Advertisement

 அத்தியாயம் – 23

இரவு உணவு முடிந்து சிறிது நேரத்தில் உறவுகளில் சிலர் குடும்ப நியாயம் பேசிக் கொண்டிருக்க மற்றவர்கள் உறங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

ஆதிராவும், நியதியும் ஷோபனாவின் அறையில் இருக்க, சின்னவள் தலையில் அழகாய் மல்லிகைப் பூவை வைத்து விட்டாள் ஆதிரா. சாந்தி முகூர்த்தத்திற்கு என்று பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் ஷோபனா, நியதிக்கு அலங்காரத்தில் விருப்பமில்லை என்பதால் தலையில் மட்டும் பூ வைத்துக் கொள்ள சொல்லி அவளை இயல்பாய் இருக்க விட்டார்.

“வசந்தே ரெடியாக்கியோ…” ஷோபனா கேட்க, “இதோ இப்ப தராம்…” என்ற வசந்தா சுண்டக் காய்ச்சிய பாலை சொம்பில் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

“ம்ம் லேசம் ஆற்றிக்கோ, ஓவர் சூடு ஆதிக்கு இஷ்டமல்லா…” என்றுவிட்டு மருமகளிடம் சென்றார்.

அம்பிகையும் ஷோபனாவுடன் அறைக்கு சென்றார்.

கழுத்தில் தாலிச்செயினும் கையில் இரண்டு வளையலும் மட்டுமே அணிந்திருந்தாலும் ஒரு புது அழகோடு ஜொலித்த நியதியை அம்பிகை கண் நிறையப் பார்த்துக் கொண்டார்.

“என்டே மருமகள் சுந்தரியானு…” என்ற ஷோபனா நியதியின் கன்னத்தை வழிக்க, “அப்ப ஞானோ அம்மே…” என்ற ஆதிரையை நோக்கிப் புன்னகைத்தவர்,

“பின்னே… நீ நல்ல சுந்தரி ஆயது கொண்டல்லே என்ட மூத்த மகன் நின்னே இஷ்டப்பட்டது…” எனவும் ஆதிராவின் முகத்தில் வெட்கம். அவர்கள் இயல்பாய் பேசிக் கொள்வதைக் கேட்ட அம்பிகையின் மனம் நிறைவாய் இருந்தது. நிச்சயம் இந்த வீட்டில் மகள் நன்றாய் இருப்பாள் என உள்ளம் சொன்னது.

புன்னகையுடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“சரி டைம் ஆயி, இவளை ரூமில் விட்டுட்டு வா…” ஷோபனா சொல்ல, “நியதி, அத்தைகிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்க மா…” அம்பிகை சொல்லவும் ஷோபனாவின் காலில் விழுந்தாள் நியதி. என்னதான் இயல்பாய் இருக்க முயன்றாலும் அவள் மனதின் தடுமாற்றம் முகத்தில் தெரிந்தது.

“சந்தோஷமாய் இரிக்கு மோளே, தெய்வம் நன்மை தரட்டே…” என்றபடி அவளைத் தொட்டு எழுப்பிய ஷோபனாவிற்கு அவளது உடல் லேசாய் நடுங்குவது புரிந்தது.

“ஆதிர மோளே, வசந்தாகிட்ட பால் வாங்கிட்டு வா…” என மூத்த மருமகளை வெளியே அனுப்பியவர் நியதியிடம்,

“பேடிக்கண்டா மோளே… ஆதிக்கு எல்லாம் தெரியும்ல, உன்னை சங்கடப்படுத்த மாட்டான்… பட்சே, நீ அவனை விட்டு ஒதுங்கி நிற்காதே அவனை மனசிலாக்கானும், சினேஹிக்கானும் தொடங்கணும்… அப்பதான் உங்க ஜீவிதம் சந்தோஷமா இருக்கும்… இனி அவனுக்கு நீயும், உனக்கு அவனும் தான் எல்லாம், அதை மனசில் வச்சா மதி…”

“ம்ம்…” தலை குனிந்தபடி சொன்னாள் நியதி.

ஷோபனா சொன்னதைக் கேட்ட அம்பிகை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். ஷோபனா சாதாரண மாமியார் கதாபாத்திரத்தில் இருந்து நிரம்பவே வேறுபட்டவராய் அவருக்குத் தோன்றியது.

“சாவித்திரி தான் நியதிக்கு நல்ல மாமியார் என்றால் ஷோபனா அவளை விட நல்ல மாமியாராய் இருக்கிறாரே… என் மகளுக்குக் கிடைத்த இரண்டு வாழ்க்கையும் சிறப்புதான், இந்த வாழ்க்கையாவது அவளுக்கு நிலையான சந்தோஷத்தைக் கொடுக்கட்டும்…” என வேண்டிக் கொண்டார்.

