Advertisement

“முத்தே…!” யோகா வகுப்பு இடைவேளையில் தோட்டத்தில் கண் மூடி அமர்ந்திருந்தவளின் காதை வருடிய அந்தக் குரல் சட்டென்று சிலிர்க்க வைக்க கண்ணைத் திறந்தவள் முன்னே நீண்ட தாடியும், நிறைந்த சிகையுமாய் புன்னகைத்து நின்றான் ஆத்ரேயன்.

அந்தக் காலை சூரியனின் இதமான வெயிலில் பளிச்சென்ற வசீகரிக்கும் புன்னகையுடன் நின்றவனின் தாடியைப் பிடித்துக் கொஞ்ச வேண்டுமென்ற ஆவலைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனை நோக்கிப் புன்னகைத்தாள்.

“இப்பதான் நிங்களே நினைச்சேன், அப்பளேக்கும் வந்து…” அவள் மாமியாரின் வேண்டுகோளின்படி மலையாளம் பேச முயற்சி செய்து கொண்டிருப்பதால் அரைகுறையாய் பேச அவன் புன்னகைத்தான்.

“மலர் டீச்சர் என்னை என்ன நினைச்சது…?” அவன் கேட்டபடி தாடியை நீவிக் கொண்டு மீசையைத் தடவ,

“ம்ம்… நீங்க வந்தா டூயட் பாடலாமேன்னு நினைச்சது…” என்றவளின் கண்களில் வழிந்த காதலைக் கண்டவன் அவள் அருகே வந்தான்.

“எந்தா மலர் டீச்சர்ன்டே முகத்தில் ஒரு ரொமாண்டிக் பீல்…?”

“எந்தே, உண்டாவான் பாடில்லே…” கண்ணில் குறும்புடன் கேட்டவனிடம் சளைக்காமல் கேட்டவளின் இதழும், கண்ணும், முகமும் காதல் பேசியது.

“ஹோ, இது எந்து நோட்டமா டோ… எனிக்கு அங்கனே நின்னே…” என்றவன் மேலும் சொல்லாமல் நிறுத்த அவள் முகம் அவன் சொல்ல வந்ததை நினைத்து சிவந்திருந்தது.

“சரி, இப்ப வாரியர் எந்தோ பரயான் வந்ததல்லே… எந்தா கார்யம்…” என்றவளிடம்,

“அதெந்தா, ஞான் என்ட பொண்டாட்டியைத் தேடி வரக் கூடாதா…” என அவனும் விடாமல் பேசினான்.

“ஆதி, விஷயத்தை சொல்லுங்க…” அவள் சிணுங்க சிரித்தான்.

“ஞான் அவுட், இதுக்கு மேல உன்னை சீண்டினா நான்தான் அவஸ்தைப் படணும்…” என்றவன்,

“முத்தே…! நாளை நீயும் கூடி வா… முக்கியமானவங்களை ஓப்பனிங்க்கு இன்வைட் பண்ணிட்டு வந்துடலாம்…”

“சரி வாரியரே…”

“அம்பிகை ஆன்ட்டிக்கும், சாவித்திரி அம்மாக்கும் நேர்ல போயி இன்விடேஷன் கொடுக்கண்டே…?”

“அத்தை வீட்டுல யாரும் வர மாட்டாங்க, இன்விடேஷன் அனுப்பினாப் போதும்னு சொல்லிட்டாங்க, அம்பிகை அம்மாவும் வர்றது டவுட், நேர்ல வந்து கஷ்டப்பட வேண்டாம், தபால் அனுப்பினாப் போதும்னு சொன்னாங்க…”

“ம்ம்… நீ என்ன நினைக்கற, அப்படியே பண்ணலாமா…? நேர்ல போயி அழைக்கணுமா…?” தனது அபிப்ராயத்தைக் கேட்க நினைக்கும் கணவனை மெச்சுதலாய் பார்த்தாள்.

