Advertisement

அத்தியாயம் – 24

உறவினர்களின் கலகல பேச்சும், சந்தோஷக் குரலும் வீட்டைக் கொண்டாட்டமாய் மாற்றியிருக்க வந்தவர்களை வரவேற்க, உபசரிக்க, மருமகளுக்கு அறிமுகப்படுத்த என  பிஸியாக இருந்தார் ஷோபனா. நியதிக்கு இதெல்லாம் புதிதாய் இருக்க அவர்களுக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்து அமைதியாய் அவருடன் நின்றாள்.

அம்பிகை காலை உணவு முடிந்து ஊருக்குக் கிளம்பியிருக்க முக்கிய சொந்தங்கள் சிலரும், ஆதிரையின் வீட்டினரும் இவர்கள் வீட்டுக்கு வந்திருந்தனர்.

“ஆதிரே, நின்னே அச்சன் விளிக்குனு…” யாருடனோ பேசிக் கொண்டிருந்த ஆதிராவிடம் சொன்னான் அபிநந்தன்.

“ஓ அபியேட்டா இதா போவுனு…” என்றவள் அப்பெண்ணிடம் சொல்லிவிட்டு மேலே தங்கள் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பெற்றோரிடம் சென்றாள்.

ஆதிரையின் தந்தை கேரள அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர், திருச்சூரில் மகனுடன் இருக்கிறார்.

“அச்சன் என்னை விளிச்சிருந்தோ…? குடிக்கான் எந்தெங்கிலும் கொண்டு வரட்டே அச்சா…?” முகத்தை சற்று சிடுசிடுப்புடன் வைத்திருந்த தந்தையிடம் கேட்டாள் ஆதிரா.

“ஆதிரே, இவிடே எந்தா நடக்கனது…? அபியோட தம்பிக்கு வேற எவிடேயும் பெண்ணு கிடைக்கலியா…? எந்தினு தமிழ் பெண்ணினைக் கல்யாணம் கயிச்சது…?”

“நான் போனில் பரஞ்சல்லோ அச்சா, அபிக்கு நியதியை இஷ்டமானு, பின்னே இது அவனோட லைப்… யாரு அவன் கூடே ஜீவிக்கணம்னு அவன்தானே தீர்மானிக்கணும்…”

“அதுக்காக அந்தப் பெண் என்ன ஜாதியோ, குடும்பமோ யாரும் இல்லாதே ஆஸ்ரமத்தில் வளர்ந்த பொண்ணு தான் கிடைச்சுதா…? அப்படியென்ன லவ்வோ, மருமகனோட தம்பிக்கு மேரேஜ்னு சொன்னா பொண்ணு யாரு, எந்த தரவாடுன்னு சொந்தக்கார் கேக்கும்போது என்னால சொல்ல முடியலை… நீ அபியை சிநேஹிச்சப்ப சரி, அபியோட அச்சன் தமிழன்னாலும் அம்ம வாரியர் தரவாட்டுல பெண்ணு தானேன்னு நினைச்சு தான் நான் சம்மதிச்சது, அவர் தமிழ்க் குடும்பமாயிட்டு தொடர்பும் இல்லேன்னு தெரிஞ்ச பிறகு தான் முழு மனசா உன்னை அபிக்கு கல்யாணம் பண்ண சம்மதிச்சேன்… இப்ப மறுபடி ஒரு அந்நிய ஜாதி பொண்ணை இந்தக் குடும்பத்துக்கு ஆதி கூட்டிட்டு வந்திருக்கான்… இதுக்கு எப்படி எல்லாரும் சம்மதிச்சிங்க…?” அவர் கோபமாய் கேட்கும்போது “நல்லவேளை, நியதிக்கு இது ரெண்டாம் கல்யாணம்னு இவங்ககிட்ட சொல்லல, தெரிஞ்சிருந்தா இந்த அச்சன் இன்னும் சேர்ந்து கோபப்படுவார்…” ஆதிரா மனதுள் நினைத்துக் கொண்டாள்.

“அச்சா, இது அவன்டே ஜீவிதம், அவன்டே இஷ்டம்… நாம என்ன சொல்லறதுக்கு இருக்கு, அதுவுமில்லாம நியதி ரொம்ப நல்ல பொண்ணு… அன்பானவ, அதானே முக்கியம்…”

“ஆதிரே, நீயும் இங்கனே சப்போர்ட் செய்தா எப்படி, அந்தப் பொண்ணைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கலை… ஒரு நல்ல நாயர் தரவாட்டில் ஜனிச்ச நீ மருமகளாய் வாழான் வந்த வீட்டில் ஏதோ ஒரு அச்சன், அம்ம இல்லாதே ஆஸ்ரமத்தில் வளர்ந்த வேற்று பாஷைப் பெண்குட்டியும் மருமகளோ…? இதொக்கே எங்கனே சரிவரும்…” ஜாதி, குடும்பப் பெருமையில் ஊறி பழமைவாதியாய் நிற்கும் தந்தையைக் கண்டு ஆதிராவுக்கு வருத்தமாய் இருந்தது. இப்படிப் பேசிக் கொண்டிருப்பதை ஆத்ரேயனோ, ஷோபனாவோ, ஏன் அபியே கேட்க நேர்ந்தாலும் நல்ல காரியம் நடக்கப் போகும் வீட்டில் தேவையில்லாத வீண் சங்கடம், என யோசித்தவள் தந்தையின் வாயை அடைப்பதற்காய் பட்டென்று பேசினாள்.

