Advertisement

 அத்தியாயம் – 4

வெண்மேகம் முட்ட முட்ட

பொன்மின்னல் வெட்ட வெட்ட

பூவானம் பொத்துக் கொண்டதோ…

பன்னீரை மூட்டை கட்டி

பெண் மேலே கொட்ட சொல்லி

விண் இன்று ஆணையிட்டதோ…

ஒரு அழகிய மழை நாளில் மாலை நேரத்தில் வாசலில் சந்தோஷமாய் பாடி ஆடிக் கொண்டிருந்தாள் நியதி. அவளுடன் பல வயதுகளில் அவளை விடச் சின்ன பெண் குழந்தைகளும், ஆண் குழந்தைகளுமாய் ஆறேழு பேர் இருந்தனர். எல்லாரின் முகத்திலும் உற்சாகம் வழிந்தது.

நியதிக்கு மழை எப்போதும் பிடிக்கும். அம்பிகை எத்தனை அதட்டினாலும், திட்டு வாங்கினாலும் எப்படியாவது மழை வரும்போது அவருக்குத் தெரியாமல் அதில் ஆடிவிட்டு வருவது சின்ன வயதிலிருந்தே அவளது வழக்கம்.

அன்றும் மழை சாரல் போடத் தொடங்கவும் நண்பர்களை (?) அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு நழுவியவள் பன்னீராய் தூவத் தொடங்கிய மழையில் அவர்களுடன் உற்சாகமாய் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.

கை, கால்களை மழையில் வீசி பாட்டைப் பாடியபடி ஆடியவளுடன் சின்னவர்களும் சேர்ந்து கொள்ள கும்மாளத்திற்குக் குறைவுண்டா என்ன…?

அப்படி ஆடிக் கொண்டிருக்கையில் சட்டென்று ஒரு ஆண் உருவம் அவள் முன் வந்து நிற்க திகைத்து, அதிர்ச்சியில் முழித்தவள் அப்படியே நிற்க, அவளை அப்படியே அலேக்காய் தூக்கிச் சென்று மழையில்லாத இடத்தில் சுவரோடு சேர்த்து நிறுத்தினான் அபிமன்யு.

“ஹேய்…! என்னை எதுக்குத் தூக்கின…? உனக்கு எவ்ளோ கொழுப்பு…” துள்ளியவளை உதட்டில் விரல் வைத்து அதட்டியவனும் நனைந்திருந்தான்.

அவள் மிரண்டு நோக்க அவளுடன் ஆடிக் கொண்டிருந்த தோழமைகளைக் காணவில்லை. எல்லாம் ஓடியிருந்தனர்.

மழையில் நனைந்ததில் அணிந்திருந்த சுரிதார் உடலில் ஒட்டியதோடு உடலின் மேடு பள்ளங்களை அப்பட்டமாய் காட்ட, அவன் முன் நிற்க விரும்பாமல் படியில் இறங்கப் போனவளை தடுத்து இரு புறமும் அவனது வலிய கைகள் சிறை எடுக்க அவளுக்கு நெருக்கமாய் நின்றிருந்தான்.

“ஏய் வெள்ளக்கோழி…! என்னைக் கல்யாணம் பண்ண விருப்பமில்லன்னு அம்பி அம்மாகிட்ட சொன்னியாம், என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா…?”

கேட்ட அபிமன்யு அவளுக்கும் ஒரு அடி அதிக உயரத்தில் பரந்து விரிந்த திண்ணென்ற மார்புடன் அடர்த்தியான மீசை, டிரிம் செய்யப்பட்ட அளவான தாடியுடன் மாநிறமாய், கம்பீரமாய், களையாய் இருந்தான். கண்களில் ஒரு அலட்சியமும், திமிரும் நிறைந்திருந்தது.

“ஏன்னு கேட்டா…? எனக்குப் பிடிக்கலை, அதான் காரணம்…”

“அதான், ஏன் பிடிக்கலைன்னு கேட்டேன்…” என்றவன் தனது தடித்த இதழை அவள் முகம் நோக்கிக் கொண்டு செல்ல அவள் பயத்தில் கண்களை இறுக மூடி முகத்தை சுளித்தாள்.

