Advertisement

அத்தியாயம் – 5

“மலர் டீச்சர், நோக்கி வா…” என்றபடி தனது கையைப் பற்றி விழாமல் தடுத்தவனை நிமிர்ந்து பார்த்தவள், கடல் வண்ணம் கொண்ட அவனது கருநீல விழிகளில் மூழ்குவது போல், தன் கைகளில் அவன் பிடித்த இடத்தில் மின்சாரம் பாய்ந்தது போல் தோன்ற சட்டென்று கையை உதறினாள்.

“தே..தேங்க்ஸ்…” என்றவள் மறுநிமிடம் உள்ளே ஓடிவிட, புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தான் ஆத்ரேயன்.

சில நிமிடங்களில் யோகா உடையுடன், நியதி திரும்ப வரும்போது யோகா ஸ்டூடன்ட்ஸ் வகுப்புக்குத் தயாராகி இருக்க ஜான்ஸியும் முன்னே நின்று கொண்டிருந்தாள்.

“நியதி, சுரேந்தர் ஸார் லேட் ஆவும்… இப்ப நம்மள் ரெண்டு பேரையும் கிளாஸ் எடுக்கான் பரஞ்சு…” ஜான்ஸி விவரம் சொல்ல, தலையாட்டினாள் நியதி.

“ஓ…! சரி… எல்லாரும் வந்துட்டா கிளாஸ் தொடங்கிடலாம்…” என்றவளின் பார்வை, முன்னில் நின்ற ஸ்டூடன்ட்ஸ் நடுவே யாரையோ தேடிக் கொண்டிருப்பதைக் கண்ட ஜான்ஸி,

“எந்தா நியதி, யாரையானு திறயுந்தது…?” என்றாள்.

“ஹாங், எல்லாரும் வந்தாச்சான்னு பார்த்தேன்…” என்றவளின் கண்களில் அவள் தேடிய தாடிக்காரனைக் காணாததில் ஒரு குழப்பம் வந்திருந்தது.

“நான் வரும்போது விழப்போனப்ப அந்த தாடிக்காரன் தானே கையைப் பிடிச்சு நிறுத்தினான், இப்ப கிளாஸ்க்கு வராம எங்க போயிருப்பான்…” யோசித்தாள்.

“நியதி, கிளாஸ் தொடங்காம்…?”

“முதல் நாளே கிளாஸ் அட்டன்ட் பண்ணாம திரும்பிப் போயிட்டானோ…? சரி, அவன் வந்தாலும், வரலேன்னாலும் நமக்கென்ன…?” என்றவள் ஜான்ஸியிடம் தலையாட்டினாள்.

“ஓகே ஸ்டூடன்ட்ஸ், சூர்யநமஸ்கார் எல்லாரும் வீட்டுல பிராக்டிஸ் பண்ணறீங்க தானே, இன்னிக்கு நாம வேற சில எளிய ஆசனங்களைப் பண்ணலாம்…”

“திரிகோணாசனா…” ஜான்ஸி சொல்ல நியதி செய்தாள்.

“இப்ப எல்லாரும் செய்யுங்க…” என்றதும் ஸ்டூடன்ட்ஸ் செய்ய முயல நிமிர்ந்து நிற்காதவர்களையும், குனிந்து காலைத் தொடும்போது முட்டி வளைந்து நின்றவர்களையும் சரியாய் வைக்க சொல்லிக் கொடுத்தாள் ஜான்ஸி.

“உடம்பை வளைக்காம நேரா நிமிர்ந்து நின்னு ரெண்டு காலையும் ரெண்டடி இடைவெளி விட்டு, அகட்டி வச்சு நிக்கணும்… ரெண்டு கையையும் தோளுக்கு நேரா பக்கவாட்டுல நீட்டி இடது கை பக்கம் இடுப்பை வளைச்சு இடது கை விரலால் இடது பாதத்தின் அருகே தரையைத் தொடணும்… அதே நேரம் வலது கை வளையாம மேல பார்த்து இருக்கணும்… பார்வையும் வலது கை விரலைப் பார்த்து இருக்கணும்… அப்புறம் நேரா நிமிர்ந்து வலது பக்கமும் இதே போல் செய்யணும்… இப்படி ஒரு ரவுண்டு முடிஞ்சதும் கொஞ்சம் கேப் விட்டு இதே போல அஞ்சாறு முறை செய்யணும், கால் வளையாம செய்யணும்…”

அடுத்து நடராஜாசனா, பாலாசனா, புஜங்காசனா என்று மேலும் சில எளிய ஆசனங்களை சொல்லிக் கொடுத்து, அவர்களுடன் சேர்ந்து இருவரும் செய்தனர்.

