Advertisement

“எந்தா நியதி, நாளுக்கு நாள் நின்டே முகத்தில் குளோ கூடிட்டே போகுது, எந்தா ரகஸ்யம்…? பாஸ் ஸ்பெசலாய் கவனிச்சாரா…?” என அவள் கேட்க சட்டென்று நியதியின் ரோஸ் கன்னங்கள் மேலும் சிவக்க தவிப்புடன் வேறு எதையாவது பேசி அந்தப் பேச்சை திசை திருப்ப முயல்கையில் ஜான்சிக்கு புரிய அவள் சிரிப்பாள். ஏதேதோ யோசித்தபடி அமர்ந்திருந்தவள் கார் ஓரிடத்தில் நின்றதும் நிமிந்து பார்க்க வீடு வந்திருந்தது.

“முத்தே இறங்கி வா…!” புன்னகையோடு காதலை இழைத்து கை நீட்டி அழைத்தான் ஆத்ரேயன். அவன் கை பற்றி இறங்கியவளை வரவேற்க எல்லாரும் காத்திருக்க மணமக்களுக்கு ஆரத்தி சுற்றி அழைத்துச் சென்றனர்.

நியதியை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று விளக்கேற்ற வைத்து இருவரையும் பகவானை வணங்க சொன்னார் ஷோபனா. நடுவில் வீற்றிருந்த நீல நிறக் கிருஷ்ணர் சிலை அவளை நோக்கிப் புன்னகைப்பது போல் தோன்ற மனமார வேண்டிக் கொண்டாள் நியதி.

“கிருஷ்ணா…! நான் எந்த ஜென்மத்தில் பண்ணின பாவமோ என் முதல் கல்யாண வாழ்க்கை தொடக்கத்துலயே முடிஞ்சு போயிருச்சு, உன் புண்ணியத்துல மறுபடி எனக்கு ஒரு வாழ்க்கை கிடைச்சிருக்கு, இங்க என்னால யாருக்கும் ஒரு சங்கடமும் வராம நீதான் பார்த்துக்கணும்…” வேண்டினாள்.

இருவரையும் ஹால் சோபாவில் அமர வைத்து பெரியவர்கள் பால், பழம் கொடுத்தனர். சற்று ஓரமாய் தள்ளி நின்ற அம்பிகையை அழைத்த ஷோபனா, “ஏன் மாறி நிக்குது, வரின்…” என அரைகுறைத் தமிழில் அழைக்க புன்னகையுடன் வந்த அம்பிகை இருவருக்கும் ஸ்பூனில் பால், பழம் எடுத்து ஊட்டி விட்டார்.

அடுத்து ஆதிரை கொடுக்கவும் கவனித்துக் கொண்டிருந்த நயனா, “நானு செரிம்மைக்கு கொதுக்காம்…” என ஓடி வர, நவீனும் போட்டிக்கு வந்தான். குழந்தைகளின் கை பிடித்து ஷோபனா இருவருக்கும் கொடுக்க வைக்க நயனா நியதியின் அருகில் அமர்ந்து கொண்டாள். அடிக்கடி நியதியின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

“சிஞ்சு குட்டி எந்தா நோக்கனது…?” ஆத்ரேயன் அதை கவனித்துக் கேட்க, “செரிச்சா, செரியம்மா பூவொக்கே வச்சப்போ நல்ல சுந்ததி ஆயி, செரிம்ம எனிக்கு இந்த பூ தருவோ…?” எனக் கிராப் தலையைத் தொட்டுக் கேட்டாள்

“ஆஹா, முடி இல்லாத தலையில் பூ வைக்கனோ என்டே சிஞ்சு மோள்க்கு, அச்சம்மா வேற வச்சு தராம்…” எனக் கூறிய ஷோபனா பேத்தியை எடுத்துக் கொண்டார். மற்றவர்களும் கொடுத்து முடிக்க சிறிது ஓய்வெடுக்க சொல்லி நியதியை அறைக்கு அனுப்பி வைத்தார்.

