Advertisement

“எந்தடா செருக்கா, நிங்கள் மாத்திரமே காலத்தினு ஏற்ற போல சிந்திக்குள்ளு.. ஞங்களுக்கும் புதிய சிந்தனை எல்லாம் வரத் தொடங்கி வருஷங்களாச்சு…” என்றவர் குரல் சட்டென்று குறைய, “இத்தன வயசாகியும், உங்க அச்சனோட நிறைவா வாழ்ந்து முடிச்ச எனக்கே சில நேரம் தனிமை ரொம்ப கொடுமையா இருக்கு… என்னதான் குடும்பம், பிள்ளைங்க, பேரக் குழந்தைங்கன்னு பிஸியா நேரத்தை வச்சு கிட்டாலும் நமக்குன்னு ஒரு துணை இல்லாதது பெரிய குறை தான், அந்த வெற்றிடம் சில நேரம் நமக்கு மூச்சு முட்டுற போலத் தோணும்… எதுக்கு இந்த வாழ்க்கைன்னு வெறுப்பு வரும்… சின்ன வயசுல இனிமையா தோணின தனிமை வயசு காலத்துல கொடுமையா தோணும்… நம்ம சந்தோஷத்தை, துக்கத்தை பகிர்ந்துக்க நமக்குன்னு ஒரு துணை இல்லைன்னு கஷ்டமா இருக்கும்… வாழ்ந்து முடிச்ச எனக்கே இப்படில்லாம் தோணும்போது வாழ்க்கை தொடங்கிய உடனே முடிஞ்சு போன அந்தப் பொண்ணுக்கு என் மகன் நல்ல ஒரு வாழ்க்கையைக் கொடுக்கப் போறதை நினைச்சு நான் பெருமைப்படத்தானே வேணும், எனக்கு இதுல ரொம்ப சந்தோஷம்…” என்ற ஷோபனா அவர்களுக்கு ஒரு மாடர்ன் தாயாக மட்டுமில்லாமல் பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாக இருக்கும் காலத்தில் புதுமையை வரவேற்கும் உதாரண பெண்மணியாகத் தோன்றினார்.

அவர் பேச்சில் மனம் நிறைந்து அபிநந்தன், ஆதிரா இருவரும் புன்னகையுடன் ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்துக் கொள்ள அபிநந்தன் தாயைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டான்.

“என்ட சக்கர அம்மே… நிங்கள் சம்மதிச்சில்லங்கில் அக்கள்ளி இந்தக் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிருந்தா, என்னை நீங்க காப்பாத்திட்டீங்க…” என்று கட்டிக்கொண்டு மாறி மாறி கன்னத்தில் முத்தமிட ஷோபனா புன்னகையுடன் மகனைப் பிடித்து விலக்கினார்.

“டா, மதி… எனிக்கு உம்ம கொடுத்து எச்சிலாக்கியது… என்டே மருமகளுக்கும் குறச்சு பாக்கி வச்சோ… வா, எனிக்கு இப்பவே அவளைக் காணணம்…” என்றவர் கையில் குங்குமச் சிமிழுடன் கிளம்பினார்.

ஆதிராவும், அபிநந்தனும் வியப்புடன் நோக்க, இன்னும் முழுமையாய் நம்ப முடியாமல் நின்ற சின்ன மகனின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு காரருகே வந்தவர், “ம்ம்… வண்டியை எடு…” என ஆணையிட, அவர் கையைப் பற்றிக் கொண்ட ஆத்ரேயன் கண்கள் கலங்க, தேங்க்ஸ் அம்மே…” மனம் நெகிழ்ந்து சொன்னவன் காரை எடுக்க இருவரும் நியதியைக் காண சென்றனர்.

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பிரெஞ்ச் (பிரேக்பாஸ்ட் + லஞ்ச்) செய்ய நினைத்து ரிலாக்சாய் எழுந்து குளித்து அதிசயமாய் சமைக்கத் தோன்றிய வெஜிடபிள் பிரியாணி செய்து வைத்து ரெண்டு கரண்டி ரவை போட்டு கேசரியும் செய்தாள் நியதி. ஆத்ரேயன் எப்படியும் அன்று அவளைக் காண வருவான் எனத் தோன்றவே குளித்து நல்ல ஒரு சேலையை எடுத்து அணிந்து கொண்டாள்.

