Advertisement

அண்ணாமலை மற்றும் அவருடன் வந்தவர்கள் கிளம்பியவுடன் அருள்வேந்தனும் கிளம்பிவிட்டான்.அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்ததால் அவனை யாரும் கவனிக்கவில்லை.இரவு கவிழும் நேரம் வீடு வந்தவன் யாரும் தன்னை கேள்வி கேட்கும் முன் வேகமாக தனது அறைக்குள் புகுந்து கதவை தாழிட்டவன் கண்களை மூடி அதன் மீது சாய்ந்திருந்தான்.ஏதோ கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் கண்களை திறந்தவன் அதிர்ந்தான்.அங்கு தலை குளித்தால் முடியை தோட்டிக்கொண்டே குளியல் அறையில் இருந்து வெளியில் வந்தாள் அழகி.
அடர் சிகப்பு நிற சாதாரண பூனம் புடவை,காதில் சிறிய கவரிங் தோடு,கழுத்தில் புதிய மஞ்சள் கயிறு என்று வேறு எந்த ஒப்பனையும் இல்லாமல் இருந்தாள்.அழுததால் அவளது முகம் மேலும் வீங்கி காணப்பட்டது.ஏதோ யோசனையில் வந்தவள் அங்கு அருள்வேந்தனை சற்றும் எதிர்பார்க்கவில்லை போலும் அவனைக் கண்டவுடன் கை,கால் நடுங்க இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை.
அருள்வேந்தனும் அழகியைக் கண்டவன் சற்று அதிர்ந்தான் தான் பின் அவன் கண்கள் மீண்டும் சிவப்பேற உடலும்,மனமும் இறுக துவங்கியது.அவளை உறுத்து விழித்தவன் மீண்டும் கதவை திறந்துக்கொண்டு வெளியில் வந்தான்.வேந்தன் வந்தது தன் அறையின் உள்ளே சென்றது என்று பார்த்துக்கொண்டிருந்த அவனது அத்தை அவன் வேகமாக வெளியில் வரவும்,
“என்னப்பா…வேகமாக உள்ள போன…இப்படி உடனே வெளில வந்துட்ட…ஏன் உன் புது பொண்டாட்டி ஏதாவது சொல்லிட்டாளா…”என்றார் நக்கலாக.அவரை திரும்பி ஒரு முறைத்துவிட்டு சென்றுவிட்டான். “அட..என்ன ஏன்டா முறைக்குற…நாங்க சொன்னத கேட்டியா…இப்ப பாரு நீ செஞ்சதால வீடே எப்படி இருக்குனு பாரு…”என்று அவர் புலம்புவதை மாடி ஏறிக்கொண்டிருந்த வேந்தன் கேட்டான் தான் இருந்தும் பதிலேதும் பேசாமல் மாடிக்கு சென்றுவிட்டான்.
அழகியோ வேந்தன் உள்ளே வந்த போது எப்படி இருந்தாளோ அதே நிலையில் இருந்தவள் வேந்தனின் அத்தைக் குரலில் நிகழ்வுக்கு வந்தாள்,
“இந்தா பொண்ணு உன் பேரு என்ன…”
“மதியழகி..”என்றவளை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தவர்,
“ம்ம்..பேரெல்லாம் நல்லா தான் இருக்கு…நீ பாட்டுக்கு ரூம்ல வந்து உக்காந்துட்டா…இங்க வேலை எல்லாம் யார் செய்யறது…”என்றார் எள்ளலாக.அழகியோ பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருக்கவும்,
“ரொம்ப அழுத்தம் தான் போல…சரி சரி இங்க வா…”என்றவர் சமையல் அறைக்கு அழைத்து செல்ல தன் அறையில் இருந்து வேகமாக வந்த மஞ்சுளா,
“அண்ணி…இவள எதுக்கு இப்ப இங்க கூடிட்டு வரீங்க…”என்றார்.
“நீ சும்மா இரு மஞ்சு…”என்றவர் அழகியிடம் திரும்பி,
“பின்கட்டுல விளக்க வேண்டிய சமான் எல்லாம் கிடக்கு போய் விளக்கு…”என்றார் கட்டளையிடும் விதமாக.அழகி மஞ்சு ஏதாவது திட்டுவாரோ என்று தயங்க,
“இந்தா என்ன நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு நிக்குர…போ போய் பாத்திரம் தேய்…ஏன் இதுக்கு முன்னாடி இந்த வேலை தான செஞ்ச இப்ப செய்ய முடியாதோ…போ…”என்றார் அழகியை காயப்படுத்தும் பொருட்டு.அவருக்கு வேந்தன் தங்கள் பேச்சை மதியாமல் இவளை திருமணம் செய்தது பிடிக்கவில்லை.இன்னொன்று அவர் வேந்தனுக்கு தன் தங்கையின் பெண்ணை முடிக்க ஆசை ஆனால் அதற்கு வேந்தன்அவள் சிறு பெண் என்று மறுத்துவிட்டான்.அதில் இருந்து வேந்தன் மேல் கோபம் அதை அவனிடம் காட்ட முடியாமல் அழகியிடம் காண்பித்தார்.ஆனால் அழகியோ எந்தவித முக சுழிப்பும் இல்லாமல் வேலை செய்ய தொடங்கவும் அவரால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.
