Advertisement

அவர் எடுத்து வந்து கொடுக்க வாங்கிக் கொண்டு ஐநூறு ரூபாய் தாளை நீட்ட, “ஐயோ, சேஞ்ச் இல்லியே சாரே,..” என்றார் நாயர்.

“இரிக்கட்டே… எங்களுக்கு உபகாரம் செய்ததல்லே…” எனவும் சந்தோஷமாய் வாங்கிக் கொண்டவர் கடையை சாத்தும் முயற்சியைத் தொடங்க சாயாவைக் குடித்துவிட்டு கிளாசைக் கொடுக்க அவர் கிளம்பத் தயாராக இவர்களும்  அங்கன்வாடிக்கு கிளம்பினர்.

சிமென்ட் ஷீட் கூரையும், சிமென்ட் தரையுமாய் ஒரே அறையில் ஓரமாய் ஒரு திண்டுடன் இருந்தது. கதவைத் திறந்து மொபைல் உதவியுடன் சுவரில் இருந்த லைட்டைப் போட்டான்.

உள்ளே வந்து பார்த்த ஆத்ரேயன் அறை பாதுகாப்பானதுதான் எனத் தெரிந்ததும் அவளை அழைத்தான். இறங்கி வேகமாய் ஓடினாலும் அவளை ஆசையுடன் மழை தழுவியதில் நனைந்து போனாள். கையிலிருந்த டவலை அவன் நீட்ட வாங்கி முகம், கழுத்தைத் துடைத்துக் கொண்டு அந்த குட்டி அரண்மனையைப் பார்வையிட்டாள். பாத்ரூம் போக வேண்டுமென்று தோன்ற, தயக்கத்துடன் அவனை ஏறிட்டாள்.

“பாத்ரூம் எங்க இருக்கு…?”

“பின் கதவைத் திறந்தால் பாத்ரூமில் போகாம்…” அவன் சொல்லவும் பாத்ரூமுக்கு சென்றவள் அங்கே வீசிய மூத்திர நாற்றத்தைப் பொறுத்துக் கொண்டு இயற்கை உபாதையைத் தீர்த்துக் கொண்டு வந்தாள்.

சுவரில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்திருந்தான் ஆத்ரேயன். அங்கே கிடந்த சில நியூஸ் பேப்பரை எடுத்து விரித்து வைத்திருந்தான்.

“முத்தே… இன்னைக்கு சிவராத்திரி தான்னு தோணுது, இங்க நிறைய கொது (கொசு) இருக்கு…”

“ம்ம்… இல்லேன்னா மட்டும் அப்படியே தூங்க முடியுமா…?” மனதுக்குள் கேட்டுக் கொண்டவள் சுவரின் ஒரு பக்கமாய் அமர்ந்து கொண்டாள். இருவருக்கும் அந்தத் தனிமை மனம் விட்டுப் பேசவும், மனதால் நெருங்கவும் வாய்ப்பாய் அமைந்தது.

இருவரும் பிஸ்கட்டைக் கொறித்து பழத்தைத் தின்று தண்ணி குடித்து பசியைத் தீர்த்துக் கொண்டு அமர்ந்தனர்.

அவள் கொஞ்சம் அவஸ்தையாய் அமர்ந்திருக்க, “மலர் டீச்சர்னு பேடி உண்டோ…” என்றான் சிரிப்புடன்.

“எதுக்கு…?”

“என்டே கூடே இங்கனே ஒரு ரூமில் தனிச்சிரிக்கான்…”

“இல்லை…”

“என்னை அவ்ளோ விஸ்வாசமா…?”

“இல்லை, என் மேல் உள்ள நம்பிக்கை…” என்றவளைப் புன்னகையுடன் பார்த்தான் ஆத்ரேயன். “ம்ம்… சரி, சரி…”

“என்ன சரி… எனக்கு ஒரு டவுட்…”

“என்ன டவுட்…”

“நீங்க என்னை லவ் பண்ணீங்க…”

“ஹலோ, அது பாஸ்ட் அல்லா, லவ் பண்ணறேன்… மை லவ் ஈஸ் லைவ் மா…” அவன் வேகமாய் குறுக்கிட்டு சொல்ல அவள் இதழ்கள் மெல்லப் புன்னகையில் மலர்ந்தது.

“ஓகே, லவ் பண்ணறீங்க… என் அத்தை, அம்மா கிட்ட எல்லாம் சொல்லி என்னைக் கார்னர் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கறிங்க, உங்க வீட்டுல எப்படி ஒரு விடோவை உங்களுக்குக் கல்யாணம் பண்ண சம்மதிப்பாங்க…?” மனதின் குழப்பத்தைக் கேட்டே விட்டாள்.

“எந்தா முத்தே இங்கனே பரஞ்சது… எல்லாரும் கார்னர் செய்தது கொண்டானோ நீ கல்யாணத்தினு சம்மதிச்சது, நினக்கு என்னைத் தீரே இஷ்டமில்லே…? (கொஞ்சமும் பிடிக்கலியா) அவன் குரல் மென்மையாய் ஒலித்தாலும் அதில் வலி நிறைந்திருந்தது.