கரும்பச்சையில் வெள்ளை பார்டரும், சின்ன எம்பிராய்டரி புள்ளிகளுடன் எளிமையான தோற்றத்தில் இருந்த லினன் சேலை அவளது நிறத்துக்குப் பளிச்சென்று இருக்க, நனைந்த தலையைத் துவட்டி ஈரஜடை பின்னிக் கொண்டிருக்கையில் கதவு தட்டப்பட மனதுக்குள் ஆத்ரேயனாய் இருக்குமோ என்று சந்தோஷ ஆவல் எழும்புவதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. என்னதான், அபிமன்யுவை மறக்க முடியவில்லையென்று சொன்னாலும் ஆத்ரேயனும் அவள் இதய சிம்மாசனத்தில் சரிசமமாய் இடம் பிடித்துக் கொண்டதை சில நாட்களாய் உணரத் தொடங்கியிருந்தாள்.

கதவைத் திறந்தவள் புன்னகையுடன் நின்ற ஷோபனாவைக் கண்டதும் திகைத்தாள்.

தன் பின்னே அவளது பார்வை ஆவலுடன் சென்று ஏமாற்றமாய் மீண்டதைக் கண்ட ஷோபனா, “நியதி…! என்னை உள்ளே கூப்பிட மாட்டியா…?” எனக் கேட்க புன்னகைதவள், “அச்சோ, ஆன்ட்டி உள்ளே வாங்க…” என அழைக்க உள்ளே சென்று அமர்ந்தார் ஷோபனா.

“என்ன மா, எங்காச்சும் கிளம்பிட்டியா…? யாருக்காச்சும் வெயிட் பண்ணறியா…?”

“அதொண்ணும் இல்ல ஆன்ட்டி, சும்மா தான்… நீங்க இந்தப் பக்கம்…” எனத் தயக்கமாய் கேட்க, “ஒரு வேலையா இங்க வந்தேன், அப்படியே உன்னைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்… நான் வந்தது ஒண்ணும் டிஸ்டர்ப் ஆகலியே…”

“அச்சோ, அதெல்லாம் இல்ல ஆன்ட்டி, ரொம்ப சந்தோஷம்…”

“ம்ம்… இப்படி உக்கார்…” என அவர் கட்டிலைக் காட்ட,

“பர்ஸ்ட் டைம் இங்க வந்திருக்கிங்க, காபி, டீ என்ன சாப்பிடறீங்க…?”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்…” என்றவர் மூக்கை நன்றாய் உள்ளிழுத்துவிட்டு, “ஏதோ நல்லா நெய் மணமா இருக்கே… என்ன சமைச்சிருக்க…”

“ஆமா ஆன்ட்டி, கொஞ்சம் கேசரி பண்ணேன்… இருங்க கொண்டு வரேன்…” சொன்னவள் வேகமாய் அடுக்களைக்கு சென்றாள். ஆத்ரேயன் வந்தால் கொடுப்பதற்காய் கிளறி வைத்திருந்த கேசரியை ஒரு கண்ணாடி பவுலில் போட்டு ஸ்பூனுடன் கொண்டு வந்து நீட்டினாள்.

“ஆஹா…! கேசரி பண்ணியா, நல்லதாப் போச்சு… நான் சொல்ல வந்த நல்ல விஷயத்தை சுவீட்டோட தொடங்கிட வேண்டியது தான்…” என்றவரை அவள் புரியாத பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன நல்ல விஷயம் சொல்லப் போகிறார்… அதற்குள் எங்கள் விஷயத்தை சொல்லி இருக்க வாய்ப்பில்லையே, ஒரு வேளை, அந்த சாதனாவுடன் மகனுக்கு கல்யாணம் பேசி முடித்து விட்டார்களா…? அதைத்தான் சொல்லப் போகிறாரோ…?” அவள் மனது தவித்துக் கொண்டிருக்க ஷோபனா சாவதானமாய் கேசரியை ரசித்து சாப்பிட்டார்.

“கேசரி நல்லாருக்கு, நிறைய நெய் ஊத்தி முந்திரி திராட்சை போட்டு அளவான இனிப்போட சூப்பரா இருக்கு மோளே…”

“ஹாங்… தே…தேங்க்ஸ் ஆன்ட்டி…”

“நீ ஏன் நின்னுட்டே இருக்க, இரிக்கு மோளே…” என அவள் யோசனையுடனே அவர் அருகே அமர்ந்தாள்.

“ஏதோ நல்ல விஷயம்னு சொன்னிங்க… எ..என்ன விஷயம் ஆன்ட்டி…” அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்டவளை நோக்கிப் புன்னகைத்தார்.

“ம்ம்… என்டே சின்ன மகனுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிருக்கு… நல்லொரு சுந்தரிக்குட்டி எனிக்கு மருமகளாய் வரப் போறா…” அவர் சொல்லி முடிக்கும் முன் அவள் முகம் வாடிப் போக, மனதுக்குள் சிரித்துக் கொண்டார் ஷோபனா.

