Advertisement

 அத்தியாயம் – 20

நியதி அரை மனதாய் ஆத்ரேயன், பெரியவர்களின் விருப்பத்திற்கு சம்மதித்தாலும் அவள் மனதின் ஓரத்தில் இன்னும் சிறு நம்பிக்கையின்மையும், தான் சம்மதித்தது சரியா, தவறா என்ற சந்தேகமும் ஒட்டிக் கொண்டிருந்தது.

ஆத்ரேயனின் வீட்டில் இந்தக் கல்யாணத்துக்கு எப்படி சம்மதிப்பார்கள் என்ற கேள்வியும் அதில் சேர்ந்திருந்தது. தன்னால் ஆத்ரேயனுடன் மணவாழ்க்கையில் சந்தோஷமாய் ஈடுபட முடியுமா…? அவனது வாழ்வும் கேள்விக் குறியாகி விடுமா…? என்ற பயமும் இருந்தது.

எது எப்படியானாலும் மரணத்தின் வாசலில் நிற்கும் போதும் தன் உயிரைக் காக்க காரிலிருந்து வெளியே தள்ளி விட்டு, தன்னைப் பற்றி யோசிக்காமல் அவளையும், அவள் எதிர்காலத்தையும் யோசித்து மறுமணம் செய்து வைக்க வேண்டுமென்று சத்தியமும் வாங்கிக் கொண்ட அபிமன்யுவை நினைக்கும் போதே கண்கள் கலங்கின.

மாலையில் அவர்கள் பொள்ளாச்சியிலிருந்து ஐந்து மணிக்கே கிளம்பி இருந்தாலும் மழை வரும்போல் மேகம் கறுத்து நிற்க, அதற்குள் ஊடுருவிய சூரியனின் வெளிச்சம் பூமியை வந்தடைகையில் வெகுவாய் குறைந்திருந்தது. நியதி வெளியே வெறித்தபடி யோசனையுடனே அமர்ந்திருக்க ஆத்ரேயனும் அவளைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக வண்டியை செலுத்தினான். உடுமலையைத் தொடுகையில் மழை அடித்து ஊற்றத் தொடங்க வண்டியை வேகமாய் செலுத்த முடியவில்லை.

“இதென்ன…? மழை இப்படி அடிச்சு ஊத்துது…?” மனதுக்குள் கேட்டுக் கொண்டே கவலையுடன் பார்த்திருந்தாள் நியதி.

கண்ணாடியில் நோக்கியவன், “முத்தே… பேடிக்கண்டா, நான் ஸ்ரத்திச்சு வண்டி ஓட்டிக்காம்…” என்றான் ஆத்ரேயன்.

“ம்ம்…” என்றவள் மேலே பேசாமல் மீண்டும் மௌனத்தைத் தொடர, அவனும் வழியில் கவனமானான்.

ஆனாலும் இருட்டும், மழையும் அவள் மனதை அலட்ட கலக்கத்துடனே அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் மழை குறையவும் தான் அவளுக்கு சற்று சமாதானமானது.

மழையில் குளித்த மலைச் சாலைகள் பளிச்சென்று இருக்க காரின் வெளிச்சம் அதை நனைத்துக் கடந்தது. மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் சட்டென்று நிற்கவும் குழப்பத்துடன் ஆத்ரேயனைப் பார்த்தாள் நியதி. அவன் முகத்தில் சிறிது டென்ஷன் தெரிய, யோசனையுடன் பாதையில் பார்வையைப் பதித்தவள் அதிர்ந்தாள்.

பெரிய யானை ஒன்று வழியில் சிறு மலை போல் அசையாமல் நின்று கொண்டிருந்தது.

“ய…யானை…!” அவள் உதடுகள் பயத்தில் தந்தியடித்தது.

“முத்தே…! பேடிக்கண்டா…” என்றவன் வண்டியின் ஹெட் லைட்டை அணைக்காமல் அப்படியே போட்டு வைக்க, இரண்டடி இவர்களை நோக்கி வந்த யானை அப்படியே நிற்க, நியதிக்கு பயத்தில் நாக்கு ஒட்டிக் கொண்டது.

