Advertisement

“நான் கோயம்புத்தூர் சார்…” என்றாள் புன்னகையுடன்.

“ஓ… எங்கனே இவிடே யோகா டீச்சராய் ஜாயின் பண்ணது…?”

“யோகா டீச்சர்ஸ் அசோசியேஷன்ல ரெஜிஸ்டர் பண்ணி இருந்தேன்… இங்க டீச்சர் வேணும்னு இன்பார்ம் பண்ணாங்க, அதான் ரெஸ்யூம் அனுப்பினேன், வர சொன்னாங்க சார்…”

“ம்ம்… இவிடே ஸ்தலவும் ஜோலியும் இஷ்டமாயோ…? தாமஸ சவுகர்யம் ஓகே ஆனோ…?”

“எடா நந்து… அவளுக்கு நின்டே மலையாளம் முழுசும் புரியாது, நியதி…! நினக்கு இந்த ஊரு, வேலை எல்லாம் பிடிச்சோ, தங்கற இடம், வசதி எல்லாம் சவுகர்யமா இருக்கான்னு கேக்குது…” என்றார் ஷோபனா தனக்கு தமிழ் தெரியும் என்ற பெருமையில்.

“ம்ம்… எல்லாம் ஓகே சார்… தங்கற ரூம், கான்டீன் புட் எல்லாமே நல்லாவும் வசதியாவும் இருக்கு, ரொம்ப தேங்க்ஸ்…” என்றாள் நியதி.

“ம்ம்… எதாவது ஆவஸ்யம் உண்டெங்கில் ஆத்ரேயனோடு பரஞ்சால் மதி… நான் இறங்கட்டே அம்மே…” என்றவனிடம்,

அதற்குள் குழந்தைகளுக்கு ஊட்டி முடித்த ஆதிரா, “நானும் வராம் அபியேட்டா…” என்ற கூடவே கிளம்பினாள்.

குழந்தைகள், “அச்சா… அம்மா…! டாட்டா, உம்மா…” என்று சொல்ல குனிந்து இருவரின் கன்னத்திலும் இருவரும் முத்தமிட்டு காரில் கிளம்பினர்.

“வா மோளே… நீ இரிக்கு, சாப்பிடலாம்…” என்ற ஷோபனா அவளுக்குத் தட்டு வைக்க, “நீங்க சாப்பிட்டிங்களா ஆன்ட்டி, மாஸ்டர் எப்ப வருவார்…?” என்றபடி அமர்ந்தாள்.

“நான் நேரத்தே சாப்பிட்டாச்சு மோளே, கொஞ்சம் சுகர் பிராப்ளம் இருக்கு… ஆதி குறச்சு நேரத்தில் வரும்…”

சாப்பிட அமர்ந்தவள் சட்டென்று இருமுறை தும்ம, “நேற்று மழை நனைஞ்சது ஜலதோஷம் பிடிக்கும் போலருக்கு… எதுக்கும் சாப்பிட்டு நல்லா ஆவி பிடிச்சோ குட்டி… சரியாகும்…” என்றார் ஷோபனா.

“என்னது…? ஆவியப் பிடிக்கிறதா…?”

“ஹோ பழக்க தோஷம்…! அது பேரு தமிழ்ல என்ன சொல்லும்…?” என்று ஷோபனா யோசிக்க சிரித்தாள் நியதி.

“ஹாஹா…! ரொம்ப கஷ்டப்படாதீங்க ஆன்ட்டி… எனிக்கு மனசிலாயி…” என்றாள் சிரிப்புடன்.

“சரி சாப்பிடு…” என்றவர் பஞ்சு போன்ற இட்லியை வைக்க சூடான இட்லியுடன், தேங்கா சட்னி, மிளகாய் சட்னி அந்தக் குளிருக்கும் தொண்டைக்கும் சுகமாய் இருக்க, இங்கே வந்தது முதல் இட்லி சாப்பிடாத வருத்தத்தைப் போக்கும் வகையில் திருப்தியாக சாப்பிட்டு காபியும் குடித்தாள்.

சாப்பிட்டு எழவும், ஷோபனா மருந்து எடுத்து வரச் செல்ல சோபாவில் அமர்ந்தாள்.

