Advertisement

 அத்தியாயம் – 28

அன்று அவர்களை குட்ட மாமா வீட்டுக்கு மதிய விருந்துக்கு அழைத்திருக்க காலை உணவு முடிந்து கிளம்புவதாக இருந்தனர். ஆத்ரேயன் யோகா சென்டருக்கு சென்றிருக்க, நியதி வீட்டில் தான் இருந்தாள்.

அடுக்களையில் இருந்த ஷோபனாவிடம், “அம்மே… நான் ஏதாவது செய்யணுமா…?” எனக் கேட்க புன்னகைத்தவர்,

“இந்த புட்டும், கடலைக் கறியும் பாத்திரத்திலாக்கி மேசைல கொண்டு வைக்கு மோளே…” என்றவர் அவள் தோளில் ஆதரவாய் கை வைத்து, “குட்டன்டே வீட்டில் போகும்போல் யாராவது எதுவும் சொன்னால் மோளு விஷமிக்கண்டா, நினக்கு சரின்னு தோணுறதை அங்கே சொல்லத் தயங்கவும் வேண்டாம்…” என்றார்.

“சரி அம்மே…” அவள் தலையசைக்க, ஆதிரா குழந்தைகளுடன் அங்கே வந்தாள்.

“அச்சம்மே…” எனக் கட்டிக் கொண்ட நயனாவைப் புன்னகையுடன் தூக்கியவர், “ஆஹா, என்டே சிஞ்சு மோள் ராவிலத்தன்னே குளிச்சு சுந்தரி ஆயிட்டுண்டல்லோ…”

“ம்ம்… சிஞ்சு மோள்க்கு விஷக்குனு…”

“ஆஹாங்… இக்குட்டி வயறு விஷந்தோ, அச்சம்மா பிட்டு ஊட்டி விடட்டே…”

“செரிம்மா ஊட்டித் தந்தா மதி…” என்ற நயனா நியதிடம் தாவ, அதுவரை அவர்கள் பேசுவதைப் புன்னகையுடன் பார்த்து நின்ற நியதி, “ஆஹாங், ஞான் சிஞ்சு குட்டிக்கு ஊட்டி விடறேன்…” என, பின்னில் வந்து அவள் சேலையை இழுத்த கவின், “செரிம்மா, எனிக்கும்…” என இருவரையும் மேஜை மீது தூக்கி அமர வைத்தவள் சூடான புட்டை எடுத்து உதிர்த்து குழம்பை ஊற்றப் போக, “செரிம்மே, கடலக்கறி நானா, பஞ்சசாரா மதி…” நயனா சொல்ல புட்டில் லேசாய் சக்கரை தூவி அவர்களுக்கு ஊட்டி விட்டாள்.

“ஹா, எந்தாயாலும் பிள்ளருக்கு இப்ப செரிம்மா மதியாயது கொண்டு ஞான் ரக்ஷப்பெட்டு…” புன்னகையுடன் சொன்ன ஆதிரா, அபிநந்தன் சாப்பிட வரவும் அவனுக்குப் பிளேட் வைத்துப் பரிமாறிவிட்டு அவளும் அமர்ந்து கொண்டாள்.

“அம்மே, நிங்கள் பட்சணம் கழிச்சோ…”

“இல்ல மோளே, ஆதிக்கு வெயிட்டிங். நிங்கள் கழிச்சோளு, டைம் ஆயில்லே…” எனவும், “ம்ம்…” என்றவள் அவளுக்கும் ஒரு பிளேட் வைத்துப் பரிமாறிக் கொண்டாள்.

“அம்மே…! குட்ட மாமன்ட வீட்டிலேக்கு நிங்களும் விருந்தினு போவுனுண்டோ…” அபிநந்தன் கேட்க, “இல்ல மோனே… எனிக்கு செரியொரு காலு வேதின, இவரு போயி வரட்டே…” எனவும் அவன் முகத்தில் ஏதோ யோசனை.

“குட்ட மாமன்டே வீட்டில் அம்மாயிட (அத்தை) அம்மா வேண்டாதே எந்தெங்கிலும் பறயும்…”

“அதெல்லாம் நின்டே அனியன் நோக்கிக் கொள்ளும்…” என ஷோபனா சொல்ல, அவர்கள் சாப்பிட்டுக் கிளம்பினர். ஆத்ரேயனும் வந்துவிட இவர்களும் சாப்பிட்டு புறப்பட்டனர்.

“செரிச்சா, செரிம்மா டாட்டா…” கையசைத்த குழந்தைகளுக்கு டாட்டா சொல்லி கன்னத்தில் முத்தமிட்டு இருவரும் புல்லட்டில் அமர தடதடவென்று கிளம்பிய வண்டியில் ஜோடியாய் அமர்ந்திருந்த மகன், மருமகளை நிறைவுடன் பார்த்தார் ஷோபனா.

