Advertisement

“சேச்சி எந்தானு செய்யனது…?” (சேச்சி என்ன பண்ணறீங்க)

“நான் யோகா செய்யறேன்…”

“ஓ… நிங்கள் கண்ணு மூடி இரிக்கனது கண்டப்போ நான் விசாரிச்சு உறங்குவானெந்து…” (நீங்க கண்ணை மூடி உக்கார்ந்திருக்கவும் தூங்கறீங்கன்னு நினைச்சேன்) “இது நிங்கள்க்கு…” என்றவன் ரோஸ் ஒன்றை நீட்ட திகைத்தாள்.

“இல்ல எனக்கு வேண்டாம், தோட்டத்துல பறிச்சியா…? இங்க பேரன்ட்ஸ் கூட வந்திருக்கியா…?”

“ம்ம்… என்டே அம்மக்கு எப்பழும் காலு வேதின, பாவம்…! நடக்கானே வையா, அதான்னு சிகில்ச்சைக்கு வந்தது…”

“ஓ…! சரியாகிடும்…”

“ப்ளீஸ் சேச்சி, ஈ ரோஸ் வாங்கிக்கோ…”

“ம்ம்… ஓகே, தேங்க்ஸ்…”

“தேங்க்ஸ் எனிக்கு வேண்டா, அங்கிள்னு பரஞ்சால் மதி…” என்றவன் அடுத்த நிமிடம் அங்கிருந்து ஓடி விட்டான்.

“அங்கிள்க்கு சொல்லுறதா…? எந்த அங்கிள்…? ஒருவேளை தோட்டக்கார அங்கிளை சொல்லுறானோ…?” என நினைத்தவள் அந்த மஞ்சள் நிற ரோஜாவை முகர்ந்து கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“வெள்ளக்கோழி…! உனக்கு மஞ்சள் சுரிதார் ரொம்ப அழகாருக்கு, அப்படியே மஞ்சள் தேவதை போல இருக்க…”

“ஹூக்கும், போடா கருப்பா… நான் எந்த டிரஸ் போட்டாலும் நீ இப்படியே தான் சொல்லுவ…” எப்போதாவது அவள் வாயில் கருப்பா என்ற அழைப்பு வரும்போது அவள் மிகவும் உற்சாகமாய் இருக்கிறாள் எனப் புரிந்து கொள்வான். அவளை இழுத்து மடியில் போட்டுக் கொண்டு அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் காதுக்குள் கிசுகிசுப்பான்.

“நீ டிரஸ் போடலேன்னாலும் அழகு தான்…” எனக் கொஞ்ச அவனது கட்டி மீசையை இழுத்து நாணத்தில் அவன் நெஞ்சுக்குள் முகம் புதைத்துக் கொள்வாள்.

“ச்சீ, இந்த கருப்பன் ரொம்ப மோசம்… பேட் பாய்…” உதடுகள் அப்படி சொன்னாலும் அவன் வார்த்தையில் குழைந்து அவனுள்ளே புதைந்து போகவே செய்வாள்.

விழுந்திடும் வரை தெரிவதில்லை…

காதல் எழுந்திட முடியாத ஆழம் என்று…

தொலையும் வரை புரிவதில்லை…

காதல் கண்டு பிடிக்க முடியா களவென்று…

நான் என்ற ஒன்று நாமாகிப் போவதே

காதலில் எழுதா விதியோ…

யோசனைகளில் அமர்ந்திருந்த நியதி ஒரு பெருமூச்சுடன் எழுந்து கிளாசுக்கு நடந்தாள்.

சரியாய் 10.30 க்கு யோகா மாஸ்டர் சுரேந்திரன் வந்துவிட தயாராய் இருந்த மாணவர்கள் வணக்கம் சொன்னார்கள். அவர் மலையாளத்தில் பேசிய முன்னுரை தமிழில்.

“வெல்கம் டு ஆரோக்கியா…! ஆசனங்களை செய்வதற்கு முன் அவற்றின் ரகசியங்களை நீங்கள் அறிவது அவசியம். உபநிடதங்களில் மானிடனே பிரபஞ்சத்தின் பிரதிநிதி எனப் பல இடங்களில் புகன்றுள்ளார்கள்… இதில் உண்மை இல்லாமலில்லை… கண் சூரியன், செவி ஆகாசம், மனம் சந்திரன், சரீரம் நிலம், சுவாசம் காற்று என சொல்லலாம்… இவ்வாறே பிரபஞ்சத்தின் எல்லாப் பொருள்களின் அணுக்களை மனித தேகத்தில் காணலாம்… நம் சரீரத்தில் புல், புழு, மரம், பறவை, பாம்பு, பூனை, புலி முதலிய எல்லா மிருகங்களின் சின்னங்களைக் காணலாம்… இந்த ஜென்மங்கள் எல்லாம் கடந்த பின்னரே மானிட ஜென்மமாதலால் இவ்வாறு இருப்பது அதிசயமில்லை…” அவர் மேலும் சொல்லிக் கொண்டிருக்க உங்களை போர் அடிக்க விரும்பாததால் சிறிது மியூட் செய்துவிட்டு வகுப்புக்கு செல்கிறேன்.

