Advertisement

இந்த முரட்டுப் பயலுக்கு இப்படி எல்லாம் கூட செய்யத் தெரியுமா என்பது போல் அவள் அதிசயித்துப் பார்க்க, கையில் ஒற்றைப் பீஸ் பிளாக் பாரஸ்ட் கேக்கைப் பிடித்து அதன் மீது குட்டி மெழுகுவர்த்தி ஒன்றை வைத்தவன், தீப்பெட்டியை அவள் கையில் திணித்தான்.

“ம்ம்… பத்த வை…”

அந்த சூழ்நிலையிலும், அவன் செயலிலும் ஒருவித மயக்க நிலையில் இருந்தவள் அவனது ம்ம் என்ற வார்த்தையில் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல் மெழுகுவர்த்தியைப் பற்ற வைக்க, “ஊது…” எனவும் ஊதியவளிடம், “ஹாப்பி பர்த்டே வெள்ளக் கோழி…” என்றவன் சட்டென்று அவளை அணைத்து விடுவித்து, “லவ் யூ வெள்ளக் கோழி…” எனவும்  அதுவரை நடப்பதெல்லாம் நிஜமா, கனவா என்றே புரியாதது போல் திகைப்புடன் நின்றிருந்தவள் கலைந்தாள்.

“ஏய்…! நீ எப்படி உள்ளே வந்த, அதும் இந்த நேரத்துல…” என்றவள் வாயில் கேக்கை திணித்து, “ஆமா, உன் ரூமுல தான் நேத்தே கதவோட தாழ்ப்பாளைக் கழற்றி வச்சுட்டனே… நீயும் அது காணோம்னு தேடிட்டு தாள் போடாம கதவை சாத்திட்டுப் படுத்திட்ட, உள்ள வர்றது கஷ்டமா என்ன…” என்றவனை முறைத்தவள் வாயில் இருந்த கேக்கை முழுங்கி விட்டு, “சரியான கேடி…” என்றாள்.

“சரி, மத்த பேச்செல்லாம் எதுக்கு…?” என்றவன் கையிலிருந்த மீதித் துண்டு கேக்கை அவனே வாய்க்குள் போட்டுக் கொண்டு கையைக் கர்சீப்பால் துடைத்துவிட்டு பாக்கெட்டில் இருந்து அந்த சின்ன நகைப் பெட்டியை எடுத்தான்.

“இது என்னோட ஸ்மால் கிப்ட்…” என்றவன் மெல்லிய தங்கச் சங்கிலி ஒன்றை எடுத்து நீட்ட வாங்காமல் பார்த்தாள்.

“எனக்கு வேண்டாம்…”

“ப்ளீஸ்டி, உனக்காக ஆசையா வாங்கிட்டு வந்தேன்… வேண்டாம்னு சொல்லிடாத…”

“நீ குடுத்தா நான் வாங்கிக்கணுமா, எனக்கு வேண்டாம்…”

“சரி, வேறென்ன வேணும்னு சொல்லு, செய்யறேன்…”

“உனக்கு என் மேல அவ்ளோ லவ்வா…?” இழுத்தவள் வேண்டுமென்றே கிண்டலாய் கேட்க உருகினான் அபிமன்யு.

“நீ என் உசுருடி, என்ன வேணும்னு சொல்லு…”

“ஹூம், என்ன கேக்கலாம்…” யோசித்தவள், “பெருசா ஒண்ணும் வேண்டாம், அந்த எரியுற மெழுகுவர்த்தியை அணைச்சிடு… ஊதி இல்ல, உன் கையால…” என்றாள்.

“அவ்ளோ தானே…” என்றவன் அடுத்த நிமிடம் எரியும் மெழுகை கையால் அமர்த்தி அணைக்க, சூடான மெழுகு கையில் ஒட்டிக் கொண்டு புண்ணாக்க, அவள் பதற அவனோ சந்தோஷமாய் கண்ணில் நீர் வர சிரித்தான்.

“வெள்ளக்கோழி, முதன்முறையா நீ பிறந்தநாள் அன்னைக்கு கேட்டதை நிறைவேத்திட்டேன்… நான் ரொம்ப ஹாப்பி…” என்று சொல்ல அவன் கையைப் பதட்டமாய் பற்றி புண்ணாகி இருந்ததை வேதனையுடன் பார்த்தவள் அதில் ஊதிக் கொண்டே முறைத்தாள்.