மழையில் நனைந்ததில் இயற்கையான அவளது ரோஜாக் கன்னங்கள் மேலும் சிவந்து பளபளக்க அதைக் கடிக்கத் தோன்றும் மனதைக் கட்டுப்படுத்தி அந்த மெழுகு போன்ற முகத்தில், ரோஜாவில் படிந்த பனித்துளி போல் மின்னிக் கொண்டிருந்த சின்ன இதழ்களைப் பார்த்தபடி அவன் அப்படியே இருக்க, சில நிமிடங்கள் கண் மூடி இருந்தவள் எதுவும் சம்பவம் நடக்காததால் கண்ணைத் திறந்து பார்க்க, வெகு அருகாமையில் அவனது முகத்தைக் கண்டாள். அந்தக் கண்களில் வழிந்த காதலையும், மையலையும் கண்டு திகைத்து அவன் முகத்தையே பார்த்திருக்க, ஒரு பெருமூச்சுடன் அவளை விட்டு சற்று விலகினான் அபி.

பயத்தில் மூச்சடக்கி நின்றவளுக்கு அப்போதுதான் மூச்சு சீராக, கோபத்துடன் அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ள முயல அவனை அசைக்கக் கூட இயலவில்லை.

“ப்ச்… வழிய விடு, எனக்குப் போகணும்…”

“எனக்கு பதில் சொல்லிட்டுப் போ…”

“பதிலை தான் சொல்லிட்டனே…”

“ஓஹோ…! வெள்ளக் கோழி… நான் ஒரு விஷயத்தைத் தீர்மானம் பண்ணிட்டா மாத்திக்கறது ரொம்ப கஷ்டம்… நீ தான் என் பொண்டாட்டி…! எனக்கு வச்சுத் தரப் போற, போண்டா, டீ ன்னு என் மனசுல பிக்ஸ் பண்ணி ரொம்ப ஆசைய வளர்த்துட்டேன்… அதுனால நீ நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சு தான் ஆகணும்…”

“சம்மதிக்கலன்னா என்ன பண்ணுவ…?” அவள் சீற்றத்துடன் அவனைப் பார்த்துக் கேட்க கூலாய் புன்னகைத்தான்.

“இங்க பாரு வெள்ளக்கோழி… கல்யாணம்ங்கற லைசன்ஸ் வாங்கிட்டு லீகலா பண்ணா சாந்தி முகூர்த்தம், இல்லீகலா கல்யாணத்துக்கு முன்னாடி பண்ணினா ரேப்… என்னை அவ்ளோ கேவலமானவன் ஆக்கிடாத, உனக்கு எது வசதி…?” என்று கேட்க அதிர்ச்சியில் திகைத்து நின்றவள், சுதாரித்து,

“ச்சீ… கல்யாணம்ங்கறது எத்தனை புனிதமான விஷயம், அதைப் போயி இவ்ளோ கேவலமா பேசற… இப்படிப்பட்ட உன்னை எந்தப் பொண்ணு தான் கட்டிக்குவா…?”

“எந்தப் பொண்ணும் கட்டிக்க வேண்டாம், கட்டிக்க நான் விடவும் மாட்டேன்… நீ என்னைக் கட்டிக்க…”

“யூ….!”

“எஸ்… மீ…!”

“முடியாது…!”

“என்னாலயும் உன்னை விட முடியாதுடி, செல்லம்…”

“ஐயோ…! ஏன் இப்படி என்னை டார்ச்சர் பண்ணற…”

“இது டார்ச்சர் இல்ல. டார்லிங்… மை பீல், மை லவ்…”

“எனக்குதான் உன் மேல லவ் வரலேன்னு சொல்லறனே…”

“நோ பிராப்ளம்…! வெள்ளக் கோழி, மேரேஜ்க்கு அப்புறம் என்னை லவ் பண்ணு, போதும்…” அடாவடியாய் நின்றான்.

“அதெல்லாம் முடியாது…”

“ப்ச்… இதுக்கு மேல என்னைக் கெஞ்ச வச்சா நல்லதில்ல…”

“என்ன பண்ணிடுவ…?”

“நானே ஒரு முடிவெடுத்து குண்டுகட்டா உன்னைத் தூக்கிட்டுப் போயிடுவேன், அப்புறம் உனக்கு நோ சாய்ஸ்…”

“ஆமா இவர் என்னைத் தூக்கிட்டு போனா, இங்க உள்ளவங்க போலீஸ்க்குப் போகாம சும்மாருப்பாங்களா…?”

“போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணி அவங்க என்னை அரஸ்ட் பண்ண வந்தா உனக்கு தான் கஷ்டம்…”

“எனக்கென்ன கஷ்டம்…?”

