Advertisement

 அத்தியாயம் – 9

“நோ…! என்னை எதுவும் பண்ணிடாத…” அலறியபடி எழுந்த நியதிக்கு சுற்றுப்புறம் கண்டு குழப்பமாய் இருந்தது. கண்டது கனவென்று புரிய கண்ணைத் தேய்த்து மீண்டும் சுற்றிலும் பார்த்தவளுக்கு தான் எங்கே இருக்கிறோம் எனப் புரியவில்லை. தலை பயங்கரமாய் வலிக்க அமர்த்திப் பிடித்துக் கொண்டு தடுமாற்றமாய் அமர்ந்தாள்.

சுவரில் இருந்த கடிகாரம் மணி 8 என்று சொல்ல வெளியே இருந்த வெளிச்சம் காலை எட்டு மணி என்றது.

“அய்யய்யோ…! கிளாஸ்க்கு போகலியே…” என மனம் பதைக்க மீண்டும் பார்வையை சுழற்றிக் கொண்டே கட்டிலிலிருந்து இறங்கினாள். உடம்பெல்லாம் அடித்துப் போட்டது போல் பயங்கரமாய் வலிக்க, அவளது உடம்பில் மழையில் நனைந்த உடை மாற்றப்பட்டு நைட்டி அணிந்திருப்பதைக் கண்டவள் அதிர்ந்தாள்.

“ஐயோ..! யாரு எனக்கு டிரஸ் எல்லாம் மாத்தினது…? இங்க லேடீஸ் யாராச்சும் இருப்பாங்களா…? இல்ல, ஆத்ரேயனே மாத்தி விட்டுட்டானா…? கடவுளே…! எதுவுமே தெரியாம மயங்கிக் கிடந்திருக்கனே…” தன்னையே நொந்து கொண்டாள். கால் விரலில் மருந்து வைத்துப் போடப்பட்டிருந்த சின்னக் கட்டைக் கண்டதும் முன்தினம் நடந்தது அரைகுறையாய் நினைவில் வந்தது.

பேருந்து நிறுத்தத்தில் சிறிது நேரம் நின்று பார்த்தவள் ஆட்டோ எதுவும் வராததால் டென்ஷனாக, பின்னில் நின்று கொண்டிருந்தவனோ அவள் அருகில் வந்து நின்றான்.

அவனை முறைத்தவளை, அலட்சியமாய் நோக்கிக் கொண்டே மீசையத் தடவியவன் யாருக்கோ போன் செய்து ஹிந்தியில் ஏதோ பேச இவளுக்கு மழையிலும் வியர்த்தது. அதற்குமேல் அங்கே நிற்பது ஆபத்து எனப் புரிய மழையைப் பொருட்படுத்தாமல் இறங்கியவள் வேகமாய் நடக்க, அவன் பின்னில் கத்திக் கொண்டே ஓடிவர இவளும் ஓடினாள்.

இருட்டில் தடுமாறி ஓடியவள், மழையில் மரத்திலிருந்து ஒடிந்து கீழே விழுந்த குச்சிகள் காலைத் தடுக்க விரல் மடங்கி கீழே விழுந்தவளின் அருகில் அவன் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருந்தான். கால் விரலில் ரத்தம் வருவதைக் கண்டு பயத்துடன் எழுந்தவள், மீண்டும் ஓட, காலும், மனமும் தளர்ந்து அவளுக்கு மயக்கமே வர, அவன் கையை நீட்டி அவளைப் பிடிக்கும் நேரத்தில் முன்னில் ஒரு கார் வந்து நிற்க அதிலிருந்து இறங்கிய ஆத்ரேயனைக் கண்டதும், நிம்மதியுடன் மயங்கி சரிந்தவளை அவன் தாங்கிக் கொள்வது வரை நினைவில் இருந்தது. அதற்கு மேல் நடந்த எதுவும் நினைவில் இல்லை.

“அப்படியானால் இது ஆத்ரேயன் வாரியரின் வீடாகத்தான் இருக்கும்…” அன்று அவன் வாரியல் எனத் தான் சொன்னதை சொல்லி கிண்டல் செய்யவும் வருத்தத்துடன் வாரியர் என சொல்லி மனதில் பதித்திருந்தாள்.

யோசித்தவள் மெல்ல ஜன்னல் அருகே சென்று அதைத் தள்ள குளிர்காற்று குழந்தை போல் தாவி உள்ளே வந்தது. அவள் மாடியில் உள்ள அறையில் இருப்பது புரிய சாத்தி இருந்த கதவை நோக்கி நொண்டிக் கொண்டே நடந்தாள்.

