Advertisement

 அத்தியாயம் – 6

வகுப்பு முடிந்து வீட்டுக்குக் கிளம்பியவள் மனது ஆத்ரேயன் தன்னை முட்டாள் ஆக்கியதை நினைத்து சுணங்கியது.

“ச்சே… இந்த தாடிக்காரன் தான் நம்ம பாஸ்னு தெரியாம முட்டாள் மாதிரி பேசிருக்கேன்… அவர் பேரை வாரியல்னு கிண்டல் வேற பண்ணிருக்கேன், அவரோட சென்டருக்கு அவரையே பீஸ் கட்டி ஸ்டூடன்ட் ஆக சொல்லி… ப்ச், என்னைக் கேனச்சினு நினைச்சிருப்பாரோ…?”

“அவர் ஏன் என்கிட்ட கிளாஸ்க்கு சேர வந்ததா சொல்லணும்…? அதனால தான இப்படில்லாம் பேச வேண்டியதாப் போச்சு…? இதுல என் தப்பு என்ன இருக்கு…”

தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு வீட்டை அடைந்தவள் கான்டீனில் மதிய உணவுக்கு சொல்லிவிட்டு மேலுக்குக் குளித்து வர, சாம்பார், அவியல், கூட்டுகறி, பொறியல், பாயாசம், பப்படம் என ஒரு விருந்தே அவளுக்கு உணவாக அனுப்பி வைக்கப்பட திகைத்தவள் காண்டீனில் உள்ள சேச்சிக்கு அலைபேசியில் அழைத்தாள்.

“சேச்சி, வேற யாருக்காவது அனுப்ப வேண்டிய புட் எனக்கு அனுப்பிட்டீங்களா…? இவ்ளோ அயிட்டம்ஸ் இருக்கு…?”

“அல்ல மோளே, நினக்கு அனுப்பினது தன்னே… ஒரு பொண்ணுக்கு பிறந்தநாள், அதினு எல்லாருக்கும் விருந்து கொடுக்கான் இதொக்கே சேர்த்து உண்டாக்கான் பரஞ்சு…”

“ஓ… எப்படியோ, அந்தப் பொண்ணால என் பிறந்தநாளுக்கு விருந்து அனுப்பி வச்சிருக்கிங்க, அவங்களுக்கு என்னோட வாழ்த்தும் இருக்கட்டும்…” என்றவள் சாப்பிட அமர்ந்தாள். காலையில் கோவிலில் ஷோபனாவை சந்தித்தது முதல் எல்லாமே நேர்மறையாக நடப்பது போல் உணர்ந்தாள். அலைபேசி சிணுங்க அம்பிகையின் எண்ணைக் கண்டவள் புன்னகையுடன் காதுக்குக் கொடுத்தாள்.

“அம்மா…!”

“நியதி…! சாப்டியா மா…”

“சாப்பிட்டே இருக்கேன் மா…”

“எப்பவும் போல அரைகுறையா சாப்பிடாம பிறந்தநாள் அன்னிக்காச்சும் நல்லா சாப்பிடு…”

“அதுக்கென்ன, இன்னிக்கு யாரோ ஒரு பொண்ணுக்கு பிறந்தநாளாம், கான்டீன்ல எல்லாருக்கும் பாயாசத்தோட விருந்து போடறாங்க…”

“ஓ…!” என்றவர் சில நொடிகள் மௌனமாய் இருக்க, “என்னமா, சைலன்ட் ஆகிட்டீங்க, நீங்க சாப்பிட்டீங்களா…?”

“ம்ம்… இன்னைக்கு இங்கேயும் விருந்து தான் நியதி…” அவர் சொல்லவும் சில நொடிகள் இவளிடம் மௌனம். இருவருக்கும் பழைய நினைவுகள் வந்திருக்க வேண்டும் என்பதை அந்த மௌனம் சொல்லியது.

“சரிம்மா, நான் வச்சிடறேன்…” என்றவளின் மனதில் சிறிது நேரம் ஏதேதோ காரணங்களால் விலகி இருந்த அபிமன்யுவின் நினைவுகள் மீண்டும் வந்து அமர்ந்து கொள்ள சாப்பிடப் பிடிக்காமல் பாதி சாப்பாட்டில் எழுந்து கொண்டாள்.