ஆதிரா நியதியை அழைத்துக் கொண்டு பால் சொம்புடன் மாடிப் படியேற அவளுக்கு தவிப்பாய் இருந்தது. என்னதான் ஷோபனா ஆறுதல் சொன்னாலும் மனதில் அபிமன்யுடன் நடந்த சாந்தி முகூர்த்தத்திற்கு கையில் பால் சொம்பும், மனதில் நிறைந்த கனவுகளும், அவனது முரட்டுத் தனத்தை எண்ணி சிறு பயத்துடனும், அதையும் தாண்டிய சந்தோஷ எதிர்பார்ப்புடனும் அறைக்கு சென்றது நினைவில் வந்தது. மனம் படபடவென அடித்துக் கொள்ள இந்நேரத்தில் இப்படி யோசிக்கலாமா என்று மூளை கேட்டாலும் மனது சற்றும் இங்கிதம் இல்லாமல் அபியுடன் கழித்த நாட்களை அசை போடத் தொடங்க தவித்துப் போனவளின் உடல் மீண்டும் நடுங்கத் தொடங்கியது.

இந்த மனம் சும்மா கூட இருந்துவிடும், ஆனால் நினைக்கக் கூடாது என்று ஒரு விஷயத்தை சொன்னால் அதையே தான் நினைத்துக் கொண்டிருக்கும். நியதியின் மனதும் அப்படி தான் பழையதும், புதிதுமாய் அலைக்கழிந்தது.

“நியதி பேடிக்கண்டா, ஆதி வளரே கூலானு… என்ஜாய்…!” என கண்ணடித்துச் சொன்ன ஆதிரா அவளை உள்ளே செல்லச் சொல்லிவிட்டு வெளியே நிற்க, சில வினாடிகள் கண்ணை மூடி மனதைக் கட்டுப்படுத்தி பின்னிக் கொண்ட கால்களை சிரமத்துடன் உள்ளே எடுத்துவைத்தாள் நியதி.

அவள் உள்ளே வரவும் சட்டென்று கதவு தாழிடப்பட அவள் மேல் பூமழை பெய்தது. சமந்தியும், ரோஜாக்களும், மல்லிகையும் அவள் மேல் விழுந்து சிதறின. திகைத்தவள் சட்டென்று ஒலித்த ‘மலரே நின்னே காணாதிருந்தால்’ பாடலில் திரும்ப கதவில் சாய்ந்து புன்னகை மன்னனாய் நின்றிருந்தான் அவள் கணவன் ஆத்ரேயன்.

புருவத்தையும், இரு தோள்களையும் ஒருங்கே தூக்கி கைகளை விரித்தவன், “வெல்கம் அவர் ரூம் மலர் டீச்சர்…” எனவும் அவள் முகத்திலும் ஒரு மென்னகை தவழ்ந்தது.

அலங்காரம் எதுவுமில்லாமல் அங்கங்கே பூங்கொத்துகள் மட்டும் சுவரில் வைக்கப்பட்டிருக்க பூக்களின் இனிய நறுமணம் மட்டும் அறையில் நிறைந்திருந்தது. மிகவும் இலகுவாய் அந்த தொடக்கம் அமைய கையில் இருந்த பால் சொம்பை அவனிடம் நீட்டினாள் நியதி.

“ஓ பால்…!” என்றவன் வாங்கி பாதியைக் குடித்துவிட்டு மீதியை அவளுக்குக் கொடுக்க வாங்கிக் குடித்தாள்.

காலி சொம்பை கட்டில் அருகே இருந்த டீப்பாயில் வைக்க, “இரிக்கு முத்தே…” கட்டிலில் அமர்ந்து அவளை அழைத்தான்.

அவள் தயக்கமாய் அந்த வெல்வெட் விரிப்பில் அமர்ந்தாள்.

“எங்கனே உண்டு நம்முடே ரூம், மலர் கொண்டு அலங்கரிச்ச ரூமில் மலர் டீச்சரும் வந்தப்போ தேவலோகம் போலே இல்லே…” அவன் சொல்ல அவளுக்கு கூச்சமாய் இருந்தது.

“முத்தே…! நினக்கு நல்ல டயர்ட் இருக்கும்னு தெரியும், கொஞ்ச நேரம் பேசிட்டு அப்புறம் தூங்கலாமா…?” அவன் கேட்க அவள் சற்று நிம்மதியாய் தலையசைத்தாள்.

“சொல்லு, உனக்கு ரோஸ் பிடிக்கும், முருகர் பிடிக்கும், காப்பி பிடிக்கும், டார்க் க்ரீன் கலர் பிடிக்கும்… சிம்பிளாப் புறப்படப் பிடிக்கும், சேலை கட்டப் பிடிக்கும் வேற என்னெல்லாம் பிடிக்கும்…?” என அவளுக்குப் பிடித்ததை அவன் லிஸ்ட் போட சுகமாய் திகைத்தாள்.

“இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்…?”