“ரெண்டாளுக்கும் நல்ல சேர்ச்சா (பொருத்தம்), என்ட கண்ணே படும் தோணுந்து, வந்ததும் குட்டிகள்க்கு திருஷ்டி சுற்றி இடணம்…” என நினைத்துக் கொண்டே பேரக் குழந்தைகளுடன் உள்ளே சென்றார்.

புல்லட்டை ஓட்டிக் கொண்டே கண்ணாடியை சரி செய்து பின்னில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தபடி மீசையைத் தடவிக் கொண்ட ஆத்ரேயனின் இதழ்கள் வழக்கம் போல், “மலரே நின்னே காணாதிருந்தால்…” என முணுமுணுத்தது.

அவளது முகத்தில் ஒரு மென்னகை தவழ, மனைவியைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்ட அவள் முறைத்தாள்.

“ப்ச், ஒழுங்கா பார்த்து வண்டி ஓட்டுங்க…”

“ம்ம்… பார்த்துட்டு தானே ஓட்டறேன்…” என்றவன் புருவத்தை மேலேற்றி மீசையைக் கடித்தபடி கண்ணாடியில் பார்த்துக் கேட்க அவள் தவிப்புடன் முகம் திருப்பிக் கொண்டாள். தனது செயல் அவளைத் தடுமாற வைப்பதில் குஷியாக, உற்சாகமாய் வண்டியை விரட்டினான். அரைமணி நேரப் பயணத்தில் குட்ட மாமாவின் வீடு வந்திருந்தது.

முன்னில் பெரிய முற்றமும், சுற்றிலும் பலவகை மரங்களும், கண்ணைப் பறிக்கும் பூச்செடிகளுமாய் தோட்டம் சூழ இருந்த பெரிய பழங்கால ஓட்டுவீடு அது. முன்னில் இருந்த அழகான துளசி மாடத்தில் துளசிச் செடிகள் கொழுகொழுவென்று வளர்ந்து நின்றது.

புல்லட் சத்தம் கேட்டு வெளியே வந்த குட்ட மாமாவும், அவர் மனைவியும் புன்னகையுடன் வரவேற்றனர். குட்ட மாமாவின் மகள் ஸ்ரீஜா சிறு நாணப் புன்னகையுடன் நியதியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெள்ளை வேட்டி, வெள்ளை பிளவுஸ், மேலே ஒரு வெள்ளை முண்டு அணிந்து முகத்தில் தோல் சுருங்கத் தொடங்கி இருந்தாலும், உடல் தளர்ந்திருந்தாலும் பளீர் தங்க நிறத்துடன் ஹால் சோபாவில் அமர்ந்திருந்தார் குட்ட மாமாவின் மாமியார் லக்ஷ்மியம்மா.

இப்போது சற்றே உடல் குறுகி வளைந்திருந்தாலும் ஒருகாலத்தில் நல்ல அழகியாய் இருந்திருப்பார் எனத் தோன்றியது. கண்களை இடுக்கி நியதியை உத்துப் பார்த்தார்.

“ஞங்களை அனுக்ரஹிக்கு முத்தஷி…” என்ற ஆத்ரேயன் நியதியின் கை பிடித்து அவர் காலில் விழுந்து வணங்க, வாழ்த்தி எழுப்பி விட்டார் அந்தப் பாட்டி.

“நந்தாயிரிக்கு குட்டிகளே, பகவான் எல்லா நன்மையையும், சௌபாக்கியத்தையும் தரட்டே…” என்றார்.

“வா, மோளு இவிடே இரிக்கு… சந்த்ரிகே, குட்டிகளுக்கு குடிக்கான் எந்தெங்கிலும் கொண்டு வா…” என மகளுக்கு உத்தரவிட அவர் ஹார்லிக்ஸ் கலக்கிக் கொண்டு வந்தார்.

சிறிது நேரம் பொதுவான விஷயங்களை நியதி வளர்ந்த ஆஸ்ரமம், படிப்பு எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

மதிய விருந்துக்கு இரண்டு பாயாசத்துடன் நிறைய கேரள பதார்த்தங்களும் சமைத்திருந்தார் சந்திரிகா. சைவ விரும்பியான நியதிக்கும் அந்த உணவு பிடித்திருக்க திருப்தியாகவே சாப்பிட்டு எழுந்தாள்.

“அல்ல மோளே, இவன் எங்கனே நின்னே இஷ்டப்பட்டது, நீ சுந்தரி தன்னே… எந்தாலும் இவிடயும் சுந்தரிக் குட்டிகளுக்கு குறவொண்ணும் கிடையாதே… என்டே மருமகன் நல்ல தரவாட்டிலே பைசக்கார சம்மந்தத்தை ஆதிக்கு வேண்டி கொண்டு வந்தும் இவன் வேண்டாம்னு சொல்லுற அளவுக்கு உன் கிட்ட விசேஷமா என்ன இருக்கு… சொந்தம்னு பறயான் யாருமில்ல, ஒரு நேரம் போயிக் கிடக்கான் ஒரு வீடு போலும் இல்ல, எப்படி உன்கிட்ட மயங்கிப் போனான்… நாளைக்கு ஒரு விசேஷத்துக்குப் போறதுக்குக் கூட உனக்கு பிறந்தவீடுன்னு எதுவும் இல்லியே…” கிழவி பழத்துக்குள் ஊசி ஏற்றுவது போல் சிரித்துக் கொண்டே அவளைக் கேட்க நியதிக்கு சங்கடமாய் இருந்தது.

