Advertisement

யாரோ கதவைத் திறக்கும் ஓசையில் இருவரும் திரும்ப ஆதிரா அங்கே வந்தாள்.

“ஆஹாங், ரெண்டு பேரும் ஜோடியாயிட்டு இங்க யோகா செய்ய வந்துட்டிங்களா…? அம்ம தாழே என்ட மகனும், மருமகளும் எவிடேன்னு சோதிச்சுட்டே இரிக்குனு…”

“குளிச்சிட்டு வராம் ஏடத்தி…” என்றான் ஆத்ரேயன்.

“வா, அபி ஏட்டனும் நின்னே காணனம் பரஞ்சு…”

ஆதிரா கீழே செல்ல அவர்கள் அறைக்கு சென்றனர்.

இருவரும் குளித்து கீழே வர இருவருக்கும் சூடான காபியைக் கையில் கொடுத்தார் ஷோபனா.

“வா மோளே… உங்க ரெண்டு பேர் பேருலயும் விஷ்ணு க்ஷேத்திரத்தில் பால் பாயசம் சீட்டாக்கி இருக்கேன், கோவிலுக்குப் போய் பிரசாதம் வாங்கிட்டு வந்திருங்க…”

“சரி அம்மே…”

அடுத்து வாக்கிங் முடித்து வந்த அபிநந்தன் தம்பியைக் கண்டதும் அங்கே வந்தான்.

“ஆதி… நாளைக்குப் பொள்ளாச்சி போகணும்னு சொல்லி இருந்தியே, அங்கிருந்து அப்படியே ஊட்டி கிளம்பிருங்க, உங்களுக்கு ஊட்டில ஒரு ரிஸார்ட் புக் பண்ணி தரேன், ஒன் வீக் என்ஜாய் பண்ணிட்டு வாங்க…” ஆதி சந்தோஷத்துடன் மனைவியைப் பார்க்க அவள் முகத்தில் தெரிந்த குழப்பத்தைக் கண்டதும் நிதானமாகி விட்டான்.

“இ..இல்ல ஏட்டா, இப்ப கன்ஸ்ட்ரக்ஷன் வேலை போயிட்டு இருக்கும்போது ஒன் வீக் எல்லாம் போக முடியாது, ஹனிமூன் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்…”

“எடா, கல்யாணம் முடிஞ்சதும் டூர் கிளம்பினா தான் ஹனிமூன், இல்லேன்னா அது வெறும் மூன் தான்…” அபி கிண்டலாய் சொல்ல ஷோபனா துணைக்கு வந்தார்.

“அபி, இப்ப வேலை இருக்குன்னு சொல்லும்போது அவனை நிர்பந்திக்க வேண்டாம், எப்பப் போகணும்னு தோணுதோ அவங்களே சொல்லட்டும்… அப்ப நீ ரிஸார்ட் புக் பண்ணிக் கொடுக்கு…” என்றவரை நியதி நன்றியுடன் பார்த்தாள்.

இருவரும் கோவிலுக்கு செல்ல புறப்பட்டு வர, “நான் வண்டி எடுத்திட்டு வராம்…” என்ற ஆத்ரேயன் புல்லட்டை எடுத்து வர நியதி திகைப்புடன் பார்த்தாள்.

அவளை நோக்கியவன், “எந்தா முத்தே…” எனவும், “ஒ..ஒண்ணுமில்லை…” என்றவள் புல்லட்டில் ஏறி அமர்ந்தாள். காற்றில் படபடக்கும் சேலை முந்தானையை இழுத்து இடுப்போடு சுற்றிக் கொண்டு கணவன் முதுகில் தொட்டும் தொடாமலும் அமர்ந்திருந்தாலும் அந்த நெருக்கம் அவளை என்னவோ செய்தது. சட்டென்று ஒரு கணம் மனதுள் அபியுடன் பைக்கில் சென்றது நினைவில் வர கண்ணை மூடி அந்த நினைவைக் கட்டுப்படுத்தி வலுக்கட்டாயமாய் வெளியே பார்வையைப் பதித்தாள்.

