Advertisement

அத்தியாயம் – 8

பவளம் டெக்ஸ்டைல்ஸ்.

முன்னில் பெரிய போர்டைத் தாங்கி நின்ற கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் சேலை செக்ஸனில் நுழைந்தனர் நியதியும், ஜான்ஸியும். ஞாயிற்றுக் கிழமை என்பதால் சேலை எடுக்க வந்த சேச்சிகளின் கூட்டமும், அவர்களுக்கு டிரைவர் வேலை செய்ய வந்த சேட்டன்களின் கூட்டமும் சற்று அதிகமாகத் தெரிந்தது.

ஜான்ஸி நேரமாகவே சர்ச்சுக்கு சென்று வரும் வழியில் நியதியைப் பிக்கப் செய்து கொண்டிருந்தாள். சாவித்திரியுடன் பேசிய பிறகு சாப்பிடாமல் யோசனையில் அமர்ந்திருந்த நியதி ஜான்ஸி அழைக்கவும் தான் எழுந்து கிளம்பினாள்.

புன்னகையுடன் விற்பனைப் பிரிவின் முன்னில் நின்ற பெண் அங்கே சேலை கட்டி நின்ற பொம்மைக்கு சவால் விடுவது போல் அழகாய் இருந்தாள்.

“வரு சேச்சி, எந்து நோக்கணம்…?” இனிய குரலில் கேட்டாள்.

“நாடன் சேரி வேணம்…” ஜான்ஸி சொல்ல “அதோ, அங்கே போங்க…” என்று அவள் கை நீட்டிக் காண்பிக்க நகர்ந்தனர். விதவித பார்டர்களில் பல வேலைப்பாடுகளுடன் மின்னிய கேரள சேலைகளில் சற்று சன்னமான தங்க சரிகையோடு குட்டிப் பூக்களில் எம்பிராய்டரி செய்த சேலை அம்மாவுக்குப் பொருத்தமாய் இருக்குமென்று நியதிக்குத் தோன்ற அதை எடுத்தவள் விலை பார்க்க 900 ரூ போட்டிருந்தது.

“இது போதும் ஜான்ஸி…” சட்டென்று பிடித்ததைத் தேர்வு செய்தவளை நோக்கி சிரித்த ஜான்ஸி,

“உனக்கு வாங்கலியா நியதி… இது போல நாடன் சேரி உனக்கும் நல்லாருக்கும்…” என, “இல்ல, எனக்கு சேலை எதுவும் வேண்டாம்… கொஞ்சம் இன்னர்ஸ் மட்டும் வாங்கணும்…” என்றாள் நியதி.

“சரி…” என்ற ஜான்ஸி, அந்த சேலையை பில் போட அனுப்பிவிட்டு சற்றுத் தள்ளி ஒதுக்கமாய் இருந்த இன்னர் செக்ஸனுக்கு நியதியை அழைத்துச் சென்றாள். அங்கு வேண்டியதை வாங்கிக் கொண்டனர்.

“அவ்ளோதானா, வேற எதுவும் வாங்கணுமா…?” என்ற தோழியிடம், “ஜான்ஸி, குழந்தைங்க டிரஸ் எந்த புளோர்ல இருக்கும்…?” என்றாள் நியதி.

“குழந்தையா…? யாரு குழந்தைக்கு டிரஸ் எடுக்கிற…?”

“ப்ச்… எங்கேன்னு சொல்லு…” என்றவளை முதல் புளோருக்கு அழைத்துச் செல்ல அங்கே விதவித வண்ணங்களில் குழந்தைகளுக்கான உடைகள் கண்ணைப் பறித்தன.

குழந்தைகளின் வயதுக்கு ஏற்றவாறு உடைகள் பிரித்து வைக்கப்பட்டிருக்க, அதில் இரண்டு வயதுக் குழந்தைக்கான உடைகளில் பேபி பிங்க் வண்ணத்தில் இருந்த உடை அவள் மனத்தைக் கவர அதையே எடுத்தாள்.

“இது நல்லாருக்கா ஜான்ஸி…?”

“ம்ம்… ரொம்ப அழகாருக்கு நியதி…! எந்தக் குழந்தைக்கு டிரஸ் வாங்கறன்னு சொல்லவே இல்லியே…” என்றாள்.

“இதை பில் போட்டிருங்க…” என்று விற்பனைப் பெண்ணிடம் உடையைக் கொடுத்தவள், “உன்னோட பிரின்சஸ்க்கு தான் இந்த டிரஸ் எடுத்தேன்…” எனவும் ஜான்ஸி திகைத்தாள்.

