Advertisement

 அத்தியாயம் – 3

“பாவம் புத்தன்…! பின்னிருந்து ஒலித்த அழுத்தமான ஆண்குரலைக் கேட்டதும் சற்று கடுப்புடன், “புத்தன் பாவம் இல்லை… யசோதையைப் பொறுத்தவரை பாவி…!” என்றபடி திரும்பியவள் அங்கே நின்றவனைக் கண்டதும் திகைத்தாள்.

நீல நிற ஜீன்ஸ், சந்தன நிற டீஷர்ட்டில் அளவான உடல்வாகு, பளிச்சென்ற தந்த நிறம், நெற்றியில் சந்தனப் பொட்டுடன் நின்றவன் தாடியும், தலை முடியும் கண்டவள், “இதென்ன…! இவ்ளோ தாடியும், முடியுமா மாடர்ன் சாமியார் போல நிக்கறான்…? யாரிவன்…?” யோசித்தாள்.

அவளை யோசிக்க விடாமல் “ஒய்…?” என்றவனின் கண்களில் ஒரு நிதானமும், ஒளியும் இருந்தது.

“என்ன ஒய்…?”

“யூ, புத்தன் பாவி சொல்லிச்சு…”

“எஸ், புத்தரை உலகமே ஞானின்னு கொண்டாடினாலும் என்னால அவர் யசோதைக்கு செய்த துரோகத்தை அவ்ளோ ஈஸியா ஏத்துக்க முடியலை…”

“விதியை யாராலே மாற்றான் பற்றும்… சித்தார்த்தன் யசோதையே விட்டு போயது கொண்டல்லே நமக்கு புத்தனே கிட்டியது, ஒன்றை இழந்து ஒன்றை நேடினான் புத்தன்…” அவன் சொன்னது சரியென்றாலும் அவளால் முழுமையாய் அதை ஏற்க முடியவில்லை. மூணாறு தமிழ் மக்களும் அதிக அளவில் வாழும் இடம் என்பதால் அங்குள்ள கேரள மக்களுக்கு தமிழ் பேச வரா விட்டாலும் புரிய எளிதானது.

தந்தை இல்லாமல் அன்னை பட்ட கஷ்டத்தை அம்பிகை மூலம் கேட்டறிந்து வளர்ந்த நியதியால் இந்த எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் அன்னையைப் போல் யசோதையும் எத்தனை இன்னல்களை அனுபவித்திருப்பாள் என்று மட்டுமே யோசிக்கத் தோன்றியது. யோசனை நீள, அவள் முன்னே சொடக்குப் போட்டு அழைத்தான்.

“ஹலோ, மலர் டீச்சர்…!” அவன் அழைப்பில் மீண்டவள்,

“ஸாரி! நான் மலர் டீச்சர் இல்லை… என் பெயர் நியதி…!”

“ஆயிக்கோட்டே, பட்சே காணான் மலர் டீச்சர் போலுண்டு…”

யாரோ ஒரு புதியவனிடம் எப்படி இத்தனை சரளமாய் பேசுகிறோம் என உரைக்க, “சரி, நீங்க யாரு…? உங்களுக்கு என்ன வேணும்…?” என்றாள் அவனை நோக்கி.

“ஞான்…! ஞான் யோகா கிளாஸில் சேரான் வந்ததானு…”

“ஓ..! வந்த வேலையைப் பார்க்காம தேவையில்லாம பேசி வழிஞ்சுகிட்டு…” வாய்க்குள் முணுமுணுத்தவள்,

“அட்மிஷன் போட்டாச்சா…?”

“இல்ல, இனி தன்னே… மோர்னிங் ஏதொக்கே டைமிலானு கிளாஸ் உள்ளதெந்து பரயுமோ…?”

“மார்னிங் 6.30 to 8.30 ரெண்டு பாட்ச், 10.30 to 12.30 ரெண்டு பாட்ச்… இதுல 6.30, 10.30 க்கு ஸ்டார்ட் பண்ணுறதுல மட்டும் தான் பிகினர்ஸ் கிளாஸ் இருக்கு…” அவள் விவரமாய் சொல்ல ஆர்வமாய் பார்த்திருந்தான் ஆத்ரேயன்.

“ஓகே..! நிங்கள் ஏது பாட்சிலானு கிளாஸ் எடுக்குகா…?” என்றவனை முறைத்தவள், “ஒய்…?” என்றாள்.