“முத்தே…! எதுக்கு இப்படி தள்ளி உக்கார்ந்திருக்க, கேரளத்து ரோடு குண்டும், குழியுமா இருக்கும், என்னைப் பிடிச்சு உக்காரு…” அவன் சொல்ல சிறிது நேரம் தயங்கியவள் அவன் சொன்னது போல் குழியில் வண்டி ஏறி இறங்கவும் தடுமாற தோளைப் பற்றிக் கொண்டாள்.

அமைதியான சூழ்நிலையில் கேரளப் பாரம்பர்யத்தோடு இருந்த விஷ்ணு க்ஷேத்திரத்தில் மனம் குளிரப் பிரார்த்தித்து இந்த வாழ்க்கை தந்த கடவுளுக்கு நன்றி சொல்லி துளசி தீர்த்தம் வாங்கிக் கொண்டாள். ஷோபனா கொடுத்த பூஜை சீட்டைக் கொடுத்து ஒரு சின்ன பிளாஸ்டிக் குப்பியில் அவர்கள் கொடுத்த பால் பாயாசத்தை வாங்கிக் கொண்டு பிரகாரத்தை சுற்றி வந்தனர்.

“ஆஹாங், இதாரு புது மணவாளனும், மணவாட்டியுமோ…?” (புதுப் பொண்ணும், மாப்பிள்ளையும்) யாரோ ஒருவர் இவர்களைக் கவனித்து விட்டு புன்னகையுடன் வந்தார்.

“ரிசப்ஷன் கம்பீரமாயிருந்து ஆதி மோனே… எந்தா மோளே, எங்க ஊரும், மாப்பிள்ளையும் நினக்குப் பிடிச்சதா…?”

அவர் நியதியிடம் கேட்க அவள் எதுவும் சொல்லாமல் சிறு புன்னகையுடன் தலையாட்டினாள்.

“யோகா சென்டரில் பில்டிங் வொர்க் கழிஞ்சோ..? என்டே கையில் நல்ல எலக்ட்ரீஷியன் டீம் உண்டு, நினக்கு ஆவஸ்யமெங்கில் பரயு மோனே…”

“செரி அங்கிள்…”

“சரி மோனே, வராம் மோளே…” என்றவர் நகர்ந்தார்.

அவர்களும் கிளம்ப வழியில் வேறு சிலரும் இவனைக் கண்டதும் மரியாதையுடன் தலையசைக்க ஆத்ரேயன் மீதும் அவன் குடும்பத்தின் மீதும் அனைவருக்கும் ஒரு மதிப்பு இருப்பதை உணர்ந்தாள்.

வீட்டுக்கு சென்று பிரசாதத்துடன் காலை உணவையும் முடித்துக் கொண்டு குழந்தைகளுடன் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தான் ஆத்ரேயன். ஆதிராவும், அபிநந்தனும் கிளம்ப மதிய உணவுக்காய் வசந்தாவிடம் மெனு சொல்லிக் கொண்டிருந்தார் ஷோபனா.

“அம்மே, நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா…?” நியதி ஷோபனாவிடம் கேட்க, “செரிம்ம வா, நமக்கு ஒளிச்சு களிக்காம்…” என அவளை ஹாலுக்கு இழுத்தாள் நயனா.

“ஹா… போய்க்கோ, இக்குட்டிகளை நோக்கனதானு பெரிய ஹெல்ப். நீ அவரோடு போயிக் களிக்கு…” என சிரித்தார்.

“செரிச்சா, நான் பர்ஸ்ட்… நிங்கள் ஒளிச்சோ…” (ஒளிஞ்சுக்கோ) நயனா சொல்ல அவளை மடியில் அமர்த்தி ஆத்ரேயன் கண் பொத்த கவின், நியதியை இழுத்துக்கொண்டு ஓடினான்.

ஒரு சோபாவின் பின் ஒளிந்தவன், அவளையும் அங்கே அமரச் சொல்லி சைகையில் சொல்ல நியதி புன்னகையுடன் அமர்ந்து குனிந்து கொண்டாள்.

