Advertisement

அதற்குள் அறைக்கு வந்த நர்ஸ் நியதியைப் பரிசோதிக்க வேண்டுமென்று அவனை சிறிது வெளியே இருக்க சொல்ல வெளியேறினான் ஆத்ரேயன்.

ஹாஸ்பிடலில் அனைவருக்கும் ஸ்வீட் வழங்கி தனது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டான். நியதியும், குழந்தையும் வீட்டுக்கு வர நியதிக்கு வேண்டிய பத்திய உணவு, மருந்து எல்லாம் ஷோபனாவும், ஆதிராவும் பார்த்துக் கொண்டனர்.

பெரிய ரோஜா ஒன்றை டவலில் சுற்றி வைத்தது போல் அழகாய் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் பிஞ்சுக் கைகளை எடுத்து கன்னத்தில் வைத்து சந்தோஷித்தனர் ஆதிராவின் குழந்தைகள் இருவரும்.

“செரிச்சா, நாங்க குஞ்சுவாவ கூட களிக்காமோ…?”

“குஞ்சுவாவா குறச்சு கூடி வல்யதாயிட்டு களிக்காம், இப்ப அவனுக்கு கை, கால் எல்லாம் குட்டியா இருக்குல்ல வலிக்கும்…” என ஆத்ரேயன் அண்ணன் குழந்தைகளிடம் சொல்லிக் கொண்டிருப்பது அரை குறை உறக்கத்தில் இருந்த நியதியின் காதில் விழ கண் திறந்தவள் புன்னகைத்தாள்.

“ஆஹா, சிஞ்சு சேச்சி வாவயைக் கண்டோ..? யாரைப் போல் உண்டு…” என நியதி கேட்க நயனா யோசித்தாள்.

“ம்ம், என்னைப் போலே…” என்று சொல்ல, “அல்ல, என்னைப் போல…” என அவள் உடன் பிறந்தவன் உரிமை கொண்டாட பெரியவர்கள் சிரித்தனர்.

நியதியை தனது அறையில் வைத்து தான் கவனித்துக் கொண்டார் ஷோபனா. மகளைப் போல் அவர் காட்டும் நேசமும், கவனிப்பும் நியதியை நெகிழ்வுறச் செய்தன. காலையில் அவளுக்கு தான்யந்திர குழம்பு என்று எதோ ஒரு எண்ணை தேய்த்து குளிக்க வைப்பது முதல் மூன்று நேரப் பத்திய சமையல் வரை அவரது மேற்பார்வை தான்.

ஆதிரா ஏதேதோ ஆயுர்வேத மருந்துகளைக் கொண்டு வந்து கொடுக்க நால்பாமர வெள்ளம் என சிவப்பு நிறக் கொதிக்கும் தண்ணீரைத் தான் அவள் வயிற்றில் அடித்து ஊற்றி குளிக்க வைத்தனர். அதன் பின் வயிற்றை ஒரு வேட்டித் துணியில் இறுக்கி பெல்ட் போலக் கட்டி விடுவார். அப்போது தான் வயிறு உள்ளே போகுமென்று அவர் சொல்ல நியதி எதுவும் மறுக்கவில்லை. இந்த அன்பும் கவனிப்பும், அக்கறையும் அவளுக்கு சந்தோஷத்தையே கொடுத்தன. பிரசவ லேகியம் என்று ஒன்றைக் கொடுக்கும்போது மட்டும் முகத்தை சுளித்தவளிடம், “இது சாப்பிட்டா நல்லா பால் சுரக்கும் மோளே…” எனவும் மறுக்காமல் விழுங்கினாள்.

குழந்தைக்கு 27ம் நாள் குடும்பத்தினரை அழைத்து சிறப்பாய் கொண்டாடினர். “28 வது நாள் தானே கொண்டாடுவிங்க…” என நியதி கேட்டபோது ஆண்குழந்தைக்கு 27ம், பெண் குழந்தைக்கு 28ம் என விளக்கம் கொடுத்தார் ஷோபனா.

குட்டிக் கைகளில் கருப்பு வளையலுடன் தங்க வளையல், பரிசாக வந்த பிரேஸ்லெட் என அணிந்திருக்க கண்ணில் வீட்டில் செய்த கண்மையை வைத்து நெற்றியில் ஒரு ஓரமாய் போட்டும் வைத்து விட்டார் அத்தை முறை உள்ள உறவுப் பெண் ஒருத்தி. கழுத்திலும், இடுப்பிலும் பெரியப்பா தங்கத்தில் செயினும், அரைஞானும் வாங்கியிருக்க, காலுக்கும் கைக்கும் ஆத்ரேயன் தங்கத்தில் தண்டை வாங்கி அணிவித்தான். குழந்தைக்கு வயம்பை அரைத்து தேனில் கலந்து வாயில் கொடுத்தனர்.

ஒவ்வொருவராய் வெற்றிலையைப் பாலில் முக்கி குழந்தையின் வாயில் கொடுத்தனர். அழாமல் சமத்தாய் குட்டிக் கண்களை உருட்டி எல்லாரையும் பார்த்துக் கை, கால்களை அசைத்துக் கொண்டிருந்த குட்டி ஆத்ரேயன் அப்படியே உறங்கத் தொடங்கினான்.