சட்டென்று கதவு திறக்க முன்னில் நின்ற பெண்மணியைக் கண்டவள் திகைத்தாள். அங்கே நின்ற ஷோபனா இவளைக் கண்டதும் புன்னகைத்தார்.

“எந்தா மோளே, நல்லாத் தூங்குச்சா…? கால் வேதனை இருக்கா…?” கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார்.

“ஆன்ட்டி…! நீங்க இங்கே…” திகைப்புடன் கேட்டவளின் கையைப் பற்றி அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்தியவர்,

“இது என்டே வீடுதான்… பாலா பவனம், அன்னைக்கு உன்கிட்ட சொல்லிருச்சே…” என்றார் ஷோபனா.

“ஓ…! அப்ப ஆத்ரேயன்…?” புரியாமல் இழுத்தாள்.

“அவன் என்டே இளைய மகன்… அவன்தான் ராத்திரி மயங்கிய நின்னே இங்கே கொண்டு வந்தது…” என்றார்.

அவர் ஆத்ரேயனின் அன்னை என்றதும் முன்னே இருந்த மரியாதை இன்னும் அதிகமாக நன்றியுடன் பார்த்தாள்.

“ரொம்ப நன்றி ஆன்ட்டி… நேத்து உங்க மகன் மட்டும் சரியான சமயத்துல வரலேன்னா என் நிலைமை என்னாகி இருக்குமோ…?” என்றவள் கை கூப்ப,

“ஹேய்…! நன்றி ஒண்ணும் வேண்டாம் மோளே… ஒரு பெண்ணுக்கு கஷ்டம் வரும்போது பார்த்துட்டு நிக்கறது நல்ல ஆண்மகன் கிடையாது… அதும் நீ அவனுட யோகா சென்டரில் டீச்சராய் வொர்க் பண்ணற குட்டியாமே… அவன் சொல்லிச்சு, உன்னோட பாதுகாப்புக்கு அவனும் உத்திரவாதம் இருக்கு தானே…” என்ற அவனது அன்னை,

“இப்ப காலு வேதனை இருக்கா…? நினக்கு பிரஷ், பேஸ்ட், டவல் எல்லாம் பாத்ரூம்ல இருக்கு… நல்ல சுடுவெள்ளம் ஹீட்டரில் இருக்கு, மோளு குளிச்சிட்டு வா… ராத்திரியும் ஒண்ணும் சாப்பிடலை, பட்சணம் கழிக்காம்…”

“சரி ஆன்ட்டி…” என்றவள் சற்றுத் தயங்கி திரும்பினாள்.

“ஆன்ட்டி…! என்னோட நனைஞ்ச டிரஸ் எல்லாம்…”

“அது நான் தன்னே மாற்றி நைட்டி போட்டு விட்டது, வெளிய காயப் போட்டிருக்கு… இன்னைக்கு நினக்கு லீவு, நல்லா ரெஸ்ட் எடுக்கான் ஆதி சொல்லிச்சு…” அவர் சொல்லவும் தான் அவளுக்கு முழுதாய் நிம்மதியானது.

“ம்ம்… தேங்க்ஸ் ஆன்ட்டி…! உங்களுக்கு என்னால ரொம்ப சிரமம்…” என்றவளின் சோர்ந்த முகத்தை வருடியவர்,

“யாரோட வீட்டிலோ இருக்கறதா நினைக்க வேண்டாம், அன்னைக்கு கோவிலில் என்னையும் அம்மா போலன்னு நீ சொல்லிச்சு, அப்படியே நினைச்சுக்க… போயி குளிச்சிட்டு வா…” என்றவர் அங்கிருந்து நகர, உண்மையில் அவரது கரிசனத்திலும், அன்பிலும் அவள் மனம் நெகிழ்ந்திருந்தது. அம்பிகை அம்மாவும், சாவித்திரியும் நினைவில் வந்தனர்.

காலில் இருந்த கட்டை அவிழ்த்துவிட்டு சுடுதண்ணியில் அலுப்புத் தீரக் குளித்தவள் நாப்தலின் வாசனையோடு இருந்த டவலை எடுத்து உடலைத் துடைத்து அவிழ்த்துப் போட்ட நைட்டியையே போட்டுக் கொண்டு வெளியே வந்தாள். தலைக்கு குளித்ததால் நீர் சொட்ட, தலையைத் துவட்டியபடி அமர்ந்திருந்தவள் அறைக்கதவு திறக்கும் ஓசையில் திரும்பினாள்.

ஷோபனா தான் அவளுக்கான உடையுடன் வந்தார்.