“காரணம் ஞான் பரஞ்சால் மதியோ முத்தஷி…” ஆத்ரேயனின் குரல் கேட்க, கிழவி திரும்பிப் பார்த்தார்.

“நிங்கள் பரஞ்சது சரியானு, நியதிக்கு யாருமில்ல, வீடும், பணவும் இல்ல… அவகிட்ட ஒண்ணு மாத்திரமே உள்ளு, மனம் நிறைய சிநேஹம். எனிக்கு அது மதி… பின்ன இப்ப அவள் யாரும் இல்லாத்தவள் அல்ல, அவளுக்கு எல்லாமாயிட்டு ஞான் உண்டு, என்டே குடும்பமுண்டு… அவளைக் குறிச்சு முத்தஷி விஷமிக்கண்டா…” என்றவன் அவள் தோளில் ஆறுதலாய் கை வைத்தான்.

அதற்குமேல் எதுவும் பேசினால் சங்கடம் ஆகுமோ என்றெண்ணி சந்திரிகா குறுக்கிட்டார்.

“அம்மா, நிங்கள் வேண்டாத எந்தெங்கிலும் பரஞ்சு வர்த்தமானம் உண்டாக்காதே ஒண்ணு சும்மாதிரி… ஆதி இஷ்டப்பட்டு. கல்யாணம் கழிச்சு, இனி அதினேப் பற்றி பரஞ்சிட்டு ஒரு கார்யவும் இல்ல…”

“நின்டே அம்மைக்கு எந்தின்டே தெகனக்கேடா…? (அஜீரணம்)  ஞான் அத்தரயும் நிர்பந்திச்சிட்டானு சேச்சி இவரே நம்முட வீட்டில் விருந்தினு அயக்கான் சம்மதிச்சது… தள்ளயோடு வாயும் பூட்டி மின்டாதிரிக்கான் பறயு…” குட்ட மாமாவும் மாமியார் கேட்க மனைவியிடம் சிடுசிடுக்க லக்ஷ்மியம்மா வாயை மூடிக் கொண்டார்.

“ம்ம்… இவளு நல்ல சுந்தரி மாத்திரமல்லா, சரியான கைகாரியும் தன்னே…” என தனக்குள் முணுமுணுத்தாலும் அருகேயிருந்த நியதியின் காதில் விழுந்தது.

“பாட்டி… எனக்குன்னு சொந்த பந்தம் இல்லாதது என் தப்பா…? என்ன பாவம் பண்ணினனோ, அப்பா, அம்மாவோட துணையில்லாம ஆஸ்ரமத்து தயவுல வளர்ந்தேன்… குடும்ப உறவுகளோட நேசம் தெரியாம வளர்ந்த எனக்கு இனி நீங்கதானே எல்லா சொந்தமும்… இவரோட சொந்தங்கள் எனக்கும் சொந்தம் தானே… அப்படிப் பார்த்தா இதோ மாமா, அத்தை, ஏன் அவரோட முத்தஷி நீங்க எனிக்கும் முத்தஷி தானே…” அவள் கண்ணில் துளிர்த்த சிறு கண்ணீருடன் சொல்ல பாட்டிக்கு நெகிழ்ந்துவிட்டது.

“அச்சோ, மோளு விஷமிக்கண்டா, நான் வெறுதே சோதிச்சதானு… உன் பேச்சில் இருக்கும் அமைதியும், நியாயமும் உன் மனசு எப்படின்னு அழகா சொல்லுது… கெட்டியவன் (புருஷன்) குடும்பத்தையும், உறவையும் தன்னோட குடும்பம், உறவுன்னு சொல்லும்போதே உன் மனசு எவ்ளோ உயர்ந்ததுன்னு புரியுது… நீ ஷோபனாவுக்கு பற்றிய மருமகள் தன்னே, நந்தாயி வரும் மோளே…” என்றார் அவள் கை பிடித்து மனதார.

அங்கிருந்து கிளம்புகையில் நியதியின் மீது அவர்களுக்கு உண்மையான அன்பும், மரியாதையும் வந்திருந்தது. மாலை வீட்டுக்குச் சென்றதும் மருமகளிடம் ஷோபனா விசாரிக்க நியதி அவர்களை உயர்வாய் சொல்ல ஆத்ரேயன் முத்தஷி கேட்டதை அம்மாவிடம் சொன்னான்.

Advertisement