“மோளே குறச்சு ரெஸ்ட் எடுத்திட்டு குளிச்சு டிரஸ் மாற்றிக்கோ… அம்மே…! நிங்களும் மோள்டே கூடப் போங்க…” என அம்பிகையையும் அனுப்ப அவரும் உடன் சென்றார்.

அம்பிகைக்கும் நியதியிடம் சில விஷயங்கள் பேச வேண்டி இருந்தது. மறுநாள் மாலை ரிசப்ஷனுக்கு இருந்தால் அதற்கு மறுநாள் தான் அவரால் போக முடியுமென்பதால் இன்று இரவு தங்கிவிட்டு காலையில் கிளம்ப நினைத்தார்.

அறைக்கு சென்ற நியதி அமைதியாய் கட்டிலில் அமர்ந்தாள்.

“நியதி மா…!”

“ம்ம்…” என்றவள் தலை குனிந்து அமர்ந்திருக்க அவள் தோளில் ஆதரவாய் கை வைத்தார் அம்பிகை.

“என்னடா, ஏன் சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல இப்படி அமைதியா இருக்க…”

“அ..அம்மா…! எ..எனக்கு கொஞ்சம் பயமாருக்கு…” நியதி சொல்ல தவிப்புடன் அவளைப் பார்த்தார் அம்பிகை.

“ஏண்டா… என்ன பயம்…?”

“அ..அது வந்து… எ..என்னால அபியை நினைக்காம இருக்க முடியலை, ஆதி பக்கத்துல இருக்கும்போதும் மனசுல அபி நினைப்போட இருக்கறது ஒரு மாதிரி சங்கடமா இருக்கு…” முகத்தில் வேதனையோடு கண்களில் கண்ணீரும் நிறைய சொன்னவளின் நிலையை அம்பிகையால் உணர முடிந்தது.

“ஹேய்…! என்னடா இது… யோகா படிச்ச நீயே மனசைக் கன்ட்ரோல் பண்ண முடியாம இருக்கலாமா… இந்த உலகத்துல சந்தோஷமும், துக்கமும் எல்லாம் நாமளா நினைச்சுக்கிற விஷயங்கள்ல தான் இருக்கு… சந்தோஷமா இருக்க நினைச்சா மனசு சந்தோஷப்படும், துக்கம்னு நாம நினைச்சா வருத்தப்படும்… யோசிக்கிற விதம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது… ஆத்ரேயன் ரொம்ப நல்லவர், அவர் உன்மேல வச்சிருக்கிற அன்பு ரொம்ப அதிகம், அதைப் புரிஞ்சுகிட்டு அவரோட நீ சந்தோஷமா இருக்கணும்… உன்னைப் புரிஞ்சு ஏத்துகிட்ட உன் மாமியாருக்கும் இந்த குடும்பத்துக்கும் நீ ஒரு நல்ல மருமகளா இருக்கணும், இது இந்த அம்மாவோட ஆசை மட்டுமல்ல, உன் அத்தை சாவியோட ஆசையும் அதுதான்…”

“ம்ம்… நானும் அப்படிதான் நினைக்கறேன், அ..ஆனா அபியோட நினைவு வர்றதைத் தவிர்க்க முடியலையே…” அவள் கண்ணீருடன் சொல்ல அம்பிக்கைக்கு அவள் நிலை புரிந்ததால் வருத்தமாய் இருந்தது.

“ஒருவனைக் கணவனென்று மனதில் பதிய வைத்துவிட்டு இப்போது அவனை அழித்து வேறு ஒருவனின் உருவத்தை அங்கே பதிய வைத்துக் கொள்ள மனம் என்ன காகிதமா, ரப்பர் வைத்து அழிக்க… காலமும், ஆத்ரேயனின் நேசமும் தான் அவள் மனதை மாற்ற வேண்டும்…” என யோசித்துக் கொண்டவர் ஆறுதலாய் அவள் தோளில் தட்டிக் கொடுத்தார்.