“ஒரு ஜெனரல் நாலட்ஜினு அறயான் சோதிச்சதா…”

“நான் எல்லா பாட்ச்லயும் இருப்பேன்… மார்னிங் பர்ஸ்ட் பாட்ச்ல தான் பிகினர்ஸ் கிளாஸ்ல இடம் இருக்கு, ஆல்ரெடி யோகா தெரியுமா, பிராக்டிஸ் பண்ணிருக்கிங்களா…?” என்றவளின் விழிகள் அவனை ஆராய நெளிந்தான் அவன்.

“ஹேய் டீச்சர்…! என்னே அங்கனே நோக்கண்டா…? நாணம் வருந்து…” என்றவனைக் கடுப்புடன் பார்த்தாள்.

“ஹலோ…! நேம் சொல்லுங்க, அட்மிஷன் போடணும்…”

“ஆத்ரேயன் வாரியர்…” நிமிர்வுடன் சொன்னான்.

“என்னது வாரியலா…? அப்படின்னா துடைப்பம் தானே…” என குழப்பத்துடன் பார்த்தவள் கேட்டு விட்டாள்.

“என்ன பேரு இது… வாரியல்னு பேரு வைப்பாங்களா…?”

“நோ நோ…! வாரியல் அல்ல, வாரியர்… ஜாதிப் பேரானு…”

“ஓ… உங்க ஊருல ஜாதியைப் பேருலயும் சுமந்திட்டு தான் திரியுவிங்களா…? நாயர், மேனன், நம்பியார், பிள்ளை, பணிக்கர், வர்மா, வாரியர்னு… இந்த மாடர்ன் உலகத்துலயும் எதுக்கு இந்த அடையாளம்…?”

“சில பழக்க வழக்கங்கள் அவ்ளோ சீக்கிரம் மாறில்லா…”

“சரி, என்னமோ ஆகட்டும்… வீக்லி ஒரு நாள் விட்டு ஒரு நாள் த்ரீ டேஸ் கிளாஸ், உங்களுக்கு எந்த டே ஓகே…?”

“திங்கள், புதன், வெள்ளி ஓகே யானு டீச்சர்…”

“ஓகே, புதன் மார்னிங் பர்ஸ்ட் பாட்ச், நாளைக்கு வந்திருங்க… கவுன்டர்ல கேஷ் கட்டிருங்க…” என்றவள் அவனது மொபைல் எண்ணையும் குறித்துக் கொண்டு ஒரு ஸ்லிப்பைக் கொடுக்க அவன் வாங்கியதும் அவள் வெளியே இருந்த புல் தரையை நோக்கிச் செல்ல அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் தாடிக்குள் இதழ்கள் சந்தோஷமாய் புன்னகைத்தன.

அடுத்த கிளாஸ் தொடங்க இன்னும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்ததால் தோட்டத்திற்கு சென்றாள் நியதி. ஆயுர்வேத ஹாஸ்பிடலுக்கும், யோகா சென்டருக்கும் நடுவே பெரிய புல் தரையுடன், மரம், அழகான பூச்செடி என பூங்கா போன்ற இடம் இருந்தது. அங்கேயே தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெறுபவர்களுக்கு பூங்காவின் எதிர்ப்பக்கம் ஒரு பெரிய கட்டிடம் என எல்லாக் கட்டிடங்களுக்கும் நடுவே பராமரிக்கப்பட்ட அந்தப் பூங்கா இருந்தது.

காலை ஒன்பதரை மணிக்கு மேலாகியும் கதிரவனுக்கு மப்பு தெளிந்திருக்கவில்லை. இதமான காலை வெயிலோடு சுகமான அந்த சூழ்நிலையும் சேர்ந்து கொள்ள ஓரமாய் ஒரு மரத்துக்குக் கீழே சென்று இடது காலை வலது தொடையிலும், வலது காலை இடது தொடையிலும் வைத்து

முழங்கால்கள் தரையில் பட, அடிப்பாதங்கள் மேல்நோக்கி இருக்க பத்மாசனமிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள் நியதி.

இரு கைகளும் கால்களின் மேல் சின்முத்திரை (ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டை விரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும் அடையாள சின்னத்தையே சின்முத்திரை என்பார்கள். இதில் கட்டைவிரல் கடவுளைக் குறிக்கும். சுட்டுவிரல் மனிதனைக் குறிக்கும். நடுவிரல் ஆசையையும், மோதிர விரல் கர்மமாகிய செயல்களையும், சுண்டு விரல் மாயையையும் குறிக்கும். மனிதனை மாயை மறைத்து நின்று, ஆசையை ஏற்படுத்தி, கெட்ட கர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் மறந்துவிட்டு இறைவனை வணங்கினால் இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதே இதன் பொருள்..!) சுவாசத்தை நிதானமாகவும், முழுமையாகவும் உள்ளே இழுத்து நிதானமாக வெளியே விட்டாள் நியதி. கண்கள் மூடி இரு புருவங்களுக்கு நடுவே எண்ண அலைகளைக் கொண்டு வந்து நிறுத்த முயல சட்டென்று மூடிய கண்களுக்குள் அபிமன்யு சிரித்தான்.