பால்கனிக்கு வந்து இலக்கில்லாமல் பார்த்தபடி நின்றவளை சுகமான மழைக்காற்று தழுவிச் செல்ல ஆசுவாசமாய் உணர்ந்தாள். அடுக்களையில் கிடந்த பாத்திரங்களைக் கழுவி வைத்து மாலை யோகா வகுப்பிற்குக் கிளம்பியவள் கருநீல சுரிதார் அணிந்து கொண்டாள்.

மாலை வகுப்பெடுக்க சுரேந்தர் மாஸ்டர் வந்துவிட ஆத்ரேயன் அங்கே இருக்கவில்லை. அவனைக் காணாததில் சற்று நிம்மதியாக உணர்ந்தாலும் ஏதோ ஒரு சோர்வும் மனதில் படிவதை நினைத்து குழம்பினாள்.

இரண்டு மணி நேர வகுப்புகள் முடிந்து மாணவர்கள் கிளம்ப நியதியும் கிளம்பத் தயாராக ஆபீஸ் ரூமில் காஷில் இருக்கும் தீபா அவளிடம் வந்தாள்.

“நியதி…! குறச்சு பில் செக் செய்யான் உண்டு, ஹெல்ப் செய்யுமோ…?” எனவும்,

“ம்ம்…” என்றவள் அவளுடன் அலுவலக அறைக்கு சென்றாள். இருவரும் அன்றைய மாத அட்மிஷன், அதற்கான அட்வான்ஸ் எல்லாம் சரி பார்த்து முடிக்க அரை மணி நேரத்துக்கும் மேலானது.

அங்கே வந்த ஜான்ஸி, “வொர்க் கழிஞ்சில்லே…” என்று கேட்க, “இதோ கிளம்பிட்டோம்…” என்ற நியதி எழுந்தாள்.

மூவரும் ஹாலுக்கு வர அங்கே ஒரு மேஜையில் கேக் வைக்கப்பட்டு, அங்கங்கே பலூன் தொங்க விடப்பட்டு, அந்த இடமே அழகாய் மாறியிருக்க, ஆத்ரேயன், சுரேந்தர் இன்னும் இரண்டு யோகா டீச்சர்ஸ் எல்லாரும் இவளுக்காய் காத்திருக்க திகைப்புடன் நின்றாள் நியதி.

“சர்ப்ரைஸ்…” என்று ஜான்ஸி அவளை அழைத்து வந்தாள்.

“வா நியதி, கேக் கட் செய்யு…” ஆத்ரேயன் புன்னகையுடன் சொல்ல வியப்புடன் பார்த்தவள் அவன் நீட்டிய பிளாஸ்டிக் கத்தியை வாங்கிக் கொண்டாள்.

அனைவரும் மேஜை அருகே வர நடுவில் நின்றவளின் அருகே ஆத்ரேயன் வந்து நிற்க, சற்று கூச்சமாய் உணர்ந்தாள். முடியை அப்படியே காற்றில் அலைய விட்டு வெளிர்நீல ஜீன்ஸ், பிளாக் டீஷர்ட்டில் இருந்தான். அவனது நிறத்துக்கும், துளி சதை அதிகமில்லாத கச்சித உடலுக்கும் அந்த உடை பொருத்தமாய், கவர்ச்சியாய் இருந்தது.

அவள் திகைப்புடன் இவர்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்… என யோசித்துக் கொண்டிருக்க, “உன் பயோ டேட்டா பார்த்தப்போ டுடே பர்த்டேனு மனசிலாயி, சோ, ஒரு சர்ப்ரைஸ் ஆயிக்கோட்டே விசாரிச்சு…” என்றான் ஆத்ரேயன்.

அவளுக்கு ஏனோ கண்கள் கலங்கின. சட்டென்று அம்பிகையும், ஆஸ்ரமத்துக் குழந்தைகளும், அபிமன்யுவும் மனதுள் வந்து போயினர்.

“நியதி…! கட் செய்யு…” ஆத்ரேயன் சொல்ல கேக்கை கட் பண்ணவும் கை தட்டி ‘ஹாப்பி பர்த்டே நியதி…’ வாழ்த்தினர்.  கேக்கை கட் பண்ணி யாருக்கு முதலில் கொடுப்பது என்று குழம்பியவள் அப்படியே நிற்க, ஒரு பீஸ் எடுத்து அவளுக்கு ஊட்டி விட வாயருகே கொண்டு சென்றான் ஆத்ரேயன்.

