Advertisement

அருள்வேந்தனின் வீடே கலையிழந்து காணப்பட்டது.முதல் நாள் இருந்த மகிழ்ச்சி இப்போது யாரிடமும் இல்லை.திருமணம் முடிந்த கையோடு முக்கால்வாசி உறவுகள் சென்றுவிட்டன இப்போது மிக நெருக்கமானவர்கள் மட்டுமே.மஞ்சுளாவோ மகனின் இந்த முடிவில் மிகவும் ஒடிந்துவிட்டார் அவருக்கு அழகியை தன் மருமகளாக நினைக்கக்கூட முடியவில்லை காரணம் அவளை பார்க்கும் போதெல்லாம்  அன்று மகன் அனைவரும் முன்னும் தலைகுனிந்து நின்றதே கண்முன்னே வந்து அவரை நிலைகுலைய வைத்தது.எங்கே அனைவரின் முன்பும் அழுதுவிடுவோமோ என்று பயந்தே தன் அறையில் தஞ்சம் அடைந்தவர் வெளியில் வரவில்லை.
ராமலிங்கமோ எதையும் உணரும் நிலையில் இல்லை அனைத்தும் கைமீறி சென்றபின் வருந்தி என்ன பயன் என்று நினைத்தவர் யாரிடமும் பேச பிடிக்காமல் அமைதியாக ஓர் இடத்தில் அமர்ந்துவிட்டார்.வள்ளி பாட்டிக்கோ பேரனின் திருமணம் முடிந்ததில் சற்று மனது சமன்பட்டாலும் அவனின் எதிர்காலம் பற்றிய பயமும் மனதில் இருந்தது. கல்யாணத்தின் போது வேந்தனின் முகத்தில் தெரிந்த இறுக்கமே அவன் ஏதோ கடமைக்கு திருமணம் செய்துக்கொண்டதாக தெரிந்தது.அது அவனது பிற்கால வாழ்வை பாதிக்கும் என்று வள்ளிக்கு பயம் பிடித்துக்கொண்டது.இதை எவ்வாறு சரி செய்வது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார்.
வேந்தனோ வீடு வந்து ஏதோ கடமைக்கு இரண்டு நிமிடம் இருந்தவன் வேலை இருப்பதாக சொல்லி சென்றுவிட்டான்.இங்கு மதியழகி நிலைமை தான் மிகவும் மோசமானது.வேந்தனுடன் வீடு வந்தவளை யாரும் ஆலம் கூட எடுக்கவில்லை.தாலிகட்டியவோனோ அவளை வீட்டின் வெளியில் இறக்கவிட்டவன் வீட்டின் உள் கூட வரவில்லை வெளியில் உள்ள அவனது உறவினர்ரிடம் ஏதோ பேசிவிட்டு சென்றுவிட்டான்.அழகியோ யாரும் அழைக்காமல் வீட்டின் உள்ளே செல்லவே தயங்கினாள்.தன்னையும் அறியாமல் அவளது கண்களும்,கால்களும் தன் பிறந்தவீட்டை நோக்கி நடக்க முற்படும் நேரம்,
“இந்தா புள்ள ஏன் வெளியவே நிக்கற உள்ள வா…”என்றார் வேந்தனின் அத்தை.
“நாங்க நினைச்ச மாதிரி கல்யாணம் நடந்து இருந்தா இந்த நேரம் ஆலம் கரைச்சு எடுத்து,பாலும் பழமும் கொடுப்பாங்க…ஆங் எங்க அதெல்லாம்செய்யுற மாதிரியா கல்யாணம் பண்ணிருக்கான்…எல்லாம் அவனோட இஷ்டம் தான்…”என்று புலம்பியபடி அவர் சென்றார்.அவரது குரலில் தன்னிலை பெற்றவள் தன் பிறந்த வீட்டை பார்த்துக்கொண்டே வேந்தனின் வீட்டில் காலடி வைத்தாள்.
