Advertisement

தலையைக் குனிந்து கொண்டவள், “ரொம்ப தத்ரூபமா அழகாருக்கு…” என்றவளின் கையைப் பற்றிக் கொண்டான் ஆத்ரேயன்.

“தேங்க்ஸ் முத்தே…!”

“எ..எதுக்கு…?”

“இந்த நிமிஷத்தை நிஜமாக்கித் தந்ததுக்கு… எத்தனையோ நாள் கனவு, ஆசை எல்லாம் இன்னைக்கு நிஜமாகிருக்கு, நீ என் பக்கத்துல, எனக்கு சொந்தமானவளா நிக்கற… நான் ரொம்ப நிறைவா, சந்தோஷமா இருக்கேன்…” அவள் கையை எடுத்து நெஞ்சில் வைத்துக் கொண்டு கண்கள் சிரிக்க சொன்னவனை நெகிழ்வுடன் பார்த்தாள் நியதி.

“இந்த நிமிஷம் என் வாழ்க்கைல நடக்காதான்னு எத்தனை தவிச்சிருக்கேன் தெரியுமா, உன்னோட அருகாமைக்கு ரொம்ப ஏங்கிருக்கேன்… இந்த நிமிஷம் என் உயிர் போனாலும் எனக்கு சந்தோஷம் தான்…” அவன் உணர்ச்சி வேகத்தில் வாய் விட்டு சொல்ல அவள் முகம் சட்டென்று கோபமாய் மாற, கையை உதறிக் கொண்டு நகர்ந்தாள். அப்போதுதான் அந்த வார்த்தை அவனுக்கு உரைத்தது.

“ச்சே… உணர்ச்சி வசப்பட்டதில் என்ன வார்த்தை சொல்லிவிட்டோம்…? சாகவா இத்தனை நாள் காத்திருந்து என் நிதியைக் கல்யாணம் பண்ணினேன்…? முன்னமே பழைய நினைவுகளில் சிக்கிக் கொண்டிருப்பவளை இப்படி ஒரு வார்த்தையை சொல்லி மேலும் வேதனைப்படுத்தி விட்டோமே…” மனம் துடிக்க அவளிடம் சென்றான்.

ஜன்னலருகே சென்று நின்றவளின் கண்கள் சிறிது திறந்திருந்த ஜன்னல் வழியே வெளியே வெறிக்க கண்ணீர் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது. ஈரமான மழைக் காற்றும் அவள் மனதின் வெம்மையைத் தணிக்க முடியாமல் சூடானது. அவள் அருகே சென்ற ஆத்ரேயன் அவள் தோளைத் தொட கையைத் தட்டி விட்டாள்.

“முத்தே…! ஸாரி மோளே, நான் ஒரு உணர்ச்சி வேகத்தில் அங்கனே, ஸாரிடி முத்தே…” மீண்டும் அவளைத் தன்னை நோக்கித் திருப்பியபடி வலியோடு கூற திரும்பியவள் அவன் நெஞ்சில் சாய்ந்து தேம்பி அழத் தொடங்கினாள்.

அவள் குலுங்கிய முதுகில் இதமாய் தடவிக் கொடுத்தபடியே நெஞ்சோடு இறுக்கிக் கொண்டான் ஆத்ரேயன். அந்த வார்த்தையின் வீரியத்தில் அவள் மனம் என்ன பாடுபடும் என யோசித்து அவன் கண்களும் கலங்கியது.

சிறிது நேரம் அழ விட்டவன், “ஸாரி முத்தே… ஞான் அறயாதே பரஞ்சு போயி, நம்மள் ரெண்டு பேரும் நூறு வருஷம் சந்தோஷமாயி ஜீவிக்கும், குருவாயூரப்பன் நம்மளே ரட்சிக்கும்… நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது எனிக்கு மாப்பு (மன்னிப்பு) தா, கரயல்லே முத்தே…” என்றவன் கண்ணீரைத் துடைத்து கட்டிலுக்கு அழைத்துச் சென்று அவளை அமர்த்தினான்.

“முதல் ராத்திரி தன்னே நின்னே விஷமிப்பிச்சு… ஐ ஆம் ரியலி ஸாரி, கிடந்து உறங்கிக்கோ…” என்றவன் மேஜை மீதிருந்த தண்ணி பாட்டிலை எடுத்து குடித்து வர நியதி அப்படியே அமர்ந்திருக்கவும், “உறங்குனில்லே…?” என்றான்.

