Advertisement

 அத்தியாயம் – 25

ஆத்ரேயனின் அணைப்பு நியதியைத் திகைக்க வைக்க எதிர்பாராத அந்தத் தொடலும், அணைப்பும் மறந்து போன சில நினைவுகளைக் கிளறி விட உடல் மெல்ல நடுங்கியது.

கண்ணை மூடித் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாலும் அபிமன்யுவின் காதலில் திளைத்து, அவனது தாபத்தில் தகித்து, ரசனையுடன் அனுபவித்த தாம்பத்யம் நினைவில் வந்தது. ஆதியின் அந்தத் தீண்டல் மறந்திருந்த உடல் தேவையை மீண்டும் கிளர்ந்தெழச் செய்தாலும் முழு மனதுடன் ஏற்க முடியாமல் உடல் கூச சட்டென்று அவனது கையை விலக்கிவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

இதயம் பலமாய் துடிக்கும் ஓசை அவளுக்குக் கேட்டது.

கல்யாணமே ஆகாத ஒரு இளம் பெண்ணின் நிலையைக் காட்டிலும் மிகக் கொடியது, கல்யாணமாகி ஒரு மாதமே காதல் கணவனின் அருகாமையையும், வாழ்வின் புது பரிமாணத்தையும், தாம்பத்ய சுகத்தையும் அறிந்து ஒரு நொடியில் எல்லாம் இழந்த இளம் பெண்ணின் நிலை.

ஏனோ

மறந்து விட்ட சிரிப்பு

மறந்து விட்ட மகிழ்ச்சி

மறந்து விட்ட கனவு

மறந்துவிட்ட ஆசை

மறந்து விட்ட ஏக்கம்

மறக்க முடியாத சுமை

மறந்துவிடாமல்

தொடர்ந்திடும் அழுகை

மறைந்தே போன சுயத்தின்

வெளிப்பாடு… இப்படி

மறந்து விட்டதும் மறக்க முடியாதும்

சில பல கணங்களை

ஜடமாக பயணிக்கும்

கால நிகழ்வுகளோ

கண்ணாடிச் சிதறல்களாக
சிதறிக் கிடக்கிறது

பல கோணங்களில்…                 (சசிகலா எத்திராஜ்)

இதுதான், இப்படித்தான் நியதியின் வாழ்க்கையும் இருந்தது. அவளது பிடித்தங்கள் குறைந்து வாழ்வில் பிடிப்பும் விட்டுப் போயிருக்க மீண்டும் வசந்தமாக்க வந்திருக்கிறான் ஆதி. அடுத்து என்ன செய்வதென்றே அறியாமல் அபிமன்யு விட்டுச் சென்ற அதே வினாடியிலிருந்து தேங்கி நின்ற அவளது எதிர்காலத்தை வசந்தமாக்க வந்திருக்கிறான்.

இயல்பான வார்த்தைகளும் தடுமாறி ஆழ் கிணற்றினுள் புதையுண்டு போய் கிடக்க, உறக்கம் தொலைத்த விழிகளோ இமை மூடாமல் வாயிலின் வழியே வெறித்து எங்கோ நோக்க, நடந்த அத்தனையும் கனவென்று யாராவது ஒருவரெங்கிலும் கூறி விடமாட்டார்களா என்று எத்தனையோ நாள் அவள் உள்ளம் ஏங்கி இருக்கிறது.

தனக்கென்று இப்பிரபஞ்சத்தில் யாருமில்லாதது போல் உணர்ந்து தனிமையில் போராடி, இரவுகளில் கணவனின் சிறு அணைப்புக்காய் மனம் ஏங்க, இளைப்பாற வழியின்றி பறக்க மறந்து தவிக்கும் சிறு பறவை போல் எத்தனையோ இரவுகள் அவளுக்கு கொடுமையை உணர்த்தியிருக்கிறது.