“பீல் பண்ணாத நியதி மா… ஆத்ரேயனின் நேசம் உன் மனசுல பதியும்போது எல்லாம் சரியாகிடும்… ஆனா அவர் உன்னை நெருங்கும்போது நீ விலகி நிற்காத, அவரைப் புரிஞ்சுக்க, ஏத்துக்க முயற்சி பண்ணு… எல்லாம் சரியாகும்…” ஒரு அன்னையின் ஸ்தானத்தில் இருந்து அவள் மகளுக்கு அறிவுரை சொல்ல மௌனமாய் தலையாட்டினாள் நியதி.

சற்று நேரத்தில் அங்கே வந்த ஆதிரா, “நியதி, நீ இன்னும் குளிச்சில்லே… வேகம் குளிச்சிட்டு டின்னர் கழிக்கான் தாழே வா… அம்ம விளிக்குனு…” என்று கூறிச் சென்றாள்.

“நியதி மா குளிச்சிட்டு வா, கொஞ்சம் ரிலாக்ஸா இரு… இனி இதான் உன் குடும்பம், நான் நாளைக்கு காலைல கிளம்பிடுவேன், ரிசப்ஷனுக்கு என்னால இருக்க முடியாது…”

“அதுக்குள்ளே ஏன் மா… ரெண்டு நாள் இருந்திட்டுப் போகலாமே…”

“இல்லடா, உனக்கே நம்ம ஆஸ்ரமம் பத்தித் தெரியும்ல, அதுவுமில்லாம நாளைக்கு ஈவனிங் ஒரு டிரஸ்ட்ல இருந்து வரேன்னு சொல்லிருக்காங்க, நான் இல்லேன்னா நல்லாருக்காது இல்லியா… சரி, நீ குளிச்சிட்டு வா…” என்றவர் டவலை எடுத்து நீட்ட அவளது சூட்கேஸைத் திறந்தவள் ஒரு சிம்பிளான சேலையை எடுக்க,

“இது வேண்டாம், ஒரு ஊதாக் கலர் கிரேப் சில்க் அம்மா வரும்போது வாங்கிட்டு வந்தனே, அதைக் கட்டிக்க… நான் எடுத்து வைக்கிறேன் நீ போ…” என அனுப்பி வைத்தார்.

சிறிது நேரம் ஷவரில் நின்றவள் உடலுக்கு சோப் தேய்க்கும்போது கழுத்தில் கிடந்த தாலிச் செயினையும், அதிலிருந்த தாலியையும் பார்த்தவள் மெல்ல அதை வருடிக் கொண்டாள். அதைக் கழுத்தில் போடும்போது மிக அண்மையில் தெரிந்த ஆத்ரேயனின் புன்னகை முகம் நினைவில் வர சற்று சிலிர்ப்பாய் உணர்ந்தாள். உண்மையாகவே குளித்ததும் ஒரு புத்துணர்வு தோன்றியது. மனதை அலட்டிய குழப்பங்கள் விலக, இனி இந்த புது வாழ்க்கைக்குப் பழகிக்கொள்ள வேண்டுமென்று மனதைத் தயார் செய்து கொண்டாள் நியதி.

அம்பிகை எடுத்து வைத்த சேலையை அழகாய் உடுத்து சிம்பிளாய் தலை சீவிப் புறப்பட்டவள், கழுத்தில் கிடந்த தாலிச் செயின் மட்டுமே நிறைவாய்த் தோன்ற மற்ற நகைககளை அலமாரியில் வைத்துப் பூட்டிவிட்டு அவரை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள். சின்ன மருமகளைக் கண்டதும் புன்னகைத்த ஷோபனா, “வா மோளே, வாங்க…” என ஹாலில் அமர்ந்திருந்த வயசான பெண்மணியிடம் அறிமுகப்படுத்த அழைத்துச் சென்றார்.