அழுததில் சிவந்திருந்த முகத்தைத் துடைத்துக் கொண்ட நியதி எழுந்து பாத்ரூம் சென்று வந்து கட்டிலில் ஒரு பக்கமாய் படுத்துக் கொண்டாள். அவள் மீது வெதுவெதுப்பான பிளாங்கெட்டை எடுத்துப் போர்த்திவிட்ட ஆத்ரேயன் மறுபக்கம் வந்து படுத்துக் கொண்டான். இருவருக்குள்ளும் தூக்கம் விலகிப் போக மனது ஒரு அன்பான அணைப்புக்காய் விழித்துக் கிடந்தது.

காலையில் வழக்கம் போல் யோகா செய்யும் நேரத்தில் நியதிக்கு விழிப்பு வர கண்ணைத் திறந்தவள் இதமாய் அதிர்ந்தாள். அவளது முகம் கணவனின் நெஞ்சத்தில் மஞ்சம் கொண்டிருக்க கையோ அவனை வளைத்துப் பிடித்திருந்தது. சட்டென்று நாணம் தோன்ற எழுந்தவளின் அசைவில் ஆத்ரேயனும் கண்ணைத் திறந்தான்.

“குறச்சு கூடி உறங்கிக்கோ முத்தே…” என்றவன் அவளை இழுத்து மீண்டும் நெஞ்சில் சாய்க்க அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. உறக்கத்தில் படுத்தபோது உணராதது இப்போது வெட்கத்தைக் கொடுக்க அவன் கையை மாற்றி எழுந்தாள்.

“இ..இல்ல நீங்க தூங்குங்க, நான் பா..பாத்ரூம் போகணும்…” என்றவள் இறங்கி பாத்ரூமுக்குள் நுழைந்தாள். அவள் வெளியே வரும்போது ஆத்ரேயன் சலிப்பில் நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தான்.

கட்டிலில் சென்று அமர்ந்தவள் கணவனைப் பார்க்க ஜீரோ வாட்ஸ் வெளிச்சத்தில் அவன் முகம் தெளிவாகவில்லை. சற்று நெருங்கி அவன் முகத்தைப் பார்த்தாள் நியதி. இதழில் ஒட்ட வைத்த குறுநகையுடன் அளவாய் டிரிம் செய்யப்பட்ட தாடி மீசையுடன் உறக்கத்திலும் அழகாய் இருந்தான்.

“ச்சே… என்ன இது உறங்குபவரை இப்படி ரசித்துக் கொண்டிருக்கிறேன்…” என மனம் சாட, “மற்ற நேரத்தில் அவன் முகம் நோக்கத் தயக்கமாய் இருக்கிறதே…” என இன்னொரு மனம் சமாதானம் செய்தது.

புன்னகையுடன் எழுந்தவள் மனம் உற்சாகமாய் உணர்ந்தது. பால்கனிக்கு செல்லும் கதவைத் திறந்தவள் முகத்தில் உற்சாகமாய் மோதியது பனிக் காற்று. இயற்கையான அந்த மணத்தை நுகர்ந்தவள் கதவை சாத்திவிட்டு வெளியே சென்று நின்றாள். விடியல் தொடங்கியும் சூரியனின் துயில் கலைந்திருக்கவில்லை. வீட்டுத் தோட்டம் தெரிய நீண்டு உயர்ந்து நின்ற தேக்கு, பாக்கு, மா, பலா, தென்னை மரங்களோடு பல வண்ணங்களில் பூக்கத் தயாராகிக் கொண்டிருந்த பூக்களும் ஓவியம் போலத் தெரிந்தன. குளிரவே கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தாள்.

மாற்று உடையுடன் குளியலறைக்கு சென்றவள் ஹீட்டர் தண்ணீரில் வெதுவெதுப்பான சூடில் குளித்து பாவாடை, பிளவுஸ் அணிந்து மேலே கரும் பச்சையில் வெள்ளி சரிகை வைத்த லினன் சேலையை வெறுமனே போட்டுக் கொண்டு வெளியே வந்தாள். ஆத்ரேயன் பச்சை பிடிக்குமென்றது நினைவில் வர புன்னகையுடன் குளியலறையை ஒட்டி சின்னதாய் இருந்த உடை மாற்றும் அறையில் சேலையைக் கட்டி முடித்து கதவைத் திறந்தாள்.

அப்போதும் ஆத்ரேயன் உறங்கிக் கொண்டிருந்தான்.

அங்கிருந்த கண்ணாடி முன் நின்று தனது முகத்தைப் பார்த்தவள் சற்று வித்தியாசமாய் உணர்ந்தாள். இன்று எப்போதும் இருப்பதை விட அழகாய் இருப்பது போல் தோன்றியது. தலையைத் துவட்டி கையால் லேசாய் ஒதுக்கி ஈர ஜடை போட்டுக் கொண்டு லேசாய் பவுடர் மட்டும் முகத்துக்குப் போட்டுவிட்டு வெளியே வந்தாள்.

