Advertisement

 அத்தியாயம் – 27

மதிய உணவு முடிந்து ஆத்ரேயனும் நியதியும் மூணாருக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். தயாராகி விடை பெற வந்தவளின் கையைப் பிடித்துக் கொண்ட சாவித்திரி நெகிழ்வுடன் அவளைப் பார்த்தார்.

இருவரையும் வாழ்த்தி விடை கொடுத்தவர் அவர்கள் ஜோடியாய் செல்வதைக் கண்டு கண் கலங்கினாலும் அந்த முதியவரின் மனம் நிறைந்திருந்தது.

மன நிறைவுடன் மகன் அபிமன்யுவிடம் பேசினார்.

“அபி…! நியதியோட இந்த புது வாழ்க்கை உனக்கு நிச்சயம் சந்தோஷத்தைக் கொடுக்கும்னு எனக்குத் தெரியும். என்னதான் உன்னோட கடைசி நிமிடத்துல உனக்கு வாக்குக் கொடுத்திட்டதா பொய் சொல்லி அவளைக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சாலும் ஆதியை மனசார ஏத்துக்கணுமேன்னு கவலை இருந்துச்சு, அது இப்பத் தீர்ந்திடுச்சு. நியதி மனசுல ஆத்ரேயன் இருக்கான்னு அவளோட நடவடிக்கைல புரிஞ்சிடுச்சு. இனி அவ வாழ்க்கை சந்தோஷமா இருக்கும். நானும் நிம்மதியா உன்கிட்ட வந்து சேர்ந்திடுவேன்…” பனித்த கண்களைத் துடைத்துக் கொண்டு மனதுக்குள் சொன்னார்.

“பார்த்து பத்திரமாப் போயிட்டு வாங்க தம்பி, வானம் வேற கருத்துக் கிடக்கு, எப்ப வேணாலும் மழை வரலாம்…” நளினி வானத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னார்.

“ம்ம்… சரி ஆன்ட்டி, ஞங்கள் இறங்கட்டே… அங்கிள், நவீன் போயிட்டு வராம்…”

“ம்ம்… சரிப்பா, வீடு போனதும் போன் பண்ணுங்க…” சந்தானம் சொல்ல தலையாட்டியவன் அவரிடம் வந்து ஒரு கவரைக் கொடுத்தான்.

“அட…! என்ன தம்பி, எதுக்கு இதெல்லாம்…” சந்தானம் மறுக்க அவர் கையில் பணக்கவரைத் திணித்தவன், “இருக்கட்டும் அங்கிள்…” என்றபடி காரில் ஏறினான்.

கைப்பையை எடுத்துக் கொண்டு, அவன் சந்தானத்திடம் கவர் ஏதோ கொடுப்பதைப் பார்த்தபடி வந்த நியதியும் அவன் அருகே ஏறி அமர்ந்து கொண்டாள். வண்டியைக் கிளப்பும்போதே மழைத் துளி சடசடவென்று ஒன்றிரண்டு பூமியில் விழ வழியனுப்ப நின்ற மூவரும் ஓரமாய் ஒதுங்கிக் கொண்டு கையசைத்து விடை கொடுத்தனர்.

“சித்தப்பா கிட்ட என்னவோ கவர் கொடுத்திங்க…?”

“ம்ம்…”

“என்ன கவர்…?” அவள் என்னவோ என நினைத்து அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்க அவன் புன்னகைத்தான்.

“அது… கண்டிப்பா தெரிஞ்சுக்கணுமா…?”

“ப்ச்… என்னன்னு சொல்லுங்க ஆதி…”

“அது, ஒரு லவ் லெட்டர்…” அவளை நோக்கி கண்ணடித்துச் சிரித்தவனை கோபமாய் விழிகள் அகல முறைத்தாள் நியதி.

“ஷ்ஷப்பா, எந்து கண்ணானு மோளே…” அவன் ரசனையோடு அவளை நோக்கிப் புருவம் தூக்கி சொல்லவும் அவள் முகம் சட்டென்று வெட்கத்தில் சிவந்து போனது.