“ஹேய்…! எந்தா நியதி, எதுக்கு டிரஸ் எல்லாம்…”

“ப்ளீஸ் இருக்கட்டும், என் ஆசைக்கு…” என்று அவள் கையைத் தட்டிக் கொடுக்க ஜான்ஸி மறுக்கவில்லை. இருவருக்குள்ளும் இப்போது நல்ல தோழமை மலர்ந்திருந்தது.  காஷ் கவுன்டரில் பணத்தை செலுத்தி உடையை வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர். இதமான வெயில் சுகமாய் இருக்க, எங்கோ மழை பெய்யும் அடையாளமாய் குளிர்ந்த காற்று உடலைத் தழுவியது.

“எங்கயோ பக்கத்துல மழை பெய்யும் போலிருக்கு…” என்ற ஜான்ஸி ஹெல்மெட்டைப் போட்டுக் கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய நியதி அமர்ந்தாள்.

“ஏதாவது கூல் டிரிங்க்ஸ் குடிக்கறியா நியதி…?”

“இல்ல வேண்டாம் ஜான்ஸி, உன் வீட்டுக்கே போயிடலாம், இங்கிருந்து வீட்டுக்கு எவ்ளோ தூரம்…?”

“பக்கத்துல மார்கெட் போயிட்டு அங்கிருந்து பத்து நிமிஷத்தில் என் வீட்டுக்குப் போயிடலாம் நியதி…” சொன்னவள் வண்டியை எடுத்தாள்.

மார்க்கெட்டுக்குள் செல்ல வரிசையாய் இருந்த கடைகளில் வேண்டிய காய்கறிகளை விலை பேசி வாங்கிக் கொண்டாள் ஜான்ஸி. மழை வரும் போல் இருண்டு வர சீக்கிரம் அங்கிருந்து கிளம்பியவர்கள், ஜன நெரிசலைக் கடந்து வீடுகள் இருக்கும் ஏரியாவுக்குள் நுழைய பசுமையான மரங்களும், சுற்றிலும் அரண் போன்ற மலைகளுமாய் மனதுக்கு அமைதியும், கண்களுக்கு ரசனையுமாய் இருந்த இடத்தை ரசித்தபடி நியதி வண்டியில் அமர்ந்திருக்க இருவரும் வீட்டை அடைந்தனர்.

மத்திய தர குடும்பங்கள் வசிக்கும் ஏரியாவில் வரிசையாய் இருந்த வீடு ஒன்றின் முன் வண்டியை நிறுத்தினாள்.

முன்னில் ஏதேதோ பூச்செடிகள் புத்துணர்வோடு பளபளத்துப் புன்னகைத்தன. வெள்ளையும், நீல நிறமுமாய் பெயின்ட் அடிக்கப் பட்டிருந்த வீட்டைப் பார்த்தபடி நியதி நிற்க, வாசலில் வண்டி நின்ற சத்தம் கேட்டு கையில் ஒரு குழந்தையுடன் எட்டிப் பார்த்தார் ஜான்ஸியின் அன்னை.

“அம்மே… இதானு நியதி…!” ஜான்ஸி சொல்ல, கை கூப்பிய நியதியை “வா மக்களே…!” என அன்பான புன்னகையுடன் வரவேற்றார் ஜான்ஸியின் அன்னை ஜாஸ்மின்.

அவர் கையில் ஜான்ஸியின் ஜெராக்ஸ் போல அதே கருகரு சுருள் முடியோடு, சிவந்த நிறத்தில், பளபளக்கும் திராட்சைக் கண்களுடன் புதிதாய் வந்த விருந்துகாரியைக் கூச்சத்துடன் நோக்கிவிட்டு அன்னையிடம் தாவுவதற்காய் கை நீட்டினாள் ஜான்ஸியின் குழந்தை ஜெஸிகா. அவளை வாங்கிக் கொண்டவள் நியதியைக் காட்டினாள்.

“ஜெஸி…! ஆன்ட்டி நோக்கு…” என்று நியதியைக் காட்ட குழந்தை அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு கூச்சத்துடன் அன்னையின் தோளில் முகம் புதைத்துக் கொண்டது.

“ஹலோ குட்டி, இங்க பாருங்க…” என்றவளை சிறிது ஏறிட்டு மீண்டும் முகத்தை மறைத்து விளையாடினாள் ஜெஸி.

“லஞ்ச் ரெடி ஆயோ அம்மே… ஏதாவது செய்யணுமா…?”

“வேண்ட மோளே, எல்லாம் ரெடி… நியதி உக்காரு மா…” தமிழில் சொன்னவரை அவள் ஆச்சர்யமாய் ஏறிட சிரித்தார்.

“என்னோட அப்பா, அம்மா எல்லாம் உடுமலையில் தான் இருந்தது, நான் கல்யாணமாகி இங்கே வந்தாச்சு…”

“ஓ… ரொம்ப சந்தோஷம் மா…” என்றவளை ஜெஸி மெல்ல சுரிதார் துப்பட்டாவை இழுத்துப் பார்க்க திரும்பியவள் சிரிப்புடன் அவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டாள்.

