Advertisement

“ஒண்ணுமில்ல அண்ணி, இதோ வரேன்…” என்ற நளினி,

“தம்பி, நியதிய ரூமுக்கு அழைச்சிட்டுப் போங்க…” எனவும் ஆத்ரேயன் அவளை எழுப்பிக் கூட்டிக் கொண்டு அந்த குட்டி அறைக்கு அழைத்துச் சென்றான்.

இருவரும் கட்டிலில் அமர, தான் நடந்து கொண்டதை நினைத்து நியதிக்கு வெட்கமாய் இருக்க தலை குனிந்தபடி நகத்தை ஆராய்ச்சி செய்திருந்தாள். ஆத்ரேயன் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவளுக்கு கூச்சமாய் இருந்தது.

எதுவும் சொல்லாமல் அவளது கையைப் பற்றியவன், “முத்தே…! தேங்க்ஸ்டி சக்கரே…” என்றவன் சட்டென்று அவள் நெற்றியில் முத்தமிட எதுவும் விளங்காமல் அந்த முத்தத்தில் திகைத்து அவனைக் குழப்பத்துடன் ஏறிட்டாள். ஆத்ரேயனின் முகம் நெகிழ்ந்து கண்களில் காதல் வழிந்தது.

“ஞான் வளரே ஹாப்பி, நீ குறச்சு ரெஸ்ட் எடுக்கு…” சொன்னவன் முகம் மலர எழுந்து வெளியே செல்ல நியதிக்கு அப்போதும் ஒன்றும் புரியவில்லை.

“நான் பண்ணின விஷயத்துக்கு கிண்டல் பண்ணுவான்னு நினைச்சா இவன் எதுக்கு எனக்கு முத்தம் கொடுத்தான்…?” அவள் யோசித்திருக்க நளினி புன்னகையுடன் வந்தார்.

“அம்மாடி, இப்ப உன் பயம் தெளிஞ்சிருச்சா…?” என்றவர் அவளருகே வந்து அன்புடன் தலையைக் கோத நியதி கூச்சத்துடன் குனிந்திருந்தாள்.

“ம்ம்…”

“இப்பதான் எங்க எல்லாருக்கும் சந்தோஷமா இருக்கு கண்ணு… இந்த புது வாழ்க்கையை எப்படி ஏத்துக்கப் போறியோ, ஆதி தம்பியை மனசார எப்ப ஏத்துக்கப் போறியோன்னு அண்ணிக்கு ரொம்ப கவலையா இருந்துச்சு… இப்ப அது போயிருச்சு…” எனவும் அவள் முழித்தாள்.

“சரி சாப்பிட வா கண்ணு…” என அழைக்க எழுந்து வந்தாள்.

“நீயும் மாப்பிள்ள பக்கத்துல உக்காரு நியதி மா…” நளினி சொல்ல கூச்சத்துடன் ஆத்ரேயன் அருகே அமர்ந்தாள். நவீனும், ஆத்ரேயனின் அருகே அமர்ந்திருக்க அவர்களுக்கு தலைவாழை இலை போட்டு உணவுகளைப் பரிமாறினார் நளினி. சந்தானம் இலையில் உப்பை வைக்க அடுத்து கேசரியைப் பரிமாறினார் நளினி.

அடுத்து சாதத்துடன் சமைத்து வைத்திருந்த பதார்த்தங்களை இலையில் பரிமாறியவர், “இனிப்பை எடுத்து தம்பிக்கு ஊட்டி விடு மா நியதி…” எனக் கூற அவள் கூச்சத்துடன் அவனைப் பார்த்துவிட்டுக் குனிந்து கொள்ள ஆத்ரேயன் கேசரியை எடுத்து அவள் வாய்க்குக் கொண்டு செல்ல நாணத்துடன் வாங்கிக் கொண்டவள் அவனுக்கும் ஊட்டி விட்டாள். அவன் வேண்டுமென்றே அவள் விரலை அழுத்தமாய் உதட்டில் பற்றி மெல்லக் கடிக்க சட்டென்று நிமிர்ந்தவளை நோக்கி கண்ணடிக்க அவள் முகம் நாணத்தில் சிவந்து போனது.

