Advertisement

அத்தியாயம் – 26

பொள்ளாச்சி.

அடுக்களையிலிருந்து கோழி, மசாலாவில் கொதிக்கும் மணமும், மீன் வறுவல் தயாராகிக் கொண்டிக்கும் மணமும் கம்பீரமாய் வீட்டை நிறைத்திருக்க சாவித்திரியின் அருகே பேசிக்கொண்டு அமர்ந்திருந்தாள் நியதி.

ஆத்ரேயன் சாவித்திரியின் தம்பி மகன் நவீனுடன் வாய்க்காலில் குளிக்கச் சென்றிருந்தான். விடியலில் கிளம்பி பொள்ளாச்சி வந்தவர்களை ஆலம் சுற்றி உள்ளே வரவேற்க சாவித்திரியின் காலைத் தொட்டு இருவரும் வணங்கி எழுந்தனர். மனதோடு கண்களும் நெகிழ வாழ்த்தினார் சாவித்திரி. இருவருக்கும் சம்பிரதாயத்திற்கு பால், பழம் கொடுத்து புத்தாடைகள் பரிசாகக் கொடுத்தனர்.

சாவித்திரியின் கை பிடித்து நலம் விசாரித்த ஆத்ரேயனைக் கனிவுடன் பார்த்தவருக்கு மனம் நிறைந்திருந்தது.

“ஏட்டா, வர்றிங்களா..? வாய்க்கால்ல குளிச்சிட்டு வரலாம்…” விடுமுறை எடுத்து வந்திருந்த சாவித்திரியின் தம்பி மகன் கேட்க உற்சாகமாய் தலையசைத்த ஆத்ரேயன் டவலை எடுத்துக் கொண்டு அவனுடன் நடந்தான்.

“அத்த…! இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு..? முன்னேற்றம் இருக்கா…? கொஞ்சம் எழுந்து உக்கார முடியுதுன்னு சித்தி சொன்னாங்க…”

“ம்ம். ஆமா கண்ணு… என்னை விடு, நீ சந்தோஷமா இருக்கியா…? ஆதி வீட்டுல உன்கிட்ட எல்லாரும் அன்பாப் பழகறாங்களா, நல்ல மனுஷங்க தானே…?”

“ம்ம்… எல்லாருமே ரொம்ப நல்லவங்க, ஆதி அம்மாவும் உங்களைப் போல என் மேல பாசமா இருக்காங்க, ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப அன்பா இருப்பாங்க… எனக்கு அவங்க எல்லாரையும் பிடிச்சிருக்கு அத்தை…” மனதில் நெகிழ்வுடன் சொன்னாள் நியதி.

“ம்ம்… அவங்க எல்லாரையும் பிடிக்கிறது நல்ல விஷயம் தான், ஆனா அதைவிட முக்கியமா ஆதியைப் பிடிக்கணும். பிடிச்சிருக்கு தானே…?” அவரது கேள்விக்கு பதில் சொல்லத் திகைத்தவள் குனிந்து அமர்ந்திருக்க தனது நரம்பு தெரியும் சுருங்கிய கையால் அவள் கையைப் பற்றினார் சாவித்திரி.

“நியதி மா… ஏன் தயங்கற…? உனக்கு ஆதியைப் பிடிச்சிருக்கு தானே…?” அவர் மீண்டும் கேட்க குனிந்தபடியே ஆமென்று தலையாட்டினாள் நியதி.

“அதை சொல்ல எதுக்குத் தயக்கம்…? கடவுள் ரொம்ப கருணையானவர். உன் வாழ்க்கைல ஒரு வாசலை மூடினாலும் இன்னொரு வாசலைத் திறந்திருக்கான். அதை நீ மறுத்திடாம ஏத்துகிட்டு நல்லபடியா வாழறது தான் புத்திசாலித்தனம். உன்னோட தயக்கம் எல்லாம் ஒதுக்கிட்டு ஆதியோட மனசறிஞ்சு, முழுமையா ஏத்துகிட்டு மனசார வாழத் தொடங்கு… நான் சாகறதுக்குள்ள என் பேரனையோ, பேத்தியையோ பார்க்..கணும்…” உணர்ச்சி வசப்பட்டதில் மூச்சு வாங்கினார் சாவித்திரி.

அதற்குள் அடுக்களையிலிருந்து வந்த அவரது தம்பி மனைவி நளினி, “நியதி, அண்ணிக்கு கொஞ்சம் சுடுதண்ணி குடுமா…” என ஒரு டம்ப்ளரில் தண்ணீரை நீட்ட வாங்கிக் குடிக்க வைத்தாள் நியதி.

“குளிக்கப் போனவங்களை இவ்ளோ நேரமாக் காணமே, சமையல் ரெடியாகிருச்சு… அண்ணி நீங்க சாப்பிடறீங்களா…?”