“மோளே, இந்த சேரி கெட்டிக்கோ… ஒரு ரெடிமேட் பிளவுஸ் யூஸ் பண்ணாதது இருக்கு, நினக்கு சரியா இருக்கும்னு நினைக்கறேன், போட்டு பாரு…” என்று கேரளா சேலையும், உள்பாவாடை, கரும்பச்சை வண்ண பிளவுஸ் ஒன்றையும் கொடுக்க, “என்னோட டிரஸ் காய்ந்ததும் போட்டுக்கறேன் ஆன்ட்டி, இப்ப இந்த நைட்டியே போதுமே…” என மறுத்தாள்.

“அதொந்தும் முடியாது… என்டே ஆதி வந்தா என்னே சீத்த பறயும், நின்னே நல்லா கவனிக்கணம்னு சொல்லிட்டு தான் போயிருக்கு… மோள்க்கு என்டே சேரி, பிளவுஸ் உடுக்க கஷ்டமா இருக்கா…?” என்றார் கரிசனத்துடன்.

“ஐயோ…! அப்படிலாம் இல்ல ஆன்ட்டி… உங்களுக்கு எதுக்கு சிரமம்னு தான் சொன்னேன்…”

“ஒரு சேரி, பிளவுஸ் நினக்கு கொடுக்கறதில் என்ன சிரமம்…? நீ வேகம் உடுத்திட்டு கீழே வா, நான் அவிடே உண்டாகும்…” சொன்னவர் அங்கிருந்து சென்று விட, நியதி எழுந்து உடை மாற்றத் தொடங்கினாள்.

பிளவுஸ் சற்றே லூஸாக இருக்க, சேலை உடுத்தவள், அங்கிருந்த செல்பில் சீப்பு, குட்டிக்குரா பவுடர் இருக்க புது இடத்தில் சற்று நீட்டாக இருக்க நினைத்து லேசாய் பவுடர் போட்டு தலைமுடியை ஒதுக்கி ஈரஜடை போட்டு அப்படியே முடியை விரித்து விட்டுக் கொண்டு கீழே இறங்கினாள்.

அங்கே ஹாலை ஒட்டியிருந்த டைனிங் ஹாலில் அபிநந்தன் சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஆதிரா ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் இருவருக்கும் இட்லி ஊட்டிக் கொண்டிருந்தாள்.

அவர்களைக் கண்டதும் யாரென்று புரிந்தாலும் முதன்முறை காண்பதால் சற்றுத் தயங்கி நிற்க ஷோபனா வந்துவிட்டார்.

“வா மோளே…! இது ஆதிரா, என் மூத்த மருமகள்… அது என் மூத்த மகன் அபிநந்தன்… இவங்க தான் ஹோஸ்பிடல் பார்த்துக்கிறாங்க, இவங்க குழந்தைங்க நவீன், நயனா…” என்று நியதிக்கு அறிமுகப்படுத்த, பொதுவாய் வணக்கம் சொன்னாள் நியதி.

“நியதி…! நல்லா உறங்கி பிரஷ் ஆயல்லோ…” ஆதிரா இயல்பாய் பேச சிறு நாணத்துடன் புன்னகைத்தாள்.

“உங்க எல்லாருக்கும் தான் தேங்க்ஸ் சொல்லணும் மேடம்…”

“எங்கள்க்கு எந்தினு தேங்க்ஸ், ஆதிக்கு தான் நீ தேங்க்ஸ் சொல்லணம்…” என்றாள் அவள்.

குழந்தைகள் இருவரும் அவளை முன்பே கண்டிருந்தாலும் சேலையில் தங்கள் வீட்டில் நிற்பவளைப் புதிதாய் நோக்க, நயனா நியதியின் முந்தானையை மெல்ல இழுக்க திரும்பியவளைக் கண்டு பூவாய் சிரித்தாள்.

அந்த அழகில் அப்படியே அவளை எடுத்துக் கொண்ட நியதி, “நான் நைனாவை முன்னமே கண்டிருக்கேன்…” என்று மலையாளத்தில் சொல்ல முயல அவர்கள் சிரித்தனர்.

அதற்குள் சாப்பிட்டு கை கழுவி வந்த அபிநந்தன் அவளிடம், “காலில் காயம் இருக்கு… அம்மா ஒரு களிம்பு தரும், பிரட்டியால் மதி…” என்றவன் சோபாவில் அமர்ந்து கொண்டே, “நியதிக்கு நாடு எவிடயா…?” என்றான்.

“இந்தியா தான்…” அவள் குழப்பமாய் சொல்ல ஷோபனா, “நீ எந்த ஊருன்னு கேக்குறான் மோளே…” என்றார் சிரிப்புடன்.

Advertisement