மஞ்சுளாவிற்கு அழகி எந்தவித முக சுழிப்பும் இல்லாமல் சென்றது மனதிற்குள் வலிக்கத்தான் செய்தது.எனக்கில்லாத கோபம் இவருக்கு ஏன் என்று நினைத்தவர் அவரிடம் கேட்கவும் செய்தார்,
“ஏன் அண்ணி இப்படி பேசுறீங்க…என்ன தான் இருந்தாலும் சின்ன பொண்ணு…”என்றார்.இது தான் மஞ்சுளா அவருக்கு அழகி மேல் வன்மம் எல்லாம் கிடையாது தன் மகனின் வாழ்வை பாழாக்கிவிட்டாளே என்ற கோபம்,ஆத்திரம்.எங்கே தன்முன்னால் அவள் வந்தால் தன்னையும் மீறி வார்த்தையை விட்டுவிடுவோமோ என்று தான் அவளை தன் முன் நிக்க வேண்டாம் என்று கூறியது.
மஞ்சுளா இவ்வாறு கேட்கவும் அவருக்கு ஒருமாதிரியாகி போனது இருந்தும் முகத்தில் காட்டாமல்,
“என்ன மஞ்சு இப்படி கேட்டுப்புட்ட…இவளெல்லாம் இப்பவே அடக்கி வச்சிடனும் இல்ல…உன் புள்ளைய கைக்குள்ள போட்டுக்குட்டு போய்டுவா பார்த்துக்க…”என்று பெரிதாக அறிவுரை வழங்கிவிட்டு சென்றார்.மஞ்சுளாவிற்கு மனதில் எங்கே அவர் கூறியது போல நடந்துவிடுமோ என்ற பயம் இருக்கத்தான் செய்தது அதற்கு காரணம் சாரதா.அவரும் இவ்வாறு தானே தங்கள் குடும்பத்தில் இருந்து கதிரேசனை பிரித்து கூட்டி சென்றார் அவ்வாறு மகளும் செய்துவிடுவாளோ என்ற பயம்.
மாடியில் தரையில் படுத்துக்கொண்டு வானத்தை வெறித்துக்கொண்டிரிந்த வேந்தனின் மனதில் தன் வீட்டினரை நினைத்த கவலை தான் மேலோங்கி இருந்தது.தன் தாய்,தந்தையின் சோர்ந்த முகமும்,தன் திருமணத்திற்காக துள்ளிக்கொண்டிருந்த வள்ளியம்மையின் முகமும் நினைவடுக்குகளில் வந்து போயின.
“என்னை எல்லாரும் மன்னிச்சிடுங்க…எல்லார் பார்வைக்கும் நான் பொறுக்கியா போய்யிட்டேன்…இதே வார்த்தை தான் திரும்பி திரும்பி கேட்குறேன் என்னால முடியல எந்த தப்பு செய்யாம தண்டனை அனுபவிக்கிறது இருக்கே அது பெரிய கொடுமை…என்னோட நீங்களும் அவமானப்படுறத என்னால பார்க்க முடியலப்பா.. அதான் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டேன்….”என்று மனதுக்குள் அனைவரிடம் மன்னிப்பை வேண்டினான்.இனி வாழ்க்கை முழுக்கும் இவ்வாறு தான் செல்லுமோ என்ற எண்ணம் பிறந்தது அதுவே அவனை மேலும் சோர்வடைய செய்தது.அவனுக்கு அழகியை பார்க்கும் போதெல்லாம் பழைய நினைவுகள் தான் ஆட்டிப்படைக்கின்றன அதை அவன் மறக்க நினைத்தாலும் முடியாமல் இத்தனை வருடங்களாக தவிக்கிறான்.இதில் அவளுடன் ஒரு இயல்பான வாழ்வு என்பது முடியுமா என்ற கேள்வி எழுந்தது,ஆனால் அதற்கு பதில் தான் இல்லை.இப்படி பல சிந்தனைகலோடு கண் அயர்ந்தான்.
