Advertisement

 அத்தியாயம் – 22

அந்த இதமான காலையில் குருவாயூரப்பனின் கோவில் சன்னிதானம் முன் வரிசையாய் கல்யாண மேடைகள் அமைக்கப்பட்டிருக்க பல கல்யாண ஜோடிகள் மாலையும் கழுத்துமாய் நின்றிருந்தனர். கண்களில் எதிர்காலக் கனவோடும், இதழில் நாணம் கலந்த சிறு சிரிப்போடும் நின்ற மணப் பெண்களைக் காணவே அழகாய் இருந்தது. அவர்களைச் சுற்றிலும் சுற்றமும், நட்பும் கூடியிருக்க அந்த காலை வேளை மிகவும் சிறப்பாய் இருந்தது.

ஒரு மேடையில் ஆத்ரேயன் அருகே நெற்றியில் குங்குமத்துடனும், கழுத்தில் துளசி மாலையுடனும் நின்ற நியதியைக் கண்ட அம்பிகையின் கண்கள் சந்தோஷத்தில் கலங்கின. கேரளா சேலையும், கேரள முறைப்படி கழுத்தில் மின்னிய தங்கச் செயினில் கோர்த்திருந்த லாக்கெட் போன்ற தாலியும் அவளுக்கு புதுப் பொலிவைக் கொடுத்திருந்தது. தாலி வாங்கும்போது தமிழர் வழக்கப்படி வாங்க வேண்டுமா, மலையாள வழக்கப்படியா என்று கேட்க நியதிக்கு என்ன சொல்லுவதென்று தெரியாமல் அம்மாகிட்ட கேட்டுக்கங்க என்றுவிட்டாள். அம்பிகையிடம் கேட்க சற்று யோசித்தவர், “உங்கள் வழக்கப்படியே வாங்குங்க…” என்றுவிட, (கல்யாணம்) மின்னுகெட்டுக்கு அவர்கள் குடும்ப வழக்கப்படி நாயர் ஸ்டைல் தாலியை வாங்கி இருந்தான் ஆத்ரேயன்.

எப்போதும் பவுடர் கூடப் போடாமல் இருப்பவள் இன்று கண்ணுக்கு மை எழுதி, தலையில் பூ வைத்து மிதமான அலங்காரத்தில் கொள்ளை அழகோடு இருந்தாள்.

நியதிக்கு அலங்காரத்தில் விருப்பம் இல்லாவிட்டாலும் அவள் போக்கில் இருந்துவிட ஷோபனா சம்மதிக்கவில்லை. கழுத்திலும், கையிலும் அவர் கொடுத்த நகைகளை அணிய வைத்து, தலை நிறையப் பூ வைத்து பொன் சரிகை வேய்ந்த கேரளப் பட்டு சேலையில் புறப்பட வைத்தே அவளை மணமேடைக்கு அழைத்து வர வைத்தார். அதற்கான பொறுப்பை மூத்த மருமகளிடம் கொடுத்திருக்க அவளும் நியதியுடன் இருந்து பொறுப்பாய் கவனித்துக் கொண்டாள்.

எத்தனையோ நாட்கள் மனதில் கொண்டு நடந்தவளை தனது மனையாளாய் தான் கட்டிய தாலியை நெஞ்சில் சுமந்து தன் கரம் பிடித்து வலம் வருபவளைப் பரவசமாய் அடிக்கடி பார்த்துக் கொண்டான் ஆத்ரேயன். அவன் மனது எல்லையில்லா சந்தோஷத்திலும், தன் பொறுப்பானளைக் கலங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்ற கடமையையும் யோசித்தபடி இருந்தது.

மின்னுகெட்டு நல்லபடியாய் முடிய கல்யாணத்தை ரெஜிஸ்டர் செய்வதற்காய் இருவரிடமும் ஒரு ரெஜிஸ்டரில் கையெழுத்து வாங்கிக் கொண்டார் கோவில் நிர்வாகி ஒருவர். மணமக்களுக்கு சிறப்பு தரிசனமாய் குருவாயூரப்பனை வணங்க தனி வழியே அழைத்துச் சென்றனர். பல வரிசைகளில் காத்திருந்த பக்தர்களைக் கடந்து சந்நிதியை அடைந்தனர். நியதி முதன் முதலாய் அங்கே செல்வதால் அங்கே இருந்த கூட்டத்தையும், நெடுநேரமாய் வரிசையில் காத்துக் கிடந்த பக்தர்களையும் கண்டு திகைத்துப் போனாள்.