“இது என்டே மேமா… அம்மயுட அனியத்தி, அதான் தங்கச்சி… ஆதிக்கு அம்மும்மா, அனுகிரகம் வாங்கிச்சோ மோளே…”

“ம்ம்…” என்ற நியதி அந்த வயதிலும் அழகாய் இருந்த கம்பீரமான பெண்மணியின் காலில் விழுந்து வணங்கினாள்.

“சௌபாக்யவதியாயிட்டு இரிக்கு மோளே, இவிட இரிக்கு…” என அருகில் அழைத்து அமர்த்திக் கொண்டார்.

“இவளு ஆஸ்ரமத்தில் வளர்ந்த குட்டினு பறஞ்சு… அங்கே தனியே வளர்ந்த போல ஜீவிதம் அல்ல குடும்பத்தில்… இவிட எல்லாரையும் ஸ்னேஹிக்கானும், அட்ஜஸ்ட் செய்து போவானும் அவளுக்கு தெரிஞ்சிருக்காது… எல்லாம் இந்த பிரேமம் படுத்துற பாடு, இல்லேன்னா இவளைப் போல ஒருத்தி இந்த குடும்பத்துல மருமகளா வர முடியுமா…?” என மூஞ்சியை சுளித்து அந்தம்மா கேட்க அருகே இருந்த குட்ட மாமா அக்காவின் முகத்தைப் பார்த்தார். “பாரு நான் கேட்டப்ப சமாளிச்சியே, இப்ப என்ன சொல்லப் போற…” என்ற கேள்வி அதில் இருந்தது.

“நியதி மோளே… இதுக்கான பதிலை நீ பரயனம்னு நான் நினைக்கிறேன், பரயு…” என்றார் ஷோபனா.

“அம்மும்மா…! நான் வளர்ந்தது வேணும்னா ஆஸ்ரமத்தில் இருக்கலாம், அங்கேயும் ஒருத்தருக்கு ஒருத்தர் நேசிக்க தான் பழக்கி இருக்காங்க… அதுவும் இல்லாம உறவுகளோட அருமை யாருமில்லாம வளர்ந்த எங்களுக்கு நல்லாவே தெரியும்…” நியதி சொல்ல ஷோபனாவின் முகத்திலும், அம்பிகையின் முகத்திலும் புன்னகை நிறைந்தது. அவள் சொன்னதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த ஆத்ரேயன்,

“சபாஷ்…! ஏதாயாலும் என்டே பார்ய ஊமையில்லேன்னு இப்ப மனசிலாயி… வடி கொடுத்து அடி மேடிக்கனோ அம்மும்மே…” எனக் கிண்டலாய் கேட்டுக் கொண்டே நியதியின் அருகே இயல்பாய் அமர்ந்து கொண்டான். அவனைக் கண்டதும் நியதி சிறு தவிப்புடன் தலையைக் குனிந்து கொள்ள ஷோபனா அவரது சித்தியிடம் புன்னகையுடன் கேட்டார்.

“எந்தா மேமே, என்ட மருமகளு எங்கனே…?”

“ம்ம்… தமிழத்திப் பெண்ணு கொள்ளாம்… எல்லாரையும் அனுசரிச்சு நிந்தால் எனிக்கும் சந்தோஷம் தன்னே, குடும்பத்தைப் பிரிக்காம இருந்தா சரி…”

“அதொக்கே நிக்கும் மேமே… எல்லா மருமகளும் நல்லது தன்னே, அவரை நம்ம எப்படி நடத்துறமோ அது தன்னே நமக்கு திரிச்சு தரும்… என்டே ரெண்டு மருமகளும் எனிக்கு மகளைப் போலயானு…” என்று சொன்ன ஷோபனாவை நியதிக்கு கட்டிக் கொள்ளலாம் போலத் தோன்றியது.

மாலையிட்ட புது பந்தம்

மனம் தேடும் உன் சொந்தம்…

கவலைகள் யாவும்

தடை செய்வேன்…

கண்ணோர நீர்த்துளியைக்

கைது செய்வேன்…

உன் இதயச் சிறையில்

ஆயுள் கைதியாவேன்…

Advertisement