“ஓகே ரெடி…” என்ற நயனா எழுந்து வந்து அவர்களைத் தேட கவின் ஓடிச் சென்று ‘சேட்’ அடிக்க நியதியின் தலையை நயனா கண்டுவிட அவள் சேட் அடித்து அவுட்டாக்கினாள்.

“செரிச்சா, செரிம்மா அவுட், கண்ணு பொத்து…” நயனா சொல்ல நியதி கூச்சத்துடன் நின்றாள்.

“வா…!” ஆத்ரேயன் புன்னகையுடன் அழைக்க சோபாவில் அமர்ந்திருந்தவன் முன்னே அமர்ந்தவளின் கண்ணை அவன் மெல்லப் பொத்திக் கொண்டான்.

ஆனால் அவன் கையின் ஸ்பரிசம் அவளுக்குள் ஒரு மாதிரி தவிப்பைக் கொடுக்க கூச்சத்துடனே அமர்ந்திருந்தவளின் கண்ணிலிருந்து கையை எடுத்தவன், “ம்ம், கண்டு பிடிக்கு…” என்றான்.

“ம்ம்… ரெடி செரிச்சா…” அறையின் உள்ளிருந்து சிஞ்சு மோள் குழந்தைத் தனமாய் குரல் கொடுக்க, புன்னகையுடன் எழுந்தவள் வேறு பக்கம் எல்லாம் தேட அதற்குள் குழந்தைகள் இருவரும் வந்து சாட் அடித்து “செரிம்மா தோற்று, ஞங்களைக் கண்டு பிடிச்சில்லா…” என சிரித்தனர்.

நியதி சிரிக்க, “இனி செரிச்சன் கண்ணு பொத்தட்டே, நமக்கு மூணு பேருக்கும் ஒளிக்காம்…” நயனா சொல்ல,

“ம்ஹூம்… எனிக்கு கண்ணு பொத்தண்டா…” ஆத்ரேயன் குழந்தை போல் சிணுங்க, குழந்தைகள் அடம் பிடிக்க அதை ரசனையுடன் பார்த்தாள் நியதி. “ப்ச்… குழந்தைங்க ஆசைப்படறாங்க, போங்க ஆதி…” அவளும் சொல்ல போனால் போகிறது என்பது போல் சம்மதித்தான். ஆத்ரேயன் சுவர் பக்கமாய் திரும்பி நின்று ஒன், டூ, த்ரீ சொல்ல மூவரும் ஒளிந்து கொண்டனர்.

“ஓகே ரெடி…” என்றவன் குழந்தைகளை முதலில் கண்டு பிடித்துவிட, “அச்சோ, நான்தன்னே அவுட்…” சிணுங்கிய நயனா அறைக்குள் அடிக்கடி பார்ப்பதைக் கண்டு கொண்டு நியதி அங்கே இருக்கிறாள் எனப் புரிந்து கொண்டாள்.

மெல்ல அடியெடுத்து அறைக்குள் நுழைந்த ஆத்ரேயன் சட்டென்று நியதியின் கன்னத்தில் முத்தமிட, திகைத்து அவள் அங்கேயே நின்றுவிட ஓடிச் சென்று சுவரில் ‘சாட்’ அடித்த ஆத்ரேயன், “ஹே… நான் வின்…” எனக் குதித்தான்.

தன்னை சுதாரித்துக் கொண்டு வெளியே வந்தவளின் சிவந்த முகத்தைக் கண்ட ஆத்ரேயன் புருவத்தை மேலேற்றி, “எந்தா, நான் இனியும் கண்ணு பொத்தனோ…” எனக் கேட்க முறைத்தவளை நோக்கி சிரித்தான்.

அதற்குள் ஆத்ரேயனின் அலைபேசி சிணுங்க ஏதோ வேலையென்று வெளியே கிளம்பி விட்டான்.

மதிய உணவுக்கு ஆதிராவும், அபிநந்தனும் வரும் முன்னரே குழந்தைகளுக்கு நியதி உணவு கொடுத்திருக்க, ஆதிரா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

“ஹோ பாக்கியம், ஒரு வெளிய பணி கழிஞ்சு, தேங்க்ஸ் மோளே…” என்றாள் நியதியிடம் புன்னகையுடன்.