“டேய் லூசுக் கருப்பா, நான் சொன்னதுக்காக பொசுக்குன்னு இப்படிப் பண்ணுவியா…? பாரு, கை வெந்து போச்சு…”

“என்னது, டேய் ஆ, லூஸா, கருப்பனா…?” என்றவன் சந்தோஷமாய் அவளைச் சுற்ற அவள் முறைத்தாள்.

“யோவ், உனக்கென்ன கிறுக்குப் பிடிச்சுகிச்சா…?”

“உன் மேல கிறுக்கு தான்…” என்றவன் அவள் கையைப் பற்றி தன்னிடம் இழுக்க, வெகு அருகாமையில் கண்ட அவனது முகம் இன்று ஏனோ பயப்படுத்தவில்லை. அக்கண்களில் நிறைந்திருந்த காதலும், அவனது செயலில் தெரிந்த மென்மையும் அவளுக்குள் ஒரு மாற்றத்தைக் கொடுக்க அவன் முகத்தைக் கண்ணெடுக்காமல் பார்த்தாள் நியதி. அவளிடம் ஒரு தடுமாற்றம் இருந்ததைப் புரிந்து கொண்டவன், “லவ் யூ வெள்ளக்கோழி…” என்றான் மீண்டும்.

கண்ணில் நிறைந்த நீர் கன்னத்தில் வழிய தன்னை மறந்து அமர்ந்திருந்த நியதி, சட்டென்று தன் மீது மெத்தென்று ஏதோ வேகமாய் வந்து விழுந்ததில் கண்ணைத் திறந்தாள்.

பந்தொன்று அவள் மீது வந்து விழுந்திருக்க, அதை எடுப்பதற்காய் ஓடி வந்தாள் ஒரு பெண் குழந்தை.

“போல்…” குட்டி பிராக்கும் கண் நிறைய மையும், கருகரு முடியுமாய் புட்டுக் கன்னத்தோடு அழகாய் இருந்த குழந்தை கண்ணைக் கவர, மடியில் இருந்த பந்தை எடுத்துக் கொண்டு, தன்னை நோக்கி பந்தை வாங்க வந்து கொண்டிருந்த குழந்தையிடம் சென்றாள் நியதி.

“ஹேய் குட்டி…! உன்னோட பாலா…?” எனவும் சட்டென்று இவளை விழித்துப் பார்த்த குழந்தை களுக்கென்று சிரித்து, நாணத்துடன் தலையசைத்து, “அதே…” என்றது.

“ஓ…! ரொம்ப கியூட்டா இருக்கீங்களே, உங்க பேரென்ன…?” என்றவள் அதனிடம் மண்டியிட்டு அமர்ந்து பந்தை நீட்ட தனது பட்டுக் கையால் வாங்கிக் கொண்டது.

“தனியாவா வந்திங்க, அம்மா எங்கே…?” அவள் கேட்க, கை நீட்டிக் காட்டியது குழந்தை. சற்றுத் தள்ளி ஒரு பெண்மணி மொபைலில் திரும்பி நின்று பேசிக் கொண்டிருந்தார்.

“உன் பேரென்ன குட்டி…?”

“நைனா…!”

“ஹாஹா என்னது, நைனாவா…?” என்றவள் அதன் ரோஜாக் கன்னத்தைக் கிள்ளி உதட்டில் வைத்து முத்தம் கொடுக்க கூச்சத்தில் சிரிப்புடன் நின்றிருந்தது குழந்தை.

“சரி, தனியா விளையாடக் கூடாது… அம்மாகிட்ட போங்க…” அவள் சொல்ல, எம்பி மண்டியிட்டு அமர்ந்திருந்தவளின் கன்னத்தில் முத்தமொன்று வைத்து, “ஹாப்பி பத்தே ஆன்ட்டி…” என்றுவிட்டு குடுகுடுவென ஓடிப் போனது.

திகைப்புடன் நின்றவள், “யாரந்தக் குழந்தை, எனக்கு பர்த்டேன்னு அதுக்கு எப்படித் தெரியும்…? யாரு சொல்லிருப்பா…?” எனக் கேள்விகளோடு நின்றவள் மீண்டும் அக்குழந்தை அங்கே இருக்கிறாளா எனப் பார்க்க, குழந்தையும் இல்லை, போனில் பேசிய பெண்ணும் இல்லை.