“ஓ…! ரொம்ப சந்தோஷம் ஆன்ட்டி…” அவள் உதடுகள் சந்தோஷமென்று வார்த்தையை உதிர்த்தாலும் உள்ளம் சந்தோஷிக்கவில்லை என்பதை முகம் காட்டிக் கொடுத்தது.

“சீக்கிரமே அவங்க கல்யாணத்துக்கான ஏற்பாடுகளைப் பண்ணனும், இப்ப கூட அது சம்மந்தமா தான் வந்தேன்…” அவர் சொல்லும்போதே அவளது இதயம் வேதனையில் துடிக்க, மனது கதறியது.

“ச்சே… ஆதி எப்படி கல்யாணத்துக்கு சம்மதித்தார், இதுக்கு என் மனசில் அவர் ஆசையை வளர்க்காமல் இருந்திருக்கலாமே… அத்தையும், அம்மாவும் கூட என் கல்யாணத்தைக் காண ஆசைப்பட்டார்களே, அவர்களும் வருத்தப்படுவார்களே…” அவள் யோசனை எங்கோ சென்றது.

“என்னமா, நான் பேசிட்டே இருக்கேன்… என்ன யோசிக்கற…?”

“எ..என்ன சொன்னிங்க ஆன்ட்டி… உங்க சன்னுக்கும் இந்த மேரேஜ்ல விருப்பம் தானே…” மறுபடி உறுதிபடுத்திக் கொள்ள அவள் மனம் துடித்தது.

“பின்ன… அவன் சம்மதம் இல்லாமலா, அவனுக்கு இந்தப் பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்…”

“ஓ…!” என்றவளின் தொண்டைக்குழி ஏறி இறங்க அவளை ஓரக் கண்ணால் பார்த்தபடியே பேசினார் ஷோபனா.

“அழகுன்னா அழகு அவ்ளோ அழகு, குணமும் தங்கம்… இப்படி ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணத்தான் அவன் காத்திருந்தான் போலருக்கு…” அவர் சொல்ல குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தாள் நியதி.

“இந்தா மோளே, குங்குமம் எடுத்தோ…” அவர் குங்குமச் சிமிழை நீட்ட அதையே வெறித்தது அவளது விழிகள்.

“எ..எனக்கு வேண்டாம் ஆன்ட்டி…”

“அப்படில்லாம் சொல்லக் கூடாது, வச்சுக்க…” என்றவர் அவள் மறுப்பை ஏற்றுக் கொள்ளாமல் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட அவள் கண்கள் கரகரவென்று கலங்கின.

“ஹேய் நியதி… எந்தினா கரயனது…” அவர் பதற,

“எனக்கு குங்குமம் வச்சுக்கற பாக்கியம் இல்ல ஆன்ட்டி…” சொன்னவள் நெற்றியைத் துடைக்கப் போக கையைப் பற்றித் தடுத்த ஷோபனா,

“அதெல்லாம் இல்லை, என் மகனுக்கு நின்டே நெற்றியில் குங்குமம் வைக்க அந்த பாக்கியத்தைத் தருவியா… உனக்கு அதுக்கு சம்மதமானோ…?” என்றதும் அவள் புரியாமல் முழிக்க சிரிப்புடன் உள்ளே நுழைந்தான் ஆத்ரேயன். அவனைக் கண்டதும் ஷோபனாவின் வார்த்தைகளுக்கு சட்டென்று அர்த்தம் புரிய திகைப்புடன் அவரை ஏறிட்டாள்.

“ஆ..ஆன்ட்டி…”

“எந்தா மருமகளே… நினக்கு என் மகனைக் கெட்டான் சம்மதமானோ…? நான் பறஞ்ச சுந்தரிக்குட்டி நீ தன்னே, ஆதி எல்லாம் பரஞ்சு…” என்றதும் சட்டென்று உடைந்தவள் “ஆன்ட்டி…” என அழுதபடி அவர் கையைப் பிடித்துக் கொள்ள, “இனி என்டே மோள் அழக் கூடாது…” என அவள் கண்ணைத் துடைக்க ஆத்ரேயன் நெகிழ்வுடன் பார்த்து நின்றான்.

எனக்கான ஓர் தேடல் உன்

விழிகளில் காணாத போது

மனம் வாடித் தொலைகிறேன்…

உன் ஒற்றைப் பார்வை போதும்

எனை வெற்றிப் பாதை தொடும்…

தனியாக நடக்கின்றேன்…

துணையாய் உனை அழைக்கின்றேன்…

எனைத் தேடிவிடு இல்லை

உனில் எனைத் தொலைத்துவிடு…

Advertisement