“மலர் டீச்சர் தேஷ்யப்படும்போ சுந்தரியானு…”

அவன் சொல்லவும் இதழில் மலர்ந்த புன்னகையை வெளிக் காட்டாமல் விழுங்க முயன்று முகத்தைத் திருப்பினாள்.

“அந்தக் கவரில் குறச்சு பணம் உண்டாயிருந்து…” என்றவனை திகைப்புடன் நிமிர்ந்து பார்த்தாள் நியதி.

“பணமா…?”

“ம்ம்… அவங்களுக்கு ஆவஸ்யம் உண்டாவும்…” அவனே சொல்ல, அவள் மேலே எதுவும் கேட்காவிட்டாலும் மனது நிறைவாய் உணர்ந்தது. மிதமான சாரலாய் தொடங்கிய மழை மெல்ல வலுக்கத் தொடங்கியிருக்க மெதுவாகவே காரை ஓட்டிச் சென்றான் ஆத்ரேயன். பொள்ளாச்சியிலிருந்து உடுமலையை அடையும்போது வானம் பயங்கரமாய் இருண்டு மழை வலுத்திருந்தது. மழை அடித்து ஊற்றவே யோசனையுடன் நியதியைப் பார்த்தவன், “முத்தே…! நமக்கு எவிடேங்கிலும் ஒரு சாயா குடிச்சிட்டுப் போயாலோ, அப்பலேக்கும் மழையும் குறச்சு குறையும்…” என சம்மதமாய் தலையாட்டினாள் நியதி.

ஹோட்டல் ஒன்றின் பார்க்கிங்கில் காரை நுழைத்தவன்  இறங்க நியதியும் இறங்கினாள்.

“பாத்ரூம் போகனோ, இனி வழியில் நிறுத்தான் பற்றில்லா..”

மழையின் குளிரில் அவளுக்கும் அவசியமாய் இருக்க, “ம்ம்…” என்றவள் ‘லேடீஸ்’ என எழுதி இருந்த கதவைத் திறந்து உள்ளே செல்ல ஆத்ரேயனும் ‘ஜென்ட்ஸ்’ டாய்லட் நோக்கிச் சென்றான்.

முதலில் வெளியே வந்தவன் நியதி வரும் வரை அங்கேயே காத்திருந்து அவளை அழைத்துச் சென்றான்.

அவனுக்கு சாயாவும், அவளுக்கு காபியும் உடன் சூடான வெங்காயப் பக்கோடாவும் சேர்த்து சாப்பிட்டு எழுந்தனர். கை கழுவிவிட்டு நியதி டவலில் கை துடைக்க அதைப் பறித்து அவன் இயல்பாய் கை, வாயைத் துடைத்துவிட்டுக் கொடுக்க அவளுக்குள் சிறு வெட்கமும் திகைப்பும் நிறைய எதுவும் சொல்லாமல் அவனைத் தொடர்ந்தாள்.

மழை கொஞ்சமே கொஞ்சம் வேகத்தைக் குறைத்திருக்க வானம் அதே மப்புடன் இருண்டு கிடந்தது. இருவரும் காரில் ஏற கிளப்பினான் ஆத்ரேயன்.

உடுமலையிலிருந்து மறையூரை நோக்கி வண்டி செல்ல மழை வலு குறைந்து சன்னமாய் தூறல் போடத் தொடங்கியது. சின்னார் காட்டுப் பகுதியில் நுழைகையில் வெளிச்சம் குறையத் தொடங்கியிருக்க மழையில் மகிழ்ந்த மயில் ஒன்று தோகை விரித்து சாலை ஓரமாய் நடை போட்டுக் கொண்டிருக்க அதைக் கண்ட ஆத்ரேயன் வண்டி வேகத்தைக் குறைத்து, “முத்தே…! அது நோக்கு…” எனவும் கண்டவள் விழிகள் வியப்பில் பெரிதாய் விரிந்தன.

ரசனையுடன் மலர்ந்த அவள் விழிகளை அதை விட ரசனையுடன் பார்த்திருந்தான் ஆத்ரேயன். அவள் மயிலை ரசிக்க ஓரக்கண்ணால் அவளை ரசித்தபடி வண்டியை நிறுத்த சட்டென்று குரங்கு ஒன்று மரத்திலிருந்து அவர்கள் வண்டியின் மீது தாவி அமர, பயந்து போன நியதி வேகமாய் ஆதியின் மீது ஒட்டிக் கொண்டாள்.