புதிய யோகா சென்டரில் அவளையும் பார்ட்னராய் சேர்த்து இருந்தான் ஆத்ரேயன். எது செய்வதென்றாலும் அவளையும் கேட்டு எல்லா விஷயத்திலும் ஈடுபடுத்தி தனக்கு நிகராய் நினைத்தவன் மீது இன்னும் காதல் கூடியது அவளுக்கு.

கட்டிட வேலை முடிந்து உள்ளே தேவையான பொருட்களை இருவருமாய் பார்த்து வாங்கினர். ஓப்பனிங் அன்று வரை நியதிக்கும் நிற்க நேரமில்லாமல் வேலை இருந்தது. ஒருவழியாய் அன்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கிய திறப்பு விழா மாலை வரை அழைத்தவர்கள் வந்து சென்று கொண்டிருக்க இருவருக்கும் நிற்கக் கூட நேரமின்றி வந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தனர். ஆத்ரேயன் யார் வந்தாலும் அவளை அழைத்து அறிமுகம் செய்து கொண்டிருக்க அவனுடனே இருந்தாள்.

“ஆத்ரேயன்…! சென்டர் ரொம்ப காத்தோட்டமா நல்லாருக்கு, மாடிலயே ஜிம்மும் வச்சது நல்ல ஐடியா…” ஒரு பிசினஸ் புள்ளி சொல்லவும் பெருமையுடன் மனைவியைப் பார்த்தான்.

“என் மிசஸ் தான் அதும் இங்கயே இருந்தா வசதின்னு சொன்னாங்க…”

“ஓ நல்லது, எனக்குக் கூட இப்படி ஒரு சென்டர் தொடங்கணும்னு இருக்கு, அப்புறம் உங்ககிட்ட டீடைலா பேசறேன்…” என்றவர் உள்ளே செல்ல நியதி,

“எதுக்கு ஆதி, அவர்கிட்ட எல்லாம் நான் சொன்னதை சொல்லறிங்க…?” என்ற நியதியின் இடுப்பில் யாரும் காணாமல் அவன் மெல்லக் கிள்ள,

“ஆ…! என்ன வாரியரே, யாராச்சும் பார்க்கப் போறாங்க…” சிணுங்கியவளை நோக்கி சிரித்தவன், “உண்மைலயே இது நல்ல பிசினஸ் டெக்னிக், முத்தே…” என்றான்.

“அதுக்கு இடுப்புல கிள்ளி வைக்கணுமா…?” அவள் சிணுங்கியபடி கிள்ளிய இடத்தில் தேய்க்க, “வேற இடத்துல தான் கிள்ளணும்னு நினைச்சேன்…” என்று இழுத்தவனை அவள் முறைக்கவும் புன்னகையுடன் திரும்பிக் கொண்டான். விழா சிறப்பாய் முடிய எல்லாரும் சென்ற பிறகு எல்லாவற்றையும் சரி செய்துவிட்டு நியதியும், ஆத்ரேயனும் வீட்டிற்கு தாமதமாய் வர அவர்களை வாசலில் நிற்க வைத்து திருஷ்டி சுற்றினார் ஷோபனா.

“எந்தா அம்மே, நாங்க என்ன குட்டிகளா…?”

“நிங்கள் எப்பவும் எனிக்கு குட்டிகள் தான்…” என்றவர் கை நிறைய உப்பை எடுத்து அவர்களை இட வலமாய் மூன்று முறை சுற்றி தண்ணீரில் போட அது கரைந்தது.

“இந்த உப்பு போல உங்க மேல உள்ள திருஷ்டி எல்லாம் கரைஞ்சு போகட்டும், எல்லார் பார்வையும் உங்க மேல தான்…” என பெருமையாய் சலித்துக் கொண்டார்.