சாதாரணமாய் யானையைக் கண்டு பிரம்மித்து ரசிப்பவளுக்கு இந்தச் சூழலில் காட்டு யானையைக் கண்டதும் பயத்தில் வேர்க்கத் தொடங்கியது. அவர்கள் இருந்த இடம் சின்னாறு வனவிலங்கு சரணாலயப் பகுதி என்பதால் காட்டு மிருகங்கள் அவ்வப்போது இப்படி சாலையில் நடமாடுவதை சாதாரணமாய் காணலாம்.

பயத்தில் கண்ணை மூடிக் கொண்டவள் உதடுகள், “முருகா…! முருகா…!” என உச்சரிக்கத் தொடங்க முன் சீட்டை இறுகப் பற்றியபடி அமர்ந்திருந்தாள் நியதி.

அவள் கையை ஆதரவாய் பற்றிக் கொண்ட ஆத்ரேயன், “முத்தே…! கண்ணு திறக்கு, மனுஷன்மாரைக் காட்டிலும் காட்டு மிருகங்கள் எத்தரயோ நல்லதானு… அதனை நாம உபத்ரவிக்காதே இருந்தால் அது மின்டாதே போய்க் கொள்ளும்… நோக்கு, ஆனை போகுது…” எனவும் மெல்ல கண்ணைத் திறக்க யானை அந்தச் சாலையை ஒட்டிய காட்டில் கிளைப் பாதைக்குள் சென்று கொண்டிருந்தது. நிம்மதியாய் மூச்சு விட்டவள், “இங்கே அடிக்கடி இப்படி அனிமல்ஸ் வருமா…?” என்றாள்.

“ம்ம்… இது காட்டுப் பகுதி… அவங்களோட இடத்துல நம்ம சவுகர்யத்துக்காக சாலை போட்டிருக்கோம், பாவம், அதுங்க என்ன பண்ணும்…” என அவன் சொன்னபோது அவளுக்கும் அது சரியென்று தோன்றியது.

“இந்தக் காட்டுல நிறைய மிருகம் இருக்கா…?” அவள் பழைய நினைவுகளில் இருந்து மீண்டு சற்று சகஜமாய் கேள்வி கேட்க புன்னகையுடன் பதிலளித்தாலும் கவனமாய் வளைவில் வண்டியைத் திருப்பினான் ஆத்ரேயன்.

“ம்ம்… யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு, காட்டுபன்னி, மயில், முயல், மான், இருவாச்சி பறவைங்க, சாம்பல் நிற அணில்னு இங்கே நிறைய இருக்கு… அப்பப்போ இந்த இடத்தைக் கிராஸ் பண்ணும்போது பார்க்க முடியும்…” அவன் சொல்ல அவளது பார்வை சற்று மிரட்சியுடன் வெளியே பதிந்தது. இருட்டில் எதுவும் தெரியாவிட்டாலும் வளர்ந்து நின்ற மரங்களே பல மிருகங்களைப் போல அச்சுறுத்தியது.

“நா…நான் முன்னாடி வந்து உக்கார்ந்துகிட்டா…?” அவளது கேள்விக்குப் புன்னகையுடன் தலையாட்டியவன் காரை நிறுத்த, வேகமாய் பின் சீட்டிலிருந்து இறங்கி முன்னால் ஏறி அமர்ந்து கொண்டாள் நியதி.

“சீட் பெல்ட் இட்டோ…” அவன் சொல்ல சீட் பெல்ட்டை அணிந்து கொண்டாள். ஏனோ சற்று படபடப்பாய் உணர்ந்தாள். அவள் பயத்தை அதிகப் படுத்துவது போல் கொஞ்சம் நின்றிருந்த மழை மீண்டும் அசுரத்தனமாய் பெய்யத் தொடங்கியது.

பயத்தை முகத்தில் வெளிக்காட்டாமல் இருக்க முயன்றும் அவளால் முடியவில்லை. அபிமன்யுவுடன் காரில் சென்றது நினைவில் வர எதிரே எதன் மீதோ மோதப் போவது போலவே அச்சமாய் இருந்தது.

ஒரு வழியாய் வளைவுகள் முடிந்து மறையூரை அடைய எதிரே வந்த வண்டி ஒன்று இவர்கள் அருகே வேகத்தைக் குறைத்து, “ரோட்டுல மரம் விழுந்திருக்கு, மூணார் போக முடியாது…” என்று சொல்ல ஆத்ரேயன் முகமும் கவலையைக் காட்டியது.

