Advertisement

“என்ன சாவி, அபி இப்படிப் பேசிட்டு போறான்… எனக்கே இவனைப் பார்த்து கொஞ்சம் பயமா தான் இருக்கு…”

“அம்பி…! என் அபி பலாப்பழம் மாதிரி… வெளிய முள்ளாக் குத்தினாலும் அவன் மனசு பலாச்சுளை மாதிரி இனிப்பானது.. அவன் எந்த அளவுக்கு நியதியை நேசிக்கிறான்னு அவனுக்கு கூட சொல்லத் தெரியாது… மனசுக்குப் பிடிச்ச எந்த ஒரு விஷயத்துக்காகவும் அவன் எவ்ளோ மெனக்கெடுவான்னு உனக்கே தெரியும்… எஞ்சினியரிங் படிச்சிட்டு எவனாச்சும் எனக்கு கார் மெக்கானிக் ஷெட் தான் வைக்கணும்னு நிப்பானா…? தொழில்லயே தன் விருப்பத்தை விட்டுக் கொடுக்காதவன் உயிரா நினைக்குற ஒருத்தியை மட்டும் எப்படி விடுவான்…” என்றார் பெருமையுடன்.

“ம்ம்… எனக்குப் புரியுது சாவி, நியதிக்குப் புரியலியே… இவனோட முரட்டுத் தோற்றமும், பேச்சும் அவளுக்கு பயத்தைக் கொடுக்குதுன்னு நினைக்கறேன்…”

“அதை நாம தான் சொல்லிப் புரிய வைக்கணும்…”

“ம்ம்… முயற்சி பண்ணுவோம்…” என்றார் அம்பிகை.

“நியதி…!” மழையோடு லயித்தபடி அமர்ந்திருந்தவளை பின்னில் கேட்ட ஜான்ஸியின் குரல் உலுக்கியது.

“மழை நின்னல்லோ, இறங்குனில்லே…”

“ஹா… இதோ கிளம்பிட்டேன் ஜான்ஸி…” சொன்னவள் எழுந்து கொண்டாள். அவளது மொபைல், ஹான்ட் பர்ஸை எடுத்துக் கொண்டவள் கிளம்பினாள்.

தன் மேகமென்னும் குழப்பத்தை மழையாகக் கொட்டியதும் வானம் தெளிந்திருந்தது. அங்கங்கே நீர் தேங்கி நிற்க கவனமாய் நடந்தாள் நியதி. மழையில் குளித்து நின்ற மரம், செடி கொடிகளும், மண் மணமுமாய் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்க கண்களுக்குள் நிறைத்தபடி நடந்தாள்.

மறுநாள் அதிகாலையில் எழுந்து சிறிது நேரம் யோகா செய்து முடித்து குளித்து வர நேரம் ஐந்தரை ஆகியிருந்தது. அன்று அவளது பிறந்தநாள் என்பதால் கண்டிப்பாய் அருகே உள்ள ஏதாவது கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்று அம்பிகை அம்மா முன்தினம் கட்டளை இட்டிருந்தார். போகத்தான் வேண்டுமா என இரு மனதோடு இருந்தவளை அருகே இருந்த கோவிலில் ஒலித்த, ‘அம்மே நாராயணா, தேவி நாராயணா…’ என்ற இசை அமைதியைக் கிழித்து சன்னமாய் அவள் காதை அடைந்து அழைத்தது. சென்டரிலிருந்து ஐந்து நிமிடம் நடந்தால் ஒரு பகவதி கோவில் இருக்கிறதென்று நிஷா சொல்லியிருந்தாள்.

“சரி, கோவிலுக்குப் போய்விட்டு சென்டருக்குப் போகலாம் எனத் தீர்மானித்தவள், அவளுக்குப் பிடித்த கரும்பச்சையில் சின்னதாய் தங்க சரிகை வைத்த கிரேப் சில்க் சேலையை எடுத்து உடுத்துக் கொண்டாள்.

நனைந்த கூந்தலை கேரளப் பெண்கள் இடுவது போல் இரண்டு பக்கமும் முடி எடுத்து நடுவில் சின்னதாய் பின்னிக் கொண்டு அப்படியே முடியை விரித்து விட்டாள். அது இடுப்புக்கும் கீழே சென்று நிற்க காயாததால் நீர் சொட்டியது.

அவள் கிளம்பும்போது மணி ஆறை நெருங்கி இருந்தது. முழுமையாய் விடியல் இன்னும் வந்திருக்கவில்லை.

அந்நேரத்திலேயே எஸ்டேட்டில் வேலைக்கு செல்லும் ஆண், பெண்கள் அங்கங்கே அவர்களை அழைத்துச் செல்லும் வண்டிக்காய் காத்திருக்க சிலர் டீக்கடையில் தஞ்சம் புகத் தொடங்கி இருந்தனர். இன்னும் சிலர் வாக்கிங் செல்ல, என்றிருக்க தனியே செல்லுவதில் பயம் எதுவுமில்லை.