தலையை ஆட்டியவள் மீண்டும் அதே போல் முயல அவள் கட்டுப்பாடையும் மீறி எண்ணங்கள் அவனிடமே தாவின.

ஒரு நாள் யோகா வகுப்பில் நியதி உட்பட எல்லாரும் கண்ணை மூடி தியானத்தில் இருக்க, அவளின் கன்னத்தில் சட்டென்று ஒரு ஸ்பரிசமும், ஈரமும் உணர்ந்து கண்ணைத் திறக்க அவளை முத்தமிட்ட அபிமன்யு குறும்புடன் முன்னில் நின்று சிரித்துக் கொண்டிருந்தான். அவனை முறைத்தவள் கண்ணை உருட்டி சைகையில்,

“என்ன இது…?” எனக் கேட்க தோளைக் குலுக்கியவன் உதட்டைக் குவித்து,

“முத்தம்…” என கண் சிமிட்டினான்.

அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தவள், “அபி… என்ன, தியானத்துல இருக்கும்போது இப்படிப் பண்ணிட்டு இருக்கீங்க…? யாராச்சும் பார்த்தா…”

“யாரும் பார்க்க மாட்டாங்க வெள்ளக்கோழி, அதான் எல்லாரும் கண்ணை மூடி உக்கார்ந்திருக்காங்களே… அப்படியே பார்த்தா தான் என்னவாம், அவங்களுக்கும் வேணும்னா ஒரு கிஸ் குடுத்துடலாம்… காசா, பணமா…?” என்றவனை அவள் அடிக்கக் கை ஓங்க அவன் ஓடுவான்.

இன்னொரு நாள் ஒற்றைக் காலை மடக்கி நின்று, இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி கூப்பியவாறு கண்ணை மூடி அவள் மும்முரமாய் ஏக பாத ஆசனம் செய்கையில் சட்டென்று அலேக்காய் அவளை மேலே தூக்கி இதயத்தை எம்பிக் குதிக்க வைப்பான் அந்த குறும்புக்காரன்.

அவள் தலைகீழாய் நின்று மாணவர்களுக்கு சிரசாசனம் செய்து காண்பிக்கையில் அவளிடம் ஏதோ சந்தேகம் கேட்பது போல் வந்து காதருகே, ‘ஐ லவ் யூ வெள்ளக் கோழி’ என்று கூறி அவள் முக சிவப்பை மேலும் அதிகமாக்கி ஒன்றும் தெரியாத குழந்தை போல் விலகி சென்று விடுவான்.

அவன் செய்தது ஒவ்வொன்றும் மனதுக்குள் அலையாய் எழுந்து வர, ஏக்கத்தில் தவித்த மனம் அதில் சுருண்டு காணாமல் போய்விட துடித்தது. அருகே யாரோ சிரிப்பது போல் சின்னதாய் சத்தம் கேட்க, கண்ணைத் திறக்கத் தோன்றாமல், எதையும் காணப் பிடிக்காமல் அப்படியே அமர்ந்திருந்தவள் மனது அபிமன்யுவுக்காய் ஏங்கியது.

“அபி…! அபி…!” மனம் அவன் பெயரை மந்திரமாய் உச்சரிக்க, “ஞான் அபி அல்ல, ஆதர்ஷ்…” என்றது ஒரு பிஞ்சுக் குரல்.

சட்டென்று கண்ணைத் திறந்து பார்க்க ஒரு குட்டிப் பையன் புன்னகையுடன் எதிரில் நின்றிருந்தான். அழகான முகமும், நெற்றியில் சந்தனப் பொட்டுமாய், நான்கு வயதிருக்கலாம். அவளை நோக்கி சிரித்தவனுக்கு பதிலுக்கு புன்னகைத்தாள்.

ஹாஸ்பிடலில் ஆயுர்வேத சிகிச்சைக்காய் வருபவர்கள் அங்கே குடும்பமாய் தங்குவது சாதாரணம் என்பதால் அங்கே உள்ள பையன் யாரோ எனப் புரிந்து கொண்டாள். அவன் கையில் ஒரு ரோஜாப்பூவும் சாக்கலேட்டும் இருந்தது.

Advertisement