Advertisement

அத்தியாயம் – 31

வீடெங்கும் விழாக்கோலம் பூண்டிருக்க, உறவினர்கள் மகிழ்வுடன் நிறைந்திருக்க சபை நடுவே பெரிய வயிறும், மலர்ந்த முகமுமாய் தாய்மையின் பூரிப்புடன் அமர்ந்திருந்தாள் நியதி. அன்று அவளுக்கு வளைகாப்பு. கை நிறைய அடுக்கப்பட்ட கண்ணாடி வளையலும், கன்னத்தில் மின்னும் சந்தன, குங்குமமும், இதழில் உறைந்திருந்த புன்னகையும் அவள் மனதின் சந்தோஷத்தைக் காட்டின.

அவள் உண்டாயிருக்கிறாள் என்று தெரிந்த நாள் முதல் இதோ இன்று வரை அவளது விருப்பங்கள் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருக்கிறான் ஆத்ரேயன். குழந்தை உண்டானவளை ஒரு குழந்தை போல் கவனித்துக் கொண்டான். மசக்கையில் கஷ்டப்பட்ட போதும், அவளுக்குத் தனிமை கொடுக்காமலும் உடனிருந்து பார்த்துக் கொண்டான். கேரளத்தில் வளைகாப்பு சம்பிரதாயம் இல்லையென்றாலும் நியதி பேச்சு வாக்கில் தமிழ்நாட்டில் செய்யும் வளைகாப்பு விசேஷத்தைப் பற்றி ஆர்வத்துடன் சொல்ல அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தான். அம்பிகை மகளைக் காண ஊரிலிருந்து வந்திருந்தார். சாவித்திரியின் சார்பாக நளினி மகனுடன் வந்திருந்தார். குடும்பத்தினரும், ஜான்சி, நிஷா என நெருங்கிய நட்புகளும் மட்டுமே அழைத்திருந்தான் ஆதி. ஆதிரையின் அன்னை வந்திருந்தார்.

நளினியின் பொறுப்பில் எல்லாம் சிறப்பாய் நடந்து முடிய வளைகாப்புக்கு செய்திருந்த பலவித சாதங்களை வியப்புடன் பார்த்தவாறே சாப்பிட்டனர் ஆத்ரேயனின் சொந்தங்கள்.

சற்றுத் தள்ளி சுரேந்தருடன் பேசிக் கொண்டிருந்த ஆத்ரேயனைக் கண்ணெடுக்காமல் பார்த்திருந்த நியதியின் மனம் அவனது அன்பிலும், அக்கரையிலும் நெகிழ்ந்திருந்தது.

அம்பிகையிடம் பேசிக் கொண்டிருந்தாலும் விழிகள் சற்றுத் தள்ளி இருந்த கணவனின் மீதே இருக்க அம்பிகையும் அதைக் கவனித்து விட்டார். அவர் மனதில் ஒரு நிறைவும், இதழில் புன்னகையும் நிறைந்தது.

“நியதி மா, என்ன மாப்பிள்ளையை அப்படிப் பார்க்கிற…?”

“ப்ச்… ஒண்ணுமில்லம்மா, இந்த மனுஷன் மட்டும் என் வாழ்க்கைல வராம இருந்திருந்தா நான் என்னவாகி இருப்பேன்னு யோசிச்சேன்…” சொன்னவளின் பார்வையைத் தொடர்ந்து அம்பிகையும் ஆத்ரேயனைப் பார்த்தார்.

“உண்மைதான், நான் நினைச்சதை விட ஆத்ரேயன் உன்னை ரொம்பவே தாங்கறார், அவர் உன்மேல வச்சிருக்கிற அன்பைப் பார்க்கும்போது இந்த அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமாருக்கு…”

“ம்ம் ஆமாம் மா… இனி வாழ்க்கையே இல்லை, எல்லாம் முடிஞ்சுதுன்னு நினைச்சிட்டு இருந்தப்ப வசந்தமா வந்தவர் என் ஆதி… அவர் மட்டும் வரலேன்னா என் வாழ்க்கை துருப்பிடிச்ச செல்லாக் காசு போல பாழாகி இருக்கும்… இப்போ இந்த சந்தோஷமான வாழ்க்கை அவர் தந்தது, அதுக்கு பதிலா என் நேசத்தைத் தவிர என்னால என்ன கொடுத்துட முடியும்…” யோசித்தபடி அமர்ந்திருந்தாள்.

அம்பிகை மகளது மனநிலையை உணர்ந்து அமைதியாய் அமர்ந்திருக்க ஆத்ரேயன் அவளை நோக்கி வந்தான்.

“முத்தே…! நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு, எவ்ளோ நேரம் இப்படி உக்கார்ந்திருப்ப…” என சொல்லும்போதே ஷோபனாவும் அங்கே வந்து விட்டார்.