“எப்பவும் யோகா செய்யறதுக்கு முன்னாடி வயிறு காலியா இருக்கணும்… குறைஞ்சது சாப்பிட்ட பிறகு மூணு மணி நேரம் இடைவெளி இருக்கணும்… சூரியன் உதயமாகும் நேரம் தான் யோகாவுக்கு உகந்தது, அவன் உச்சத்திற்கு வரும்போது யோகா செய்யக் கூடாது… அப்புறம் சூரிய அஸ்தமன சமயத்துல நாலு மணிக்கு மேல தான் மாலையில் யோகா செய்யலாம்…”

“முதலில் குரு நமஸ்கார்… புதிதாய் எந்த ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ளத் தொடங்கும் போதும் குருவை வணங்கிட்டு தொடங்கினால் தான் அது வெற்றி பெறும்… நியதி…! நீ செய் மா…” சுரேந்தர் சொல்ல மாணவர்களுக்கு முன் தயாராய் நின்றவள் குரு நமஸ்கார் முத்திரைகளை செய்யத் தொடங்க சுரேந்தர் மைக்கில் மந்திரத்தை சொல்லத் தொடங்கினார்.

குரு பிரம்மா குரு விஷ்ணு

குரு தேவோ மகேஸ்வர;

குரு சாஷாத் பரப்பிரம்மா

தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ…

இரு கைகளையும் கூப்பி நிமிர்ந்து நின்று அவள் நெளிந்து வளைந்து குனிந்து முத்திரைகளைக் காண்பிக்க மற்றவர்கள் வணக்கம் மட்டும் வைத்து பார்த்துக் கொண்டனர்.

“தொடக்கத்துலயே எல்லா முத்திரைகளும் சரியாப் பண்ணனும்னு நினைக்க வேண்டாம்… உங்க உடம்பு உங்களுக்கு ஒத்துழைக்கிற வரைக்கும் என்ஜாய் பண்ணி யோகா பயிற்சி எடுங்க… எல்லாமே பழக்கத்தில் வர்றது தான், உங்க உடம்பு பிளக்ஸபில் ஆகத் தொடங்கும்போது எல்லா முத்திரைகளும் உங்களுக்கு வசமாகத் தொடங்கும்… சோ, ஸ்டார்டிங்ல இது சரியா, தப்பான்னு எல்லாம் யோசிக்க வேண்டாம்… ஜஸ்ட் டூ இட், பிராக்டீஸ் இட், என்ஜாய் இட்… தென் உங்க உடம்பும், மனசும் லேசாகிப் பறப்பதை யூ பீல் இட்…” அழகாய் பேசினார் சுரேந்தர்.

“முதல்ல கொஞ்சம் சிம்பிள் ஸ்டெப்ஸ் பண்ணி பாடியை வார்ம் அப் பண்ணிக்கலாம்…”

அவர் சொல்லவும் நியதி கழுத்து, கண், காது, தோள், இடுப்பு, முழங்கால் எல்லாம் அசைப்பது போல் சின்னச் சின்ன பயிற்சிகள் செய்து காண்பிக்க அதை எல்லாருக்கும் எளிதாய் செய்ய முடிந்தது.

“வெரிகுட்… இன்னிக்கு சூர்ய நமஸ்கார் மட்டும் சொல்லித் தரோம், ஜஸ்ட் டிரை…” புன்னகையுடன் சுரேந்தர் சொல்ல நியதி சூர்ய நமஸ்காருக்கான 12 நிலைகளையும் இரு முறை செய்து காண்பிக்க, அதைக் கண்டு ஸ்டூடண்ட்ஸ் தடுமாற்றத்துடன் முயற்சி செய்யத் தொடங்கினர். ஒரு மணி நேரம் முடிந்ததும் அடுத்த பாட்ச் தொடங்கியது. அதில் கொஞ்சம் சீனியர் ஸ்டூடன்ட்ஸ் இருந்தனர்.

நியதியும் வேறு இரண்டு டீச்சர்களும் முன்னில் நின்று சுரேந்தர் சொல்லும் ஆசனங்களை செய்து காண்பிக்க, தப்பாய் செய்யும் ஸ்டூடன்ட்ஸ் அருகே சென்று சரி செய்து சொல்லிக் கொடுதார் சுரேந்தர். மிகவும் அழகாய் அந்த நாள் கழிய நியதியிடம் உற்சாகம் தெரிந்தது.