“போலீஸ் வரதுக்குள்ள தான் நீ என் பொண்டாட்டி ஆகிருப்பியே, அப்புறம் உன் புருஷனை அரஸ்ட் பண்ணா உனக்குக் கஷ்டமா இருக்காதா…?” என்றவனை எரித்து விடுவது போல் முறைத்தாள் நியதி.

அதற்குள் கீழே சென்ற பொடுசுகள் பெரியவர்களிடம் சொல்லி இருக்க வேண்டும். அம்பிகையும், அபிமன்யுவின் அன்னை சாவித்திரியும் மாடிக்கு வந்தனர்.

“டேய், முரட்டுப் பயலே… அந்தப் பொண்ணை மிரட்டி ஒரு வழி பண்ணிடாத… பாவம் சின்னப் பொண்ணு, பயந்துடப் போகுது…” அன்னையின் குரல் கீழே கேட்கவும் அவளை தடுத்து நின்ற கையை எடுத்தவன் சற்று விலகி நின்றான்.

“நான் தான் பேசறேன்னு சொன்னனே, அதுக்குள்ள என்ன அவசரம்…? அம்பிகை கிட்ட கொஞ்ச நேரம் பேசறதுக்குள்ள நீ மாடிக்குப் போயி அவளை மிரட்டிட்டு இருக்க…?” மகனைக் கடிந்த படி மூட்டு வலியைப் பொருட்படுத்தாமல் மாடிப்படி ஏறி வந்தார் சாவித்திரி.

அம்பிகையைக் கண்ட நியதி வேகமாய் அவர் பின்னால் சென்று நின்று கொண்டு அவனை முறைத்தாள்.

“அபி… என்னப்பா இது…? இப்படி வலுக்கட்டாயமா அவளைப் பழுக்க வைக்க நினைச்சா எப்படி…? உன் அன்பைப் புரிஞ்சுகிட்டு அவ தானாக் கனிஞ்சு வந்தாத்தானே உன் காதலும், கல்யாணமும் சந்தோஷமா இருக்கும்…” என்ற அம்பிகை நனைந்த உடையுடன் சற்று நடுங்கியபடி நின்ற நியதியின் கையில் தட்டிக் கொடுத்து, “மழைல நனையாதன்னு எவ்ளோ சொன்னாலும் கேக்கறதில்ல, ஈரத்துணியோட நிக்காம போயி முதல்ல டிரஸ் மாத்திட்டு வா…” என்று அவளை அனுப்பி வைத்தார்.

“ஆன்ட்டி, அவளை இந்தக் கல்யாணத்துக்கு எப்படியாச்சும் ஒத்துக்க வைக்கனும்னு நினைச்சு தான் சொல்லிப் புரிய வைக்க மாடிக்கு வந்தேன்… அவ என்னை ஏன் பிடிக்கலன்னு சொன்னாளா…?” என்றான் வேதனையுடன்.

“ம்ம்… சொன்னா, உன்னைப் பார்த்தாலே பயமா இருக்காம், நீ ரவுடி போல நடந்துக்கறியாம்… பார்த்தாலே பயம் தோணுற ஆளை எப்படி கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துறதுன்னு கேக்குறா, அவ கேட்டதுக்கு தகுந்த போல நீ இப்பவும் அவளை மிரட்டி வச்சிருக்க…” என்றார் தன்மையுடன்.

அம்பிகையும், சாவித்திரியும் சிறு வயது முதல் தோழிகள்.

ஆசிரமம் இருந்த அதே ஏரியாவில் தான் அபிமன்யுவின் வீடும், 24 Hrs கார் ஹெல்த் சென்டரும் இருந்தது.

“அபி…! உனக்கு எல்லாத்துலயும் அவசரம், நினைச்சதும் எல்லா விஷயமும் நடக்கணும்னு நினைச்சா முடியுமா…? நாங்க பெரியவங்க பேசி அவளுக்குப் புரிய வைக்க முயற்சி பண்ணலாம்னு பார்த்தா அடாவடியா அவளுக்கு உன் மேல இருக்கிற பயம் போயி வெறுப்பு வர்ற அளவுக்கு நடந்துக்கற, இதெல்லாம் சரியில்லடா…” என்றார் அன்னை அன்புடன்.

“ம்ம்… என்னமோ பேசுங்க, ஆனா எனக்கு இன்னும் ரெண்டு நாளைக்குள்ள ஒரு நல்ல ரிசல்ட் அவ சொல்லியாகனும்…” என்றவன் அங்கிருந்து புயலாய் கீழிறங்கி சென்றான்.

Advertisement