“அச்சா… நீங்க இப்பவும் ஒரு பழஞ்சன் (பழமைவாதி) ஆனல்லோ, விருந்தினு வந்த நிங்கள் அது கழிஞ்சு போனது வரை அவளை சகிச்சா மதி… நானல்லே இந்த வீட்டில் வாழப் போகிறது, எனிக்கு ஒரு பிரஸ்னவும் இல்லா…” மகள் சொல்லவும் அவர் திகைப்புடன் பார்த்தார்.

“மோளே… அச்சன் ஒரு விஷமத்தில் அங்கனே பரஞ்சதானு, இக்காலத்தில் எந்து ஜாதியும், பாஷையும்…? இம்மனுஷன் இப்பளும் இதொக்கே பிடிச்சு தொங்கிக் கொண்டு இருக்கார்… நீ போ, நினக்கு நிறைய ஜோலி உண்டாகும்…” என்று கணவனைப் பழித்து தன்னை விடுவித்த அன்னையைப் புன்னகையுடன் பார்த்துவிட்டு கீழே சென்றாள் ஆதிரா.

மதிய உணவு முடிந்ததும் சிறிது நேரத்தில் மாலை ரிஷப்ஷனுக்கு அனைவரும் தயாராகத் தொடங்கினர். நியதிக்கு கருஞ்சிவப்பில் பொடிப் பொடியாய் பொன்னிறக் கற்கள் சிதறிய டிஸைனர் லெஹங்காவை ஆத்ரேயன் வாங்கி இருந்தான். கல்யாணத்திற்கு எளிமையாய் அவள் விருப்பத்திற்கு புறப்பட சம்மதித்தவர்கள் ரிஷப்ஷனுக்கு இதை அணிய சொல்லும்போது நியதியால் மறுக்க முடியவில்லை. உடைக்குப் பொருத்தமாய் கழுத்தைக் கவ்விப் பிடிக்கும் அகலமான நெக்லஸ் மட்டும் தாலிச் செயினுடன் அணிந்திருந்தாள். புறப்பட்டு முடித்து அவளைக் காண அறைக்கு வந்த ஆத்ரேயனின் விழிகள் விரிந்தன.

நெற்றிச் சுட்டியும், கையில் கல் வைத்த வளையலும், பிரேஸ்லெட்டுமாய் பியூட்டி பார்லர் பெண்ணின் கைங்கர்யத்தில் அலங்கார தேவதையாய் புறப்பட்டு நின்றவளைக் கண்டு கண்கள் வியப்பில் விரிய எச்சில் விழுங்கினான் ஆத்ரேயன். அதைக் கவனித்துவிட்ட நியதியின் இதழ்களில் ஒரு மென்னகை ஒட்டிக் கொள்ள அவனது பார்வை அவளது அழகுக்குக் கிடைத்த அங்கீகாரம் போல் மனது பரவசமாய் உணர்ந்தது. தான் அழகென்று தெரியுமென்றாலும் பெரிதாய் அலங்காரம் செய்து கொள்ளாதவள் இந்த உடையிலும், அலங்காரத்திலும் மிகவும் அழகாய் இருப்பது போல் அவளுக்கே தோன்றியது.

ஆதியும் கம்பீரமாய் கருஞ்சிவப்பு நிறக் குர்தாவும் சந்தன நிற பான்ட்டும் உடுத்திருந்தான். அவனது பளிச்சென்ற நிறத்தை இந்த உடை இன்னும் பளிச்சிட்டுக் காட்டியது போல் தோன்றியது நியதிக்கு. கச்சிதமான அவன் உடலில் கச்சிதமாய் பொருந்திய உடை. அவளது பார்வை தன் மேல் இருப்பதைக் கண்ட ஆதி புருவத்தை மேலேற்றி எப்படி என்று கேட்க அவள் நாணத்துடன் குனிந்து கொண்டாள்.

“அப்ப ரெடியாகிக் கழிஞ்சில்லே, ஹாலுக்குக் கிளம்பலாமா…?” என்றவனிடம் மௌனமாய் தலையாட்டினாள்.

மாலை ஐந்து முதல் ஒன்பது மணி வரை ரிசப்ஷன். மேடையில் நின்ற தம்பதிகளின் ஜோடிப் பொருத்தம் எல்லாக் கண்களுக்கும் நிறைவைக் கொடுத்தது.

