Advertisement

கண்ணைக் கசக்கி சந்தேகத்தில் நியதி எழுந்து அருகே சென்று நோக்க பின்னில் ஜான்ஸியின் குரல் கேட்டது.

அதிர்ந்து திரும்பியவளை நோக்கி சோகமாய் புன்னகைத்த ஜான்ஸி, “அந்த ரெண்டு போட்டோல இருக்கறதும் நான்தான் நியதி…” என்றாள்.

அப்போதும் அதிர்ச்சி மாறாமல் நியதி அவளையே நோக்க, “அவர் நான் ஆசையா காதலிச்சு கல்யாணம் பண்ணின என்னோட முதல் ஹஸ்பன்ட் டேவிட், நான் மூணு மாசம் கர்ப்பமா இருக்கும்போது ஒரு விபத்துல இறந்துட்டார்…” என்றவளின் குரலில் வேதனை தெரிந்தது.

நியதி அதிர்ந்து அவளை நோக்க, “இவர் என்னோட ரெண்டாவது ஹஸ்பன்ட் ராபர்ட், டேவிட்டோட குளோஸ் பிரண்ட்… அவர் பிரண்டோட குழந்தை அப்பா இல்லாம வளரக் கூடாதுன்னு என்னை விரும்பியே கல்யாணம் செய்துகிட்டார்… வெளிய போயிருக்கார், கொஞ்ச நேரத்துல வந்திருவார்…” என்றவளை திகைப்புடன் நோக்கினாள் நியதி. சட்டென்று ஜான்ஸி சொன்னதை உள்கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியாமல் ஒரு மாதிரி அதிர்ச்சியிலேயே நின்றது நியதியின் மனது.

அந்த போட்டோவையே பார்த்தபடி ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தவளின் மனதில் ஏதேதோ நினைவுகள் வந்து போக தளர்வுடன் சோபாவில் அமர்ந்தாள் நியதி. இதெல்லாம் அவளுக்குத் தெரியாத விஷயங்கள்.

நியதிக்குத் தெரிந்தது ஜான்ஸி கணவன், இரண்டு வயதுப் பெண் குழந்தையுடன் சந்தோஷமாய் இருக்கிறாள். அவளது அன்னை குழந்தையைப் பார்த்துக் கொண்டு இவளுக்கு உதவியாய் இருக்கிறார் என்பது மட்டுமே. இதெல்லாம் புதிய விஷயங்களாய் இருக்க அமைதியாய் அமர்ந்தாள்.

“என்ன நியதி, ஷாக்கா இருக்கா…? விதி இப்படின்னு இருக்கும்போது என்ன பண்ண முடியும்…?” என்றவளை எதுவும் சொல்லாமல் வேதனையுடன் பார்த்தாள் நியதி.

“டேவிட் ரொம்ப நல்லவர், என்னை உயிரா லவ் பண்ணி கல்யாணமும் பண்ணி கிட்டார்… அவரோட நான் வாழ்ந்தது ஒரே ஒரு வருஷம் தான், ஜெஸி மூணு மாசம் வயித்துல இருக்கும்போது அவருக்கு பெரிய ஒரு ஆக்ஸிடன்ட் ஆச்சு… ரொம்ப சீரியஸா ஹாஸ்பிடல்ல நினைவில்லாம கிடந்தார்… அவருக்கு நினைவு வந்ததும் என்கிட்ட அவர் சொன்ன ஒரே விஷயம், நான் இல்லேன்னா உன் வாழ்க்கையே முடிஞ்சிருச்சுன்னு நீ உடைஞ்சு போயிடக் கூடாது, கண்டிப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும்னு தான்…” அவளது கண்கள் கலங்க விழிகளில் கண்ணீர் தேங்கியது.

“அந்த நேரத்துல கூட என் சந்தோஷம், என் வாழ்க்கைன்னு என்னைப் பத்தியே யோசிச்சவர் டேவிட்… அவரோட குளோஸ் பிரண்டான ராபர்ட் கிட்டயும் என் குழந்தை அப்பா இல்லாம வளரக் கூடாது, ஜான்ஸிக்கு வேறொரு கல்யாணம் பண்ணி வைன்னு சொன்னார்… அப்படிப்பட்ட நண்பனோட கோரிக்கையை தானே நிறைவேத்த நினைச்சு, நண்பனுக்காக, ராபர்ட்டே என்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னார்… டேவிட் இழப்புல தவிச்சிட்டு இருந்த எனக்கு இன்னொரு கல்யாணத்தை யோசிக்கவே முடியல, ஆனாலும் என் டேவிட்டோட ஆசைக்காகவும், பெரியவங்களோட வற்புறுத்தலுக்காகவும், குழந்தை பூமிக்கு வரும்போது என் குழந்தையா இருக்கணும்னு ராபர்ட் சொன்னதுக்காகவும் சம்மதிச்சேன்… இப்ப சந்தோஷமா இருக்கேன்…”

நியதி திரும்பி மீண்டும் அந்த புகைப்படங்களைப் பார்க்க, ஜான்ஸி கேட்டாள்.

