Advertisement

அத்தியாயம் – 30

“மோளே, சாயா, பிஸ்கட் மாடியில் அவருக்கு கொண்டு கொடுக்கு…” ஷோபனா சொல்ல வசந்தாவின் கையிலிருந்த டீ, பிஸ்கட் டிரேவை வாங்கிக் கொண்டாள் நியதி.

ஆதிராவின் தந்தை ஊரிலிருந்து வந்திருந்தார். வந்ததும் நியதியைக் கண்டு கொள்ளாமல் பொதுவே ஷோபனாவிடம் நலம் விசாரித்துவிட்டு மாடியில் மகளின் அறைக்கு நகர்ந்துவிட யோசனையுடனே டீயை மாடிக்கு கொண்டு கொடுக்குமாறு சின்ன மருமகளிடம் சொன்னார் ஷோபனா.

“சரி அம்மே…” என்றவள் வாங்கிக் கொண்டு மாடியேறினாள். புன்னகையுடன் அறையை நெருங்கியவளின் முகம் உள்ளே கேட்ட பேச்சில் சட்டென்று மாறியது.

“ஹோ… நீ எந்து பரஞ்சாலும் அவள் ஒரு ரெண்டாங்கெட்டு காரியல்லே. ஆதி ஜாதியும், குலவும் நோக்கியில்லா, சரி… புத்தியும் இல்லே, இங்கனே ஒருத்தியைக் கெட்டான்…”

“அச்சா, அதில் நிங்கள்க்கு எந்தா விஷமம்…?”

“எந்தே…? எனிக்கு விஷமம் உண்டாவில்லே…? நம்முடே சொந்தக்கார் கேட்டால் ஞான் என்னா பரயும்… என்டே மருமகன்டே தம்பிக்கு உடம்புல ஏதோ கோளாறு இருக்குறதால தான் இப்படி ஒரு பெண்ணைக் கல்யாணம் கழிச்சதா நினைக்க மாட்டாங்களா…?”

“அச்சோ அச்சா, குறச்சு மெல்லப் பரயின்… அம்மையோ, நியதியோ கேள்க்கண்டா…”

“யாரு கேட்டால் எனிக்கெந்தா…? கோயம்பத்தூரில் உள்ள என்டே பிரண்டு ராகவன் இவருடே கல்யாண போட்டோ கண்டிட்டு ராசியில்லாத பெண், முன்னமே கல்யாணமாயி பர்த்தாவு ஆக்சிடண்டில் மரிச்சு எந்து பரஞ்சப்போ ஞான் ஆடிப் போயி. என்டடுத்து இதினெப் பற்றி நீ ஒரு வாக்கு மிண்டியில்லா… நம்முடே குடும்பத்தில் இல்லாத்த ஒரு வழக்கமெல்லாம் நடக்குது…” கோபமாய் கத்தினார்.

அதற்கு மேல் அவர்கள் பேசுவதைக் கேட்க முடியாமல் கன்னத்தில் கண்ணீர் வழிய, பாதி திறந்த கதவைத் தட்டிவிட்டு உள்ளே செல்ல நியதியைக் கண்டதும் ஆதிரா அதிர்ந்தாள். அவளது தந்தை நியதியை ஏதோ தீண்டத் தகாதவள் போல முகத்தைச் சுளித்தபடி பார்க்க, நியதி யார் முகத்தையும் ஏறிட்டு நோக்காமல் சட்டென்று டிரேயைக் கொண்டு போய் அங்கிருந்த மேஜை மேல் வைத்துவிட்டு நெடுநெடுவென்று திரும்பிப் பார்க்காமல் செல்ல, அவளைக் கண்டு அதிர்ந்த ஆதிரா தவிப்புடன், “நியதி…” என அழைத்து நிறுத்த முயல அவள் நிற்கவில்லை.

அவர்கள் பேசுவது கீழே ஷோபனா காதில் அரைகுறையாய் விழ அவர் மாடிக்கு வருவதற்குள் நியதி அவளது அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள்.

தவிப்புடன் நின்ற மூத்த மருமகளைக் கண்டவர், “எந்தா மோளே, நியதி எந்தினா கரயனது…? அச்சன் எந்தக்கயோ பரயனது கேட்டு, எந்தா காரியம்…?” என்றார் பதட்டமாக.

“எனிக்கு வையா (முடியல) அம்மே, அச்சன்டே ஒரு பிரண்டு கோயம்பத்தூரில் ஆடிட்டராய் உண்டு. அவரு நியதி இருந்த ஆஸ்ரமத்துக்கு அப்பப்போ டொனேஷன் கொடுக்கப் போகும் தோணுது. அந்தப் பழக்கத்தில் அவளோட முதல் கல்யாணத்துக்குப் போயிருக்கார், ஊருக்கு நம்ம வீட்டுக்கு வந்தப்போ ஆதியோட கல்யாண போட்டோ பாத்தவர் ஷாக் ஆகி இந்தப் பொண்ணான்னு கேட்டு, இவளுக்கு ஆல்ரெடி கல்யாணமாகி புருஷன் ஆக்சிடன்டில் செத்துட்டாரே, இது உங்களுக்குத் தெரியுமா, உங்க மருமகன் எப்படி கல்யாணம் பண்ணார்ன்னு கேக்க, இவரு உடனே கிளம்பி வந்திருக்கார்… நான் எங்களுக்கு இந்த விஷயம் முன்னமே தெரிஞ்சு தான் ஆதி கல்யாணம் பண்ணான்னு சொன்னாலும் குதிச்சிட்டு இருக்கார். பாவம் நியதி, ரொம்ப பீல் பண்ணிட்டு ரூமுக்குள்ள போயிட்டா…” என்றாள் வருத்தத்துடன்.