“இதை இன்னைக்கு பிராக்டிஸ் பண்ணுங்க, நாளைக்கு சுஹாசனா, பிராணாயாமான்னு மூச்சுப் பயிற்சியும் செய்யத் தொடங்கலாம்…” என்ற ஜான்ஸியோடு நியதியும், தவறாக செய்பவர்களைத் திருத்தி சொல்லிக் கொடுத்தாள். ஜான்ஸி நியதியை விட சீனியர், அந்த யோகா சென்டரில் ஐந்து வருடங்களாய் பயிற்சி கொடுக்கிறாள். ஜான்ஸியின் அலைபேசி சிணுங்க எடுத்தவள் பேசிவிட்டு வந்தாள்.

“என்ன ஜான்ஸி, அடுத்த பேட்ச்சுக்கு சுரேந்தர் சார் வந்திடுவாரா…?” நியதி கேட்டாள்.

“அவர் ஈவனிங் தான் வருவாராம், இந்த கிளாஸும் நம்மளைப் பார்த்துக்க சொன்னார், நெக்ஸ்ட் 10.30 தொடங்கற பாட்ச்க்கு நம்ம பாஸ் இன்னிக்கு கிளாஸ் எடுக்க வர்றார்னு சொன்னார்…”

“ஓ… நம்ம பாஸும் யோகா மாஸ்டர் தானா…?” என்றவள் வரப் போகும் யோகா மாஸ்டரை யோகி சற்குரு ஜக்கி வாசுதேவ் அளவுக்கு கற்பனை செய்து கொண்டாள்.

அடுத்த வகுப்பில் சற்று சீனியர் மாணவர்கள் என்பதால் நியதி, ஜான்சி இருவரும் சில ஆசனங்களை செய்து காண்பித்து ஒருவர் மாற்றி ஒருவர் தப்பாய் செய்பவர்களை சரி செய்து கவனித்துக் கொண்டனர்.

“இன்னிக்கு சந்திர நமஸ்கார் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம், இதுல 14 நிலை இருக்கு… இது மாலை, இல்லேன்னா ராத்திரி சந்திரனின் வெளிச்சம் உடம்புல படுற போல பிராக்டிஸ் பண்ணனும்…” செய்து காண்பித்தாள் நியதி. வகுப்பு முடிந்து இருவரும் ஸ்டாப் ரூமுக்கு சென்றனர்.

“எந்தா நியதி, இன்னு ஸாரியொக்கே உடுத்து வளரே சுந்தரி ஆயிட்டு வந்தல்லோ, எந்தா விசேஷம்…” ஜான்ஸி கேட்கவும் காலையில் ஷோபனா கொடுத்த பாயாசம் நினைவில் வர தனது செல்பில் இருந்த டப்பாவை எடுத்தாள்.

“இன்னைக்கு என் பர்த்டே…”

“ஹோ சூப்பர், விஷ் யு மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் த டே நியதி, காட் பிளஸ் யூ…” என்றாள் ஜான்ஸி அவள் கையைப் பற்றி குலுக்கி வாழ்த்தியபடி.

“ம்ம்… தேங்க்ஸ், எங்க கோவில் பாயாசம் குடிப்ப தானே…”

“ஹா பின்னே, எனிக்கு எல்லா தெய்வமும் ஒண்ணு தன்னே… அதும் தின்னுந்த காரியத்தில் வேறே ஒண்ணும் நோக்கானே இல்ல…” என்றவள் அவள் கையிலிருந்த பாயாச டப்பியை வாங்கித் திறந்து டிஸ்போசபிள் கிளாஸ் எடுத்து ஆளுக்கு ஒவ்வொன்றில் ஊற்றினாள்.

“அல்ல மோளே, பாயசம் மாத்திரமே உள்ளு, ட்ரீட் இல்லே…”

“ப்ச்… அதில் எல்லாம் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை…”

“சரி வேண்டா, நான் நினக்கு ட்ரீட் தராம்… ராத்திரி என்டே செலவில் ஹோட்டலில் புட்… நீ வருமோ…?”

“இல்ல, அதெல்லாம் வேண்டாம் ஜான்ஸி… ப்ளீஸ் என்னை கம்பெல் பண்ண வேண்டாம்…”

“இட்ஸ் ஓகே… திஸ் ஈஸ் யுவர் டே, யுவர் விஷ்…” என்றவள் பாயாசத்தை ரசித்துக் குடித்தாள்.

“இட்ஸ் டெலீஷியஸ்… நிங்கள்டே ஊரு கோவில்லயும் இது போல பாயாசம் கிட்டுமோ…?”

