்று திலகா மறுத்துக் கூறாதபடி கூறிவிட்டு சென்றார்.திலகவதி இதற்கு மேல் ஒன்றும் கூற முடியாமல் தன் பைகளை அடுக்க சென்றார்.
திலகவதி கிளம்பியவுடன் மஞ்சுளாவை ஒரு பிடித்தார் வள்ளியம்மை.
“ஏன் மஞ்சு…அவ ஏதாவது சொன்னா நீ உடனே அதுபோல நடக்கும்னு கற்பனை பண்ணிக்குவியா…முதல்ல அடுத்தங்க சொல்லுருது எல்லாத்தையும் மண்டையில ஏத்திக்கிறத நிறுத்து…”என்று வள்ளிக் கூற மஞ்சுவிற்கு கண்கள் கலங்கி விட்டது அதைக் கண்ட வள்ளி,
“பைத்தியம் எதுக்கெடுத்தாலும் அழுவரத முதல்ல நிறுத்து…நீயே யோசி நீ கூடதான் எல்லா வேலையும் செய்யுற…அதுக்காக என் புள்ளையை என்கிட்டேந்து பிரிச்சிட்டியா…இல்ல நான் தான் அதுமாதிரி ஏதாவது யோசிச்சேனா…ஊர்ல உள்ளவக ஆயிரம் சொல்லுவாக மஞ்சு அதெல்லாம் நாம காதுல போட்டுக்கக்கூடாது…புரியுதா…”என்றவர் மேலும்,
“இங்க பாரு வேந்தனா தான் அந்த புள்ளைய கட்டிருக்கான்…இதுல அந்த புள்ள மேல எந்த தப்பும் இல்ல…அதனால அந்த புள்ளைய நம்ம எதுவும் சொல்லக்கூடாது…கல்யாணம் முடிஞ்சிடுச்சி இனி நாம அடுத்து ஆக வேண்டியத நாம பார்க்கனும் தவிர இன்னும் அந்த புள்ளை திட்டுரதுல எந்த பிரியோஜனும் இல்ல…என் கணிப்பு சரியா இருந்த உன் புள்ள மனச ஏதோ வகையில இவ பாதிச்சு தான் இருக்கா…ஆனா அவன் அத இன்னும் புரிஞ்சுக்கல…அத நாம தான் புரியவைக்கனும் புரியுதா…”என்று அவர் மஞ்சுளாவுக்கு ஒரு பாடமே நடத்தினார்.
“அத்த அப்ப நம்ம வேந்தன் இவள விரும்புறானா??”என்றார் மஞ்சுளா.
“அப்படினு சொல்லமுடியாது…ஆனா அவ மேல ஒரு பிடித்தம் இருக்கு…அது மட்டும் உண்மை….”
மஞ்சுவுக்கு வள்ளி கூறுவது சற்று புரிந்தும் புரியாத நிலை இருந்தும் தலையை ஆட்டிவைத்தார். அனுபவமும்,நல்ல எண்ணங்களும் உள்ள முதியவர்கள் உள்ள வீட்டில் பல பிரச்சனைகள் முலையிலேயே கிள்ளி எறியப்படும்.அதற்கு உதாரணம் தான் நம் வள்ளியம்மை அவர் மஞ்சுளாவின் மனதில் அழகிக்கு எதிராக விதைக்கப்பட்டிருந்த நஞ்சை வளரவிடாமல் அழித்திருந்தார்.

Advertisement