“ஹேய், பேடிக்கண்டா… அது ஒண்ணும் செய்யாது…” என்றவன் அந்த வாய்ப்பை நழுவ விடாமல் அவளைத் தோளோடு கையிட்டு அணைத்துப் பிடிக்க அதை உணர்ந்தாலும் மறுக்காமலே இருந்தாள் நியதி.

குரங்கு அங்கிருந்து சென்றுவிட, வண்டியை எடுக்கவும் மான் கூட்டம் ஒன்று சற்றுத் தள்ளி புல்வெளியில் நிற்பதைக் கண்ட ஆத்ரேயன் அவளுக்குக் காண்பித்தான்.

அவளும் மானைக் காணும் உற்சாகத்தில் அவனை மிக நெருங்கி அமர்ந்து வெளியே எட்டிப் பார்க்க, அந்த நெருக்கம் அவனைத் தடுமாறச் செய்ய சட்டென்று அவள் பட்டுக் கன்னத்தில் இதழ் பதித்தான் ஆத்ரேயன்.

ஜிவ்வென்று நரம்புகளில் பாய்ந்த புது உணர்ச்சிப் பெருக்கில் வெலவெலத்து சட்டென்று அவனை விட்டு விலகியவளின் தவிப்பும், சிவந்த முகத்துடன் தலை குனிந்து அமர்ந்திருந்ததும் கண்டு அவள் அதை விரும்பவில்லையோ என அவனுக்கு கஷ்டமாய் இருந்தது.

“ச..சாரி முத்தே…! நின்டே இஷ்டம் நோக்காதே ந..நான் அங்கனே செய்திரிக்கான் பாடில்ல, ஐ ஆம் சாரி…!” எனவும் அவளுக்குக் கோபம் வந்துவிட்டது. எதுவும் பேசாமல் அவள் முறைக்க அவன் தயக்கத்துடன் வண்டியைக் கிளப்பினான்.

எங்கும் இருள் சூழத் தொடங்கியிருக்க குனிந்து அமர்ந்து நகத்தை அளவெடுத்துக் கொண்டிருந்த நியதி சிறிது நேரத்தில் மீண்டும் வண்டி நிற்கவும், “இப்ப எதுக்கு வண்டியை நிறுத்தறிங்க…” என எரிச்சலுடன் அவனை ஏறிட, அவன் முன்னே நோக்குமாறு பார்வையில் சொன்னான்.

திரும்பி வழியில் பார்வையைப் பதித்தவள் விழிகள் பயத்திலும், அதிர்ச்சியிலும் விரிய தொண்டைக் குழிகள் பயத்தில் ஏறி இறங்க வேகமாய் ஆத்ரேயனை ஒட்டியபடி அமர்ந்து கொண்டாள்.

“அ..அய்யோ, யானை…!” என்றவள் பயத்துடன், அவன் கைகளுக்குள் முகத்தை மறைக்க ஹெட் லைட்டை அணைக்காமல் பிரைட் ஆக்கினான் ஆத்ரேயன்.

வண்டிக்கு முன்னால் சற்றுத் தள்ளி சாலையில் பெரிய கரும் பாறை உருண்டு சாலைக்கு வந்தது போல் நின்று கொண்டிருந்தது காட்டானை ஒன்று.

“அ..ஆதி, ஒத்த யானை ஆபத்தாச்சே, எனக்கு பயமாருக்கு…”

பயத்தில் ஆத்ரேயனை இறுகப் பற்றிக் கொண்ட நியதியின் இதழ்கள் பயத்தில் படபடக்க அவளை மெல்ல அணைத்துக் கொண்டவன், “பேடிக்கண்ட முத்தே, கண்ணை இறுக மூடி உக்கார்ந்துக்க…” எனவும் அவள் கண்ணை மூடி “முருகா, முருகா…” என சொல்லத் தொடங்க இவர்களுக்குப் பின்னில் வேறு ஒரு காரும் வந்து நிற்க, ஹாரன் அடிக்கப் போனவரை காரிலிருந்து ஜன்னல் வழியே சைகை காட்டி விஷயத்தை சொன்னான் ஆத்ரேயன்.