இன்னும் கணவனிடம் சொல்லி முடிக்காத நிறைய விஷயங்கள் மொழியிழந்து மனதுக்குள் ஊமையாய் அழுது கொண்டிருக்க, வறண்டு போன கண்ணீருடன் கணவனின் இழப்பை நினைத்து ஊமையாய் கலங்கிக் கிடந்திருக்கிறாள்.

யாராவது ஒருவர் நலமா என்று பொதுவே கேட்டுவிட்டால் கூட நலமே என்று மெய்யற்ற பொய்யை சொல்லிட மனம் பதைபதைத்துத் தவித்துப் போயிருக்கிறாள். இதெல்லாம் கடந்தகாலம் தான் என்றாலும் சட்டென்று நிகழ்காலத்தை ஏற்றுக் கொண்டு எதிர்காலத்தை யோசித்திட அவள் மனது ஒன்றும் டைம் மெஷின் இல்லையே.

கண்ணில் கண்ணீரும் சிறு தேம்பலுமாய் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவளை, “முத்தே…!” என்ற அழைப்பு நிகழ்வுக்கு மீட்டு திரும்ப வைத்தது.

“எந்தே, உறக்கம் வருனில்லே…?” என்றவனின் கரம் நீண்டு ஆதரவாய் அவள் முதுகில் நீவியது. அந்தக் கையின் அணைப்புக்குள் கரைந்து போக ஒரு மனம் துடித்தாலும் ஏதோ ஒன்று அவளைத் தடுக்க கண்ணை இறுக மூடிக் கொண்டவளின் மனம் தவித்தது.

அவள் அமைதியாய் இருப்பதைக் கண்ட ஆத்ரேயன் சற்று நெருங்கி அவள் முதுகோடு அணைத்துக் கொள்ள முயல சட்டென்று அவள் கைகள் அவனைத் தட்டி விட எழுந்து பெரிதாய் மூச்சு விட்டு அமர்ந்து கொண்டவளைக் கண்டு திகைத்து ஆத்ரேயனும் எழுந்து அமர்ந்தான்.

“எந்தா முத்தே, எந்து பற்றி…? சொப்னம் எதுவும் கண்டு பேடிச்சோ…?” அக்கறையோடு கேட்டவனின் அன்பை எப்படி முழுமையாய் ஏற்று அவனை நேசிக்கப் போகிறோம்…? என நெகிழ்ந்தவளின் கண்கள் மீண்டும் கலங்கின.

“ஹேய்…! ஒண்ணும் இல்லடா, பேடிக்கண்டா… நானில்லே…” என்றவன் அவளைத் தோளோடு அணைத்து ஆறுதல் சொல்ல அது அவளுக்குப் பிடித்திருந்தது. அவன் தோளில் சாய்ந்து கையை அணைத்துக் கொள்ள மனம் ஏங்கியது. ஆனால் அதற்கு மேல் எதையும் ஏற்றுக் கொள்ளும் துணிவின்றி கண்ணை மூடிக் கொண்டவளை தோளில் சாய்த்துக் கொண்டான் ஆத்ரேயன்.

அவளை மேலும் எதுவும் கேட்டு விஷமப்படுத்த அவனும் விரும்பவில்லை.

மனதுள் எதையோ யோசித்து அலட்டிக் கொள்கிறாள் என்பது மட்டும் புரிய இதமாய் கண் மூடிக் கிடந்தவளின் தலையைக் கோதிவிட்டான். சிறிது நேரத்தில் அவள் மனமும் சமனப்பட உறங்கத் தொடங்கியவளை அப்படியே ஒரு தலையணை வைத்துப் படுக்க வைத்தவன் அவள் முகத்தை நோக்கியபடி படுத்துக் கொண்டான். அந்தப் பெரிய கட்டிலில் அவன் மனதைப் போலவே நிறைய இடமிருந்தது.

குழந்தை போல் தனது கையைப் பற்றிக் கொண்டு ஆழ்ந்து உறங்கத் தொடங்கியிருந்தவளை குறுநகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன் அப்படியே உறங்கியும் போனான்.