நயனா அடிக்கடி அவளை அருகே வந்து சீண்டிக் கொண்டே இருக்க குழந்தையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். “நானு, ஆன்ட்டி…” என்ற நவீனையும் எடுத்து மடியில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

பேஸ்ட் போன்ற ஆயுர்வேதக் களிம்புடன் வந்த ஷோபனா, “ஆஹா, அதுசரி…! ரெண்டு பேரும் ஆன்ட்டி கூட செட் ஆகியோ… ஆன்ட்டி காலில் மருந்திடட்டே…” என்று சொல்ல,

“அச்சோ, பாவம் ஆன்ட்டி காலில் எந்தா…?” என்றான் நவீன்.

“உஸ்… ஆன்ட்டிக்கு வேதனிக்கும்..” என்றாள் நயனா. இருவரும் அவள் மருந்து போடுவதைப் பாவமாய் முகம் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க ஷோபனா சிரித்தார்.

“ஹஹா, இதுங்க ரெண்டும், என்னவோ உன் கால்ல ஆப்பரேஷன் பண்ணற போல பீல் பண்ணிட்டு இருக்குங்க…” என நியதியும் சிரித்தாள்.

வெகு நாட்களுக்குப் பிறகு மனம் நிறைந்திருந்தது.

“ஆன்ட்டி…! இப்ப எனக்கு ஓகே தான், நான் கிளம்பட்டுமா…?”

“அதொண்ணும் முடியாது, என்டே ஆதி நின்னே ஈவனிங் கூட்டிட்டு போகும்… அதுவரே இங்கே இரு, போரடிச்சா வீடு எல்லாம் சுத்திப் பாரு… ஆதி இப்ப வருவான்…”

“வசந்தே…” என்றவர் மதிய உணவுக்கு செய்ய வேண்டியதை லிஸ்ட் போடச் செல்ல குழந்தைகளுடன் விளையாடினாலும் அவளுக்குத் தனியே வீட்டை சுற்றிப் பார்க்கும் ஆர்வமின்றி அமர்ந்திருக்க வாசலில் புல்லட் சத்தம் கேட்டது.

வருவது ஆத்ரேயன் வாரியர் என்பது புரிந்ததும் தனது இதயம் ஏன் இத்தனை சத்தமாய் துடிக்கிறது எனத் திகைப்புடன் நினைத்தவள் எழுந்து கொள்ள, குழந்தைகள் சித்தப்பனைக் காணும் ஆவலில் வாசலுக்கு ஓடினர். இருவரையும் இரு கைகளில் அள்ளிக் கொண்டு வந்த ஆத்ரேயனின் விழிகள் அவளைக் கண்டதும் திகைத்தது.

அவளது சேலையும், தலைப் பின்னலும் கேரளப் பெண் போன்ற தோற்றத்தைக் கொடுத்திருக்க பார்வையாலேயே இதமாய் அவளை வருடியவன், “ஆர் யூ ஓகே நிதி…” எனவும் சட்டென்று அடிபட்டது போல் நிமிர்ந்தாள் நியதி.

அதற்குள் அங்கே வந்த ஷோபனா, “வா மோனே, டிபன் கழிக்கு… டைம் ஆயி…” என்றார்.

“நியதி சாப்பிட்டோ…?” என்ற அவன் கேள்வியில் அவளது முகம் மீண்டும் சாதாரணமானது.

“இப்ப இவன் என்னை நியதின்னு தான் கூப்பிட்டானோ…? எனக்கு தான் நிதி ன்னு தோணுச்சோ…?” என யோசித்தப்படி நின்றவளிடம், “என்ன நியதி, எனி பிராப்ளம்…” என்றான்.

“இ..இல்ல, தேங்க்ஸ்… சரியான நேரத்துல ஒரு சகோதரன் போல வந்து என்னைக் காப்பாத்தி வீட்டுக்கும் அழைச்சிட்டு வந்து கவனிச்சுகிட்டிங்க…” என்றாள் நெகிழ்வுடன்.