“பாயாசம் கிடைக்காது, பொங்கல் கிடைக்கும்…”

“ஓகே, சரிட்டோ… எனிக்கு பேங்கில் ஒரு பணியுண்டு, போயிட்டு அடுத்த கிளாஸ் தொடங்கும் முன்னே வராம்…” என்ற ஜான்ஸி கிளம்ப நியதியும் கார்டனுக்கு வந்து எப்போதும் அமரும் இடத்தில் அமர்ந்தாள்.

மனம் போன வருடப் பிறந்த நாள் அன்று நடந்ததை அசை போடத் தொடங்க, தன்னை மீறிக் கலங்கத் தொடங்கிய கண்ணீரை அடக்கிக் கொண்டு கண்ணை மூடி மனதை ஒருநிலைப்படுத்த முயல எப்போதும் போல் அபியே வெற்றி பெற மனது பின்நோக்கி சென்றது.

“நியதி, நாளைக்குக் காலைல குளிச்சிட்டு இந்த புது சேலையைக் கட்டிட்டு கோவிலுக்குப் போயிட்டு வா… மதியம் நம்ம ஆஸ்ரமத்து குழந்தைகளுக்கு சின்னதா விருந்து ஏற்பாடு பண்ணிருக்கேன்…” என்றார் அம்பிகை.

“எனக்கு எதுக்கு மா, இந்த செலபரேஷன் எல்லாம், நான் பொறந்த பொறப்புக்கு இதெல்லாம் வேண்டாத செலவு…”

“ப்ச்… அப்படில்லாம் சொல்லக் கூடாது நியதி மா… நமக்கு வேணும்னா நம்ம பிறப்புக்கான காரணம் தெரியாம இருக்கலாம்… ஆனா கடவுள் இந்த உலகத்துக்கு அனுப்புற ஒவ்வொரு உயிருக்கும் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்…” என்று அவளது கை பற்றி ஆறுதலாய் சொன்னவர், “அது மட்டும் இல்லை, நம்ம குழந்தைகளுக்கு இப்படி ஏதாவது விசேஷம் வந்தா தானே கொண்டாட்டம்…”

“அது சரிதான் மா, இருந்தாலும் செலவு தானே…”

“செலவைப் பத்தி யோசிக்காத, உன் பிறந்த நாளுக்கு விருந்து வைக்க ஸ்பான்சர் இருக்காங்க…” என்ற அம்பிகை புன்னகைக்க யோசித்தவள் முகம் சுருங்கியது.

“யாரு, அந்த அபிமன்யுவா…?” என்றாள் கடுப்பாக.

“அவன் பேரைக் கேட்டாலே ஏன் உன் முகம் இப்படி அஷ்ட கோணலாப் போகுதோ தெரியல, சின்ன வயசுல இருந்து ரெண்டு பேரும் பார்த்துக்கறிங்க… இப்பவும் ஏன் இப்படி அடிச்சுக்கறிங்களோ…? அபி பேச்சுல முரடா இருந்தாலும், எல்லார்கிட்டயும் அடாவடியா நடந்தாலும் உன் மேல உயிரையே வச்சிருக்கான்னு உனக்கே தெரியும், ஆனாலும் நீதான் ஒத்துக்க மறுக்கற…”

“ஹூக்கும், ஒத்துகிட்டா தான் அவனுக்கு என்னைக் கட்டி வச்சிருவிங்களே… அந்தக் கருப்பனுக்கு அகம்பாவமும், திமிரும் ரொம்ப ஜாஸ்தி, சரியான கேடி… அவனுக்கு பிடிச்சா எனக்கும் அவனைப் பிடிக்கணுமா என்ன…?” வாயாடினாள்.

“சரி… அது என்னவோ, அப்புறம் பார்த்துக்கலாம்… நாளைக்குப் பிறந்த நாளுக்கு நான் சொன்ன போல கோவில் போயிட்டு வந்திரு…” என்ற அம்பிகை அங்கிருந்து செல்ல தனக்காய் ஒதுக்கப்பட்ட குட்டி அறைக்கு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.

அம்பிகை கொடுத்த சேலை, பிளவுசை எடுத்துப் பார்த்து பெட்டியில் வைத்துவிட்டு படுத்தவள் உறங்கிப் போனாள்.

நல்ல உறக்கத்தில் இருந்தவளை யாரோ அழைப்பது போல் தோன்ற கண்ணைத் திறந்தவள், அங்கே நிறைந்திருந்த ஒளி வெள்ளத்தைக் கண்டு கனவோ என்பது போல் கண்ணைத் தேய்த்துக் கொண்டு மீண்டும் பார்த்தாள். அவளது அறை எங்கும் ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்தி சாந்தமாய் ஒளி வீசிக் கொண்டிருக்க, திகைப்புடன் எழுந்து அமர்ந்தவள் காதில் “ஹாப்பி பர்த்டே வெள்ளக்கோழி…” என்றான் அபி.

Advertisement