நேரம் நன்றாய் இருட்டத் தொடங்கியிருக்க மழை வேறு நிற்காமல் அடித்து ஊற்றியது. நியதி பயத்துடன் அவனை நோக்க ஆறுதலாய் அவளது கையில் தட்டிக் கொடுத்தவன் வரும்போது டீ குடித்த டீக்கடை ஓரமாய் வண்டியை சைடாக்கி நிறுத்தினான்.

நாயர் கடை சாத்தும் அவசரத்தில் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்க இவனைக் கண்டதும் குடையை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்.

“எந்தா சாரே…! இந்த நேரத்தில்… வழியில் வலிய மரம் வீணு கிடக்கறதா பரஞ்சு… அதை எடுத்து மாற்றாதே போக முடியாதே…” என்றவர் பயத்துடன் அமர்ந்திருந்த நியதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ராத்திரி நேரத்துல மழை பெய்யும்போல் விழுந்த மரத்தை மாற்ற யாரும் வர மாட்டாங்க, இனி நாளையே போகான் பற்றுள்ளு…” எனவும் நியதி கவலையுடன் ஆத்ரேயனைப் பார்த்தாள்.

அவளுக்குப் பார்வையாலேயே “நான் பார்த்துக் கொள்கிறேன்…” என ஆறுதல் சொன்னவன், “நாயரே… நான் சமாளிச்சுப்பேன், இவங்களை எங்காவது ராத்திரி தங்க வைக்க ஏற்பாடு பண்ண முடியுமா…?” என்றான்.

“இ…இல்ல, வேண்டாம்… நான் உங்களோடவே இருக்கேன்…” நியதி வேகமாய் மறுக்க சிரித்த நாயர், “இங்கே தங்க பெரிசா இடம் ஒண்ணும் இல்லா, என்னோட வீட்டுக்கு உங்களை அழைச்சிட்டுப் போகலாம்னா அங்கே பெருசா வசதியில்லை…” என யோசிக்க,

“வே..வேண்டாம், நாம கார்லயே இருந்துக்கலாம்…” நியதி சொல்ல யோசித்தான்.

“நிதி…! எத்தர நேரம் இங்கனே காரில் இரிக்கும், ராத்திரி முழுவன் கஷ்டமல்லே…” ஆத்ரேயன் கேட்க, அவளுக்குப் புரிந்தாலும் எங்கும் செல்லப் பிடிக்காமல் அமைதி காத்தாள்.

“நாயரே… எவிடே எங்கிலும் தாமசிக்கான் பற்றியால் வேண்டில்ல…” மீண்டும் அவன் கேட்க யோசித்த நாயர்,

“கொஞ்சம் தள்ளி ஒரு பழைய அங்கன்வாடி (பால்வாடி) இருக்கு, அது கொஞ்சம் மாத்திக் கட்டறதுக்கு வேண்டி வேற இடத்துக்கு ஷிப்ட் பண்ணிட்டாங்க, அதின்டே சாவி என்கிட்ட இருக்கு… ஒரே ரூம், பாத்ரூமோட இருக்கும், போதுமா…” என்றார் அவர் யோசனையாக.

“ம்ம்… போதும், மேனேஜ் பண்ணிக்கறோம்…” ஆத்ரேயன் சொல்ல அந்த சாவியை எடுத்து வந்து கொடுத்தவர், சற்றுத் தொலைவில் இருந்த அங்கன்வாடியைக் கை காட்டினார்.

“நான் ராவிலே நேரமே வரும், சாவி வாங்கிக் கொள்ளாம்…”

“ம்ம்… ரொம்ப தேங்க்ஸ் நாயரே, சாய கிட்டுமோ…? கழிக்கான் எந்தெங்கிலும்…?”

“பால் கழிஞ்சு சாரே, கட்டஞ்சாயா எடுக்காம்… கழிக்கான் பிஸ்கட்டும், பன்னும், பழமும் மாத்திரமே உள்ளு…”

“சரி, கட்டஞ்சாய கூடே ரெண்டு பாக்கெட் பிஸ்கட்டும், நாலு பழமும், ஒரு வாட்டர் பாட்டிலும் கொடுங்க…” என்றான்.

Advertisement