சென்டருக்கு செல்லும் தெருவைத் தாண்டி அடுத்த தெருவுக்குள் நுழைய சற்று தூரத்தில் முகப்பில் ‘அம்மே நாராயணா’ என்ற பலகையில் பளிச்சிடும் விளக்குகள் கோவிலைக் காட்ட அதை நோக்கி நடந்தாள். சில பெண்கள் அவளுக்கு முன்னே கோவிலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தனர்.

சந்தன நிற கேரள நாடன் சேலையும், தளர்வாய் அவிழ்த்து விட்ட கருகரு கூந்தலில் சொட்டும் தண்ணீருமாய் அந்த நேரத்திலும் பளிச்சென்ற தோற்றத்தில் இருந்த பெண்களை ரசனையுடன் பார்த்துக் கொண்டே கோவிலுக்குள் நுழைந்தாள்.

கேரள பாரம்பர்யத்தை பறை சாற்றும் காவிநிற ஓடுகள் பதித்த அதிகம் வெளிச்சம் இல்லாத கோவில். சுற்றிலும் பித்தளை சுவர்கள் அங்கங்கே சிறு இடைவெளியுடன் இருக்க உள்ளே சிலை எதுவும் இருக்கவில்லை. ஒரு பெரிய கருங்கல், அதில் இரண்டு வெள்ளிக் கண்கள், சாய்த்து வைக்கப்பட்ட வளைந்த தேவியின் வாள் ஒன்று, துளசி மாலை, முன்னில் ஒரு பெரிய குத்து விளக்கு கதவின் இரு புறமும் தொங்கும் விளக்கு என ஒரு அமைதியான தெய்வீகத்துடன் இருந்தது அந்தக் கோவில்.

பெண்கள் நாகரிக உடையணிந்தும், ஆண்கள் சட்டை, பேன்ட், லுங்கி அணிந்தும் கோவிலுக்குள் செல்லக் கூடாது என்பது அங்கே உள்ள நடைமுறை என்பதால் கோவிலில் இருந்த அர்ச்சகர் மற்றும் ஆண்கள் அனைவரும் வேஷ்டி கட்டி இருந்தனர். பெண்கள் சேலையிலும், சிறு பெண்கள் பாவாடை பிளவுசிலுமாய் இருந்தனர்.

அவள் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை சீட்டு வாங்கியவள் பிரகாரத்தை சுற்றி பகவதியைத் தொழுதாள். வலதுபுறம் இருந்த கணபதியையும், இடதுபுறம் இருந்த நவகிரகத்தையும் சுற்றி வந்தவளுக்கு சின்னதாய் வாழை இலையில், அரைத்த ஒரிஜினல் சந்தனம், துளசி, தெச்சிப் பூ வைத்து நம்பூதிரி கையைத் தொடாமல் மேலிருந்து போட்டார். சின்ன கிண்டியிலுள்ள துளசி தீர்த்தத்தை ஊற்ற வாங்கிக் குடித்து ஓரமாய் இருந்த திண்டில் அமர்ந்தாள்.

“மோளே சுகன்யே…” பெண்குரல் ஒன்று பின்னிருந்து கேட்கத் திரும்பினாள். பழைய நடிகை சாரதா போல தெளிவான திருத்தமான முகத்துடன் அளவான உடம்புடன் ஒரு பெண்மணி கண்ணாடியோடு நின்றிருந்தார்.

இவள் எதுவும் சொல்லாமல் புரியாத பார்வை ஒன்றை அவரிடம் வீச குழம்பியவர், “மோளு ஷீலயுட மகள் சுகன்யா அல்லே, பஞ்சவனம் வீட்டிலே…”

“இல்ல ஆன்ட்டி, என் பேரு நியதி…” என்றதும் அவரது கண்களில் ஒரு ஒளி தெரிந்தது.

“தமிழ்க்குட்டி ஆனோ…?”

“ம்ம்… ஆமாம்…”

“நியதி, நல்ல பேரு… எனக்கு தமிழு அறியும்… என் புருஷன் தமிழ்நாடாக்கும், என்னுட பேரு ஷோபனா…” என்றார் கணவன் ஊர் பெண்ணைக் கண்ட சந்தோஷத்தில்.

“ஓ… சூப்பர் ஆன்ட்டி… உங்களைப் பார்த்தா தமிழ் போலத் தெரியலியே, நீங்க கேரளாவா…?” அவள் கேட்டதும் அவரிடம் சிறு வெட்கச் சிரிப்பு.

“ம்ம்… குட்டி நல்ல புத்திசாலி கேட்டோ, நான் கேரளம் தான்… எங்களுது லவ் மேரேஜாக்கும்…” என்றார் நாணத்துடன்.