“ஹேய்…! இட்ஸ் ஓகே…” என்றவன் சற்று குரலைத் தாழ்த்தி,

“கூடப் பிறந்த அக்கா, தங்கச்சிக்கு மட்டும் தான் ஒருத்தன் உதவி செய்யணுமா என்ன…? இந்த மாமன் பொண்ணு, அத்தை பொண்ணுக்கு எல்லாம் உதவி செய்யக் கூடாதா…?” என்று கண் சிமிட்டிக் கேட்க அவள் திகைத்தாள்.

“இப்ப இவன் என்ன சொல்ல வருகிறான்…?” என யோசித்துக் கொண்டு நிற்க அவன் உணவு மேஜையில் சாப்பிட அமர்ந்திருந்தான். அவனது இருபுறமும் குழந்தைகள் இருக்க, இவளுக்கு குழப்பமாகவே இருந்தது.

“என் காது சரியா தான் கேக்குதா…? இல்ல, இதெல்லாம் அவன் சொன்ன போல எனக்கு கற்பனையாத் தோணுதா…?” அவளுக்கு நிஜமாகவே குழப்பியது.

அவன் வந்ததும், “இப்ப நான் ஓகே, கிளம்பட்டுமா மாஸ்டர்… ஈவனிங் சென்டருக்கு வந்துடறேன்…” என முறைத்தான்.

எப்போதும் அவனது சிரிக்கும் கண்களையே பார்த்திருந்தவள், இந்த முறைக்கும் கண்களை வியப்புடன் பார்த்தாள். முறைக்கும் போது அவனது தாடி, மீசைக்குள் இருந்த முகம் மிக வசீகரமாய், ஆண்மையோடு ஜொலித்தது. (இவளுக்கு என்ன கிறுக்கு பிடிச்சிருச்சா, முறைச்சா அழகா இருக்கான்னு சொல்லுறா…)

“போயிட்டு குட்டியை உறக்கான் (குழந்தையைத் தூங்க வைக்க) ஒண்ணும் இல்லியே… ஈவனிங் போகாம்…” என்றவனின் பதிலில் அவள் புன்னகைக்க, “கால் எப்படி இருக்கு…? மருந்து போட்டியா…?” என்றான் காலைப் பார்த்து.

“ம்ம்… பரவால்லை…” என்றவள் மீண்டும் தும்மினாள்.

“நேத்து மழ நனைஞ்சது சேரல போலிருக்கு…” என்றவன் சென்று கையில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவுடன் வந்தான். அதில் இருந்து ஏதோ ஒரு பொடியை விரலில் எடுத்தவன் சட்டென்று அவள் உச்சந்தலையில் வைத்து அமர்த்தித் தேய்க்க அவள் அதிர்ந்து போய் அவனைத் தள்ளினாள்.

“ஹேய்… இரு…! இது தலையில் திரும்பன பொடியா…” ஒரு கையால் அவள் கையைப் பிடித்துக் கொண்ட ஆத்ரேயன் சொல்ல அதைப் பார்த்துக் கொண்டே வந்தார் ஷோபனா.

“நந்தாயி மோனே… நானே நினைச்சேன், இக்குட்டி மழையில் நனைஞ்சதல்லே, தலையில் கொஞ்சம் ராஸ்னாதி பொடி தேய்க்கணம்னு…” என்றவர் அவள் திகைத்து விழிப்பதைக் கண்டு, “மோளுக்கு புரியலியா…? குளிச்சு வந்ததும் இந்தப் பொடி உச்சந்தலையில் வைத்துத் தேய்த்தால் ஜலதோஷம், தலைவேதன, சைனஸ் பிராப்ளம் ஒண்ணும் வராது… திவசம் குழந்தைகளுக்குத் தேய்ப்போம்…” விளக்கினார் பெரியவர்.

“ஓ…!” என்றவள் “ச்சே… இது தெரியாமல் இவனைத் தள்ளி விடப் போனோமே…” என ஆத்ரேயனைக் குற்ற உணர்வுடன் பார்க்க கண் சிமிட்டிச் சிரித்தவன், “இட்ஸ் ஓகே மலர் டீச்சர்…” என்று அவளுக்கு மட்டும் புரியும் வகையில் சொல்ல மீண்டும் முகம் சுருங்கினாள்.