“குட்டிக்கு உறக்கம் வருனுண்டு, வேகம் எந்து பேரானு  வைக்கனது பரயு…” முதியவர் ஒருவர் சொல்ல ஆத்ரேயன் நியதியைப் பார்த்தான். தினமும் எண்ணை தேய்த்துக் குளித்ததில் சரும மினுமினுப்பு கூடியிருக்க, போஷகமான உணவுகளை உண்டதில் சற்று குண்டாகி இருந்தாள்.

அவள் புன்னகையுடன் கணவனிடம், “நாம செலக்ட் பண்ண பேரை சொல்லுங்க…” எனக் கூற அந்த அத்தையின் காதில் ஏதோ பெயரை சொன்னான் ஆத்ரேயன்.

“அபிமன்யு… அபிமன்யு… அபிமன்யு…” அவர் வெற்றிலையை குழந்தையின் ஒரு காதில் வைத்து மறைத்து மற்றொரு காதில் சொல்ல திகைப்பும், அதிர்ச்சியுமாய் கணவனை ஏறிட்டாள் நியதி. அவர்கள் குழந்தைக்கு வைக்கத் தேர்வு செய்த அதிரூபன், என்ற பெயரை வைக்காமல் அபிமன்யுவின் பேரை சொல்லவும் அதிர்ந்து நின்றாள்.

அவள் தோளில் ஆறுதலாய் கையிட்டு தட்டிக் கொடுத்த ஆத்ரேயன், “அபிமன்யு இனி நம்ம குழந்தை, தேடிட்டே இருக்கற வரைக்கும் எதுவும் நம்மை விட்டுக் காணாமல் போகாது, இனி உன் மனசு எதையும் தேடக் கூடாது, அபிமன்யு உன் மகன்…” அழுத்தமாய் சொன்ன கணவனைக் கட்டிக் கொண்டு அப்போதே முத்தமிட மனம் பரபரத்தது.

என்னதான் ஆத்ரேயனுடன் நெருங்கி நேசமும், காதலுமாய் வாழ்ந்தாலும் எப்போதேனும் அவள் மனது அபியை தேடவே செய்தது. அதை ஆத்ரேயனும் உணர்ந்திருந்தான். இனி அந்தத் தேடலின் முடிவு அவர்களின் குழந்தையாக இருக்க வேண்டுமென்றே அப்பெயரைக் குழந்தைக்கு வைக்கவும் செய்திருக்கிறான் எனப்புரிய அவளுக்கு அவனை நினைத்துப் பெருமையாய் இருந்தது.

“அபி எங்கும் போகவில்லை, என் மகனாய் என்னிடம் தான் இருக்கிறான், இனி அவனைத் தேட வேண்டியதில்லை…” அவள் மனம் நெகிழ்வுடன் சொல்லிக் கொண்டது.

நிகழ்ச்சி நல்லபடியாய் முடிந்து அனைவரும் கிளம்ப தன் அருகில் கிடக்கும் குழந்தையைக் கண்ட நியதியின் மனம் அபி, அபி… என நெகிழ்வுடன் சொல்ல குழந்தை உறக்கத்தில் சின்னதாய் புன்னகைத்தான்.

அவள் அருகே வந்து நின்ற ஆத்ரேயனை ஏறிட்டவள் அவன் வயிற்றில் முகத்தை வைத்துக் கொண்டாள்.

“ஆதி…! ஏன் உங்களுக்கு இப்படித் தோணுச்சு ஆதி…” அவள் மனம் அரற்ற அவளை வயிற்றோடு அணைத்துக் கொண்டு தலை உச்சியில் முத்தமிட்டான் ஆத்ரேயன்.

“முத்தே…! நின்டே மனசு எனிக்கறயாம்…” என்றவனை நெகிழ்வுடன் இறுக்கிக் கொண்டாள் நியதி. அவளது கண்களைத் துடைத்துவிட்டவன், “இதுல என் சுயநலமும் இருக்கு மோளே…” எனவும் அவள் புரியாமல் ஏறிட்டாள்.

“அபி உன் மகன், ஆதி உன் புருஷன்… அபியை நீ எவ்ளோ நேசிச்சாலும் உன் காதல் எனக்கு மட்டும்தான்…”

அவன் வார்த்தையில் இருந்த அர்த்தம் புரிய அவன் வயிற்றை மீண்டும் கட்டிக் கொண்டு கரைந்தாள்.

“ஹேய், எந்தாடி இங்கனே கரயனது… நான் செய்தது நினக்கு இஷ்டமாயில்லே…” அவள் முகத்தை விலக்கிக் கேட்க அவனை எறிட்டவள் அந்த முகத்தையே பார்த்தாள்.

“போடா வாரியரே, எனிக்கு நின்னோடு வல்லாதே பிரேமம் தோனுந்து…” (எனக்கு உன் மேல ரொம்ப காதல் வருது…” அவள் சிறு நாணத்துடன் மலையாளத்தில் சொல்ல அவளை அணைத்துக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டான்.