திகைப்புடன், “ஜான்ஸிகிட்ட தானே சொன்னோம், எப்படி அந்தக் குழந்தைக்கு தெரியும்…” என நடந்ததை யோசித்துக் கொண்டே வகுப்பை நோக்கி நடந்தவள் தூக்கிக் கட்டிய கொண்டை, யோகா உடையுடன் கையில் சுருட்டிப் பிடித்த யோகா மேட்டுமாய் வகுப்புக்கு வந்து கொண்டிருந்த ஆத்ரேயனைக் கண்டதும் முகம் சுருங்கினாள்.

“முதல் பாட்ச்ல ஜூனியர் கிளாஸ்க்கு வர சொன்னா, செகன்ட் பாட்சுக்கு வருது இந்த சாமியார், இன்னிக்கு பாஸ் வேற கிளாஸ் எடுக்க வரப் போறார்…” யோசித்தவள் வகுப்புக்கு வெளியே நின்று ஷூவைக் கழற்றிக் கொண்டிருந்தவனிடம் சென்றாள்.

இவளைக் கண்டதும் புன்னகைத்தவன் முகத்தில் இருந்த தேஜஸும், கண்களின் ஒளியும் அந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்ற சட்டென்று விழி மாற்றினாள்.

“குட் மார்னிங், மலர் டீச்சர்…”

“நான் மலர் இல்லை, நியதி… அதிருக்கட்டும், முதல் பாட்ச்க்கு வர சொன்னா இந்த பாட்ச்க்கு வந்திருக்கிங்க… இதுல பிகினர்ஸ் பிராக்டிஸ் பண்ணறது கஷ்டம், நீங்க நெக்ஸ்ட் பாட்சுக்கு வாங்க…” என்றாள்.

“ஓ…! இட்ஸ் ஓகே, நான் டிரை பண்ணிப் பார்க்கறேனே…”

“சொன்னாப் புரிஞ்சுக்கங்க மிஸ்டர், இன்னிக்கு எங்க பாஸ் வந்து கிளாஸ் எடுக்கப் போறார்… இந்த ஸ்டூடன்ட்ஸ்  எல்லாம் நிறைய ஆசனங்கள் பயிற்சி எடுத்து முடிச்சவுங்க, நடுவுல ஒரு பிகினர் இருந்தா கண்டிப்பா சரியா வராது, நீங்க கிளம்புங்க… அடுத்த பாட்ச் வாங்க…” என்றாள்.

“ம்ம்… ஓகே…!” அவன் சொல்லவும் உள்ளே சென்றாள் நியதி. அடுத்த வகுப்புக்கான மாணவர்கள் வரத் தொடங்க, ஜான்ஸியும் வந்துவிட்டாள்.

ஸ்டூடன்ட்ஸ் வரிசையாய் நிற்க, “இன்னும் பாஸ் வரலியே ஜான்ஸி…” என்றவளிடம், “அதோ பாஸ் வந்துட்டாரே…” ஜான்ஸி சொல்ல திரும்பியவள் உள்ளே நுழையும் ஆத்ரேயனைக் கண்டதும் அதிர்ந்து போனாள்.

“குட் மார்னிங் மாஸ்டர்…” வரிசையாய் நமஸ்கரித்த மாணவர்களைக் கடந்து முன்னில் வந்த ஆத்ரேயன் ஜான்ஸியின் குட்மார்னிங்கையும் வாங்கிக் கொண்டு நியதியைப் பார்க்க அவள் திகைப்புடனே பார்த்து நின்றாள்.

அவள் விலாவில் இடித்த ஜான்ஸி, “நியதி, பாஸ்…” என்று சொல்ல, அப்படியே நின்றவளுக்கு ஒரு புன்னகையைக் கொடுத்த ஆத்ரேயன், “குட் மார்னிங் நியதி…” என்றான்.

சட்டென்று சுதாரித்தவள், “கு..குட் மார்னிங் மாஸ்டர்…” என அவளும் பதிலுக்கு சொல்ல வகுப்பு தொடங்கியது. அவனும் சில ஆசனங்களை செய்து காண்பித்து, எளிமையாய் புரியும் வகையில் மாணவர்களுக்கு விளக்கி சொல்ல திகைப்புடனே பார்த்திருந்தவள் மனது ‘அவன் சிறந்த குரு’ என்றது.

கண்கள் என்ன கடலா

கண்டவுடன் விழுங்கிட…

காதல் என்ன படமா

காட்சியிலே விளங்கிட…

பார்வை என்னும் வலையில்

பாவை மீனும் சிக்குமோ…

பாசமென்ன கண்டு கொண்டு

பந்தத்தில் நீந்துமோ…

Advertisement