வீட்டின் உள்ளே வந்தவள் சுற்றிலும் பார்வையை சுழலவிட்டாள்.பழமையும்,புதுமையும் கலந்து காணப்பட்டது வீட்டின் அமைப்பு.சிறு வயதில் தன் தாத்தாவுடன் வருவாள் தான் ஆனால் அவர் இறந்த பிறகு சாரதா இங்கு வர அனுமதிக்கமாட்டார்.அதன்பின் அவள் இங்கு வந்தது மிகவும் குறைவு தான்.சிறுவயதில் இருந்தே சாரதாவின் போதனையால் வேதாச்சலம் வீட்டாரை கீழாகவே பார்த்ததாலோ எண்ணவோ அவர்கள் வீட்டில் யாரிடமும் அவ்வளவு ஒட்டுதல் கிடையாது.வேதாச்சலம் குடும்பமும் சாரதாவின் குணம் அறிந்து சற்று ஒதுங்கியே இருப்பர்.இவ்வாறு பலவித நினைவுகளோடு நின்றவளை நிகழ்வுக்கு கொண்டு வந்தது மஞ்சுவின் குரல்,
“அண்ணி…இவ எதுக்கு இங்க நிக்குறா…என் முன்னாடி இவ வரக்கூடாது…முதல்ல ஏதாவது ஒருரூம்ல இவள அடங்க சொல்லுங்க…எல்லாரும் இருக்காங்ளேனு பாக்குதேன்…இல்ல பெரிய பிரச்சனை ஆயிடும்…”என்று வேந்தனின் அத்தையிடம் ஜாடையாக கூறுவது போல அழகிக்கு எச்சரிக்கை விடுத்தார் மஞ்சு.
“இந்தா மஞ்சு இப்ப சூடா பேசறவ உன் புள்ள இவ கழுத்துல தாலி கட்டும் போதே சொல்லிருக்கலாம்ல….எல்லாம் அவனோட இஷ்ட்டம்னு விட்டதொட்டுதான் இப்ப இங்க வந்து நிக்குது..நீ எதுக்கும் சுதனமா இருந்துக்க…”என்று அவர் பங்குக்கு ஏற்றிவிட மஞ்சுவுக்கு மனதில் பயம்பிடித்துக்கொண்டது எங்கே இவள் தங்கள் மகனை தங்களிடம் இருந்து பிரித்துவிடுவாளோ என்று.மஞ்சுளா கூறியவுடனே அழகி பக்கத்தில் இருந்த ஒரு அறைக்குள் புகுந்து கொண்டாள்.அறைக்குள் வந்தவள் அங்கே ஒரு ஓரமாக உட்கார்ந்துவிட்டாள்.அவளது மனதில் மஞ்சுளாவின் வார்தைகளே ரீங்காரமிட்டன.அவளது கண்கள் கரித்துக்கொண்டு வந்தது தன் கால்கள் இரண்டையும் தலைக்கு ஊன்றுகோல் போல வைத்து தலைகவிழ்ந்து அழுது கரைந்தாள்.தற்போது அவளுக்கு இருக்கும் ஓரே அறுதல் கண்ணீர் மட்டுமே எவ்வளவு நேரம் அவ்வாறு இருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.அவளது தோளை யாரோ பலமாக உலுக்குவது போல உணர்ந்தவள் மேல்ல கண் திறந்தாள் அங்கே அவளது வயதை ஒத்த பெண் ஒருத்தி,
“அக்கா…அக்கா…எந்திரிக்கா…”என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தாள்.வேந்தனின் உறவு போலும் என்று நினைத்தவள்,
“என்னம்மா…”என்றாள் வெளிவராத குரலில் அந்த பெண்ணோ,
“உங்கள பார்க்க அண்ணாமலைனு ஒருத்தரு வந்திருக்காரு…”என்று கூறிவிட்டு சென்றாள்.அண்ணாமலையின் பெயரைக் கேட்கவும் மனதில் மேலும் பாரம் ஏற துவங்கியது.எவ்வளவு நல்ல மனிதர் அவர் மட்டும் இல்லை என்றால் தாய் இறந்த பிறகு அவளது நிலை நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது அழகிக்கு தன்னை நிலைப்படுத்திக்கொண்டவள் அவரைக் காண சென்றாள்.