அவள் “அம்மா…” என்று அன்னையை நோக்கிக் கை நீட்டி இறங்க முயல குழந்தையின் கையில் ஒரு பைவ் ஸ்டார் சாக்கலேட்டைப் பிரித்துக் கொடுக்க அவள் அமைதியானாள். அவளுக்காய் வாங்கிய உடையை எடுத்தவள் குழந்தைக்கு வைத்துப் பார்க்க அழகாய் இருந்தது.

“நோக்கு அம்மே…! நியதி ஜெஸிக் குட்டிக்கு டிரஸ் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கா…” என்ற ஜான்ஸியின் கையில் உடையைக் கொடுத்தவள், “இதை ஜெஸிக்கு சரியா இருக்கானு போட்டு பாரு ஜான்ஸி…” என்றாள்.

“ஜெஸிக்கு ஊணு கொடுத்தோ அம்மே…”

“ம்ம், லேட்டானா தூங்கிருவான்னு கொடுத்துட்டேன்…” என்ற ஜாஸ்மின் மகளுக்கு உதவி செய்ய அந்த பிங்க் வண்ண உடையில் குட்டி தேவதை போல் இருந்தது ஜெஸி. அவளை எடுத்து பட்டுக் கன்னத்தில் நியதி முத்தமிட அவளும் திரும்ப முத்தம் கொடுத்தாள்.

“சரி சமயம் ஆயி, நிங்களு வா… லஞ்ச் சாப்பிடலாம்…” என்ற ஜாஸ்மின் இருவரையும் அழைக்க,

“ஜெஸிக்குட்டி வா, ஆன்ட்டி ஊணு கழிக்கட்டே…” என்ற ஜான்ஸி மகளை வாங்கிக் கொள்ள,

“ரெஸ்ட் ரூம் போகணும் ஜான்ஸி…” என்றாள் நியதி.

அவளை அழைத்துச் சென்று பாத்ரூமைக் காட்ட இவள் சென்று வருவதற்குள் ஹாலுக்கும், அடுக்களைக்கும் நடுவே ஒதுக்கமாய் இருந்த சின்ன உணவு மேஜையில் எல்லாம் தயாராய் எடுத்து வைக்கப் பட்டிருந்தது.

“மோளு சிக்கன் பிரியாணி சாப்பிடுமல்ல…” ஜாஸ்மின் கேட்டுக் கொண்டே கண்ணாடி கிளாஸில் சுடு தண்ணீரை ஊற்றி, வெள்ளை நிறப் பீங்கான் பிளேட்டை அவள் முன்னே வைக்க, தலையாட்டினாள் நியதி. ஜான்ஸி அன்னையிடம் நியதிக்குப் பிடித்த உணவுகளை சொல்லியிருக்க வேண்டும். சூடான சிக்கன் பிரியாணி, இறால் பிரை, தயிர் சாலட் என்று அவளுக்குப் பிடித்த உணவாகவே சமைத்திருந்தார்.

“ஜான்ஸி, உன் ஹஸ்பன்ட் சாப்பிட வரலியா…?” நியதி கேட்க, “அவர் மூணு மணியாகும், நீ சாப்பிடு…” என்றாள்.

“ஜான்ஸி, நீயும் இரிக்கு… மோளை ஞான் நோக்காம்…” என்ற ஜாஸ்மின் பேத்தியை மகளிடமிருந்து வாங்க, அவளும் ஒரு பிளேட்டில் வேண்டியதைப் போட்டு அமர்ந்து கொண்டாள்.

“அம்மா, நீங்க சாப்பிட்டீங்களா…?” நியதி கேட்க,

“இல்ல மா, நீங்க சாப்பிடுங்க, எனக்கு லேட்டாகும்…” என்றார்.

பிரியாணி ருசியாக இருக்க நன்றாகவே சாப்பிட்டாள். கை கழுவி ஹாலுக்கு வந்தவள் கையில் ஒரு ஐஸ்க்ரீம் கப்பைக் கொடுத்த ஜான்ஸி, “சாப்பிட்டு இரு, மோளை உறக்கிட்டு வரேன்…” என்று சொல்ல தலையாட்டியவள் ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடி வீட்டைச் சுற்றி பார்வையை சுழற்றினாள்.

அளவான பொருட்களுடன் அழகாய் இருந்தது அந்த வீடு. சுவரில் நடுநாயகமாய் இருந்த ஜீசஸின் புகைப்படம் முன்பு ஒரு ஜீரோ வாட்ஸ் விளக்கு எரிந்து கொண்டிருக்க, ஷோ கேஸ் கண்ணாடிக்குள் இருந்த புகைப்படங்களைப் பார்த்தவள் திகைத்தாள். ஒரு புகைப்படத்தில் சர்ச்சில் கல்யாணக் கோலத்தில் ஜான்ஸி ஒருவருடன் புன்னகைத்து போஸ் கொடுக்க, இன்னொரு பாமிலி போட்டோவில் ஜான்ஸியும், ஜெஸியும் வேறொரு ஆணுடன் சிரித்தனர்.

Advertisement