கேரளா நாடன் சேலையும், செட்டு முண்டும் அதிகமாய் கண்ணில் பட்டு ஒரு மங்களத் தோற்றத்தைத் தர, சரளமாய் அங்கங்கே கேட்ட தமிழ் சத்தத்தில் தமிழ்நாட்டு பக்தர்களுக்கும் அங்கே குறைவில்லை எனப் புரிந்தது.

அடக்கமாய் எரியும் தீபங்களின் நடுவே புன்னகை முகமும் அருள் வழியும் கண்களுமாய் நின்ற நீல நிறத்தவனை கண்கள் கலங்க இரு கை கூப்பி வணங்கினாள் நியதி. மனதில் ஏதேதோ எண்ணங்கள் கலந்து கட்டி வர, துக்கம், பதட்டம், பயம், சிறு எதிர்பார்ப்பு என கலவையாய் இருந்தாலும் சந்தோஷத்தை மட்டும் அவளால் உணர முடியாமல் குழப்பம் நிறைந்திருந்தது. கடவுளை நோக்கி நின்றவளுக்கு என்ன வேண்டுவது எனத் தெரியாமல் வெறுமனே கண்ணீருடன் பார்த்து நின்றாள்.

கடவுளின் சந்நிதியில்

கோரிக்கையற்று நின்றேன்…

வரமே எனக்கு

வாழ்க்கை தந்ததால்…

அவள் கை பற்றிய ஆத்ரேயன், “வா…” என அழைத்துக் கொண்டு நகர்ந்தான். ஐயப்பனையும், பகவதியையும் வணங்கி பிரகாரத்தை வலம் வந்து வெளியே வந்தனர். ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் மதிய உணவை முடித்துக் கொண்டு அவர்கள் எடுத்திருந்த பெரிய ஹாலுக்கு வந்தனர். அங்கே சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு கிளம்பினர்.

ஒரு பேருந்தும், நான்கு காரிலுமாய் வந்திருக்க, ஒரு அலங்கரிக்கப்பட்ட காரில் டிரைவரும் பின் இருக்கையில் ஆத்ரேயன், நியதி மட்டுமே இருந்தனர். தன் அருகே மௌனமாய் யோசனையுடனே அமர்ந்திருக்கும் நியதியை நெகிழ்வுடன் பார்த்தான் ஆத்ரேயன்.

தாழ்ந்த குரலில், “முத்தே…” என அழைக்க நிமிர்ந்தவள் அவன் முகத்தைக் காண முடியாமல் மீண்டும் குனிந்து கொள்ள அவனுக்குத் தவிப்பாய் இருந்தது. எதையோ யோசித்து அலட்டிக் கொண்டிருக்கிறாள் எனப் புரிய அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.

அவள் கையில் ஆறுதலாய் தட்டிக் கொடுத்தவன், அவளை சற்று நெருங்கி அமர அவள் தவிப்புடன் ஒடுங்கினாள். அந்த நெருக்கம் அவளை என்னவோ செய்ய மனம் நடுங்கியது.

“நேரத்தே எனிற்றதல்லே, குறச்சு உறங்கிக்கோ முத்தே…” என்றவன் அவள் தலையைத் தன் தோளில் சாய்த்து வாகாய் அமர்ந்து கொள்ள அவளுக்கும் மறுக்கத் தோன்றவில்லை. அவனை நன்றியுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு கண்ணை மூடிக் கொண்டாள்.

எதையும் பார்க்கவும் சிந்திக்கவும் பிடிக்காமல் கண்ணை மூடிக் கொண்டது ஒரு விடுதலை போல் தோன்றியது. ஆனாலும் மனதுக்குள் அபியுடன் கல்யாணக் கோலத்தில் வெட்கமும், சிரிப்புமாய் மாலையுடன் நின்ற கோலம் படமாய் விரிய வேதனையில் முகம் சுளித்தாள் நியதி. மனதுக்குள் எத்தனையோ எதிர்பார்ப்புடன் புதுப் பெண்ணுக்கே உரிய நாணத்துடன், சந்தோஷமாய் அபியின் சீண்டலை ரசித்துக் கொண்டிருந்தது நினைவில் வந்தது. சட்டென்று ஆத்ரேயனை யோசித்தவள் தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.