“என்னடா, ராபர்ட்டைக் கல்யாணம் பண்ண பிறகும் இவ டேவிட் கூட இருக்கற போட்டோவை வச்சிருக்கான்னு பார்க்கறியா…? அது ராபர்ட் தான் எடுக்க வேண்டாம்னு சொன்னார்… நான் டேவிட்டை மறக்கணும்னு எல்லாம் அவர் சொல்லலை, அவரையும் நேசிச்சாப் போதும்னு தான் சொன்னார்… ஹி ஈஸ் ரியலி கிரேட்…!” என்றவளின் முகம் கணவன் நினைவில் பெருமையில் மின்னியது.

அமைதியாய் ஜான்ஸி சொல்லுவதைக் கேட்டபடி அமர்ந்திருந்த நியதியின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி அவள் இன்னும் இயல்புக்குத் திரும்பவில்லை எனக் கூறியது.

“நியதி…! நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறியா…? ஈவனிங் டீ சாப்பிட்டுக் கிளம்பலாம்…” அவள் தோளைத் தொட்ட ஜான்ஸி அன்போடு கேட்க திரும்பினாள்.

“இ..இல்ல, ஜான்ஸி, நான் வீட்டுக்குக் கிளம்பறேன்…”

“ஹேய் ஏன்…? கொஞ்ச நேரத்துல ராபர்ட் வந்திருவார், அவரையும் பார்த்திட்டுப் போகலாமே…” ஜான்ஸி சொல்லும்போதே வாசலில் பைக் சத்தம் கேட்டது.

நல்ல உயரமும், உடல் வாகுமாய் உள்ளே நுழைந்த ராபர்ட் கம்பீரமாய் இருந்தான். முகத்தில் சதா ஒரு புன்னகை ஒட்டிக் கொண்டிருக்க கண்களில் கனிவு தெரிந்தது.

“இதோ, ராபர்ட்டே வந்துட்டார்…” என்ற ஜான்ஸி கணவனிடம் செல்ல கையில் இருந்த பெரிய கவரை அவளிடம் கொடுத்தவன், “நல்ல போத்திறைச்சி (பீப்) கிட்டி, அப்போ குறச்சு கப்ப (மரவள்ளிக் கிழங்கு) வாங்கி…” என்றவன் நியதியைக் கண்டதும் சிரித்தான்.

“ஹலோ நியதி, சவுக்கியமா இருக்கி…? சிக்கன் பிரியாணி சாப்பிட்டுதா…? எனிக்கு கொறச்சு தமிழு அறயாம்…” என அவன் இயல்பாய் அவளிடம் பேச, பதில் சொல்லாமல் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்ற நியதியின் கையில் ஜான்ஸி தட்டினாள்.

“என்னாச்சு நியதி…? ராபர்ட் பேசற தமிழ் பார்த்து பயமா இருக்கா…?” என்றாள் கிண்டலுடன்.

சட்டென்று தன்னை நிதானப்படுத்தி புன்னகைத்த நியதி, “சேச்சே, அப்படி இல்ல, அவருக்குத் தெரிஞ்ச அளவுக்கு டிரை பண்ணட்டும், எனக்குப் புரியும்…” என்றாள்.

“ஜெஸி மோள் எவிடே…? உறங்கியோ…?” குழந்தையின் சத்தம் கேட்காததால் சுற்றிலும் பார்த்தபடி ராபர்ட் கேட்க, ஜாஸ்மின் அடுக்களையிலிருந்து வந்தார்.

“ஜெஸி உறங்கி, மோன் வந்து இரிக்கு… சாப்பிடலாம்…”

“இதோ வராம் அம்மே…” என்றவன் அவர்களின் அறைக்குள் உடை மாற்ற நுழைந்தான்.

அவர்கள் மாமியாரும், மருமகனும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட ஏதேதோ பேச்சும் சிரிப்புமாய் ஹாலில் இருந்த நியதியின் காதிலும் விழுந்தது.