“கமான், கூல்…!” என்றவன் கண் சிமிட்டி சொல்ல, நியதி வாய் திறந்து வாங்கிக் கொண்டாள்.

ஜான்ஸி, தீபா, சுரேந்தரும் கூட அப்படியே ஊட்டி விட வாங்கிக் கொண்டாள். ஆஸ்ரமத்தில் வளர்ந்தளுக்கு இந்த மாதிரி விசேஷங்கள் எல்லாம் எப்போதும் ஆகோஷம் போலத் தான்… திகைப்பும், வியப்புமான நிமிஷங்கள். அவர்கள் வாழ்க்கையில் கொண்டாட்டங்கள் குறைவு தானே.

அனைவரும் விஷ் பண்ணி கேக் சாப்பிட்டு முடிக்க, “நியதிக்கு என்னோட பர்த்டே கிப்ட் இன்னிக்கு டின்னர், எல்லாரும் ஹோட்டல்ல சாப்பிடலாம்…” என்றான் ஆத்ரேயன். அவனே சொல்லவும் நியதி மறுக்க முடியாமல் தவிக்க, ஜான்ஸி அவள் கையில் தட்டிக் கொடுத்தாள்

“கம்மான் நியதி, ஜஸ்ட் என்ஜாய்…” என்றாள்.

எல்லாரும் அவரவர் வண்டிகளில் கிளம்ப ஆத்ரேயனின் இன்னோவா காரில் தீபாவும், நியதியும் ஏறிக் கொண்டனர்.

“நியதி, நான் வெஜ் கழிக்குமோ…?” ஆத்ரேயன் கண்ணாடி வழியாய் அவளை நோக்கிக் கேட்க தயக்கமாய் சொன்னாள்.

“ம்ம்… எப்பவாச்சும்…”

“அப்போ நான் வெஜ் ஹோட்டலில் போகாம்…” என்றவன் அவர்களை அழைத்துச் சென்றது ஒரு நடுத்தர ரக அசைவ ஹோட்டலுக்கு.

அனைவரும் கை கழுவி பாமிலி ரூமில் இருந்த பெரிய மேஜையை சுற்றி அமர ஆத்ரேயன் தனக்கு அருகே உள்ள நாற்காலியைக் காட்டி, “இவிடே இரிக்கு, மலர் டீச்சர்…” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில். அவள் திகைப்புடன் அவனை நோக்க, “சும்மா…” என்று கண் சிமிட்ட அவளுக்கு ஒரு மாதிரி தர்மசங்கடமாய் இருந்தது.

அவரவர்களுக்குப் பிடித்த உணவுகளை, நூடுல்ஸ், பிரியாணி, பிரைடு ரைஸ், நாண், சிக்கன், பிஷ் என்று ஆர்டர் செய்ய, நியதி அவளுக்கு சிக்கன் பிரைடு ரைஸ் மட்டும் போதும் என்று விட்டாள். அதில் பாதியை மட்டும் தட்டில் எடுத்தவள் பவுலில் மீதியை அப்படியே வைக்க, ஆத்ரேயன் இயல்பாய் அதிலிருந்து சிறிது உணவை அவன் தட்டில் சரித்துக் கொள்ள திகைப்புடன் பார்த்தாள்.

சாப்பிட்டு கிளம்பும்போது மணி ஒன்பதரை ஆகியிருந்தது. அங்கிருந்து மற்றவர்கள் எல்லாம் அப்படியே கிளம்ப, ஆத்ரேயனும், நியதியும் மட்டுமே இந்தப் பக்கம் செல்ல வேண்டி இருந்தது. தீபாவுக்கும் அங்கிருந்து வீடு பக்கமாய் இருக்க அவளும் கிளம்பி விட்டாள். ஆத்ரேயனுடன் தனியே செல்லத் தயங்கியவள் ஜான்ஸியின் காதைக் கடித்தாள்.

“ஜான்ஸி, நான் மட்டும் எப்படி பாஸோட போறது, என்னை நீ டிராப் பண்ணிடறியா…?” எனவும் அவள் முறைத்தாள்.