“குட் நியதி… நீ ஆசனங்களை பிரசன்ட் செய்யும் விதம் மிகவும் அழகாய் இருக்கிறது… கீப் இட் அப்…” என்று அவள் தோளில் தட்டிக் கொடுத்து நாற்பது வயது சுரேந்தர் சொல்ல அவளுக்கு சந்தோஷமாய் இருந்தது.

இனி மாலையில் தான் வகுப்பு என்பதால் பிளாட்டுக்குக் கிளம்பினாள். அங்கிருந்த கான்டீனில் மதிய உணவுக்கு சொல்லி விட்டு நன்றாய் ஒரு குளியல் போட்டு முடிக்க ஆவி பறக்க உணவு வந்துவிட்டது.

குண்டு அரிசி சாதம், வெண்டக்காய் சாம்பார், பீன்ஸ் பொரியல், வாழக்காய் கூட்டு, அப்பளம்… அங்கே சிகிச்சை பெறத் தங்கி இருப்பவர்களுக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுக்க வேண்டுமென்பதால் பாலமுருகன் செய்திருந்த ஏற்பாடு அது. ஸ்டாபுகளுக்கு பகுதிக் கட்டணம் மட்டுமே.

திருப்தியாய் சாப்பிட்டு முடித்தவள் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருக்க அப்படியே உறங்கிப் போனாள். ஒரு மணி நேரம் உறங்கியவள் எழும்போது மிகவும் உற்சாகமாக உணர்ந்தாள். அம்பிகைக்கு அழைத்து அன்று நடந்ததைக் கூறியவள் மாலை வகுப்பிற்கு செல்லத் தயாரானாள்.

மூன்றரை மணிக்கே சூரியன் காணாமல் போயிருக்க, மழை வரும்போல் மண் வாசனையுடன் குளிர்ந்த காற்று வீசியதோடு மேகமும் சற்று கலங்கித் தெரிந்தது. அதை ரசனையுடன் பார்த்துக் கொண்டே எட்டு வைத்து நடந்தவள் சென்டருக்குள் நுழைந்தாள்.

அவளது சக பயிற்சியாளரான ஜான்ஸி எதிர்ப்பட்டாள்.

“நியதி…! சுரேந்திரன் ஸார் நம்மள் ரெண்டு பேரையும் கிளாஸ் எடுக்கான் பரஞ்சு…”

“ஓ…! ஸார் இல்லியா…?”

“உண்டு…! நம்முடே பாஸ் வந்தது கொண்டு ஏதோ பிரத்யேக காரியங்கள் சம்சாரிச்சு கொண்டு இரிக்குகயானு…” (முக்கியமான விஷயம் பாஸ் கூட பேசிட்டு இருக்கார்)

“ஓ…! நான் இதுவரைக்கும் பாஸைப் பார்த்தது இல்லை, சரி… இன்னிக்கு என்ன கிளாஸ் எடுக்கணும்…”

“கோமுகாசனா, வஜ்ராசனா அண்ட் அர்த்த சந்த்ராசனா… இது மூணும் செய்து காணிக்கான் பரஞ்சு…”

“ஓகே டன்…” என்றவள் யோகா உடை மாற்ற சென்றாள்.

அவள் உடை மாற்றி வெளியே வரும்போது ஆத்ரேயன் சென்டரில் இருந்து வெளியே சென்று கொண்டிருக்க அவனைக் கண்டு விட்டவள்,

“இந்தத் தாடிக்காரன் தானே காலைல அட்மிஷன் போட்டுட்டுப் போனான்… இப்ப எதுக்கு மறுபடியும் வந்திருக்கான்…” என யோசித்தவள், “ஒருவேளை, டைம் மாத்திக் கேட்க வந்திருப்பானோ…?” என பதிலும் கண்டு பிடித்து, “ஹா… அவன் எதுக்கோ வரட்டும், நமக்கென்ன…” என நினைக்கவும் செய்தாள்.

அன்றைய வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போதே மழை பலமாய் பெய்யத் தொடங்கியது. வகுப்பு முடிந்து வந்தவர்கள் மழை அங்கே சாதாரண விஷயம் என்பதால் ரெயின் கோட் மாட்டிக் கொண்டு கிளம்பினர். வகுப்பு முடியும் வரை மழையை கவனிக்காமல் இருந்த நியதிக்கு இப்போது தனிமையில் மழை அபிமன்யுவை நினைவூட்ட வேதனையுடன் அதைப் பார்த்து நின்றாள்.

அடித்து விட்டு அழுகின்ற

அன்னையிடம் வலிக்கவில்லை

என பொய் சொல்லும்

பிள்ளை போல் என்

நிலை சொல்ல என்

அருகில் ஏன் நீ இல்லை…

Advertisement