“ஹூம், என்னைப் பற்றி என்ன நினைச்ச… நின்னே பற்றி ஆராய்ச்சி பண்ணி ஒரு பிஎச்டி யே முடிச்சிருக்கேன்… அதெல்லாம் தெரிஞ்சதால தான யோகா கிளாஸ் நடுவுல நீ கார்டன்ல இருக்கும்போது அப்பப்போ ரோஸ் எல்லாம் கொடுத்து விட்டேன்…” என மறுபடி திகைத்தாள்.

அவள் தியானத்தில் இருக்கும் அதிக நாளும் யாராவது குழந்தையோ, வேறு யாராவதோ ரோஜா தந்தது நினைவு வர,

“அதெல்லாம் நீங்களா கொடுத்து விட்டிங்க…?” என்றாள்.

“ம்ம்… நான் வந்து கொடுத்திருந்தா தான் நீ வாங்கி இருக்க மாட்டியே, அதான் குட்டீஸைத் தூது விட்டேன்…” எனத் தோளைக் குலுக்க அந்த செய்கை அவனுக்கு அழகாய் இருப்பது போல் அவள் உணர்ந்தாள்.

“சரி, நம்ம வீட்டுல எல்லாரையும் உனக்குப் பிடிச்சிருக்கா…? இந்த ரூம் பிடிச்சிருக்கா…?” அவன் கேட்கவும் விஸ்தாரமான அந்த அறையைச் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.

சுவரில் ஒரு பக்கம் ஏசி, அதற்குக் கீழே ஆத்ரேயன் நீண்ட தாடி, தூக்கிக் கட்டிய கொண்டையுடன் இருந்த பெரிய லாமினேஷன் போட்டோ, தாடியை எடுப்பதற்கு முன் போட்டோ பிடித்து மாட்டியிருந்தான். அவன் அடிக்கடி சொல்வது போல் நடிகர் யாஷ் சாயல் இருந்தது.

அவள் பார்வையை கவனித்து அதன் அருகே சென்ற ஆதி, “எங்கனே முத்தே, ராக்கி பாய் போலே உண்டோ…” எனக் கேட்க அவள் இதழில் மென்னகை விரிந்தது.

“ராக்கி பாய் பத்தி எனக்குத் தெரியாது, ஆனாலும் இந்த லுக் உங்களுக்கு ரொம்ப மாட்ச் ஆகுது… நைஸ் போட்டோ…”

“வாவ்… ரியல்லி, அப்போ மறுபடியும் தாடியும், முடியும் நீட்டி இதே போல லுக் கொண்டு வர வேண்டியதுதான்…”

“ஹேய், வேண்டாம்… இந்த லுக்கும் நல்லாருக்கு…” அவள் வேகமாய் சொல்ல அவளை நோக்கி காதலுடன் புன்னகைத்தவன் கண்ணைச் சிமிட்ட அவள் வெட்கத்தில் சட்டென்று நாவைக் கடித்துக் கொண்டாள்.

“சரி, இவிடே நோக்கு…” என எதிர்ப்புற சுவர் அருகே சென்று அவன் குரல் கொடுக்க திரும்பியவள் திகைத்தாள்.

அதில் ஆத்ரேயனும், நியதியும் ஓவியமாய் வரைந்து பிரேம் செய்யப்பட்டிருந்தனர். சட்டென்று எழுந்தவள் போட்டோவின் அருகே சென்று வியப்புடன் தொட்டுப் பார்த்தாள்.

ஆத்ரேயனின் ஒரு கையை இரு கையால் சுற்றி வளைத்து அவன் தோளில் சாய்ந்திருந்தாள் நியதி. அவள் முகத்திலும், கண்களிலும் அமைதி நிறைந்திருந்தது. இருவரின் முகமும் மிகவும் தத்ரூபமாய் இருக்க எழுந்து சென்று சில நிமிடங்கள் அந்த ஓவியத்தையே பார்த்தாள் நியதி.

அவள் அருகே வந்த ஆத்ரேயன், “எந்தா முத்தே…! நினக்கு இஷ்டமாயோ…?” எனக் கேட்க அவனை நோக்கித் திரும்பியவளின் முகத்தில் சந்தோஷத்தை உணர்ந்தான்.

“இ..இது எப்படி, எப்ப வரைஞ்சது…?”

“நாம பொள்ளாச்சி போயி அந்த அங்கன்வாடில தங்கினதை மறக்கவே முடியாது, அதான், நினைவுக்கு இருக்கட்டும்னு வரைய சொன்னேன்… உனக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு இப்ப மாட்டினேன், பிடிச்சிருக்கா முத்தே…?” தேனில் குழைத்தது போல் மென்மையாய் ஒலித்த அவனது குரலுக்கு பதில் சொல்லாமல் அந்த ஓவியத்தையே பார்த்தவள் மனது அந்த தினத்தை அசை போட ஆதியின் தோளில் சுகமாய் சாய்ந்து உறங்கியது நினைவில் வந்து அவள் முகத்தை செம்மையாக்கியது.

Advertisement