“என்னாச்சு இவருக்கு, ஓவரா வம்பு பண்ணறாங்க…” நியதி யோசிக்க திருப்தியாய் சாப்பிட்டு எழுந்தனர்.

சாப்பிட்டு எழுந்த நியதி, “சித்தி… அத்தைக்கு நான் சாப்பாடு கொடுக்கிறேன்…” என்றவள் ஒரு தட்டில் சாவித்திரிக்கு வேண்டிய உணவை எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றாள்.

அவரை சாய்வாய் அமர வைத்து அவளே ஊட்டி விட்டாள்.

“நீ நல்லா சாப்பிட்டியா மா, ஆதி சாப்பிட்டாச்சா…?”

“ம்ம்… சாப்பிட்டோம் அத்தை…”

சாவித்திரி அசைவம் சாப்பிடுவதில்லை என்பதால் அவருக்கு பருப்பு சாதத்தில் பிசைந்து ஒரு பொரியலுடன் கொடுத்தாள்.

“மனசுக்கு ரொம்ப சந்தோஷமாருக்கு, என் பிரார்த்தனை வீண் போகலை…” சட்டென்று அவர் சொல்ல, நியதி யோசனையாய் ஏறிட்டாள்.

“என்னதான் நாங்க வற்புறுத்தி உன்னைக் கல்யாணம் பண்ணி வச்சாலும் உனக்கும் ஆத்ரேயனைப் பிடிக்கணுமே. அதைத் தான் சொல்லறேன், இப்ப நிம்மதியாருக்கு. வாழ்க்கை எப்ப யாருக்கு எதை வச்சிருக்கோ, சொல்ல முடியாது. இருக்கற வரைக்கும் நல்லபடியா சந்தோஷமா வாழணும், நான் சொல்லுறது சரிதானே…”

“ம்ம்…”

“நளினி சொன்னா, ஆதி கால்ல ஓலை குத்தினதுக்கு பாம்பு கடிச்சிருச்சுன்னு நீ மயக்கம் போட்டு விழுந்துட்டியாமே… ஹஹா, நானும் இப்படி தான் கல்யாணமான புதுசுல உங்க மாமா கண்ணுல தூசு விழுந்தா கூடத் துடிச்சுப் போயிருவேன், புருஷன் மேல உசுரா இருக்கிற எல்லாப் பொண்ணும் இப்படித்தான் இருப்பா. அதுக்கு தான் அந்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லறேன்…” அவர் விளக்கமாய் சொல்லவும் நியதிக்கு விளங்கியதோடு வெட்கமாய் வந்தது. அந்த வெட்கம் முதியவளுக்கு நிம்மதியைக் கொடுத்தது.

“ச்சே… நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன், எல்லாரும் என்ன நினைச்சிருப்பாங்க… அதான், ஆதி தேங்க்ஸ்டி சக்கரே, வெல்லமேன்னு கொஞ்சினாரா…? நான் எப்படி எல்லார் முகத்தையும் பார்க்கிறது…?” மனதுக்குள் தன்னைத் திட்டிக் கொண்டாள். அவர் சாப்பிட்டு முடிக்க, ஓய்வெடுக்க சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.

நவீனும், ஆத்ரேயனும் நான்கு மணிக்கு காபி குடித்துக் கிளம்பியவர்கள் இரவு உணவு வெளியே சாப்பிடுவதாக சொல்லி இருந்ததால் இவர்கள் நேரமே சாப்பிட்டு வேலையை முடிக்க அசதியில் பெரியவர்கள் சீக்கிரமே உறங்க செல்ல பத்து மணிக்கு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பியதும் டீவி முன் அமர்ந்து கொள்ள தமிழ் பாடல் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.