“ராபர்ட்டுக்கு அம்மா, அப்பா யாருமில்லை… என் அம்மாவை ரொம்ப இஷ்டம், அம்மாவுக்கும் மகன் இல்லாத குறையை ராபர்ட் தான் தீர்த்து வைக்கிறார்… நான் சாப்பிட்டாலும் மருமகன் வந்து சாப்பிடாம அம்மா சாப்பிட மாட்டாங்க, மகளுக்கு மறுபடியும் நல்ல ஒரு வாழ்க்கையைக் கொடுத்த மருமகன் மேல அவ்ளோ பிரியம்…”

“ம்ம்… புரியுது ஜான்ஸி…”

“டேவிட்டோட இழப்புல இருந்து என்னை மீட்டுக் கொண்டு வந்தது கூட ராபர்ட்டோட அன்பு தான்… அவர் மட்டும் என் வாழ்க்கைல வரலேன்னா நான் என்னாகி இருப்பேனோ, ரெண்டு பேரும் உருவம் வேறயா இருந்தாலும் நேசிக்கிறதுல ஒரே போல தான், ஒருவேளை, நான் ராபர்ட்டைக் கல்யாணம் பண்ண சம்மதிக்கலேன்னா என் வாழ்க்கை இவ்ளோ சந்தோஷமா இருந்திருக்குமான்னு தெரியலை… இந்த வாழ்க்கை கடவுள் எனக்குக் கொடுத்த பரிசு…” மனதின் வார்த்தைகள் நெகிழ்வுடன் வெளிப்பட்டதில் ஜான்ஸியின் கண்கள் கலங்கி இருந்தன. அவள் கையில் ஆதரவாய் தட்டிக் கொடுத்தாள் நியதி.

ஜாஸ்மினும், ராபர்ட்டும் உணவு முடிந்து வந்ததும் அவர்களிடம் சொல்லி விடை பெற்ற நியதியை ஜான்ஸி தான் கொண்டு வந்து விடுவதாக சொல்ல, கண்டிப்பாய் மறுத்து விட்ட நியதி பஸ் ஸ்டாப்பில் விட்டால் போதுமென்று சொல்லிவிட பஸ் ஏற்றிவிட்டே சென்றாள்.

பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்திருந்தவளின் பார்வை வெளியே பதிந்திருக்க காணும் காட்சிகள் பேருந்தின் போக்கில் வேகமாய் பின்னோக்கி சென்றன. ஜான்ஸியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவளின் மனது சட்டென்று சடசடத்துப் பெய்த மழை அவள் மீது தெறித்ததில் மீள, திறந்திருந்த ஜன்னல் கண்ணாடியை சாத்தினாள்.

பாகில் குடையை எடுத்து வைத்தோமா என யோசித்தவள், அதைத் திறந்து பார்க்க குடையைக் காணவில்லை.

சார்ஜரில் இருந்த மொபைலை எடுக்க சென்றவள் குடையை எடுக்காமல் வந்தது நினைவில் வர, “அடடா…” என்று தலையில் தட்டிக் கொண்டாள். பேருந்து நிறுத்தத்தில் இருந்து அவள் வீட்டுக்கு அரை மணி நேரத்திற்கு மேல் நடக்க வேண்டும் என்பதால், “சரி, ஆட்டோவில் போய்க் கொள்ளலாம்…” என மனதைத் தேற்றிக் கொண்டவள், அவளது நிறுத்தம் வந்து பேருந்திலிருந்து இறங்கும் போது மழை வலுத்திருந்ததோடு நன்றாய் இருட்டி இருந்தது.

ஆட்டோ ஒன்றையும் காணவில்லை. நிறுத்தத்தில் கூட ஒரு ஆணும், ஒரு தம்பதியரும் மட்டும் மழைக்கு ஒதுங்கி நின்றிருந்தனர். புதுத் துணி வாங்கியது பிளாஸ்டிக் கவரில் இருந்ததால் அதை நன்றாக மழைத் தண்ணீர் படாதது போல் மடக்கிப் பிடித்திருந்தாள். தவிப்புடன் ஆட்டோ வருகிறதா எனப் பார்த்து நின்றவள் எதேச்சையாய் திரும்ப அங்கே வடநாட்டுக்காரன் போல ஒருத்தன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். கடுப்புடன் திரும்பிக் கொண்டவள் சற்றுத் தள்ளி நிற்க அப்போதும் அவன் பார்வை தன்னையே தொடர்வதை உணர்ந்தாள்.

அந்த தம்பதியர் அடுத்து வந்த பேருந்தில் ஏறிச் செல்ல இப்போது அவளும், அவளை விழுங்குவது போல் பார்த்த வடநாட்டுக் காரனுமே இருந்தனர். சட்டென்று இடி இடித்து மின்னல் வெட்டியதில் கரண்டு காணாமல் போக, மழையின் இருட்டும் சேர்ந்து மனதில் திகில் அப்பிக் கொண்டது.

மனம் ஒரு சூழ்நிலைக் கைதி…

மறக்கவும் முடியாமல்

துறக்கவும் தெரியாமல்

தவிக்கும் உணர்ச்சிக் கிடங்கு…

அறிவின் உபதேசத்தை விட

பலப்போதும் உணர்ச்சிகளே

நம்மை அடிமையாக்குகிறது…

Advertisement