“வாவ் ஆன்ட்டி… நீங்க வெட்கப்படும்போது ரொம்ப அழகா இருக்கீங்க, லவ் மேரேஜா… சோ நைஸ்…”

“ம்ம்… எனக்கு தமிழ் ஆளுங்களை ரெம்ப பிடிக்கும், அவரு சொல்லிக் கொடுத்து தான் நான் தமிழ் படிச்சாச்சு…”

“ம்ம்… உங்களைப் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் ஆன்ட்டி, அடிக்கடி இந்தக் கோவிலுக்கு வருவீங்களா…?”

“ம்ம்… இன்னைக்கு என்டே பேரக் குழந்தைங்க நட்சத்திரம்… வீட்டிலுள்ள எல்லார் நட்சத்திரத்துக்கும் இங்கே அர்ச்சனை செய்யான் வருவேன்…” என்றார் அவர் அரைகுறை தமிழில்.

“இன்னிக்கு எனக்கு கூட பிறந்தநாள் ஆன்ட்டி… ஊருல இருக்கும்போது என் அம்மாகிட்ட ஆசிர்வாதம் வாங்குவேன், இங்கே வேலைக்கு வந்ததுல அவங்களை மிஸ் பண்ணறேன்… உங்களுக்கும் என் அம்மா வயசிருக்கும் தானே, என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க…” என்றவள் அவரது காலில் விழ திகைத்துப் போனார்.

“ஹேய் எந்தா குட்டி இது…! நல்லாரும்மா, மகராசியா இருக்கணும்… எழுந்துக்கோ…” என்றவர் எழுப்பி விட்டார்.

“சரி ஆன்ட்டி… எனக்கு டைம் ஆச்சு, நான் கிளம்பறேன்…”

“அச்சோ, பிறந்தநாள் சொல்லிட்டு குட்டிக்கு நான் கிப்ட் எதுவும் கொடுக்காதிருந்தா நல்லார்க்குமா…?” என்றவர் கையில் இருந்த பாத்திரம் ஒன்றை அவளிடம் நீட்டினார்.

“இது இங்கே குழந்தைங்க நாளுக்கு பூஜை செய்த பாயசம், மோள் இது வாங்கணும்…” என்றார் அன்புடன் நீட்டி.

அங்கே கோவிலில் சிலர் எல்லா மாசமும் வீட்டிலுள்ளவர் நட்சத்திரத்துக்கு பாயாசம் சீட்டாக்குவார்கள். (அரிசிப்பாயசம், பால் பாயாசம் என கோவிலில் பணம் கட்டினால் சின்ன டப்பாவில் பூஜை முடித்து சூடான பாயாசமும் தருவர்)

“சரி ஆன்ட்டி, நான் வர்றேன்…” என்றவளின் கையைப் பற்றியவர், “நீ இந்த சேலையில் மயில் போல அழகாருக்கு… என்னோட கண்ணே படும், சுற்றிப் போடு…” என்றார்.

“இட்ஸ் ஓகே ஆன்ட்டி, அன்பான நல்லவங்க கண்ணு பட்டா எதுவும் பண்ணாது…”

“அதும் சரிதான், மோளே… உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, நீ ஒருநாள் என் வீட்டுக்கு வரணும்…”

“ஹாஹா… வர்றேன் ஆன்ட்டி, உங்க வீடு எங்கிருக்கு…?”

“அடுத்த தெருவில் தான், பாலா பவனம்னு முன்னில் போர்டு வச்சிருக்கும்… பார்த்தாலே தெரியும்…” என்றார்.

“நிச்சயம் ஒருநாள் வர்றேன் ஆன்ட்டி… இப்ப எனக்கு டைம் ஆச்சு, கிளம்பறேன்…” என்றவள் அவரிடம் விடைபெற்று நகர, யாரோ தனக்கு மிகவும் வேண்டிய ஒருவர் விலகி செல்வது போல் பார்த்து நின்றார் ஷோபனா. அவள் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்தவர் வீட்டுக்குக் கிளம்பினார்.

அவசரமாய் சென்டருக்குள் நுழைந்தவள் படியேறுகையில் சேலை தடுக்க தடுமாறி விழப் போனவள் சுவரைப் பற்றிக் கொள்ள கை நீட்ட அவள் கையைப் பற்றிக் கொண்ட தாடிக்காரனை அதிர்ந்து நோக்கியவள் கையை உதறினாள்.

விழிகள் என்ன காந்த ஊசியா

விரல்கள் என்ன மின் கம்பிகளா…

கண்களில் காந்தம் வைத்து

ஊசியாய் நெஞ்சைத் துளைக்கிறாய்…

விரலினில் மின்சாரம் வைத்து

தீண்டலில் அதைக் கடத்துகிறாய்…

விபத்தில் விபரீதம் விதைக்கிறாய்…

Advertisement