கீழே அழகியோ வேந்தன் அத்தைக் கூறிய வேலைகளை செய்து முடித்தவள் அமைதியாக தான் இருந்த அறையில் தஞ்சம் அடைந்தாள்.அந்த அறை அருள்வேந்தனின் அறை போலும் அங்கு ஒருவர் படுக்கக்கூடிய அளவிற்கு ஒரு கட்டில்,ஒரு கபோட்,சிறிய மேஜை மற்றும் ஒரு கபோடில் அவனது புத்தகங்கள் இருந்தன.அறையை நோட்டமிட்டவள் கீழே தன் புடவை ஒன்றை விரித்து படுத்தாள்.இப்போது அவளது மனதில் எந்தவித உணர்வும் இல்லை.அண்ணாமலை கூறியது போல எந்தவித சூழ்நிலையிலும் மனதை தளரவிடக்கூடாது என்று தனக்குள் கூறிக்கொண்டவள் மனதில் இப்போது இருந்தது எல்லாம் தான் செய்த தவறுக்கு பிராயிசித்தம்.ஆம் பிராயிசித்தம் தான் வேந்தனிடமோ,அவனது குடும்பத்தாரிடமோ தான் தாயின் போதனையால் அவ்வாறு செய்துவிட்டேன் என்று கூறி மன்னிப்புக்கேட்க அவளுக்கு மனதில்லை.தன் தாய் தவறே செய்த போதும் அவரை யாரிடமும் விட்டுக்கொடுக்க மனதில்லை.அதனால் வீட்டில் உள்ளவர்கள் என்ன கூறினாலும் அமைதியாக போவது என்று தனக்குள் சொல்லிக்கொண்டு உறங்க முற்பட்டாள்.ஆனால் இதில் ஒன்றை அழகி மறந்தாள் அது அவளுடனான வேந்தனின் வாழ்க்கை.அதை எவ்வாறு சீர் செய்வது என்று யோசிக்க மறந்தாள்.
அழகான விடியல் ஆனால் அதை ரசிக்கும் மனநிலையில் தான் யாரும் இல்லை.காலை எப்போதும் போல் விழித்த அழகிக்கு சற்று நேரம் தான் எங்கு உள்ளோம் என்றே புரியவில்லை பின் நிகழ்வுக்கு வந்தவள் தன் தலையில் தட்டிவிட்டு எழுந்தாள்.சிறுவயதில் விடியற்காலை என்றாலே ஒன்பது மணி கூறுபவள்,பின் வாழ்க்கை கற்று தந்த பாடத்தில் தூக்கம் என்பது சிறிதும் கிடையாது அதுவும் தாயை இழந்த பின் துளிக்கூட இருந்தது இல்லை என்று தான் கூறவேண்டும்.என்ன தான் அண்ணாமலையை மீறி யாரும் எதுவும் செய்யமாட்டார்கள் என்றாலும் இயல்பாக தாயை தேடும் பெண்ணின் மனது.அதனால் வெகு நாட்களுக்கு பிறகு நேற்று தான் எடுத்த முடிவிற்கு பிறகு அவளது மனது சற்று சமன்பட்டு போனது என்வோ உண்மை அதனால் நல்ல உறக்கம் என்று தான் கூறவேண்டும்.அதனால் உற்சாகமாகவே எழுந்தவள் குளியல் அறை சென்று காலைகடன்களை முடித்து குளித்து தன்னிடம் இருந்த புடவைகளில் ஒன்றை எடுத்து அணிந்தவள் அறையைவிட்டு எழுந்து வந்தாள்.அப்போது தான் மஞ்சு எழுந்து  வெளியில் செல்வதைக் கண்டவள் பின்னே சென்றாள்.
அவர் வாசல் தெளிக்கபோவதை உணர்ந்தவள் வேகமாக சென்று,
“நான் கோலம் போடவா…”என்றாள்.அவளது குரலில் திரும்பிய மஞ்சுளா வேண்டாம் என்று தான் மறுக்க வந்தார் ஆனால் அழகியை பார்த்தவர் அவள் கண்களில் தெரிந்த ஆர்வத்தில் ஏதும் கூறாமல் உள்ளே சென்றுவிட்டார்.அவர் எதுவும் சொல்லாமல் செல்லவும் அதையே அவரது சம்மதமாக ஏற்றவள் வாசல் தெளித்து வாசலை அடைத்து அழகாக கோலம் போட்டாள்.எப்போழுதும் மஞ்சு கோலம் போடும் போதே வள்ளியும் எழுந்துவிடுவார்.அவரும் எழுந்து வர மஞ்சு சமையல் நோக்கி செல்வதைக் காணவும்,
“என்ன மஞ்சு அதுக்குள்ள வாசல் தெளிச்சிட்டியா…”என்றபடி வாசலை பார்க்க.அங்கு காலையில் பூத்த புது மலர் போல கோலம் இட்டுக்கொண்டிருந்தாள் மதியழகி.

Advertisement