நியதியின் மனம் ஏதேதோ எண்ணித் தவிக்கத் தொடங்க கைகள் இறுக்கமாய் ஆத்ரேயனைப் பற்றிக் கொண்டது. ஆதூரத்துடன் அதைப் பார்த்தவனின் விழிகள், அவள் கையை ஆறுதலாய்ப் பற்றிக் கொள்ள அவளும் அவனது விரல்களில் தனது விரல்களைக் கோர்த்து இறுக்கிக் கொண்டாள். பத்து நிமிடங்களுக்கு மேல் அவர்களைத் தவிக்க விட்டு மெல்ல அங்கிருந்து காட்டை நோக்கி நகர்ந்தது யானை.

“முத்தே…! ஆனை போயிருச்சு…” அவன் அவளது காதில் கிசுகிசுக்க கண்ணைத் திறந்தவள், “போயிடுச்சா…” எனக் கையை உருவிக் கொள்ளப் போக, விடாமல் அவளது கையைப் பற்றிக் கொண்டவன், “ப்ளீஸ், இப்படியே இரேன்…” என ஆசையுடன் அவளது கையை நெஞ்சில் வைத்து அமர்த்திக் கொள்ள அவளுக்கு சிலிர்த்தது.

அவளுக்கும் அந்த நிலையிலிருந்து விலக மனமின்றி அவன் தோளில் அமைதியாய் தலையை சாய்த்துக் கொண்டாள். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் அந்த இனிய மனநிலையிலேயே மூணாரை அடைந்தனர். ஆத்ரேயனின் அருகாமையும், அன்பும், அவ்வப்போது உரிமையுடன் வெளிப்படும் காதலும் அபியின் நினைவை அவளில் இருந்து விலக்க ஆதி மனதில் நிறையத் தொடங்கியிருந்தான்.

அவர்களுக்காய் ஷோபனா வாசலிலேயே காத்திருந்தார்.

“என்டே குருவாயூரப்பா…! நல்லபடி பிள்ளைங்க வீட்டில் எத்தியல்லோ, எனிக்கு சமாதானமாயி…” என கடவுளுக்கு நன்றி சொன்னபடி அவர்களை வரவேற்றார்.

“ஹோ, எந்தொரு மழை…? வழில புத்திமுட்டியோ மோளே…”

“குறச்சு புத்திமுட்டு தான், ஆதி மேனேஜ் பண்ணிகிட்டார். வழியில் ஒரு காட்டானை பயமுறுத்திருச்சு மா…” அவள் சொல்ல ஷோபனாவும் பயந்து போனார்.

“எடா ஆதி, இம்மாதிரி மழையில் இவளையும் கூட்டி வரும்போ, நிங்கள்க்கு குறச்சு நேரமே அவிடேந்து இறங்கிக் கூடாயிருந்தோ, பாவம் மோளு பேடிச்சில்லே…” என்றபடி அவளது கையை ஆறுதலாய்ப் பற்றிக் கொள்ள ஆதி புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.

“ஓ… சில சமயம் பேடி நல்லதா, அல்லே மோளே…?” புருவம் உயர்த்தி கிண்டலாய் சொன்னவன் அன்னை காணாமல் கண்ணடிக்க அவள் நாணத்துடன் குனிந்து கொண்டாள்.

“ரெண்டாளும் வேகம் பிரஷ் ஆகிட்டு வா, பட்சணம் எடுத்து வைக்காம்…”

“குட்டிகளும், ஏட்டனும் எவிடயானு அம்மே…?”

“மழையல்லே, எல்லாரும் நேரத்தே பட்சணம் கழிச்சு கிடக்கான் போயி…” சொல்லிக் கொண்டே அவர் அடுக்களைக்கு செல்ல நியதியின் கையிலிருந்த லக்கேஜை வாங்கிக் கொண்டு மாடி ஏறினான் ஆத்ரேயன். டவலை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தவன் தொடை தெரியும் ஷாட்சும், கையில்லாத முண்டா பனியனும் அணிந்து கொண்டு வெளியே வர அதைக் கண்ட நியதியின் முகம் கடுப்பானது.

Advertisement