அவள் முகம் பார்த்து

நானின்று தடுமாறினேன்…

நிழல் தொட வேர்த்து

உயிர் கொண்ட சிலையாகிறேன்…

பாடல் நன்றாய் இருக்கவே அங்கே நின்ற நியதி டீவியைப் பார்த்துவிட்டு எதார்த்தமாய் ஆத்ரேயனைப் பார்க்க அவன் இவளையே கண்ணில் காதல் வழியப் பார்த்துக் கொண்டிருந்தான். அதைக் கண்டதும் ஜிவ்வென்று ஒரு உணர்வு அவளது தலைக்கேற சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டவள், அதற்குமேல் அங்கு நிற்காமல் அவளது அறைக்கு சென்று அமர்ந்து கொண்டாள்.

“ச்சே… என்னாச்சு இந்த ஆதிக்கு, இன்னைக்கு பேச்சும் பார்வையும் எல்லாம் ஒரு மாதிரியா இருக்கு…” அவள் யோசித்துக் கொண்டிருக்க ஆத்ரேயன் தலையைக் குனிந்து கொண்டு அந்த குட்டி அறைக்குள் வந்தான். அவனிடம் ஒரு தடுமாற்றம் இருக்க கண்கள் லேசாய் சிவந்திருந்தது. அருகே வந்தவனிடம் ஒரு வித்தியாசமான புளிச்ச வாசம் வீச முகத்தை சுளித்தாள் நியதி.

“மு..த்தே…! ட..டவல் எடுத்து கொண்டா…” என்றவன் அவள் நீட்டிய டவலை வாங்கிக் கொண்டு பின் பக்கம் சென்றான்.

“ஏன் ஆதி ஒரு மாதிரி இருக்கார்…” யோசித்தவள் எழுந்து வெளியே வர நவீன் அமர்ந்திருந்தான்.

“நவீன்… ரெண்டு பேரும் இவ்ளோ நேரம் எங்க போனீங்க…?”

“அ..அது வந்து அண்ணி, பிரண்டு தோப்புல கள் இறக்கறதா சொல்லிக் கூப்பிட்டான், அ..தான் அங்க போயிட்டு…” என்ற அவன்மீதும் அதே புளிச்ச வாசம் வீசியது.

“ஆதியும் கள்ளு குடிச்சாரா…?”

“அது..வந்து…”

“சொல்லு நவீன்…” பெரியவர்களுக்கு கேட்க வேண்டாமென்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டாள் நியதி.

“ஏட்டா இன்னிக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கேன்னு சொன்னார், அதான் ஒரு ஜாலிக்கு சும்மா கொஞ்சமாதான் அண்ணி…” என்றான் நவீன் குற்ற உணர்வுடன்.

நியதி எதுவும் சொல்லாமல் கோபத்துடன் அறைக்குள் சென்று விட்டாள்.

“அதான் வந்ததுல இருந்து எதுவும் பேசாம சிரிச்சுட்டே ஹால்ல உக்கார்ந்துட்டாரா…? வந்த இடத்துல எதுக்கு இந்த புதுப் பழக்கம்? இது அவங்க வீட்டுல தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படுவாங்க…” அவள் வருத்தமாய் யோசிக்க, ‘மலரே நின்னே காணாதிருந்தால்…’ என விசிலடித்தபடி தலையைத் துவட்டிக் கொண்டே அறைக்குள் வந்தான் ஆத்ரேயன்.

வந்தவனின் கண்கள் குளித்ததில் மேலும் சிவந்திருக்க இவளைப் பார்த்து கண் சிமிட்டிச் சிரித்தான்.

அழகே…!

அழகில் தீர்த்தொரு சிலையழகே…

மலரே…!