“விளையாடறியா, உன்னை விட்டுட்டு நான் தனியா இந்த நேரத்துல மறுபடி இங்கே வரணுமா…? எதுக்கு பாஸ் பார்த்து இப்படி பயப்படற… ஹி ஈஸ் வெரி கூல் அண்ட் பிரண்ட்லி, தயங்காம அவரோட போ, பத்திரமா உன்னைக் கொண்டு போயி பிளாட்டுல விட்டுடுவார்…” என தைரியம் சொன்னாள்.

“கிளம்பலாமா…?” சுரேந்தருடன் பேசியபடி நின்ற ஆத்ரேயன் அவர் கிளம்பியதும் நியதியை நோக்கி வந்தான்.

“ஜான்ஸி, லேட் ஆவண்டா, நீ போயிக்கோ…” எனவும் அவள் தலையாட்டி இவளிடம் சொல்லிவிட்டு வண்டியை எடுக்க, தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தவளைக் கண்டு, “எந்தா, வருந்தில்லே…” என்றவன் காருக்குள் அமர்ந்து முன் சீட் கதவைத் திறக்க, “நான் பின்னாடி உக்கார்ந்துக்கறேன்…” என்றவள் பின்னில் அமர்ந்தாள்.

வண்டியை எடுத்தவன், “மலர் டீச்சர்னு என்னைக் கண்டால் பேடியானோ…?” என்றான் கண்ணாடியில் நோக்கி.

“இ..இல்ல, அப்படில்லாம் இல்ல…”

“பின்ன எந்தினா, இங்கனே நெர்வசாயிட்டு இரிக்குனது…” அவன் கேட்கவும் தான் சீட்டின் நுனியில் சற்று பதட்டத்துடனே தான் அமர்ந்திருப்பதை உணர்ந்தாள்.

“நியதி, பி பாஸிடிவ்…! எனிக்கு மலர் டீச்சரே இஷ்டமானு… நின்னே காணான் அதே போலுண்டு, அது கொண்டு நின்னே அங்கனே விளிச்சு… நினக்கு இஷ்டம் இல்லெங்கில் விளிக்கினில்லா…” என்றான் அவன் மென்மையான குரலில்.

“இல்ல, பரவால்ல…”

“நான் நின்னே பர்ஸ்ட் கண்டப்போ இங்கனே அல்லல்லோ, என்னோடு போல்டாயிட்டு சம்சாரிச்சு, இப்ப எந்து பற்றி…?”

“அதுவந்து, நீங்க ஸ்டூடன்ட் நினைச்சு பேசினேன்… இப்ப பாஸ்னு தெரிஞ்சப்போ சாதாரணமா பேச முடியலை…”

“பாஸ்க்கு எந்தா நாலு கை, நாலு கால், ரெண்டு தலையா இருக்கு… எல்லாரும் மனுஷங்க தானே, என்னோட நீ பிரண்ட்லியா, இயல்பா பழகலாம்…” என்றான் ஆத்ரேயன். அவன் சொன்னதை அப்படியே கற்பனையில் யோசித்துப் பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது.

“அச்சோ வேண்டாம், ரொம்ப பயங்கரமா இருக்கு…”

“எந்து பயங்கரம்…?”

“ரெண்டு தலை, நாலு கால், நாலு கையோட உங்களை யோசிச்சுப் பார்த்தேன், பயங்கரமா இருக்கு…” அவள் சிரிப்புடன் சொல்ல அவனும் சிரித்தான்.

“அப்போ மலர் டீச்சர்னு சம்சாரிக்கானும் அறயாம், அல்லே…” அவன் சொல்ல இருவரும் சிரித்தனர்.

“இருப்பது ஒரு லைப், அதில் எதற்கு ஆயிரம் யோசனைகளும், வருத்தங்களும்… வர்றதை பேஸ் பண்ணி, அடுத்தடுத்து யோசிச்சுட்டு ரிவர் போலே போயிட்டே இரிக்கணம், எங்கயும் தேங்கி நின்னா குளம் போலே கலங்கிப் போகும்… யூ நோ, ரிவர் எப்பவும் தெளிவா இருக்கும்… நீ கேட்டதில்லே தமிழ் பாட்டு, ‘எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே, நீ நதி போலே ஓடிக் கொண்டு இரு…’ A. R. ரஹமான் மியூசிக்கில் தளபதி பாட்டு…?”