“ஷோபனே, நின்டே மருமகள் நல்ல சவுந்தர்யமானு, பெட்டேந்து காணும்போ நம்முடே குட்டியைப் போலத் தன்னே உண்டு, ரெண்டாளுக்கும் நல்ல பொருத்தம்…” வந்தவர்கள் வாய் விட்டுப் பாராட்ட ஷோபனாவுக்கு மிகவும் சந்தோஷம், வெளிய இளவன் (பூசணி) வாங்கி இருவரையும் சுத்திப் போடணும், என நினைத்துக் கொண்டார்.

புன்னகையுடன் நின்ற ஆத்ரேயன் மேடைக்கு வந்த அனைவரையும் நியதிக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

அவன் அருகாமையும், யாராவது அவர்களிடம் வந்து பேசிக் கொண்டே இருந்ததும் அவள் மனதை லைவில் வைத்திருக்க சிரித்த முகத்துடனே நின்றிருந்தாள் நியதி.

ஜான்ஸி கணவன், குழந்தையுடன் கையில் பரிசுப் பொருளுடனும், வாயில் புன்னகையோடும் வந்தாள்.

“அடிபொளி, ரெண்டாளுக்கும் இந்த டிரஸ் நல்ல மாட்சிங்… பாஸ் கலக்கிட்டோ, விஷ் யூ ஹாப்பி மாரீட் லைப்…” என்றவள் வாழ்த்தி அவளுடனே சிறிது நேரம் இருந்தாள். ஜான்ஸியின் கணவனின் கையில் இருந்த குழந்தையும் அவர்கள் தம்மில் இருந்த புரிதலும் காண நியதிக்கு, தாங்களும் இது போல் சந்தோஷமான தம்பதியராய் இருக்க வேண்டுமென்று தோன்றியது.

நிஷா அவளுடன் வைத்திய சாலையில் வேலை செய்யும் தோழியர் சிலருடன் வந்து மனதார வாழ்த்தினாள். யோகா சென்டரில் உள்ளவர்கள் எல்லாரும் தங்கள் குடும்பத்துடன் வந்திருக்க அவர்களை நியதிக்கு அறிமுகம் செய்தனர். சுரேந்தரின் பத்து வயது மகள் கொழுக் மொழுக்கென்று குட்டிக் குஷ்பூ போல் இருக்க டீச்சராய் பணிபுரியும் அவர் மனைவியும் அழகாய் இருந்தார்.

“செரிம்மா, ஈ டெஸ் நல்ல ரசமுண்டு, எனிக்கு தருமோ…?” நியதியின் உடையைப் பிடித்துப் பார்த்து நயனா கேட்க அவள் புன்னகைத்தாள்.

“இது பிக் சைஸ், நினக்கு குட்டி சைஸ்ல வாங்கலாம்…” என,

“செரிச்சா, எந்தினா நிங்கள் இவிட இரிக்கனது…?” அலங்கரிக்கப்பட்ட திவானில் அமர்ந்திருந்த ஆத்ரேயனின் மடியில் அமர்ந்து கொண்டு நவீன் கேட்டான்.

“அது… எங்களுக்கு குருவாயூர்ல கல்யாணம் ஆச்சுல்ல, அதுக்கு இன்னைக்கு ரிசப்ஷன்… அதான் இங்க ஸ்டேஜ்ல உக்கார்ந்திருக்கோம்…”

“ஓ… எனிக்கு எப்போ கல்யாணமாவும், ஞானும் இரிக்கணம்…”

“நீ வலியவன் ஆயதும், செரியம்மா போல ஒரு சுந்தரிப் பெண்ணைக் கல்யாணம் கழிச்சு நினக்கும் இது போல ரிசப்ஷன் வைக்காம்…” ஆத்ரேயன் நியதியைப் பார்த்துக் கொண்டே சொல்ல கூச்சத்துடன் குனிந்து கொண்டாள்.

நயனாவும், நவீனும் மணமக்களை சுற்றிக் கொண்டு மேடையில் அவர்களுடனே இருந்தனர். சிறிது நேரத்தில் மேடைக்கு ஒவ்வொருத்தரும் வரத் தொடங்க அவர்களை சாப்பிட அழைத்துச் சென்றாள் ஆதிரா.

ஒருத்தரை ஒருத்தர் அறிமுகப்படலும், அருமையான உணவும், இதமாய் காதைத் தழுவிய இசையுமாய் ரம்மியமாய் அந்தப் பொழுது கழிந்து கொண்டிருக்க சாதனா தனது தந்தையுடன் உள்ளே வந்தாள்.

அவர் ஊரில் பெரும்புள்ளி என்பதால் சிலர் வலியப் போய் அவரிடம் வரவேற்றுப் பேசிக் கொண்டிருக்க குட்டமாமா அவரைக் கண்டதும் அருகே சென்றார்.

“ஹா வரணம் சாரே, வா மோளே… சேச்சி, இது யாரா வந்தது நோக்கு…” என்று ஷோபனாவையும் அழைத்தார். ஆனால் சாதனாவின் தந்தை முகத்தில் ஒரு கடுப்பும், எரிச்சலும் குடி இருப்பது குட்ட மாமாவுக்கும் புரிந்தது.

Advertisement