“இல்ல மா, இவங்க முதல்ல சாப்பிடட்டும்…”

“ம்ம்… இந்த மனுஷன் வெத்தல பாக்கு வாங்கிட்டு வரேன்னு போனார், இன்னும் காணோம்… குளிக்கப் போனவங்களைக் கூட்டிட்டு வந்தாப் பரவால்ல…”

“நான் போயி கூட்டிட்டு வரேன் சித்தி…”

“நீ தனியா போவியா…?”

“அதுக்கென்ன, இங்கிருக்குற வாய்க்கால் தானே…” எழுந்தாள்.

“பார்த்துப் போயிட்டு வா மா…” சொன்ன நளினி அடுக்களைக்கு செல்ல, “இப்ப வந்திடறேன் அத்த…” என்ற நியதி எழுந்து பின் பக்கம் இருந்த தென்னந்தோப்பை நோக்கி நடந்தாள். அதற்குப் பின்னால் இருந்த வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் விதத்தில் தான் வாய்க்கால் இருந்தது.

மதிய நேரத்திலும் குளுகுளுவென்று இருந்த காலநிலையை ரசித்தவாறே நடந்தவள் காதில் ஏதோ சரசரவென்று சத்தம் கேட்டது. நின்று சுற்றிலும் பார்க்க ஒரு இடத்தில் பறித்த தேங்காய் கூட்டி வைத்தும், இன்னொரு இடத்தில் மட்டை உரித்து உடைத்து எண்ணெய் எடுப்பதற்காய் தேங்காயை வெயிலில் காய வைத்திருந்தனர். மரத்திலிருந்து விழுந்த தென்னை மட்டைகளை ஒருபுறம் அடுக்கி வைத்திருந்தனர்.  அந்த சத்தம் நின்றிருந்தாலும் சுற்றிலும் பார்த்தாள். அங்கே இதற்கு முன் நியதி வந்திருந்தபோது நிறைய பாம்புகளை கண்டிருந்தபடியால் மனதில் அச்சத்துடன் வேகமாய் வாய்க்காலை நோக்கி நடக்க எதிரே நவீனும், ஆத்ரேயனும் ஏதோ பேசி சிரித்தபடி வந்து கொண்டிருந்தனர்.

“ஹா… எந்தா நிதி, ஞங்களை விளிக்கான் இறங்கியதானோ..?” இவளைக் கண்டதும் ஆத்ரேயன் புன்னகையுடன் கேட்க,

“என்ன அண்ணி…? கொஞ்ச நேரம் கூட அண்ணனைப் பார்க்காம இருக்க முடியலியா…?” என நவீன் கிண்டலடிக்க முறைத்தவள், “ப்ச்… சித்தி உங்களை சாப்பிடக் கூட்டி வரச் சொன்னாங்கன்னு வந்தேன்…” விளக்கம் கொடுத்தாள்.

“ஏட்டா…! சாப்பிடறதுக்கு முன்ன ஒரு இளநீ குடிக்கலாமா…?”

“ஓ… குடிக்கலாமே…!” என்ற ஆத்ரேயன், “மோளே…! இது பிடிக்கு…” என கையிலிருந்த டவலை நியதியிடம் நீட்ட வாங்கிக் கொண்டாள்.

நவீன் ஒரு பெரிய கம்பை எடுத்து இளநீரைத் தள்ளி விட முயல ஆத்ரேயனும் அருகே நின்றான். மூவரும் மேலே இளநியைப் பார்த்தபடி இருக்க சட்டென்று ஆத்ரேயன், “உஸ்ஸ்…” என முகத்தை சுளித்தபடி காலை உதறினான்.

உடனே கீழே கவனித்த நியதி, “ஐயோ…” என அலறியபடி, “ஐ..யோ ஆதி, உங்கள பா..பாம்பு கடிச்சிருச்சு…” என சொல்லிக் கொண்டே மயங்க, சட்டென்று அருகே நின்றவளைத் தாங்கிக் கொண்டான் ஆத்ரேயன்.

அதிர்ந்து போன நவீன், சுற்றிலும் பார்வையை ஒட்டியபடி “என்னாச்சு ஏட்டா, காலைக் காட்டுங்க…” எனப் பதட்டத்துடன் கேட்க ஆதியும் திகைப்புடன் காலைப் பார்த்தான்.

நவீன் அவன் காலை ஆராய, “ஈர்க்கல் (ஈர்க்குமாறு குச்சி) தான் கால்ல குத்திருச்சு, ஓலை மடங்கி நீட்டிட்டு இருந்தது கால்ல குத்திருச்சு…” என ஆத்ரேயன் கூற, “அதுக்கெதுக்கு பாம்புன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க…” எனக் கேட்டவன், “ஒருவேளை வேறு எங்கும் பாம்பைப் பார்த்திருப்பாளோ..” என நினைத்து சுற்றிலும் தேடினான்.