அண்ணாமலைக்கு மனது நிறைந்து இருந்தது அழகியை அவளது இருப்பிடத்தில் விட்டதொரு உணர்வு.என்னதான் அவர் மகள் போல் பார்த்துக்கொண்டாலும் அவருக்கு பிறகு அவளை யாரிடம் ஒப்படைப்பது என்று பல நாள் கவலைபட்டுள்ளார் ஆனால் இப்போது அவர் எதிர்பார்தையைவிடவே அவளுக்கு நல்ல இடத்தில் அமையவும் மனதில் இருந்த பாரம் நீங்கியது போல உணர்ந்தார்.வேந்தனின் வீட்டில் உள்ளவர்கள் அடிப்படையில் யாரும் கெட்டவர்கள் கிடையாது என்று முழுதாக நம்பினார் அதுவே அவரை அழகியை இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பதற்கான காரணம்.அவர்களுக்கு அழகி மேல் உள்ள கோபம் குறைந்தால் அனைத்தும் மாறும் என்ற நம்பிக்கை இருந்தது.
“அண்ணாச்சி…”என்று அழைத்தபடி வந்து நின்றாள் அழகி.அவளைக் கண்டவுடன் தன்போல் அவரது கரம் உயர்ந்து அவளது தலையை தடவியது அதில் முழுமையாக தன் தந்தையின் ஆசிர்வாதத்தை உணர்ந்தவள் கண்கள் மேலும் கலங்கி அவரைக் கண்டவள் அதிர்ந்தாள்.ஏன்னென்றால் அண்ணாமலையின் கண்களும் கலங்கி காணப்பட்டது.அவள் இதுவரை அழுது கண்டதில்லை இயல்பிலேயே திடமான மனிதர் அவர் இன்று கண் கலங்கவும் தனக்காகவும் ஒருவர் உள்ளார் என்று அழகியின் மனது கூறிக்கொண்டது.
“என்னம்மா இந்த அண்ணாச்சி மேல கோபமா…”என்றார் வாஞ்சையாக.அதற்கு இல்லை என்ற தலையாட்டல் மட்டுமே பதிலாக வந்தது அழகியிடம் இருந்து.
“ம்ம்…உனக்கு இது தான் நல்லதுனு மனசுக்கு பட்டுச்சு அதான் உன்ன கொஞ்சம் கட்டாய படுத்திட்டேன்…என் மன்னிச்சுடுமா…”என்றார்.
“என்ன அண்ணாச்சி மன்னிப்பு அது இதுனு பேசிக்கிட்டு…”என்றவள் மேலும் என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறினாள்.அண்ணாமலை அவளை மகள் போல பாவித்தார் தான் ஆனாலும் அனைத்திலும் கண்டிப்பு இருக்கும் அதனாலோ என்னவோ இவளவும் அவரிடம் மரியாதையுடன் தான் இருப்பாள்.இன்று அவர் மன்னிப்பு என்று கேட்கவும் அவளுக்கு சங்கடமாக போனது அவளது சங்கடத்தை உணர்ந்தவர்,
“இங்கபாரும்மா இப்ப யாருக்கும் இந்த கல்யாணத்துல பிடித்தம் இல்லாமல் இருக்கலாம்…ஆனா இது நிரந்திரம் கிடையாது எல்லாம் காலபோக்குல எல்லாம் மாறும்…அதனால மனச தளவிடக்கூடாது புரியுதா…யார் என்ன பேசினாலும் அமைதியா அத கடக்க பழகிக்க…எல்லாம் நல்லதே நடக்கும்…”என்றவர் அவள் வேண்டாம் என்று மறுக்க கையில் 5000ஐ திணித்தவர்,
“கை செலவுக்கு வச்சுக்க…எந்த சூழ்நிலையும் எதிர்த்து நிக்கனும் ஓடி ஒளியக்கூடாது புரியுதா…சரி உன்ன நம்ம ஆள்ளெல்லாம் பார்க்கனும்னு சொன்னாங்க…அங்க வேன்ல இருக்காங்க போய் பாரு…”என்று கூறிவிட்டு,
“தம்பிக் கிட்ட ஒருவார்த்த சொல்லிட்டு போ…”என்று அவர்கள் பின் நின்ற அருள்வேந்தனை காண்பித்தார்.அதுவரை அண்ணாமலை கூறி அனைத்து தைரியமும் வேந்தனின் பெயரைக் கேட்டவுடன் வடிந்துவிட்டது” இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தாரா…”என்று நினைத்தவள் திரும்பி அவனைக் காண அவனும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.அவனிடம் எவ்வாறு கேட்பது என்று இவள் தயங்க அவனோ”வாயத் திறந்தா முத்து உதிர்திருமா மேடத்துக்கு..எப்படி அப்பாவி மாதிரி நிக்குறா பாரு…உனக்கு இருக்குடி…உன் நடிப்பெல்லாம் என்கிட்ட செல்லாது…”என்று மனதில் கருவிக்கொண்டவன் போ என்பதாக தலையசைத்தான்.அதுவே போதும் என்பது போல அவளும் ஓடிவிட்டாள்.