சற்று மௌனித்தவள், “என்னோட இஷ்டம் இங்கே முக்கியமில்லை ஆதி, உங்க பாமிலி எப்படி ஏத்துப்பாங்க… ஆன்ட்டிக்கு உங்க கல்யாணத்தைப் பத்தி நிறைய ஆசைகள் இருக்கும், அதைத் தாண்டி என்னைப் போல ஒருத்தியைக் கல்யாணம் பண்ண அவங்க எப்படி சம்மதிப்பாங்க…”

“அவங்க எல்லாருடைய ஆசையை விட என்னோட கனவும், ஆசையும் என் வாழ்க்கைல முக்கியம் இல்லையா நிதி மா… உன்னைப் பார்த்த நாள் முதலா என் மனசுல நீ இருக்க, ஒருவேளை, உனக்குக் கல்யாணமாகி நீ அபியோட நல்லபடியா வாழ்ந்திருந்தா நான் உன் நினைவுகளை அழிச்சிட்டு வேற பொண்ணைக் கல்யாணம் பண்ண சம்மதிச்சிருப்பனோ என்னவோ, இப்ப உன்னை என்னால அப்படி விட முடியல… நீ எனிக்கு வேணம் முத்தே, சிப்பிக்குள் முத்தைப் போல உன்னை என் கண்ணுக்குள் பத்திரமா வச்சுக்கறேன்…” என்றவனின் காதல் நிறைந்த பார்வை அவளை ஏதோ செய்ய தலையைக் குனிந்து கொண்டாள். அவனது காதலை உணர்கையில் மனதுக்குள் ஒரு சாரல் சிலிர்ப்புடன் பரவுவது புதிதாய் இருந்தது.

“இதுல என் சம்மதத்துக்கு என்ன அவசியம் இருக்கு, அதான் எல்லாரும் முடிவு பண்ணிட்டிங்களே, ஆனா உங்க வீட்டுல சம்மதிக்கலன்னா நீங்க அதுக்கப்புறம் நம்ம கல்யாணத்தைப் பத்திப் பேச மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க…”

அவள் தீர்மானமாய் கேட்க சற்றுத் திகைத்தவன் தைரியமாய் சொன்னான்.

“வாக்கு தரேன்…! என் வீட்டில் எல்லாரும் சம்மதிக்கலேன்னா நான் உன்னைக் கல்யாணம் பண்ண நிர்பந்திக்க மாட்டேன், இது ஆத்ரேயனோட வாக்கு…”

“ம்ம்… சந்தோஷம், எனக்குத் தூக்கம் வருது… தூங்கலாமா…?” அவள் கேட்கும்போதே சட்டென்று மின்சாரம் கட்டாக எரிந்து கொண்டிருந்த குண்டு பல்பு வெளிச்சமும் போய் அந்த அறை இருட்டாக ஆத்ரேயன் மொபைலை உயிர்ப்பித்தான்.

“நீ படுத்துக்கோ நிதி மா…” என்றவன் டார்ச்சைக் காட்ட அவள் சற்று ஓரமாய் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டாள்.

லைட்டை அணைத்துவிட்டு அவனும் அமர்ந்த இடத்திலேயே கண்ணை மூடி அமர்ந்திருந்தான். சிறிது நேரத்தில் இருவரும் அப்படியே சலிப்பில் உறங்கி இருக்க டமாரென்று ஒலித்த இடியில் இருவரின் உறக்கமும் கலைந்து போனது.

எழுந்து அமர்ந்தவள் கண்ணில் அப்பிய இருட்டில் எதுவும் தெரியாமல் சற்று பயத்துடனே குரல் கொடுத்தாள்.

“ஆதி…! எங்கிருக்கிங்க…?”

“இங்க தான் இருக்கேன் நிதி மா… தூங்கலியா…?” எனக் குரல் கொடுத்தவன் மொபைலை எடுத்து டார்ச்சை உயிர்ப்பித்தான். அவனைக் கண்டதும் நிம்மதியுடன் பெருமூச்சு விட்டவள் அடுத்த நிமிடம் அவன் அருகே வந்து அமர்ந்து கொண்டாள்.

“நான் உங்க பக்கத்துலயே உக்கார்ந்துகிட்டுமா…?” பயத்துடன் கேட்டவளிடம் புன்னகையோடு தலையாட்டியவன் அவள் அமர்ந்ததும் டார்ச்சை அணைத்துவிட்டான்.

“மொபைல்ல சார்ஜ் கம்மியா இருக்கு முத்தே, ஏதாச்சும் எமர்ஜன்சிக்கு வேணம்…” என சொல்லவும் செய்தான். சிறிது நேரம் உறங்காமல் இருட்டில் கண்ணை உருட்டியவள் எதுவும் தெரியாமல் கண்ணை இறுக்க மூடிக்கொண்டாள்.