ஆதிரா அன்னையிடம் மாடியில் சொல்லுவதை அப்போது தான் வீட்டுக்குள் வந்த ஆதியும் கீழிருந்து கேட்க கோபத்துடன் மாடிக்கு வந்தான்.

நேராய் அறைக்கு முன் நின்றவன் கதவைத் தட்டினான்.

“முத்தே…! கதவு திறக்கு…” அவன் குரலைக் கேட்டதும் பட்டென்று கதவைத் திறந்த நியதி ஓடி வந்து அவன் நெஞ்சில் சாய்ந்து அழத் தொடங்க அவளைத் தோளோடு அணைத்தபடி ஆதிராவின் தந்தையைத் தேடி வர ஆதிரா வேகமாய் அவனை சமாதானப்படுத்த முயன்றாள்.

“ஆதி… நிங்கள் விஷமிக்கண்டா, அச்சன் மனசிலாக்காதே அங்கனே பரஞ்சதா…” என்று சொல்ல ஷோபனாவும், “அதே மோனே, விவரம் இல்லாதே பரஞ்சு போயி. வயசில் மூத்தவரை எதுவும் சொல்ல வேண்டாம்…” என பதற  அவர்களிடம் எதுவும் சொல்லாமல் நியதியுடன் சென்றான்.

கதவு திறக்கும் ஓசையில் திரும்பிய ஆதிராவின் தந்தை ஆத்ரேயனைக் கண்டதும் திகைக்க, நிதானமாய் அவரைப் பார்த்தான். ஆனால் அவனது சிவந்த கண்ணும் முகமுமே கோபத்தை அடக்கிக் கொண்டிருக்கிறான் என்றது.

“அங்கிள்… இவள் என் ஒயிப் மாத்திரமல்ல, என்டே லைப்பும் கூடியானு, அவளைப் பற்றி யோசிக்க நான் இருக்கேன்… உங்க மகளைப் பார்க்க வந்தா அவங்களை மட்டும் பார்த்திட்டுப் போங்க, தேவையில்லாம எங்க லைப்ல தலையிடாதிங்க, அடுத்த முறை நான் பொறுமையாப் பேச மாட்டேன்…” என்றதும் அவர் உறைந்து போய் நிற்க, நியதி திகைப்புடன் கணவனைப் பார்க்க மனைவியின் தோளில் கையிட்டு அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

“ஆதி…!” ஆதிரா தயக்கத்துடன் அவனை அழைக்க நின்றவன்,

“ஏடத்தி, இது என் வாழ்க்கை… என் பார்யா (ஒயிப்) எப்படி வேணும்னு நானும், என் குடும்பமும் தான் தீர்மானிக்கணும், என் குடும்பம் தவிர மூணாவதா ஒருத்தரோட அபிப்ராயம் எனக்குத் தேவையில்லை…” சட்டென்று அவள் தந்தையை மூன்றாவது மனிதன் என்று சொல்லி விட்டு நியதியுடன் அறைக்குள் சென்று விட்டான் ஆத்ரேயன்.

நியதி நடந்த விஷயத்தில் திகைத்தும், ஆதி இப்படி சொன்னதில் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை வருமோ என்று பயந்தும் மௌனமாய் அழுதபடியே கட்டிலில் அமர்ந்திருந்தவனைப் பார்த்திருந்தாள்.

தலையைக் குனிந்து அமர்ந்திருந்தவன், இன்னும் கோபத்தில் இருக்கிறான் எனப் புரிய தயக்கத்துடன் அருகே சென்றாள்.

“ஆதி….!” நிமிர்ந்தவன் சிவந்த கண்களுடன் முறைத்தான்.

“எ..எதுக்கு இவ்ளோ கோபப்படறீங்க…?”

“கோபப்படாம, சந்தோஷப்பட சொல்லறியா…? நீ இப்பவும் என் பொண்டாட்டியா மாறவே இல்லையா…? நம்ம வாழ்க்கையைத் தீர்மானிக்க மத்தவங்களுக்கு என்ன உரிமை இருக்கு. யாராச்சும் ஏதாச்சும் சொன்னா நிமிர்ந்து நின்னு கேள்வி கேட்காம இப்படிதான் அழுதுட்டு இருப்பியா, திருப்பி பதில் பேசத் தெரியாதா…?” கேட்டவன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டான்.

திகைத்து நின்றவளுக்கு எதுவோ புரிவது போல் இருந்தது. அவன் ஜன்னலருகே சென்று நின்று வெளியே வெறித்தான்.