“அதே மோளே, நீ ரொம்ப நேரம் இப்படி உக்காரக் கூடாது…” எனவும் எழுந்தவள்,

“ஆதி, என்னைக் கொஞ்சம் ரூம்ல டிராப் பண்ணிடறீங்களா..?” எனக் கணவனின் காதோரம் கேட்க புன்னகையுடன் அவள் கையைப் பிடித்து மாடிக்கு அழைத்துச் சென்றான்.

அறைக்கு சென்று கட்டிலில் அமர்ந்ததும், “எந்தா மோளே, எந்தெங்கிலும் பரயனோ…? நீ மரியாதைக்கு சாப்பிடவே இல்ல, இவிடேக்கு பட்சணம் கொண்டு வரட்டுமா…?” எனக் கேட்க, “ப்ச்… அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்…” என்றவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

வயிறு இடிக்காமல் வாகாய் அவளைத் தன்னில் சாய்த்துக் கொண்டவன் இதமாய் அவள் தலை கோதினான்.

“எந்தாடி சக்கரே…! எந்து பற்றி…?”

“ப்ச்… ஒண்ணுமில்ல, எனிக்கு உங்களைக் கட்டிக்கணும் போலத் தோணுச்சு…” அவள் குரலும் முகமும் நெகிழ்ந்து எதையோ உணர்த்த மேலே எதுவும் சொல்லாமல் இதமாய் அவள் முதுகை வருடிக் கொடுத்தான்.

“தாழே விருந்துக்கு வந்தவங்க எல்லாரும் இருக்காங்க, அவங்களைக் கவனிக்க நான் போக வேண்டாமா…?”

“ப்ச், கொஞ்ச நேரம்…” சிணுங்கலாய் ஒலித்த அவள் குரலைக் கேட்டு சிரித்தவன்,

“மலர் டீச்சருக்கு என்னாச்சு, கீழே எல்லாரும் இருக்கும் போது நான் கவனிக்காம ரூமுல வந்து இருந்தா சரியா…” கேட்டாலும் அவள் தலையை வருடிக் கொண்டிருந்தான்.

“முதல்ல என்னை கவனிச்சிட்டு அவங்களை கவனிக்கப் போங்க…” என்றவளின் பிடிவாதம் அவனுக்கு நெகிழ்வைக் கொடுக்க, “என்னடா, டயர்டா இருக்கா… உறக்கம் வருதா…?” ஆறுதலாய் கேட்க,

“உறக்கம் வரல, உங்க மேல கன்னா பின்னான்னு காதல் வருது…” கண்ணடித்தாள் நியதி.

“ஓஹோ…” என சிரித்தவன் வழக்கம் போல் மீசையைப் பல்லால் கடித்து ஒரு ரொமாண்டிக் லுக் விட, “அச்சோ, என் வாரியர் அழகன்டா…” என அவன் மீசையைப் பிடித்து கொஞ்சலுடன் ஆட்டினாள் நியதி.

“ஆ, வேதனிக்குதுடி…” என அவள் கையை விலக்கியவன்,

“சரி நீ ரெஸ்ட் எடு, நான் தாழே போறேன்…” என எழுந்து கொள்ள, “ப்ச்… ரொம்பப் பண்ணாம, உக்காருங்க வாரியரே…” என அவள் அதட்ட மறுக்க மனமின்றி அமர்ந்தான்.

அவன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.

“முத்தே…! உனக்கு என்னடி ஆச்சு, விசேஷத்துக்கு வீட்டுக்கு வந்தவங்களை கவனிக்க விடாம இப்படி வம்பு பண்ணிட்டு இருக்க…” என்றவனின் கையைப் பிடித்து முத்தமிட்டு பின் மெல்லக் கடித்தவள்,

“உங்களோட இருக்கணும் தோணுச்சுன்னு சொல்லறேன்ல…”

“சரி, எல்லாரையும் அனுப்பி விட்டுட்டு வந்து உன்னோடவே இருக்கேன்… நானும் இப்படி உன்னோட ரூம்ல வந்து இருக்கறது சரியில்ல, வந்தவங்க என்ன நினைப்பாங்க…”

“ம்ம்… சரி, சீக்கிரம் வந்துடணும்…” என அவனை செல்ல அனுமதிக்க அவள் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டு எழுந்து சென்றான் ஆத்ரேயன்.

விருந்து முடிந்து வந்தவர்கள் சென்ற பிறகு அம்பிகையும் நளினியுடன் சாவித்திரியைக் காண பொள்ளாச்சி செல்லுவதாய் சொல்ல நியதியை அழைக்க சென்றான் ஆதி.

அவள் நல்ல உறக்கத்தில் இருக்க காதில் மென்மையாய் அழைத்தான். எழுந்தவளிடம் விடைபெற்று அவர்கள் அடுத்து குழந்தையைக் காண வருவதாய் சொல்லிச் சென்றனர்.