“நீ மேல ரூம்ல போயி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க நியதி…” ஷோபனா சொல்ல, அவனது அருகாமையில் இருந்து தப்பினால் போதுமென்று மாடிக்கு சென்று விட்டாள். சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட கட்டிலில் கண் மூடிப் படுத்திருந்தவள் எழுந்து கொள்ள ஆத்ரேயன் வந்தான்.

“உன்னோட மொபைல், பவுச், கவர்…” என்று அவளது சாதனங்களைக் கட்டிலில் வைக்க, “இத்தனை நேரம் இது எதையுமே யோசிக்கவில்லையே…” என்று அவளுக்கே அதிசயமாய் இருந்தது. அவள் இதை மட்டுமல்ல, அபிமன்யுவைக் கூட இத்தனை நேரம் யோசிக்கவில்லை என்று அப்போது தோன்றவில்லை.

“மலர் டீச்சர் வீடொக்கே சுற்றி நோக்கியோ, இது என்டே அச்சன் ஆசையா பார்த்துப் பார்த்துக் கட்டியதா…” சொன்னவன் விழிகள் தந்தையின் நினைவில் நெகிழ்ந்தது.

“இல்ல, பார்க்கல…” என்றவளிடம், “வா, பார்க்கலாம்…” என அவன் அழைக்க மறுக்க முடியாமல் உடன் சென்றாள் நியதி. வீட்டின் முன்புறமும் அவள் கண்டிருக்கவில்லை. ஹாலில் இருந்த அலங்காரங்களையும் கவனிக்கவில்லை. இப்போது வீட்டைப் பார்ப்பதற்காய் செல்லும்போது கலை நயத்தோடு கட்டப்பட்ட வீட்டின் அமைப்பு பிரமிப்பைக் கொடுத்தது.

வீட்டு நுழைவாயிலில் பட்டிபுரா கதவுகள், விசாலமான திட்டங்கள், பெரிய கண்ணாடி ஜன்னல்கள், அலங்கரித்த திரைசீலைகள், கண்ணைக்கவரும் அலங்கார விளக்குகள், உட்புற முற்றங்கள், மரத்தால் அமைந்த உட்புறங்கள், டெரகோட்டா சிவப்பு ஓடு வேயப்பட்ட சாய்வான கூரைகள் மற்றும் டைலிங் எல்லாமே ரசனையோடு பார்த்துத் தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு அறையின் கதவும் கூட அழகான டிஸைனோடு சிறந்த வேலைப்பாடுடன் இருந்தது. வீட்டுக்கு ஏற்ற இன்டீரியர் டிஸைன் செய்யப்பட்டு பாரம்பரியத்தோடு நவீனம் கலந்த கலவை போல் இருந்தது அந்த வீடு. பிரமிப்புடன் பார்த்திருந்த நியதியின் மனதில் ஆத்ரேயனின் தந்தை மிகுந்த கலாரசனை உள்ளவராய் இருக்க வேண்டும் எனத் தோன்றியது.

“ரொம்ப அழகா, அருமையா இருக்கு வீடு…” வாய்விட்டு சொன்னவளை நோக்கிப் புன்னகைத்தான் ஆத்ரேயன். மதிய நேரம் ஆனதும் ஷோபனா அழைக்க சாப்பிட சென்றனர்.

சின்னதாய் ஒரு விருந்து போல் இலையில் பரிமாறப்பட்ட சூடான மட்டை அரிசி சோறில் பருப்பு நெய்யோடு, சாம்பார், பொறியல், கூட்டுகறி இவையோடு ஒரு அவல் பாயசமும் இருக்க ருசியான உணவை சாப்பிட்டு முடித்த நியதி  “இனி கிளம்பட்டுமா…?” என ஆத்ரேயனிடம் கேட்க, “நிச்சயம் கிளம்பணுமா மலர் டீச்சர்…” ஆத்ரேயனின் கேள்வியில் திகைத்தவள் அவனையே உறுத்து நோக்கினாள்.

என்னோடு நீ இருக்கும்

அழகான நிமிடங்கள்…

என் நெஞ்சோடு இதழுரசும்

இனிய காலங்கள்…

என் கைக்குள்ளே தவசிருக்கும்

பாதுகாத்த நேரங்கள்…

இதயத் துடிப்பாய் சேகரிக்கிறேன்…

Advertisement