காலையில் நியதி வழக்கம் போல் எழுந்திருக்க அருகே ஆத்ரேயனைக் காணவில்லை. எனக்கு முன்னாடியே எழுந்து விட்டானோ… யோசித்தவள் குளியலறைக்குள் நுழைந்தாள்.

சூரியன் இன்னும் இருட்டின் போர்வைக்குள் இருக்க விடிவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது வானம். முகத்தை டவலால் துடைத்துக் கொண்டிருந்தவள் கதவு திறக்கும் ஓசையில் நிமிர்ந்தாள்.

யோகா உடையுடன் உள்ளே வந்தவன், “குட் மோர்னிங் முத்தே, காபி குடிக்குனோ…” கேட்டுக் கொண்டே பிளாஸ்கில் இருந்த பிளாக் காபியை ஒரு பீங்கான் கப்பில் ஊற்ற, “ம்ம்…” என்ற நியதிக்கு நீட்டிவிட்டு தனக்கும் எடுத்துக் கொண்டான்.

“கல்யாண பிஸியில் சரியா யோகா பிராக்டிஸ் பண்ணறதே விட்டாச்சு. மொட்டை மாடிக்குப் போறேன், நீயும் வரியா…” அவன் கேட்க, “ம்ம்… டிரஸ் மாத்திட்டு வரேன்…” என்றவள் யோகா உடையை எடுத்துச் சென்று மாற்றி வந்தாள்.

இருவரும் குளிரை சுகமாய் ரசித்துக் கொண்டே மாடிக்கு சென்றனர். வானம் மெல்ல இருட்டிலிருந்து நிறம் மாறத் தொடங்கியிருக்க, குளிர் ஊசியாய் உடலைக் குத்தியது.

மாடியில் ஒரு பெரிய அறை முழுக்க உடற்பயிற்சி, யோகா சம்மந்தமான பொருட்கள் இருக்க அங்கே முதல் முறை வந்த நியதி திகைப்புடன் பார்த்தாள்.

“நினக்கொரு யோகா மேட் எடுத்தோ…” என்றவன் சுருட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்த மேட்டுகளில் ஒன்றை எடுத்து தரையில் விரித்தான்.

“முத்தே…! யூ டியூபில் போட பெல்லி லாஸ் ஆசனங்கள் செய்து வீடியோ எடுத்து தர முடியுமானு என்டே பிரண்டு ஒருத்தன் கேட்டிருந்தான். நம்முட யோகா சென்டர் வீடியோ யூ டியூபில் போட்டும் ரொம்ப நாளாச்சு, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு வீடியோ செய்தால் என்ன…”

“அதுக்கென்ன, செய்யலாமே…” அவளுக்கும் இதில் ஆர்வம் அதிகம் என்பதால் மறுக்கவில்லை.

“ப்ரீ டைம்ல சானலுக்கு தகுந்த போல சில யோகா போஸ் ஒக்கே நோட் செய்து வைக்கு, பிராக்டிஸ் செய்யலாம்…”

“ம்ம்…” என்றவள் மேட்டை விரித்தாள்.

ஆசனம் செய்வதற்கு முன் சில எளிய உடல் அசைவுகளை செய்த ஆத்ரேயன் சூரிய நமஸ்கார் செய்யத் தொடங்க அவனுக்கு இணையாய் அதே போல் செய்தாள் நியதி.

காலை நேர சுத்தமான காற்றுடன் யோகாவும் சேர்ந்து புத்துணர்ச்சியைக் கொடுக்க அடுத்தடுத்து ஆத்ரேயன் லாவகமாய் சர்வாங்காசனம், சிரசாசனம் என ஆசனங்களை செய்து கொண்டிருக்க அவன் வேகத்தைத் திகைப்புடன் நோக்கியவாறு நியதியும் ஈடு கொடுக்க முயற்சி செய்தாள். இருவரும் பயிற்சியில் கவனமாகிவிட பேசவில்லை.