மதியழகி ஓடிவருவதைக் கண்ட மரகதமும் இன்மொரு பெண்ணும் அவளைக் கண்டு சிரிக்க.அழகியோ அவர்கள் இருவரையும் முறைத்தாள்.அதில் மேலும் சீண்டப்பட்டவர்கள்,
“இந்தா இந்த முறைக்குற வேலையெல்லாம் எங்ககிட்ட வச்சுக்குகாத உன்ர புருஷன் கிட்ட வச்சுக்க…”என்று கிண்டல் செய்ய அனைத்தும் மறந்து அவளது முகம் செம்மையுர செய்தது.இதையெல்லாம் பார்த்தும் பார்க்காதது போல நின்று அண்ணாமலையுடன் பேசிக்கொண்டிருந்தான் அருள்வேந்தன்.அவர்களது பதிலில் நாணம்முற்றவள்,
“அய்யோ அக்கா…சும்மா இருங்க..”என்றாள்.
“பாருடா நம்ம அழகிக்கு வெட்கமெல்லாம் வருது…”அவர்கள் அதற்கும் கிண்டல் செய்ய அழகியோ பேசமுடியாமல் அமைதியானாள்.அவள் நிலை உணர்ந்து அவர்களும் கிண்டலை விட்டவர்கள்,
“இந்தா புள்ள உன்னோட பேக்கு…”என்று அவளது துணிபையுடன் வேறு ஒரு பையும் குடுக்க,
“இது என்னக்கா புது பைய்யி…”என்று அவள் கேட்டுக்க
“ஏதோ எங்களால முடிஞ்ச சீரு…நீயும் எங்களுக்கு கூடபொறந்த பொறப்பு போல தான்…”என்றனர் இருவரும்.திறந்து பார்க்க அதில் ஒரு புது புடவையும்,சில அத்தியாவசிய பொருட்களும் இருக்கவே அவள் மரகத்தை கட்டிக்கொண்டு அழவே துடங்கிவிட்டாள்.
“இந்தா புள்ள நல்ல நாளும் அதுவுமா கண்ண கசக்கிட்டு…போய் முகத்தை கழுவிக்கிட்டு இந்த புடவையைக் கட்டிக்க…”என்று மரகதம் கூறவும் தலையை வேகமாக ஆட்டினாள்.யார் கூறியது ரத்த சொந்தங்கள் மட்டுமே உறவென்று இதோ எந்த வித பந்தமும் இல்லாமல் இவர்களிடம் உள்ளது ஆழமான கல்லம்கபடமற்ற அன்பு மட்டுமே அதை கடவுள் அழகிக்கு கொடுத்திருந்தார்.தகப்பன் இல்லாத குறையை அண்ணாமலை தீர்த்தார் என்றால் கூடபிறந்த பிறப்பு இல்லாத குறையை இவர்கள் தீர்த்துவிட்டனர்.அனைவரும் அழகியிடம் பிரியாவிடைபெற்று கிளம்ப மீண்டும் அவளுக்கு மனதில் ஒரு வெற்றிடம் உருவானது.இதை ஒதுக்கியவள் தான் முன்பு இருந்த அறைக்குள் வந்தவள் தன் பொருட்களை வைத்துவிட்டு அப்படியே அமர்ந்துவிட்டாள்.மாலை கடந்து இரவு நெருங்கும் நேரம் வரை அப்படியே இருந்தவள் பின் தன்னை சமன் செய்துக்கொண்டு அந்த அறையை நேட்டம்விட்டவள் அங்கேயே ஒரு குளியல் அறை இருக்கவும் அதனுள் புகுந்து தன்னை சுத்தபடுத்தி குளித்து மரகதம் கொடுத்த புடவை அணிந்து வெளியில் வர அங்கே உள்ளே வந்து கதவை தாழிட்டுக்கொண்டிருந்தான் அருள்வேந்தன்.

Advertisement