“ஆதி…!” மெல்ல அவன் அருகே வந்தவளை நோக்கித் திரும்பியவன் விழிகள் அவளையே உறுத்து நோக்கின.

அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தேம்பியவள், “நா..நான் ராசியில்லாதவளா ஆதி…? என் ராசி உங்களையும் ஏதாவது பண்ணிடுமா…” இரு கன்னத்திலும் நீர் வழிய கேவலுடன் கேட்டவளை வேகமாய் இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் ஆத்ரேயன்.

“ஏய் என்னடி பேசற…? நீ எனக்குக் கிடைக்கலேன்னா நான் தான் ராசியில்லாதவனாப் போயிருப்பேன், நீ எனக்கு வாழ்க்கைல கிடைச்ச நிதி. உன்னால தான் என் வாழ்க்கை முழுமையாச்சு, நீ எனக்குக் கிடைச்ச முத்து, உன்னை ஒரு சிப்பி போல பத்திரமா எனக்குள்ள வச்சுப் பார்த்துப்பேன்… இனி இப்படி யோசிக்கவோ, பேசவோ செய்யாதே முத்தே…”

அவளது கண்ணீரைத் துடைத்து அவளது தலை உச்சியில் முத்தமிட்டவனின் நெஞ்சுக்குள் புதைந்து விடும் முயற்சியில் அவனை இறுக்கிக் கொண்டவள் மனதில் அவன் மட்டுமே இருந்தான். பழைய நினைவுகள் எப்போதோ பின்னோக்கிப் போயிருக்க ஒவ்வொரு நிமிடமும் தனது தேவையறிந்து அன்பும், அரவணைப்புமாய் எங்கும், யாரிடத்தும் தன்னை விட்டுக் கொடுக்காமல் ஒரு தாய்ப்பறவை போல் பாதுகாக்கும் கணவனின் நினைவே மனதை நிறைத்திருந்தது.

அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவள் முதுகில் அவனது விரல்கள் மெல்ல வருட அவனை தன்னோடு இறுக்கிக் கொண்டவளின் தலையில் மெல்ல முத்தமிட்டவன் “முத்தே…! நீ என்டதானு, என்டே மாத்திரமானு…” என்றவன் நெஞ்சில் காதலுடன் இதழ் பதித்தாள்.

தந்தையின் குணமறிந்த ஆதிராவுக்கு நியதியின் மீது எந்தக் கோபமும் இல்லை. அவள் இயல்பாய் பழக நியதி நிம்மதியானாள். நாட்கள் அழகாய் நகர்ந்தது.

ஷோபனாவின் அறுபதாம் பிறந்தநாளுக்கு அனைவரும் குருவாயூர் சென்று வந்தனர். ஆத்ரேயன் நியதியை அழைத்துச் சென்று அன்னைக்கு இரண்டு தங்க வளையல்களை வாங்கிப் பரிசளித்தான். பெரிய மகனும், மருமகளும் தங்க செயின் பரிசாய் கொடுக்க குருவாயூரில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்து சிறப்பாய் கொண்டாடினர். ஷோபனாவின் மனம் மகன்களின் நேசத்தோடு நல்ல மருமகள்கள் அமைந்த சந்தோஷத்தில் நிறைந்திருந்தது.

யோகா சென்டருக்கான கட்டிட வேலைகள் மும்முரமாய் நடந்து கொண்டிருக்க நியதியிடமும் ஆலோசனைகள் கேட்டு ஆத்ரேயன் சென்டரில் சில மாற்றங்கள் செய்தான். பெண்களுக்கும், ஆண்களுக்கும் நடுவே பிடித்து தனித்தனி வகுப்புகள் நடத்தும் அளவிற்கு பெரிய கட்டிடமாய் இருந்தது.

ஒரு சானலில் உடல் பருமன் குறைப்பதற்கான சில குறிப்பிட்ட ஆசனங்களின் வீடியோ கேட்டிருக்க, நியதியின் பொறுப்பில் அதை விட்டிருந்தான் ஆத்ரேயன். அவளும் ஜான்சியும் சேர்ந்து சில பெண்களைத் தேர்வு செய்து வீடியோ தயாரித்துக் கொடுத்தனர்.

“நமக்கு ஒரு யூ டியூப் சானல் தொடங்கி அதில் ஆன்லைன் கிளாஸ் எடுக்கலாமா…?” என்ற நியதியின் கேள்விக்குத் தலையாட்டியவன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வாரம் மூன்று வீடியோ அப்லோட் செய்யும் விதத்தில் எளிமையான யோகாசனங்களை வீடியோ எடுத்து பதிவேற்றினான். அதற்கு அவர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. நிறைய பேர் விருப்பத்துடன் சேர்ந்தனர்.

நியதியும் ஆத்ரேயனோடு பிசியாய் ஓடிக் கொண்டிருந்தாள். வாழ்க்கை மிகவும் நிம்மதியாய் அழகாய் மாறி விட்டதை அன்றைய சில ஓய்வு நொடிகளில் நினைக்கையில் அதற்குக் காரணமான கணவனை உடனே காணத் தோன்றியது.

Advertisement