அரை மணி நேரப் பயிற்சிக்குப் பின் பத்மாசனமிட்டு அமர்ந்தவன் “பிராணாயாமம் செய்யலாம்…” என அவளும் அதே போல் இரு கால் பாதங்களையும் தொடைக்கு மேல் வருமாறு சம்மணமிட்டு பத்மாசனத்தில் அமர்ந்தாள். இருவரும் ஆழ்ந்து சுவாசத்தை இழுத்து, வெளியேற்றி பலவிதத்தில் மூச்சுப் பயிற்சி செய்யத் தொடங்கினர்.

இந்த மூச்சுப் பயிற்சி யோகாவில் மிக முக்கியமான ஒன்று. இந்தப் பயிற்சியின் காரணமாய் நுரையீரலின் காற்றை உள்ளிழுக்கும் திறன் அதிகமாகிறது. அதன் மூலமாக நுரையீரலின் திறக்காத கதவுகளெல்லாம் சுவாசத்திற்குத் திறப்பதால் ரத்தம் சுத்திகரிக்கும் பணி எளிதாய் நடந்து பிராணவாயு அளிக்கும் திறனும் அதிகரிக்கிறது.

அரை மணி நேரம் மூச்சுப் பயிற்சி முடிந்து நியதி கண் திறக்க ஆத்ரேயன் அப்போதும் கண் மூடி பயிற்சி செய்து கொண்டிருந்தான். அவனது மார்புகள் மூச்சு இழுத்துவிடும் வேகத்திற்கு ஏற்ப வேகமாய் மேலே கீழே இறங்குவது அணிந்திருந்த டீஷர்ட் வழியாய் தெரிய ரசனையுடன் கணவனைப் பார்த்தாள் நியதி.

அவன் நெற்றியில் பொடிப்பொடியாய் உதித்திருந்த வேர்வை முத்துகள் இளம் வெயிலில் பட்டு ஜொலிக்க, மூடிக் கிடந்த கண்களுக்குள் உருண்டு கொண்டிருந்த கிருஷ்ண மணிகளும், நீண்ட கூர்நாசியின் கீழே அளவாய் டிரிம் செய்யப்பட்ட மீசை, தாடியும் அவனது பளிச் நிறத்தை மேலும் பளிச்சென்று காட்ட, “என்ன…? உன் வாரியல் அழகன் தானா…?” என மனம் அவளைக் கேலி செய்ய நாணத்துடன் பார்வையை மாற்றிக் கொண்டாள்.

யோகா செய்ததில் உடலின் வெப்பம் வெளியே இருந்த குளிரை விரட்டியிருந்தது. அந்த அழகான விடியலில் சுற்றிலும் தெரிந்த பசுமையை ரசித்தபடி நியதி நிற்க கண்ணைத் திறந்த ஆத்ரேயன் மேட்டை மடித்து எடுத்து வைத்துவிட்டு அவளிடம் வந்தான்.

“முத்தே…! இந்த இயற்கை எவ்ளோ பெரிய நிதர்சனத்தை நமக்கு சொல்லுது பார்த்தியா…?” அவன் கேள்வியில் புரியாமல் பார்த்தாள் நியதி.

“என்ன நிதர்சனம்…?”

“இருட்டுன்னு ஒண்ணு இருந்தா வெளிச்சம்னு ஒண்ணு வரும்… அது போலதானே வாழ்க்கையும். பிரச்சனைன்னு ஒண்ணு வந்தா தீர்வுன்னு ஒண்ணு இருக்கும். நாமதான் அவசரத்துல அந்தப் பிரச்சனையைப் பெரிசாக்கி அதுக்குள்ள ஆழ்ந்து போயிடறோம்…” அவன் சொல்லிக் கொண்டிருக்க நியதி மௌனமாய் கேட்டு நின்றாள்.

Advertisement