“உறக்கம் வரலியா…?”

“ம்ம்…”

“என் தோளில் வேணும்னா தலை வச்சுப் படுத்துக்கோ, எனிக்கு விரோதம் ஒண்ணும் இல்லா…” அவன் சொல்ல,

“எனிக்கு விரோதம் இருக்கு…” என்றவள் அப்படியே உறங்கத் தொடங்க சிறிது நேரத்தில் தன் தோளில் சாய்ந்த அவளது தலைக்கு வாகாய் சிரிப்புடன் இறங்கி அமர்ந்து கொண்டான்.

ஒருவழியாய் அந்த நாள் கழிய காலை முதலில் விழிப்பு வந்தது நியதிக்கு தான். மின்சாரம் மீண்டதில் குண்டு பல்புக்கு உயிர் வந்திருக்க, ஆத்ரேயனின் தோளில் தலை வைத்து அவன் கையை அணைத்தபடி தான் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டவள் நாணினாள்.

“ச்சே… பெருசா வசனம் பேசிட்டு அவன் தோளிலேயே சவாரி பண்ணிருக்கனே…” எனத் தன்னையே திட்டவும் செய்தாள்.

அவளது அசைவில் அவனும் உணர்ந்து கொள்ள, “எந்தா முத்தே…” என்றவன் மொபைலில் டைம் பார்க்க ஐந்து மணி ஆகியிருந்தது. எழுந்து நேராய் அமர்ந்தவன் தண்ணியைக் குடித்துவிட்டு எழுந்தான்.

ஒருவழியாய் நாயரும் வந்துவிட மரத்தை வழியிலிருந்து மாற்ற விடியலில் ஆட்களும் வந்துவிட ஏழு மணிக்கு அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.

அவளை அவளது பிளாட்டில் இறக்கிவிட்டு நன்றாய் ரெஸ்ட் எடுக்க சொன்னவன் வீட்டுக்குக் கிளம்பினான்.

ஒரு நாள் முழுதும் ஆத்ரேயனுடன் கழித்துவிட்டு இப்போது தனியே அறைக்குள் இருக்க நியதிக்கு ஒரு மாதிரி இருந்தது. இத்தனை சீக்கிரம் அவனது அருகாமையைத் தன் மனம் ஏற்றுக் கொள்ளத் தொடங்கியதில் ஆச்சர்யமாய் இருந்தது. சார்ஜ் இல்லாமல் உயிர் விட்டிருந்த மொபைலை சார்ஜரில் குத்திவிட்டு, குளிக்க சென்றாள்.

அலுப்புத் தீர் குளித்துவிட்டு ஒரு கட்டன் காபியைக் கலந்து எடுத்துக் கொண்டு பால்கனிக்கு வந்தாள்.

சிறிது நேரம் பார்வையை எங்கோ பதித்து முன்தினம் நடந்த முழுதையும் அசை போட்டவள் மனதில் ஆத்ரேயன் எப்போதோ வந்து விட்டான் என்பதை உணர்த்த அவளுக்கு திகைப்பாக இருந்தது. இத்தனை சீக்கிரம் என் அபியை மறந்து ஆதியை ஏற்றுக் கொள்ள என்னால் எப்படி முடிந்தது…? எனத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். இதுதான் காதலின் பலம் என்று அவளுக்குப் புரியவில்லை.

சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு யோகா செய்ய அமர்ந்தாள். மனதும் உடலும் ரிலாக்ஸ் ஆனதை உணர்ந்தவள் மனது மீண்டும் இந்தக் கல்யாணத்தில் உள்ள சாதக, பாதகங்களை அலசத் தொடங்க அவள் மொபைல் சிணுங்கியது.

“அடடா…! அம்மாவுக்கு கூப்பிடவே இல்லயே, அவங்க தான் கூப்பிடறாங்களோ…” தன்னைக் கடிந்தபடி எடுத்தாள்.

அதில் ஒளிர்ந்த ஆத்ரேயனின் எண்ணைக் கண்டதும் ஜிவ்வென்று ஒரு பரவச உணர்வு உடலெங்கும் பரவுவதை ஆச்சர்யத்துடன் உணர்ந்தவள் மொபைலுக்கு வலிக்குமோ என்று மெல்ல எடுத்து மென்மையாய் ஹலோவினாள்.

“மலரே நின்னே காணாதிருந்தால்

மிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே…”

ஆத்ரேயனின் குரல் காதலோடு இனிமையாய் ஒலிக்க நியதியின் கன்னங்கள் சூடேறி வெட்கத்தில் சிவந்தன.

காதலைக் கற்றுக் கொள்ள

ஆராய்ச்சிகள் தேவையில்லை…

சில கெஞ்சலும் சில கொஞ்சலும்

சிறு காதல் பார்வையும்,

சில மோதலும், அதட்டலும் போதும்…

காதலில் தேர்ந்து பட்டம் வாங்கிட…

Advertisement