“சரி, பிரஷ் ஆகிட்டு வா, பட்சணம் எடுத்து வைக்காம்…”

“ஏட்டனும், குட்டிகளும் ஒக்கே கழிச்சோ…”

“அவரொக்கே கழிச்சு நேரத்தே கிடக்கான் போயி… நிங்கள்க்கு வேண்டியானு ஞான் வெயிட்டிங், வசந்தயும் போயி…”

“எனிக்கு ஒண்ணும் வேண்டா அம்மே, ரொம்ப டயர்டா இருக்கு…” நியதி சொல்ல மறுத்தார் ஷோபனா.

“வெறும் வயிற்றில் கிடக்கான் பாடில்லா மோளே… மேலுக்கு கொஞ்சம் சுடுதண்ணி ஊத்திட்டு வா… பால் சூடு பண்ணித் தரேன், குடிச்சிட்டுப் படு…” என்று சொல்ல தலையாட்டினாள்.

அறையில் சோர்வுடன் அமர்ந்தவளின் முகமே களைப்பை சொல்ல, “முத்தே… முடியலைனா டிரஸ் மாத்தி கை, கால் மட்டும் கழுவிக்க…” ஆத்ரேயன் சொல்ல சம்மதித்தாள்.

உடுத்திருந்த பட்டு சேலையை அவிழ்த்து விட்டு நைட்டியுடன் குளியலறைக்குள் சென்றவள் சீக்கிரமே மாற்றி விட்டு வெளியே வர ஆத்ரேயன் குளிக்க சென்றான். அவனுக்கு எத்தனை நேரமானாலும், குளிரானாலும் இரவு குளிக்காமல் படுத்தால் உறக்கம் வராது. அவன் குளித்து வரும்போது நியதி அசதியில் அப்படியே கட்டிலில் படுத்திருக்க அவனுக்குப் பாவமாய் இருந்தது.

“இவளை அதிகமாய் அலைக்கழித்து விட்டோமோ…” அவள் அருகே அமர்ந்து மெல்ல தலையைக் கோதிக் கொடுத்தான். அவளுக்கு நிறைய பொறுப்புகள் கொடுத்து எப்போதும் பிஸியாக வைத்துக் கொண்டதால் தான் அவள் மனது வேறு எதையும் யோசித்து வருந்தாமல் சீராக இருக்கிறது, எனத் தன்னை சமாதானம் செய்தும் கொண்டான்.

கீழே உணவுண்ண செல்ல ஷோபனா நியதியைக் கேட்டார்.

“அவள்க்கு க்ஷீணம் அம்மே, நான் சாப்பிட்டு பால் கொண்டு போயி கொடுக்காம். நீங்களும் போயி தூங்குங்க…” எனவும்

“சரி மோனே…” என்ற ஷோபனா உறங்க சென்றார்.

பேருக்கு சாப்பிட்டு எழுந்த ஆத்ரேயன் மூடி வைத்திருந்த பால் கிளாஸை எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றான். அதை அறையிலுள்ள மேஜை மீது வைத்துவிட்டு நியதியை மெல்ல எழுப்பினான்.

“முத்தே…! எனிக்கு…”

அவள் கன்னத்தைத் தட்டி மெல்ல அழைக்க அவனது கையை இறுக்கமாய் அணைத்துக் கொண்டவள் மீண்டும் உறங்க, அருகே அமர்ந்தான்.

“மோளே, எழுந்திருடி… இந்தப் பால் குடிச்சிட்டு உறங்கு…”

அவளை எழுப்பி அமர வைக்க, “எனக்கு வேண்டாம், தூங்கணும் ஆதி…” என்றவள் அவன் தோளிலேயே சாய்ந்து கொள்ள விடாமல் அவளை எழுப்பி பாலைக் குடிக்க வைத்தான் ஆத்ரேயன்.

குடித்ததும் அவனது பனியனிலேயே சிறு பிள்ளை போல வாயைத் துடைத்துக் கொண்டவளை அவன் புன்னகையுடன் பார்க்க, “குட் நைட் ஆதி…” என்றவள் காலைக் குறுக்கிப் படுத்திருந்தாள்.