என்னுயிரில் விடரும் பனி மலரே…

இவளை நோக்கிக் கை நீட்டிப் பாடியவன் அருகே வந்து தலையை சிலுப்ப அவள் மீது தெளித்த நீர்த்துளிகள் ஜில்லென்று உடலைத் துளைத்தது.

வெறும் ஷாட்ஸ் அணிந்து மார்பில் டவலுடன் வந்தவன் தலையைத் துடைக்காமல் அப்படியே கட்டிலில் விழுந்தான். அந்த குட்டி மரக்கட்டில் அவன் விழுந்த வேகம் தாளாமல் லேசாய் குலுங்கியது. தலையில் ஈரம் அப்படியே இருக்க வருத்தமும், கோபமுமாய் அவனைப் பார்த்தவள், கதவைத் தாளிட்டு வந்தாள்.

“ஆதி…! என்ன நினைச்சிட்டு இப்படிலாம் பண்ணறீங்க, அத்த பார்த்தா என்ன நினைப்பாங்க… முதல்ல எழுந்து உக்காருங்க, இந்நேரத்துல தலைக்குக் குளிச்சிட்டு துவட்டாம அப்படியே படுத்திருக்கிங்க…” மெல்லிய குரலில் திட்டினாள்.

“முத்தே… வா, உறங்காம்…” அவன் அவளைப் பிடித்து அருகே இழுக்க முயல கையை விலக்கியவள் அவனைப் பிடித்து அமர வைத்தாள். நின்றபடி அவன் தலையைத் துவட்ட முயல தடுமாறியவன் சட்டென்று அவள் இடுப்பைப் பிடிக்க எதிர்பாராத அந்த ஸ்பரிசத்தில் அதுவும் கூச்சம் மிகுந்த இடையில் அவன் கை படவும் சட்டென்று அவள் உடல் சிலிர்க்க தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

அவன் சிறுபிள்ளை போல் அவள் இடுப்பை இரு கையாலும் வளைத்துக் கட்டிக் கொள்ள அவள்தான் அவஸ்தைப்பட்டுப் போனாள். ஒருவிதமாய் சமாளித்து அவன் தலையைத் துவட்டி படுக்க வைத்தாள். அவன் உடனே உறங்கத் தொடங்க கணவன் முகத்தைப் பார்த்தபடியே சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டாள்.

மனம் ஒரு புதுவித உணர்வில் தவித்துக் கொண்டிருந்தது.

உறங்கிக் கொண்டிருந்தவன் சட்டென்று காலை அவள் மீது தூக்கிப் போட்டு கையை அவள் இடுப்பில் போட்டு அருகே இழுக்க அவனது வெற்று மார்பில் இருந்து வீசிய சிந்தால் சோப்பின் மணம் அவள் நாசியை உரசியது. உறக்கத்தில் அவனது கை அவளை இழுத்து நெஞ்சில் போட்டுக் கொள்ள திகைத்துப் போனவள் ஒருவித இன்ப அவஸ்தையில் விலகவும் தோன்றாமல் அவன் கை வளைவுக்குள் அப்படியே படுத்திருந்தாள். அவனது ஆண்மையின் மனம் மனதைக் கிளர்ச்சியடையச் செய்ய அசையாமல் படுத்திருந்தவள் சிறிது நேரத்தில் உறங்கவும் செய்தாள்.

காலையில் நேரமே கண் விழித்தவள் அப்போதும் அவனது அணைப்புக்குள் இருக்கக் கண்டு வெட்கத்துடன் எழுந்தாள்.

மனதில் துளையிட்டு

என் அடி நெஞ்சில்

ஆட்சி புரிகிறாய்

நான் அறியாமலே…

எதையிட்டு மறைத்தாலும்

நேசத்தின் வாசத்தை

மறைத்திட முடியாது…

எனக்குள் வாசமாய் நிறைகிறாய்

உனக்குள் வசமாகிறேன் நான்…

Advertisement