மணி ஆறை நெருங்கியிருக்க கதவைத் திறந்து வெளியே வரும்போது பூஜையறையில், “அம்மே நாராயணா, தேவி நாராயணா… லக்ஷ்மி நாராயணா, பத்ரே நாராயணா…” என்று மெல்லிய குரலில் பாடியபடி கடவுளுக்கு விளக்கேற்றிக் கொண்டிருந்தார் ஷோபனா.

அமைதியாய் சென்று நியதி அவரிடம் நிற்க திரும்பிப் பார்த்தவர் புன்னகைத்தார்.

“மோளு நேரத்தே எழுந்து குளிச்சோ, பகவானைப் பிரார்த்திச்சோ…” என்று சொல்ல வணங்கினாள் நியதி.

சோமு பால் கறந்து கொண்டு வந்து இரண்டு கேனைக் கொடுக்க வாங்கிக் கொண்டு வந்தார் வசந்தா.

“வசந்தே… பால் காய்ச்சி சாயா உண்டாக்கான் துடங்கிக்கோ.. மேம எனிச்சிட்டு உண்டாவும், நோக்கியிட்டு எல்லாருக்கும் சாய கொடுக்கு… ஆத்யம் என்ட நியதி மோளுக்கும் எனிக்கும் காபி கொண்டு வா…” என்றவர், “வா மோளே…” என மருமகளை அழைத்துக் கொண்டு வாசல் பக்கம் சென்றார். வாசலில் இருந்த பெரிய பித்தளைக் கிண்டி ஒன்றைக் காட்டியவர் அதில் வெள்ளம் நிறச்சு இவிடே வச்சிட்டு துளசி மாடத்தினு விளக்கு வைக்கு…” என்று இயல்பாய் அவளை அந்த வீட்டில் ஒருத்தி போல் வேலை சொல்ல சந்தோஷமாய் செய்தாள் நியதி.

“அம்பிகம்மா எனிச்சோ நோக்கு, அவருக்கு சாய கொடுக்கு, ராவிலே டிபன் கழிஞ்சதும் இறங்கணும் பறஞ்சதல்லே…”

“ம்ம்… பார்க்கிறேன் மா…”

“மோள் இனிக் குறச்சு மலையாளம் ஒக்கே படிக்கணம் கேட்டோ… நீ எனிக்கு தமிழ் படிப்பிச்சு தா, நான் உனக்கு மலையாளம் படிச்சு தரேன்…” எனவும் சிரித்தவள்,

“சரிம்மா, சொல்லித் தரேன்…”

“சரிம்மா அல்ல, சரி அம்மே…” என முதல் வார்த்தையை சொல்லிக் கொடுக்க சிரிப்புடன் நியதி, “சரி அம்மே…” எனவும் அவரும் சிரித்தார்.

“அங்கனே நம்மள் பாடம் படிக்கான் தொடங்காம்…” என்றபடி உள்ளே சென்றவர், “ஆதி எனிச்சோ நோக்கு மோளே, யாரையோ காணான் போகனமெந்து பரஞ்சிருந்து… காபி கொண்டு போய்க்கோ…” என்றார் வசந்தா காப்பியுடன் வருவதை கவனித்து.

“சரி அம்மா, அல்ல அம்மே…” என்ற நியதி புன்னகையுடன் இரு கப்பை வாங்கிக் கொண்டு மாடியேறினாள். இவள் செல்கையில் ஆத்ரேயன் குளித்து இடுப்பில் டவலுடன் வெளியே வர சற்று கூச்சமாய் உணர்ந்தாள்.

“காபி…”

“ம்ம்… தேங்க்ஸ் முத்தே…! ஆஹா நேரத்தே எனிற்று குளிச்சு பச்சக் கிளி ஆயிட்டுண்டல்லோ…” என்றவனின் உற்சாகச் சிரிப்பு அவளையும் தொற்ற மெல்லப் புன்னகைத்தாள்.

எனக்குப் பிடிக்கவென்றே

எல்லாம் செய்துவிட்டுப் பிடிக்கிறதா

எனக் கேட்கும் உன் ஒற்றைச்

சொல்லில் பித்தாகிறேன்…

நேசத்தின் சுடர் ஒன்று

நெஞ்சுக்குள் விளக்கேற்றுவதை

உணர்கிறேன்… வாழ்கையில்

வறண்டு போன என் வசந்தம்

மீண்டும் வாசல் தேடி வருவதை…

Advertisement