“ம்ம்… கேட்டிருக்கேன்…”

“ம்ம் அதன்னே, கேட்டால் போறா… இங்கனே உள்ள பாட்டுகள் தான் நமக்கு எனர்ஜி பூஸ்டர்…”

“ம்ம்… நீங்க தமிழ் பாட்டெல்லாம் கேப்பிங்களா…?”

“பின்னே… தமிழ் ஸாங் போலே கேட்க சுகமுள்ள லாங்குவேஜ் வேறு இல்ல, மலையாளிக்கு ஒரு குணம் உண்டு… அவனு எல்லா தேசமும், மொழியும், இஷ்டம் ஆனு… நல்லது எங்கே இருந்தாலும் ரசிப்பான், படிப்பான்… அவனு தமிழும் பிடிக்கும், ஹிந்தியும் பிடிக்கும்… இங்லீஷும் பிடிக்கும்… பிடித்தம் தான் எல்லாத்தையும் இஷ்டப்பட்டு படிக்க, தெரிஞ்சுக்க வைக்கும்…” அவன் சரளமாய் பேச அவளும் இயல்பாய் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“என்னோட மலையாளம் மனசிலாக்கான் நினக்கு புத்திமுட்டு உண்டோ…?”

“இல்ல சார், புரியுது…”

“வ்வாட், சாரோ…? நோ, ஐ டோன்ட் லைக் சார்…”

“அப்போ மாஸ்டர்னு கூப்பிடறேன்…”

“அதை விட பெஸ்ட் ஒரு நேம் சொல்லட்டா…?”

“என்ன நேம்…?”

“வாரியல்…! ஹஹா…” சொல்லிவிட்டு சிரித்தான் ஆத்ரேயன்.

“ஸாரி…! அது அன்னைக்கு சரியாப் புரியாம…”

“ஹேய்…! இட்ஸ் ஓகே, சோரி வேண்டா, ராவிலே உடுத்த ஸாரி சூப்பர்… யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ் தட் ஸாரி…” அவன் இயல்பாய் கண்ணாடியில் நோக்கி சொல்ல அவள் சிறு தவிப்புடன் எதுவும் சொல்லாமல் இருந்தாள்.

“எந்தா, பரஞ்சது இஷ்டமாயில்லே…! என்றவன், “என்டே டிரஸ் எங்கனே…? நான் காணான் சுந்தரனல்லே…” கண்ணடித்து அவன் கண்ணாடியில் பார்த்து கேட்கையில், அவளும் பார்த்துக் கொண்டிருக்க அவன் முகத்தில் தெரிந்த கர்வமும், ஆண்மையும் மிகவும் அழகாய் இருந்தது. அவள் பதில் சொல்ல முடியாமல் முழித்தாள்.

“ஐ நோ… ஹோட்டலில் சில லேடீஸ் என்னை நோக்கி, நீயும் தன்னே அப்பப்போ என்னைப் பார்த்த…! அது ஜஸ்ட் பீல், ஒரு அட்ராக்ஷன்… தட்ஸ் இட்…! அதில் தப்பென்ன இருக்கு…? எப்பளும் மனசை லேசா ரிலாக்சா வச்சுக்கிட்டா எவ்ளோ பிரச்சனை வந்தாலும் நமக்கு சிம்பிளா கடந்து வர முடியும்… தீர்வில்லாத பிரச்சனையோ, விடையில்லாத கேள்வியோ இந்த உலகத்துல இல்லவே இல்லை… நாமதான் மெனக்கெட்டு அதைக் கண்டு பிடிக்கணும், ஏத்துக்கவும் செய்யணும்…” அவன் கேள்விகள் வித்தியாசமாக அவனது கண்ணோட்டம் புதிதாய் இருக்க சட்டென்று அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல் அமைதியாகவே இருந்தாள்.

“நான் நின்னே வளரே போர் அடிப்பிச்சு, இதா பிளாட் எத்தி…”

பிளாட்டின் முன் காரை நிறுத்த இறங்கிக் கொண்டாள். தலையசைத்து விடை பெற்றவன் கிளம்பி விட்டான். அவள் தான் ஒரு நிமிடம் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.

அவனுடன் இருக்கையில் நேரம் போனதே தெரியவில்லை. எல்லாவற்றையும் மறந்திருந்தவளுக்கு இப்போது மீண்டும் தனிமை உறைத்தது. சோர்வுடன் அவளது பிளாட்டுக்கு சென்றவள் குளித்து உறங்க சென்றாள். உறக்கம் தான் வருவேனா என்று சண்டித்தனம் செய்தது.