“ஏட்டா, நீங்க வீட்டுக்குப் போங்க, நான் பார்த்திட்டு வரேன்…’ எனக் கூற ஆத்ரேயன் தோளில் சாய்ந்து கிடந்தவளை இரு கையிலும் அள்ளிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

சரியாய் அப்போது அங்கே வந்த சந்தானம் இதைக் கண்டு, “ஐயோ, என்னாச்சு தம்பி…?” எனப் பதற நளினியும் சத்தம் கேட்டு ஓடி வந்தாள்.

“என்னைப் பாம்பு கடிச்சிருச்சுன்னு பயந்துட்டா அங்கிள்…”

“என்னது பாம்பு கடிச்சிருச்சா…? எங்கே, என்ன பாம்பு…?” அவர்கள் இருவரும் பதற,

“அச்சோ, என்னை பாம்பு கடிக்கல, என் காலுகிட்ட கிடந்த ஓலைக் கீற்றுல இருந்த ஈர்க்கல் கால்ல குத்திருச்சு, நான் வலியில் உஸ்ஸ்னு பரய, இவ மர நிழல்ல அதைப் பார்த்து பாம்புன்னு நினைச்சு, பயந்து மயங்கிருச்சு…” சொன்னபடி அவளை முன்னிலிருந்த திண்ணையில் படுக்க வைத்தான். அவன் தமிழும், மலையாளமுமாய் கலந்து கட்டி சொல்ல பெரியவர்கள் இருவரும் சிரித்து விட்டனர்.

“அட, ஓலையைப் பார்த்தா இவ பாம்புன்னு நினைச்சுட்டா…” நளினி கிண்டலாய் கேட்க அங்கே வந்த நவீன், “அம்மா… முதல்ல தண்ணி எடுத்திட்டு வாங்க…” எனச் சொல்ல ஓடிச்சென்று ஒரு சொம்பில் தண்ணியுடன் வந்தார் நளினி.

அதை வாங்கி நியதியின் முகத்தில் தெளித்த ஆத்ரேயன், கவலையுடன் அவளைப் பார்க்க மெல்ல கண் விழித்தாள்.

கணவனைக் கண்டதும் மீண்டும் பதட்டமாய், “ஐயோ, ஆதி… உ..உங்களைப் பாம்பு கடிச்சிருச்சு, வாங்க ஆஸ்பிடல் போவோம்… நான் ஒரு ராசி கெட்டவ, அதான் உங்களுக்கு இப்படி கஷ்டம் வருது…” என ஏதேதோ புலம்ப சுற்றிலும் நின்ற எல்லாரும் அதைப் பார்த்து சிரித்துவிட ஆத்ரேயன் மட்டும் அவளைக் கனிவுடன் நோக்கினான்.

“ஆத்யம் வெள்ளம் குடிக்கு…” என்றபடி அவளைத் தண்ணீர் குடிக்க வைத்து இதமாய் தலையை வருடிக் கொடுத்தவன்,

“எனக்கு ஒண்ணுமில்லை, நீ கண்டது பாம்பல்ல… நான் நல்லாருக்கேன் பாரு. அது ஈர்க்கல், என் கால்ல குத்திருச்சு, பயப்பட ஒண்ணுமில்லை…” என சமாதானம் சொல்ல, “இ..இல்ல, நான் பார்த்தனே… உங்க கால்கிட்ட பாம்பு இருந்துச்சு. அதான் கடிச்சிருக்கு, வாங்க ஆஸ்பத்திரி போலாம்…” என்றாள் கண்களில் கண்ணீர் மின்ன.

“ஐயோ அண்ணி, நீங்க பார்த்தது பாம்பு இல்லை, இதோ, இந்த ஓலைக் கீற்று தான்… அங்கிருந்த மரத்தோட நிழல்ல இது மடங்கி நிக்கவும் உங்களுக்குப் பாம்பு போலத் தோணிருக்கு…” நவீன் கையோடு கொண்டு வந்திருந்த ஓலைக்கீற்றை எடுத்துக் காண்பிக்க சற்றுத் தெளிந்தவள்,

“அப்ப உங்களுக்கு நிஜமா ஒண்ணுமில்ல தானே…” என அவன் காலை நோக்கவும், ஷாட்ஸ் அணிந்திருந்த காலைத் திருப்பி அவளுக்கு நன்றாகக் காட்டினான் ஆத்ரேயன்.

“நீயே பாரு, ஈர்க்கல் தான் லேசாக் கீறி விட்டிருக்கு…” என்று சொல்ல நெஞ்சில் கை வைத்து கண்ணை மூடி பெரிதாய் ஒரு மூச்சு விட்டாள் நியதி. “ச்சே… ஓலையைப் பார்த்தா பாம்புன்னு நினைச்சு மயங்கிருக்கேன். எல்லாரும் என்ன நினைப்பாங்க…” யோசித்தவள் முகம் கூச்சத்தில் சிவந்தது.

“நளினி, என்ன சத்தம், என்னாச்சு…” இவர்கள் சத்தம் கேட்டு அறையிலிருந்து சாவித்திரி புரியாமல் அழைத்தார்.

Advertisement