“ச்சே… நெஞ்சில் ஆதி கட்டிய புதுத் தாலியை சுமந்து, அவன் தோளில் சாய்ந்து கொண்டு அபியைப் பற்றி யோசிப்பது இவனுக்கு செய்யும் துரோகம் ஆகாதா…?” என மனம் சாட அதே மனம், “அப்படியானால் உன்னை உயிராய் காதலித்து ஒரு மாதமே வாழ்ந்தாலும் சொர்கத்தையே உணர வைத்த அபிமன்யுவுடன் வாழ்ந்த வாழ்க்கையை நீ மறந்து விட நினைப்பது அவனுக்கு செய்யும் துரோகம் ஆகாதா…?” மாறி மாறி மனம் அவளைக் கேள்வி கேட்க, தவிப்புடன் கண்ணை சுருக்கிக் கொண்டவளை ஆத்ரேயன் கவனித்தான்.

மெல்ல அவள் பக்கமாய் குனிந்து கிசுகிசுத்தான்.

“நிதி மோளே… நீ நிறைய யோசிச்சு மனசைக் கஷ்டப் படுத்திக்காதே… இந்த உலகத்தில் நடக்கிற எல்லா விஷயத்துக்கும் ஏதாவது காரணம் இருக்கும்… சரி, தப்புன்னு எதுவும் கிடையாது, ஒருத்தரோட சரி இன்னொருத்தருக்கு தப்பா இருக்கலாம், ஒருத்தரோட தப்பு இன்னொருத்தனுக்கு சரியா இருக்கலாம்… அதனால நடக்கிறதை அதன் போக்கில் ஏற்றுகிட்டு அந்த நிமிடத்தை வாழ்ந்திட்டுப் போகணும்… கடவுள் எழுதியதை யாராலும் மாற்ற முடியாது, ஆனா நமக்கு கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கையை முடிஞ்ச வரை சந்தோஷமா வாழ்ந்திடனும்… முடிந்ததை யோசிச்சு மனசைக் கஷ்டப்படுத்தாம வரப் போறதை யோசி…” அவன் சொன்னதைக் கேட்டதும் மனது ஒரு கட்டுப்பாட்டுக்கு வர மீண்டும் கண்ணை மூடிக் கொண்டாள்.

“நடந்த எதையும் மாத்த முடியாது, நடக்கப் போற எதையும் தடுக்க முடியாது… சாகும்போது கூட என்னோட எதிர்காலத்தை யோசிச்சு வேற கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அத்தைகிட்ட சத்தியம் வாங்கிய அபியோட காதல் தோத்துப் போகக் கூடாது, அது நான் ஆதியோட சந்தோஷமா வாழுற வாழ்க்கைல தான் பூர்த்தியாகும்…” அவளே ஒரு தீர்வைக் கண்டு பிடிக்க மனம் அமைதியானது.

பிரச்சனைக்கான

தீர்வுகளைத் தேடாத

வரை மனம்

திடம் கொள்வதில்லை…

தன் தோளில் அமைதியாய் உறங்கத் தொடங்கியவளைக் கண்ட ஆதியின் மனம் கனிந்தது.

“முத்தே… ! உன் மனசு பழசையும், புதுசையும் நினைச்சு குழம்பிட்டு இருக்குன்னு எனக்குத் தெரியும்… என் நேசத்தை நீ முழுமையாப் புரிஞ்சுக்கும்போது பழைய நினைவுகளை மனசு தேடாது, கண்டிப்பா என்னைப் புரிய வைப்பேன்…” என்றவன் அவளது கையைக் கோர்த்துக் கொண்டு அவள் தலை மீது தன் தலையை சாய்த்து கண் மூடிக் கொண்டான்.