அன்று காலையிலிருந்து நடந்ததை அசைபோட்டபடி படுத்திருந்தவள் ஆத்ரேயன் சொன்னதை யோசித்தாள்.

“இருந்தாலும் ஆத்ரேயனுக்கு ரொம்பதான் தன்னம்பிக்கை ஜாஸ்தி, அவனே தன்னை அழகன்னு சொல்லிக்கறான்… அந்தத் தாடியும், மீசையும், அலை போல பறக்குற முடியும் அவனுக்கு ஒரு கம்பீரத்தைக் கொடுக்குது தான்… அதுக்காக அவனை ஏதோ பெண்கள் சைட் அடிச்சாங்களாம்,  அதோட நானும் அவனை சைட் அடிச்சேன்னு சொல்லுறது கொஞ்சம் ஓவரா தான் இருக்கு…” என்றவள் அவனை அப்படிப் பார்த்தோமா என யோசிக்கவும் செய்தாள்.

“அவனது யானைத்தந்த நிறத்துக்கு அந்த கறுப்பு டீஷர்ட் மிகவும் கவர்ச்சியாய் எடுப்பாய் தெரிந்தது என்னவோ உண்மைதான்… அவன் அருகாமையில் நான் தவிப்புடன் இருந்ததும், இயல்பாய் பார்த்ததும் சைட் அடிக்கிறேன் என்று நினைத்துக் கொண்டானோ…? என்னதான் வெளுப்பாக இருந்தாலும் என் அபியின் கறுப்பும், கம்பீரமும் போல் வருமா…?” என்றவளுக்கு “யாரை யாரோடு கம்பேர் செய்கிறாய்…?” என்ற கேள்வி மனதுள் எழுந்து முகத்தில் அறைய அதிர்ச்சியுடன் படுத்திருந்தாள்.

“தீர்வில்லாத பிரச்சனையோ, விடையில்லாத கேள்வியோ இந்த உலகத்துல இல்லைன்னு சொன்னானே… முட்டாள்…! சில பிரச்சனைகளுக்கு தீர்வே கிடையாது, பதிலே இல்லாத கேள்வியும் உண்டுன்னு அவனுக்கு வாழ்க்கை கத்துக் கொடுக்கலை போலருக்கு…” அவன் அப்போது கேட்டதுக்கு இப்போது மனதில் பதில் சொல்லிக் கொண்டாள்.

“சரி… இன்னைக்கு என் பிறந்தநாளுக்கு எல்லாருக்கும் ட்ரீட் எல்லாம் கொடுத்து சந்தோஷப் படுத்தியவனை குத்தம், குறை சொல்லிட்டு இருக்கறது சரியில்லை… அவன் சுபாவம் எப்படியோ அப்படியே இருக்கட்டும், நாம எப்பவும் போல இருப்போம்…” என நினைத்தவள் சற்று நேரம் புரண்டு கொண்டே படுத்திருந்துவிட்டு உறங்கிப் போனாள். நல்ல தூக்கத்தில் இருந்தவளின் கனவிலும் அந்த தாடிக்காரன் இரண்டு தலை, நான்கு கை, நான்கு காலோடு வந்து விடாமல் பயமுறுத்தி, “மலர் டீச்சர், வாழ்கையை அதன் போக்குல வாழ்ந்து பார்க்கணும்…” என்று தத்துவ மழையைப் பல கோணத்தில் பொழிய அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தவள் வியர்த்திருந்தாள்.

“ச்சே… என்னாச்சு எனக்கு, இந்த சாமியார் கனவுலயும் அட்வைஸ் மூட்டையைத் தூக்கிட்டு வந்து இம்சை பண்ணுறானே, இனி இவன்கிட்ட அளவா தான் பேசணும்…” என நினைத்தபடி படுத்துக் கொண்டாள்.

கண்களால் களவாடுவது

புரியாமல் கதை பேசுகிறாய்…

நீ சொல்லுவது

வார்த்தை அல்ல

வெறும் காற்றாகவே

என்னைக் கடக்கிறது…

என்னைக் கலைத்து

தொலைய வைக்கிறது…

Advertisement