வரும்போதே “கால் ரொம்ப வலிக்குது ஆதி…” என அவள் கூறியது நினைவில் வர காலருகே அமர்ந்தவன் மடியில் அவள் காலை எடுத்து வைத்து இதமாய் பிடித்து விடத் தொடங்க ஏதோ ஒரு உணர்வில் கண் திறந்தவள் அதைக் கண்டு திகைப்புடன் எழுந்து அவன் கையை விலக்க, “ப்ச்… நான் கால் பிடிச்சு விடாம், உறங்கிக்கோ…” எனவும் அவள் தயங்க, “ப்ச்… கண்ணை உருட்டி விழிக்காதே உறங்கடோ…” என அவன் அதட்டவும் கண்ணை மூடிக் கொண்டாள்.

இதமாய் அவன் பிடித்துவிட்டதில் நன்றாக உறங்கினாள். காலை சூரியன் உதிக்கும் முன்னே தினமும் எழுந்து விடுபவள் அன்று அசந்து தூங்கிக் கொண்டிருக்க நெற்றியில் கை வைத்துப் பார்க்க காய்ச்சல் எதுவும் இருக்கவில்லை.

சரி உறங்கட்டும் என நினைத்த ஆத்ரேயன் அவளை எழுப்பாமல் அவன் மட்டும் சென்டருக்கு கிளம்ப ஷோபனா விசாரித்தார்.

“உங்க மருமகளு நல்ல உறக்கம் அம்மே… க்ஷீணம் இருக்கும் போலருக்கு, அவளே எழுந்து வரட்டும் கூப்பிட வேண்டாம்…” என்றவன் கிளம்பி விட்டான்.

காலை எட்டு மணியாகவும் ஆதிரா குழந்தைகளுக்கு காலை உணவைக் கொடுக்க ஷோபனா கவலையுடன் சொன்னார்.

“மோளே… நியதி இனியும் எனிச்சு வந்திட்டில்லா, ஆதி மாத்திரமானு யோகா சென்டரில் போயது… அவளை ரூம்ல நீ போயி ஒரு எட்டு பார்த்திட்டு வா…” என்றார்.

ஆதிரா நியதியின் அறைக்கு செல்ல அவள் தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருக்க, பதட்டமாய் கேட்டாள்.

“எந்தா நியதி, எந்து பற்றி…? சுகமில்லே…?”

“சேச்சி… எழுந்திருக்க முடியல, காலைக் கீழே வச்சா தலை சுத்துது… வாமிட் வர்ற போல இருக்கு…” தலையைப் பிடித்தபடியே அவள் சொல்ல, ஆதிரா அவளது நாடி பிடித்துப் பார்த்தவள் முகம் புன்னகைத்தது. அவளது காதில் ஆதிரா நாள் கணக்குக் கேட்க யோசித்த நியதியின் முகமும் மலர்ந்தது.

சிறிது நேரத்திலேயே நியதிக்கு வீட்டிலேயே யூரின் டெஸ்டும் எடுத்துப் பார்த்த ஆதிரா தங்கள் வீட்டுக்கு ஒரு புதிய உறவு வரப் போவதை உறுதி செய்து கவலையுடன் நின்றிருந்த ஷோபனா, குழந்தைகளிடம் விஷயத்தை சொல்ல ஷோபனா சந்தோஷிக்க, குழந்தைகள் குதித்தனர்.

“ஹேய்…! நம்முடே வீட்டில் ஒரு குஞ்சு வாவா வரான் போவுகயானு…” உடனே ஆத்ரேயனுக்கு விஷயத்தை சொல்ல அவன் சுவீட்டுடன் வந்து சேர்ந்தான்.

அழகான மலருக்கும்

அதைத் தீண்டும் வண்டுக்கும்

மலர்ந்திட்ட காதலில் – புது

ஜனனமொன்று உதயமானது…

அரும்பாகி மொட்டாகிப்

பூவாகிக் கனியும் நாளுக்காய்

வழிமேல் விழி வைத்துக்

காத்திருக்கும் பூந்தோட்டம்…

Advertisement