கணவனின் அன்பிலும் அவன் வீட்டாரின் நேசத்திலும் நாட்கள் இனிமையாய் நகர டாக்டர் சொன்ன நாளுக்கு இரண்டு நாட்கள் முன்பே நியதிக்குப் பிரசவ வலி தொடங்கி விட்டது. அன்று இரவு உறங்க முடியாத அவஸ்தையில் அடிக்கடி பாத்ரூமுக்கு சென்று வந்தவளைக் கவனித்து ஆத்ரேயன் என்னவென்று கேட்க, “ஒரு மாதிரி வயிறு வலிக்குது ஆதி…” எனவும் அவன் அன்னையிடம் சொல்ல அவர் சீரகம் காய்ச்சிய தண்ணீரைக் கொடுக்க அப்போதும் அவளுக்கு அவஸ்தை தொடர்ந்தது.

“அம்மே…! இனி தாமசிக்கண்டா, ஹாஸ்பிடல் போகாம்…” ஆதி சொல்லவும் இரவு பனிரெண்டு மணிக்கு ஹாஸ்பிடலுக்கு கிளம்பினர். அபிநந்தன் குழந்தைகளுக்குத் துணையாக வீட்டில் இருக்க ஆதிராவும் அவர்களுடன் சென்றாள். போகும் வழியில் நியதிக்கு வேதனை அதிகமாக வலியில் கதறத் தொடங்கியவளை வேதனையுடன் பார்த்துக் கொண்டே ஹாஸ்பிடலை அடைந்தான் ஆத்ரேயன்.

டாக்டர் பரிசோதித்து பிரசவ நேரம் நெருங்கி விட்டது என அப்போதே அங்கு அட்மிட் ஆகச் சொல்லிவிட சிறிது இடைவெளிவிட்டு மெல்ல அதிகரித்த வலியில் கதறிக் கொண்டிருந்த நியதியைக் கண்டு ஆதியின் கண்கள் கலங்கின. அவனது கையை இறுகப் பற்றி வேதனையை சகிக்க முயன்றவளின் கண்கள் கண்ணீரில் கரைந்து கொண்டிருக்க ஆத்ரேயன் அவளை விடத் துடித்தான்.

“அம்மே… இவளுக்கு ரொம்ப வலிக்கும் போலருக்கே, பேசாம டாக்டரை சிசேரியன் பண்ணச் சொல்லிடுங்க…” என அவள் வலி தாங்க மாட்டாமல் சொல்ல ஷோபனா முறைத்தார்.

“அறிவு கெட்ட தனமா பேசாத செருக்கா, சிசேரியன் ஆகாம நல்லபடியா சுகப் பிரசவம் ஆகணுமேன்னு நான் வேண்டிட்டு இருக்கேன், அது வாழ்நாள் முழுசும் வலி, இது பிரசவம் ஆகிட்டா முடிஞ்சிரும், உனக்கு என்ன தெரியும்…” என மகனை திட்ட அந்த நிலையிலும் நியதிக்கு சிரிப்பு வந்தது.

“அம்மே, பாவம் அவரைத் திட்டாதீங்க…” என்றவள் வலியில் முகத்தை சுளித்தபடி வயிற்றைப் பிடித்துக் கொண்டாள். நியதி கணவன் அருகே அமரவும் அவளை ஆதிரா எழுப்பி விட, “பாவம், அவளுக்கு வையா சேடத்தி, கொஞ்சம் உக்காரட்டும்…” என்ற கொழுந்தனை முறைத்தாள்.

“நடந்துட்டே இருந்தாலே நல்லபடியா பிரசவம் ஆவுள்ளு, உன்னோட அலப்பறை தாங்க முடியலியே…” எனக் கிண்டல் செய்தபடி நியதியை நடக்க சொல்ல, “நான் பிடிச்சுக்கறேன்…” என்றவன் அவளைக் கை பிடித்து நடக்க வைக்க, “பாவம் அவளுக்கு நடக்கத் தெரியாது, நடை பழக்கறான்…” எனப் பெண்கள் சிரித்தனர். இரண்டு மணிக்கு மேல் நியதிக்கு வலி அதிகமாக லேபர் வார்டில் அனுமதிக்கப்பட்டாள்.

விடியலில் மூன்று மணிக்கு நல்லபடியாய் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து நிம்மதியுடன் மயங்கினாள்.

ஆத்ரேயனின் குட்டி ஜெராக்ஸ் போலிருந்த குட்டி ஆதியைக்  கண்டு அனைவருக்கும் சந்தோஷமாக ஆதியின் கண்கள் சந்தோஷத்தில் பனித்தன. அவர்களுக்குத் தனிமை கொடுத்து ஷோபனாவும், ஆதிராவும் வெளியே செல்ல அவனையே ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டவன், “தேங்க்ஸ்டி முத்தே, இனி உன்னை நான் கஷ்டப்படுத்த மாட்டேன்…” எனக் காதில் கூற அவள் திகைப்புடன் பார்த்தாள்.

Advertisement