சிறிது நேரம் கழிந்து கண் திறந்த நியதி, தனது தலை மேல் தலை சாய்த்து உறங்குபவனை நெகிழ்வுடன் நோக்கிவிட்டு அசையாமல் அப்படியே தலையை வைத்துக் கொண்டாள்.

மாலை நான்கு மணிக்கு மூணாரை நெருங்கி இருந்தனர். நாலரைக்கே மணமக்கள் வீட்டுக்கு செல்ல நல்ல நேரம் என்பதால் இவர்கள் காருடன் குட்ட மாமா, ஷோபனா வந்த காரையும் மெதுவே வரச் சொல்லிவிட்டு மற்றவர்கள் முன்னே சென்று விட்டனர். குட்ட மாமாவுக்கு இந்தக் கல்யாணத்தில் அவ்வளவு திருப்தி இல்லை.

“அதெந்தா… நின்டே மகனு இவிடத்த பெண் குட்டிகளை ஒந்தும் கண்ணுக்குத் தெரியலியா, ஒரு தமிழ்ப் பெண்ணை லவ் பண்ணிருக்கான்… அதும் குடும்பம், கோத்திரம் ஒண்ணும் இல்லாதே ஆஸ்ரமத்தில் வளர்ந்த குட்டி… நம்ம குடும்பத்துக்கும், அந்தஸ்துக்கும் இதெல்லாம் சரி வருமா…?”

“எல்லாம் சரியா வரும்… நான் ஆதியோட அச்சனை சிநேஹிச்சப்ப இப்படிதான் வீட்டில் எல்லாரும் குதிச்சிங்க, அவருக்கு என்ன… தங்கம் போல மனுஷன், என்னை எவ்ளோ நல்லாப் பார்த்துகிட்டார்… மொழியில் என்ன இருக்கு, எல்லாரும் மனுசங்க தானே…” என்றார் ஷோபனா.

“ம்ம்… நீதன்னே நின்டே பிள்ளைகளைக் கெடுக்கறது, அந்தக் குட்டிக்குன்னு யாரும் இல்ல, குடும்பமும் இல்லை…”

“அதுக்கென்ன, நம்ம குடும்பத்துக்கு வந்தபிறகு நாமெல்லாம் இருக்கமே… அவளும் நம்ம குடும்பம் தானே…”

“நான் சொன்னா நீ எப்ப கேட்டிருக்க, என்னவோ செய்… ஊரு பூரா என் மருமகனுக்குப் பொண்ணு தேடி அலைஞ்சா ஏதோ ஒரு அனாதைப் பெண் குட்டியை வீட்டுக்கு மருமகளாக் கொண்டு வரப் போறதா சொல்லறிங்க…” கோபத்துடன் சொன்ன தம்பியிடம் அமைதியாய் சொன்னார் ஷோபனா.

“குட்டா…! அப்படி சொல்லாத, யாரும் இந்த உலகத்துல வேணும்னு அநாதை ஆகறதில்ல… அவங்களுக்கும் எல்லா உறவுகளோட குடும்பமா வாழ எவ்ளோ ஆசையிருக்கும்… அதும் இல்லாம குடும்பப் பெருமை, சொத்து, அந்தஸ்து விட மனசுக்குப் பிடிச்சவளைக் கல்யாணம் பண்ணறது தானே முக்கியம், அப்பதானே வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்…”

“ம்ம்… எதை சொன்னாலும் சமாதானம் சொல்லி என் வாயை அடைச்சிரு சேச்சி… என்னமோ பண்ணுங்க, ஒரு மாமனா சபைல என்ன பண்ணணுமோ சொல்லுங்க, நான் பண்ணறேன்…” என பேச்சை முடித்துக் கொண்டார்.

ஜான்ஸி, நிஷா இருவரும் குருவாயூர் வரவில்லை, நாளை ரிசப்ஷனில் கலந்து கொள்வதாகக் கூறி இருந்தனர். முன்பே நியதியின் மீது படியும் ஆத்ரேயனின் பார்வையையும், அவனது அக்கறையையும் அவர்கள் கவனித்திருக்க, நியதியிடம் அதைப் பற்றிக் கிண்டலாய் பேசும்போது அவள் முகம் சிவக்க தவிப்புடன் பேச்சை மாற்றி விடுவாள்.

Advertisement