அவர்களுடன் ஷோபனாவும் சாப்பிட அமர, “நியதி…! நீயும் வா…” ஆதிரா அழைக்க, “இ..இல்ல, நான் அப்புறம் சாப்பிடறேன்…” என்றவள் அவர்களுக்குப் பரிமாற, “அவ ஆதிக்கு வெயிட் செய்யுவாளா இருக்கும்…” ஷோபனா புன்னகையுடன் சொல்ல நாணத்துடன் குனிந்து கொண்டாள்.

ஆத்ரேயன் மூன்று மணிக்கு எப்போதும் போல் தாமதமாய் வர, நியதி பசியில் சோர்ந்து போயிருந்தாள். ஷோபனா எவ்வளவோ சொல்லியும் சாப்பிடவில்லை.

“மலரே…! நின்னே காணாதிருந்தால்…” வழக்கம் போல் பிடித்த பாடலை விசிலடித்தபடி உள்ளே நுழைந்த மகனை முறைத்த ஷோபனா, “எடா, எத்தர நேரமாயி இக்குட்டி நினக்காயிட்டு பட்சணம் கழிக்காதே காத்திரிக்குந்து, நினக்கொந்து வேகம் வந்தூடே…” என மகனை சாட, இந்த வழக்கமெல்லாம் அங்கு கிடையாதென்பதால், திகைப்புடன் நியதியை நோக்கினான்.

“ஓ… நீ எந்தினு நிதி வெயிட் செய்யன, வா… கழிக்காம்…” என்றவன் உடை கூட மாற்றாமல் அவள் முகத்திலேயே பசியை உணர்ந்து கையை மட்டும் கழுவி சாப்பிட வந்தான்.

“மோளே… நிங்கள் சாப்பிடு, நாங்கள் தூங்கறேன்…” என தெரிந்து கொண்ட தமிழில் அவர் சொல்ல நியதி சிரிக்க, ஆத்ரேயன் முழித்தான்.

“எந்து, தூங்கானோ…?” (தொங்கறது)

“தூங்கான் அல்லடா செருக்கா, உறங்கான்… ஆத்யம் நின்டே கெட்டியவனு (புருஷனுக்கு) தமிழ் சொல்லிக் கொடு பொண்ணே…” என்றபடி மகனின் தலையில் செல்லமாய் தட்டிவிட்டு நகர்ந்தார். அவனுக்குப் பரிமாறி, தனக்கும் ஒரு தட்டில் பரிமாறிக் கொண்டு அமர்ந்தவளை நெகிழ்வுடன் பார்த்தான் ஆத்ரேயன்.

“என்டே காரணம் லேட் ஆயல்லே, விஷந்தோ…?”

“இல்ல, வயறு புல்லாருக்கு…” என்றாள் கிண்டலாக.

“எந்தினு இங்ஙனத்த பார்மாலிட்டீஸ்…? நீயும் அவங்களோட சாப்பிட்டிருக்கலாமே…? எதுக்கு உன்னை வருத்திக்கணும்…”

“இதுல வருத்தம் ஒண்ணும் இல்ல, வெளியில் கிளம்பின நீங்களும் பசியா இருப்பிங்களே, அதான் உங்களை விட்டுட்டு சாப்பிடத் தோணலை…” அவள் சொல்ல அவன் தாடிக்குள் ஒரு குறுநகை மலர்ந்து முகமெங்கும் பரவியது.

இழந்து போன நினைவுகள்

இறுக்கமாய் மனதைப் பிடிக்க

உயிரோடு இருக்கும் நிலையை

உணர்வுகளும் வெறுத்திருக்க

மறுவாழ்க்கை தந்த நீயே

மனதை நீயும் மாற்றிடுவாயோ…

உனக்கும் எனக்கும் இடையே

ஊசலாடும் மனதை எப்படி

நானும் நிலை நிறுத்துவேன்…

Advertisement