“ஹூம், எவ்ளோ நாளாச்சு…” என்றவளின் இதழ்கள் அவனது மீசையை ஆர்வத்துடன் பிடித்திழுக்க, “ஆ…! குழந்தைக்கு மீசை குத்துது, அதை எடுக்கப் போறேன்…” என்றான்.

“ஏன், எதுக்கு எடுக்கணும், அது இருந்தா தான் ஒரு… ஒரு…” என அவள் இழுக்க அவன் “என்ன ஒரு…” என்று புருவம் தூக்கிக் குறும்புடன் கேட்டான்.

“ப்ச்… தத்தி, எல்லாம் நம்மளே ஓபனா சொல்லணும் போலருக்கு…” என நினைத்தவள் பேச்சை மாற்றினாள்.

“வாரியரே, அத்தை கிட்ட சொல்லி என்னை நம்ம ரூமுக்கு ஷிப்ட் பண்ண சொல்லுங்களேன்… ப்ளீஸ்…” எனக் கேட்க,

“அதொண்ணும் அம்ம சம்மதிக்கில்லா மோளே, மூணு மாசம் ஆச்சும் அம்மா ரூம்ல தான், ஏன் அங்கே சவுகர்யம் இல்லையா…?” என்றவனின் பார்வை அவளை அளக்க,

“ஆமா, உங்க நெஞ்சுல படுக்க முடியாது, நினைச்ச நேரத்துல ஒரு கிஸ் அடிக்கக் கூட முடியாது, ஹூம், எவ்ளோ நாளாச்சு…” என்றவளின் ஆர்வப் பார்வையை அசால்ட்டாய் புன்னகைத்து விலக்கியவன்,

“அதெல்லாம் இப்பக் கூடாது மோளே… இப்ப உன் கவனம் முழுக்க அபி மேல தான் இருக்கணும்…” என்றவன் அழுத்தமாய் சொல்ல அவள் முறைத்தாள்.

“அபி என் குழந்தை, அவனை நான் கவனமாப் பார்த்துப்பேன்… ஆதி என் புருஷன், அவன்கிட்ட தானே எனக்கு வேண்டியதைக் கேக்க முடியும்…” என்றவள் நாணத்துடன் குனிந்து கொள்ள அவள் முகத்தையே பார்த்தான் ஆத்ரேயன்.

நீள்வட்ட முகம் கொண்டவள் இப்போது வட்ட முகமும், ஜொலிக்கும் கண்களும் அதில் மின்னும் காதலுமாய் நின்று கொண்டிருக்க அவளை மென்மையாய் அணைத்தான்.

“நிதி மோளே…” என்றவனின் குரல் நெகிழ்ந்திருக்க அவனுக்கும் அந்த அணைப்பு தேவையாய் இருந்தாலும் அதில் இவள் என்னவள் என் குழந்தைக்குத் தாய் என்ற நேசமும், உரிமையுமே அதிகமாய் இருந்தது.

“ஆதி…!”

“ம்ம்…”

“டெலிவரி ஆனப்போ, இனி உன்னைக் கஷ்டப்படுத்த மாட்டேன்னு சொன்னிங்களே, ஏன் அப்படி சொன்னிங்க…” இத்தனை நாள் மனதை உறுத்திய கேள்வியைக் கேட்டாள்.

“பிரசவ டைம்ல நீ பட்ட கஷ்டத்தைப் பார்த்து தான் அப்படி சொன்னேன், நமக்கு அபி மட்டும் போதும்…”

“அப்ப என்னைப் போல ஒரு பொண்ணு வேண்டாமா…?” என்றவளின் தலையை வருடி மெல்ல முத்தமிட்டவன்,

“நீயே எனக்கு குழந்தை தான், என் முதல் குழந்தை… என் மனசு நிறையக் காதலோடு நான் சுமந்து பெற்ற குழந்தை…” என்றவனிடம் அதற்கு மேல் சொல்ல நியதிக்கு வார்த்தை இருக்கவில்லை. நெகிழ்வுடன் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள் மனது காதலில் நிறைந்திருந்தது.

இனி அவள் மனதில் கணவன் என்னும் இடத்தில ஆதிக்கான தேடல் மட்டுமே என்றும் நிலைத்திருக்கும்… அபிக்கான தேடல் அவள் மகனில் முடிந்துவிட்டது.

எந்த ஒரு விஷயத்தையும் மனம் தேடும் வரையே அது நம்மோடு நிலைத்திருக்கும். தேடாமல் போனால் அதுவும் ஒருநாள் காணாமல் போய்விடும். இனி இவர்களின் தேடல் இவர்களைப் பற்றி மட்டுமே இருக்கட்டும், என வாழ்த்தி விடை பெறுவோம்…

எதற்காக இந்த வாழ்க்கை

என்றே விருப்பமின்றி

தொலையத் துடித்தேன்…

உனக்காக வாழச் சொன்னது

என் மீதான உன் தேடல்…

எப்பொழுதும் என்னைத்

தேடிக் கொண்டேயிரு…

நான் உன்னை விட்டு

எங்கும் தொலைந்து

போகாமல் இருக்க…

Advertisement